போகப் போகத் தெரியும்-20

ஓவிய தண்டனையும் காவிய தண்டனையும்

‘மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?’ என்னும் கலப்படப் பெயர் கொண்ட இவ்வியற்றமிழ் பெருநூல், ஒரு வரலாற்று நூல் அல்ல – அல்லது ஒரு சிலர் பலரது வாழ்க்கைக் குறிப்பு நூலும் அல்ல! ஆனால் தமிழ் நிலத்து வரலாற்று நூலுக்குக் குறிப்பாக, இப்பெருநில (முழு இந்திய) அரசியல் நிலை காட்டும் நடுநிலை நூலுக்குத் தூண்டுகோலாக நிற்கும், ஓர் தனித்தமிழ் நூலாகும். மறைத்து விடப்பட்ட – சிறந்த உரிமைப் போர் புரிந்த – புரிகின்ற இன முன்னேற்றத்திற்காகப் போராடுகின்ற தமிழ்த் தலைவர்களது அரும்பணிகளையும், மறஞ்செறிந்த தன்னுணர்வுத் தமிழ்நில உழைப்பாளிகளது பெரும்பணிகளையும், பிற அருந்தலைவர்களது அரிய செயல்களையும், தமிழர்க்குரிய தமிழ்நிலத்தின், பழங்கால – இடைக்கால ஐந்தாம் படைகளது மறைமுக வெளிமுக அழிவுத் திருப்பணிகளையும் அடக்குமுறைக் கொடுமைத் திருப்பணிகளையும் இன்றைய ஏமாந்த தமிழரது மடமை – அடிமை – இழிவுச் செயல்களையும்; பண்டைய தமிழ் மக்களது அற-மறம் செறிந்த பெருஞ்செயல்களையும் பற்றிய சில பல குறிப்புகளை எடுத்துக் காட்டிடத் தமிழருக்கு அறிவுறுத்தும் அறிவியல் நூலாகும், இந்நூல்!

– கு.மு. அண்ணல் தங்கோ / மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா

வாசகர்கள் மூச்சு விட்டுக் கொள்ளலாம். இது ஒரு சிறு பகுதிதான். இது முன்னுரையின் பகுதி; முன்னுரை மட்டும் இதே பாணியில் 21 பக்கங்கள். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்க்காமல் களையிழந்த செக்குமாடு மாதிரி சுற்றிச் சுற்றிவரும் உரைநடை 300 பக்கங்களுக்கு அப்பால் முடிவடைகிறது.

நடிகர் வடிவேலு பாஷையில் சொல்லுவதென்றால் மக்களை நோகடிப்பதற்காக ‘ரூம் போட்டு யோசிப்பார்கள்’ போலத் தெரிகிறது.

வார்த்தைகளால் வறுத்தெடுத்தவர் கு.மு. அண்ணல் தங்கோ. இவரைப் பற்றிச் சொல்லும்போது ஐரோப்பிய வரலாற்றிலிருந்து ஒரு சுவையான சம்பவம் நினைவிற்கு வருகிறது.

Luxemburg artஇருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சு நாட்டில் உள்ள லக்செம்பர்க் அரண்மனையில் ஓர் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது. அப்போது புதிதாக உருவாகி வந்த ஒரு முறைப்படி வரையப்பட்ட ஓவியங்கள் அங்கே வைக்கப்படிருந்தன. கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தவர் தன்னுடைய அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். அது இதோ:

அந்த ஓவியத்தின் எதிரே ஓர் இளைஞனும், இளம்பெண்ணும் இருந்தார்கள். இளம்பெண்ணை இளைஞன் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான்; அவள் அலறிக் கொண்டிருந்தான். “ஓவியப் போட்டியில் பரிசு வாங்கிய எனக்கு இப்படி ஒரு தண்டனையா?” என்று அவள் சத்தம் போட்டாள். அவளுடைய கழுத்தைப் பிடித்து ஓவியத்தின் பக்கமாகத் திரும்பினான் அந்த இளைஞன். “கணவனுக்கு மரியாதை கொடுக்காதவளுக்கு இதுதான் தண்டனை” என்றான் அவன்.

பிரான்சு நாட்டிலே கொடுக்கப்பட்டது ஓவிய தண்டனை. தமிழ்நாட்டிலே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுக்கப்பட்டது, காவிய தண்டனை. ஆமாம். அண்ணல் தங்கோவின் புத்தகம் காவியமாகவே போற்றப்பட்டது.

இத்தனைக்கும் இவர் நீதிக்கட்சியிலோ, சுயமரியாதை இயக்கத்திலோ திராவிடர் கழகத்திலோ, திராவிட முன்னேற்றக் கழகத்திலோ எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர்.

வெளிவட்டத்தில் இருப்பவரின் உரைநடையே இப்படி நம்மை மிரட்டினால் உள்ளேயிருந்தவர்களின் சொற்பிரவாகத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

ஒரு சாக்கு மூட்டையில் தனக்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகளை எல்லாம் போட்டுக் கட்டி, நன்றாகக் குலுக்கி, கட்டை அவிழ்த்துக் கவிழ்த்துக் கொட்டினால் அது வேகமாகத்தான் விழும். வேகமாக சேர்ந்து விழுவதையெல்லாம் பொருள் நிறைந்த வாக்கியமாகக் கொள்ள முடியாது.

ஆனால் தமிழக மக்களில் ஒரு பகுதியினர் ஒரு காலத்தில் இந்தத் தயாரிப்புகளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினார்கள், மாயாஜாலத்தில் மயங்கி வியந்து போனார்கள், பயத்தில் பரிவட்டம் கட்டினார்கள், போலிகளுக்குப் புகழாரம் சூட்டினார்கள், சரக்கு இல்லாதவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்கள் என்பதுதான் உண்மை.

உள்ளத் தெளிவும், நேர்மையுணர்வும், தமிழ் அறிவும் உடையவர்கள் கருமேகம் விலக்குவதற்காகக் காத்திருந்தனர்; காத்திருக்கின்றனர்.

பேச்சையும் எழுத்தையும் வைத்துக் கொண்டே பேரிழப்பை உண்டாக்கி விட்டவர்கள் திராவிட இயக்கத்தினர். தமிழரின் கலையும், பண்பாடும், சமயமும் இலக்கியமும் பகுத்தறிவு என்ற பாசியால் மூடப்பட்டிருக்கிறது. அதை அகற்ற வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்தத் தொடர்.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் முக்கியமான சொற்பொழிவு ஒன்றையும், மெளனத்தால் மக்களைக் கவர்ந்த தேசபக்தர் ஒருவரைப் பற்றியும் இந்த முறை பார்க்கலாம்.

t.m.nairநீதிக் கட்சியை நிறுவிய டாக்டர். டி.எம். நாயர், அக். 7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு அந்த இயக்கத்தவரால் சிறப்ப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். இந்த சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரஞ் செறிந்த, எழுச்சி மிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று வர்ணனை செய்கிறார் இரா. நெடுஞ்செழியன்.

இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டாக்டர் டி.எம். நாயருக்கு உண்டு.

v.s.srinivasa sastryஇந்த டி.எம். நாயர் இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தலில் (1916) வி.எஸ். சீனிவாச சாஸ்திரியால் தோற்கடிக்கப்பட்டார். அதன் காரணமாக பிராமணர்கள் மீது இவருக்குக் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது என்ற தகவலை இரா. நெடுஞ்செழியன் சொல்ல மறந்துவிட்டார்; நான் சொல்கிறேன்.

இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிகப்பட்டனர்.

இப்படி மூக்கறுபட்ட மூலவர்கள் சேர்ந்து அமைத்ததுதான் தென்னிந்திய நல உரிமை சங்கம்.

இரா. நெடுஞ்செழியனால் எழுதப்பட்ட ‘திராவிட இயக்க வரலாறு’ என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள டாக்டர் டி.எம். நாயர் உரையையும், அதற்கான விமர்சனத்தையும் இப்போது பார்க்கலாம்.

இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே விவரமாகப் பார்க்கலாம்.

1. அந்தக் கூட்டம் தாழ்த்தப்பட்ட மக்களின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவரான திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் நடைபெற்றது.

– பக். 217

“குறிப்பிட்ட நாளில் திரு. இரட்டை மலை சீனிவாசன் இங்கிலாந்து நாட்டில் இருந்தார். அவர் தலைமேயற்றதாக சொல்வது தவறு” என்கிறார் அன்பு பொன்னோவியம் (உணவில் ஒளிந்திருக்கும் சாதி / பக். 45)

2. இந்த நாட்டில் இரு இனங்கள் உண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர்கள் இனமான நம் திராவிடர் இனம். மற்றொன்று நாம் அசட்டையாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடர் போன்ற ஆரியர் இனம்.

(பக்.217)

திராவிட, ஆரிய இனப் பிரச்சினைக்குப் பதில் சொல்லிவிட்டு மேலே போகலாம். இந்திய தேசியத்திற்கு எதிராகக் கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தின் அடிப்பகுதி இதுதான். இதை அசைக்க வேண்டும்; அசைத்தாயிற்று. ஆரியம், திராவிடம் என்பதை அறிஞர்கள் மறுத்து விட்டார்கள். ஆனால் இந்தச் சேதி பொதுமக்களிடம் போய்ச் சேரவில்லை, ஆரிய இனம் இப்போது இல்லை, ஆரியப் படையெடுப்பு எப்போதும் இல்லை என்று கூறிய அறிஞர்களின் மேற்கோளைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் முறையே சுவாமி விவேகானந்தர், திரு.வி.க., சோமசுந்தர பாரதியார், நாமக்கல் கவிஞர், அம்பேத்கர், ரொமிலா தாப்பர், ஜெயகாந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன் மற்றும் அ. மார்க்ஸ்.

இந்த பதில் போதாது என்று நினைப்பவர்களுக்கு இரண்டு புத்தகங்களை சிபாரிசு செய்கிறேன்: The Myth of the Aryan Invasion by David Frawley published by Voice of India, The Invasion that Never Was by Michel Danius Published by Michel Danino.

வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் இந்தியப் பழங்குடியரிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள்; பழங்குடியனரை அழித்துவிட்டு ஆரியர் இங்கே குடியேறினார்கள் என்று ஐரோப்பிய அறிஞர்கள் சொல்வது முட்டாள்தனமானது, எந்த அடிப்படையும் அற்றது.

-சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய உரை.

இரண்டு இனமும் கலப்புற்று நீண்ட நாளாகியதையும் இரண்டு நாகரிகமும் கங்கையும் யமுனையும் போல ஒன்றுபட்டு விட்டமையும் இந்நாளில் இன்னார் திராவிடர் இன்னார் ஆரியர் என்று பிரித்தல் இயலாமையையும் விளக்கினேன்.

-திரு.வி. க / பக். 211 / திரு.வி. க. வாழ்க்கைக் குறிப்பு.

ஆந்திரம், மலையாளம், துளுவம், கன்னடம் என்பன முறையே அவ்வம் மொழிக்கும், நாட்டுக்கும் பெயராகவே வழங்குகின்றன். அம் மொழியினர் தம் நாட்டையோ, மொழியையோ, திராவிடம் என்று சொல்லுவதில்லை, தங்களைத் திராவிடர் என்றுகூடப் பேசுவதில்லை. தமிழர் சிலர் மட்டும் இப்போது சில காலமாகத் தம் நாட்டைத் திராவிட நாடு எனவும் தம்மைத் திராவிடர் எனவும் பேசக் கூசவில்லை… திராவிடம் என்று ஒரு தனி நாடோ தனி ஒரு மொழியோ கிடையாது.

– நாவலர் சோமசுந்தர பாரதியார் / செங்கோல் 21.01.1951

தமிழ் இலக்கியங்களில் எந்த இடத்திலும் தமிழனை திராவிடன் என்று சொன்னதில்லை, தமிழன் தன்னை ‘திராவிடன்’ என்று சொல்லிக் கொண்டால் அவன் கூசாமல் தன்னை ‘ஆரியன்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

– நாமக்கல் கவிஞர் / பக். 43 / தமிழ்மொழியும், தமிழரசும்.

ஆரிய இனத்தைப் பற்றிய குறிப்பு வேதங்களில் இல்லை. ‘தாஸ்யுக்கள் இந்தப் பழங்குடியினர், இவர்களை வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் அடக்கினார்கள்’ என்பதற்கும் வேதங்களில் எந்த ஆதாரமும் இல்லை.

– பி. ஆர். அம்பேத்கர் / Dr. Ambedkar: A True Aryan

சிந்துவெளி நாகரிமும் நகரங்களும் அழிந்ததற்குக் காரணம் ஆரியர்களின் படையெடுப்பு அல்ல; மாறாக மிகப் பரவலாகவும் ஆழமாகவும் ஏற்பட்டு வந்த சூழலியல் மாற்றங்கள்தான்.

– ரொமிலா தாப்பர் / Interpreting Early India / Oxford University Press

திராவிடர் சமுதாயம் என்பது எது என்னும் கேள்விக்கு விளக்கமோ பதிலோ தெளிவாக இதுவரை நமக்குக் கிடைத்ததில்லை. அது தமிழர் என்றும் தென் இந்தியர் என்றும் பார்ப்பனரல்லாதோர் என்றும் பலபடக் குழப்பியடித்தது. ஆராய்ந்தும், அந்த இயக்கத்தைச் சேர்ந்தோரை அணுகியும் அறிய முற்படுகிறபோது அந்தத் திராவிடர் என்னும் சொல் குறித்த பொருள் மிகக் கொச்சையானதாகவே இருந்தது.

– ஜெயகாந்தன் / பக்.71 / எனது பார்வையில் / கவிதா பப்ளிகேஷன்

இல்லாத திராவிட இனத்தை இருப்பதாகச் சொல்லி இயக்கம் நடத்தியதால்தான் பல கோளாறுகள் ஏற்பட்டன.

– ச. செந்தில்நாதன் / பக். 33 / தமிழ்–தி.மு.க–கம்யூனிஸ்ட் / சிகரம் வெளியீடு.

இந்து சமயம், இந்து தத்துவங்கள் அவற்றோடு தொடர்புடைய கலாசாரக் கூறுகள் என்பவற்றின் உருவாக்கத்தில் ஆரியர் ஆரியர் அல்லாத தொல்குடியினர் (தமிழர் உட்பட) ஆகிய இரு சாராரின் சிந்தனைகளும் இணைந்துள்ளன என்பதே வரலாறு தரும் செய்தி.

– கலாநிதி. நா. சுப்பிரமணியன், கெளசல்யா சுப்பிரமணியன் / பக்.262 / இந்தியச் சிந்தனை மரபு / சவுத் ஏசியன் புக்ஸ்.

இன்றைய வரலாற்றறிஞர்கள் ஆரியப் படையெடுப்பையும் ஆரிய இனம் என்கிற கருத்தாக்கத்தையும் ஏற்பதில்லை.

– அ. மார்க்ஸ் / பக். 10 / வால்மீகி ராமாயணம்

நீதிக்கட்சி பெயர் மாற்றப்பட்டு திராவிடர் கழகம் உருவானது 1944இல். திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது 1949ல். தி.மு.க.வில் ‘ர்’ இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளவும். இதற்கான விளக்கம் அப்போது சி.என். அண்ணாதுரையால் கொடுக்கப்படுட்டிருக்கிறது.

இனப்பிரிவுக்கும் பூகோளப் பிரிவுக்கும் உள்ள வேறுபாட்டை இது வெளிப்படுத்துகிறது. தி.மு.க.வின் தோற்றத்திலேயே இன அடையாளம் கைவிடப்பட்டது என்பதையே இது காட்டுகிறது. இந்தத் தொடர் 1949க்கு வரும்போது இதுபற்றி விவரமாகப் பார்க்கலாம்.

என்னுடைய பங்குக்கு நானும் ஒரு சேதியைச் சொல்லி வைக்கிறேன். ‘திராவிட நாடு’ இதழில் சி.என். அண்ணாதுரை எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 1943ல் ‘ஆரிய மாயை’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. கிறித்துவப் பாதிரிமார்கள் இந்து மதம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை அண்ணாதுரையின் அடுக்கு மொழியால் ஜோடித்ததுதான் இந்த நூல்; பிராமணர்கள்தான் ஆரியர்கள் என்று அண்ணாதுரை எழுதியிருந்தார். 1949ல் பி.எஸ். குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்தார். காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் இருந்தது; ‘ஆரிய மாயை’ தடை செய்யப்பட்டது.

பின்னர் 1967-ல் அண்ணாதுரை தமிழக முதல்வரானார். ஆனால் அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்தத் தடை நீக்கப்படவில்லை. முதலமைச்சராக இருந்த காலத்தில் அண்ணாதுரை அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, அரசியல் நெறிகளுக்கும் உட்பட்டே செயல்பட்டார் என்பதற்கான சான்று இது. ஆரிய இனம் வெளியிலிருந்து வந்தது என்பதாக ஆராய்ச்சியாளர்களும் சரித்திர அறிஞர்களும் இப்போது சொல்வதில்லை. ஆனால் இன்னோரு பூதம் கிளம்பியிருக்கிறது. திராவிட நாகரிகமே இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தது என்பதுதான் லேட்டஸ்ட் ஆராய்ச்சி.

அறிஞரும் எழுத்தாளருமான சுஜாதா எழுதுகிறார்:

திராவிட நாகரிகம் கடல்கடந்து வந்ததா, எங்கிருந்து வந்தது, என்று இந்துமகா சமுத்திரத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகள் வரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

– பக். 97 / கணையாழியின் கடைசிப் பக்கங்கள்

பிரச்சினை இத்தோடு நிற்கட்டும். நாம் மேலே போகலாம்.

3. ஆரியர்கள் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டிக் ‘கடவுள்’ என்றொரு கற்பனை கருத்தைச் சுட்டிக்காட்டித் திராவிடர்களின் மூளையையே குழப்பிவிட்டார்கள்.

-பக். 220.

கடவுள் சிந்தனையை ஆரியர்கள் திராவிடருக்குக் கொடுத்தனர் என்பது கால் பொய், அரைப் பொய், முக்கால் பொய் அல்ல; அது முழுப் பொய்.

சமஸ்கிருத இலக்கியத்தில் சாருவாகனைப் பற்றிய சேதி இருக்கிறது.

ஆனால் தமிழர் வாழ்வில் அதற்கு இடமே கிடையாது. இங்கே, கணக்கில்எடுத்துக் கொள்ளக் கூடாத கடவுள் வாழ்த்தைக் கணக்கில் சேர்த்துப் பாடியதற்காக அம்பிகாபதியின் தலையே அகற்றப்பட்டது; சமஸ்கிருத வழக்கில் அப்படி எதுவும் இல்லை. லோகாயதம் பேசும் முனிவரை ராமர் எச்சரித்து அனுப்பிய விவரம் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தண்டனை கொடுத்தது தமிழர்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைய அரசியலுக்காக அன்றைய வரலாற்றைப் புரட்டிப் போடக் கூடாது. அது இங்கே எடுபடாது.

‘ஆரியர்கள் கடவுளைக் கொண்டு வந்து திராவிடர்கள் மீது திணித்தார்கள்’ என்று சொல்லும் டாக்டர் டி.எம். நாயருக்கு தமிழர் வரலாறே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ அன்னையின் மணிமுடியாகிய திருக்குறளில் கடவுள் வாழ்த்தாக பத்துக் குறட்பாக்கள் உள்ளன. அதில் ஏழு குறட்பாக்கள் திருவடிப் பெருமையைப் பேசுகின்றன. உருவ வழிபாடும், திருவடிப் போற்றுதலும் இஸ்லாத்திலும் கிறித்துவத்திலும் இல்லாதவை. ஆகவே திருவள்ளுவரும் அவர் காலத்துத் தமிழரும் இயல்பாகவே இந்துக்களாக இருந்தனர் என்று அடித்துப் பேசலாம்.

கடவுள் வாழ்த்து மட்டுமல்ல; இந்திரனைப் பற்றியும் சொர்க்கம், நரகம் பற்றியும், ஊழ்வினை பற்றியும் திருவள்ளுவர் எழுதியிருப்பதை அறிவதற்காக டாக்டர். மதி. சீனிவாசன் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகளைக் கொடுக்கிறேன்.

பொது வகையில் இறைவனைப் பற்றிய கருத்துகளைக் கூறிய திருவள்ளுவர், திருமால், இந்திரன், திருமகள் ஆகிய பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். ‘தாமரைக் கண்ணான் உலகு என்னுமிடத்தில் திருமாலைச் சுட்டி உள்ளார். ‘திரு’ என்னும் சொல்லால் திருமகளைக் குறிப்பிடும் குறட்பாக்கள் மூன்றுள்ளன.

‘இந்திரனே சாலும் கரி’ என்ற இடத்தில் இந்திரனை நேராகவே சுட்டுகிறார். ‘இரந்தும் உயிர் வாழ்தல்’ குறளில் பிரமதேவனைச் சபிக்கிறார் திருவள்ளுவர்.

காமனாகிய மனமதனைச் சுட்டும் குறட்பா ‘ தனிப்படர் மிகுதி’ அதிகாரத்தில் காணப்படுகிறது. கூற்றுவன் பெயரையும் விடாது வள்ளுவர் குறிப்பிடும் இடமும் உண்டு. பூமா தேவியை ‘நிலமென்னும் நல்லாள்’ என்று பெயரிட்டுப் போற்றுவார். தேவர்களைப் பற்றிய சொற்கள் – அமரர், புத்தேளிர், வானோர், விசும்புளோர், அவியுணவின் ஆன்றோர் ஆகியன.

திருவள்ளுவர் தம் நூலில் இம்மை மறுமை பற்றியும் துறக்கம் (சுவர்க்கம்), நரகம் ஆகிய இரண்டு உலகங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பிறப்பறுப்பதே உயிர்கள் எய்தும் பயன்களில் முடிந்த முடிபு என்பதை வள்ளுவர் கூறுவார்.

– டாக்டர். மதி. சீனிவாசன் / திருக்குறளில் இறையியல் / திருக்குறள் சிந்தனைகள் / வானவில் பண்பாட்டு மையம் வெளியீடு.

இந்தப் பிரச்சினை எல்லாம் வரும் என்ற எண்ணத்தால் ‘மொத்தத்தில் முப்பது குறளுக்கு மேல் தேறாது’ என்று ஈ.வே.ரா. சொல்லிவிட்டார். திராவிட இயக்கங்களால் இன்று சொந்தம் கொண்டாடப்படும் இலக்கியம் ‘சிலப்பதிகாரம்’. ஈ.வே.ரா.வுக்குப் பயந்து கொண்டு இவர்கள் சிலப்பதிகாரச் சிறப்பைப் பேசாமல் இருந்த காலமும் உண்டு. இப்போது நிலைமை மாறிவிட்டது. கண்ணகி சிலை ஞாபகமாக மஞ்சள் துணியால் மூடப்பட்டு பிறகு திறக்கப்படுகிறது.

சிலப்பதிகாரக் கண்ணகியைத் தெய்வமாக்கியது யார்? ஆரியர்களா? அவளை ஆற்றுக்கால் பகவதியாகக் கொண்டு பொங்கலிடும் 30 லட்சம் கேரளப் பெண்களும் ஆரியர்களா என்பதை யோசிக்க வேண்டும்.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகள் சமணத் துறவி என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டால், ‘கடவுளை நுழைப்பது, கற்பனையைக் குழைப்பது’ என்பதெல்லாம் நாயரின் ‘மேதைமை’ எனபது விளங்கி விடும்.

இது விஷயமாக நாயருக்குச் சொல்லப்பட்டது போதும் என்று நினைக்கிறேன். அடுத்த கருத்துக்குப் போகலாம்.

4. காரல் மார்க்ஸ் என்ற பேரறிஞர், தம் ஆராய்ச்சி நூலான ‘மூலதனம்’ என்ற பொருளாதார அறிவுக் களஞ்சியத்தில் ‘மதம் மக்களுக்கு அபின்’ என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்துதான் சொல்லியிருக்கிறார்.

– பக். 220

இதை மட்டுமா சொன்னார் காரல் மார்க்ஸ்? டாக்டர். டி.எம். நாயரின் விசுவாசத்திற்குரிய பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். இந்தியாவின் வறுமை நிலைக்கு ஆங்கில ஆட்சிதான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார். கொத்தடிமைக் கூட்டத்தின் தலைவரான நாயர் அதையெல்லாம் படித்தாரா என்று தெரியவில்லை. இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் எழுதியதை இங்கே கொடுத்திருக்கிறேன்.

இந்தியாவினால் ஆட்சி செய்யப்படும் இந்தியா அதன் தொன்மை வாய்ந்த பாரம்பரியங்களிலிருந்து பிரிக்கப்பட்டு விட்டது; அதன் சென்ற காலம் முழுமையிலிருந்தும் துண்டிக்கப்பட்டு விட்டது. ஆங்கிலேயர்களின் நுழைவு இந்தியக் கைத்தறியை நாசமாக்கியது; இந்திய ராட்டையையும் அழித்தொழித்தது. முதலில் இந்தியத் துணிகளை ஐரோப்பிய மார்க்கெட்டிலிருந்து விரட்டியடித்தது. அதன் பிறகு தன் தேசத்தில் உற்பதியான துணிகளை நூலாடைகளுக்குத் தாயகமாக விளங்கிய இந்திய தேசத்திற்குள் இறக்குமதி செய்து குவித்தது இங்கிலாந்து.

இந்தியத் தொழில்கள் ஆங்கில அரசின் ஆதிக்கத்தால் மிதிபட்டதையும் இந்தியத் தொழிலாளிகள் ஆங்கில முதலாளிகளிடம் வதைபட்டதையும் பற்றி டாக்டர். டி.எம். நாயர் எந்த இடத்திலாவது பேசியிருக்கிறாரா என்று அறிய விரும்புகிறேன்.

5. அசல் ஆரிய ஆட்சி நடக்குமானால், இங்குக் காவிக் கொடிதான் பறக்கும் என்ற நிலை இருக்குமேயானால் இராமராஜ்ய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்குமேயானால், அவ்வளவுதான்! சூத்திர சம்புகன் கதிதான் எனக்கும் என் த்லைவர் திரு. பி.டி. தியாகராயர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

– பக். 223

வேதத்தைத் தொகுத்துக் கொடுத்த வேத வியாசரின் தாய் ஆரியர் அல்லர். ஆதிகவி வால்மீகி ஆரியர் அல்லர். தஸ்யூக்கள் அல்லது சூத்திரர்கள் எனப்பட்டோர் ரிக்வேத காலத்தில் வெறுக்கப்பட்ட கூட்டத்தவர் அல்ல. சூத்திர வேலைக்காரிக்குப் பிறந்த தீர்க்க தமஸ் பின்னாளில் ரிஷியானார். கவஷா, வத்ஸா, சத்யகாம ஜாபாலி என்கிற ரிஷிகளும் சூத்திரத் தாய்மார்களுக்குப் பிறந்தவர்களே.

மற்றபடி ‘தவம் செய்த காரணத்திற்காக சம்புகனை ராமன் தண்டித்தான்’ என்ற கதை வால்மீகி ராமாயணத்தில் இல்லை. ராமனை வழிபடுகிறவர்கள் ஸ்ரீராம பட்டாபிஷேகத்தோடு ராமாயணத்தை முடித்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு நடந்ததாகச் சொல்லப்படும் உத்தரகாண்டத்தை வால்மீகி எழுதினாரா என்பது பல காலமாக நடந்துவரும் இலக்கிய சர்ச்சை. வால்மீகி ராமாயணத்திலேயே பல இடங்களில் சொல்லப்படும் கதைச் சுருக்கத்தில் (சம்க்ஷேப ராமாயணம்) இந்த விவகாரம் இல்லை.

வால்மீகி ராமாயணத்தின் சுருக்கமாக ராஜாஜி எழுதிய புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளது. அதில் சம்புகனை தண்டித்த நிகழ்ச்சி இல்லை.

சுவாமி சித்பவானந்தர் எழுதிய வால்மீகி ராமாயணச் சுருக்கத்தில் இந்தக் கதை இல்லை.

கம்பராமாயணத்தில் இது இல்லை.

ராமனைப்பற்றி பத்ராசலம் ராமதாசர் எழுதிய கீர்த்தனைகளில் இதுபற்றிக் குறிப்பிடவில்லை.

தியாகையர் பாடிய கீர்த்தனைகளில் இது இல்லை.

அருணாசலக் கவிராயரின் ராமநாடகத்தில் இது இல்லை.

பத்ம புராணத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் மகாபாரதத்திலும் வரும் ராமாயணக் கதைகளில் இது இல்லை.

கோடிக் கணக்கான மக்கள் ரசித்த ராமானந்த சாகரின் தொலைக்காட்சித் தொடரில் இது இல்லை.

நாயரே ஏதாவது தயாரித்தால்தான் உண்டு.

6. கிழிந்த வேட்டியும், சேலையுங் கட்டிக் கொண்டு பரட்டைத் தலையோடு உடைந்து போன ஒழுகுங் குடிசைகளிலும் அப்படிக்கூட இல்லாமல் ஒண்டும் இடங்களிலும், நடைபாதை ஓரங்களிலும், பசிப் பிணியோடு கூட அதனால் அடையும் பலப்பல பிணிகளோடும், நடைப் பிணங்கள் போல, பன்றியோடு பன்றியாய் கழுதையோடு கழுதையாய் எச்சில் பொறுக்கிகளாய்த் தலைமுறை தலைமுறையாய்க் காலம் தள்ளி வரும் நம்மின கோடானு கோடி மக்கள்.

– பக்.227

இப்படியெல்லாம் ஏழைகளை வர்ணனை செய்து டி.எம். நாயர் உருவாக்கிய நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் யார் என்று பார்த்தாலே போதும். ஏழைகள் இவர்கள் ஆட்சியில் நொந்தது எப்படி, நூலானது எப்படி, நூடுல்ஸ் ஆனது எப்படி என்பது விளங்கி விடும்.

ராமநாதபுரம் ராஜா, சிவகங்கை ராஜா, சேத்தூர் ஜமீன்தார், சாப்டூர் ஜமீன்தார், கல்லிக்கோட்டை ராஜா, பர்ஹாம்பூர் ராஜா, பர்லாக்கிமிடி ராஜா, சின்னக்கிமிடி ராஜா, பொப்பிராஜா, பொப்பிலி ராஜா, பிட்டாபுரம் ராஜா, செல்லபள்ளி ராஜா, தேபுரேல் ராஜா, வெங்கடகிரி ராஜா தவிர நெடும்பல் சாமியப்ப முதலியார், பன்னீர் செல்வம், பி.டி. ராஜன், டபிள்யூ. பி. சவுந்தர பாண்டியன் நாடார் போன்ற மிராசுதார்கள்தான் பசியால் வாடிய பாமரர்கள்.

டாக்டர் டி.எம். நாயரின் கொள்கைப் பிரகடனத்தையும் அது குறித்த நம்முடைய விமர்சனத்தையும் பார்த்தோம்.

நாத்திகம் சொல்லுபவர் நாக்கு முடைநாக்கு – அவர் நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு என்ற திரு. அருட்பிரகாச வள்ளலாரின் வாக்கோடு இதை நிறுத்திக் கொள்கிறோம்.

இனி, மெளனத்தால் மக்களைக் கவர்ந்த தேசபக்தரைச் சந்திக்கலாம்.

Pasumpon Muthuramalinga Thevar1937ல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இராமநாதபுரம் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளராக மன்னர் பாஸ்கர சேதுபதி போட்டியிட்டார்; காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

ஜனநாயக வரலாறு காணாத ஒரு அநீதி அப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் அரசு ‘முத்துராமலிங்கத் தேவர் பொதுமேடையிலும், மக்கள் முன்னிலையிலும் பேசக் கூடாது’ என்று சட்டம் போட்டது.

ஆயிரக்கணக்கான மக்களை தன் வாக்கால் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவர் முத்துராமலிங்கத் தேவர். அவர் ஒவ்வொரு மேடையிலும் மக்களைப் பார்த்து இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்ததோடு சரி; பேசவில்லை. அவர் பேசாமல் இருக்க, மற்றவர்கள் அவருக்காகப் பேசினார்கள்.

முடிவில், பெரும் வாக்கு வித்தியாசத்தில் தேவர் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்தை நிறுவிய டாக்டர். டி.எம். நாயரின் சொற்பொழிவைப் பார்த்தோம்; தேசபக்தரான முத்துராமலிங்கத் தேவரின் வரலாறு காணாத வெற்றியையும் பார்த்தோம். இனி அடுத்த பகுதியில் இந்திய விடுதலைக்காகக் குரல் கொடுத்த தமிழ் இதழ்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

மேற்கோள் மேடை:

தென்னிந்தியர்கள் முழுக்க ஒரே இனத்தவரோ வம்சத்தவரோ அல்ல. தமிழர்களும் அப்படித்தான். இன்று ஆரியர் குடியேற்றம் என்ற கருதுகோள் கூட மறுவிசாரணை செய்யப்பட்டு வருகிறது.

– மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தன் / பக்.53 / காலச்சுவடு நேர்காணல்கள்.

நண்பர் மைத்ரேயனுக்கும், அவரைப் போன்றவர்களின் கவனத்திற்கும்:

புத்தகங்கள் – நான் படித்தவை

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம்

1. தமிழர் தலைவர் / சாமி சிதம்பரனார் / திராவிடர் கழக வெளியீடு
2. உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு / கி. வீரமணி / திராவிடர் கழக வெளியீடு
3. வைக்கம் போராட்ட வரலாறு / கி. வீரமணி / திராவிடர் கழக வெளியீடு
4. சுயமரியாதை இயக்கம் / ந.க. மங்கள முருகேசன் / பாரி நிலையம்
5. திராவிட இயக்க வரலாறு / இரா. நெடுஞ்செழியன்
6. தி.மு.க. வரலாறு / டி.எம். பார்த்தசாரதி / பாரதி பதிப்பகம்
7. நெஞ்சுக்கு நீதி / மு. கருணாநிதி
8. திராவிட இயக்க வரலாறு / கே.ஜி. இராதாமணாளன் / பாரி நிலையம்
9. திராவிட இயக்கத் தூண்கள் / க. திருநாவுக்கரசு
10. பெரியார் / அ.மார்க்ஸ் / பயணி வெளியீடு

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தலித்

1. பாரதி – காலவரிசைப்படுத்தப்பட்ட படைப்புகள் தொகுதி-9 / சீனி விசுவநாதன்
2. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் / அ. நாகலிங்கம் / பூம்புகார் பதிப்பகம்
3. ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரில் திராவிட இயக்கம் / பி.ராமமூர்த்தி
4. விடுதலைப் போரில் தமிழகம் / ம.பொ. சிவஞானம் / பூங்கொடி பதிப்பகம்
5. உணவில் ஒளிந்திருக்கும் சாதி / அன்பு பொன்னோவியம் / சித்தார்த்தா பதிப்பகம்
6. திராவிட இயக்கம் உண்மை வரலாற்றில் உண்மை உண்டா / அருணன் / இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ் மாநிலக் குழு
7. ஈ.வேராவின் மறுபக்கம் / ம. வெங்கடேசன் / பாரதீய பார்வர்டு பிளாக்
8. மகாத்மா காந்தி நூல்கள் (18) / அ. இராமசாமி / வர்த்தமானன் பதிப்பகம்
9. இராஜாஜி என் தந்தை / கோவை அய்யாமுத்து
10. கண்டு கொள்வோம் கழகங்களை / நெல்லை ஜெபமணி / முத்து மாரியம்மன் பதிப்பகம்

கிறித்தவம்

1. கிறித்தவமும் சாதியும் / ஆ. சிவசுப்பிரமணியன் / காலச்சுவடு பதிப்பகம்

திரைப்படம்

1. தமிழ் சினிமாவின் கதை / அறந்தை நாராயணன் / நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
2. வியப்பளிக்கும் ஆளுமைகள் / வெங்கட் சாமிநாதன் / யுனைடெட் ரைட்டர்ஸ்

‘போகப் போகத் தெரியும்’ தொடரில் கடந்த 20 பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களில் முக்கியமானவை இவை.

அடுத்த 20 பகுதிகள் முடிந்ததும் அடுத்த பட்டியலைக் கொடுக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்களை முடிவில் தருகிறேன்.

13 Replies to “போகப் போகத் தெரியும்-20”

 1. ஐயா

  பல விஷயங்களை உங்கள் கட்டுரைத் தொடர் மூலமாகத் தெரிந்து கொள்கிறோம். திராவிட மாயையில் மூழ்கிக் கிடக்கும் மூடர்களின் கண்களை உங்கள் கட்டுரைகள் திறக்கட்டும். இந்த அற்பப் பதர்கள்தான் தங்களுக்குச் சுயமரியாதை பெற்றுத் தந்ததாக தமிழ் நாட்டில் கோடிக்கணக்கான ஏமாளிகளும் படித்த பெருமேதைகளும் இன்றும் எண்ணிக் கொண்டு இவர்களை வணங்கி பின்னால் திரிகிறார்கள். இந்த அவலம் என்று மாறும்? உங்கள் பணி தொடர ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் அமைதியையும் ஆரோக்யத்தையும் அளிக்கட்டும்

  அன்புடன்
  ச.திருமலை

 2. எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் தமிழ் நாட்டிலே தமிழறியாத் தமிழர்கள் இருக்கும் வரை திராவிடம் பேசித்திரியும் இந்த எத்தர்களும் இருப்பார்கள். திராவிடத் தலைவர்களின் மோசடிகளை தோலுரித்துக் காட்டும் திரு.சுப்புவின் படைப்புகள் அச்சில் ஏறி பாமரனின் பார்வைக்கு சென்றால்தான் பலன் கிட்டும். தொடரட்டும் சுப்புவின் சாட்டையடிகள். தமிழ் ஹிந்து பக்கம் வருபவர்களுக்காவது உண்மை தெரியட்டும்.

  வித்யா நிதி‌

 3. //கிறித்துவப் பாதிரிமார்கள் இந்து மதம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை அண்ணாதுரையின் அடுக்கு மொழியால் ஜோடித்ததுதான் இந்த நூல்; பிராமணர்கள்தான் ஆரியர்கள் என்று அண்ணாதுரை எழுதியிருந்தார். 1949ல் பி.எஸ். குமாரசாமி ராஜா முதலமைச்சராக இருந்தார். காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் இருந்தது; ‘ஆரிய மாயை’ தடை செய்யப்பட்டது.//

  இது கிறிஸ்துவ-திராவிட உறவிற்கு நல்ல சான்று.

  மேலும், அடையாரில் உள்ள கிரீன்வேஸ் சாலையை பி எஸ் குமாரசாமி ராஜா சாலை என்று பல வருடங்களுக்கு முன்னால் அவர் நினைவாக பெயர் மாற்றி வைத்ததை, தற்போது எவாஞ்சலிஸ்ட் “தினகரன் சாலை”யாக மாற்றி வைத்துள்ளது தி மு க அரசு.

  இது கிறிஸ்துவ-திராவிட உறவிற்கு மற்றொரு சான்று.

  //ஆனால் இன்னோரு பூதம் கிளம்பியிருக்கிறது. திராவிட நாகரிகமே இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தது என்பதுதான் லேட்டஸ்ட் ஆராய்ச்சி.//

  ஆம். இதோ:

  There are many diverse ethnic groups among the people of India. The 6 main ethnic groups are as follows.

  Negrito

  Proto – Australoids or Austrics

  Mongoloids

  Mediterranean or Dravidian

  Western Brachycephals

  Nordic Aryans

  Negroids

  The Negritos or the Brachycephalic (broad headed) from Africa were the earliest people to have come to India. They have survived in their original habitat in Andaman and Nicobar Islands. The Jarawas, Onges, Sentinelese and the Great Andamanese are some of the examples. Some hill tribes like Irulas, Kodars, Paniyans and Kurumbas are found in some patches in Southern part of mainland India.

  Pro-Australoids or Austrics

  These groups were the next to come to India after the Negritos. They are people with wavy hair lavishly distributed all over their brown bodies, long headed with low foreheads and prominent eye ridges, noses with low and broad roots, thick jaws, large palates and teeth and small chins. The Austrics of India represent a race of medium height, dark complexion with long heads and rather flat noses but otherwise of regular features. Miscegenation with the earlier Negroids may be the reason for the dark or black pigmentation of the skin and flat noses.
  The Austrics laid the foundation of Indian civilization. They cultivated rice and vegetables and made sugar from sugarcane. Now these people are found in some parts of India, Myanmar and the islands of South East Asia. Their languages have survived in the Central and Eastern India.

  Mongoloids

  These people are found in the North eastern part of India in the states of Assam, Nagaland, Mizoram, Meghalaya, Arunachal Pradesh, Manipur, and Tripura. They are also found in Northern parts of West Bengal, Sikkim, and Ladakh. Generally they are people with yellow complexion, oblique eyes, high cheekbones, sparse hair and medium height.

  Dravidians

  These are the people of South India. They have been believed to come before the Aryans. They have different sub-groups like the Paleo-Mediterranean, the true Mediterranean, and the Oriental Mediterranean. They appear to be people of the same stock as the peoples of Asia Minor and Crete and pre- Hellenic Aegean’s of Greece. They are reputed to have built up the city civilization of the Indus valley, whose remains have been found at Mohenjo- daro and Harappa and other Indus cities.

  Western Bracycephals

  These include the Alpinoids, Dinarics and Armenoids. The Parsis and Kodavas also fall in this category. They are the broad headed people living mainly on the western side of the country such as the Ganga Valley and the delta, parts of Kashmir, Kathiawar, Gujarat, Maharashtra, Karnataka and Tamil Nadu.

  Nordics or the Indo-Aryans

  This group were the last one to immigrate to India. They came to India somewhere between 2000 and 1500 B.C. They are now mainly found in the northern and central part of India.

 4. தேவரைப் பற்றிய குறிப்பு மிக அருமை.
  மௌனமே சிறந்த மொழி.
  ஆனாலும் தார்மிகப் பொறுப்பால் சில சமயம் தகுதியற்றவர்களுக்குக் கூட பதில் சொல்ல நேர்கிறது.

 5. அன்புள்ள திரு.சுப்பு அவர்களுக்கு,

  நான் முன் எழுதிய ஒரு குறிப்பை நினைவு கொண்டு வாசகருக்கும், எனக்கும் உதவும் வகையில் திராவிட இயக்கத்தின் மாய்மாலங்களைப் பகிரங்கப் படுத்தும் நூல்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி. வாசகர்கள் இப்பட்டியலை மிகவும் மெச்சுவார்கள் என்பது என் நம்பிக்கை. தேடிப் பிடித்துப் படிக்கவும் செய்து, தாம் அறிந்தவற்றை வைத்து நண்பர்கள், மேலும் தெரிந்தவர்களிடம் பேசும்போது கருத்துப் பரப்பல் செய்தார்களேயானால் ஒரு பத்தாண்டுகளில் திராவிட இயக்கத்தின் கோர முகம் தமிழ் மக்களுக்குத் தெளிவாகும். இதன் பின்னே இருந்த கிருஸ்தவ இயக்கங்களின் மத வெறியும், இந்து சமுதாயத்தின் மீது இருந்த காழ்ப்பும், இகழ்வுணர்வும் இத்தனை காலமாக வெளிப்படுத்தப் படவே இல்லை. சமீபத்தில் திருக்குறளே தாமஸால் எழுதப்பட்டது என்றோ, அல்லது தமிழிலக்கியத்தின் பெரும் காப்பியங்கள் எல்லாமே கிருஸ்தவத்தின் தாக்கத்தால்தான் எழுந்தன என்றோ பெரும் பொய்களைத் துணிந்து சொல்லத் தலைப்பட்டிருக்கிறார்கள் கிருஸ்தவ ஸ்தாபனங்களால் போஷிக்கப் படும் புல்லுருவிகள். இந்த வகை புரட்டுகள் அலங்கார மேடைகளில் ஆரவாரத்தோடு நிகழ்த்தப்படுகின்றன. இவற்றில் சில இந்து சாமியார்கள் கூடக் கலந்துகொண்டு இவற்றைக் கௌரவிக்கிறார்கள்.

  காலனியத்தின் போது நாயர் போன்றவர்கள் வெள்ளையர் காலைப் பிடித்துப் பிழைத்தனர்; இந்தியா என்று ஒரு தேசம் எழுந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனம் காட்டினர். இன்றோ இந்தியா எழுந்து விட்டாலும், அது பாரத தேசமாகி விடக் கூடாதே என்று எவ்வழியிலும் அதை உடைக்கச் சதி செய்யும் ஒரு கூட்டம் இந்தியா முழுதும் இயங்குகிறது. இதைக் குறித்துத் தமிழ் செல்வன் ஏற்கனவே ஒரு கட்டுரை இந்த வலைப் பிரசுரத்திலேயே எழுதி இருக்கிறார்.

  பாரதத்துக்கு என்று விடிவு வரும், இந்தக் காச நோய்கள் அழியும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். உங்கள் கட்டுரைகள் நம் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்குகின்றன. உங்கள் பணி தொடரட்டும். இன்னொரு முறை இத்தாலி, அரேபியா, சீனா ஆகிய நாடுகளின் காலனியாக நாம் மாறாமல் நம் மக்களின் வாழ்வு அவர்கள் கையிலேயே தங்கி இருக்க இத்தகைய முயற்சிகள் பல்கிப் பெருக வேண்டும்.
  மைத்ரேயன்

 6. போகத்தெரியும் படைப்புகளுக்கு நன்றி, இரண்டு மூன்று தலைமுறையினர் திராவிட கட்சிகளின் பம்மாத்து வேலைகளில் மதிமயங்கி விட்டனர் , இது போன்ற எழுத்துக்கள் அனைவரையும் மாயையிலிருந்து தட்டி எழுப்பும்.

  போகப் போக வெளுக்கும் என்று கூடுதல் தலைப்பு வைக்கலாம்

  நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டம் டம் டம் !
  நரியின் வேஷம் கலைஞ்சு போச்சு டம் டம் டம்

 7. வரலாற்றில் மறைக்கப்பட்ட அரிய தகவல்களைத் தருகிறீர்கள்;
  நன்றி.

  தேவ்

 8. Brilliant! You have been exposing the conspiracy of dravidian politics and the damage it has done to our socio-cultural, political life over the centuries.
  The dravidian movement is a Fascist, anti-national movement nurtured by a bunch of quislings and hirelings of the British Raj which include EV Ramasamy Naicker ( a very lucky illiterate who was fortunate enough to be mistaken by the Tamil society as a ‘reformer’!)

  Not many would know that he had leased out his tabloid, ‘Kudi Arasu’ to the British govt. to mobilize public support in favour of the colonial masters and against the Congress and the freedom movement!
  He had struck a deal with his masters from Europe whereby he made available the oratorial skills of the anti-national leaders for propagating the British viewpoint.

  Well done, Sir; keep up the good work.

 9. ப.இரா. ஹரன் அவர்கள் எழுதிய இணைமொழி மிகவும் மதிப்புள்ளது. வாசகர்கள் அதைப் பாதுகாத்து சமயத்தில் பயன்படுத்த வேண்டுகிறேன்.

 10. சுப்பு அய்யாவின் இந்த தகவல் களஞ்சியமாம் “போகப்போகத் தெரியும்” கட்டுரை தீராவிடத்தால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நல்ல மருந்து. வரலாற்றில் பொய்மைக்கு நல்ல மருந்தளித்த மருத்துவராக உணரப்படுவீர் ந்நி. வாழ்க நீர் வளர்க உங்கள் கொற்றம்..

 11. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. Kural No. 25 from நீத்தார் பெருமை !

  இதன் பொருள்:- ஐம்பொறிகளையும் அடக்கியவன் ஆற்றலுக்கு வானவர் தலைவனான இந்திரனே ஒப்பானவன்.

  அடுத்து,

  அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வைளைக் காட்டி விடும்.
  Kural No. 167 from அழுக்காறாமை!

  இதன் பொருள்:- பிறர் வளர்ச்சி கண்டு பொராமைப்படுபவனை திருமகள் கண்டு வெறுப்புற்று தனது தமக்கை மூதேவிக்கு காடிக்கொடுத்துவிடுவாள்!!

  அடுத்து,

  மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. kural no. 610 from மடியின்மை!

  இதன் பொருள்:- கடவுள் தன் காலடியால் அளந்த நிலப்பரப்பு முழுவதையும் சொம்பலில்லாத அரசன் ஒருசேர அடைவான். (எந்த கடவுள் உலகை அளந்தான் என்று எல்லோருக்கும் தெரியும்).

  அடுத்து,

  அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் முகடியால் மூடப்பட்ட டார்.
  kural no.936 from சூது!

  இதன் பொருள்:- மூதேவியாகிய சூதாட்டத்தில் மூழ்கியவர் வயிறு நிறைய உணவும் உண்ணாமல் பலவகைத் துன்பத்தையும் அடைவார். (மூதேவியை அறிமுகப்படுத்திய மதம் எது என்பதில் எவருக்காவது குழப்பம் உள்ளதா??).

  அடுத்து,

  இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.
  kural no.920 from வரைவின் மகளிர்!

  இதன் பொருள்:- இருவகை மனமுடைய பொது பெண்டிரும், கள்ளும், சூதுமாகிய மூன்றும் திருமகளால் நீக்கப்பட்ட உறவாகும்.

  கடைசியாக,
  தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.
  This is Kural No. 1103 from புணர்ச்சி மகிழ்தல்!

  இதன் பொருள்:- தானே விரும்பி ஏற்கும் காதலியின் மெல்லிய தோள்களை தழுவும் இன்பத்திற்கு ஈடாகுமா தாமரைக் கண்ணான் உலகு. (திருமாலுக்குத் தான் தாமரை போன்ற கண்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே!).

  இதோ பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி கூறுகிறார்:-

  நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
  தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த- நூன்முறையை
  வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சம்
  சிந்திக்க கேட்க செவி.

  இதன் பொருள்:- பிரம்மதேவன் திருவள்ளுவராக பிறந்து, நான்கு வேதங்களின் உண்மைப்பொருளை (தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற புருஷார்த்தங்களை) ஆறாம், பொருள், இன்பம் என்னும் மூன்று பாலாகத் தமிழில் கூறிய திருக்குரளாகிய தமிழ் வேதத்தை தலையால் வணங்கி, வாயால் துதித்து, மனத்தால் த்யானித்து காதால் கேட்பதே சால்புடயதாகும்.

  சங்கப்புலவர் பரணர் கூறுகிறார்:-

  மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
  ஞால முழுதும் நயந்தளர்ந்தான்- வாலறிவின்
  வள்ளுவருந் தங் குறள் வெண்பா வடியால் வையத்தார்
  உள்ளுவவெல் லாமளந்தார் ஓர்ந்து.

  இதன் பொருள்:- குறுகிய வடிவாய் இருந்த திருமால் வளர்ந்து தன்னுடைய இரண்டு அடிகளால் இவ்வுலகை முழுவதும் விரும்பி அளந்தார். மெய்யறிவினை உடைய திருவள்ளுவரும் தம்முடைய சொல்லாகிய வெண்பா குறளின் இரண்டு சிறிய அடிகளால் உலகத்து மக்கள் உள்ளங்களில் எண்ணும் எண்ணங்கள் எல்லாவற்றையும் ஆய்ந்து கூறிவிட்டார்!!

  வேத மதமே தமிழர் பண்பாடு என்பதற்கு ஆதாரங்கள் கொட்டிகிடக்கின்றன.

  https://www.omilosmeleton.gr/pdf/en/indology/Vedic_Roots_of_Early_Tamil_Culture.pdf

 12. ஆரிய மாயை…!

  பேராசிரியர் கே.ஏ.மணிக்குமார் அவர்கள் வடித்த “கங்கை சமவெளி ஆரியர் சமுதாயம்” ஆய்வுக் கட்டுரையில் சில தவறுகள் இருக்கலாம், ஆரிய-திராவிட எதிர்ப்பு முறையில் எழதப்பட்டிருக்கலாம், ஆனால் உண்மையில் ஆரியர்கள் அன்னியர்கள் என்பதனை மறுக்க முடியாது. தமிழர் பண்பாடு ஆரியர் வருகைக்கு முன்பே தனித்துவத்துடன் விளங்கியது, பிற்பாடு வந்த ஆரிய அன்னிய படையெடுப்புகளால் தமிழ்மொழியும், தமிழர் பண்பாடும் பாதிப்புக்குள்ளாகி திரிபடைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பதாக சிதைந்தது இன்றும் தமிழர் பண்டிகைகளின் சிறப்புகள் குறுகி வட இந்திய கலாசாரங்கள் தமிழ் மக்களிடையே பரவி வருவதை கண்கூடாக காண முடிகிறது. எனினும் தமிழ்மொழி தன் தனித்தன்மையினால் இன்றும் சிறப்புற்று விளங்குகிறது.

  ஆரிய மாயையில் சிக்குன்றவர்கள் ஆரிய சாத்திர சம்பிரதாயங்களையும், புரான-இதிகாசங்களையும், வர்ணாசிரம முறைகளையும் நேசிப்பவராயின் தமிழர்கள் சூத்திரர்கள்-நாலாந்தர குடிமக்கள், நான்வருண சாதியிலும் வராத தாழ்த்தப்பட்டவர்கள் கீழ்மக்கள் என்ற ஆரிய-பார்ப்பனர்களின் நியதியை ஒப்புக்கொண்டவராவர். பண்டைய தமிழர்களின் பண்பாடும் தமிழ் அரசர்களின் ஆட்சியும் சிறப்புற்று விளங்கியது என்றும், பண்டைய தமிழர்கள் இரண்டு பெரும் பிரிவாக (ஒன்று ஆட்சி புரியும் அரச குலத்தவர்கள் மற்றையவர் குடிமக்கள்-குடிபடைகள்) மட்டுமே இருந்தார்கள் என்பதனை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிவித்துள்ளனர். பிற்பாடு வந்த ஆரிய படையெடுப்புகளினால் தந்திரத்தாலும், மூடபழக்கவழக்கங்களை திணித்தும், தமிழ் அரசர்களையும் – தமிழ் மக்களையும் ஆட்சி கொள்ள வெள்ளையனின் பிரித்தாலும் கொள்கையை அன்றைக்கே புராணங்கள், இதிகாசங்கள், வருணாசிரம முறைகள் என்றவாறு புகுத்தி வெற்றியும் கண்டுவிட்டனர்.

  தென்பகுதி மீதான வட இந்திய படையெடுப்புகளினால் தமிழ்மொழியும், தமிழர் பண்பாடும் பாதிப்புக்குள்ளாகி திரிபடைந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பதாக சிதைந்தது, பிற்பாடு வந்த முகலாயர் படையெடுப்புகளினால் தென்பகுதி நோக்கி அதிக அளவில் பரவிய ஆரிய-பார்ப்பனர்கள் அக்பரின் ஆட்சிக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் முகலாய ஆட்சிகளிலும் பின்பு வந்த வெள்ளையர்களின் ஆட்சிகளின் போதும் தங்கள் மதிப்பு குறைந்து விடாது ஆட்சியாளர்களுக்கு ஆமாம் போட்டும் தங்களின் தந்திரங்களாலும் அவர்களை நிலைநிறுத்திக்கொண்டனர்.

  பிற்பாடு வந்த உலக அனுபவங்களாலும், மேலை நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளினாலும் ஆரிய-பார்ப்பனர்கள் தங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ள விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டதோடு மட்டும்மல்லாமல் போராட்டங்களில் தலைமையேற்கவும் தொடங்கினர். இதனால் உண்மையான பூர்வகுடி விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்னுக்கு தெரியாமல் போய்விட்டனர். இந்திய விடுதலைக்கு முன்பான போராட்டங்களில் ஆரிய-பார்ப்பனர்களின் நிலையே ஓங்கீயிருந்தது என்பதும் காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்த சுபாசும் அவர்களின் வர்கக உணர்வுகளுக்கு பலியானவர் என்பதும் கண்கூடு. இந்திய துணைகண்டம் முழுக்க பல்வேறு மொழியினை பண்பாட்டினை உடையதாயினும் அனைத்து இடங்களின் ஆட்சி பீடங்களிலும் ஆரிய-பார்ப்பனர்களின் நிலையே ஓங்கி உள்ளமையே இதனை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டும்.

  இன்றும் இந்திய அறிவியலாளர்களில் ஆரிய-பார்ப்பனர்களின் ஆதிக்கமே அதிகம் என்பதனையும் 3 விழுக்காடு மட்டுமே உள்ள ஆரிய-பார்ப்பனர்கள் மீதம் 97 விழுக்காடு மக்களை முழுங்கி ஏப்பம் விட்டதையும், புதிய பல இந்திய கண்டுபிடிப்புகளுக்கு சமற்கிருததிலேயே பெயரிடுவதும் ஒரு புதிய பரிணாம வரலாற்று ஆதிக்கமே என்பதனையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

  ஆரிய-பார்ப்பன இதிகாசங்கள் என்ற இராமாயணமும், மகாபாரதமும் அன்றைய தென்இந்திய-வடஇந்தியர்களுக்கிடையேயான போரினை மையமாக வைத்து எழுதப்பட்ட கற்பனை கதைதான் என்பதனையும் தமிழர்கள் உணரவேண்டும். இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத்கீதை மகாபாரதத்தில் வரும் ஒரு பகுதிதான் என்பதனையும் அதில் வருணாசிரமங்கள் பற்றியும் அரசு, ஆட்சி, மன்னர், மக்கள் பற்றியும் கிருட்டினன் போதிப்பது போல அவர்களின் நிலைகளை உயர்த்தி கோலோச்சவே எழுதப்பட்டது என்பதனையும் கடவுள், பூசை, யாகங்கள் என்று மக்களை ஏமாற்றி வெற்றி கொண்டனர் என்பதனையும் நினைவில் கொள்ளவேண்டும். இக்காலத்தில் எழுதப்படுகிற கற்பனை கதைகள், நாவல்கள் கூட பிற்காலத்தில் வரலாற்று படிமனையாக வாய்ப்புள்ளது, 23ம் புலிகேசி படத்தில் வரும் “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்ற வசனம் இங்கு நினைவு கொள்வது பொறுத்தமுடையதாகும்.

  எங்கு ஆட்சி நடந்தாலும் அங்கு இவர்கள் தங்கள் மஞ்சள் பையை தூக்கிக்கொண்டு மந்திர-தந்திரங்கள் என்று ஏமாற்றி ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தங்களின் காரியங்களை சாதித்து கொள்கின்றனர். ஆரிய-பார்ப்பனர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுபவர்கள் ஆரிய-பார்ப்பனர்கள் மற்றையவரைவிட புத்திசாலிகள், அறிவு ஜீவிகள் என்று தம்பட்டம் அடிக்கின்றனர். எது வித வேலையும் செய்யாமல் உடல் நோகாது உண்டு கொழுத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும் மற்றையவரை ஏமாற்ற சிந்திப்பதை விடுத்து. அதுவே அவர்களை புத்திசாலிகள் ஆக்கியது என்றால் உழைப்பாலும் உயர்ந்த அறிவாலும் இன்று உலகமே வியந்து பார்க்கும் தமிழர்கள் தம்மை உணர்ந்தால் வல்லமை பெற்ற ஒரு சிறந்த சமூகமாக உருவாகுவார்கள்.

  ஆரிய-பார்ப்பனர்களினால் சமூதாயத்தில் ஏற்பட்ட சமூக ஏற்ற தாழ்வுகளை கண்கூடாக கண்டுணர்ந்த தந்தை பெரியார் அவர்கள் உழைக்கும் மக்களை சுரண்டி கொழுக்கும் ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்பு, ஆரிய மாயை, கடவுள் எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு என பல பரிணாமங்களில் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார் என்பதனை கடந்த கால வரலாறு தெளிவாக காட்டும். தந்தை பெரியார் அவர்களின் ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்பு என்பதற்கு பிற்பாடு தான் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பார்ப்பனரல்லாதவர்களும் அரசியல் தலைமை ஏற்று முதலமைச்சர்களாக வர வழி சமைத்ததோடல்லாமல் வட இந்திய அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

  தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை ஆரிய-பார்ப்பனர் எதிர்ப்புக்கு அப்பால் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் நமது பண்பாடு கலாச்சாரத்தை பேணி காக்க வேண்டும். இட்லர் ஆரியர் என்று ஆராய்ந்து கண்டு கொண்ட ஆரிய-பார்ப்பனர்கள் இரண்டாவது உலகப்போரில் இட்லர் வெற்றிபெறவேண்டும் என்றும் உருசிய கம்யூனிசம் தோல்வி பெறவேண்டும் என்றும் பத்திரிக்கைகளில் அறிக்கை விட்டதையும் சிலர் வேள்வி கூட நடத்தியதையும் மறந்து விட வேண்டாம். எங்கு அவர்கள் இருப்பினும் தமது ஆரிய-பார்ப்பன உணர்வை காட்டாமல் இருப்பதில்லை. பின்பு நாம் மட்டும் எந்த வகையில் இளைத்தவர்கள்.

  ஆரிய-பார்ப்பன மாயையில் இருந்து தமிழர்களை – விடுவிப்போம்…!

  தூயதமிழ் தேசியத்தை – வென்றெடுப்போம்…!

  தமிழ் பண்பாட்டு கலாச்சாரத்தை – மீட்டெடுப்போம்…!

 13. thanthi periyar,

  first u go and ask malyalles,kanndiga and telugus all accepting their languages came from tamil.they never accept it.Telugus and kanndigas never said they are dravidians. again and again evidence clearly given against Aryan invansion, stil u believe aryan invansion then u r living in fools paradise.
  who is kamaraj who ruled tamil nadu for 10 years .whether he is brahmin?
  so, leave the illusion and without peiriyar , all other castes come to forefront.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *