ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 1

eelamபங்குனி 26, புதன்கிழமை, தமிழ் ஈழம் சம்பந்தப்பட்ட மூன்று பேச்சுகள் நம் கவனத்தைக் கவர்ந்தன. முதலாவது, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் “முதல்வர் கலைஞர் அவர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவரத் தவறிவிட்டார். மத்திய அரசாங்கத்திற்குக் கடிதங்களும், தந்திகளும் அனுப்பிக் கொண்டிருந்தாரே ஒழிய உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. அவருடைய இயலாமை வெளிப்பட்டுவிட்டது. எனவே அவர் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

இரண்டாவது, கட்சியின் வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்காக நாங்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். நாளை தி.மு.க. தலைமையில் நடக்கப்போகும் பேரணியில் கலந்து கொள்வோம். தற்போது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தவும், இலங்கைத் தமிழர்கள் கொல்லப் படுவதைத் தடுக்கவும் கூடிய கடைசி சக்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான். அவரை விட்டால் வேறு கதியில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியா அவர்களுக்கு இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்கும் தார்மீகப் பொறுப்பு உள்ளது. எனவேதான் அவரிடம் வேண்டிக் கொள்கிறோம்” என்று கூறினார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், சில நாட்களுக்கு முன்னால் வரை, இதே திருமாவளவன் சோனியா காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்துப் பேசாத பேச்சு இல்லை. இவரது கட்சித் தொண்டர்கள் சோனியாவின் உருவ பொம்மையைப் பல இடங்களில் எரித்தார்கள். தனது அரசியல் லாபத்துக்காகக் கட்சியை தி.மு.க. அணியில் இணைத்துக் கொண்ட திருமாவளவன் தமிழகக் காங்கிரஸாரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று தங்கபாலு கூறினார். ஆனாலும் அன்று பேசிய திருமாவளவன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகத் தாங்கள் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்றும், அதே சமயத்தில் கூட்டணி தர்மத்தின்படி அக்கட்சிக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்றும் தெளிவு (!) படுத்தினார்.

வைகோவும் ஏழு கோடித் தமிழர்களும்

vaikoமூன்றாவது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ மீண்டும் ஒருமுறை தன் விடுதலைப்புலி ஆதரவைப் பறைசாற்றிக் கொண்டார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, “பிரபாகரனை யாரும் போரில் வெல்ல முடியாது, உலகத்தில் உள்ள அனைத்துத் தழிழ் மக்கள் மனதிலும் அவர் நிறைந்துள்ளார். அவருக்காக இங்கே பன்னிரண்டு தமிழர்கள் தீக்குளித்ததே அதற்கான தக்க சான்றாகும். இங்குள்ள தமிழ் இளைஞர்கள் பிரபாகரனுக்கு ஆதரவாக இலங்கை செல்வதை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கடல் எப்போதும் தடுக்க முடியாது. அர்ஜென்டினாவில் பிறந்த செ குவேரா க்யூபாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கியதைப் போல், தமிழகத்து இளைஞர்கள் தங்கள் தொப்புள்கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காகக் களம் இறங்குவார்கள்” என்று கர்ஜித்தார். பின்னர், தன்னுடைய விடுதலைப் புலி ஆதரவை மேலும் தெளிவுபடுத்தும் விதமாக, “ஏழு கோடித் தமிழர்களின் மனங்கள் எரிமலையாகக் கனன்று கொண்டிருக்கின்றன. ஸ்ரீபெரும்புதூர் மறந்து போய்விட்டது. பிரபாகரன் மீது ஒரு துரும்பு பட்டால் கூடத் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும். இலங்கைப் போரை நிறுத்தவில்லை என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்காது. தமிழகம் தனி நாடாகப் பிரிய நேரிடும்” என்று முழங்கினார்.

இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் சமயத்தில் ம.தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு, குறிப்பாகப் பாராளுமன்றத் தேர்தல் அரங்கத்தில், குழப்பமாக இருந்தது. அ.தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சாதகமாக இல்லை. அவருடைய கட்சியிலிருந்து பாராளுமன்ற, சட்டமன்ற அங்கத்தினர்கள் தி.மு.க.விற்குத் தாவிக்கொண்டிருந்தனர். அவரும் மீதியுள்ள கட்சியினரும் அரசியல் வெற்றிடத்தை நோக்கித் தள்ளப்பட்ட அதே சமயம் இலங்கையிலும் விடுதலைப் புலிகள் பெரும் தோல்வி அடையும் தறுவாயில் உள்ளனர். இந்த மாதிரியான காரணங்களால், இயலாமையும் வெறுப்புமாக உள்ளம் நொந்த நிலையில், வைகோ தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் மத்திய அரசின் மீது கொட்ட நினைத்து, பிரிவினையும் வன்முறையும் தொனிக்கும் விதமாக, நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகப் பேசியிருக்கிறார்.

இதில் நகைப்புக்குரிய விஷயம் என்னவென்றால், தன்னுடைய கட்சியில் உள்ளவர்களையே தன்னுடன் இருத்திக்கொள்ள இயலாத வைகோ, ஏழு கோடித் தமிழர்களும் தன் பின்னே ஓடிவருவது போலப் பேசியதுதான்.

வீரவுரைகளின் பின்னணி

podduammanமேற்கண்ட தலைவர்கள் இப்படிப் பேசியதற்கான பின்னணியைக் கொஞ்சம் பார்க்கலாம். ஏப்ரல் ஐந்தாம் தேதியன்று, இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் வசமிருந்த கடைசிப் பகுதியான புதுக்குடியிருப்பையும் கைப்பற்றியது. தற்போது விடுதலைப் புலிகளின் நடமாட்டம் 20 சதுர கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் அடைக்கப் பட்டுள்ளது. அவர்களின் பல ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டு விட்டனர். மீதம் இருப்பது பிரபாகரன், அவர் மகன் ஆண்டனி மற்றும் பொட்டு அம்மன் ஆகியோர் தான். கடுமையான சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் கொண்டுள்ள பிரபாகரன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. எனவே ஆண்டனி அவரைக் கவனித்துக்கொள்ள, பொட்டு அம்மன் விடுதலைப் புலிகளின் தலைமையேற்று, வேலவன் என்கிறவரைத் தளபதியாக நியமித்து போர் புரிந்துவருவதாக சொல்லப் படுகிறது. விடுதலைப் புலிகள் வசம் இருக்கும் இந்தச் சிறிய வனப்பரப்பில், கிட்டத்தட்ட இரண்டு லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இதுநாள் வரை பொதுமக்களைக் கேடையமாகப் பயன் படுத்தி வந்த விடுதலைப் புலிகள் மேலும் அவர்களை வெளியில் தப்ப விடாமல் தடுத்து வருகின்றனர் என்று சொல்லப் படுகிறது. பொட்டு அம்மனும், “அப்பாவித் தமிழர்களைத் தப்பவிட்டால் நமக்கு ஆபத்தாக முடியும். எனவே அவர்கள் தப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நம்மை மீறி அவர்கள் தப்ப முயன்றால் சுட்டுத்தள்ளவோ, கொல்லவோ தயங்க வேண்டாம்” என்று புலிகளுக்கு உத்தரவு போட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. விடுதலைப் புலிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள புலி ஆதரவுக் கட்சிகள், இதைப் பயன்படுத்திப் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கியதின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் மேற்கண்ட பேச்சுகள்.

ஜெயலலிதாவின் கருணையில் 4 தொகுதிகள்

இதனிடையே ஒன்பதாம் தேதி வியாழக்கிழமையன்று, ஜெயலலிதா கொடுத்த நான்கே நான்கு தொகுதிகளை வேறு வழியின்றி பெற்றுக் கொண்டார் வைகோ. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், 2006-ல் சட்டமன்றத் தேர்தல் காலத்திலிருந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ள வைகோ, தற்போது பாராளுமன்றத் தேர்தலில், தான் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல், ஏதோ ஜெயலலிதா போட்டதை வாங்கிக் கொள்ளும் அளவுக்குத் தாழ்ந்து போனது தான். கடைசியாக வந்து சேர்ந்த பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், முதலில் தொகுதிப் பங்கீடு முடித்துச் சென்றது ஒரு முரண் நகை! இது தற்போது தமிழகத்தில் வைகோ மற்றும் ம.தி.மு.க. இருக்கும் நிலையைத்தான் காண்பிக்கிறது.

அதன் பின்னர் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், தான் புதன்கிழமை பேசிய பேச்சுக்குச் சிறிதும் வருத்தம் தெரிவிக்கவில்லை வைகோ. நேர்மாறாக, தான் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எதுவும் பேசவில்லையென்றும், மத்திய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை மட்டுமே விடுத்ததாகவும் சாதித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்ததற்கு, கூட்டாளிகள் ஒரே கொள்கை உடையவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும், இது தேர்தலுக்காக ஏற்படும் கூட்டணி என்றும் கூறினார். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், சமீப காலமாக ஜெயலலிதா கூட “பயங்கரவாதிகள்” என்று சொல்லிய விடுதலைப் புலிகளைப் “போராளிகள்” என்று அழைக்கத் துவங்கியுள்ளது தான்.

கண்டும் காணாத மத்திய, மாநில அரசுகள்!

வைகோவின் அத்துமீறிய பேச்சிற்காக மத்திய அரசோ, மாநில அரசோ அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வியப்பாக உள்ளது. தற்போது வைகோ உள்ள கூட்டணிக்குத் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா தான் புலி ஆதரவுப் பேச்சுக்காக இவரைப் “பொடா” (POTA) சட்டத்தின் கீழ் பத்தொன்பது மாதங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தார். வைகோவின் பேச்சு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு உள்ளது என்றால் மிகையாகாது. ஆனாலும் மத்திய மாநில அரசுகள் இதனைக் கவனிக்காதது போல் நடிப்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. வைகோவைக் கைது செய்வதன் மூலம் அவருக்கு தியாகச்செம்மல் பட்டம் வந்து விடும் என்றோ, பலத்த ஓட்டிழப்பு ஏற்படும் என்றோ சோனியாவும், கருணாநிதியும் நினைத்தால் அதைப்போல தவறான முடிவு வேறில்லை. வைகோ மற்றும் ம.தி.மு.க.வின் முக்கியத்துவம் அரசியல் அரங்கத்தில் ஒன்றுமில்லாமல் போய்விட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், விடுதலைப் புலிகள் மீது பெரும்பான்மையான தமிழர்களிடையே எந்த ஒரு பரிதாபமும், பச்சாதாபமும் கொண்ட உணர்வுகள் எழுமா என்பதே கேள்விக்குறி என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

கதை, வசனம்: கருணாநிதி

இந்த நிலையை ஓரளவுக்குச் சரியாகப் புரிந்து கொண்ட காரணத்தால் தானோ என்னவோ கருணாநிதி கூட விடுதலைப் புலிகளுக்கான ஆதரவை வெறும் உதட்டளவிலேயே வைத்துள்ளதாகத் தோன்றுகின்றது. இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டத்தில் ராமதாஸ், தாமஸ் பாண்டியன், வைகோ மற்றும் பலர் பேசியது பற்றிய செய்திகள் கிடைத்தவுடனேயே கருணாநிதி மத்திய அரசுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதை உறுதி செய்வதைப் போல் அடுத்த சில நிமிடங்களில் செய்தி வந்தது. அதாவது, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு விடுதலைப் புலிகள் மூலம் ஆபத்து உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது உள்ள நிலையில் இந்த மாதிரியாக கொலை மிரட்டல் விடுவதற்கான வாய்ப்பு இல்லாவிட்டாலும், இந்தச் செய்தி எதிர்கட்சியினரின் நோக்கத்தை முறியடிப்பதற்கான கருணாநிதியின் ராஜதந்திரமாகவே அரசியல் விமரிசகர்களால் பார்க்கப் படுகிறது.

விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் நடேசன் தாங்கள் அவ்வாறு எந்தக் கொலை மிரட்டலும் விடுக்கவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற சோனியாவை விட்டால் வேறு கதியில்லை என்று திருமாவளவன் சொன்னதுகூடக் கலைஞர் எழுதிக்கொடுத்த வசனம்தான் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எது எப்படியோ, காங்கிரசைப் பார்த்து சீறிக் கொண்டிருந்த சிறுத்தையை அடக்கித் தன் பின்னே வாலாட்டிக் கொண்டு வருமாறு செய்துவிட்டார் கலைஞர்.

இலங்கை அதிபர் ராஜபக்ஸே அப்பாவித் தமிழர்களைப் பாதுகாப்போம் என்று எவ்வளவுதான் உறுதி அளித்திருந்தாலும், அவர்களின் நிலைமையை நினைக்கும் போது நமது நெஞ்சம் துடித்துப் போகிறது. இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ள இரண்டு லட்சம் அப்பாவித் தமிழர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. முக்கியமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரனையும், தப்பிச் செல்லும் மக்களைக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ள பொட்டு அம்மனையும் நினைத்துப் பார்க்கும் போது, அப்பாவித் தமிழர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்று நம் மனது அடித்துக் கொள்கிறது.

இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் பெரும்பொறுப்பு ராஜபக்ஸேவுக்கும், இலங்கை அரசுக்கும் இருக்கிறது. இலங்கை ராணுவத்தின் முன்னேற்றத்தைப் பார்க்கும்போது, இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் முடியும்வரை விடுதலைப் புலிகள் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம்தான். எனவே, அடுத்துப் பதவி ஏற்கும் இந்திய அரசாங்கம், இலங்கையில் அமைதி நிலவவும், தமிழ் மக்கள் சுதந்திரமாக, சிங்களவர்களுடன் சரிசமமாக, அனைத்து உரிமைகளுடனும் தன்மானத்துடனும் வாழ உறுதியான வழிவகைகளைச் செய்யவேண்டும். இதைத் தலையாய கடமையாக எடுத்துக் கொண்டு அடுத்த அரசாங்கம் இலங்கை அரசுடன் விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி முடிக்க வேண்டும்.

தொடரும்….

13 Replies to “ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 1”

  1. இந்த சிக்கலான சூழலில் மறுமொழியிடாமல் மவுனம் சாதிப்பதே சிறந்தது.

  2. இலங்கை தமிழர்கள் இந்திய “தமிழர்களை” மட்டும் நம்பினர். இந்தியர்களின் உதவியை எதிபார்க்கவில்லை . மாறாக ராஜீவ் கொலை மூலம் இந்தியர்களை பகைத்து கொண்டனர்!

    தற்போதைய நிலையில் இந்திய அரசு புலிகளின் வசத்தில் உள்ள 20 சதுர கிலோ மீட்டர் பரப்பை மீட்டெடுத்து, அங்கு பதுங்கியுள்ள புலிகளை தனிமைப் படுத்தி, அப்பகுதியில் உள்ள அப்பாவி மக்களை புலிகளிடமிருந்தும் இலங்கை அரசிடமிருந்தும் உடனடியாக காப்பாற்ற வேண்டும்.

    பின்னர் இலங்கையில் உள்ள தமிழர்கள் இலங்கையர்களாக பேதமின்றி வாழ அரசியல் தீர்வு காணுவது எளிது.

    //கூட்டாளிகள் ஒரே கொள்கை உடையவர்களாக இருக்க வேண்டிய அவசியம்
    இல்லையென்றும், இது தேர்தலுக்காக ஏற்படும் கூட்டணி என்றும் கூறினார்.//

    அரசியல் ஒரு வியாபாரம் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

    தேர்தலுக்காக ஏற்படும் கூட்டணி ,ஆட்சிக்காக ஏற்படும் கூட்டணி, ஊழலுக்காக ஏற்படும் கூட்டணி, என எல்லா கட்சிகளுமே தெளிவாக உள்ளனர் .

    மக்கள் தங்களை ‘ஓட்டு’ என்கிற ஜடபொருளாக எண்ணி ஓட்டு வங்கிக்குள் உள்ளனர்.

    ஓட்டு வங்கியில் இருந்து விடுதலை பெற தனி சுதந்திர போராட்டம் நடத்த வேண்டும்.

  3. உண்மையில் இலங்கைத் தமிழர்கள் போல துரதிருஷ்டசாலிகள் யாரும் இருக்க முடியாது. இலங்கை ராணுவம் ஒருபுறம், விடுதலைப் புலிகள் ஒருபுறம் என நெருக்கடியில் வாழ்ந்து கிட்டத்தட்ட எவ்வளவு மோசமாக நடத்தப்படமுடியுமோ அவ்வளவு மோசமாக இருவருக்கும் நடுவில் நடத்தப்பட்டு இன்று கனவுகள் கலைந்துவிட்டது.

    அவர்களை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் செய்தது பிழைப்பு.

    இனிமேலாவது நல்ல வாழ்க்கை அமைந்திட இஅலங்கை அரசுடன் இந்திய அரசு இனைந்து மறுவாழ்வுப்பனிகளை செய்து தரவேண்டும்.

    சம உரிமைகள் கிடைத்திட வலியுறுத்திட வேண்டும்.

    ஜெயக்குமார்

  4. நெஞ்சில் உரமும் இன்றி ,
    நேர்மை திறனும் இன்றி
    வஞ்சனை செய்வாரடி
    கிளியே !
    வாய் சொலில் வீரரடி !!

  5. பிபிசி செய்தி ஒளிபரப்பிலும், சிஎன் என் செய்தி ஒளிபரப்பிலும் தப்பி வந்த தமிழர்களின் நேரடிப் பேட்டி ஒளிபரப்பானது. பாவம் அப்பாவி ஜனங்கள்! :((((( இறைவன் தான் காப்பாற்ற வேண்டும், நாட்டைப் பல்வேறு விதமான தீவிரவாத சக்திகளும் நாலாபக்கமும் சூழ்ந்துள்ள இந்தக் கால கட்டத்தில் தேர்தல் நடக்கின்றது. அனைவரும் யோசித்துத் தங்கள் வாக்கைப் பயன்படுத்த வேண்டும். வேறே என்ன சொல்ல முடியும்?

  6. Two of Britain’s most senior Indian-origin MPs Wednesday denounced Sri Lankan Tamil protesters who turned violent during a demonstration outside the Indian High Commission this week, saying they must now apologise.
    Keith Vaz and Virendra Sharma, who belong to the ruling Labour party, said in a joint statement they were “deeply concerned” to hear that protesters had damaged the Indian High Commission building and forcibly entered it during a large demonstration Monday.
    “Although feelings are running extremely high because of the deteriorating situation in Sri Lanka, this is no excuse for violent action and we call upon those responsible to apologise and for the police to investigate and bring to justice those who have carried out these acts,” the statement said.

  7. உறவுகளே! நான் வன்னியில் வாழ்ந்தவன்.புலிகள் எவரையும் கொல்லவில்லை கொல்லவும் நினைத்ததில்லை.புலிகளை விட்டு மக்கள் வர விரும்பவில்லை என்பதே உண்மை காரணம் அந்த மக்கள் ஒரு சில வசதிகளை இழந்திருந்தாலும் சுதந்திரத்துடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தார்கள்.நள்ளிரவில் கூட பெண்கள் தனியாக
    செல்ல முடிந்தது.இற்திப் போருக்கு சில நாட்களுக்கு முன் இதை நான் நேரில் கண்டேன்.புலிகள் பின்னே மக்கள் சென்றார்கள்.மன்னார் கைப்பற்றப் பட்டதும் பலர் ராணுவ அட்டூழியதிற்கு அஞ்சி புலிகள் கட்டுப் பாட்டுப் பிரதேசங்களுக்கு
    சென்றனர்.காரணம் ஒரு வேளை உணவை விட அச்சமின்றி சுதந்திரமாக வாழ
    அங்கு வசதி இருந்தது.சுதந்திர காற்றை சுவாசித்த மக்கள் இன்று எப்படி வாழ்கிறார்கள்? தற்போது வந்த செய்தி தமிழர்களுக்கு உரிமைகளே தேவை இல்லை என்ற சிங்களத்தின் கருத்தாகும்.இன்று பொய் பிரசாரமே வலுத்து நிற்கிறது.ஆனால் தர்மம் தோற்றது கிடையாது

  8. Hindustan has moral duty to bring international pressure on Sri Lankan Government to treat Elam Tamils in the camps with diginity; Sri Lankan govt should ensure proper arrangement to meet basic needs of them. In the guise of picking up LTTE cadre, the Sri Lankan army/police should not indulge in torturing young Tamils. Arrangements for permanent rehabilitation of Tamils should be taken up immediately. It is attrocious that whole world has turned a blind eye on the sufferings of Elam Tamils. When Rajiv was the PM, our Air Force transgressed Sri Lanakn air space to drop food packets and other essentials to Elam Tamils. NOT even a single feeble voice was heard from any corner of the world, criticising Hindustan for that because, what Hndustan did was purely humanitarian. We need that kind of courage and resolution now. But we have only a very selfish and also weak persons at the Centre.

    I have some contacts and I can also say for sure what Sri MOorthi says is wrong. During the final phase of Sri Lankan Army-LTTE show of strength, LTTE resorted to forcible recruitment of teenage boys and girls to use them as fodder to the guns of Sri Lankan Army so that the LTTE leadership can be safe. Innocent civilians were used as human shield by LTTE leadership. When civilians tried to escape from the clutches of LTTE, senior members of LTTE broke the limbs and even killed them! In some areas, wherever civilaian Tamils outnumbered LTTE Cadre, Elam Tamil civilians attacked LTTE cadre and escaped! I do NOT certify the conduct of Sri Lankan Army but Tamil civilians escaped to ‘cleared’ areas under the control of the Army because there would not be bombardment from the opposite side since LTTE was weakened.

    The bitter truth is, the arrogance and selfish interest of LTTE is responsible for the shedding of innocent civilian blood.

    Has LTTE leadership had some common sense, it would not have engaged in liquidating Tamil moderates and fellow militant groups earlier to become sole reprentative of Elam Tamils. When the end came, it had nobody to raise voice in its favour. LTTE did not have the experience of the traditional war front, that is direct confrontation. Its expertise was Gurella warfare. It should have foreseen the end result and opted for peace when Sri Lanka took the final decision in last year to meet LTTE face to face. It should have agreed to democratic self rule for the combined Elam and the North East within the frame work of SriLankan constitution and gradually start demanding separate nationhood if the self rule did not work.

    MALARMANNAN

  9. Elam Tamil civilians were herded by LTTE during their withdrawal and retreat; civilians had to follow them, obeying their orders. It is wrong to state that civilinas followed LTTE willingly. We have been receiving info from various sources on Sri Lanka now and then. I cannot reveal the sources because that would harm the persons in the camps. READ latest Kalachuvadu (AUG 2009) to know what all had happened during the final phase of SriLankan Army and LTTE battle. YES, Sri Lankan Armay fired at civilians under LTTE control; the intention was to make civilians feel unsafe and escape to the cleared areas depriving LTTE use of civilians as human shield. Sri Lankan Army has no soft corner for Tamil civilians but should NOT LTTE consider the welfare of Tamil civilians, as it claimed to be the saviour of the Tamils? I am receiving messages from many Elam Tamils living in different parts of the world and what I hear from them is only adverse remarks about LTTE. Because of my nearness to MGR during the beginning of nineteen eighties, I could interact with various militant groups of Elam Tamils and study the characteristics of many of them. Most of them were rank selfish lot only.
    MALARMANNAN

  10. மூர்த்தி அவர்கள் உண்மையிலேயே வன்னியில் இருந்தவர் என்றால் அவர் கூறியுள்ளது வடிகட்டிய பொய். புலி ஆதரவாளர்களாகிய, வாய்ச்சொல் வீரராகிய, நம் திராவிட அரசியல்வாதிகளின் பேச்சையும், புலி ஆதரவு இணைய தளங்களின் செய்திகளையும் படித்துவிட்டு இவ்வாறு கூறுகிறார் மூர்த்தி.

    ஈழத்து பரணி பாடும் வாய்ச்சொல் வீரரடி-யைத் தொடராக எழுத நினைத்திருந்தேன். ஆனால் அப்போது தமிழ் இந்து தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் அத்தொடர் தடை பட்டுப்போனது.

    உண்மையில் பிரபாகரன் மற்றும் புலிகளின் அராஜகம் பயங்கரமானது. அதற்காக இலங்கை ராணுவத்தினரை உத்தமர்கள் என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் ராணுவத்தினரை விட, புலிகள் நம் தமிழ் மக்களைப் பயங்கரமாகக் கொடுமை படுத்தினர் என்பதே உண்மை. அது தாளாமல் தான் மக்கள் போரின் கடைசி கட்டத்தில் புலிகளிடம் இருந்து தப்பிச் சென்று ராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.

    மூர்த்தி வன்னியிலிருந்ததாகச் சொல்லுகிறார். ஆனால் வன்னியில் நேரடியாக அனுபவித்தவரின் சொந்த அனுபவங்களை அவர் எழுதியவாறே “காலச்சுவடு” வெளியிட்டுள்ளது. அதற்கான லிங்க்: https://www.kalachuvadu.com/issue-116/page47.asp

    இதைப் படித்தால் மூர்த்தி போன்றவர்களும், மற்றும் புலிகளை ஏதோ நேர்மையான வீரர்கள் என்று நினைத்திருந்தவர்களும், பிரபாகரனை மாவீரன் என்று எண்ணியவர்களும் உண்மையைப் புரிந்துகொள்வர். மேலும் பிரபாகரன் இலங்கை அரசுடன் கைகோர்த்துக்கொண்டு இந்திய அமைதிப் படையின் முதுகில் குத்தியவர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

    தனி ஈழம் கோரிக்கை, மற்றும் விடுதலைப் புலிகள், ஆகியவற்றின் பின்னால் கிறிஸ்துவம் இருப்பதும், சிங்கள தலைமையும் அதன் கட்டுப்பாட்டில் இருப்பதையும், இடையே மாட்டிக் கொண்டு இலங்கைத் தமிழ் இந்துக்கள் அழிந்து போவதையும் நாம் போகப் போகத் தெரிந்து கொள்வோம்.

    நன்றி

  11. தமிழ்செல்வன் அவர்களின் விளக்கம் சிந்திக்க வைக்கிறது.
    உலகில் எங்கெல்லாம் வன்முறை, அழிவு, கலவரங்கள் இருக்கின்றதோ, அதற்கு பின் கிறிஸ்துவம் இருப்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அது போல், கிறிஸ்துவர் புகுந்த நாடு உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. தென் அமெரிக்க மாயன் கலாசாரம், வட அமெரிக்க செவ்விந்திய இன அழிப்பு, ஆஸ்ட்ரேலியா ‘அபாரிஜன்’ இன அழிப்பு, ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர், இந்தியாவில் நடக்கும் சீர்கேடுகள், என்று எதை எடுத்துக்கொண்டாலும் அதற்குப் பின் கிறித்துவத்தின் ஆதிக்கத்தைப் பார்க்கலாம். இந்த இலட்சணத்தில் நமது ஊடகங்கள் எதோ கிறித்துவ அமைப்புகள் இல்லாவிட்ட்டால் நமது நாட்டில் சமூக சேவையே இருக்காது என்பது போல் சித்தரிக்கிறார்கள். எல்லாம் தலைஎழுத்து. அந்த கடவுள் தான் காக்க வேண்டும்.

  12. தமிழ்செல்வன்,
    2009 ஆண்டு நீங்கள் எழுதிய இந்த கட்டுரையை இப்போ தான் “எமது களஞ்சியத்திலிருந்து” எடுத்து படித்தேன். அருமை. மிக நன்றாக வைகோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றோர் இலங்க தமிழர்களை வைத்து தமிழ்நாட்டில் உணர்ச்சி ஏற்றி தாங்கள் அரசியல் லாபங்கள அடைய முயற்சித்ததையும் புலிகள் பொதுமக்களைக் கேடையமா பிடித்து வைத்து பலி கொடுத்த படு அயோக்கிதனத்தையும் தெரியபடுத்தியுள்ளீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *