எங்கள் தாய்

“தொன்று நிகழ்ந்தனைத்தும் உணர்ந்திடும்” என்று தொடங்கும் பாரத்தாயின் புகழ் பாடும் இப்பாடலை திருமதி நித்யாஸ்ரீ அவர்களின் இனிய குரலில் கேளுங்கள்! இயற்றியவர் மகாகவி பாரதியார்.

[youtube]https://www.youtube.com/watch?v=RQ__IaKxXR4[/youtube]

பாடல் இதோ:

தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவ ளென்றுண ராத
இயல்பின ளாமெங்கள்தாய்.

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள்தாய் – இந்தப்
பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்
பயின்றிடு வாளெங்கள்தாய்

முப்பது கோடி முகமுடை யாளுயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – அவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை யொன்றுடையாள்.

நாவினில் வேதமுடையவள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் – தனைச்
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்.

அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள்தாள் – தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள்தாய்

பூமியினும் பொறை மிக்குடை யாள்பெரும்
புண்ணிய நெங்சினள்தாய் – எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள்தாய்.

கற்றைச் சடை, மதி வைத்த துறவியைக்
கைதொழு வாளெங்கள்தாய் – கையில்
ஓற்றைத் திகிரிகொண் டேழுல காளு
மொருவனை யுந்தொழுவாள்.

யோகத்தி லேநிக ரற்றவ ளுண்மையு
மொன்றென நன்றறிவாள் – உயர்
போகத்தி லேயு நிறைந்தவ ளெண்ணரும்
பொற்குவை தானுடையாள்.

நல்லற நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாளெங்கள் தாய் – அவர்
அல்லவ ராயி னவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள்.

வெண்மை வளரிம யாசலன் றந்த
விறன்மக ளாமெங்கள் தாய் – அவன்
திண்மை மறையினுந் தான்மறை யாணித்தஞ்
சீருறு வாளெங்கள் தாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *