“அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ததா
பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம்
மஹா பாதக நாசனம்”
இந்த வரிகளை என் தாயார் சிறு வயதில் சொல்லக் கேட்டிருக்கிறேன். மேற்சொன்ன ஐந்து கற்புக்கரசிகளையும் மனதில் நினைத்தால் பாபங்கள் எல்லாம் விலகிவிடும் என்று சொல்வார்கள்.
ராமாயண நாயகனான ராமனின் மனைவி சீதை. எதிரணித் தலைவன் இராவணன் மனைவி மண்டோதரி. இருவரும் சிறந்த கற்புக்கரசிகள். அவர்களுக்கு நடுவில் வைத்துப் போற்றப்படுகிறாள் தாரை. அவளை “மலைக்குல மயில்” என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறான் கம்பன்.
வாலியைத் தடுத்த தாரை:
இந்த மலைக்குல மயிலைக் கம்பன் அறிமுகப்படுத்துவதே ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான். அறிமுகம் செய்யும் போதே அவளுக்குப் பின்னால் வரப்போகும் தீமையையும் சேர்த்தே அறிமுகம் செய்கிறான். இராமன் சொன்னபடி சுக்ரீவன், வாலியைப் போருக்கழைக்கிறான். சுக்ரீவனின் அறைகூவலைக் கேட்ட வாலி போருக்குக் கிளம்புகிறான். தாரை இடை விலக்குகிறாள்.
ஆயிடைதாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள், இடை விலக்கினாள்
வாயிடைப் புகை வர, வாலி கண் வரும்
தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்
வாலியின் கண்களிலிருந்து தோன்றிய கோபத் தீயிலிருந்து உண்டான புகை வாய்வழியாக வெளிவருகிறது. வாலி கண்களிலிருந்து வரும் தீயில் இவளுடைய நெடுங்கூந்தல் தீய்கிறதாம். அவ்வளவு கோபம் அவனுக்கு. தாரைக்கு வரப்போகும் தீமையை, அமங்கல நிலையை முன்னரே கவிஞன் குறிப்பிடுகிறான். அவளை அமிர்தம் போன்றவள்
என்று அறிமுகம் செய்யும் அதே நேரத்தில் அவளுக்கு வரப்போகும் துன்பத்தையும் குறிப்பிடுவதால், தாரையிடம் நமக்கு அனுதாபம் உண்டாகிறது. இடை விலக்கிய தாரையை வாலி கடிந்து கொள்கிறான்.
’விலக்கலை, விடு, விடு, விளித்துளான் உரம்
கலக்கி, அக்கடல் கடைந்து அமுது கண்டென
உலக்க இன்னுயிர் குடித்து, ஒல்லை மீள்குவல்
மலைக்குல மயில்!’’
’’மலைக்குல மயிலே! அன்று பாற்கடலைக் கடைந்து அமுது எடுத்தது போல் இன்று சுக்ரீவனின் உடலைக் கடைந்து அவன் உயிராகிய அமுதம் குடித்து வருவேன். என்னைத் தடுக்காதே’’ என்கிறான். இதைக் கேட்ட தாரை, ”சுக்ரீவன் காரணமில்லாமல் போர் செய்ய அறைகூவல் விடுக்க மாட்டான். நிச்சயம் அவனுக்குத் தகுந்த துணை கிடைத்திருக்க வேண்டும்’’ என்கிறாள். சுக்ரீவன் வலிய வந்து போருக்கழைத்த காரணத்தை ஊகித்தறிகிறாள் தாரை. இங்கு அவளுடைய அறிவுத்திறனைப் பார்க்கிறோம்.
ஆனால் வாலியோ இதைப்பற்றியெல்லாம் கவலைப் படவேயில்லை. அவனுக்குத் தன் தோள்வலி பற்றி அவ்வளவு கர்வம், நம்பிக்கை. அந்தப் பெருமையால் ”அன்று திருப்பாற்கடல் கடைந்த சமயம் தேவர்களும் அசுரர்களும் கை சோர்ந்து என்ன செய்வோம் என்று திகைத்தபோது நான் தனி ஒருவனாகத் தயிர் கடைவது போலக் கடைந்து அமுதம் கொடுக்க வில்லையா?’’ என்று பழைய நிகழ்ச்சியை ஞாபகப் படுத்துகிறான். இந்த இடத்தில் தாரையை, மயில் இயல் குயில் மொழி என்று அழைக்கிறான். குறிஞ்சி நிலப் பறவை மயில். கிஷ்கிந்தை மலையில் வாழும் தாரையை மலைக்குல மயில் என்றழைப்பது மிகவும் பொருத்தமானதே.
”எனக்கு இயற்கையாக இருக்கும் வலிமையோடு என்னை எதிர்ப்பவர்களின் வலிமையில் பாதியும் எனக்குச் சேர்ந்துவிடும் என்பது நீ அறியாததா?’’ என்று மேலும் தைரியம் சொல்கிறான். இதைக் கேட்ட தாரை ”அரசே, சுக்ரீவனுக்கு இனிய உயிர்த் துணைவனாக இராமன் என்பவன் வந்திருக்கிறானாம். நமக்கு மிகவும் வேண்டியவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்” என்கிறாள். தாரை இப்படிச் சொல்வதால் நாட்டில் எங்கெங்கு என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் அவளிடம் இருப்பதைப் பார்க்கிறோம். மேலும் சுக்ரீவன் வலிமை குறைந்தவனாகவே இருந்தாலும் சுக்ரீவனுக்குத் துணையாக வந்திருக்கும் எதிரியின் பலத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுகிறாள். அவன் எப்படிப் பட்டவனாக இருப்பானோ? அவன் வரபலம், உடல்பலம் எப்படியோ?’’ மாற்றானின் துணை வலிமை பற்றியும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று தன் சந்தேத்தைத் தெரிவிக்கிறாள்.
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்
என்ற குறளின் பொருள் உணர்ந்தவளாகப் பேசுகிறாள் தாரை. இங்கும் தாரையின் அரசியல் அறிவைப் பார்க்கிறோம்
வாலியின் நம்பிக்கை
ஆனால் வாலியோ இராமன் என்ற பெயரைக் கேட்டதுமே பக்திப் பரவசத்தில் திளைத்து ”தருமமே தன்னைத் தவிர்க்குமோ? இவ்வுலக உயிர்களுக்கெல்லாம் தருமத்தின் வழிகளைக் காட்டிய அவனையா தவறாக நினைக்கிறாய்? அவன் யார்? தனக்குக் கிடைத்த அரசுரிமையை மாற்றாந்தாய் ஏவ, அவள் விரும்பியபடியே பரதனுக்கு வழங்கிய ஐயனையா இப்படிப் பழிக்கிறாய்? நீ உன் பெண்புத்திக்குத் தகுந்தபடி பேசுகிறாய். பாவி! உன் பெண்மையால் நீ பிழைத்தாய். நீ பெண் என்பதால் போனால் போகிறதென்று உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டேன்’’ என்று அவளை மிகவும் கடிந்து பேசுகிறான்.
”ராமன் என்ன சாமானியப்பட்டவனா? அவன் கையிலிருக்கும் கோதண்டத்தின் பெருமைதான் கொஞ்சமோ? அவ்வளவு பெருமையுடைய கோதண்டபாணியான ராமன் கேவலம் ஒரு புன்தொழில் குரங்கோடு நட்புக் கொள்வானோ? ராமன், தம்பிமார்களைத்தவிர தனக்கு வேறு உயிர் இருப்பதாகவே எண்ணாதவன். அவன் அருளின் ஆழியான். கருணைக் கடலான அவன், நானும் என் தம்பியும் போர் செய்யும்போது இடையே புகுந்து முறையில்லாமல் போர் செய்வானோ? ஒருக்காலும் செய்ய மாட்டான். நீ கவலையை விடு. நான் போய் என்னைப் போருக்கழைத்த சுக்ரீவன் உயிரை ஒரு நொடியில் குடித்து, உடன் வந்தவர்கள் கருத்தையும் அழித்து மீண்டு வருவேன். நீ இங்கேயே இரு. கலங்க வேண்டாம்” என்கிறான். இங்கும் தாரை அஞ்சியபடியே நடந்தது என்பதைப் பார்க்கிறோம்.
தாரையின் புலம்பல்
வாலி வீழ்ந்து கிடக்கிறான். இந்த மலைக்குல மயில் வேடன் கை பட்ட மயில்போலத் துடிக்கிறது. வாலியின் மார்பிலிருந்து பெருகிய ரத்த வெள்ளத்தில் புரண்டு அழுகிறாள். துடிக்கிறாள். இவள் மார்பிலும் குங்குமக் குழம்பு கொட்டியது போலிருக்கிறது அந்த ரத்தம். மயில்தோகை போன்ற நெடிய கூந்தலும் ரத்தச் சிவப்பாகி விடுகிறது! இந்த மலைக்குல மயில் இத்தனை காலமும் வாலியின் மலை போன்ற தோள்களில் வலம் வந்தது. இப்போது அந்த மலையே பிளந்து விட்டது!
’’பகையாத பண்பினாய்! விதி ஆன தெய்வமே! உயிர் போனபின் உடல் மட்டும் வாழுமா?” என்று கதறுகிறாள். இந்த யமதர்ம ராஜனுக்குத்தான் கொஞ்சமாவது நன்றியணர்வு இருக்கிறதா? அன்று நீ கடல் கடைந்தபோது அமுதம் பெற்றதால் சாகாவரம் பெற்ற எமனுக்குக் கொஞ்சமாவது நன்றியுணர்வு இருந்தால் இன்று உன் உயிரைக் கொண்டுபோயிருப்பானா?
”பொய் உரையாத புண்ணியா, ஐயா,
நீ எனது ஆவி என்றதும் பொய்யோ?
என்று கேள்வி தொடுக்கிறாள்.
உயிரும் உடலும் வாலியும் தாரையும், ஓருயிர் ஈருடல் என்பதுபோல் ஒத்த அன்புடையவர்களாய் வாழ்ந்தனர். ”உன் உள்ளத்தில் நான் இருந்தேன் என்பது உண்மையானால் ராமபாணம் என்னையும் தாக்கியிருக்க வேண்டுமே? என் உள்ளத்தில் நீ இருப்பது உண்மையானால், நான் உயிரோடுதானே இருக்கிறேன். அதனால் நீயும் உயிரோடு இருக்க வேண்டுமே? அப்படி நிகழ வில்லையே! இந்த வாசகமும் பொய்யோ?
செரு ஆர் தோளா! நின் சிந்தை உளேன் என்னின்
மருவார் வெஞ்சரம் என்னையும் வவ்வுமால்
ஒருவேன் உள் உளை ஆகின், உய்தியால்
இருவே(ம்) உள் இரு வேம் இருந்திலேம்
என்று புலம்புகிறாள்
வாலியின் வள்ளன்மை
ராமன் ஒளிந்து நின்று அம்பு எய்ததைத் தாரையால் ஜீரணிக்க முடியவில்லை. ‘’ராமன் கேட்டால் நீ எல்லாவற்றையுமே கொடுத்து விடுவாயே. சாவா மருந்தாகிய அமுதத்தையும் கொடுத்திருப்பாயே! இது தெரியமல் இராமன் ஒளிந்து நின்று அம்பு துரந்தானே.’’
ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
ஏயா வந்த ராமன் என்று உளான்
வாயால் ஏயினன் என்னின், வாழ்வு எலாம்
ஈயாயோ?அமிழ்தேயும் ஈகுவாய்?
என்று அரற்றுகிறாள். நான் முன்பே சொன்னேன் நீ அதைக் கேட்கவில்லை. இராமன் ஒருக்காலும் அப்படிச் செய்ய மாட்டான் என்று நம்பிக்கையோடு போர் செய்யச் சென்றாய்.
ஊழிக்காலம் முடிவதையும் கண்டு வாழவேண்டிய நீ வீழ்ந்தாய். நான் இனி உன்னைக் காண்பேனோ? நீ நெருக்கித் தாக்கினால் மேருவும் பொடியாகி விடுமே! அப்படியிருக்கக் கேவலம்
ஒரு அம்பு உன் மார்பைத் துளைக்குமா? துளைக்காது. இது நிச்சயம் தேவர்கள் செய்த மாயமே. இங்கிருப்பது மாயத்தால் வந்த வாலியோ?’’ என்றெல்லாம் கதறுகிறாள்.
அருமைந்து அற்றம் அகற்றும் வில்லியார்
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்.
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்
கருமம் கட்டளை என்றால் கட்டதோ?
‘தருமம் தான் தன்னைத் தவிர்க்குமோ?’ என்று வாலி கேட்டானல்லவா? அந்தக் கேள்விக்கு பதிலளிப்பது போல் இந்த வினாவைத் தொடுக்கிறாள். “அற்றம் அகற்றும் வில்லியார் ஒரு மைந்தர்க்கும் அடாதது உன்னினாரே” என்று அழுது கொண்டே பதிலளிக்கிறாள். இப்படிக் கதறியழும் தாரையை வானரமகளிர் அந்தப்புரம் கூட்டிச் செல்கிறார்கள். வாலி ’’வானுலகுக்கு அப்புறத்து உலகன் ஆகிவிட்டான்!
இராம இலக்குவரின் சீற்றம்.
இராமன் ஏற்கெனவே சொல்லியனுப்பியபடி கார்காலம் கழிந்தும் சுக்ரீவன் வரவில்லை இதனால் ராமன் கோபமடைகிறான். தன் சீற்றத்தை இலக்குவனிடம் தெரிவிக்கிறான். சீற்றமடைந்த இலக்குவன் நேராக கிஷ்கிந்தை வருகிறான். இது கண்ட அங்கதன் சேதி சொல்ல விரைகிறான். ஆனால் சுக்ரீவன் மது மயக்கத்தில் இருந்ததால் விரைந்து அனுமனிடம் செல்கிறான். இருவரும் தாரையிடம் சென்று செய்தி சொல்கிறார்கள்.
இதைக் கேட்ட தாரை அவர்களைக் கடிந்து அறிவுரை சொல்கிறாள். ‘’செய்நன்றி மறந்தீர்களே. எவ்வளவு பெரிய தவறைச் செய்திருக்கிறீர்கள்? அதனால் வரும் கேடுகளை நீக்க இப்பொழுது வழி தேடுகிறீர்கள். நீங்கள் எப்படித் தப்பி வாழப் போகிறீர்கள்? சேனைகளைக் கூட்டி வாருங்கள் என்று ராமன் குறிப்பிட்ட நாள் தவறி விட்டீர்கள். நான் பலமுறை சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. இந்த் தண்டனை உங்களுக்கு வேண்டியதுதான்’’ என்று கண்டிக்கிறாள்.
’’தேவியைப் பிரிந்து வாழும் ராமனின் துயரத்தைப் புரிந்து கொள்ளாமல் சிற்றின்ப மயக்கத்தில் கடமையை மறந்து விட்டீர்கள். சத்தியம் தவறி விட்டீர்கள் செய்த உதவியை மறந்தீர்கள். அதனால் விளையும் கேடுகளை நினைக்கவில்லை.’’ என்று கண்டித்து அறிவுரை சொல்கிறாள். இங்கும் தாரையின் அறிவாற்றலையும், நன்றி மறந்தால் உய்வில்லை என்பதை உணர்த்துவதையும் பார்க்கிறோம்.
இதற்குள் இலக்குவன் மிகுந்த கோபத்துடன் கதவை உதைத்துத் திறந்து கொண்டு வருகிறான். இதைக் கண்ட வானரங்கள் பயந்து ஓடுகின்றன.நிலைமை கட்டுமீறிப் போவதைக் கண்டு என்ன செய்யலாம் என்று தாரையிடம் யோசனை கேட்கிறார்கள்
தாரையின் சமயோசிதம்
தாரை ஒரு வழி சொல்கிறாள்.’’நீங்கள் எல்லோரும் அப்பால் செல்லுங்கள். நான் சென்று இலக்குவன் எண்ணம் என்ன என்பதை வினவி அறிந்து வருகிறேன்’’ என்கிறாள். வானரர்கள் சென்றதும் தாரை தன் தோழிமார்களுடன் செல்கிறாள். ஆவேசமாக வரும் இலக்குவனை அரண்மனை வாயிலில் எதிர்கொள்கிறாள் தாரை. தோழிமர்கள் வந்து சூழ்ந்து
கொண்டதும் இலக்குவன் அவர்களைப் பார்க்கவும் அஞ்சுகிறான். மாமியார் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட மருமகனைப் போலக் கூச்சத்துடன் நிற்கிறான். அன்னியன் எதிரே வந்து நிற்க வேண்டியதற்காகக் கூச்சப்பட்டு ஒதுங்கி நிற்கிறாள் தாரை. உள்ளமும் உடலும் நடுங்கக் கூசி நிற்கிறாள். ஒருவாறு சமாளித்துக் கொண்டு பேசுகிறாள். இங்கு தாரையின் குண விசேஷத்தைப் பார்க்கிறோம் என்ன அழகாகப் பேச்சை ஆரம்பிகிறாள். என்ன நயம்! என்ன வினயம்!
அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே?
மைந்த! நின் பாதம் கொண்டு எம் மனை வரப்பெற்று, வாழ்ந்தேம்
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ?
’’அளவில்லாத நீண்ட நெடுங்காலமாகத் தவம் செய்த புண்ணியத்தால் நாங்கள் பெற்ற பயனாகவே நீ வந்திருக்கிறாய் என்றே நினைகிறேன். இந்திரன் முதலானவர்களுக்கும் கூட இந்தப் பேறு கிடைக்காது. உன் திருவடிகள் எம்மனையில் பட்டதால் நாங்கள் வாழ்வு பெற்றோம். எங்கள் வினைகளும் நீங்கப் பெற்றோம். இதைவிட வேறு என்ன பேறு வேண்டும்?’’
தன் கணவனைக் கொன்றவன் தம்பியான இலக்குவனிடம் எவ்வித வேறுபாடும் இல்லாமல் என்ன ஒரு பணிவோடும் நயத்தோடும் பேசுகிறாள் தாரை! அதனால்தான் இவளைத் ”தூமன நெடுங்கண் தாரை’’ என்று போற்றுகிறான் கவிஞன்
எதற்காக வந்திருக்கிறாய் என்று கேட்பது மரியாதைக் குறைவாகும், நாகரீகமும் இல்லை என்பதை உணர்ந்த தாரை, “ஐயனே! நீ இராமனை விட்டுப் பிரிய மாட்டாயே, அப்படியிருக்க இப்பொழுது அவனை விட்டுப் பிரிந்து வந்த காரணத்தைத் தெரிந்து கொள்ளலாமா?’’ என்று சாமர்த்தியமாகவும் வினயமாகவும் வினவுகிறாள். பொங்கிவரும்
பாலில் தண்ணீர் தெளித்ததும் அடங்குவது போலத் தாரையின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் இலக்குவன் கோபம் அடங்கி கருணை மேலிடுகிறது. இவ்வளவு இனிமையாகப் பேசியவர் யார் என்ற ஆர்வம் மேலிட கொஞ்சம் நிமிர்ந்து பார்க்கிறான். பார்த்தவன் துக்கம் நெஞ்சடைக்க நைந்து போகிறான்.
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்து கொட்டாப்
பொங்கு வெம்முலைகள் பூகக் கழுத்தோடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான்
பேரழகுடைய இந்த மலைக்குல மயில் மகாராணியாய் நெடுங்காலம் வாழ்ந்தவள், இன்று கணவனான வலியை இழந்து கண்டவர் இரங்கத்தக்க நிலையை அடைந்து நிற்கிறாள்! இவளைக் கண்ட இலக்குவனுக்கு ஊரில் இருக்கும் தன் தாய்மார்களான சுமித்திரை, கோசலையின் நினைவு வருகிறது. தாரை எப்படி கழுத்து மறையும்படி மேலாடையால் இழுத்துப் போர்த்துக் கொண்டு நிற்கிறாள் என்பதைக் கவிஞன் குறிப்பாகச் சொல்கிறான். பார்த்த மாத்திரத்திலேயே தொழத்தக்கவளாகத் தன் தாயார்களை நினைவு படுத்தும் விதமாக இருக்கிறாள் தாரை.
சினம் அடங்கிய இலக்குவன் வந்த காரியத்தைச் சொல்கிறான் இதைக் கேட்ட தாரை,
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா
வெம்மை சேர் பகையும் மாற்றி அரசு வீற்றிருக்க விட்டீர்
‘’இப்படி நீங்கள் பேருதவி செய்திருக்கும் போது உம்மை மதிக்காதவர்கள் இம்மை, மறுமை இரண்டையும் இழந்து விடுவார்களல்லவா? வாலியையே வதைத்த உங்களுக்கு வேறு துணையும் வேண்டுமோ? சீதை இருக்கும் இடத்தைத் தேடித் தரக்கூடியவரை மட்டும் நாடி வந்திருக்கிறீர்கள். அவ்வளவுதான். உங்களைச் சரணடைந்துள்ள சுக்ரீவன் அப்பணியை நல்ல முறையில் நிறவேற்றித் தரக் கடமைப்பட்டவன்’’ என்று முடிவாகச் சொல்கிறாள். இங்கு இலக்குவனை ”செம்மை சேர் உள்ளத்தீர்கள்” என்ற அடைமொழி கொடுத்து இலக்குவனிடம் பேசுகிறாள்.
ராமனைத் துணையாகக் கொண்டு தன் கணவனைக் கொன்ற சுக்ரீவனிடம் பகைமை பாராட்டாமல், மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களில் தன் கவனத்தைச் செலுத்தும் தாரையை இங்கு பார்க்கிறோம். ராமனிடமிருந்தே எழுந்த சீற்றத்தையும் மாற்றி இலக்குவனை வெகு லாவகமாக எதிர்கொண்டு அவனது கோபத்தை மாற்றி கிஷ்கிந்தையைக் காப்பாற்றுகிறாள். சுய பச்சாதாபத்தையோ பகைமை உணர்ச்சியோ காட்டாமல் நாட்டு நலனில் அக்கறை கொண்ட தாரையை இங்கு தரிசிக்கிறோம். அவளின் பண்பட்ட விசாலமான உள்ளத்தைப் பார்க்கிறோம்
அயோத்தியிலே கைகேயியை நாடக மயிலாகப் பார்க்கிறோம். நல்லவளாக இருந்த கைகேயி நாடகமாடி ராமனைக் காட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். ஆனால் தாரையோ வாலியை இழந்த பின்பும் கூடத் தன் கம்பீரம் குறையாமல் மலைக்குல மயிலாகவே வலம் வருகிறாள்!
ம்ம்ம்ம் குறுக்கிட்டுச் சொல்வதற்கு மன்னிக்கணும், பஞ்சகன்யாவிலே வரும் தாரா, பிரஹஸ்பதி என அழைக்கப் படும் தேவகுருவின் பத்தினியான தாரா. வாலியின் மனைவி தாரை இல்லை. பலரும் இப்படியே தவறாய்ப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நான் பல ஆன்றோர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
அதோடு பெயரிலும் வித்தியாசம் உண்டு. வாலியின் மனைவி தாரை. குருவின் மனைவி தாரா. ஸ்லோகத்தில் தாரா என்ற பெயரே வரும். தாரை பஞ்ச கன்யாக்களில் ஒருத்தி நிச்சயமாய் இல்லை. மீண்டும் மன்னிக்கவும்.
மலைக்குல மயிலின் பெருமையை கம்பன் அனுபவித்ததை விட பன்மடங்கு அனைவரும் அறிய பறைசாற்றியிருக்கும் விதம் பாராட்டத்தக்கது. தொடரட்டும் உங்களின் தமிழ் பணி
வாழ்த்துக்கள்
ராமகாதையில் அதிகம் பேசப்படும் தலைப்பாக வருவது வாலிவதம். பள்ளிகளில் செய்யுள் வரிசையில் வருவது தாரை அழுதுபுலம்பிய காட்சி.. அந்தத் தாரையின் குணதிசயங்களையும் , அரசகுலப் பெண்களின் மனோதிறத்தையும், அவளது அழகையும் ஒருங்கே பறைசாற்றும் வகையில் அழகாக படைத்திருக்கிறார் ஜெயலக்ஷ்மி அம்மாள் இந்த மலைக்குல மயிலை…
கீதா சாம்பசிவம் அவர்களுக்கு..
நீங்கள் கூறும் கருத்து உண்மை எனில் அதை ஆதாரத்துடன் இங்கு இட்டீர்களானால் உபகாரமாயும், தவறான புரிதல் ஏற்படாமலும் இருக்கும்…செய்வீர்கள் என நம்புகிறேன்.
ஜெயக்குமார்
பிரதீப் பட்டாசார்யா எழுதியுள்ள “Pancha Kanya, A Quest in Search of Meaning” என்னும் நூலில் வாலியின் பத்தினி தாரையைத்தான் ஐந்து கன்னிகைகளில் ஒருவராகக் குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் தேடினால் பல தரவுகள் கிடைக்கும் என நினைக்கிறேன்.
மேலும் “தாரா” என்னும் பெயரைத்தானே “தாரை” என்று தமிழில் சொல்கிறோம்.
எஸ்.கே
பார்த்தேன் இப்போ நானும், திரு எஸ்.கே. சொல்லி இருப்பதை. யோகசக்தியான தாரா என்றும் சொல்லுகின்றார்.
//Tara is a very significant term in Tantra Yoga. The second of the Dasa Maha-vidyas, she is Pasyanti (Vak) and signifies the Pranava. According to Vasishta Gana-pati Muni, she moves in the skies though she is no space power. She is the best among the powers that purify creation: advanebhyascha pavani bhavatyesha. Has such a power been envisaged by Valmiki? Obviously yes because of the association with “movement in the skies”. Possessed of mature intelligence, she is praised by Vali as one whose opinions never go wrong: nahi taramatam kincidanyatha parivartate. Once again, let us not stray into the latter Taras or other Taras (like Brihaspati’s wife). We invoke Valmiki’s Tara as one who is intelligent and follows her tribe’s cus¬toms. Neither she nor we find it strange that she is dishabille when she comes from Sugriva’s bed to meet Lakshmana. Nor will we ever know whether it was an intelligent ploy on her part so that she could get back to the inner apartments and announce, “mission accomplished”! The Tara who meets Lakshmana in Kamban’s Tamil version is in widow’s garments which seems to prove that the treatment of widows in northern India started in Tamil Nadu that has given a raw deal to these unfortunate women since the Sangam times.
எனக்குச் சொன்னவரைத் தான் நான் இப்போ கேட்கணும். அவரைக் கேட்கக் கொஞ்சம் நாட்கள் ஆகும். கேட்டுட்டுச் சொல்றேன். நன்றி. இதன் மூலம் ஒரு புதிய விபரம் கிடைக்கப் பெற்றேன்.
கீதா சாம்பசிவம், பழைய ஜூனூன் தொடரைப் பார்ப்பீர்களோ???
//பார்த்தேன் இப்போ நானும்//
:)
திரு ஜெயகுமார்,
மின் தடையின் காரணமாய் கணினியை அவசரமாய் மூடிக் கொண்டிருந்ததால் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது சில வரிகள் விடுபட்டுப் போய் விட்டன. மேற்கண்ட குறிப்புகள் திருமதி பிரேமா நந்தகுமாருடையவை. என்றாலும் என்னுடைய சந்தேகம் அப்படியே தான் இருக்கிறது. எனக்குச் சொன்னவர் மிகப் பெரிய பண்டிதர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் தவறாய்ச் சொல்லி இருப்பாரானும் தெரியவில்லை. இப்போது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனினும் இதற்கு விரைவில் விடை கண்டு பிடிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகம் ஆகி விட்டது.
திரு எஸ்.கே. சொல்லி இருப்பதை பிரேமா நந்தகுமாரும் கூறி இருக்கின்றார். என்று வந்திருக்கவேண்டும். மன்னிக்கவும்.
பிருகஸ்பதியின் மனைவி தாராவை கற்புக்கரசியாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு சமயத்தில் ஒரு யாகத்தில் சந்திரனை கண்டு அவன் அழகில் மயங்கிய அவள் அவனுடனே சென்றுவிட்டாள். பிறகு அவர்கள் இருவருக்கும் பிறந்தவர்தான் புதன். மனம் திருந்திய தன் மனைவியை குரு ஏற்றுக்கொண்டார். அப்படி பட்ட ஒருவரை நீங்கள் எப்படி
கற்புக்கரசி என்று சொல்லமுடியும். ஆதலால்
அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ததா
பஞ்ச கன்யா ஸ்மரேன்
நித்யம் மஹா பாதக நாசனம்
என்பது வாலி மனைவி தாரையைத்தான் குறிக்கும்
https://www.karma2grace.org/encyclopedia/Chandra.html
அகல்யா செய்த தவறு அறியாமல் செய்த தவறு,
இந்திரன் செய்த சதியால் விளைந்தது.
ஆனால் குருவின் பத்தினி தாரா செய்த தவறு அறிந்து செய்ததே.
அறியாமல் செய்த தவற்றை இறைவன் ராமன் மன்னித்து கல்லாய்க் கிடந்தவளை காலால் காப்பாற்றினான்.
வானரமாய் இருந்தாலும் கற்பு நெறி தவறாமல் வாழ்ந்த வாலியின் பத்தினி தாரைதான் நினைவில் கொள்ள வேண்டிய 5 பெண்களில் ஒருத்தி என்பதே சரியானது. குருபத்தினி தாரா ஆக இருக்கமுடியாது.
திரு ராமகுமாரன்,
பஞ்ச கன்யாக்களில் இங்கே குந்தியைச் சிலரும், நீங்கள் சீதையையும் குறிப்பிட்டுள்ளீர்கள். எப்படிப் பார்த்தாலும் மண்டோதரியையும், சீதையையும் தவிர, அல்லது குந்தியைக் கணக்கில் எடுத்தால் மண்டோதரியைத் தவிர மற்றவரைச் சேர்க்க முடியாது அல்லவா? ஆனால் இதன் உள்ளார்ந்த தாத்பரியம் ஸ்ரீவித்யா வழிபாட்டைச் சேர்ந்தது என நேற்றுத் தான் அறிந்தேன். ஆகவே அதை அதிகம் விளக்க முடியவில்லை. குருமுகமாய் எந்த உபதேசமும் இல்லாமல் இது பற்றிச் சொல்லவும் முடியாது. குரு உபதேசம் இருந்தாலும் இவற்றில் சிலவற்றை வெளிப்படையாய்த் தெரிவிக்கவும் முடியாது. நன்றி உங்கள் கருத்துக்கு. குருவின் மனைவி தாராவா அல்லது வாலியின் மனைவி தாரையா என்பது பற்றி மட்டும் எனக்கு நிச்சயம் ஆனதும் சொல்கின்றேன்.
தாரா எனபது யாரைக்குறிக்கிறது என்ற வாதஙகளில் ஈடுபடுவதை விட கம்பனின் காவியத்தின் சுவையை அனுபவிப்போம். அதுதானே இக்கட்டுரையின் குறிக்கோள்.
கிரி
ஐயா, நான் மலேசியாவில் பயின்று கொண்டிருக்கும் ஒரு தமிழின மாணவன். கடந்த சில மாதங்களாக எனக்கொரு ஐயம் எழுந்துள்ளது. அதாவது, பண்டை கால தமிழர்களின் மதம் என்ன? பண்டை கால தமிழர்கள் ஹிந்து மதத்தினை சார்ந்தவர்களா? அல்லது இடையில்தான் ஹிந்து மதத்திற்கு மாற்றம் கண்டவர்களா? இவ்வினா சிறுபிள்ளை தனமாக இருக்கலாம், இருப்பினும் என் ஐயத்தை தீர்த்து வைப்பீர்கள் என நம்புகிறேன்.
கேள்வி பிறந்துவிட்டது
உண்மை வெளிப்பட்டுத்தான் ஆகவேண்டும்.
இராமாயண தொடர்புடைய சீதைக்கும் ,மண்டோதரிக்கும் நடுவில் வைத்ததிலிருந்து நோக்கும் போது வாலியின் மனைவி தாரையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
கன்னி / கற்பு விளக்கம் தேவை.
திரு ராமகுமாரன் & பட்டாபிராமன்,
திரௌபதி Missing!
ஆரம்பித்து வைத்த நானே முடித்தும் வைக்கிறேன். பலரையும் கேட்டதில் இரு வேறு கருத்துகள் இருப்பதாகவே தெரிகின்றது. ஆனால் வாலியின் மனைவி தாரையைத் தான் பெரும்பாலோர் எடுத்துச் சொல்கின்றனர். அதற்குக் காரணம், “சுபாஷிதம்”. அவள் எடுத்துச் சொன்ன நீதியும், நேர்மையும், சமயோசிதமாக நடந்து கொள்ளும் திறமையும், தன் கருத்தை இனிமையான வார்த்தைகளால் சொல்லும் திறமையும் என்று சொல்லப் படுகின்றது. எனினும் குருவின் மனைவி தாராவையும் ஏன் சொன்னார்கள் என்பதையும் விரைவில் அறிந்து சொல்கின்றேன். நன்றி, அனைவருக்கும்.
An excellent discussion though the final outcome(if there is a final one in such matters) is awaited with utmost interest.
உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஹிந்து சமுதாயம் இப்படிதான் உதைபட்டுக்கொண்டிருக்கும்
உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை கொண்ட புராண புரட்டு கதைகளை தெய்வீகம் என்று நம்பவைக்கும் உண்மையை உணராத புராண உபந்யாசகர்கள் இருக்கும்வரையிலும் எல்லாவற்றையும் ஆராயாமல் நம்பும்,படித்த பாமர மக்கள் இருக்கும்வரை இந்துமதம் மற்றமதத்தினரின் விமரிசனத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி கொண்டிருக்கும்.
அவதார புருஷர்களால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்.
உண்மையை கூறினால் இந்துமதம் அழிந்துவிடுமோ என்ற பயம் ஏன்?
பயந்தால் நம்மை அழிக்க வேறு யாரும் தேவையில்லை. அதுவே நம்மை அழித்துவிடும்.
//உண்மைக்கு புறம்பான பல கருத்துக்களை கொண்ட புராண புரட்டு கதைகளை தெய்வீகம் என்று நம்பவைக்கும் உண்மையை உணராத புராண உபந்யாசகர்கள் இருக்கும்வரையிலும் //
என்று சொல்லும் நீங்களே
//அவதார புருஷர்களால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்.//
என்றும் சொல்கிறீர்கள்!
தீமையை அழிப்பதற்காக பூவுலகுக்கு வந்த அவதாரங்களின் வரலாறுகள்தாமே புராணங்கள்! ராமனும் கிருஷ்ணனும் அவதாரங்கள் என்றால் வாமனனும், நரசிம்மனும்கூட அவதாரங்கள்தாம். இவர்களது அருட்செயல்களையும் பராக்கிரமங்களையும் புராணங்கள் கூறுகின்றன. நீங்கள் சொல்வதிலுள்ள சுயமுரண் உங்களுக்கே தெரியவில்லை போலும்.
சரி போகட்டும், அவதாரங்கள் வரும்வரை நீங்கள் காத்துக் கொண்டிருங்கள். வெளிதேசங்களிலேயிருந்து இங்கு வந்து பிற மதங்கள் செய்யும் அட்டூழிங்களைக் கண்டும் காணாதது போல உங்களைப் போன்ற தைரியசாலிகள் இருந்துகொள்ளுங்கள். அஞ்சுகிற நாங்கள் தமிழ் இந்துவில் வருகின்ற கட்டுரைகளால் விழிப்புணர்வு அடைந்து கொள்கிறோம். உங்கள் உபந்யாசம் எங்களுக்கு வேண்டாம்.
ஆத்திரப்படுவதால் பயன் ஒன்றும் இல்லை. அதனால் அறிவில் தெளிவு போய்விடும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்து மதத்தின் மீது நீங்கள் அளவு கடந்த பற்று வைத்துள்ளது உங்கள் எழுத்திலிருந்து தெரியவருகிறது.
அய்யா மாற்று மதத்தினரின் மத மாற்றத்தை தடுக்க தாங்கள் என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
இல்லை. மாற்று மதத்தினர் செய்யும் தில்லு முல்லு வேலைகளை அம்பலபடுத்திவிட்டால் மதம் மாற்றும் பணி அதுவாகவே நின்று போகும் என்று நினைகிறீர்களா?
மக்களை மதம் மாறுவதற்கு அடிப்படை காரணம் எது என்று கண்டுபிடித்து அதை நீக்க ஏதாவது நடைமுறை திட்டம் வைத்திருக்கிறீர்களா?
ஒரு எதிர்ப்பை சந்திக்க வேண்டுமென்றால் போர் வீரர்களுக்கு பயிற்சி தேவை
அவர்களை ஒன்று சேர்த்து போராட ஒரு திறமையான, தன்னபிக்கையை இழக்காத, சுயநலமற்ற ,தியாக சிந்தனை கொண்ட தலைவன் தேவை
அதைத்தான் நான் சுட்டி காட்டினேன்.
அடித்தட்டு மக்கள்தான் லட்சக்கணக்கில் மதம் மாறிகொண்டிருக்கிறார்கள்
அதற்க்கு காரணம் இந்துக்களிடையே உள்ள சுயநலமும், ஜாதி வெறியும் தீண்டாமையும், உட்பிரிவு சண்டைகளும் ,ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வுகளும்.தான்
இந்து சமயத்தை பற்றிய சரியான வழிகாட்டுதல் ,புரிந்துணர்வு இல்லாமை அடித்தட்டு மக்களிடயே உள்ள வறுமை,படிப்பறிவின்மை போன்றவை
அவைகளை சரி செய்தால் மாற்று மதத்தினரின் ஜம்பம் பலிக்காமல் போகும்
மாற்று மதத்தினர் ஒரு குறிப்பிட்ட சில கருத்துகளை மட்டும் பாமர மக்களிடம் பரப்பி அவர்களை குழப்பமடைய செய்து சில அடிப்படை உதவிகளை செய்து சுலபமாக மதம் மாற்றிவிடுகின்றனர்.
இந்து மதத்தில் பல கோடீஸ்வரர்கள் இருந்து என்ன பயன்?
கோயிலில் முதல் மரியாதை மட்டும் எதிபார்ப்பார்கள்
கருப்பு பணத்தை உண்டியில் போடுவார்கள்
தரித்திர நாராயணனை அவர்கள் கவனிக்காவிட்டால் நாராயணன் நசீமாகவோ அல்லது ஆனந்தன்ஆபிரகாமாகவோ போய்விடுகிறான்
அவர்கள் நம் மததிர்க்க்காக ஒன்றும் செய்வதில்லை, ஒரு சிலரைதவிர
படித்தவர்கள் மட்டும் புராணங்களை ஆய்வு செய்து என்ன பயன்?
பாமரர்களின் ஆதரவு இல்லாமல் எந்த மதமும் நிலைத்து நிற்காது.
அவர்களுக்கு பக்தி மட்டும்தான் தெரியும்
அதில் அவர்களை உறுதியாக இருக்கசெய்யும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டும் என்றுதான் நான் தொடர்ந்து குறிப்பிட்டுவருகிறேன்.
மாற்று மதத்தினர் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திரித்து எழுதிக்கொள்ளட்டும்.அவைகளால் ஒன்றும் ஆகாது.
மக்களிடையே இந்து மதத்திற்கு ஆபத்து இருப்பதாக கருதாமை காரணமாக தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் வர்க்கத்தினரையே தங்களை ஆளுவதற்கு தேர்ந்தெடுக்கின்றனர்.
இவர்களில் பொய் பிரசாரங்களையும் மீறி இன்று கோயில்கல் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன,பல ஆயிரக்கணக்கான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளன.
அவரவர் குல வழக்கப்படி வழிபாடுகளையும், தீர்த்த யாத்திரைகளையும் செய்துகொண்டுதான் இருக்கின்றனர்.
அந்த நடவடிக்கைகளை உறுதிபடுத்தவேண்டும் என்றுதான் என்று மீண்டும் சொல்கிறேன்.
நீங்கள் உங்கள் வழியில் போராடுங்கள். எல்லோருக்கும் பொதுவான இறைவன் உங்களுக்கு வெற்றியை அளிக்க பிரார்த்திக்கிறேன்.வணக்கம்.
முதலில் இந்துக்களுக்காக போராடும் அமைப்புகளிடையே ஒற்றுமை இல்லை
மததலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை
முதலில் அவர்களை இன்று சேருங்கள்
ஒரு கூட்டமைப்பு அமைத்து பொதுவான கருத்தை எட்டப்படவேண்டும்
ஒரு கிராமம் என்றால் அதில் உள்ள அனைத்து இந்துக்களும் ஒன்றுபடுத்தப்படவேண்டும்
அதை செய்ய முடியுமா?
ஏனென்றால் எங்கு எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ஒவ்வொருவரும் முதல் மரியாதை எதிர்பார்ப்பவர்கள். விளம்பரபிரியர்கள்.
புராணங்களில் வரும் கதா பாத்திரங்களின் குண நலன்கள் இலக்கிய்சுவைக்காக அணுகுவது வேறு
அதில் சர்ச்சையை புகுத்தினால் இது போன்ற வாக்குவாதங்கள் தவிர்க்க இயலாததாகிவிடும்.
அதை தெளிவுபடுத்துவதில்தான் வெற்றி இருக்கிறதே தவிர அதை அப்படியே மூடி மறைப்பதில் என்ன பயன்
உஙகள் கட்டுரை பிரமாதம். I really enjoyed the debate on thara and tharey. We could learn more about the fact on the subject.
ரமாயண தொடர்புடைய சீதைக்கும் ,மண்டோதரிக்கும் நடுவில் வைத்ததிலிருந்து நோக்கும் போது வாலியின் மனைவி தாரையாக இருக்கலாம் என்று எனக்கும் தோன்றுகிறது.
Anyway it is a good effort and nice too.
All the best
Jaya-Nanganallur
பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் ராமாயணம் இன்னும் நிலைத்து நிற்ப்பதற்கு காரணம் என்ன?
அது பலவிதங்களில் பலநாடுகளில்,பலவாறு மாற்றியமைக்க பட்டபின்பும்
அதன் நோக்கம் மாற்ற இயலா தன்மையுடையாதாக இருப்பதுதான்.
தவறு செய்தவன்,தர்மத்திற்கு மாறாக செயல்படுபவனை அவனை படைத்த இறைவனே வந்தாலும் காப்பாற்றமுடியாது என்று பறை சாற்றுவதுதான்.
இறைவனின் அருள் பெற்ற ராவணன் தவறிழைக்கும்போது அதே இறைவனே அவனுக்கு எதிரிஆகிவிடுகிரான்
அதே கதிதான் வாலிக்கும்
அதே கதிதான் இறைவனையே மகனாக பெற்ற தசரதனுக்கும்
அதனால்தான் ராமபிரானை தர்மத்தின் வடிவம் என்று வணங்குகிறோம்
ராமாயணத்தில் சக்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டு சர்ச்சை செய்பவர்கள் பலாப்பாழத்தில் பலாச்சுளைகளை விட்டுவிட்டு முட்கள் கொண்ட மேல் தோலை மட்டும் தின்பவர்களுக்கு ஒப்பானவர்கள்.
சரசசைகள் வருவதுதான் ராமாயணம் விருமப காரணங்கள்