ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 2

திருமாவளவன் பல்டி


பங்குனி 27, வியாழக்கிழமை. தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு பேரணி நடத்தியது. அதில் ஜனநாயக முன்னேற்றக் கூட்டணியிலுள்ள கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் ஒரு பொதுக் கூட்டமும் நடந்தது. அதில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இலங்கைத் தமிழர் பிரச்சனையை எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் ஆக்குகின்றனர் என்றும் அவ்வாறு ஆக்குவது ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறினார். “உங்களின் இரட்டை வேடத்தைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்துள்ளனர்” என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இலங்கைத் தமிழர்களுக்கு சோனியாவை விட்டால் வேறு கதியில்லை என்று புதன்கிழமை பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வியாழக்கிழமை நடந்த இக்கூட்டத்தில், “இலங்கை ராணுவம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் படு கொலைகளைத் தடுக்க முதல்வர் கருணாநிதியை விட்டால் வேறு யாரும் இல்லை” என்று இறைஞ்சினார்.

மாநில நிதி அமைச்சரும், தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான அன்பழகன், காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குகந்த கூட்டணிக் கட்சியாகவும் மத்திய அரசாங்கத்தின் அங்கத்தினராகவும் தி.மு.க. இருந்தாலும், “இப்பேரணி நம் அனைவரின் உணர்வுகளை மத்திய அரசாங்கத்துக்குத் தெரிவிப்பதற்காகத்தான். அப்போதுதான் மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்” என்று ஒரு போடு போட்டார்! கிட்டத்தட்ட ஓராண்டுக் காலமாக இவர்கள் நடத்திய போராட்டங்களும், மனிதச் சங்கிலிகளும், அனுப்பிய கடிதங்களும், தந்திகளும், நேரில் தலைநகர் சென்று நடத்திய பேச்சு வார்த்தைகளும், சட்டமன்றத்தில் போடப்பட்ட தீர்மானங்களும், பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்த ‘ராஜினாமா’க்களும் என்ன ஆயின? அவற்றால் எந்தப் பலனும் இல்லையா? அவை வெறும் நாடகங்கள் தாமா? இப்போது நடத்தப்பட்டுள்ள இந்தப் பேரணியும் ஒரு நாடகம்தானா? – இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காது.

“தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே!”

கருணாநிதி பேசும்போது, சோனியா அம்மையார்தான் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர முடியும் என்று சொன்னதோடு, “விரைவில் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே!” என்று உணர்ச்சிகரமாக வேண்டுகோளும் விடுத்தார். இம்மாதிரியான கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதில் தனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை என்று கூறிய அவர், “நீங்கள் அனைவரும் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர ஒரு வழி காணுங்கள் என்று என்னிடம் முறையிட்டீர்கள். ஆனால் நானும் ஒரு வழியும் காண முடியாமல் குழம்பிப் போயிருக்கிறேன். கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டு வந்துள்ள எனக்கு இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை ஒன்றும் புதிதல்ல. அவர்களுக்காக சட்டமன்றப் பதவிகளைத் துறந்த நமக்கு இந்த ஆட்சியையும் துறப்பது ஒன்றும் கடினம் இல்லை. அவ்வாறு துறந்து ஜனாதிபதி ஆட்சி வருமேயானால், சோனியாவிற்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் பேசும் நம் நண்பர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள். அவர்கள் அவ்வாறு தண்டிக்கப் படக்கூடாது என்பதற்காகத்தான், அவர்களுக்காகத் தான், நான் ஆட்சியைத் துறக்காமல் இருக்கிறேன்” என்றார்.

இவர்கள் அடிமைகளாம்!

இலங்கைத் தமிழர் தலைவர்கள் செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் 1974-ல் தன்னை வந்து சந்தித்ததை நினைவுகூர்ந்த கருணாநிதி, “அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக நாம் அப்போதே உறுதி அளித்தோம். அவர்கள் தந்தை பெரியாரையும் சந்தித்தனர். அப்போது பெரியார் அவர்கள் ‘ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்’ என்று மறுத்துவிட்டார். அதே நிலையில்தான் இன்று நானும் இருக்கிறேன்” என்று சொன்னார். ஆனால் இந்த “அடிமை” விவகாரத்தை மக்களுக்கு விளங்குமாறு கலைஞர் தெளிவுபடுத்தாமல், அந்த வேலையை நம்மிடமே விட்டுவிட்டார். சுதந்திர, ஜனநாயக இந்தியாவில் பெரியார் தன்னை ஒரு அடிமை என்று ஏன் சொல்லிக்கொண்டார் என்பதும், தற்போது மாநில முதல்வராகவும், மத்திய அரசில் பங்குதாரராகவும் உள்ள கருணாநிதியும், தன்னை ஏன் ஒரு அடிமை என்று சொல்லிக் கொள்கிறார் என்பதும் புரியாத புதிர்கள்.

இந்த அடிமைத்தனத்தைப் புரிந்துகொள்ளும் ‘பகுத்தறிவு’ நமக்கு இல்லாததால், அப்படியே விட்டுவிட்டு மேற்கொண்டு கலைஞர் என்ன பேசினார் என்று பார்ப்போம். இந்திரா காந்தி இலங்கையுடன் கொண்டிருந்த நட்புறவை மக்களுக்கு நினைவூட்டிய கலைஞர், “சோனியாவின் குரல் இந்திராவின் குரல்போல் மாறவேண்டும். அவரைப்போல் இவரும் தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு விரைந்து முடிவு எடுக்க வேண்டும். எனவே வேகமாக முடிவு எடுத்து இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு சோனியா அம்மையாரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பிரபாகரனைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை நினைவுகூர்ந்த கலைஞர், “போரில் விடுதலைப் புலிகள் தோற்று, பிரபாகரன் கைது செய்யப் பட்டால், அவரை ஒரு மன்னனைப் போல் ராஜபக்சே நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார். கிரேக்க-இந்திய வரலாற்றுச் சம்பவம் ஒன்றை எடுத்துக் காட்டிய கலைஞர், “மாவீரன் அலெக்சாண்டர் எப்படித் தன்னிடம் தோற்றுப்போன இந்திய அரசன் புருஷோத்தமனைத் தனக்குச் சமமான ஒரு மன்னனைப் போல் நடத்தினானோ, அதைப்போல் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் பிரபாகரனை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதை விடுத்து, அவர் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்க நினைத்தால் சரித்திரம் அவரை மன்னிக்காது. அவர் தமிழர்களைத் தன்மானத்துடனும் சுய மரியாதையுடனும் வாழ அனுமதிக்க வேண்டும். இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களுக்குச் சரித்திரத்தில் இடமில்லாமல் போனதை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று பேசினார்.

முதல் நாள் பேசிய வைகோ அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ச்சியை (ராஜீவ் கொலை) நினைவு படுத்தியிருந்தாலும், கலைஞர் தனக்கே உரிய காரணங்களுக்காக அந்நிகழ்ச்சியைப் பற்றி பேசுவதைத் தவிர்த்துள்ளார். கலைஞரின் பேச்சிலும் பிரபாகரனுக்கு ஆதரவான தொனி இருந்தது என்றே சொல்ல வேண்டும். வைகோவைப் போல் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், மறைமுகமாக ஆதரவு தெரிவித்துப் பேசியது போல்தான் இருந்தது. உண்மையாகவே நாட்டின் இறையாண்மையையும், சட்டத்தையும் மதிப்பதாயிருந்தால், கருணாநிதி, பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்பவேண்டும் என்றல்லவா ராஜபக்சேவிடம் வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும்? அதை விடுத்து அவரை மன்னனைப் போல் நடத்த வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? என் செய்வது, விடுதலைப் புலிகள் தலைவர்களுள் ஒருவரான தமிழரசன் இறந்தபோது இரங்கற்பா பாடியவரல்லவா கலைஞர்! அதற்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தீர்மானம் நிறைவேற்றியதே!

“கலைஞர் பேச்சால் உலகத் தமிழர்களுக்கு அவமானம்”

முதல்வர் கருணாநிதி ராஜபக்சேவையும் மாவீரன் அலெக்சாண்டரையும் ஒப்பிட்டுப் பேசியது எதிர்க் கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “போரை நிறுத்தக் குரல் எழுப்புவதை விட்டு, கலைஞர் போர்ப் பரணி எழுதுகிறார். அவரின் பேச்சால் உலகிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் அவமானத்தால் தலைக் குனிவு ஏற்பட்டுள்ளது” என்று கருத்து தெரிவித்தார். தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், “விடுதலைப் புலிகள் போரில் தோற்று விடுவர் என்று கூறி இலங்கைத் தமிழர் முதுகில் குத்திவிட்டார் கலைஞர். இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர் என்பது வெளிப்பட்டு விட்டது. ஆனால் இவர் சொற்படி நடவாது. புலிகள் கண்டிப்பாக வெற்றி பெறுவர்” என்று சொன்னார். வலது கம்யூனிஸ்ட் தலைவர் தாமஸ் பாண்டியன், “சரித்திரப் படி, தட்சசீல அரசன் அம்பி, அலெக்சாண்டருக்கு ஜீலம் நதியைக் கடக்க உதவியதால்தான் புருஷோத்தமன் தோற்றுப் போனான். அன்றைய அரசன் அம்பியைப் போல் கருணாநிதி இன்றைய அம்பியாக இருந்து ராஜபக்சேவுக்கு உதவுகிறார்” என்று கருத்துச் சொன்னார். ம.தி.மு.க. தலைவர் வைகோ, “மாபெரும் வீரன் அலெக்சாண்டருடன் இனப்படுகொலை செய்யும் கோழை ராஜபக்சேவை ஒப்பிட்டதன் மூலம் கலைஞர் அவர்கள் தான் ஒரு இனத் துரோகி என்பதைக் காட்டியுள்ளார். இவர் தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது இதன் மூலம் தெரிகிறது” என்று சொன்னார்.

மேற்கண்ட தலைவர்கள் எல்லோரும் ராஜபக்சே-அலெக்சாண்டர் ஒப்பீட்டைப் பற்றிப் பேசியதற்கு நேர்மாறாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, பிரபாகரனைப் புருஷோத்தமனுடன் ஒப்பிட்டதை விமரிசனம் செய்தார். அவர், “மன்னன் புருஷோத்தமன் மக்களைக் காப்பதற்காக தான் போர் களத்தில் முன்னே சென்று போரிட்டான். பிரபாகரனைப் போல் மக்கள் பின்னே ஒளிந்துகொள்ளவில்லை” என்று கருத்துத் தெரிவித்தார். மேலும் புருஷோத்தமன் சிறுவர்களை மிரட்டிப் படையில் சேர்க்கவில்லை என்பதும், தன் இனத்தைச் சேர்ந்த மற்ற தலைவர்களைக் கொல்லவில்லை என்பதும் கூட மறுக்க முடியாத உண்மைகள் தாமே! எனவே கலைஞர் செய்த இவ்வொப்பீடு எல்லா வகையிலும் தவறு என்றுதானே ஆகிறது!

ஆளுக்கொரு சட்டமா?

இதனிடையே, வைகோ மீது, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் பேசியதற்காக, மூன்று சட்டப் பிரிவுகளின் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டது. அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று சொல்லப்பட்டது. இதே காரணங்களுக்காகத் திரைப்பட இயக்குனர் சீமானும், மற்றொரு ம.தி.மு.க. தலைவர் நாஞ்சில் சம்பத்தும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர் என்பது தெரிந்ததே. தற்போது சீமான் தமிழகத்தில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுள்ளது. சீமானின் மனுமீது நடந்த விசாரணையின் முடிவில், சென்னை உயர்நீதிமன்றம், “இவ்வழக்கின் சூழ்நிலை மற்றும் தன்மையைப் பார்க்கும்போது, ஒரு கூட்டத்தில் பேசிய பேச்சை சட்ட விரோத செயல்களுக்கு இணையாகவோ, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவோ பேசியதாகச் சொல்ல முடியாது. அவர் பேச்சுக்குப் பிறகு அமைதிக்கு பங்கம், மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு, ஆகியவை ஏற்படும் வகையில் எந்த நிகழ்வும் இல்லை. எனவே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்கிறோம்” என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதேபோல் நாஞ்சில் சம்பத்தும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நம் நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதும், தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று பேசியதும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் அளவிற்கு இல்லை என்று ஒரு உயர்நீதி மன்றம் சொன்னால், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகவும் பேசாத, சாதாரண வன்முறையைத் தூண்டிவிடுவதாகச் சொல்லப்பட்ட வருண் காந்தியின் பேச்சு எவ்வாறு தேசியப் பாது காப்புச் சட்டத்தின் கீழ் வரும்? உத்தரப் பிரதேச அரசு எவ்வாறு வருண் காந்தி மீது தே.பா.சட்டத்தை பாய்ச்சலாம்? சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த நடவடிக்கையை ஏன் உச்சநீதிமன்றம் எடுக்கவில்லை? சீமான்மீதும் நாஞ்சில் சம்பத் மீதும் எடுத்த நடவடிக்கையை ஏன் இயக்குனர் பாரதி ராஜா மீது எடுக்கவில்லை?

அவர்கள் இருவரும் பேசியது குற்றம் என்று நடவடிக்கை எடுத்த அரசு, ஏன் திருமாவளவன் பேச்சில் குற்றம் காணவில்லை? அவர் தங்கள் கூட்டணியைச் சேர்ந்தவர் என்பதாலா? சீமானின் பேச்சிலும் சம்பத்தின் பேச்சிலும் குற்றம் இல்லை என்று சொன்ன உயர் நீதிமன்றம், வைகோவின் பேச்சுக்கும் அவ்வாறு சொல்லுமா? அல்லது வருணின் பேச்சில் குற்றம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லுமா? உயர் நீதிமன்றம் என்றால் மாநில அரசாங்கம் சொல்படி தான் கேட்கவேண்டுமா? சீமான், பாரதி ராஜா, திருமா, நாஞ்சில் சம்பத், வைகோ, அனைவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் பேசியிருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தின் நடவடிக்கையும், அரசின் நடவடிக்கையும் ஏன் வெவ்வேறு விதமாக இருக்கின்றன? உச்சநீதிமன்றம் என்றால் மத்திய அரசு சொல்படி தான் கேட்க வேண்டுமா? வருண்மீது உத்திரப் பிரதேச அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை ஏன் மற்றவர்மீது மற்ற அரசாங்கங்கள் எடுக்கவில்லை? வருண்மீது தீர்ப்புக் கொடுத்த உச்ச நீதிமன்றம், ஏன் மற்றவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அந்தந்த அரசுகளைக் கேட்கவில்லை?

தமிழர் எதிரி வைகோ

1989-ல் கலைஞருக்குத் தெரியாமல் கள்ளத்தோணியில் இலங்கை போனாரே வைகோ, அன்றே அவர் தி.மு.க.வை விட்டு வெளியேறுதல் உறுதி செய்யப்பட்டு விட்டது. மேலும் சில வருடங்கள் ஆனாலும், வெளியேற்றப் படும்போது கொலைப் பழி அல்லவோ சுமத்தப் பட்டது! 1993-ல் ஆரம்பிக்கப் பட்ட ம.தி.மு.க. விடுதலைப் புலிகளுடனே வளர்ந்து அவர்களுடனே மறைந்தும் போகும் நிலையில்தான் இன்று இருக்கிறது. வைகோவோ, ம.தி.மு.க.வினரோ, தமிழகத்திலுள்ள மக்களுக்காக ஏதாவது செய்திருப்பார்களா என்று யோசித்துப் பார்த்தால், இல்லை என்ற பதில்தான் நமக்குக் கிடைக்கிறது.

“ஸ்ரீலங்காவில் இருக்கும் பிரபாகரன்மீது துரும்பு விழுந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” என்று வைகோ பேசியிருப்பது தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு என்பது இங்கிருக்கும் சாதாரணத் தமிழனுக்குப் புரியவில்லை. இங்கிருக்கும் கோடானு கோடித் தமிழர்கள், அங்கே தனது வன்முறைச் செயல்களின் காரணமாக இன்று உலக அளவில் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்காக ஏன் தமது ரத்தத்தைச் சிந்த வேண்டும்? நாம் சொல்வது விரும்பிச் சிந்தும் ரத்தத்தை அல்ல, வைகோவில் குண்டர் கூட்டம் பாய்ச்சத் துடிக்கும் ரத்த ஆற்றை. தமிழர்கள் மீது வைகோவுக்கு ஏனிந்தக் கொலை வெறி?

போதாக்குறைக்கு, இந்தியப் பிரதமர் ஒருவரின் படுகொலை மறந்துவிட்டதாம் மக்களுக்கு – வைகோ கூறுகிறார்! தமிழகத்தை, தமிழனை பிரித்துப் பார்த்தே, பேசியே வளர்ந்து விட்ட திராவிடக் குட்டையில் ஊறிய மட்டையின் பேச்சு வேறு எப்படி இருக்கும்!

இன்னும் வரும்…

3 Replies to “ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 2”

 1. இந்துமதமும் தமிழர் மதம் என்பதில் எனக்கும் ஏற்பே! ஆனால் இந்துமத பற்றாளர்கள் ஏன் திராவிட இயக்கத்தை எல்லா விதத்திலும் எதிர்க்கவேண்டும் என்று புரியவில்லை. நீங்கள் திராவிட இயக்கம் உங்கள் மீது உமிழ்ந்த வெறுப்பை அவர்கள் மீது திருப்பி உமிழ்கிறீர்கள். இது முடிவில்லாத வெறுப்புச் சுற்று.

  கருணாநிதியை “திராவிட தலைவர்” என்று நான் ஏற்கத் தயாரில்லை.திராவிட இயக்கம் பெரியாரோடு செத்து விட்டது.பெரியார் இந்து மதத்தை மூர்க்கமாக எதிர்த்தார். அது சரியா தவறா என்ற வாதம் வேண்டாம். ஆனால் அவருக்குப் பின்னால் வந்தவர்கள் பெரியாரின் பிராமண,இந்து வெறுப்பை மட்டும் பிடித்துக் கொண்டார்கள். திராவிட இயக்கத்தை தத்துவம், அளவான மூடநம்பிக்கையற்ற ஆன்மீகம்,நல்ல விவாதங்கள் போன்ற திசைகளில் திருப்பவில்லை. எனவே அது வெறும் பிராமண ,இந்து வெறுப்பியக்கமாகவே வரலாற்றில் எஞ்சும்!! அதன் வெறுப்பை திருப்பித்தருவதன் மூலம் நீங்களும் பலன்பெறப்போவதில்லை! ஏன்னா..தமிழகத்தில் 60,70% பேர் திராவிட இயக்கச் சார்புள்ளவர்கள். அவர்களை “சும்மா” பகைப்பதில் என்ன பலன்?
  உதாரணமாக என்னை எடுத்துக்கொள்வோம். எனக்கு பிராமண வெறுப்பு எள்ளளவும் கிடையாது. “கோட்டா” படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் என்பவன். ஆனால் திராவிட இயக்கத்தின் மீது “கொஞ்சம்” மரியாதை உள்ளவன்.நீங்கள் ஈழம் போன்ற உயிர்ப் பிரச்சனைகளில் கூட “தமிழல்லாத இந்திய”னாக இருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது வளர்ந்து பிறகு வெறுப்பாகலாம். கவனிக்கவும். நான் திராவிட இயக்கத்தின் பக்கம் போகவில்லை. நீங்கள் என்னை தள்ளுகிறீர்கள்!

  பிர‌பாக‌ர‌ன் “போர்க் குற்ற‌வாளி” என்றால் 6000 அப்பாவி ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை கொல்வ‌த‌ற்குக் காரணாமான‌ ராஜீவ் என்ன‌ குற்ற‌வாளி? (நீங்க‌ள் ராஜீவையும் விரும்ப‌மாட்டீர்க‌ள்!)
  மேலும் ஒரு கேள்வி..இர‌ண்டு பேர் சண்டையிடுகிறார்கள். “அமைதி ஒப்ப‌ந்த‌”த்தில் யாரார் கையெழுத்திட‌ வேண்டும்? நியாய‌ப்ப‌டி ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளும் சிங்க‌ள‌ர்க‌ளும‌ல்ல‌வா கையெழுத்திட‌ வேண்டும்!..ராஜீவ் என்ன‌ ஈழ‌த்த‌மிழ‌ரா? அதுவும் பிராபாக‌ர‌னை மிர‌ட்ட‌ முய‌ற்சி வேறு! “சுதும‌லை பிர‌க‌ட‌ன‌ம்” ப‌ற்றி ப‌டித்துப் பாருங்க‌ள்.

  த‌ங்க‌ளுக்கு உத்த‌ம்சிங் க‌ண்டிப்பாக‌ தெரிந்திருக்க‌ வேண்டும். உத்த‌ம்சிங்கிற்கும் தாணு,சிவ‌ராச‌ன்,சுபா ஆகியோரருக்கும் உள்ள‌ வேறுபாட்டைச் சொல்லுங்க‌ள் பார்க்க‌லாம்.

  க‌ருணாநிதி ஈழ‌ எதிர்ப்பாளர். அவ‌ரை எதிர்க்க‌வேண்டும் என்ற‌ ஒரே நோக்க‌த்தோடு அவ‌ரை ஈழ ஆத‌ர‌வாள‌ராகச்‌ சித்த‌ரிக்க‌ முய‌ற்சி செய்கிறீர்க‌ள். ஏன் இந்த‌ வேலை? அதுவும் 3 மாத‌த்தில் 5000 ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் குண்ட‌டி ப‌ட்டு செத்துக் கொண்டிருக்கும்போது! அவ‌ர்க‌ளும் இந்துக்க‌ள்தானே! (பிர‌பாக‌ர‌ன் முருக‌ப‌க்த‌ர் என்ப‌து ந‌ம்மில் ப‌ல‌ருக்கு தெரியாது. அவ‌ர் ம‌க‌னுக்கு கிறிஸ்துவ‌ பெய‌ர் சூட்டிய‌து ம‌ட்டும் தெரியும்!)

  இன்று உல‌க‌ம் முழுக்க‌ இந்துகோயில் உள்ள‌து என்றால் கார‌ண‌ம் யார்? ஐரோப்பியாவெங்கும் த‌மிழ் ஒலிக்க‌ யார் கார‌ணம்?

  ஷ‌ங்க‌ர்,ம‌ணிர‌த்ன‌ம் ப‌ட‌ங்க‌ள் வெளிநாட்டில் “வ‌சூல் சாத‌னை” புரியா யார் கார‌ண‌ம்?

  யோசியுங்க‌ள் என்று ம‌ன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்!

 2. வெங்கட்! தங்கள் மறுமொழிக்கு நன்றி.

  //இந்துமதமும் தமிழர் மதம் என்பதில் எனக்கும் ஏற்பே! ஆனால் இந்துமத பற்றாளர்கள் ஏன் திராவிட இயக்கத்தை எல்லா விதத்திலும் எதிர்க்கவேண்டும் என்று புரியவில்லை.//

  இந்துமதப் பற்றாளர்கள் திராவிட இயக்கத்தை எதிர்க்கவில்லை என்றால் தான் ஆச்சரியம். அவ்வியக்கம் ஒரு விதத்தில் கூட இந்து மதத்திற்கு உகந்ததாக செயல்படவில்லை. எல்லா விதத்திலும் இந்துமதத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டது.

  //நீங்கள் திராவிட இயக்கம் உங்கள் மீது உமிழ்ந்த வெறுப்பை அவர்கள் மீது திருப்பி உமிழ்கிறீர்கள். இது முடிவில்லாத வெறுப்புச் சுற்று.//

  இல்லை. திராவிட இயக்கத்தின் தீய செயல்பாடுகளை விமரிசனம் செய்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறோம். நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த “வெறுப்புச்சுற்று” என்பது முடியும் காலம் நெருங்கிவிட்டது என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. நம் வாழ்நாளுக்குள் திராவிட இயக்கத்தின் முடிவைப் பார்க்கத்தான் போகிறோம்.

  //கருணாநிதியை “திராவிட தலைவர்” என்று நான் ஏற்கத் தயாரில்லை.திராவிட இயக்கம் பெரியாரோடு செத்து விட்டது.பெரியார் இந்து மதத்தை மூர்க்கமாக எதிர்த்தார். அது சரியா தவறா என்ற வாதம் வேண்டாம். ஆனால் அவருக்குப் பின்னால் வந்தவர்கள் பெரியாரின் பிராமண,இந்து வெறுப்பை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.//

  என்னைப் பொறுத்தவரை இவ்விஷயத்தில் பெருந்தலைவர் காமராஜர் சொன்னது தான் உடன்பாடு. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஈ வே ரா வுக்கும் கருணாவுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஈ வே ராவின் மூர்க்கத்தனம் சரியா தவறா என்பதில் விவாதம் தேவையில்லை. தவறுதான் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் தமிழர்களைக் கெடுத்த பெருமை அவருக்கு உண்டு.

  //திராவிட இயக்கத்தை தத்துவம், அளவான மூடநம்பிக்கையற்ற ஆன்மீகம்,நல்ல விவாதங்கள் போன்ற திசைகளில் திருப்பவில்லை.//

  இது வேறயா…..ரொம்ப அவசியமாக்கும்! (:-))

  //எனவே அது வெறும் பிராமண ,இந்து வெறுப்பியக்கமாகவே வரலாற்றில் எஞ்சும்!! அதன் வெறுப்பை திருப்பித்தருவதன் மூலம் நீங்களும் பலன்பெறப்போவதில்லை! ஏன்னா..தமிழகத்தில் 60,70% பேர் திராவிட இயக்கச் சார்புள்ளவர்கள். அவர்களை “சும்மா” பகைப்பதில் என்ன பலன்?//

  இந்த பிராம்மண வெறுப்பு இன்னும் கொஞ்ச காலம் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் நிரந்தரமாக இருக்காது. 60% – 70% திராவிட இயக்கச் சார்பு உள்ளவர்கள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. திராவிடக் கட்சிகள் வாங்கும் ஓட்டுக்களை வைத்து சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இவர்களைச் சார்பு உள்ளவர்கள் என்று சொல்வதை விட மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள் என்று சொல்வது சரியானது. திராவிட இயக்கங்களையும் கட்சிகளையும் விமரிசனம் செய்வது எப்படி இவர்களைப் பகைப்பதாகும்? சொல்லப் போனால் சமீப காலமாக மக்கள் மாறத் தொடங்கியுள்ளார்கள்.

  //உதாரணமாக என்னை எடுத்துக்கொள்வோம். எனக்கு பிராமண வெறுப்பு எள்ளளவும் கிடையாது. “கோட்டா” படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் என்பவன். ஆனால் திராவிட இயக்கத்தின் மீது “கொஞ்சம்” மரியாதை உள்ளவன்.//

  மகிழ்ச்சி. திராவிட இயக்கத்தின் மீது நீங்கள் “கொஞ்சம்” மரியாதை வைத்திருப்பதற்கு சொந்தக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு அதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லை. “போகப் போகத் தெரியும்”…..தெரிந்தவுடன் அந்தக் கொஞ்ச மரியாதையும் போய்விடும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. (;-)) இங்கே வருகின்ற “போகப் போகத் தெரியும்” தொடர் படிக்கின்றீர்கள் தானே?

  //நீங்கள் ஈழம் போன்ற உயிர்ப் பிரச்சனைகளில் கூட “தமிழல்லாத இந்திய”னாக இருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது வளர்ந்து பிறகு வெறுப்பாகலாம். கவனிக்கவும். நான் திராவிட இயக்கத்தின் பக்கம் போகவில்லை. நீங்கள் என்னை தள்ளுகிறீர்கள்!//

  “தமிழன் வேறு; இந்து வேறு” என்று பார்ப்பதற்கும் “தமிழன் வேறு; இந்தியன் வேறு” என்று பார்ப்பதற்கும் ஒன்றும் வித்தியாசம் கிடையாது. இந்தப் பிரச்னையை “ஹிந்துஸ்தானத்து ஹிந்து” என்கிற கண்ணோட்டத்தில் பார்த்தால் பல விஷயங்கள் உங்களுக்குப் புரிபட ஆரம்பிக்கும். இந்தத் தமிழ் ஈழப் பிரச்சனைக்குப் பின்னால் உள்ள அன்னிய (கிறிஸ்துவ) மேற்கத்திய நாடுகளின் பெரும் சதி விளங்கும். இவ்விஷயங்களைப் பற்றி பின்வரும் நாட்களில் (கூடிய விரைவில்) எழுதப் போகிறேன். அப்போது நீங்களே தெரிந்து, உணர்ந்து திராவிட இயக்கம் பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் இருப்பீர்கள்.

  //பிர‌பாக‌ர‌ன் “போர்க் குற்ற‌வாளி” என்றால் 6000 அப்பாவி ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை கொல்வ‌த‌ற்குக் காரணாமான‌ ராஜீவ் என்ன‌ குற்ற‌வாளி? (நீங்க‌ள் ராஜீவையும் விரும்ப‌மாட்டீர்க‌ள்!)
  மேலும் ஒரு கேள்வி..இர‌ண்டு பேர் சண்டையிடுகிறார்கள். “அமைதி ஒப்ப‌ந்த‌”த்தில் யாரார் கையெழுத்திட‌ வேண்டும்? நியாய‌ப்ப‌டி ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளும் சிங்க‌ள‌ர்க‌ளும‌ல்ல‌வா கையெழுத்திட‌ வேண்டும்!..ராஜீவ் என்ன‌ ஈழ‌த்த‌மிழ‌ரா? அதுவும் பிராபாக‌ர‌னை மிர‌ட்ட‌ முய‌ற்சி வேறு! “சுதும‌லை பிர‌க‌ட‌ன‌ம்” ப‌ற்றி ப‌டித்துப் பாருங்க‌ள்.//

  பிரபாகரன் போர்க் குற்றவாளி மட்டும் இல்லை. நம் நாட்டின் சட்டப்படி நம் நீதிமன்றத்தினால் பிரகடனப் படுத்தப்பட்ட ஒரு கொலைக் குற்றவாளி. நம் நாட்டுப் பிரதமரை சதி செய்து கொன்றவர். தன்னுடைய பிள்ளைகளை வெளிநாடுகளில் சுகமாகப் படிக்க வைத்து, அப்பாவித் தமிழர்களின் குடும்பத்தில் உள்ள பத்து பனிரண்டு வயது குழந்தைகள் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து அவர்களை போர் முனைக்கு அனுப்பிச் சாக அடித்து அவர்கள் பின்னே ஒளிந்து கொண்ட கோழை. அன்றிலிருந்து இன்றுவரை அப்பாவித் தமிழர்களை – தமிழ் இந்துக்களை என்று சொல்ல வேண்டும் – கேடயமாகப் பயன் படுத்தி அவர்களின் உயிர் தியாகத்தில், தான் உயிர் வாழ்ந்து கொண்டிடுக்கும் கோழை. இலங்கையுடன் சேர்ந்து கொண்டு “நாங்கள் சகோதரர்கள்; இன்று அடித்துக் கொள்வோம் நாளை சேர்ந்து கொள்வோம்; அதைக் கேட்க நீ யார் நடுவே?” என்று இந்தியாவை எள்ளி நகையாடியவர். தன்னுடைய சர்வாதிகாரத்தை நிலை நாட்டுவதற்காகப் பல தமிழ் தலைவர்களை கொன்ற கொடுமைக்காரர். சொல்லப் போனால் இலங்கை ராணுவம் அளவிற்கு விடுதலைப் புலிகளும் தமிழர்களைக் கொன்றிருக்கிறார்கள். இஸ்லாமிய மக்களையும் கொன்றிருக்கிறார்கள்.

  எம் ஜி ஆர் சொல்லி ராஜீவை சந்தித்துக் கெஞ்சியவர் தானே பிரபாகரன். இலங்கைத் தமிழர் சார்பாக இந்தியா கையெழுத்திட்டத்தில் என்ன தவறு? அது தவறென்றால் இன்று ஏன் இந்தியாவிடம் கெஞ்ச வேண்டும்? அன்று ராஜீவ் கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி நடந்து கொண்டிருந்தால் இன்று இந்த நிலைமையே வந்திருக்காது. என்றோ அமைதி திரும்பியிருக்கும். தன்னுடைய சுயநலத்திற்காக, தான் தனி ஈழத்திற்கு சர்வாதிகாரியாக ஆட்சி செலுத்த வேண்டும் என்று எண்ணி அப்பாவித் தமிழரின் மாளாத் துயரத்திற்குக் காரணமானவர் பிரபாகரன். கிறிஸ்துவத்தின் கைகூலி.

  //த‌ங்க‌ளுக்கு உத‌ம்சிங் க‌ண்டிப்பாக‌ தெரிந்திருக்க‌ வேண்டும். உத்த‌ம்சிங்கிற்கும் தாணு,சிவ‌ராச‌ன்,சுபா ஆகியோர்கும் உள்ள‌ வேறுபாட்டைச் சொல்லுங்க‌ள் பார்க்க‌லாம்.//

  தயவு செய்து உதம் சிங்கை அவமானப் படுத்தாதீர்கள்.

  //க‌ருணாநிதி ஈழ‌ எதிர்ப்பாளன். அவ‌னை எதிர்க்க‌வேண்டும் என்ற‌ ஒரே நோக்க‌த்தோடு அவ‌னை ஈழ ஆத‌ர‌வாள‌னாக‌ சித்த‌ரிக்க‌ முய‌ற்சி செய்கிறீர்க‌ள். ஏன் இந்த‌ வேலை? //

  இல்லை. கருணாநிதி ஈழ எதிர்ப்பாளராகவும், ஆதரவாளராகவும், இரண்டுமே இல்லாமலும், என்று மாற்றி மாற்றி நிலைப்பாடு கொண்டு அரசியல் விளையாட்டு விளையாடியவர். அவரும் சரி, மற்ற திராவிடத் தலைகளும் சரி, இலங்கைத் தமிழ் மக்களுக்கு மனமார, ஞாயமாக, நேர்மையாக எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை என்பதை இப்போதாவது தமிழ் மக்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் “வாய்ச் சொல் வீரர்” என்று சொல்கிறேன்.

  //அதுவும் 3 மாத‌த்தில் 5000 ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் குண்ட‌டி ப‌ட்டு செத்துக் கொண்டிருக்கும்போது! அவ‌ர்க‌ளும் இந்துக்க‌ள்தானே! //

  ஆம். அவர்களும் இந்துக்கள் தான். பிரபாகரன் அவர்களை தப்ப விடாமல் வேண்டுமென்றே கேடயமாகப் பயன்படுத்தும் வரை, அவர்கள் சாவிற்கு இலங்கை ராணுவத்தை மட்டும் குறை கூறுவதை ஏற்க முடியாது. சொல்லப் போனால் பிரபாகரன் தாம் அதிகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

  //(பிர‌பாக‌ர‌ன் முருக‌ப‌க்த‌ர் என்ப‌து ந‌ம்மில் ப‌ல‌ருக்கு தெரியாது. அவ‌ர் ம‌க‌னுக்கு கிறிஸ்துவ‌ பெய‌ர் சூட்டிய‌து ம‌ட்டும் தெரியும்!)//

  இல்லை. பிரபாகரன் ஒரு நாஸ்திகர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அவன் மனைவியும் அவரின் குடும்பமும் முருக பக்தி உள்ளவர்கள் என்று அறிவேன். தற்போது பிரபாகரன் கிறிஸ்துவராக மாறி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. உறுதிப்படுத்த முடியவில்லை. அப்படியே அவர் இந்து என்று வைத்துக் கொண்டாலும் அவர் செய்த குற்றங்கள் ஞாயமாகிவிடாது.

  //இன்று உல‌க‌ம் முழுக்க‌ இந்துகோயில் உள்ள‌து என்றால் கார‌ண‌ம் யார்? ஐரோப்பியாவெங்கும் த‌மிழ் ஒலிக்க‌ யார் கார‌ணம்?//

  சத்தியமாக பிரபாகரனோ விடுதலைப் புலிகளோ காரணமில்லை. இலங்கைத் தமிழர்கள் மட்டும் தான் காரணம் என்றும் சொல்ல முடியாது. இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த அத்துணை இந்துக்களும், தமிழர்களும் (இலங்கைத் தமிழர் உட்பட) தான் காரணம்.

  //ஷ‌ங்க‌ர்,ம‌ணிர‌த்ன‌ம் ப‌ட‌ங்க‌ள் வெளிநாட்டில் “வ‌சூல் சாத‌னை” புரியா யார் கார‌ண‌ம்?//

  வசூல் சாதனை புரியாவிட்டாலும் ஒன்றும் குறைந்து விடாது.

  //யோசியுங்க‌ள் என்று ம‌ன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்!//

  யோசியுங்கள். யோசித்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள் என்று நானும் கேட்டுக் கொள்கிறேன்.

  கடைசியாக ஒரு விஷயம்: மலேஷியத் தமிழர்கள் “ஹிந்துக்கள்” என்கிற பெயரில் அங்குள்ள அரசின் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதாலும், அவர்கள் பின்னே சர்ச்சு இல்லை என்கிற காரணத்தாலும், அவர்கள் எதிர்த்துப் போராடுவது ஒரு இஸ்லாமிய அரசு என்கிற காரணத்தாலும், அவர்களுக்காகக் குரல் கொடுக்காமல், அவர்களுக்கு உதவாமல், அவர்களை ஒதுக்கி வைத்திருக்கும் இந்த திராவிட இயக்கங்கள் மீது இன்னும் நீங்கள் “கொஞ்சம்” மரியாதை வைத்திருப்பது வேதனையாக இருக்கிறது. மீண்டும் நன்றாக யோசியுங்கள்.

  அன்புடன்
  தமிழ்ச்செல்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *