”மிட்நைட் டையஸ்பரா: என்கவுண்டர்ஸ் வித் சல்மான் ருஷ்டி” எனும் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்.
மொழியாக்கம் : பனித்துளி
நம்முடைய கருத்துக்களை விளக்க அனுமதிக்கப்படுகிற காலத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இருந்தாலும், இந்த விளக்கங்களின் இடையே நாம் ஒருவரது கருத்தை மற்றவர் புரிந்துகொள்ளுவது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. ஏதேனும் ஒரு செய்தித்தாளை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலுள்ள முக்கியமான செய்திக்குச் சென்று பாருங்கள். அந்த செய்தியைவிட, அந்தச் செய்தியை எப்படிப் படிக்க வேண்டும், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றைக்கூட எப்படி யோசிக்க வேண்டும் என்ற விளக்கப் புயல்கள் உங்களை வார்த்தைக் குவியலுக்குள் அழுத்திவிடுகின்றன. ஒரு நிமிடத்திற்குள் ஒன்பது விஷயங்களை அறிவியல் ”விளக்கி”விடுகிறது. மதமோ உலகில் உள்ள அத்தனை விஷயங்களையும் ஏற்கனவே விளக்கிவிட்டதாம். விளக்கம் எனும் பெயரில் தங்களுடைய தவறுகளையும், பொய்களையும் மறைத்து, உண்மையை திரித்துச் சொல்லப்படுகிற சால்ஜாப்புச் சத்தங்களால் காதுகள் அடைபட்டு நமது வாழ்க்கை நிரம்பி வழிகிறது.
”நிதர்சனத்தைப் போதிப்பவர்கள்” என்று ஸால் பெல்லோ சொல்லிவருகிறாரே, அவர்கள் நம்மைச் சுற்றி எங்கும் பரவி இருக்கிறார்கள். உண்மை விளக்கம் என்னும் இந்தத் தொழிலானாது இப்போது சக்கை போடு போடுகிறது. உண்மை விளக்கங்கள் மட்டுமே நமக்கு நிதர்சனத்தைச் சொல்ல முடியும் என்று நாமும் நம்புகிறோம். நமது கனவுகளின்மீதான நம்பிக்கையை நாம் இழந்துவிட்டதால் புத்தகக் கடைகளில் கதைகளைவிட கற்பனை சாராத இப்படிப்பட்ட “உண்மை விளக்கப்” புத்தகங்கள் குவிந்துள்ளன. இருப்பினும், வாழ்வின் சாரத்தைத் தெளிவாகச் சொல்லுகிற மிகப் பிரபலமான படைப்புகளாக இன்றும் கற்பனை சார்ந்த புத்தகங்கள்தான் இருக்கின்றன.
தனிப்பட்ட வாழ்க்கையில் உண்மை விளம்பிகளான ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் நமது பலகீனங்கள், குழப்பங்கள், துக்கங்களுக்கு விளக்கங்கள் கேட்டு நமது சொத்துக்களுக்கு வேட்டு வைக்கிறோம். ஆனால், நமது மகிழ்ச்சிகளுக்கான காரணங்களை அறிய நாம் என்றாவது முயன்றிருக்கிறோமா? இல்லவே இல்லை. ஏனெனில், மகிழ்ச்சிக்கான காரணங்களை நம்மாலேயே உடனடியாக விளக்கிவிட முடிகிறது; அல்லது, மகிழ்ச்சி காரணங்களைத் தேடுவதேயில்லை என்றுகூடச் சொல்லலாம். பலகீனத்தை ஒப்புக்கொள்ளுகிறவர்களைத்தான் துயரமும் தேடுகிறது. ஏனெனில், அவர்கள்தான் இவர்களது விளக்கங்களை யோசிக்காமல் ஏற்றுக்கொள்வார்கள்.
அலுப்படையச் செய்யும் இந்த விளக்கக் கலவரங்களுக்கு மத்தியில், அறிவுபூர்வமான ஒளிரும் கேள்விகளுக்கு இடம் இருக்கிறதா?
உதாரணமாக, கலையுணர்வு சார்ந்த விஷயங்களைப் பொறுத்தவரை வி. எஸ். நய்பாலின் அறிவுரையை நாம் பின்பற்றவேண்டுமா அல்லது கூடாதா? இலக்கியமானது இளைஞர்களுக்கானது இல்லை. எனவே உலகில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆங்கில இலக்கியத் துறைகளை உடனடியாக மூடிவிடவேண்டும் என்று வி.எஸ். நைய்பால் ஹை-ஆன்-வை (Hey-on-Wye) இலக்கியத் திருவிழாவில் பார்வையாளர்களிடம் ஒருமுறை சொன்னார். இதைப் பின்பற்றுவதா, கூடாதா?
கலைகளுக்கும், கலையை விளக்குபவர்களுக்குமான உறவு எரிச்சலூட்டுகிற குழப்பமாகவே இருந்து வருகிறது. அதேசமயம் மிகப் பெரிய எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய விமரிசகர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவருடைய படைப்பைப் புரிந்துகொள்ள விமரிசகரின் பங்கு கணிசமானது – இதற்கு முன்னுதாரணங்களாக வில்லியம் ஃபால்க்னரும் (William Faulkner) மால்கம் கவ்லியும் (Malcolm Cowley) என் நினைவுக்கு வருகிறார்கள். ஆந்ரே ப்ரெட்டன் (Andre Breton) இல்லாதிருந்தால் ஸர்ரியலிஸம் இருந்திருக்க முடியுமா? இதற்கு முற்றிலும் எதிரான வாதத்தையும் வைக்கலாம். ந்யூயார்க் டைம்ஸின் கலை-இலக்கிய விமரிசகரான டாம் வொல்ஃப் (Tom Wolfe) ”வழிநடத்தும் கோட்பாடுகள் இல்லாமல் இருப்பது அடிப்படையான தேவையை இழக்கவைக்கிறது” என்று எழுதுவதன் மூலமாக, படைப்புகள் உருவாகுவதற்கு முன்பு அவை குறித்த விமரிசனம், நெறிகள் போன்றவை அவசியம் என்ற வாதத்தை முன்வைக்கிறார். “ஓவியங்கள்…… …… …… எழுத்துக்களை விளக்குவதற்கு மட்டுமே இருக்கின்றன” என்கிறார் அவர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ப்ரிட்டிஷ் இலக்கிய அமைப்பின் கலந்துரையாடல் ஒன்றில் நான் கலந்துகொண்டேன். அதில் கலந்துகொண்ட ஆங்கில இலக்கியவாதிகளின் குழு ஒன்று (Ian McEwan, James Fenton, Caryl Phillips உள்ளிட்டவர்கள்) அவர்களுடைய படைப்புகளைப் பற்றிய விமரிசனங்கள், ஆய்வுரைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதோ, கருத்தில் எடுத்துக்கொள்ளுவதோ கிடையாது என்றும், இந்த விமரிசனங்களால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது என்றும் பேசி அங்கிருந்த யூரோப்பிய விமரிசகர்களையும், அறிஞர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். அப்போது எழுத்தாளர்களாகிய நாங்கள் உண்மையைச் சொல்லுகிறோமோ அல்லது எங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒரு முரட்டுத்தனமான போக்கை எடுத்துக்கொள்கிறோமா என்று நான் யோசித்தேன். ஒரு எழுத்தாளன் இறந்த பின்னால், அவனது படைப்புகளுக்கு விமரிசகர்களே அரசர்களாகின்றனர். இருப்பினும் ஒரு படைப்பாளி தொடர்ந்து தனது எழுத்துக்களின் மீது அதிகாரம் கொண்டவனாகத் தொடர்ந்து வாழத் துடிக்கிறான். ஆனால், காலம் செல்லச் செல்ல, நான் ஒத்துக்கொள்கிறேன் – மகிழ்ச்சியுடன் படிக்கப்படுகிறவனாக இல்லாமல் விளக்கப்படுகிறவனாக, மோசமானவன் என்ற முத்திரை குத்தப்படுகிறவனாக இருக்கிற இந்த துர்பாக்கிய நிலை மிகுந்த வேதனையைத் தருகிறது.
என்னைப் பற்றி நான் விளக்க வேண்டி இருப்பதிலிருந்து இந்த பிரச்சினை ஆரம்பிக்கிறது. ஒரு புத்தகத்தை வெளியிடும்போது, மற்ற வேலைகளில் இருந்து என்னைப் புறந்தள்ளி, அந்த புத்தகத்தைப் பதிப்பிற்குக் கொண்டு வருவதில்தான் எனது உள்ளுணர்வு தீவிரமான கவனத்துடன் செயல்படும். அந்த வேலையின் முடிவில் எழுத்தாளனின் நேரம் முடிந்துபோய், வாசகர்களின் காலம் ஆரம்பிக்கிறது. தனது கதையைக் கொடுத்து, மற்றவர்களின் கருத்தை அறியவே அப்போது படைப்பாளி ஆசைப்படுகிறான். அப்போது சுவையற்ற குரலாக அவனுக்குக் கேட்பது அவனது குரல் மட்டுமே. ஆனால், அப்போதுதான் அந்த எழுத்தாளன் அதிகமாக உலகில் வெளிப்பட வேண்டும், குரல் கொடுக்க வேண்டும் என்று இந்த பதிப்புலகின் விசித்திர இயல்பு நிர்ப்பந்திக்கிறது. சொன்ன பதில்களையே மீண்டும் மீண்டும் சொல்லும் தனது குரலைக் கேட்டு அப்போது ஒவ்வொரு எழுத்தாளனும் நடுங்க ஆரம்பிக்கிறான். அந்த பயங்கரத்தையே அவன் தொடர்ந்து செய்ய வேண்டிய நிலை வந்தால் (வருகிறது, வருகிறது, வந்துகொண்டே இருக்கிறது), அது அவனை அவனது படைப்புகளில் இருந்தே அன்னியமாக உணரச் செய்கிறது. பதிப்பித்தல் சம்பந்தமான இந்தத் தொடர்வேலைகளால் அவனது புத்தகத்தின்மீதே ஒரு எழுத்தாளனுக்கு வெறுப்பு ஏற்படுத்தப்பட்டு, தனது படைப்பைத் தொடர்ந்து விளக்கிக்கொண்டிருக்கும் நொச்சு வேலையிலிருந்து இருந்து தப்பிப்பதற்காகவே அடுத்த புத்தகத்தை அவன் எழுத ஆரம்பிக்கிறான்.
என்னுடைய சொந்த வாழ்க்கையிலும்கூட இந்த விளக்கம் சொல்லும் வேலைக்கு எதிரான எனது உணர்வுகள் ”சாத்தானின் கவிதைகள்” வெளிவந்தபின்னால் எழுந்த பரபரப்பினால் தீவிரமடைந்தன. ஒரு குறுகிய மனப்பான்மைக்குள் சிக்கித் தவிக்கிற, பெரும்பாலும் தீவிரமான வெறுப்புணர்வு கொண்டவர்களிடம் தனது படைப்பை, அதுவும் இந்த அளவு விரிவாக விளக்க, இத்தனை முறை வேறு யாரும் இதுவரை அழைக்கப்பட்டதில்லை. அதுவும் புத்தகத்தைப் படிக்காமலேயே ஏற்பட்டுவிட்ட வெறுப்புள்ளவர்களினாலோ, அல்லது வெறுப்பைத் தூண்டுவதற்காக வாக்கியங்களை அவற்றின் படைப்பு சூழலில் இருந்து கவனமாகப் பிரித்து, உண்மையான பொருளைத் திரித்து, புத்தகத்தின் ஒட்டுமொத்த கருத்திற்கும் சம்பந்தமே இல்லாததாக இருக்கிற “விளக்கங்களை” அடிப்படையாகக் கொண்டோ, அல்லது புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற பகுதிகளை அப்பகுதிகள் வெளிப்படுத்தும் படைப்புச் சூழலைப் பற்றி எதுவும் தெரியாமல் படித்துவிட்டோ, அல்லது காழ்ப்புணர்வினால் தவறாக அணுகியோ, அல்லது மதம் மற்றும் மதத்தின்மீதான புனித பிம்பம் ஏற்படுத்திவிடுகிற ஊகங்களாலோ, அல்லது மிக மோசமாகத் திரிக்கப்பட்ட வார்த்தையான ”கலாச்சாரம்” மற்றும் “மத உணர்வுகளைப் புண்படுத்திவிடக்கூடாது” என்ற மட்டையடிகளாலோ, அல்லது என்னைப் பற்றிய கணிப்புகளாலும் கோளுரைகளாலும் தூண்டப்பட்டு விமரிசிப்பவர்களாலோ – பல வாசகர்களுக்கு நானும் எனது சாத்தானின் கவிதைகளும் தகுதியற்ற பண்டங்களாகி விட்டோம்.
சாத்தானின் கவிதைகளை நீ படிக்கவே வேண்டியதில்லை, ஏனெனில் அந்த புத்தகம் குறித்த கோபமான அமளிதுமளிகளே அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டிய சிரமங்களை நீ எடுக்கத் தேவையில்லை என்று உனக்குச் சொல்லிவிடுகிறது. ”சாக்கடையில் வெறும் மலக்குவியல்தான் இருக்கிறது என்பதை அறிய அதில் இறங்கி நடக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று படிக்காமல் விமரிசப்பவர் ஒருவர் சொன்னார். அந்தப் புத்தகத்தை எழுதிய எழுத்தாளனைப் பற்றியும் நீ தெரிந்துகொள்ளவேண்டியதில்லை, ஏனெனில், அந்த புத்தகம் குறித்த கோபமான அமளிதுமளிகளே அந்த எழுத்தாளன் எவ்வளவு கேவலமானவன் என்பதை உனக்குச் சொல்லிவிடுகின்றன.
இத்தகைய மருளர்களின் விளக்கங்களை எதிர்கொள்ள, என் புத்தகம் எதைப் பற்றியது, எதனால் அந்தப் புத்தகத்தை எழுதினேன், எதனால் அதை அப்படி எழுதினேன், எதனால் பிரச்சினை ஏற்படுத்தாத வடிவில் நான் அதை எழுதவில்லை, எதனால் வேறு எந்த வடிவங்களிலும் எழுதவில்லை என்பனவற்றை மீண்டும் மீண்டும் நானே விளக்கவேண்டியது அவசியமானது; இதை எழுதாமல் இருந்திருந்தால் யாருக்குமே பிரச்சினை இருந்திருக்காது. இருந்தாலும், இதை நான் எழுதவேண்டிய அவசியம் என்ன என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. சல்மான் ருஷ்டியைப் பற்றி சல்மான் ருஷ்டியே விரித்துரைக்க வேண்டிய ஏற்பாட்டைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். படைப்பின் தளம், வடிவம், பாத்திரங்கள், உணர்வுகள், மொழி, தன்மை போன்றவற்றை விளக்குவதற்குப் பதிலாக, எழுதுவதற்கு எனக்கு சுதந்திரம் இருக்கிறது என்ற அடிப்படை உரிமையை நிரூபிக்கவே எனது நேரம் செலவழிகிறது. “அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியும்” என்று மக்கள் சொல்லுகிறார்கள். ஆனால், நான் என்ன செய்துவருகிறேன் என்பதைப் பற்றி யாரும் அறிய முற்படவில்லை. அதனால், அதை எழுத்துக்கூட்டி அவர்களுக்குப் புரியும் வகையில் மீண்டும் மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன். இவை எதுவும் சுகமான அனுபவங்கள் இல்லை. ஆனால், அவை முக்கியத்துவம் உணர்ந்த செயல்கள்.
ஒரு எழுத்தாளன் எப்போதுமே செய்யவேகூடாது என்று நான் எண்ணுகிற விஷயங்களை அதீதமான சூழல்களால் நானே செய்யவேண்டி வந்தது. எனது படைப்பு தவறானது, நியாயமற்றது, அறவுணர்வு அற்றது, ஒழுக்கமற்றது, தீயது என்று நிர்ணயிக்கிற கடுமையான தாக்குதல்களுக்கு எதிராக, எனது படைப்பைப் பற்றிய எனது வாசிப்பை உலகின்மீது திணிப்பதும், அதற்காகத் தொடர்ந்து முயல்வதும், படைப்பின் அர்த்தங்களை வரையறை செய்வதும், ஒவ்வொரு பத்தியும் சொல்லவருவது என்ன என்பதைத் தெளிவாக்குவதும், ஒரு படைப்பைச் சரியானதாகவும், நியாயமானதாகவும், அறவுணர்விற்குட்பட்டது என்றும், நல்லது என்றும்கூட சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. ஒரு இலக்கியப் படைப்பின் முழுமையை ஒரு வாசகன் அவனாகவே கண்டடைகிறான் என்பது எனது பொதுவான நம்பிக்கை; ஒவ்வொரு வாசிப்பும் வேறுபட்டது, ஏனெனில் ஒவ்வொரு வாசகனும் அந்த வாசிப்பு எனும் அனுபவத்திற்கு என்ன கொண்டுவருகிறான் என்பதன் அடிப்படையில்தான் இலக்கியத்தின் சுவையே இருக்கிறது. ஒரு புத்தகத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்று அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சொல்லவே கூடாது என்பது எனது பார்வை. இருந்தாலும், ஒவ்வொரு பேட்டிகளின்பின் பேட்டிகளாகவும், என்னால் எழுதப்படும் பல படைப்புகளிலும், எனது படைப்பை திரிப்பவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக என் புத்தகத்தை எப்படி வாசிப்பது என்பதை விளக்குகிற வேலையைத்தான், “இந்த பகுதி இந்த அர்த்தத்தைத்தான் சொல்லுகிறது”, “இதை இப்படி வாசியுங்கள்” என்று மன்றாடுகிற வேலையைத்தான் நான் செய்துவருகிறேன்.
இப்போது கூட, ”சாத்தானின் கவிதைகளை” எழுத ஆரம்பித்த 22 வருடங்களுக்குப் பின்னாலும், அதிலுள்ள பல வாக்கியங்களை எழுதத் தூண்டிய வாழ்நாள் நிர்ப்பந்தங்கள் குறித்த விளக்கங்களை என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். நோக்கங்கள் எவை என்னவென்பது எனக்கு ஞாபகமேயில்லை என்ற நேர்மையான பதில் அவர்களுக்கு திருப்தியைத் தருவதில்லை. எனவே, ஒரு பதில்களின் திரட்டை நான் உருவாக்கி இத்தகைய கேள்வி கேட்பவர்களை — அவர்களில் திருப்தி அடையவே அடையாத சிலர் இருந்தாலும் — திருப்தி செய்ய முயலுவது எனக்கு மிகுந்த உளைச்சலை ஏற்படுத்துகிறது. இப்போது நான் கூட ஒரு “நிதர்சனத்தைப் போதிப்பவனாக” ஆகிப்போய்விட்டேன். எவ்வளவு எளிதாக நான் இந்த பொறிக்குள் அகப்பட்டுக்கொண்டு, எனது நோக்கங்களையும், பாத்திரங்களையும், எனது வாக்கியங்களையும் விளக்குபவனாக ஆகிப்போய்விட்டேன்; கருத்துக்களைப் பற்றியும், தகராறுகள் குறித்தும், தாக்குதல்கள் குறித்தும், தற்காப்புகள் குறித்தும் எவ்வளவு ஆர்வமாக நானே பேச முன்வருகிறேன் ! ஒரு புத்தகத்தின் நதிமூலம் என்ன, அர்த்தம் என்ன என்பவற்றைப் பற்றி இப்படிக் கண்ணைக் கூசும் ஒளிவட்ட விளக்கங்களுடன் புத்தகத்தின் ஆசிரியன் வலம்வரும்போது, அவனுக்கு முன்பாக எந்த புத்தகமும், எந்த படைப்பும் தனது படைப்பு ரகசியத்தைத் தற்காத்துக் கொள்ள முடியாது. அலப்பறை காட்டுகிற அந்த ஆசிரியன் தனது வாயை மூடிக்கொண்டு, அவனது புத்தகங்கள் தாமாகவே தங்களை விளக்க ஏன் அனுமதிப்பதில்லை?
ஒருமுறை ஜோஸஃப் ஹெல்லர் (Joseph Heller) அவர் எழுதிய “குட் அஸ் கோல்ட்” (Good as Gold) புதினம் குறித்து அளித்த பேட்டி எனக்கு ஞாபகம் வருகிறது. அந்தப் பேட்டியின்போது, அவர் தனது கதைமாந்தர்கள், அவர்களது உணர்வுகள், அவர்களது ஆசைகள், அவர்களது பாத்திரப்படைப்புகள், அவர்கள் அந்தக் கதையில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்பதைத் தாண்டி, பேட்டி காண்பவர் எவ்வளவு முயன்றாலும், வேறு எந்த விஷயத்தையும் பேச அனுமதிக்கவில்லை. “வெளியிலிருந்து பார்க்கும்” ஒரு இலக்கியவாதியாக தனது படைப்பை பார்ப்பதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. எவ்வளவு புத்திசாலியாக அவர் செயல்பட்டார்? நான் ஏன் அப்படி செய்யவில்லை?
ஏனெனில், உலகிலுள்ள அனைவருக்கும் பொது உரிமையான கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக நான் மன்றாடுகிறேன். கருத்துச் சுதந்திரத்தின் பகுத்தறிவுத் தன்மையைவிட, அது மனித இயல்பின் இதயமாக இருப்பதே எனது செயல்களுக்குக் காரணம் என்று என் மனசாட்சி சொல்லுகிறது. நமக்குத் தெரிந்த வரையில் இந்தப் பூலோகத்தில் நாம் மட்டும்தான் கதை சொல்லி மிருகங்கள் – உபன்னியாசம் செய்கிற, வரலாறு எழுதுகிற, வம்பளக்கிற, தத்துவம் யோசிக்கிற – இவை அனைத்தையும் நம்மை நாமே அறிந்துகொள்வதற்கான வழியாகக் காணுகிறவர்கள். நமது பேச்சுத் திறமைக்கு, அல்லது நமது பேச்சின் உள்ளடக்கத்திற்கு நமக்கு வெளியில் இருந்து வரையப்படுகிற எல்லைகள், நாம் எழுத்தாளர்களோ அல்லது மற்றவர்களோ, நமது ஆதாரத் தேவையை நசுக்க முயல்கின்றன. தங்களைப் பற்றிய கதைகளை தாங்களே மறுபரிசீலனை செய்யக்கூடாது என்று சொல்லப்படும்போது, மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படாத கதைகளின் வரையறைக்கு உள்ளாகவே வாழவேண்டும் என வற்புறுத்தப்படும்போது, கொடுங்கோலுக்குட்பட்டு துயரத்தில் தவிக்கிற வாழ்க்கையை வாழும் அவலம் நமக்கு மிக அருகாமையில் இருக்கிறது.
இந்தப் புத்தக விமர்சனம் இந்த வார இந்தியா டுடே இதழில் வந்துள்ளது. அத்ற்கு இணையாக தமிழ்ஹிந்து.காம் தளமும், ஒரு contemporary நூல் பற்றிய சூடான செய்திகளைக் கொண்டுவந்திருக்கிறது. பாராட்டுக்கள்!
பனித்துளி அவர்களின் மொழியாக்கம் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் வாக்கியங்களின் நீளத்தைக் குறைத்து எளிமையாக எழுதியிருக்கலாம்.
//சில இடங்களில் வாக்கியங்களின் நீளத்தைக் குறைத்து எளிமையாக எழுதியிருக்கலாம்.//
இது போல இன்னொருவரின் முத்திர அடையாளமாக விளங்குகிற இடியாப்ப குழப்ப வாக்கியங்களை காப்பிரைட் குறித்து கவலையில்லாமல் பயன்படுத்துகிறவர்களுக்கு என்ன பத்வா வழங்கலாம் என அரவிந்தன் நீலகண்டன் (ஏக இறைவனின் கோபமும் சாபமும் இவர் மீது நிலவுவதாக) சிந்தித்துக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
The translation seems to imitate Salman Rushdie’s writing style. The original article has the same “tempo” that is created by listing down atrocities in rhythmic style, which got end up showing lengthy sentences.
Being a fan of Salman Rushdie, I am sure that this is the first time in Tamil literature that Salman Rushdie’s article has got translated. I am not aware whether such an attempt is done in any other regional or non-English language.
The content as well as the comments that the site receives are thought provoking and well informed.
Kudos to this site.
அருமையான மொழியாக்கம். நல்ல நடை. கருத்துக்களின் செறிவால் நீளநீளமான வாக்கியங்கள் கூட சுமையாகத் தெரியவில்லை. கருத்துச் சுதந்திரம் எல்லாம் இதரர்களுக்கு மட்டுமே.. எங்கோ பார்த்த ஒரு கார்ட்டூன் அருமையாக சொல்லியது. ஒரு இஸ்லாமியத் தீவிரவாதி இனிமேலாவது இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என ஒத்துக்கொள்கிறாயா என ஒரு கையை வெட்டிக் கொண்டே கேட்பான். அதுபோலத்தான் சல்மான் ருஷ்டியின் நிலையும் இன்று. இஸ்லாமியர்களின் கணக்குப்படி இந்துக்களும் கணக்குத்தீர்க்க ஆரம்பித்திருந்தால் நம்ம ஸ்டார் ஓவியர் ஹுஸேன் எல்லாம் உயிரோடே இருந்திருக்க மாட்டார். இன்றுவரை அவர் செய்தது தவறு என போராடிக் கொண்டேதான் இருக்கிறோம், அவரது உயிரைக் குடிக்காமல். ஆனால் ருஷ்டியின் தலையை எடுக்க ஒரு கூட்டமே அலைகிறது. அவ்வளவு அமைதிமார்க்கம் அது.
அருமையான கட்டுரை. நன்றி. (மொழிமாற்றினதற்கான பல்லுடைப்பே காணோமே! )