அறியும் அறிவே அறிவு – 1

kanchi_paramacharyaருமுறை காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்கள் நான் வேலை செய்துகொண்டிருந்த சென்னை I.I.T -யில் உள்ள சிவன் கோயிலுக்கு விஜயம் செய்தபோது, அவர்களுக்கு வரவேற்புரை வழங்கும் கௌரவத்தை எனக்குக் கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் விஜயத்திற்கு சில நாட்கள் முன்பே நான் காஞ்சி மடத்திற்குச் சென்றிருந்தபோது, என்னைப் போல் அங்கு வந்திருந்த ஒருவரிடம் என்னை வேறொருவர் அறிமுகம் செய்து வைக்க, அவரோ திடீரென்று என்னிடம் ஒரு மாதிரியாகப் பேசினார். “IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ?” என்றார். வந்தவருக்கு அங்கு என்ன நடந்ததோ, ஏன் இப்படிப் பேசுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றியதே தவிர, அவருக்கு ஏதும் உருப்படியான பதில் எதுவும் நான் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். கேள்வி உருப்படியாக இருந்தால்தானே பதிலும் உருப்படியாக வர முடியும் என்றே இப்போதும் நினைக்கிறேன். ஆனாலும் அவரது கேள்வி என்னை பாதித்திருக்கக்கூடும். ஏனென்றால் அது என்னை மிகவும் யோசிக்க வைத்தது.

ஆச்சாரியார்களுக்கு நான் அளித்த வரவேற்புரையின் போது, எப்படி அங்கு வெவ்வேறு இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்காக பூமியைத் தோண்டும்போது ஒரு சிவலிங்கம் கிடைத்தது, மகா பெரியவர்கள் வழி காட்டுதலில் கவர்னர் மாளிகை அமைந்துள்ள ராஜ் பவன் ஆவணங்களில் இருந்து அந்த லிங்கத்தின் நாமம்தான் ஜலகண்டேஸ்வரர் என்று கண்டுகொண்டது, அதை அப்பைய தீட்சிதர் பூசித்ததற்கான சாத்தியக்கூறுகள் முதலான IIT கோயில் பற்றிய சில விவரங்களைக் கூறினேன். பின்பு மடத்தில் என்னை IIT பற்றி கேள்வி கேட்ட மேற்கூறிய நிகழ்ச்சியையும் விவரித்தேன். அதன் பின் நான் யோசித்து உணர்ந்த விஷயங்களையும் பின்வருமாறு கூறினேன்.

“கேள்வி கேட்டவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. பின்னரே நான் யோசித்துப் பார்க்கும்போது ஒன்றை உணர்ந்தேன். அவர் பார்த்ததில் ஒரு I-யை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி உள்ள I T-யையும் சேர்த்துப் பார்த்தால், நான்+அது என்றாகிறது. “தத் த்வம் அசி” எனும் மகா வாக்கியத்தின் படி “நான் அதுவே” என்று உணர்த்தும் அதி உன்னத நிலையைத் தரும் இடம் IIT எனக் கொள்ளலாகுமோ” என்று சொல்லி மேலும் சொன்னேன்.

“இப்படியான விளக்கத்தை அந்தக் கேள்வியைப் போலவே இன்னுமொரு மிகைப்படுத்தல் என்று நீங்கள் சொல்லலாம். ஆனாலும் உங்களைச் சுற்றிப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் ஆலமரங்கள் இருக்கின்றன. ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே; அதற்கு முதல் என்றும் முடிவு என்றும் உண்டோ? நல்லறிவை உணர்த்தும் கல்வியும் அப்படித்தானே இருக்கவேண்டும்? இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ள கல்விக்கூடமும் அத்தகைய குணத்தைத்தானே கொண்டிருக்க வேண்டும்?

banyan-treeஅது மட்டுமல்லாது, கல்விக் கூடம் அமைந்துள்ள இடத்தையும் கவனியுங்கள். ஆதி காலத்தில் வடமொழியில் “வேத ஸ்ரேணி” என்றும், தூயதமிழில் “வேள்விச் சேரி” என்றும் சொல்வார்கள் என முன்பு ராஜ்பவனின் ஒரு பகுதியாக இருந்த இந்த இடத்தை அங்கு உள்ள ஆவணங்களும் குறிப்பிடுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது இப்போதைக்கு மருவி “வேளச்சேரி” என்று ஆகியுள்ளது. ஆக அக்னி வளர்த்து அன்றைய காலத்துக் கல்வியான வேதங்கள் எல்லாம் முறைப்படி ஓதப்பட்ட கானகத்தில்தான் இக்காலக் கல்விக்கூடமும் குடி கொண்டிருப்பது மிகப் பொருத்தம் அல்லவா? முன்வினை என்பது மனிதர்கள், மற்றும் சகல சீவ ராசிகளுக்கு மட்டுமல்லாது, ஒரு இயக்கத்துக்கும் இருக்கலாம் அல்லவா?” என்றேன்.

நான் IIT என்பதற்கு ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு சற்றே மிகையான விளக்கம் கொடுத்திருந்தாலும், அன்று சொன்ன மற்ற விவரங்களைப் பாருங்கள். “வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்” என்றபடிதானே இருக்கிறது. என்றோ நடந்திருக்கக் கூடிய போதிக்கும், மற்றும் கற்கும் முயற்சிகள் காலத்திற்கு ஏற்ப நின்று பலன் கொடுத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இது போன்றதைத் தான் மகாகவி “ஆங்கோர் ஏழைக்குக் கல்வி கற்பித்தல்” என்று அதனைச் சிறப்பித்தும், சான்றோர்கள் “நெல்லைக் கொடுப்பதைவிட விதையைக் கொடுப்பது மேல்” என்றும் சொன்னார்களோ?

காலத்திற்கு ஏற்ற கல்வி, மற்றும் அறிவு என்று சொன்னேன். மூதாட்டி ஔவை சொன்னதுபோல் “கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு” என்று அறிவு வெவ்வேறு அளவினதாய் இருக்கலாம். அது தவிர கல்வியும், அறிவும் இடம், பொருள், காலம் இவைகளுக்கு ஏற்பவும் இருக்கலாம், அவைகள் காலத்தைக் கடந்தும் நிற்கலாம். ஒவ்வொருவர் திறனுக்கும், முயற்சிக்கும் ஏற்ப ஒருவரது அறிவின் முதிர்ச்சி எழுத்துக் கூட்டிப் படிப்பதாகவோ, கவிதை, கட்டுரை புனைவதாகவோ இருக்கலாம். இது தவிர ஒவ்வொருவரது தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றாற்போலும் அறிவு அமையலாம்.

ஆனாலும் நம் முன்னோர்களில் முற்றும் உணர்ந்த முனிவர்கள் கண்டறிந்து கூறிய, காலத்தால் அழியாத உண்மைகளை எவனொருவன் கேட்டு, கண்டு, உணர்ந்து அதன் வழிப்படி வாழ்கிறானோ அவனே அறிவாளிகளில் முதன்மையானவன். அத்தகையவனுடைய அறிவுதான் என்ன? அதை அடையும் வழி எப்படி? உணர்வது எப்படி? என்று பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி “உள்ளது நாற்பது” எனும் தொகுப்பில் செய்யுள் வடிவில் இயற்றியுள்ளதில் சிலவற்றை, முதன்முறையாகப் படிப்போர்க்குப் புரிவதற்காக சொற்றொடரை சற்றே பிரித்து எழுதி, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பில் நானும் எனது பணியைத் தொடர்கிறேன்.

“ஒளி உனக்கெது? பகலில் இனன் எனக்கு, இருள் விளக்கு
ஒளி உணர் ஒளி எது? கண், அது உணர் ஒளி எது?
ஒளி மதி, மதி உணர் ஒளி எது? அது அகம்
ஒளிதனில் ஒளியும் நீ, என குரு, அகம் அதே”

sri-ramanarபொருள்: உனக்குப் பிரகாசம் தரும் ஒளி எது? எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது? கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது? மதியின் ஒளியாகும். மதியை உணர்கின்ற ஒளி எது? அது “நான்”. எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது “நீ” என்று குரு சொல்ல, “நான் அதுவே” என்கிறான் சீடன்.

குரு சீடனிடம் கேள்விகள் பல கேட்டு அவனிடமிருந்து வரும் மறுமொழிகளிலிருந்து சரியான முடிவை அவனே உணர்வதாக அமைந்துள்ள செய்யுள் இது. சாதாரணமாக கல்வி கற்கும்போது குரு சில விவரங்களை விளக்கிச் சொல்ல, சீடனும் தனது அளவில் புரிந்துகொண்டு குருவைக் கேள்விகள் கேட்டு மேலும் அறிந்து கொள்வதாகத்தான் இருக்கும். இங்கோ குருவே தொடக்கத்திலிருந்து கேள்வி கேட்பதாக அமைக்கப் பட்டுள்ளதால், கற்கும் படலம் சிறிதே முதிர்ந்த நிலையில் உள்ளது என்றே நாம் கொள்ளலாம். அதனால் இந்த ஞான மார்க்கமானது நேரான வழி என்று சொல்லப்பட்டாலும், சீடன் சிறிது கவனமாக இருப்பது நல்லது. இல்லையேல் புரிதல் என்பது வெறும் ஏட்டளவில் நின்று, புத்தி பூர்வமாக மட்டும் விவரங்களைக் கிரகித்துக்கொண்டு, எதனையும் தன்னுள் உணராது, அனுபவத்தில் உண்மை நிலையை உணர இயலாது, தர்க்கம் குதர்க்கமாகி, அடி-முடி தேடிய புராணத்தில் வருவது போல பிரமனின் கதியை சீடன் அடைய நேரிடலாம். இதை மனதினில் கொண்டு, இங்கு சொல்லப்பட்டுள்ளதை நாம் மேற்கொண்டு கவனிப்போம்.

தினம் விழித்தவுடன், சாதாரணமாக நாம் செய்யும் காரியம் என்ன? கண் விழிப்பதால் நாம் எதையோ பார்க்கிறோம். சரி, அது எதுவானாலும் அதைப் பார்க்க ஒளி வேண்டும் அல்லவா? அந்த ஒளியானது காலையில் என்றால் சூரியனிடமிருந்தும், இரவு என்றால் ஏதோ ஒரு விளக்கிலிருந்தும் கிடைக்கிறது. ஒளி மட்டும் இருந்தால் போதுமா? ஒளி விழும் அந்தப் பொருளை எப்படிப் பார்க்கிறது? நமது கண்ணினால்தான். கண் மட்டும் இருந்து அது குருடாயிருந்தால்? ஆக அந்தக் கண்ணுக்குக் காணக் கூடிய சக்தியும், மூளை, நரம்பு உள்பட எல்லா உறுப்புகளும் சரியாக வேலை செய்யவேண்டும். இதுவரை நாம் பார்த்தது ஒரு காட்சிக்கு தேவையான உபகரணங்களைப் பற்றியது. எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனாலும் பல சமயம் ஒரு பொருள் நம் பக்கத்தில் இருந்தாலும், நாம் அதைக் காண்பதில்லை. ஏன்? கவனிக்கவில்லை என்போம். அதாவது நம் மனம் அதில் ஈடுபடவில்லை என்கிறோம். இதைத்தான் உள்ளுணர்வாகிய மதி என்கிறோம். கவனித்தல் என்பதும் நாம் அதை மதிக்கிறோம் என்பதும் ஒன்றேதான். ஆனாலும் ஒன்றை மதித்துப் பார்க்கும் முன்னமே, நாம் விழித்ததும் “நான்” என்ற உணர்வு அவரவர்களுக்கு வந்து விடுகிறதல்லவா? அந்த “நான்” என்ற உணர்வுதான் உண்மையான ஒளி என்று குரு சொல்ல, கல்வி கற்றுச் சிறந்த சீடனும் “நான் அதுவே” என்கிறான்.

(தொடரும்)

4 Replies to “அறியும் அறிவே அறிவு – 1”

  1. சு பாலச்சந்திரன்

    அறியும் அறிவே அறிவு மிக நன்று. தமிழில் நன்றாக எழுத முடியும் என்பதற்கு இவை போன்ற எழுத்துக்களே உதாரணம்.

    மிகவும் கேவலமாக எழுதுவோர் எண்ணிக்கை உலகு எங்கும் பெருகி விட்ட இந்த நேரத்தில் நல்ல கருத்துடன் எழுதுவோரும், படித்துப்பயன் பெறுவோரும் எண்ணிக்கையில் பெருகட்டும். இறை அருள் ராமன் போன்றோருக்கு எல்லா உதவிகளையும் செய்ய பிரார்த்தனை செய்வோம்.

  2. IIT- என்னும் சொல்லுக்கு அளித்த விளக்கம் மிகவும் அர்த்தமுள்ள ஆனந்தமூட்டும் விளக்கம்.

    தவிர, ‘தத்’ என்னும் சொல், ‘எது எல்லாவற்றிற்கும் காரணமோ, எனவே எது ஒன்றே உண்மையில் இருப்பதுவோ, அது’ என்று குறிக்கும் சொல். அந்த ‘தத்’ ‘நீயாகத்’ ‘தன்னை’ ஆக்கிக்கொண்டுள்ளது என்பதை ஆசிரியர் மாணாக்கனுக்கு உணர்த்திடும் சொற்றொடரே ‘தத்வம் அஸி’.

    இந்த உண்மை, ‘ஸ ஏவ சௌம்ய இதமக்ராஸீத், ஏகமேவாத்விதீயம், ஸ எக்ஷத பஹுச்யாம் பிரஜாயைவ’ என்னும் உபநிஷத் வாக்யத்தில் தெளிவாகிறது. இதன் பொருள், குழந்தாய்! அது மட்டுமே முதலிலிருந்தது, இரண்டாவதற்றதாய்; அது விரும்பியது, பலவாவேன் என.

    இந்த உண்மையை மனத்தில் இருத்தியவாறே மட்டும் நாம் செயல்பட்டால் போதும். நாம், ‘அது’ எந்த நோக்கத்திற்காகத் தன்னையே பலவாக்கிக்கொண்டதோ, அந்நோக்கம் நிறைவேற நமது பங்கை அளித்துவிடுவோம் என்பது உறுதி. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சமே.

  3. அய்யன்மீர், மதி என்றால் புத்தி என்றும் பொருள் கொள்ளலாமே(மதியால் வித்தகனாகி …….)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *