சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நாதஸ்வர கச்சேரி – ஓர் அறிவிப்பு

shiek-chinna-maulana-courtesy-the-hindhuநாதஸ்வரம் தமிழ் நாட்டின் தொன்மையான குழலிசைக் கருவி. தென்னிந்தியாவின் முக்கியமான ஒரு வாத்தியக் கருவி. நாதஸ்வர இசை இல்லாமல் தமிழ் நாட்டின் கோவில்களிலும், வீடுகளிலும் எந்தவித மங்கல நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. நாதஸ்வர இசையுடன் தான் தென்னிந்தியாவின் எந்தவொரு மங்கலமான மகிழ்ச்சிகரமான விசேஷங்களும் துவங்குகின்றன. தென்னிந்தியக் கோவில்களுடனும், தென்னிந்தியக் கலாச்சாரத்திலும் நாதஸ்வரமும் தவிலும் போல வேறு எந்த இசைக் கருவியும் இரண்டறக் கலந்ததில்லை. ஆண்டவனைத் துயில் எழுப்புவதில் இருந்து இரவு கோவில் நடை சாத்தும் வரை அனைத்து முக்கிய சடங்குகளும் நாதஸ்வர இசை இன்றி அமைவதில்லை. தென்னிந்தியாவின் இசையைப் பேணி வளர்த்ததில் கோவில்களின் பங்கு முக்கியமானது. கோவில்களைச் சார்ந்து நாதஸ்வர இசை பெரிதும் வளர்ந்தது. மங்கலமான நாதஸ்வர இசையில்லாம திருமணங்கள் இல்லை. நாதஸ்வரம் கம்பீரமான ஒரு இசை நாதஸ்வரம். குழல், திமிரு, அனசு என்று மூன்று பாகங்களை உடைய இந்த அற்புதமான இசைக் கருவி ஆச்சா என்ற மரத்தில் இருந்து செய்யப் படுவது. ஏழு துளைகள் அமைந்தது நாதஸ்வரக் கருவி. இது தவிர கீழ் பக்கத்தில் மேலும் ஐந்து துளைகளையும் உடையது. கெண்டை என்னும் மேல் புறத்தில் எழுப்பப் படும் குழல் ஒலி, கை விரல்களால் துளைகளை அடைத்தும், விடுத்தும் வாசிக்கப் பட்டு கம்பீரமான ஒலியை எழுப்பக் கூடிய வாத்யம் நாதஸ்வரம். தென்னிந்தியாவின் முக்கியமான இசைக் கருவி நாதஸ்வரம். கர்நாடாக இசை மரபின் முக்கியமான குழலிசைக் கருவி நாதஸ்வரம்.

தமிழ் நாட்டில் பல நாதஸ்வர இசைச் சக்ரவர்த்திகள் கொடி கட்டிப் பறந்தனர். காருகுறிச்சி அருணாச்சலம், திருவாடுதுறை டி என் ராஜரத்தினம் பிள்ளை, திருவீழிமலை சுப்ரமணியம் பிள்ளை, சேதுராமன் பொன்னுச்சாமி சகோதரர்கள் ஆகியோர் வரிசையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு நாதஸ்வரம் வாசிக்க வந்து கோடிக்கணக்கான ரசிகர்களை தன் நாதஸ்வர இசையால் மயக்கியவர் பத்மஸ்ரீ டாக்டர் ஷேக் சின்னமவுலான சாகிப் அவர்கள். ஒரு காலத்தில் தமிழ் நாடு முழுவதும் நாதஸ்வர இசையில் சொக்கிக் கிடந்தது. நாதஸ்வரக் கச்சேரிகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. பல மைல் தொலைவு நடந்தும் வண்டி கட்டியும் சென்று பிரபலமான நாதஸ்வர இசைக் கலைஞர்களின் இசையே இரவு முழுவதும் ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்திருந்தனர். நாதஸ்வர இசையின் புகழினால் கவரப் பட்டு தமிழ் நாட்டில் கொஞ்சும் சலங்கை, தில்லானா மோகானாம்பாள் ஆகிய இரண்டு வெற்றிகரமான திரைப் படங்கள் எடுக்கப் பட்டு ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

சின்ன மவுவலானா சாகிப் அவர்கள் இளம் வயதிலேயே நாதஸ்வர இசையினால் கவரப் பட்டு அந்த இசைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் பகுதியின் பிரபலமான இசை மேதையாகன சாத்தலூர் ஷேக் நபி சாகிப் அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர் ஷேக் சின்ன மவுலான சாகிப் அவர்கள். முதலில் தன் தந்தை காசிப் சாகிப்பிடமும், பின்னர் வித்வான் ஆதம் சாகிப்பிடமும் நாதஸ்வர இசையைக் கற்றுக் கொண்ட சின்ன மவுலானா பின்னர் தஞ்சாவூர் பாணி நாதஸ்வரத்தையும் கற்றுக் கொண்டார். 1960ம் ஆண்டு முதல் தமிழ் நாட்டில் வாசிக்க ஆரம்பித்த ஷேக் சின்ன மவுலானா அவர்கள் தமிழ் நாட்டு மக்களின் உள்ளத்தை தன் இசையால் கொள்ளை கொண்டவர் ஆவார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாளிடம் கொண்ட அளவற்ற பக்தியின் காரணமாக ஸ்ரீரங்கம் கோவிலின் அருகிலேயே தன் இல்லத்தை அமைத்துக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீரெங்கநாதருக்காக தன் நாதஸ்வர இசையைச் சமர்ப்பித்தவர். காவேரிக்கரையிலேயே தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்து நாதஸ்வரக் கலையின் வளர்ச்சிக்காகவும், ரெங்கநாதப் பெருமாளின் மீதான தன் பக்தியிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் இசை மேதை ஷேக் சின்னமவுலானா சாகிப் அவர்கள். நாதஸ்வரக் கலையினை மேலும் வளர்க்கவும் அடுத்த தலைமுறைக்கு இந்த இசையை எடுத்துச் சென்று வளர்க்கும் பொருட்டும் சாராதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரமம் என்ற நாதஸ்வரப் பயிற்சிப் பள்ளியை ஸ்ரீரங்கத்தில் தொடங்கி நடத்தி வந்தார். அந்த மேதையின் பயிற்றுவிப்பில் பல்வேறு பிரபலமான அடுத்த தலைமுறை நாதஸ்வரக் கலைஞர்கள் அந்தப் பள்ளியில் உருவானார்கள். அவர்களுள் முக்கியமான நாதஸ்வர இசைக் கலைஞர்கள் ஷேக் சின்ன மவுலானா அவர்களின் பேரன்களாகிய காசிம் மற்றும் பெட்ட பாபு, சின்ன பாபு ஆகியோர். மறைந்த மாமேதை ஷேக் சின்ன மவுலானா அவர்களின் இசையின் வாரிசுகளாக விளங்கி உன்னதமான நாதஸ்வரக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்று உலகம் எல்லாம் பரப்பி நாதஸ்வர இசை ரசிகர்களை மகிழ்வித்து வருபவர்கள் ஷேக் சின்ன மவுலானா காசிம் மற்றும் பாபு சகோதரர்கள்.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் கரவாடி கிராமத்தைச் சேர்ந்த காசிம், பாபு சகோதரர்கள் இளம் வயதில் இருந்தே தன் தாத்தா ஷேக் சின்னமவுலானா அவர்களால் வளர்க்கப் பட்டு நாதஸ்வர இசையைக் கற்றுத் தேர்ந்த பேறு பெற்றவர்கள். முன்னூறு வருடங்களாக தென்னிந்தியாவில் நாதஸ்வர இசையைப் பேணி வளர்த்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் இவர்கள். தன் தாத்தா ஷேக் சின்னமவுலானா அவர்களுடன் சேர்ந்து இந்தியா முழுவதும் மற்றும் உலக நாடுகள் எல்லாம் பயணித்து தன் தாத்தாவுடன் நாதஸ்வர இசைக் கச்சேரிகளை அளிந்து வந்துள்ளனர். கடந்த 12 வருடங்களாக இருவரும் இணைந்தே கச்சேரிகள் நடத்தி உலகமெங்கும் உள்ள நாதஸ்வர ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்து வருகிறார்கள் காசிம், பாபு சகோதரர்கள். இருவரும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் நிலையங்களின் ஏ தர கலைஞர்களாக இருந்து வருகிறார்கள். அகில இந்திய வானொலியின் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை அளித்து அகில இந்திய அளவிலும் பெரும் புகழ் பெற்றவர்கள். இசை நிகழ்ச்சிகளுடன் நாதஸ்வரம் தொடர்பான விரிவுரைகளையும் அளித்து வருகிறார்கள்.
தங்களது பாட்டனாருடன் இணைந்தும் தாங்கள் இருவருமாகச் சேர்ந்தும் ஏராளமான இசைத் தட்டு ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஸ்ரீரெங்கநாதருக்கு தன் இசையை அர்ப்பணித்தார் ஷேக் சின்ன மவுலானா அவர்கள். அவரது பேரன்களாகிய காசிம், பாபு சகோதரர்கள் திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா ஆலயத்தின் சிறப்பு வித்வான்களாக நியமிக்கப் பட்டிருப்பவர்கள். கோவிலின் விசேஷங்களுக்கு சிறப்பு நாதஸ்வரம் வாசிக்கும் உரிமை படைத்தவர்கள். காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளினால் கவுரக்கிப் பட்டவர்கள். மேலும் சிருங்கேரி சாராத மடத்தின் ஆஸ்தான வித்வான்களும் ஆவார்கள். ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் ஆஸ்தான வித்வான்களாகவும் காசிம், பாபு சகோதரர்கள் நாதஸ்வரம் வாசித்து ஆண்டவனின் ஆன்மீகத் திருப்பணிகளில் ஈடு பட்டு வருகிறார்கள்.

தங்களது தாத்தா ஆரம்பித்து வைத்த நாதஸ்வரப் பள்ளியான சாரதா சங்கீத நாதஸ்வர ஆசிரமம் என்ற பள்ளியை, பாரம்பரியமும், மங்கல மேன்மையும், தொன்மையும் உடைய இந்த கம்பீரமான இசையினை அழியாமல் காக்கவும் அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் உன்னத நோக்கத்துடனும் நடத்தி வருகிறார்கள். மேலும் தங்கள் தாத்தாவின் பெயரில் டாக்டர் சின்னமவுலானா மெமோரியல் டிரஸ்ட் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பின் மூலம் நாதஸ்வர இசையை உலகெங்கும் பரப்பி வருகிறார்கள். இந்த அமைப்பின் மூலம் இளம் இசைக்கலைஞர்களுக்கு உதவி செய்து ஊக்குவித்து வருகிறார்கள். பி எஸ் ஸி பிசிக்ஸ் பட்டப் படிப்பு முடித்த சகோதரர்கள் இருவரும் இந்திய அரசின் பல்வேறு விருதுகளாலும் கவுரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கலா சரஸ்வதி, கலைமாமணி, பொங்கு தமிழ் அமைப்பின் விருது போன்ற எண்ணற்ற விருதுகளால் கவுரவிக்கப் பட்டிருக்கின்றார்கள். தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் தமிழக அரசின் கலாச்சாரத் துறையின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப் பட்டுப் பணிபுரிந்திருக்கிறார்கள். தங்களது உன்னதமான நாதஸ்வர இசை வித்வத்தினால் உலகமெங்கிலும் உள்ள இசை ரசிகர்களை மகிழ்வித்து வரும் காசிம், பாபு சகோதரர்கள், அமெரிக்க வாழ் இசை ரசிகர்களையும் மகிழ்விக்க வட அமெரிக்கப் பயணம் ஒன்றினை வரும் ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ள இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக வரும் ஜூன் மாதம் 19, 20 21 தேதிகளில் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி நகரமான ஃப்ரீமாண்ட் இந்துக் கோவிலில் தங்கள் கச்சேரிகளைஅளிக்க இருக்கிறார்கள். அன்று பாலாஜி திருமண உற்சவத்திலும் கோவில் நிகழ்ச்சிகளிலும் வாசிக்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்த விபரங்களுக்கும், சகோதரர்களின் நாதஸ்வர நிகழ்ச்சிகளைப் பிற நகரங்களில் ஏற்பாடு செய்வதற்கும் கீழ்க்கண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும். இந்த நிகழ்ச்சி ஃப்ரீமாண்ட் கோவில் பக்தர்களும், அன்பர்களும் பாரதி தமிழ் சங்கமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

வளைகுடாப் பகுதி நாதஸ்வர, கர்நாடக இசை ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷேக் சின்னமவுலானா காசிம், பாபு சகோதரர்களின் அற்புதமான நாதஸ்வர இசைக் கச்சேரியினைக் கேட்டு மகிழுமாறு அன்புடன் அழைக்கப் படுகிறார்கள். அனுமதி இலவசம்.

நிகழ்ச்சி குறித்தான மேலதிகத் தகவல் பெற விரும்புபவர்களும்,நன்கொடை அளிக்க விரும்புபவர்களும், பிற நகரங்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய விரும்புவர்களும் கீழ்க்கண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும்: கீழ்க்கண்ட நாதஸ்வர கச்சேரிகள் வளைகுடாப் பகுதியில் வரும் ஜூன் 15 தொடங்கி ஜூன் 23 வரை நடை பெற உள்ளன. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்

One Reply to “சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நாதஸ்வர கச்சேரி – ஓர் அறிவிப்பு”

  1. ஒரு அறிவிப்புக்கு இத்தனைதூரம் மெனக்கெட்டு தகவல்களை அளித்துள்ள திருமலை அவர்களுக்கு நன்றி. இதை சேக் சின்ன மவுலானா எனப் பெயரிட்டே இதைப் பதிப்பித்திருக்கலாம். அருமையாக இருந்தது அவரைப் பற்றிய தகவல்கள். இஸ்லாம் இசைக்கு எதிரி என வஹாபிக்கள் குதிக்கும் இந்த காலகட்டத்தில்தான் மதநல்லினக்கத்தின் இலக்கணமாக வாழ்ந்து வருகிறார் சேக் சின்ன மவுலானா அவர்கள். நாதஸ்வர இசையை இலகெங்கும் பரப்பும் அவர் நீடூழி வாழட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *