நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!

பாரத விண்வெளியாளர்கள் வெற்றிகரமாக “சந்திரயான்-1” என்னும் விண்கலத்தை விண்வெளியில் நிலவை நோக்கிச் செலுத்தியுள்ளார்கள். தமிழ் இந்து.காம் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. “பாரதம் போன்ற வளரும் நாடுகளுக்கு சந்திர மண்டல ஆராய்ச்சியெல்லாம் தேவையா? தரையில் மக்கள் கஷ்டப்படும் போது இந்த விண்வெளி ஆராய்ச்சி விரயமல்லவா” எனும் கேள்விகளை சிலர் எழுப்பலாம். உண்மையில் இந்த சந்திரயான் மூலம் நமது பூமியின் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். பனிப்போரின் போது விண்வெளி ஆராய்ச்சி ஏறக்குறைய சோவியத்துக்கும் அமெரிக்காவுக்குமான கௌரவ பிரச்சனையாகவும் தொழில்நுட்பப் போட்டியாகவும் திகழ்ந்தது. ஆனால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி எப்படி விண்வெளி தொழில்நுட்பத்தை மண் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்தலாம் எனும் பார்வையிலேயே திட்டமிடப்பட்டுள்ளது. இது விக்ரம் சாராபாயால் தெளிவாக வலியுறுத்தப்பட்ட இலட்சியமாகும். சந்திரயானும் இதற்கு விதிவிலக்கல்ல.

உதாரணமாக ஒரு நாட்டின் முன்னேற்றத்தை முக்கியமாக தீர்மானிப்பது அந்நாட்டில் கிடைக்கும் எரிசக்தி வளமே ஆகும். நிலவில் ஹீலியம்-3 கிடைக்கும் இடங்களை நுண்ணறியப் போகிறது சந்திரயான். பாரதத்தின் தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம் “பாரதத்தின் ஒரு வருடக் கால ஆற்றல் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய நிலவிலிருந்து கிடைக்கும் 25 கிலோ ஹீலியம்-3 போதுமானது” என கூறுகிறார். இந்த ஹீலியம் மூலமாக கிடைக்கும் சக்தியானது சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. நிலவு மீது சந்திரயான் மேற்கொள்ளப்போகும் ஆராய்ச்சி மூலமாக நமக்கு இந்த எரிபொருள் மூலம் சந்திரனில் எங்கெங்கு கிடைக்கும் என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். தொடக்க கால ஆராய்ச்சிகளின் போது நிலவில் நீர் இல்லை என கருதப்பட்டது. ஆனால் 1998-இல் நாசா அனுப்பிய லூனா ப்ராஸ்பெக்டர் எனும் சந்திரனை ஆராயும் ஆய்வுக்கலம் நியூட்ரான் ஸ்பெக்ட்ரோ மீட்டர் கருவி மூலம் நிலவின் துருவப்பிரதேசங்களில் நீர் இருக்கக் கூடும் என தெரிவித்தது. நிலவில் ஆட்களை இறக்கி நடத்தும் ஆராய்ச்சிகளை விட நுண்ணோக்கு கருவிகள் மூலம் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் நல்ல பலன் தரும் என்பதும் இதன் மூலம் தெரியவந்தது. இந்நிலையில் சந்திரயான் அனுப்பும் தொலைக்கட்டுப்பாட்டு நுண்ணோக்கு ரோபோ கருவியான “இம்பாக்டர்” மூலம் நிலவின் நிலத்தடி நீர் மற்றும் துருவ நீர் குறித்த ஆராய்ச்சிகளையும் சந்திரயான் மேற்கொள்ளும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சந்திரயானின் மற்றொரு தனிச்சிறப்பு அதன் குறைவான செலவு. வளர்ந்த நாடுகள் அனுப்பும் சந்திர ஆராய்ச்சிகளுக்கு தரத்தில் சற்றும் குறையாமல் அதே நேரத்தில் அவற்றைக் காட்டிலும் செலவு குறைவாக உருவாக்கப்பட்டுள்ளது சந்திரயான். 2002 களிலேயே திட்டமிடப்பட்ட சந்திரயான் இன்று வெற்றிகரமாக விண் நோக்கி பாய்ந்துள்ளது. அது எல்லா நலங்களையும் புவி வாழும் மானுட குலத்துக்கு செய்யட்டும் என தமிழ் இந்து.காம் குழு பாரத விண்வெளி ஆராய்ச்சி கழகத்தை அனைத்து பாரத மக்களுடனும் இணைந்து வாழ்த்துகிறது.

சந்திரயான் குறித்து தமிழ் குழந்தைகள் தெரிந்து கொள்ள இரண்டு வண்ணப் படங்களை உருவாக்கியுள்ளது www.தமிழ்இந்து.காம். இவற்றை தரவிறக்கம் (download) செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். பள்ளிகளில் போஸ்டர்களாக அளியுங்கள்:

படம்-1
படம்-2

10 Replies to “நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!”

  1. “சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்” என்று பாடிய பாரதியின் கனவை நனவாக்கி இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை மகத்தானது. இந்தியர் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய விஷயம்.

    சில வருடஙகள் முன் வாஷிங்டன் நகரத்தில் உள்ள நாஸா அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தேன் – மிக அருமையான அருங்காட்சியகம் அது. அப்போலோ விண்கலம் வடிவமைக்கப் பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவின் அனைத்து மக்களும் அதில் ஆவலுடன் பங்கேற்றது பற்றிய விவரணங்கள் அங்கு உள்ளன – பள்ளிக் குழந்தைகள், சிறுதொழில் மையங்கள், பல தனியார் கம்பெனிகள் அனைத்திலும் அப்போலோ பற்றிய உற்சாகம் எவ்வாறு தொற்றிக் கொண்டிருந்தது என்று அதன் மூலம் அறிய முடிந்தது.

    அதனுடன் ஒப்பிடுகையில் இந்திய அரசு இந்த மாபெரும் விண்வெளி சாதனை பற்றி வெகுஜன அளவில் எந்த உற்சாகத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.. பள்ளி, கல்லூரிகளில் கூட சந்திரயான் பற்றி பேசப் பட்டது மிகக் குறைவு. தமிழ்ஹிந்து.காம் உருவாக்கியிருக்கும் போஸ்டர் போன்று பல்லாயிரம் போஸ்டர்கள் நாடெங்கும் உள்ள பள்ளிகளுக்கு அரசே அளித்திருக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சி என்பது ஏதோ அரசு நிறுவன சமாசாரம் என்று இல்லாமல் அனைத்து மக்களும் உற்சாகம் கொள்ளும் வண்ணம் ஊடகங்களும், அரசும் செயல்பட வேண்டும்.

  2. மதிப்புக்குரிய அரவிந்தன் நீலகண்டன்,

    இன்று (அக்டோபர் 22, 2008) இந்தியா தனது முற்போக்குப் பொறி நுட்ப ஏவுகணையை வெற்றிகரமாக அனுப்பி விண்ணுளவி ஒன்றைத் தூக்கிக் கொண்டு முதல் நிலவுப் பயணத்தைத் துவக்கியது உலக அரங்கிலே ஓர் மகத்தான விண்வெளி வரலாற்றுச் சாதனை.

    பாரத நாட்டை ஏவுகணைப் படைப்புப் பொறி நுணுக்கத்தில் உலக மையத்திலே உன்னத பீடத்தில் ஏற்றிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தேசீயத் திலகராய் அணையாத தீபமாய்ப் பாரதத்தில் ஒளிவீசுகிறார்.

    அடுத்து பாரத நாட்டின் விண்வெளித் தீரர்கள் வெண்ணிலவிலும் செந்நிறச் செவ்வாய்க் கோளிலும் தடம் வைக்கும் காலம் நெருங்கி விட்டது என்பதற்கு இந்நிகழ்ச்சி முன்னோடி வெற்றியாகும்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன், கனடா

  3. Dear Editorial Board,
    Thanks a LOT for writing & recording the Great Chandrayan programme. In all our original vedic sanskrit verses, ” CHANDRA ” is mentioned and our efforts to know more is always a worthwile pursuit. If possible, kindly provide a link for all the CHANDRAYAN related links for regular & devout readers. Thanks for the posters. I have printed few for my family.
    Greetings & Good wishes,
    Anbudan,
    Srinivasan.

  4. இது चंद्रयान – சந்திரயான் என்று இருத்தல் வேண்டும்

  5. First time I am seeing the correct word in Tamil for Chandrayaan. every tamil media prints it as Chandraayan and even the TV news readers pronounce it so. Good that your site is following the correct spelling. But in the downloaded images, the spelling is wrong

  6. சந்திர‌னை நோக்கி செயற்கைக்கோளை செலுத்தி வெற்றிக‌ர‌மாக‌ சாத‌னை படைத்துள்ள‌ன‌ர் பார‌த‌ விஞ்ஞானிகள். பார‌த‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் நெஞ்ஞை நிமிற்தி பெருமைப்ப‌ட‌வேண்டிய‌ விஷ‌ய‌ம்.

    ஏற‌த்தாள‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் ச‌ந்திர‌னைச் சுற்றிவ‌ரும் இந்த‌ செய‌ற்கைக்கோள், ச‌ந்திர‌னில் இருக்கும் தாதுப்பொருள்க‌ள் முத‌லான‌ இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளை அராய்ந்து த‌க‌வ‌ல்க‌ள் த‌ரும்.

    விஞ்ஞான‌ ஆராய்சி ஒருபுர‌மிருக்க‌, ம‌ற்றுமொறு முக்கிய‌மான‌ குறிக்கோளும் உண்டு. அது விண்வெளித்துறையில் கிடைக்கும் வ‌ணிக‌ வாய்ப்புக‌ள். ஒரே வாகனத்தைக்கொண்டு ஒன்றுக்கும் அதிக‌மான‌ செய‌ற்கைக்கோள்க‌ளை விண்ணில் செலுத்தும் பாரத நாட்டின் தொழில்நுட்ப‌ங்க‌ளால், ஐரோப்பிய‌/தென‌மெரிக்க‌ நாடுக‌ளின் செய‌ற்கைக்கோள்க‌ளை விண்ணில் செலுத்த‌ வியாபார‌ரீதியான‌ வாய்ப்புக‌ள் ந‌ம‌க்கு கிடைத்திருக்கின்ற‌து.

    இதற்கு அடுத்த கட்டமாக‌ இப்போது சாதித்திருக்கும் சந்திரனுக்குச் செல்லும் வாகனம்.

    புராண‌கால‌ம்தொட்டு ச‌மீப‌ இல‌க்கிய‌ங்க‌ள்வ‌ரை ந‌மக்கு ஊட்ட‌ப்ப‌ட்ட சந்திர மண்டலத்தியல் கண்டுதெளியும் க‌ன‌வுக‌ள் ந‌ன‌வாக‌த்தொட‌ங்கியிருக்கிற‌து. பாரத நாட்டின் விண்வெளி வீரர்கள் சந்திரனில் காலடி பதித்து நமது தேதியக்கொடியை நட்டுவைக்கும் காலம் வெகுதூரமில்லை.

    அன்புட‌ன்
    பாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *