மாயா- மஹ்மூத்- மகாத்மா
உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி சில தினங்களுக்கு முன்னர் காந்திஜியை “வேஷதாரி” என்றார். எதிர்பார்த்தபடியே ஊடகங்கள் அதைப் பெரிது படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியும் அதற்கே தெரிந்த காரணங்களுக்காக வெறும் முனகலோடு தன் எதிர்ப்பை நிறுத்திக் கொண்டது. ஆனால் இதே வார்த்தையை பா ஜ க தலைவர் யாராவது சொல்லியிருந்தால், ஊடகங்களும் காங்கிரஸ் கட்சியும் எவ்வாறு நடந்து கொண்டிருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால், சிறுபான்மையினர் கமிஷனின் முன்னாள் தலைவரான டாக்டர் தாஹிர் மஹ்மூத் அவர்கள் மாயாவதிக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தேசப் பிதா காந்தியை அவமதிப்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும், அவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தேர்தலில் நிற்கத் தடை செய்ய வேண்டும் என்றும் அதற்கேற்றவாறு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது சட்டக் கமிஷனில் அங்கத்தினராக இருக்கும் டாக்டர் தாஹிர் மஹ்மூத் அவர்கள் “தேச அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971” – லும் “மக்கள் பிரதிநிதிச் சட்டம், 1951” -லும் தேவையான திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, அரசியல் சட்டம், தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவைகளுடன் தேசத் தந்தையையும் சேர்க்கவேண்டும் என்று விரும்புகிறார்.
“தேசத் தந்தை” என்கிற பட்டம் காந்திஜிக்கு வழக்கில் வந்துவிட்டாலும், மற்ற நூற்றுக்கணக்கான தலைவர்களும், அவர்களின் ஆயிரக் கணக்கான தொண்டர்களும் சுதந்திரப் போராட்டத்தில் செய்த தியாகங்களையும் நாம் குறைவாக மதிப்பிட முடியாது. உண்மையில் சொல்லப் போனால், சுதந்திரம் பெற்றுத் தந்தத்தின் ஏகபோக பெருமை காந்திஜிக்கு மட்டுமே உரியதல்ல; அவருக்கு முன்பும், அவர் காலத்திலும் பலர் செய்த தியாகத்தின் கனியாகவே சுதந்திரம் கிடைத்தது என்பது தான் இந்திய சமுதாயத்தின் பெரும்பான்மைக் கருத்தாக இருக்கிறது. எனவே காந்திஜி ஒருவரின் மதிப்பை மட்டும் பாதுகாப்பது என்பது சரியான முடிவாக இருக்க முடியாது. மேலும் தேசியச் சின்னங்களுடன் தலைவர்களை சமமாகப் பாவிப்பதும் தவறானதாகும். ஏனென்றால் தலைவர்கள் பொது மக்களின் விமரிசனங்களுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
விமரிசனம் செய்வது வேறு; அவமதிப்பது வேறு. ஆகையினால் “தேசத் தலைவர்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம்” என்று வேண்டுமானால் ஒரு சட்டம் கொண்டு வரலாம். ஆனால் அச்சட்டம் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனென்றால் தேசத் தலைவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதிலும், அவதூறுகளிலிருந்து விமரிசனங்களை வேறுபடுத்துவதிலும் பிரச்சனைகள் வரும். மேலும் இது போன்ற ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன் நீண்ட விவாதங்கள் செய்து ஒரு ஏகோபித்த முடிவு ஏற்படுவது என்பது இயலாத காரியம்.
அப்படியே சட்டம் தாக்கல் செய்வதாக வைத்துக் கொண்டாலும், தற்போது “தேச அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971” செயல்படுத்தப்படும் விதத்தைப் பார்க்கும்போது, இந்தப் புதிய சட்டமும் முறையாக செயல்படுத்தப் படுமா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.
கொடிக்கு அவமரியாதை, ராணுவத்தினர் மீது தாக்குதல்
கடந்த ஏப்ரல் 25-ம் தேதியன்று “தமிழ் தேசிய விடுதலைக் கட்சி” மற்றும் “தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி” ஆகிய பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்த குண்டர்கள், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இந்திய அரசாங்கத்தின் மீது எதிர்ப்பு தெரிவிக்கும் சாக்கில், இந்திய தேசியக்கொடியை தீ வைத்து எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் பதினெட்டு நபர்களும், தஞ்சாவூரில் ஏழு நபர்களும், கோயமுத்தூரில் எட்டு நபர்களும் தேசியக் கோடியை எரிக்கும் முன்னரும், ஈரோடில் நான்கு நபர்கள் தேசியகொடியை எரித்த பின்னரும் போலீசாரால் கைது செய்யப் பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களின் மீது இ.பி.கோ. சட்டம் 147, 188 ஆகிய பிரிவுகளின் கீழும், தேச அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ன் பிரிவு 2-இன் கீழும் வழக்கு பதிவு செய்தனர் போலீஸார்.
இச்சந்தர்ப்பத்தில் “தமிழ் தேசிய இயக்கம்”, “தமிழர் இளைஞர் இயக்கம்”, “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்”, “பெரியார் திராவிடர் கழகம்” மற்றும் “சமூக விடுதலைக்கான மக்கள் ஐக்கியம்” (PUCL ) ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ‘தொண்டர்கள்’ கோயமுத்தூர் அருகே நிலாம்பூரில் கடந்த மே மாதம் இரண்டாம் தேதியன்று நம் ராணுவ வாகனங்களைத் தாக்கிய சம்பவத்தை நினைவு கூர்வது முக்கியமான ஒன்று. இந்தப் பயங்கர அராஜக சம்பவத்தில் நூற்றுக் கணக்கான குண்டர்கள் பங்கு கொண்டாலும் நாற்பத்தி நான்கு நபர்கள் மட்டுமே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்; அதில் மூவர் மீது மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நம் பாரத தேசத்தின் இறையாண்மையையும், எல்லைகளையும் பாதுகாப்பவர்கள் ராணுவத்தினர்; அவர்களை மரியாதையோடும், அன்போடும் நடத்துவதென்பது இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை மட்டுமல்ல, தார்மீக நெறியும் ஆகும். ஆனால் தேச விரோதப் பண்பே இரத்தமாக ஓடும் நரம்புகளைக் கொண்ட இந்தப் பிரிவினைவாத இயக்கங்களின் குண்டர்கள் ராணுவத்தைத் தாக்கியதிலும், தேசியக்கொடியை எரிக்க முயன்றதிலும் ஆச்சரியம் இல்லை.
நீதிமன்றத்தை எதிர் கொள்தலும் ஜாமீன் பெறுதலும்
தேசியக்கொடி எரிப்பு வழக்கில் கோயமுத்தூரைச் சேர்ந்த எட்டு குண்டர்களின் ஜாமீன் மனு ஜூன் 9-ம் தேதியன்று நீதியரசர் ரகுபதி அவர்கள் முன்னிலையில் வந்தது. அந்த எட்டு நபர்களும் தங்கள் வீடுகளின் வாசலில் தினமும் காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை ஒரு வாரத்திற்கு தேசியக்கொடியை ஏற்றிவைக்கவேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கினார் நீதிபதி. அந்த எட்டு பேரில் மூன்று நபர்கள் அந்தக் “கடுமையான” நிபந்தனையை ஏற்க மறுத்து, மறுபரீசிலனை செய்யுமாறு புதிய மனு ஒன்றை ஜூன் 23-ம் தேதியன்று நீதியரசர் ரகுபதி அவர்களின் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.
அவர்களுக்காக வழக்காடிய துரைசாமி என்ற வழக்குரைஞர் (இவர் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்) “தேசியக்கொடியை எரிப்பது போன்ற போராட்டங்கள் தமிழகத்திற்குப் புதியதல்ல. ஏற்கனவே நடந்துள்ளது தான். 1957-ம் ஆண்டு கூட பெரியார் ஈ. வே.ரா. அவர்கள் தலைமையில் அரசியல் சட்டம் எரிப்புப் போராட்டம் நடந்துள்ளது” என்று தன கட்சிக்காரர்கள் செயலுக்கு ன்=-நியாயம் கற்பிக்க முனைந்தார். அதை ஏற்க மறுத்த நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
பின்பு மீண்டும் ஜூலை ஒன்றாம் தேதி மனு விசாரணைக்கு வந்த போது வக்கீல் துரைசாமி, “ஜாமீன் நிபந்தனை எங்கள் கட்சிக்காரர்களின் அடிப்படை உரிமைகளுக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் ஊறு விளைவிப்பதாக இருக்கிறது. மேலும் அவர்கள் வீட்டின் வாசலில் தேசியக் கொடியை ஏற்ற அவர்கள் மனம் ஒப்பவில்லை. தங்கள் மனசாட்சி இடங்கொடாத ஒரு செயலை செய்ய அவர்கள் விரும்பவில்லை. எனவே கொடியேற்ற அவர்களை நிர்பந்திக்காமல் ஜாமீன் நிபந்தனையை மாற்ற வேண்டும்” என்று வழக்காடினார். ஆனால் நீதிபதி ரகுபதி அவர்கள் அதை ஏற்க மறுத்து, “ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படைக் கடமைகள் இருக்கின்றன. அந்த அடிப்படைக் கடமைகளைச் செய்யாமல் அடிப்படை உரிமைகளையோ, கருத்துச் சுதந்திரத்தையோ எதிர்பார்ப்பது தவறு” என்று சொல்லி மனுவைத் தள்ளுபடி செய்தார். பின்னர் ஒரு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கும், மூன்று மாதத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றத்திற்கும் உத்திரவிட்டார். கடைசியில், “அரசியல் சட்டம் 51A பிரிவில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை கடமைகள் செயலாற்றப் படுவதற்கு எதுவாக சட்டம் இயற்றப் படவேண்டும் என்று அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி உத்தரவிட்டார்.
இதனிடையே கோயமுத்தூரில் நடந்த ராணுவ வாகனங்களின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதான நபர்களில் பத்து பேர்களின் ஜாமீன் மனுவும் ஜூன் மாதம் 23-ம் தேதியன்று நீதியரசர் ரகுபதி அவர்கள் முன்னிலையில் வந்தது. அவர்களுக்குத் தலா பத்தாயிரம் ரூபாயும் அதே தொகைக்கான மற்றொரு ஜாமீனும் கட்டச் சொல்லி, மேலும் கோவையில் உள்ள ஒரு அனாதைகள் இல்லத்தில் சேர்ந்து ஒரு வார காலம் தினமும் மூன்று மணிநேரம் “சமூக சேவை” செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார்! ஒரு வாரம் கழித்து அவ்வில்லத்தின் தலைவரிடம் சான்றிதழ் வாங்கி பல்லடம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு அளித்தார்.
சட்டமும் நீதிமன்றமும்
தேச அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் படி, “பொது இடங்களிலோ, மற்ற இடங்களிலோ, பொதுப்பார்வை முன்னிலையில், எரித்தோ, கசக்கியோ, கிழித்தோ, கீழே போட்டு மிதித்தோ, அசிங்கப்படுத்தியோ அல்லது வேறு எவ்வாறேனும் சேதப் படுத்தியோ, அல்லது தகாத சொற்கள் சொல்லியோ, வார்த்தைகள் எழுதியோ, அல்லது வேறு பல தகாத நடவடிக்கைகளினாலோ, தேசியக்கொடியை அவமரியாதை செய்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப் படும்”
அவதூறாக ஒரு வார்த்தை பேசினாலே தண்டனை உண்டு என்கிறபோது, கொடியை எரிப்பதோ, எரிக்க முயல்வதோ எவ்வளவு பெரிய குற்றமாகும்! சொல்லப்போனால் எரிப்பதற்கும், எரிக்க முயல்வதற்கும் ஒன்றும் வித்தியாசம் கிடையாது. காவல் துறையினர் சரியான சமயத்திற்கு சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டதால் கொடி எரிக்கப்படுவது தடுக்கப்பட்டது. இல்லாவிட்டால் நிச்சயமாக எரிக்கப் பட்டிருக்கும். எனவே கீழ் கோர்ட் ஜாமீன் மறுத்து அளித்த உத்தரவை உயர் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கவேண்டும். மேலும், தேசியக் கொடியை எரிக்க முயன்றவர்கள் ஒன்றும் அப்பாவிகள் கிடையாது. அவர்கள் அனைவரும் பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்த சமூக விரோதிகள்; தேச விரோதிகள். ஒரு பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகவும், இந்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் புனிதமான நம் தேசியக்கொடியை எரிக்க முயன்ற கயவர்கள். இவர்களுக்குப் போய்த் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்ததே மிகவும் வியப்பாகவும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கிறது! தேசியக்கொடி ஏற்றிய ஒரு வார காலத்தில் இவர்கள் திருந்திய மைந்தர்களாக ஆகிவிடுவார்கள் என்று நீதிமன்றம் எதிர்பார்ப்பது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது!
மேலும், ராணுவ வாகனங்களின் மீதான் தாக்குதல் வழக்கில் கைதானவர்கள் மீது இ.பி.கோ சட்டம் 147, 148, 294b, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் மட்டும் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் 149, 150, 151, 152 ஆகிய பிரிவுகளின் படியும் வழக்கு பதிவு செய்திருக்கவேண்டும். ஏன் செய்யப்படவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இவ்வழக்கிலும் கடைந்தெடுத்த சமூக விரோத, தேச விரோத கும்பலுக்கு அனாதை இல்லத்தில் “சேவை” செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது மிகவும் வியப்பளிப்பதாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக குற்றவாளிகளின் வக்கீல் இவ்வழக்கில் “அடிப்படை உரிமைகள்” பற்றிப் பேச வாய்ப்பிலாமல் போனது. இல்லையென்றால் நீதிமன்றம் இவ்வழக்கிலும் “அடிப்படை கடமைகள்” பற்றிப் பாடம் நடத்தவேண்டி வந்திருக்கும்.
“இந்திய தேசியக்கொடி இந்திய மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கிறது. நமது தேசப் பெருமையின் சின்னமாக மிளிர்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் உயிரை ஈய்ந்து நம் தேசியக் கோடியை பட்டொளி வீசி பறக்கச் செய்திருக்கிறார்கள்” என்று “இந்திய தேசியக்கொடி மரபுச் சட்டம்” சொல்கிறது.
நம் தேசியக்கொடியின் வர்ணங்களைப் பற்றியும், அதன் நடுவில் உள்ள அசோகச் சக்கரத்தைப் பற்றியும், அரசியல் சட்ட நிர்ணய சபையில் விரிவாக எடுத்துரைக்கும்போது, முன்னாள் ஜனாதிபதி திரு ராதாகிருஷ்ணன் அவர்கள், “காவி வர்ணமானது தியாகத்தையும் பற்றற்ற தன்மையையும் குறிக்கிறது. நமது தலைவர்கள் எந்த விதமான சுகத்திற்கும் ஆசைப் படாமல், பற்றற்ற நிலையில் முழு ஈடுபாட்டுடன் தங்கள் கடமையைச் செய்யவேண்டும். நடுவில் உள்ள வெள்ளை நிறம் விளக்கு போல் பிரகாசிக்கிறது. உண்மை எனும் பாதையை நம் ஒழுக்கத்திற்கு காண்பிப்பதாக அவ்விளக்கு விளங்குகிறது. நம் மண்ணின் மீதும், நமக்கு உயிர் கொடுக்கும் தாவரங்களின் மீதும் நமக்கு உள்ள உறவின் புனிதத்தைக் குறிப்பதாக பச்சை வண்ணம் உள்ளது. வெள்ளை நிறத்தின் மையத்தில் இருக்கும் அசோகச் சக்கரம் நம் தேசத்து தர்மத்தை, தர்ம பரிபாலனத்தைக் குறிக்கிறது. உண்மை அல்லது சத்தியம், தர்மம் அல்லது அறம், ஆகியவையே இந்தக் கொடியின் கீழ் பணிபுரியும் மக்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அந்தச் சக்கரம் இயக்கத்தைக் குறிக்கிறது. தேக்கத்தில், இயக்கமின்மையில் இருப்பது மரணமேயாகும். இயக்கத்தில் தான் வாழ்க்கை இருக்கிறது. மாற்றங்களை இந்தியா தடுக்கக் கூடாது. முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும். இச்சக்கரம் அமைதியான மாற்றத்தின் ஆற்றலைக் குறிக்கிறது” என்று அருமையாக விளக்கினார்கள்.
நம் நாட்டின் தேச அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தில் உள்ள ஒரே ஓட்டை, அதில் சொல்லப் பட்டுள்ள குற்றங்கள் ஜாமீன் மறுப்புக் குற்றங்களாக இல்லாதது தான். புனிதமும், முக்கியத்துவமும் நிரம்பிய நம் தேசத்தின் பெருமையை எண்ணிப் பார்க்கையில், ஜாமீன் பெற வழிவகை இல்லாத குற்றங்களாக அவற்றை உரைத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. சட்டத்தை அங்ஙனமே மாற்றுவதற்கான திருத்தத்தை செய்யுமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். மக்களின் வரவேற்பையும் பெற்றிருக்கும்.
தேசத்தை அவமதிக்கும் குற்றங்கள் ஜாமீன் பெற வழிவகை இல்லாத குற்றங்களாக அறிவிக்கப் பட்டு, அக்குற்றங்கள் புரிபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்குமாறு சட்டத்திருத்தங்கள் செய்ய வேண்டும். ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டும் தனிக் கொடியும், தனி அரசியல் சட்டமும் அனுமதித்து தனி அந்தஸ்து வழங்கியுள்ள ஒரு நாட்டிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கூடப் பேராசையோ?
Fantastic article. All the points are well said.. In Tamilnadu only all these dramas can happen.. As long as M.Karunanidhi remains as a Chief Minister, these type of anti social elements will emerge and speak against our country..
Those who tried to burn National Flag and attacked Military vehicles are traitors. All should be punished mercilessly.
I have very little regard for Mr Gandhi.He is original cause for all the Hindu’s woes at present in India. Please refer to the recent article in Vijayavani by the one and the only one Radha Rajan. Radhaji’s article on Indian nationalisim and the role of Gandhi is a ” Must read” for anyone intrested in the welfare of Bharath.