தீராத விளையாட்டுப் பிள்ளை

கட்டுக் காவலுக்கிடையே சிறையில் பிறந்தான் இந்தப் பிள்ளை. பிறந்த உடனேயே தன் திரு விளையாடலைத் துவக்கி விட்டான். சங்கு சக்ரதாரியகக் காக்ஷி கொடுத்தவனைக் கண்டு மகிழ்ந்த வசுதேவரும் தேவகியும், ‘’எம் பெருமானே, இந்தக் காக்ஷி போதும் கம்சன் கண்டால் என்ன ஆகுமோ?’’ என்று வேண்ட, மானிடக் குழந்தை யானான். அவன் திருவிளையாட லால் காவலாளிகள் கண்ணுறங்க, சிறைக் கதவுகள் தாமே திறக்க காவலாளி களின் கண்ணில் மண்னைத் தூவி விட்டு அந்த இரவிலேயே ஒருத்தி மகனாய் வளர கோகுலம் புறப்படுகிறான். கொட்டும் மழையில் ஆதி சேடன் குடை பிடிக்க, யமுனை வழிவிட அன்றே தன் விளையாட்டை ஆரம்பித்து விடுகிறான். லீலாவிநோதன் அல்லவா? ஆயர்பாடியிலே யசோதையின் செல்லப்பிள்ளையாய் வளர்கிறான் கண்ணன்.

பெரியாழ்வார், ஸ்ரீவில்லிப்புத்தூர்
பெரியாழ்வார், ஸ்ரீவில்லிப்புத்தூர்

மாயக் கண்ணனின் விளையாட்டும் பேரழகு தேவர்களையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் ஆழ்வார்களையும், ஆண்டாளையும், மீரா, சூரதாசர் முதல் பாரதி வரை கவர்ந்தது. முக்கியமாகப் பெரியாழ்வாரை மிகவும் கவர்ந்தது. அவர் தன்னை யசோதையாகவும் தான் வாழ்ந்த வில்லிப்புத்தூரை ஆய்ப்பாடியாகவும் பாவித்து கண்ணனின் பால லீலைகளைப் பாடியிருக்கிறார் .கண்ணன் எப்படி அடுத்த வீட்டுப் பெண் களுக்கும் தெருப் பெண்களுக்கும் தொல்லை கொடுத்தான் என்பதை யெல்லாம் மிக அழகாகப் பாடியிருக்கிறார். திருமங்கை ஆழ்வாரும் கண்ணனின் குறும்புத் தனத்தை ரசித்திருக்கிறார். அவனுடைய குறும்புகளை ஆழ்வார்கள் வாயிலாக நாமும் ரசிப்போமா?

தொட்டில் கண்ணன்

தொட்டிலில் கிடக்கும் போதே கண்ணனின் சேட்டைகள் ஆரம்பித்து விட்டது. யசோதை கண்ணனைத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். கண்ணன் தொட்டில் கிழிந்து விடும்படி உதைக்கிறான். [பின்னால் சகடாசுரனை உதைப் பதற்கு ஒத்திகை பார்த்திருப்பானோ?]ஐயோ இப்படி உதைத்து, உதைத்துக் குழந்தைக்குக் காலெல்லாம் வலிக்கப் போகிறதே யென்று ஆதங்கத்தோடு தூக்கி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால் இடுப்பையே முறித்து விடுகி றானாம். ஆசையாக மார்போடு தழுவிக் கொள்ளலாம் என்றால் கால்களால் வயிற்றிலே உதை விடுகிறா னாம். [பூதனையைக் கொல்ல ஒத்திகை பார்த்திருப்பனோ?] இவனை எப்படித்தான் வைத்துக் கொள்வதென்று யசோதை தவித்துப் போகிறாள். அவள் சொல்வதைக் கேளுங்கள்.

‘’கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்.

இவனோடு போராடிப் போராடியே நான் மெலிந்தே விட்டேன்’’ என்கிறாள்.
[மருங்கு-இடுப்பு இடை. உதரம்-வயிறு]

கண்ணன் நீராடல்

தொட்டிலில் கிடந்த கண்ணன் இப்போது கொஞ்சம் பெரியவனாகி விட்டான்.அவனுடைய லீலைகளும் பெரிதாகி விட்டன. வெண்ணெய்த் தாழிக்குள் தோள் வரை கையை விட்டு வெண்ணெய்யை வாரி விழுங்குகிறான். அதனால் உடம்பெல்லாம் ஒரே வெண்ணெய் நாற்றம்! வெண்ணெய்யும் மோரும் உடம்பிலிருக்க அதோடு தெருவிலே போய் புழுதியும் அளைந்ததால் ஒரே பிசுக்கு மயம்! அவனை நன்கு தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டுமென்று எண்ணெய்யும் சீயக்காயும் வைத்துக் காத்திருக்கிறாள் யசோதை. கண்ணன் வராமல் டிமிக்கி கொடுக்கிறான்.

வெண்ணை அளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ்விரா உன்னைத்
தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணை புளிப்பழம் கொண்டு
இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே!
நாரணா! நீராட வாராய்.

[புளிப்பழம்-சீயக்காய். இரா-இரவு.
குணுங்கு –மொச்சை நாற்றம்]

கன்றின் காதில் கட்டெறும்பு

கண்ணன் வராமல் போக்குக் காட்டி விட்டு ஓடுகிறான். போகிற போக்கில் கன்றுகளின் காதில் கட்டெறும்புகளைப் பிடித்துப் போட்டு விட்டுப் போகிறான். அவை மிரண்டு ஓடுகின்றன. கண்ணனும் ஓட, ‘’கண்ணா, ஓடாதே, வா, வா, என்று தானும் ஓடுகிறாள். ‘’கண்ணா! கன்றுக் குட்டியின் காதில் கட்டெறும்பைப் போட்டால் அப்புறம் உனக்குப் பால், தயிர், வெண்ணெய் எல்லாம் கிடைக்காமல் போய் விடும். இன்னிக்கு நீ பிறந்த திருவோண நக்ஷத்திரம். அதனால் மங்கள ஸ்நானம் செய்ய வேண்டும் ஓடாதே வா’’ என்கிறாள்

கன்றுகள் செவியில் கட்டெறும்பு
பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்னை திரட்டி
விழுங்கக் காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய்!
நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும்!
எம்பிரான்! ஓடாதே வாராய்’’

என்று கெஞ்சுகிறாள்.

எண்ணைக் குடமுருட்டி

கண்ணன் பக்கத்து வீடுகளுக்கும் செல்ல ஆரம்பித்துவிட்டான்! பக்கத்து வீட்டிற்குள் சென்று அங்கிருந்த எண்ணெய்க் குடத்தை உருட்டி விடுகிறான். அவர்கள் சிந்திய எண்ணெய்யை வழிப்பதும் துடைப்பதுமாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் வழுக்கிக் கீழே விழுந்து விடுவார்களே. அவர்கள் கவனம் வேலையில் இருக்கும் போது, கண்ணன் தொட்டிலில் தூங்கும் குழந்தையைக் கிள்ளி எழுப்பி விடுகிறான். அந்தக் குழந்தை எழுந்ததும் கண்களைப் புரட்டி அப்பூச்சி காட்டி அந்தக் குழந்தையை பயமுறுத்தி அழ வைக்கிறான். (அப்பூச்சி காட்டுதலாவதுகண்களின் மேல் இமையை மடக்கிக் கொண்டு கண்ணிமையின் உட்புறம் வெளியே தெரிய குழந்தைகளை பயமுறுத்துவது)

எண்ணைக் குடத்தை உருட்டி
இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக்
கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன்
ஒலிகடல் ஓத நீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ!
மஞ்சனம் ஆட நீ வாராய்!

பழங்களெல்லாம் தருவேன், நீ நீராட வா, என்று கண்ணனைத் தாஜா செய்கிறாள் யசோதை.

வெண்ணை உண்ட வாயன்

tanjore_krishnaகண்ணனுடைய குறும்புகள் வர வர அதிகமாகிக் கொண்டே போகிறது. அண்டை அயலிலுள்ள ஆய்ப்பாடிப் பெண்கள் யசோதையிடம் வந்து, அவன் தங்களை எப்படியெல்லாம் படாதபாடு படுத்துகிறன் என்று குற்றப் பத்திரிகை வாசிக்கிறார்கள். ‘’அடி, யசோதா உன் அருமைப் பிள்ளை கண்ணன் எங்கள் வீட்டுக்குள் நுழைந்து
அவ்வளவு வெண்ணெய்யையும் காலி செய்து விட்டான். வெண்ணெய் தின்றதோடு போகக் கூடாதோ? அந்தக் காலிப் பாத்திரத்தை கல்லிலே போட்டு உடைத்து அந்தச் சத்தத்தைக் கேட்டு ரசிக்கிறான். இவனுடைய திருட்டை எங்களால் தடுக்க முடியவில்லை.புண்ணிலே புளி பட்டது போலிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலே ஒவ்வொரு விதமாக லூட்டி அடிக்கிறான். உன் அருமைப் பிள்ளையை நீயே கூட்டி வைத்துக் கொள்

வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை
வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்
காக்க கில்லோம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும் தீமை
புரை புரையாய் இவை செய்ய வல்ல
அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற
அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்!

இன்னொரு பெண் வருகிறாள். இவளும் கண்ணனைப் பற்றிக் குறை சொல்லவே வந்திருக்கிறாள். அடியே, யசோதா உன் அருமை மகன் கண்ணன் செய்வதையும் செய்து விட்டுத் தான் ஏதோ பெரிய காரியத்தைச் செய்த தாகப் பெருமை யடித்துக் கொள்கிறான். நான் நெய் காய்ச்சுவதற்காக வைத்திருந்த வெண்ணெய்யைக் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அவ்வளவையும் நன்றாக வழித்துத் தின்று விட்டு ஒன்றுமே தெரியாதவன் போல், அறியாப் பிள்ளை போல் தூரத்தில் போய் நின்று கொண்டான்.அண்டை அயலில் இருப்பவர்களை இப்படி உன் பிள்ளையைக் கொண்டு அக்கிரமம் செய்வது உனக்கே நியாயமாகத் தோன்றுகிறதா? உன் அருமந்த புத்திரனை அழைத்து வைத்துக் கொள். இல்லாவிட்டால் இந்தக் கண்ணன் எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டான்.

திருவுடைய பிள்ளை தான் தீயவாறு
தேக்கமொன்றும் இலன், தேசுடையான்
உருக வைத்த குடத்தோடு வெண்ணை உறிஞ்சி
உடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான்
வழக்கோ? அசோதாய்!
வருக வென்று உன் மகன் தன்னைக் கூவாய்!
வாழவொட்டான் மதுசூதனனே

பால் பாயாசக் கண்ணன்

இவள் சொல்லி முடிக்கும் முன்பாகவே இன்னொ ருத்தி கோபத்தோடு வருகிறாள். அடி அம்மா, யசோதே! இந்த அநியாயத்தைக் கேள். நான்பாலைக் கறந்து பெரிய பானையில் காய்ச்சுவதற்காக வைத்திருந்தேன். என் பெண்ணையும் பாலுக்குக் காவலாக வைத்து விட்டு பால் காய்ச்ச நெருப்பு வேண்டுமே யென்று அடுத்த மேலை வீட்டிற்குச் சென்றேன். போய் ஒரு நொடிப் பொழிதில் திரும்பியும் விட்டேன். அதற்குள் சாளக்கிராமம் உடைய நம்பி, அவன் தான் உன் புத்திர சிகாமணி, பாத்தி ரத்திலிருந்த அவ்வளவு பாலையும் சாய்த்துக் குடித்து விட்டுப் போய் விட்டான். கரும்பு போல தித்திக்கப் பேசும் யசோதே! உன் பிள்ளையைக் கூப்பிடு” என்கிறாள்.

பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப்
பல் வளையாள் என் மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று
இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்.
ஆலைக் கரும்பின் மொழி அனைய
அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்

இன்னொரு ஆய்ச்சி கையில் காலிப் பாத்தி ரத்தோடு வருகிறாள். அது பாயாசம் வைத்திருந்த பாத்திரம். இவளுடைய குற்றச் சாட்டைக் கேட்போம். அடி, யசோதை! ஆனாலும் உன் பிள்ளை கண்ணன் இந்த மாதிரி செய்யக் கூடாதென்று சொல்லி வை. சம்பா அரிசி, சிறுபருப்பு, வெல்லம், நெய், பால் எல்லாம் சேர்த்து 12 மாதங்களாக திருவோணம் தோறும் பாயாசம் செய்து விரதமிருந்தேன். அப்பொழுதும் இந்தக் கண்ணன் வருவான். நானும் பாயாசம் கொடுப்பேன். ஆனால் இன்று இந்தத் திருவோணத்தன்று செய்த அவ்வளவு பாயாசத்தையும் சாப்பிட்டு விட்டு இன்னம் இன்னம் வேணுமென்கிறான். இதோ பார் இந்தக் காலிப் பாத்திரத்தை. நன்றாக இருக்கிறது பிள்ளை வளர்க்கிற லக்ஷணம். கூப்பிடு உன் பிள்ளையை உன் கண் பார்வையிலேயே வைத்துக்கொள் என்று பொரிந்து தள்ளினாள்.

செந்நெல் அரிசிச் சிறுபருப்புச் செய்த
அக்காரம் நறுநெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன், பண்டும்
இப்பிள்ளை பரிசறிவன்
இன்னம் உகப்பன் நானென்று சொல்லி எல்லாம்
விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன் மகன் தன்னைக் அசோதை நங்காய்!
கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே!

கோகுல கிருஷ்ணன் (மகாபலிபுரம்)
கோகுல கிருஷ்ணன் (மகாபலிபுரம்)

பாத்திரம் காலி!

இப்படி இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கையில் கண்ணனைப் பிடித்தபடி வேகமாக இன்னொரு பெண்மணி வருகிறாள். இவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று எல்லோரும் ஆவலாகப் பார்க்கிறார்கள். அவள் கொஞ்சம் எரிச்சலோடு சொல்ல ஆரம்பிக்கிறாள். ஏடி, யசோதா கேள்,’’நான் ஆசை ஆசையாக லட்டு, சீடை, எள்ளுருண்டை எல்லாம் செய்தேன் எல்லாவற்றையும் ஒரு பாத்தி ரத்தில் போட்டு நன்றாக மூடியும் வைத்தேன். வெளியே கொஞ்சம் வேலையிருந்தது. நம்வீடு தானே இங்கு யார் வரப்போகிறார்கள் என்று எண்ணி கதவைத் தாழ் போடாமல் வந்து வெளியே வேலை செய்து கொண்டிருந்தேன். வேலை முடிந்து உள்ளே போனால் இவன் அவ்வளவு பக்ஷணங்களையும் தின்று விட்டான். எனக்குக் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் அவ்வளவையும் காலி பண்ணி விட்டான். வெறும் பாத்திரம் தான் இருந்தது! அதோடு விட்டானா? இவ்வளவு பக்ஷணங்களையும் தின்று விட்டு நான் வெண்னை வைக்கும் உறியைக் குறி வைத்து அங்கு ஏதாவது கிடைக்குமா என்று கையை விட்டுப் பார்க்கிறான். இதோ பார் இவனைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு வந்தி ருக்கிறேன். என்ன பிள்ளையோ? என்ன வளர்ப்போ? என்று ஒரு நொடி நொடித்தாள்.

கன்னல் இலட்டுவத்தோடு, சீடை, காரெள்ளின்
உண்டை கலத்தில் இட்டு
என்னகம் என்று நான் வைத்துப் போந்தேன் இவன்
புக்கு அவற்றைப் பொறுத்திப் போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி
வெண்ணையும் சோதிக்கின்றான்.
உன் மகன் தன்னை அசோதை நங்காய்! கூவிக்
கொள்ளாய் இவையும்சிலவே

நாவல் பழமும் கண்ணனும்

இதற்குள் இன்னொரு ஆய்ச்சி வேகமாக வருகிறாள். யசோதே! உன் பிள்ளையைப் பற்றிச் சொன்னால் உனக்கு ரோஷம் வருகிறது. ஆனால் உன் பிள்ளை மிகவும் தந்திரக்காரன்.வம்புகள் செய்வதில் கை தேர்ந்தவன் அவன் செய்ததைப் பார். உன் அருமைப் பிள்ளை என் வீட்டில் புகுந்து என் பெண்ணை அழைத்து அவள் கையிலிருந்த பொன் வளையலைக் கழற்றிக் கொண்டு போய்விட்டான். தோட்டத்திலிருந்து பறித்து வந்து கொல்லையில் நாவல் பழங்களை விற்றுக் கொண்டிருந்தவளி டம் போய் அந்த வளையலைக் கொடுத்து நல்ல நாவல் பழங்களை வாங்கிக் கொண் டான். நான் போய்க் கேட்டபோது ஒன்றும் தெரியாதவன் போல் ‘’நான் வளையலைக் கழற்ற வில்லையே’’ என்று சொல்லிச் சிரிக்கிறான்.

சொல்லில் அரசிப்படுதி, நங்காய்!
சூழல் உடையன் உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்து என் மகளைக் கூவிக்
கையில் வளையலைக் கழற்றிக் கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து
நல்லன நாவல் பழங்கள் கொண்டு
நானல்லேன் என்று சிரிக்கின்றானே.

ஆடை திருடிய கண்ணன்

அந்த ஆய்ச்சி சொல்லி முடிக்கட்டும் என்று காத்தி ருந்தது போல் இரண்டு இளம் பெண்கள் வந்தார்கள். இவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ என்று குற்றம் சாட்டிய பெண்கள் எல்லோரும் ஆவலாகப் பார்த்தார்கள். கண்ணன் வீடுகளில் புகுந்து லூட்டி அடித்ததோடு நிற்கவில்லை. ‘’ஆற்றங்கரையிலும் வந்து வம்புகள் செய்கிறான்’’ என்கிறார்கள்.

‘’யசோதாம்மா! நாங்கள் எல்லோரும் ஆற்றில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தோம் அந்தச் சமயம் உங்கள்
கண்ணன் வந்து எங்கள் மேல் சேற்றை வாரி வீசினான். நாங்கள் கரையில் கழற்றி வைத்திருந்த எங்களுடைய வளையல்களையும் ஆடைகளையும் வாரி எடுத்துக் கொண்டு சிட்டாகப் பறந்து விட்டான். வீட்டில் போய் ஒளிந்து கொண்டிருக்கிறான்.வளையல்களைத் தருவானா மாட்டானா என்றும் சொல்ல மாட்டேன் என்கிறான். இவன் இப்படிச் செய்தால் நாங்கள் அழிந்தே போய் விடுவோம்.

ஆற்றிலிருந்து விளையாடு வோங்களை
சேற்றால் எறிந்து வளை, துகில் கைக்கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானாய் இன்று முற்றும்
வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்.

கோபியர் துகில்கவரும் கண்ணன் (ராஜஸ்தானிய பாணி ஓவியம்)
கோபியர் துகில்கவரும் கண்ணன் (ராஜஸ்தானிய பாணி ஓவியம்)

மற்றொரு பெண்ணும் பேச ஆரம்பிக்கிறாள். இவளுக்குக் கோபம் இருந்தாலும் கண்ணனுடைய அழகு இவள் மனம் முழுவதும் நிறைந்திருக்கிறது. பேசும்போது அந்த அழகு தான் முதலில் வருகிறது. குண்டலமும், பூணூலும் அசைய எட்டுத் திசைகளில் இருப்பவர்களும் இவன் அழகில் மெய் மறந்திருக்க எங்கள் ஆடைகளை அள்ளிக் கொண்டு குருந்த மரத்தில் ஏறி விட்டான். அவனிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், அவன் தர மறுட்து விட்டான். யசோதாம்மா, எங்களுடைய ஆடைகளை வாங்கித் தாருங்கள்’’ என்று கெஞ்சிக் கேட்டாள்.

குண்டலம் தாழக் குழல் தாழ, நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுதேத்த
வண்டமர் பூங்குழலார் திகில் கைக்கொண்டு
விண் தோய மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும்.

யசோதையின் வருத்தம்

இவ்வளவு குற்றச் சாட்டுக்களையும் கேட்டதும் யசோதைக்கு வருத்தமும் கோபமும் ஏற்படுகிறது. இந்த ஆய்ச்சிமார் இப்படியெல்லாம் பேசும்படி, கோள் சொல்லும்படி, இந்தக் கண்ணன் நடந்து கொள்கிறானே என்று ஆற்றாமையும் ஏற்படுகிறது. அதே சமயம் அவளால் கண்ணனைக் கடிந்து கொள்ளவும் முடியவில்லை.வந்த ஆய்ச்சிமார்களுக்கு சமாதானம் சொல்லவும் வேண்டும். அதனால் கண்ணனைக் கடிந்து கொள்வது போல பாவனை செய்கிறாள்.

’’கண்ணா! இங்கே வா, வரேன், வரேன், என்று சொல்லிப் பொழுது போக்காமல் இங்கே வா. அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் உன்மீது ஏகப்பட்டகுற்றச் சாட்டுகளை அள்ளி வீசுகிறார்கள். என்னால் அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அதனால் உடனே இங்கே வா’’ என்கிறாள் –

’’போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்
போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார்
ஏதேனும் பேசநான் கேட்க மாட்டேன்.

புகார் புத்தகம்

இதோ பார் இந்தப் பெண், உன்னைப் பற்றி என்னவெல்லாம் சொல்கிறாள் பார். நீயும் இந்த ஆய்ச்சிமார்களை மயக்கி விடுகிறாய். அவர்கள் வீட்டில் போய் விஷமங்கள் செய்கிறாய். அவர்களும் உன்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக ஒன்றுக்குப் பத்தாகக் கோள் சொல்லுகிறார்கள். அதையெல்லாம் சேர்த்தால் ஒரு புத்தகமே எழுதலாம்.

மையார் கண் மட ஆய்ச்சியர் மக்களை
மையன்மை செய்து அவர் பின் போய்
கொய்யார் பூந்துகில் பற்றித் தனி நின்று
குற்றம் பல பல செய்தாய்
பொய்யா! உன்னை புறம் பல பேசுவ
புத்தகத்துக்குள கேட்டேன்

’’கேசவா! இங்கே வா, உன்னிடம் அன்பில்லாதவர்களுடைய வீட்டிற்கு நீ எதற்காகப் போக வேண்டும்? அவர்களுடைய வீட்டில் போய் நீ விளையாட வேண்டாம். உன் மீது குற்றம் சொல்லும் வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் இருக்கும் இட்த்திற்கு நீ போகாதே. அந்த இடத்தில் நீ இருக்க வேண்டாம் இங்கே வந்து விடு. அம்மா பேச்சைக் கேட்டால்தான் நீ நல்ல பையன். அம்மா பேச்சைக்
கேட்பதுதான் தருமம். அதனால் இங்கே வா.’’

’’கேசவனே இங்கே போதராயே
கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இல்லாதார் அகத்திருந்து
நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும்
தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
தாய் சொல்லுக் கொள்வது தர்மம் கண்டாய்
தாமோதரா இங்கே போதராயே’’

”இனிமேல் அங்கே போக வேண்டாம். நம் வீட்டிலேயே விளையாடலாம்’’ என்று முடிக்கிறாள்.

7 Replies to “தீராத விளையாட்டுப் பிள்ளை”

  1. எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத் தட்டாத சரித்திரம் அல்லவோ…..கண்ணன் திருவிளையாடல்!

    மீண்டும் ஒரு முறை எங்கள் நெஞ்சம் நிறைத்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்!

  2. I enjoyed reading it again and again – very nice and felt as if we are celebrating “Gokula Ashtami” now itself.

  3. மிக அருமை. விளக்கமும் பாசுரமும்.

  4. கண்ணனின் இளம்வயது விளையாட்டுக்களை நினைத்து மகிழும் அதே நேரத்தில் தர்மத்தைக் காக்க அவன் செய்த கடும் முயற்சிகளையும் முடிவில் அது பலன் அளிக்காத போது போருக்கும் தயங்கக் கூடாது என்றும் ,தன்னவர்களே ஆனாலும் அதர்மத்தின் பக்கம் நின்றால் அவர்களை எதிர்க்க தயங்கக் கூடாது என்று அறிவுரை செய்ததையும் ஹிந்துக்களான நாம் இன்று சிந்தித்து செயல் படுத்த வேண்டும்.

    இரா.ஸ்ரீதரன்

  5. Very informative and beautiful features. I enjoyed reading them. Please publish Bharathiar’s கண்ணன் என் சேவகன். Or at least inform where it is available in the net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *