கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்

khan-abdul-wiki-phorto இந்தியக்குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் யார் தெரியுமா?? (1987)

ஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா??

பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா??

1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான ராமகிருஷ்ன பரமஹம்சரின் வடிவத்தை ஒத்த கான் அப்துல் கஃபார்கான் தான்.

ஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.

இளமைக் காலம் :-

1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார். நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.

பள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.

அவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார். ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.

பாட்சா கான் ஆதல்..

தன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது. இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார். அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர். 1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை பாட்ஷாகான் என அழைக்கப்பட வைத்தது.

திருமணமும் குழந்தைகளும்

முதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர். இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.

குதாய்கித்மத்கர்.

காலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் ( கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..

“ நான் உங்களுக்கு போலிசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப்போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”

இந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.

இந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:-

தேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திபூர்வமான உறவைப் பேணினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.

ஏப்ரல் 23, 1930 ஆண்டு காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட்டதுபோலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாகிக் குண்டுக்கு பலியாயினர். இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர்கள் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுடமறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுடமறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.

கஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.

abdul ghaffar khan and gandhi in 1940அவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.

தேசப்பிரிவினை:-

தேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத்தடுத்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிகளின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரை கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார். தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தனுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன் காரணமாய் கஃபார்கான் இந்த ஒட்டெடுப்பை புறக்கணிக்கும்படி சொல்லவேண்டியதாயிற்று. பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாக சொன்னது :

” எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்”

என ஆறவொண்ணா மன வருத்ததுடன் சொன்னார். காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின் கஃபார்கானின் நிலை:-

முகமது அலி ஜின்னாவினால் பலப்பல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படமல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது.

“ பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்த பட்ச நாகரீகத்துடனும் நடந்துகொண்டர்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”

1962ல் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய்” தேர்ந்தெடுத்தது. இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நிலை” எனக் கூறியது. 1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானிய தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரனமடைந்தார். அவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது. அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக்கூடது என சொன்னதற்காக அவரைபற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக்கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.

காந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்டும் என முழங்கிய பிரிவினைவாதி ஜிண்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கி சீரழிவதைப் பார்க்கிறோம். எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் , காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.

நன்றி: விக்கிபீடியா.

7 Replies to “கான் அப்துல் கஃபார் கான் : எல்லைக் காவல் தனியொருவன்”

  1. Sri Khan Abdul Gaffar Khan was let down by Gandhi and the Congress at a cruial moment and placed him and his people permanently at the mercy of Pakistan, a rogue state. Sri Khan rightly said that Gandhi and Congress threw them to the wolves.
    I thank Sri Jayakumar for mentioning this fact in his article. Sri Khan also wanted his native land to be part of Hindustan and agued when Pakistan could be two slices on either side of Hindustan, why not Hindustan have her territory on the other side of West Pakistan.

  2. நன்றாகவே எழுதப்பெற்றிருக்கிறது.

    பஃதூனா? பஷ்தூனா?

  3. ஜயகுமார் அவர்கள் எல்லைக்காந்தியைப் பற்றி அருமையான செய்த்களைத் தந்துள்ளார். அஹின்சையில் இவ்வளவு ஆழ்ந்த பற்றுள்ள இசுலாமியர் இருந்துள்ளாரா? ஆச்சரியமாக உள்ளது. பாகிஸ்தான் பள்ளிப் பாடங்களில் இவரைப் பற்றிய குறிப்புக்கள் வராமல் தடை செய்யப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏக இந்தியாவைப் பற்றிப் பேசிய வேறு இசுலாமியத் தலைவர்கள் உள்ளனரா?

  4. இவரைப் போலவே உலகத்தில் வன்முறையை நாடும் அனைத்து இஸ்லாமியர்களும் அமைதிக்குத் திரும்பினால் இந்த உலகில் பரிபூர்ண சாந்தி நிலவும். ஹும் துரதிருஷ்டவசமாக எல்லை காந்திகளும். அப்துல் கலாம்களும் அவர்களுக்கு உன்னத உதாரணமாக அமையால் போனது இந்த உலகின் நஷ்டமே.

    நல்ல கட்டுரை ஜெயக்குமார், தொடர்ந்து இது போன்ற தகவற்செறிவான கட்டுரைகளைத் தாருங்கள். மனம் நிம்மதியடைகிறது

    அன்புடன்
    ச.திருமலை

  5. காபார்கானையும், பஷ்டூன்களையும், வடமேற்கு மாகாணத்தையும் பாகிஸ்தானுக்கு கொடுக்க உடன் பட்டது, காந்தி காங்கிரசின் மிகப் பெரிய மடத்தனம். 1945 பொதுத் தேர்தலில் கபார்கான் கீழான காங்கிரஸ் , வடமேற்கு மாகாணத்தில் முஸ்லிம் லீகை தோற்கடித்து பெரும்பான்மை பந்திரி சபையை அமைத்தது. அதனால் அம்மாகாணம் பாகிஸ்தானில் சேரக்கூடாது என காந்தி-நேரு பிரிட்டாஷிரம் பிடிவதமாக இருந்தால், வடமேற்கு மாகாணம் இந்தியாவுடன் ஒரு confederation ஆகவோ, அல்லது தனிநாடாகவோ அல்லது ஆஃப்கானிஸ்தானுடன் கூட்டு நாடாகாவோ , வாய்ப்புகள் இருந்தன. காந்தி-நேரு தலைமைக்கு அரசியல் வாய்ப்புகளை எப்படி exploit செய்ய வேண்டும் என தெரியவில்லை.

  6. ஜெயகுமார் இந்த அருமையான கட்டுரையை தந்தமைக்கு நன்றி. இன்றைக்கு மதச்சார்பின்மை என்றாலும் மதநல்லிணக்கம் என்றாலும் சிலருக்கு இஸ்லாமிய மதவெறியை நியாயப்படுத்துவதும் இந்து ஆன்மிக பண்பாட்டின் மீது சேறு வாறி வீசுவதும் என்றாகிவிட்ட நிலையில் உண்மையான மதச்சார்பின்மை உண்மையான மதநல்லிணக்கம் ஆகியுவற்றை முன்வைக்கும் நல்லதொரு கட்டுரையாக இது விளங்குகிறது. வாழ்க உங்கள் தொண்டு.

  7. //காந்தி-நேரு தலைமைக்கு அரசியல் வாய்ப்புகளை எப்படி exploit செய்ய வேண்டும் என தெரியவில்லை//

    ஆம்.

    தொடர்ந்து மிதவாத முஸ்லீம்களுக்கு இந்த நிலைதான். ஓநாய்களிடம் அவர்களை விட்டு விடுகிறோம். பின்பு ஒட்டு மொத்த சமுதாயமும் நமக்கெதிராக திரும்பும்போது அவர்கள் வேறுவழியின்றி அடிப்படைவாத முஸ்லீம்களுடன் ஒத்துழைக்கின்றார்கள், அல்லது அமைதியாக இருக்கிறார்கள்.

    தஸ்லிமாவுக்கு குடியுரிமை, தகுந்த பாதுகாப்பு வழங்காத நமது இன்றைய நிதர்சனம்தான் நினைவுக்கு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *