பேராற்றலின், பெருங்கருணையின் சின்னம்: திருநீலகண்டம்

திருச்சாழல்

பெண்கள் இருவர் சாழல் என்ற பண்டைய மகளிர் ஆடலை விளையாடுகின்றனர். சாழல் என்ற விளையாட்டு இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது. ஆயினும் சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படும் ஒருசெய்தியால் , அந்த விளையாட்டு இப்படி இருக்கலாம் என உய்த்து அறியலாம். அது, “நல்லதோர்தோள் வீச்சு நற்சாழல்” என்பதாம். இந்தவரியில் ‘நல்லதோர் தோள் வீச்சு” என்பதற்கு, ‘தோள்நோக்கம்’ என வேறு ஆடலும் இருப்பதால், “கைகொட்டி நகைத்தல்” என ஒருவாறு பொருள் கொள்ளலாம். திருவாசகத்தில் உள்ள திருச்சாழல் பாடல்கள் இவ்வாறு பொருள் கொள்ள அமைந்துள்ளன.

பெண்ணொருத்தி ”உங்கள் இறைவன் செயல்கள் இவ்வாறு பித்தனின் செயல்போல இருக்கின்றதே” என நகைக்கின்றாள். அதற்கு மற்றொரு பெண் ”அச்செயல் அவனது பரத்துவத்தையும் பேரருளையும் காட்டுகின்றது; இதனை அறியாத உன்னுடைய அறிவின் நுட்பந்தான் என்னே! இதனையறியாமல் கேள்வி கேட்க வந்து விட்டாயே!” எனத் திருப்பி நகையாடுகின்றாள். இதுதான் சாழல் என்ற ஆட்டத்தின் அமைப்பு.

வினாவும் விடையும்:

முதற் பெண்ணின் வினா: உங்கள் சிவபெருமான் ஓசையுள்ள கடலில் ஆரவாரமாக எழுந்த ஆலகால நஞ்சை உண்டானே – ’ஆலால முண்டான் அவன்சதுர் தானென்னே’?

யாராவது நஞ்சை உணவாக உண்பார்களா? பித்தர்களே அறிவு மயங்கி நஞ்சை உணவாகக் கருதி உண்பார்கள். உங்கள் சிவன் பித்தனோ?

சிவனடியாராகிய பெண்ணின் விடை: ஆம். எங்கள் சிவன் பெரும் பித்தன்தான். உயிர்கள் மேற்கொண்ட பெருங்கருணையாகிய பெரும் பித்தேறியவன். அவன் தன் பேரருளினால் ஆலகால நஞ்சை உண்ணாது இருந்திருந்தால், அந்த நஞ்சு எழுந்தபொழுது, பிரமன் திருமால் ஆகியோர் உட்பட்ட மேம்பட்ட தேவர்கள் அனைவரும் இறந்தொழிந்திருப்பர். இந்த உண்மையை அறியாத உன்னறிவின் நுட்பந்தான் என்னே” இது இரண்டாவது பெண்ணின் விடை.

இனி இந்த விடையின் உட்கருத்தை நோக்குவோம்.

நீலகண்டம் – ஒருஅடையாளம்

இமயச் சாரலில் நீலகண்ட் மலைச்சிகரம் (Shivalik range)
இமயச் சாரலில் நீலகண்ட் மலைச்சிகரம் (Shivalik range)

ஆலமுண்டதனால் இறைவன் நீலகண்டனானான். திருநீலகண்டம் அவனுக்கு ஒரு அடையாளம். குணங்குறிகளற்ற பரம்பொருள் தன்னுடைய பேராற்றலையும் பெருங்கருணையையும் கண்டு உயிர்கள் உய்யும் பொருட்டுத் தன்மேற் குறியும் அடையாளமும் தரித்த சகளத் திருமேனி கொள்கிறது. அந்த அடையாளங்களையும் குறிகளையும் இறைவனின் திருமேனியிற் கண்டவர்கள் அவை உணர்த்தும் பொருளையும் அறிந்து பயன் பெறவேண்டும் என்பது கருத்து.

அந்த அடையாளங்களை இறைவன் திருமேனியின்மேல் கண்டும் பெருமானின் பெருங்கருணையையும் பேராற்றலையும் ஒருவர் அறியவில்லையானால், அது அவரின் ஊழ்வினையே ஆகும். ஊனாசையினால் தக்கனது அவவேள்வியில் கலந்துகொண்டு, வீரபத்திரராற் தண்டிக்கப்பட்ட தேவர்கள், சிவபெருமானின் முன்னின்று, “எம்பெருமானே! உம்முடைய நீலகண்டம், கையில் உள்ள கபாலம், தோள் மீது கங்காளம், திருவடியில் செந்தாமரைக்கண், மார்பில் ஆமையோடும் பன்றிக்கோடும் ஆகிய இவற்றை நாங்கள் நோக்கத் தவறினோம். இவற்றை எம்பார்வையில் படாமல் செய்தது எங்கள் ஊழ்வினையே. இதனால், ‘விதியின் ஆறே மதி இறுத்திடும்’ எனும் பழமொழி எங்கள் அளவில் வாய்மையாயிற்று எனப் புலம்பினர்.

“கறுத்தநின் மிடறு நோக்கேம் கையணி கபாலம் நோக்கேம்
வெறுத்தவெள் ளென்பு நோக்கேம் விழியடி கிடத்தல் நோக்கேம்
குறுத்தமோட் டாமை ஒடும் பன்றியின் கோடும் நோக்கேம்
இறுத்திடும் விதியின் ஆறே மதியெனல் எம்பாற் கண்டேம்”
(காஞ்சிப் புராணம், தக்கேசப் படலம், 63)

இறைவன் நஞ்சுண்ட வரலாறு

முன்னொரு காலத்தில் தேவராகிய சுரரும் அசுரரும் , தாங்கள் இருவினத்தாரும் போரிட்டு ஒருவரையொருவர் அழித்துக் கொண்டமையினால் தங்களுடைய எண்ணிக்கை குறைந்து விட்டமை கருதி வருந்தினார்கள். சாவுக்குப் பயந்த அவர்கள் சாவாமருந்தாகிய அமிழ்தம் பெற வேண்டி நான்முகனிடம் சென்று தங்களுடைய குறையைச் சொன்னார்கள். பிரமதேவன் அவர்களை அழைத்துக் கொண்டு வைகுந்தம் அடைந்தான். அங்கு பாம்பணையில் அறிதுயில் கொண்டிருந்த திருமாலைத் தேவர்கள் தோத்திரித்து வணங்கி, சாவினை வெல்லும் வழியருள வேண்டினர். திருமால் நெடுநேரம் ஆராய்ந்து, “நீங்கள் இனி அஞ்ச வேண்டுவதில்லை. திருப்பாற்கடலைக் கடைந்தால் அமுதம் வரும்; அமுதத்தை அருந்தினால், மரணத்தை வெல்லலாம்” என்றார். அந்நாளவர்கள் அடைந்த பேருவகையை யாரே இயம்பவல்லார்?.

பின்னர் சுரரும் அசுரரும் திருப்பாற்கடலை யடைந்து மந்தரமலையை மத்தாக இட்டு, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி இழுக்கத் தொடங்கினார்கள். அப்பொழுது திருமால், அவர்களை நோக்கி, ‘உங்கள் இருதிறத்தாரில் யார் பாற்கடலைக் கடையும் வல்லமையுடையவரோ அவரே அமுதுண்ணலாம்’ என்று சொன்னார்.

அசுரர்களுக்குத் தங்கள் உடல்வலிமை பற்றிய அபாரநம்பிக்கை உண்டு. எனவே, அவர்கள் திருமாலின் கூற்றுக்கு மகிழ்ந்து முதலில் பாற்கடலைக் கடைய முன் வந்தனர். அசுரர்கள் வாசுகியின் இருபுறமும் பற்றித் தம் பலம் முழுவதுங்கொண்டு ஈர்த்தும் கடைய இயலவில்லை. மந்தரம் அசலம் (அசையாதது) என்னும் தன்னுடைய பெயரை நாட்டி நின்றது.

பாற்கடல் கடைதல்: கம்போடிய கோயில் சிற்பம்
பாற்கடல் கடைதல்: கம்போடிய கோயில் சிற்பம்

அதன்பின்னர் சுரரும், அசுரரை “விடுமின்” என விலக்கி அரவைப் பற்றி ஈர்த்தனர். அவரும் கடைய இயலாமல் இளைத்து நின்றனர். இனி என்ன செய்வது எனக் கவலைமிக நின்றனர். அப்பொழுது பலகடலிடத்துஞ் சென்று நாள்தோறும் சிவபூசை செய்யும் கடப்பாடு உடைய வாலி என்னும் வானர அரசன் தற்செயலாக அங்கு வந்தான். அவனைக் கண்டவுடன் தேவர்கள் மனமகிழ்ச்சி அடைந்தனர். மால் அயன் முதலிய தேவர் அனைவரும் அவனை வரவேற்றனர். பிரமன் நடந்தவற்றை வாலிக்குக் கூறி, ‘நீ எங்களுக்கு உதவி செய்தல் வேண்டும்’ என வேண்டினான். அதற்கு வாலி, ‘நான் ஒருவன் மாத்திரம் இதனைச் செய்தல் இயலாது.’ எனக் கூறித் தான் பாம்பின் வாலின் பக்கம் பற்றி ஈர்ப்பதாகவும் தேவாசுரர்கள் தலைப்புறம் பற்றி ஈர்க்க வேண்டும் என்றும் கூறி அவ்வாறே செய்தான்.

பாம்பின் தலைப்பக்கம் தேவரும் அசுரரும் பற்றி ஈர்த்தும் மலை அசையவில்லை. தேவாசுரர்களை ஒதுங்கும்படிக் கூறிவிட்டுத் தலைப்பக்கமும் தானே பற்றி வாலி ஈர்த்தான். மந்தரமலை கடலுள் அமிழ்ந்தது. எனவே , திருமால் ஆமை வடிவங்கொண்டு மலை மிதக்கும்படி அதைத் தாங்கினார். பின்னர் வாலி மந்தரகிரி இடமும் வலமுமாகச் சுழலும்படிக் கடைந்தான். பாற்கடல் அலறிக் கொதித்து ஆர்ப்பரித்தது. வாசுகி வலி தாங்க முடியாமல் வாயில் நுரைகள் காற்றிப் பெருமூச்சு விட்டது. வாசுகியின் வாயிலிருந்து தோன்றிய நுரையும் பெருமூச்சும் சூடடைந்த கடலில் தோன்றிய நுரையும் கூடிய கலவையிலிருந்து ஆலாலம் என்னும் விடந்தோன்றியது.

விடத்தின் வெம்மையால் கடல் வறண்டது. அண்டகடாகம் அழலால் தீய்ந்தது. உயிர்த்தொகை முழுவதையும் சுட்டெழும் விடத்தீயின் வெம்மையால் உடலம் வெந்த வாலி அஞ்சி அங்கிருந்து ஓட்டமெடுத்தனன்.. வல்விடந் தாக்கி மாயவனின் வெண்ணிற மேனி கருகியது. அன்று முதல் அவன் கரியன் எனப்பெயர் பெற்றான். பிரமன் தன்பொன்னிறம் நீங்கிப் புகை நிறம் பெற்றான். திக்குப் பலரும் வேற்றுரு எய்தி அழுதனர்.

தேவர்கள் அனைவரும் செய்வதறியமல், தாளொடு தாள் இடற ஓடிக் கயிலை மலையை அடைந்தனர். தன்பால் அடைக்கலம் என்று அடைந்தோரைத் தொடர்ந்து வரும் கொடு விடம் அங்கு அணைவுறாமல் புடைத்து உந்தித் தள்ள நீளும் தடங்கைகளெனக் திருக்கயிலைச்சிகரங்கள் பொலிவதனைக் கண்டனர். நந்திதேவரின் அருள் பெற்று இறைவன் முன் எய்தி வணங்கினர்.

பிரமன் நடந்தவற்றையெல்லாம் எம்பிரானிடம் கூறி, ‘ ஐயனே அடியேங்கள் அறியாமையால் தொடக்குண்ட சிறியவர்கள். ஆதலினால், உம்முடைய திருவருள் இன்றி முயல்வதெல்லாம் ஒன்றொழிய ஒன்றாம் என்பதறியாது, சுவை அமிழ்தம் பெறற்பொருட்டுப் பாற்கடல் கடைந்தோம். அமிழ்தம் தோன்றாது விடந்தோன்றிச் சராசரம் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்குகின்றது. இதுபொழுது எம்மை நீ காத்திலையேல் எமக்கு இன்றே இறுதியாகும்” என்று முறையிட்டனர்.

எம்பெருமானும் ‘அஞ்சலிர்’ என்றருளி , இருந்தவாறே இருந்து உளத்தில் எண்ணித் தன்னுடைய மலர்க்கரத்தை நீட்டினான். நஞ்சு செந்தாமரை மலர்மீது உள்ள கருவண்டு போல அவரது திருக்கரத்தை அடைந்தது ; அவரது பார்வையினால் சிற்றுருவாய் அடங்கியது.

எம்பெருமான், தேவர்களை நோக்கிப் புன்னகையுடன், “இந்த நஞ்சை உண்ணவா? அல்லது தூரத்தில் எறிந்துவிடவா?” என்று வினவினார். எறியும்படிக் கூறினால், நஞ்சால் தம்முயிர்க்கு இறுதி வரும், ஆனால், இறைவனை நஞ்சுண்ணும்படிக் கூறுதல் தமக்கு இழிவு எனும் சிந்தனையால் அச்சமும் நாணமுங் கொண்டு தேவர்கள் தலை கவிழ்ந்து ஒன்றும் கூறாமல் வாளா நின்றனர்.

இறைவன் இறைவியின் திருமுகத்தை நோக்கிக் குறிப்பாக வினவினன்.

உலகெலாம் ஈன்று புரந்தரும் அன்னை அவ்வுலகின்மேல் வைத்த அளவிலாப் பெருங்கருணையாலும் கொழுநன் மீது கொண்ட பேரன்பினாலும் இறைவனின் செங்கையில் இருந்த கருவிடத்தைக் குறித்து நோக்கினள். அவளுடைய திருநோக்கால் நஞ்சும் அமுதமாயிற்று. இறைவன் வானவர்க்கு இரங்கி அகிலமும் உய்ய வல்விடம் பருகினான்.; பருகிய நஞ்சினை மிடற்றினில் தங்குமாறு நிறுத்தினான். அது திருமிடற்றுக்கு அழகு செய்து, தேவமகளிரின் மங்கல நாணினைக் காத்தது.

Siva drinking World Poison - By Nandlal Bose (National Gallery of Modern Art, New Delhi)

அவனும் திருநீலகண்டன் ஆனான்.

இறைவன் நஞ்சினை உமிழ்ந்தால், புறத்தில் இருக்கும் எண்ணற்ற உயிர்கள் அழியும். விழுங்கினால் அகத்தில் உள்ள எண்ணற்ற உயிர்கள் அழியும். எனவே விழுங்கவும் செய்யாமல், உமிழவும் செய்யாமல் நஞ்சினைக் கண்டத்தில் நிறுத்தினான்.

விழுங்கிய பொருள் உணவுக்குழாய் வழியே குடலைச் சென்றடையும் ; ஒவ்வாத பொருளெனின் வாந்தியாய் வெளியே உமிழப்பட்டுவிடும். இதுதான் இயற்கை. ஆனால், இறைவன் தானுண்ட நஞ்சினை மிடற்றிலே இருக்குமாறு நிறுவினான். இறைவன் தன்னுள்ளும் புறத்தும் இருக்கும் உயிர்கள் நலிவடையாமல் இருக்கும்பொருட்டு உண்டநஞ்சை விழுங்காமலும் உமிழாமலும் மிடற்றில் நிறுவி அங்கேயே இருக்கும்படிச் செய்ததும் அவனுடைய அளவிடமுடியாத பெருங்கருணைக்கும் பேராற்றலுக்கும் தலைமைத்தன்மைக்கும் அடையாளமாகும்.

உலகியற்கையில் காணப்படாத இறைவனின் இச்செயற்கரிய செயலே மணிவாசகப் பெருமானால் ‘விடமுண்ட சதுர்’ எனப் போற்றப்பட்டது.

இந்தவரலாறு காஞ்சிப்புராணத்தில் உள்ளது. சிற்சில வேறுபாடுகளுடன் வேறு புராணங்களிலும் காணலாம்.

முதல்வனின் இந்த சதுரைத் திருமுறைகள் பலவாறு இலக்கியச் சுவையும் பத்திச்சுவையும் மிளிர விதந்தோதுகின்றன

அப்பர்பெருமான் தம்முடைய தசபுராணம் எனும் திருப்பதிகத்தில்,(4;134), கடலில் நஞ்சு எழுந்த கொடுமையையும் இமையோர் ஓடியதையும் படம்போலக் காட்டுகின்றார்.. ‘பெரிய மலையைச் சுற்றிய அரவம் நஞ்சைக் கக்கவே, அதைக் கைவிட்டு இமையோர் பயத்தால் இரிந்தோடினர். நெடுமாலின் அழகியவெண்ணிறத்தை அடுவதாகி எழுந்த வெப்பம் ஆகாயத்தைச் சுடுவதாகி விசும்பில் எழுந்து, அதன் வேகம் பெருகியது. தேவர்கள் இதற்கு ஒரு பரிகாரம் அருளுக பிரானே என வேண்டவே , பெருமான், அருள்கொண்டு மாவிடத்தை, அது பிறரை எரியாமல், வாங்கி உண்டான். அந்நஞ்சு இமையோர் முதலோரை எரிக்குமேயன்றித் திருநீலகண்டனை எரிக்குமோ? பிறரை எரியாமல் அந்நஞ்சினையுண்ட அவனே தேவதேவன்.

செயற்கரிய இச்செயலாற்றி வென்ற திறம் தோன்ற வெற்றிக்கொடி தூக்கினன் என்பது தோன்றத் திருஞான சம்பந்தப் பெருமான், “உண்ணற்கரிய நஞ்சை உண்டு ஒருதோழம் தேவர் விண்ணிற் பொலிய அமுதம் அளித்த விடைசேர் கொடியண்ணல்”என்று அருளினார்.

தேவர்களின் அச்சத்தையும் அதை இறைவன் மிக எளிதில் நீக்கிய் வல்லமையையும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் ஒரே வரியில், “திரைமாண் டழற்கான்ற நஞ்சை,’எனத்தா’ (என் அத்தா – எங்கள் தலைவா) என (என்று சொல்ல) வாங்கி (கைநீட்டி எடுத்து) அதுஉண்ட கண்டன்”த் திருநெல்லிக்கா திருப்பதிகத்தில் காட்டினார்.

இக்காட்சியைப், புகலியில் வித்தகர்போல அமிர்தகவித் தொடைபாடும் வரம் பெற்ற அருணகிரிப் பெருமான்,
“கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை பெருமாளே”
எனப்பாடினார்.

‘வாங்கி’ எனப் பிள்ளையார் பயன்படுத்திய சொல்லையே தாமும் ஆண்டு மேலும் விரித்தார். வாங்கிய நஞ்சை ‘நீ கண்டத்தில் சும்மா இங்கேயே இரு’ என இறைவன் வைத்தானாம். ‘கொடிய விஷத்தைக் கைநீட்டி எடுத்துத் தன் அழகிய மிடற்றில் ‘இரு’ என்று அதனை நிறுத்தி, அங்கேயே அதைத் தாங்கி நிலைக்க வைத்த சிவபிரானுக்குக் குருமூர்த்தியே’ என்பது இத்திருப்புகழ் அடிக்குப் பொருளாம்.

சிவபெருமானின் நஞ்சுண்ட சதுர் திருமுறையாசிரியர்களால் பல்சுவைப்பட ஓதப்படுகின்றது.

அடையாளம் காட்டும் உண்மை:

அதியமான் என்னும் குறுநிலமன்னனை வாழ்த்திய அவ்வையார், “நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும” என்று வாழ்த்தினார். ‘நீலமணிமிடற்று ஒருவன் போல” என்றதன் கருத்து, சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல் வேண்டும்’ என்பதாம்.
சிலப்பதிகாரமும், “விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்” (12) என்று இறைவனின் சாவாமையையும் பேராற்றலையும் போற்றியது.

ஸ்ரீமத் அப்பைய தீட்சிதர் அவர்கள், “கங்கையைத் தூயது என்று தரித்திலீர்; நஞ்சைச் சுவையுடையது என்று உண்டலீர்; இவ்விரு செயல்களையும் உலகைக் காப்பதற்காகவே செய்தீர். இவை உம்மையல்லாத பிறர் செய்தற்கு அரியனவே” என்றார். (ப்ரஹ்மதர்க ஸ்தவம் 3ஆம் சுலோகம்)

ஆதி சங்கரரும் சிவனின் நஞ்சுண்ட கருணையை,

“உன்னகத்தும் புறத்துமுள நிற்பனவு நடப்பனவும்
உய்யு மாறும்
மன்னமரர் தொலையாமல் மருந்தாகு மாறுமன்றோ
வைத்தாய் கண்டத்
துன்னரிய கொடியசுடு விடமதனை யுள்விழுங்கா
யுமிழ்ந்தா யல்லை
எல்லையில்லா நின்னருளின் வல்லமைக்கிஃ தேசான்றாம்
இமையோ ரேறே”

– சிவாநந்த லகரி 30

(அகடு – வயிறு; அமரர் –தேவர்; மருந்தாகுமாறு –அமிழ்தம் உண்டாகுமாறு)

எனப் பாடினார்.

அயனும் திருமாலும் உள்ளிட்ட தேவர்கள் அஞ்சிய நஞ்சு பெருமானுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதை,

“அமரர் குழு எல்லம் அஞ்சும் விடத்தை நீ எவ்விதம் பார்த்தாய்?
கைம்மலரில் அதனைத் தாங்கினாய்!
அது கனிந்த நாவற் பழமோ?
அதை நாவில் வைத்தனையே,
அது என்ன சித்த குளிகையோ?
சம்புவே!
தப்பாமல் அதனை மிடற்றில் நிறுவினையே,
கரிய மணியோ அது?தயைக் கடலே!”

(சிவானந்தலகரி 31)

எனச் சங்கரர் போற்றினார்.

இந்தப் புராணக் கதையின் கருத்து

ஜென்மப் பகைவர்களான தேவரும் அசுரரும், இக்காலக் கொள்கையற்ற அரசியல் கட்சியைனரைப் போல, சுயநலத்துக்குக் கூட்டுச் சேர்ந்தனர்.(கட்சி மாற்சரியங்களை மறந்து விட்டு நமது சட்டசபை உறுப்பினர்கள் ஊதிய உயர்வுக்கும் சென்னையில் வீட்டு மனைக்கும் கோரிக்கை மனு கொடுத்த வேகத்தையும் ஒற்றுமையையும் ஒப்பு நோக்குக) தேவாசுரர்கள் அமுதத்தை எதிர்பார்த்தனர். ஆனால் நஞ்சு வந்தது. இறைவனைச் சரண் புகுந்தனர். அவர்கள் அமுதுண்ணத் தான் நஞ்சுண்டான்.

உயிர்கள் நல்வினைகளும் செய்கின்றன; தீவினைகளும் செய்கின்றன. நல்வினைப் பயனான இன்பத்தையே நாடி ஏற்றுக் கொள்ள விரும்புகிறன. தீவினைப்பயனாகிய துன்பத்தைக் கண்டு அஞ்சுகின்றன; அதைத் தவிர்க்க விரும்புகின்றன. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்ததுபோன்றதுதான் உயிர்கள் செய்யும் வினைகள். ஈசனிடத்தில் சரணடையும்போது , சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதலால், நல்வினைப் பயனை உயிர்கள் அனுபவிக்கும்படி அளித்துத் தீவினைப் பயனை அவன் ஏற்றுக் கொள்கிறான். கரியமிடறு அந்தக் கருணைக்கு அடையாளமாகத் திகழ்கின்றது.

இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவையாகிய கொலைத்தண்டனைக்கு உரிய கழுமரத்தைக் காட்டிலும் இறைவனின் நீலகண்டம் அவனின் பேராற்றலுக்கும் பெருங்கருணைக்கும் அடையாளமாக, மானுடரின் பாவக்கழுவாய்ச் சின்னமாகப் பெரிதும் திகழ்கின்றது. இரண்டையும் சீர்தூக்கி உண்மை அறிக.

15 Replies to “பேராற்றலின், பெருங்கருணையின் சின்னம்: திருநீலகண்டம்”

 1. Sorry I don’t know yet to type in Tamil. Mr.Kumarasamy’s articles are simply awesome. As a Tamil Saivaite I am thrilled to read such treasures. Thanks Tamil Hindu!

 2. Very good article. Mr. C.N. Muthu Kumaara Saamy has analysed this from a new angle- The Kindness and sacrificial part of Lord shiva.

  Shiva is a perfect God. If we worship Shiva with intimate devotion as how the great Maarkkanteyan, we can also be saved.

 3. அன்பர் முத்துக் குமாரஸ்வாமி அவர்கள் புதிய அறிமுகம். நான் கற்றுக்கொள்ள நிறைய தரும் அறிமுகம்.

  சிவானந்த லஹரியின் இரண்டு பாக்களைத் தமிழில் தந்திருக்கிறீர்களே, அது யாருடைய மொழிபெயர்ப்பு? எப்போது எழுதப்பட்டது?

  சிலுவை கொடூரமான தண்டனைக் கருவி. அதுவே இன்று கருணைக்கும் ரட்சிப்பவனுக்கும் சின்னமாக மாறிவிட்ட விடம்பனத்தைப் பற்றிச் சொல்வார்கள்.

  தண்டனைக் காளானவன் அதிகம் கஷ்டப்படாமல் சிரச்சேதம் செய்யக் உருவானது தான் ஸ்பானிஷ் கில்லோடீன் என்றும் அது இன்று கொடூரத்தின் சின்னமாகியுள்ள விடம்பனத்தையும் சிலுவையின் விடமனத்தைப் பற்றிச் சொல்லும் போது சொல்லப் படித்த நினைவு. எங்கே என்பது நினைவில் இல்லை.

 4. அன்புள்ள வெங்கட் சுவாமிநாதன் அவர்களுக்கு, சிவானந்தலகரிப் பாடல்களைச் சுவைத்தமைக்கு நன்றி. அவை என்னுடைய தந்தையாரின் மொழிபெயர்ப்பு. அவர் தமிழாசிரியர். சிவபக்தர்.சங்கரர், அப்பைய தீட்சிதர், நீலகண்டதீட்சிதர் முதலிய சிவபக்தர்கள் மேல் அபாரபக்திகொண்டவர்.அவர் எனக்கு விட்டுச் சென்ற பெரிய சொத்து வடமொழிமேல் வெறுப்பின்மை; திருமுறைகள்மேல் பற்றுடைமை.

 5. அற்புதமான கட்டுரை ஐயா.

  இதற்கு முந்தைய கட்டுரை ஒன்றில் தமிழில் கண்ணப்பர் பற்றிய சிவானந்த லஹரி பாடலைப் பார்த்தபோதே கேட்கவேண்டும் என்று எண்ணினேன். நீரோடை போன்ற தெள்ளிய மொழியாக்கம். அவற்றை ஆக்கியது தங்கள் தந்தையார் என்றறிந்து மேலும் மகிழ்ச்சி ஏற்படுகிறது! தயை கூர்ந்து அவரது பெயரையும் கூறுங்கள்.

  சிவ தத்துவத்தின் பல கூறுகளையும் விளக்குமாறு இதுபோன்று மேலும் படைப்புக்களைத் தாங்கள் எழுத வேண்டும்.

 6. Dear கோ.ந.முத்துக்குமாரசுவாமி,

  This article details as how the Lord Siva was kind enough to take all the Poison to save the livings. This also reminds as how we struggle to store the Radioactive waste today.

  In this good article, which is very poityand optimistic, does not it sound like an aberrent to contarst the sacrifice made by Jesus christ. Infact Jesus Christ was, in my opinion, the only silverline in the otherwise mind boggling dictotarial, dogmatic and nauseous literature contents from the Jerusalem?

  Is it not that as per Hindu tradition, even Jesus Christ could be considered as an Avathaar of God – though world wide, the Christians used Jesus Christs good life and sacrifice- but probagates Judaism in the name of Christianism and thus carryout their hate campaign for other religions!

  In the above Context, is it not appropriate for us to expalin the real christianism -the same as developed by Jesus Christ, which contains Ahimsa and tolerance in line with Hinduism!

  I request you to kindly spare your time to read my feed back on the article,” Indhiyaavum Kiristhuavaththin Mukangkalum”!

  I am sure, you are much learned than me, and hope you wont take my above wrtings as an offensive on your writings!

  Vannakkangkaludan,

  Thiruchchik karan.

 7. Thank you Thiruchikarar. I do agree Jesus was great soul, though not comparable with our saints. I do believe he had been sent by God to the land to propagate what the people deserved there and what they were capable to learn. I used to read Thomas Kempis work “Imitation of Christ”and Bible, and other christian Literatures and compare the divine experiences of Christian Saints like St Francis,St.Augustine etc. with that of our Hindu saints. But I donot agree with their idea of Paganism, hatred towards other religions and proselytisation of gullible people. Some of the utterances of St Austine echo the expriences of our saints.I enjoy them myself. When I share them with my Christian friends,they , not only donot reciprocate my feelings, but try to make pre -empt bid to their own dogmas as though , we are paupers. Even Dr G.U.Pope, the much lauded translator of Thiruvasagam, is also not free from this vice.Our Saints and Seekers have expressed much stronger and loftier feelings, than Jesus christ on Ahimsa and Tolerance and stood by what they had expressed. Our duty is to let know our people the guidance given by our Great souls as and when it suits.

  Ofcourse, I wish to read your feed back on “Indhiyaavum christhuvathin mugangkaLum”

 8. Dear Mr. கோ.ந.முத்துக்குமாரசுவாமி,

  We can not compare any other “saints ( Christian Saints like St Francis,St.Augustine) ” other than Jesus Christ, with our saints, because our saints can think freely, independently.In the independent thinking they had come out with wonderful Philosophy, explaining the concepts of hinduism and brought the pearls out from the deep ocean of Hinduism, some time even clearing the dust which covered the Hinduism!

  But the “Christian” saints has limited or no Liberty, they unfortunately distributed Judaism in the cover of Christinaism!

  I credited Jesus Christ, for atleast he tried to make the people lived in the region to behave civilised!

  I have brought my feedback here for your ready refernce as follows!

  //ஆனால் சுதந்திர இந்தியாவின் செக்யுலர்தனமும், நேருவிய சோஷலிசமும் இந்து அறிவுலகத்தையும் பீடித்திருக்கிறது.. நண்பருக்கு எழுதிய பதிலில், ”இதைப் பேசப் போனால், உடனடியாக “எம்மதமும் சம்மதம்” என்ற புள்ளிக்கு சராசரி இந்துக்கள் நகர்ந்து விடுகிறார்கள். பிற மதங்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், அதிகார வெறியையும் விமர்சிப்பது கூட தவறான விஷயம் என்ற கருத்து இந்து மனதில் உள்ளது. இதை, இதையே தான் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்! கிறிஸ்தவ மோசடியைப் பற்றிப் பேசுவதே மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்ற கருத்தே பரவலாக உள்ளது… அது அகல வேண்டும” என்றும் குறிப்பிட்டேன்//

  கிருஸ்தவர்களை நாம் வெறுக்கவில்லை. அவர்களும் நம் சகோதரர்கள் தான்.

  இயேசு கிறிஸ்துவின் அசலான கிருத்துவ மதத்தையும் நாம் வெறுக்கவில்லை. அதுவும் நல்ல மதம்தான். அதில் உள்ள நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம், பின் பற்றுவோம்.

  இயேசு கிறிஸ்துவை , கிருஸ்தவர்கள் கடவுளின் மைந்தன் என்கிறார்கள். நமக்கோ ஏசுவும் ஒரு கடவுள்தான். முருகனை, விநாயகரை வழிபடுவது போல இயேசு கிறிஸ்துவை வழிபட நமக்கு தயக்கம் இல்லை.

  ஆனால் இந்தியாவில் உள்ள கிருஸ்தவர்கள், குறிப்பாக கிறிஸ்தவ மத போதகர்கள் நமக்கு கிருஸ்தவ மதம் என்று அறிமுகப் படுத்துவது எதை ?

  சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் (கிருஸ்தவர்) வீட்டிற்கு சென்று இருந்தேன். அவரைப் பார்க்க அவருடைய இன்னொரு நண்பரும் வந்தார்.

  என்னைப் பார்த்தவுடன் அவர் நேராக என்னிடம் வந்து ” பாலாஜி…..” என்றார்.

  நான் ” நல்லது, உங்கள் பெயர் பாலாஜியா?” என்றேன்.

  உடனே அவர் உரத்த குரலில் ” எனக்கு தெரியும்….. நீங்கள் வழி படுவது பாலாஜியைத் தானே. அவர் ஒரு கல், உயிர் இல்லாதவர். உண்மையில் ஜீவனுள்ள கடவுளை நான் உங்களுக்கு காட்டுகிறேன்” என்றார்.

  இத்தனைக்கும் பாலாஜி என்னுடைய இஷ்ட தெய்வமோ, சிறப்பு தெய்வமோ கூட இல்லை.

  சரி இன்றைக்கு நமக்கு நேரம் சரியில்லை. நடப்பது நடக்கட்டும் என்று இருந்தேன்.

  அவர் தொடர்ந்து பல செய்திகளை, பிரச்சாரத்தை தொடர்ந்தார்.

  நான் பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு இரண்டையும் படித்து இருந்ததால் எனக்கு அவர் கூறியதில் புதியதாக எதுவும் இல்லை. மேலும் அவர் கூறியதில் இந்து மதக் கடவுள்கள் பொய்யானவை, அல்லது வலிமை இல்லாதவை, இந்து மதம் pagan மதம் என்பது போன்றவற்றுக்கே அதிக நேரம் ஒதுக்கினார்.

  அவரது பிரசாசாரத்தை முடித்து வைக்க முனைந்து நான் பேச ஆரம்பித்தேன்.

  இயேசு கிறிஸ்துவின் கருத்துக்கள் சிறப்பானவை என்றும், அவரை நான் கடவுளாக கருதுவதாகவும் கூறினேன்! அது அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை.

  அவருடன் சேர்ந்து சர்ச்சில் பிரேயரில் கலந்து கொள்ளத் தயார் என்றும், நான் செய்த பாவங்களுக்கு இயேசு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது எனக்கு மன நிறைவைத் தரும் என்றும் கூறினேன். நான் கிருஸ்தவப் பள்ளியில் படித்து இருந்ததால், பிரேயரில் கலந்து கொள்வது எனக்கு ஒன்றும் புதிதும் அல்ல.

  ஆனால் அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். அவருக்கு வேண்டியது இரண்டுதான். ஒன்று நானும் அவரைப் போல, அவர் கூறும் தெய்வங்களைத் தவிர பிற தெய்வங்கள் எல்லாம் (குறிப்பாக இந்து கடவுள்கள்) ஜீவன் இல்லாத வலிமை இல்லாத கற்கள் என்று அறிவிக்க வேண்டும். இரண்டாவது நான் கிருஸ்தவனாக மதம் மாற வேண்டும்.

  “நான் ஏற்கனவே கிறிஸ்துவன் தான், இயேசு கூறிய கருத்துகளில் இருந்து நான் மாறி நடக்கவில்லை” என்றேன்.

  ஆனால் சான்றிதழில், கெஜட்டில் பெயர் மாற்றம், மத மாற்றம் செய்வதுதான் அவருக்கு தேவையாக இருந்தது.

  எனக்கு பைபிலில் இயேசு கிறிஸ்து, ” இவர்கள், பிறரை தங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு வானத்தையும், பூமியையும் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மதம் மாறிய பின் தங்களை விட கொடிய பாவிகள் ஆக்குகின்றனர்” என்று கூறியதே நினைவுக்கு வந்தது.

  இப்ப‌டியாக‌ பிற‌ ம‌த‌ங்க‌ளின் மீது வெறுப்பைத் தொட‌ர்ந்து உருவாக்கித் தான் முன்பு புனித‌ப் போர்க‌ள் என்ற‌ பெய‌ரில் இர‌த்த‌ ஆறு ஓட‌ விட‌ப் ப‌ட்ட‌து. இப்போதும் வேறு பெய‌ர்களில் அந்த‌ “புனித‌ப் ப‌ணி” புதிய‌ ஆயுத‌ங்க‌ளுட‌ன் ந‌டை பெறுகிற‌து.

  இந்து மதத்தைக் காக்கக் கூட விவேகானதர் போன்ற சிலர் அவ்வப் போது தோன்றுகின்றனர்.இந்துக்களில் கணிசமானவர்கள் ஹிந்து மதத்தை சரியாகப் புரிந்து கொள்கின்றனர்.

  இயேசு கிறிஸ்துவை சரியாகப் புரிந்து கொள்ள யாருமே இல்லையா? பேசாமல் சரியான கிறிஸ்தவ மதத்தை விளக்க நானே புதிய பிரிவை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட எனக்கு உணர்ச்சி தோன்றியது!

  கிருஸ்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, இயேசு கிறிஸ்து கூறிய சரியான கிருத்துவ மதத்தை படிப்பிக்கும் கடமையும் நம் தோளில் தான் சுமத்தப் பட்டு உள்ளது.

  நண்பர்களே நமக்கு அதிக பொறுப்பு உள்ளது. ஆனால் நாம் மிகவும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க வேண்டும்!

  இந்துக்க‌ளின் வ‌ழி, அஹிம்சை வ‌ழி, அன்பு வ‌ழி, அறிவு வ‌ழிதான்!

  முர‌ட்டுத் த‌ன‌மும், மூட‌த் த‌ன‌மும் உடைய‌வ‌ர்க‌ளிட‌ம், முள்ளில் விழுந்த‌ சேலை போல‌ ந‌ம‌து ச‌முதாய‌ம் சிக்கியுள்ள‌து. சேலைக்கு சேதார‌ம் வ‌ராம‌ல் எடுப்ப‌தோடு, முள்ளை ம‌லராக்க‌ வேண்டிய‌ ப‌ணியும் ந‌ம்மிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்டு உள்ளது.

  செய‌ல் ச‌க்க‌ர‌த்தை உருட்ட‌ ந‌ம‌து தோள்க‌ளைக் கொடுத்து உத‌வுவோம்.
  ——

  I only wish to remind that – undermining other Religions has been the exclusive Character, back bone of almost all other Religion except Hinduism.

  I think a Hindu, approach any religion with an optimistic view, try to find and appreciate the good things in it, if require adopt the good things from it, then try to clear the false assumptions in it.

  Its obvious, that the followers of almost all other religions (unfortunately Buddhists also), approach every other religion, with the sole motive of finding some faults in other religions, even if there is no faults try to interpret some faults in them, then depict the entire religion as a false way and finally condemn that the other religion is totally condemnable and then upheld their own Religion as the only true path!

  I also wrote the following under the Periyaarin Marupakkam- paakam-10

  “Hinduism, have motherly consideration to all the religions. We want all the paths leading to God to be preserved. We dont want any religion to be obliterated or ostarsizesd. We want to preserve and develop all the religions!”

  I just wish to remind, hope you wont consider it as if I am offending you, that we shall not by mistake cross the Hinduism way of approaching things and get into others way, inadvertently! it may undermine all the good work done by our saints so far, and may left Hinduism filled with tactics adopted by others!

 9. அன்புள்ள திருச்சிக்காரருக்கு, ஏறக்குறைய நானும் உங்கள் கருத்துடையவனே.’அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்’ எனச் சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய காலத்திற்கும் முற்பட்ட, பிற்பட்ட, தமிழ்நாட்டின் எல்லைக்கும் அப்பாற்பட்ட, கால நில எல்லைகளைக் கடந்து இறையடியார்களுக்கெல்லம் அடியேன் எனத் தம்மைக் கூறிக் கொள்கின்றார். இறையனுபவம் நம்முடைய monopoly அல்ல என நம் பெரியவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி உள்ளார்கள். தத்துவத்தின் அடிப்படையில் பொதுமை கானவும் வழி வகுத்திருக்கிறார்கள். ‘செய்வானும் செய்வினையும் அதன்பயனும் தருவானும் எனவிதித்தபொருள் நான்கு’ என்றும் இந்நான்கும் சைவத்துக்கு உரியதென்றும் சாக்கிய நாயனார் புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். இந்தநான்கையும் யார் நம்புகிறார்களோ அவர்கள் சைவர்கள்; நம்மால் மதிக்கப்படத் தக்கவர்கள் என்பது கருத்து. சாக்கியநாயனார் தம்முடைய சமயத்தால் பவுத்தர் பவுத்தராகவே வாழ்ந்தவர், ஆனால் இந்த நான்கையும் அவருடைய கல்வியினால் கற்றுத் தெளிந்தமையால் அவரும் 63 சைவநாய்ன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகின்றார். Indeed I am not one for crossing swords with other religionists, but wish to consolidate mine, protect mine.

 10. அன்புள்ள நண்பருக்கு,

  மொழிபெயர்ப்பு தங்கள் தந்தையாரது என்று அறிந்ததில் மகிழ்ச்சி.ஆனால் ‘எனது தந்தையார் செய்தது’ என்று சொல்லி அத்தோடு மௌனமாகிவிட்டீர்களே. பெயரைக் கூடச் சொல்லவில்லையே. சிவானந்த லஹரி தமிழில் இருக்குமானால், அது பொதுச் சொத்து அல்லவா? வீடா, நிலமா? நீங்களே வைத்துக்கொள்ள? இதையெல்லாம் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? ஒன்று புத்தகமாக வெளியிடலாம். அல்லது, இங்கேயே கூட, ஆசிரியர் குழு சம்மதிக்குமானால், பகுதி பகுதியாக தமிழ் ஹிந்துவில் வெளியிடலாம். யோசியுங்கள். ஆசிரியர் குழுவும் யோசிக்கலாம்.நன்றி.

 11. ”எனக்கு பைபிலில் இயேசு கிறிஸ்து, ” இவர்கள், பிறரை தங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு வானத்தையும், பூமியையும் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் மதம் மாறிய பின் தங்களை விட கொடிய பாவிகள் ஆக்குகின்றனர்” என்று கூறியதே நினைவுக்கு வந்தது.”

  நீங்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் இயேசுவின் வாசகங்கள் எங்கே இருக்கிறது என்ற் விவரம் தரமுடியுமானால் நல்லது.

 12. Venkat Swaminathan .

  ” மாயக்காரராகிய வேத பாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவர்கள் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களில் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்”

  நீங்கள் இந்த வரிகளைக் காண:

  பைபிள் –

  பகுதி :புதிய ஏற்ப்பாடு:

  மத்தேயு எழுதின சுவிசேஷம்

  அதிகாரம்: 23 (மத்தேயு 23)-

  செய்யுள்: 15

  (English : Matthews 23 , 15)

 13. கட்டுரையின் கருத்துக்களை மட்டும் படித்தால் போதாது, மறுமொழிகளையும் படித்தால் தான் நிறைவு ஏற்படும் போல! அருமை!

 14. சிங்கள ராஜகுமாரியும் மாணிக்கவாசகரும்

  மாணிக்கவாசகரும் ஒரு பெண்ணின் நோயை ஓட்டி, நம் மதத்தை நிலைநாட்டியிருக்கிறார். அவர் ஜயித்தது ஜைனத்தை அல்ல; பெளத்தத்தையாகும். இந்தக் கதையில் வருகிற ராஜா நம் தேசத்தைச் சேர்ந்தவன் அல்ல. அவன் பக்கத்துத் தேசமான சிங்களத்தின் ராஜா. சிங்களம் என்கிற லங்கையில் புத்த மதம்தான் நெடுங்காலமாகவே பிரதானமாயிருந்தது.

  இந்த பெளத்த ராஜாவுக்கு ஊமையாக ஒரு பெண் பிறந்தது. வேத மதத்தின் பெருமையைத் தெரியப்படுத்துவதற்கு ஊமையாகவாவது ஒரு பெண் தான் வரவேண்டியிருக்கிறது! சிங்கள ராஜாவுக்கு ஊமையாகப் பிறந்தது பிள்ளையாக இருந்திருக்கக் கூடாதா? ஆனால் அப்படி இல்லை. இந்தப் பெண்ணைப் பேச வைப்பதற்கு அப்பன்காரன் பல சாமியார்களிடம் அழைத்துக்கொண்டு போனான். எப்போதுமே, ஏதாவது கஷ்டம் வந்து விட்டால், எந்த மதத்தைச் சேர்ந்த சாமியாராக இருந்தாலும் அவரிடம் ஓடுவார்கள். சிங்களத்து பெளத்த ராஜா மாணிக்கவாசகரைப் பற்றிக் கேள்விப்பட்டு அப்போது அவர் இருந்த சிதம்பரத்துக்குப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான். அதுவே வைதிகத்துக்கும் பெளத்தத்துக்கும் பலப் பரீக்ஷை நடத்தவும் வாய்ப்பாய் அமைந்தது. ஊமைப் பெண்ணை எந்த மதஸ்தர் பேச வைக்கிறாரோ அந்த மதம் ஜயித்ததாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று இரண்டு கட்சிகளும் ஒப்புக் கொண்டன.

  வாழ்க்கை முழுவதையும் ஈச்வரார்ப்பணம் செய்து அருட்பழமாயிருந்த மாணிக்கவாசகர், “அப்பா நடராஜா! இந்த ஒரு குழந்தையின் நிமித்தமாக லோகம் முழுவதும் உன் கருணை வெள்ளத்துக்குப் பாத்திரமாகும்படி ஸத்யமான வேத தத்துவத்தை நிலைநாட்ட மாட்டாயா?” என்று பிரார்த்தித்துக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்து ஈச்வர ஸம்பந்தமான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

  ‘டக் டக்’கென்று ஊமைப் பெண் எல்லாவற்றுக்கும் வாய் திறந்து பதில் சொன்னாள்.

  இப்படி முதல் இரண்டு வரி மாணிக்கவாசகரின் கேள்வியும், அடுத்த இரண்டு வரி சிங்கள ராஜகுமாரியின் பதிலுமாக ஒவ்வொரு அடியும் அமைந்து, இப்படி இருபது அடிகள் கொண்டதாகத் திருவாசகத்தில் இருக்கிற பாடல் தான் ‘திருச்சாழல்’ என்பது. அதைக் கேட்டு பெளத்தர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *