அசுர சக்திகளும் தமிழ் வீரர்களும் அரசுரிமையும்: அமரர் கல்கி

அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்” நூலில் இருந்து…

தியாக சிகரம் – அத்தியாயம் 85

சிற்பத்தின் உட்பொருள்

சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத்தேவர், தம்மைத் திருவயிறு சுமந்து பெற்ற அன்னை செம்பியன் மாதேவியைப் பார்த்து, “அம்மா! இந்த உலகில் யுத்தப் பைத்தியம் பிடித்து அலைகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். போர் செய்யாத நாள் எல்லாம் வீண் போன வெறும் நாளாகவே அவர்களுக்குத் தோன்றுகிறது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்தாம் என் நண்பர் வந்தியத்தேவரும், பொன்னியின் செல்வரும். தாங்களோ, இறைவனைப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாள் என்று கருதுகிறவர் ஆயிற்றே? தாங்களும் போர்த் தொழிலை ஆதரித்துப் பேசுவது மிக மிக ஆச்சரியமாயிருக்கிறது!” என்றார்.

அப்போது செம்பியன் மாதேவி, “என் அருமை மகனே! வேறு யார் போர்த் தொழிலை இகழ்ந்து பேசினாலும் நீ பேசக் கூடாது. பூங்குழலியும் பேசலாகாது. வல்லத்து அரசர் போர்த் தொழிலிலும் வல்லவராயிருப்பதினாலேயல்லவா நீ இன்று உயிரோடிருந்து இறைவனைத் துதிக்கும் பாடல்களை என் உள்ளமும், உடலும் உருகப் பாடுகிறாய்?” என்றார்.

“தாயே! நான் தங்கள் அருமைப் புதல்வரின் உயிரைக் காப்பாற்றியது இருக்கட்டும். அவரும், அவரைக் கரம் பிடித்த தங்கள் மருமகளும் என் உயிரைக் காப்பாற்றியதை நான் மறக்க முடியாது. பூங்குழலி அம்மையாரின் போர்க் குணம் அல்லவோ நான் இன்று உயிரோடிருப்பதற்குக் காரணமாயிருக்கிறது?” என்றான் வந்தியத்தேவன்.

“பரமேசுவரனும், துர்க்கா பரமேசுவரியும் நம் எல்லாரையும் காப்பாற்றுகிறார்கள்! அவர்களுடைய கருணை இல்லாவிட்டால், நாம் ஒருவரையொருவர் காப்பாற்றுவது ஏது?” என்றார் மதுராந்தகத்தேவர்.

“குழந்தாய்! கருணையே வடிவமான சிவபெருமானும் பலமுறை போர் செய்ய நேர்ந்தது. அன்பும் அருளும் சாந்தமும் உருக் கொண்ட ஜகன் மாதாவான துர்க்கா பரமேசுவரியும் யுத்தம் செய்வது அவசியமாயிற்று. இந்தப் புண்ணிய ஸ்தலத்திலுள்ள ஆலயத்தில் அம்பிகை அறம் வளர்த்த நாயகியாக வீற்றிருக்கிறாள். ஆயினும் ஆலயத்தின் திருச்சுற்று வீதியில் மகிஷாசுரமர்த்தினியாகவும், தரிசனம் தருகிறாள் நீ கவனித்தாயல்லவா?” என்றார்.

“ஆம், அன்னையே! கவனித்து வியந்தேன். அண்ட சராசரங்களை ஈன்றெடுத்துக் காக்கும் அன்னை ஓர் எருமை மாட்டின் தலை மீது எதற்காக நின்று காட்சி அளிக்கிறார் என்று எண்ணி அதிசயித்தேன்!” என்றார் மதுராந்தகர்.

“ஆம், ஆம்! இந்த ஆலயத்தில் உள்ள தேவி, மகிஷாசுரனை வதம் செய்து முடித்துவிட்டாள். அதனால் எருமையின் தலையில் நிற்கும் தேவியின் திருமுகத்தில் அன்பும் அருளும் குடிகொண்டிருக்கக் காண்கிறோம். மாமல்லபுரத்துக் குகைச் சிற்பங்களிலே தேவி மகிஷாசுரனுடன் போரிடுவது போல் அமைந்த சிற்பம் ஒன்று இருக்கிறது. அங்கே துர்க்கா பரமேசுவரி வீர பயங்கர ரணபத்திர காளியாகத் தரிசனம் தருகிறாள். சகலலோக மாதாவாகிய துர்க்கா பரமேசுவரி, கேவலம் ஓர் எருமை மாட்டுடன் ஏன் சண்டை போட வேண்டும். அதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் வேண்டுமா என்று வெளிப்படையாகப் பார்ப்பவர்களுக்குத் தோன்றக் கூடும். என் அருமைக் குமாரா! நம் பெரியோர்களின் உள்ளத்தில் உதயமான இத்தகைய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் உட்பொருள்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்வதற்கு தக்க பரிபக்குவம் வேண்டும். அறிந்து கொள்ள வேண்டுமென்னும் சிரத்தையும் வேண்டும்!”

“தேவி! எங்களுக்கெல்லாம் பரிபக்குவம் இருக்கிறதோ என்னமோ, தெரியாது! ஆனால் சிரத்தை இருக்கிறது. தாங்கள் திருவாய் மலர்ந்தருளும் வார்த்தை ஒவ்வொன்றையும் சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருக்கிறோம்! ஏன்? நமது வல்லத்து அரசருடைய ஓயாமற் சலிக்கும் கண்கள் கூடவல்லவா தங்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றன?” என்றார் அருள்மொழி.

இந்த வார்த்தைகள் அங்கே சிறிது கலகலப்பை உண்டாக்கின. வந்தியத்தேவன் அடிக்கடி இளைய பிராட்டியின் திருமுகத்தை நோக்குவதை அருள்மொழிவர்மர் குறிப்பிடுகிறார் என்று அறிந்து கொண்ட பெண்மணிகள் இலேசாக நகைத்தார்கள்.

செம்பியன் மாதேவி கூறினார்: “சிரத்தையுடன் கேட்பதானால் சொல்கிறேன், கேளுங்கள். நமது புராண இதிகாசங்களில் தேவாசுர யுத்தங்களைப் பற்றி நிரம்பக் கூறியிருக்கிறார்கள். இவ்வுலகில் திருமால் அவதாரம் எடுத்து ராட்சதர்களோடு சண்டையிட்டது பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். இறைவன் உலகத்தைப் படைத்த காலத்திலிருந்து தேவ சக்திகளும் அசுர சக்திகளும் போரிட்டு வருகின்றன. அசுர சக்திகளை இறைவன் ஏன் படைத்தார் என்று கேட்டால், அதற்குச் சிற்றறிவு படைத்த நம்மால் விடை சொல்ல முடியாது. இறைவனுடைய திருவிளையாடல் அது என்றுதான் கூற முடியும். தெய்வ சக்திகளும், அசுர சக்திகளும் ஓயாமல் போராடி வருகின்றன என்பது மட்டும் நிச்சயம். சில சமயம் அசுர சக்திகளின் கை மேலோங்குவது போல் காணப்படுகிறது. அவையே உலகை என்றென்றைக்கும் ஆளும் என்று தோன்றுகின்றது. சூரபத்மனும், இரணியனும் இராவணனும் எத்தனை பல்லாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்! ஆனாலும் அவர்களுக்கெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் முடிவு வந்து விட்டது.”

“ஆம்; ஆம்! தேவர்களையெல்லாம் அடிபணிந்து குற்றேவல் புரிய வைத்த தசகண்ட இராவணனுக்கு முடிவு வந்தபோது, இரண்டு மனிதர்களும் ஒரு சில வானரர்களும் சேர்ந்து அவனைக் குலத்தோடு நாசமாக்கி விடவில்லையா?” என்றார் மதுராந்தகத்தேவர்.

“ஆகையால் அசுர சக்திகள் மேலோங்குவதைக் கண்டு மாந்தர்கள் மனச்சோர்வு அடைந்து விடக்கூடாது. தெய்வ சக்திகள் முடிவில் வெற்றிகொள்ளும் என்று நம்பித் தர்மத்திலும், சத்தியத்திலும் நின்று போராட வேண்டும். அப்படிப் போராடுகிறவர்களுக்குத் தெய்வமும் நிச்சயம் துணை செய்யும்?”

“அன்னையே! மகிஷாசுரனைப் பற்றிச் சொல்ல வந்தீர்கள்!” என்று பூங்குழலி ஞாபகப்படுத்தினாள்.

“ஆம்; நல்ல வேளையாக ஞாபகப்படுத்தினாய், மகளே! அசுர சக்திகள் இரண்டு வகையானவை. ஒன்று மௌடீக அசுர சக்திகள்; இன்னொன்று மதி நுட்பம் வாய்ந்த அசுர சக்திகள். மௌடீக அசுர சக்தியையே மகிஷாசுரனாக நமது முன்னோர்கள் உருவகப்படுத்தினார்கள். காட்டெருமைக்கு வெறி வந்து தறி கெட்டு ஓடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்போது அந்த எருமை யானையைவிட அதிக பலம் பெற்று விடுகிறது. எதிர்ப்பட்ட பிராணிகள் எல்லாவற்றையும் சின்னாபின்னப்படுத்தி விடுகிறது. மௌடீகமும் வெறி கொண்ட காட்டு எருமையைப் போல் வலிமை கொண்டது. மௌடீகம் சில சமயம் சிங்காதனத்தில் mahishasura-mardiniஅமர்ந்து ஆட்சி நடத்தத் தொடங்கி விடுகிறது. இதைத்தான மகிஷாசுரனுடைய ஆட்சி என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். மகிஷாசுரன் தேவலோகச் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்தத் தொடங்கியபோது, மூன்று உலகங்களிலும் அல்லோல கல்லோலமுண்டாயிற்று. அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மகிஷாசுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மகிஷாசுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீகத்தோடு அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? மகிஷாசுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஓலமிட்டார்கள். அசுரர்களும் கூடச் சேர்ந்து அலறினார்கள். துர்க்கா பரமேசுவரி அப்போது கண் திறந்தாள். மாகாளி வடிவம் கொண்டு வந்து மகிஷாசுரனை வதம் செய்தாள். மௌடீக சக்தியைத் தெய்வீக சக்தி வென்றது. மூன்று உலகங்களும் மௌடீக அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றன. தேவர்களும் முனிவர்களும் அசுரர்களும் கூடப் பெருமூச்சு விட்டுத் துர்க்கா பரமேசுவரியை வாழ்த்தி வணங்கினார்கள்.

குழந்தைகளே! இப்போதுங்கூட இவ்வுலகில் மௌடீக அசுர சக்திகள் இல்லாமற் போகவில்லை. இந்தப் புண்ணிய பரத கண்டத்தின் வடமேற்குத் திசைக்கு அப்பால் மௌடீக அசுர சக்திகள் சில தோன்றியிருப்பதாக அறிகிறேன். அவர்கள் மூர்க்காவேசத்துடன் போர் புரிந்து நகரங்களைச் சூறையாடிக் குற்றமற்ற மக்களைக் கொன்று கோயில்களையும் விக்கிரகங்களையும் உடைத்துத் தகர்த்து நாசமாக்குகிறார்களாம். அவர்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய பெரிய சக்கரவர்த்திகள் இப்போது வடநாட்டில் யாரும் இல்லையாம். இந்தத் தெய்வத் தமிழ்நாட்டுக்கு அத்தகைய கதி நேராதிருக்கட்டும். அப்படி நேர்வதாயிருந்தால், வீரமறக் குலத்தில் பிறந்த நீங்கள் அந்த அசுர சக்திகளுடன் போராடச் சித்தமாயிருக்க வேண்டுமல்லவா?”

“கட்டாயம் சித்தமாயிருப்போம், தாயே! மற்றொரு வகை அசுர சக்திகளைப்பற்றியும் சொல்லுங்கள்!” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

“மற்றொரு வகை அசுரர்கள் அறிவுக் கூர்மையுள்ளவர்கள். அந்த அறிவைக் கெட்ட காரியங்களில் பயன்படுத்துகிறவர்கள். அவர்கள் தவம் செய்து வரம் பெறுவார்கள். அதையும் துஷ்ட காரியங்களுக்கே பயன்படுத்துவார்கள். திரிபுரரர்கள் என்ன செய்தார்கள்? ஒவ்வொருவரும் ஓர் உலகத்தையே உண்டாக்கிக் கொண்டார்கள். வானத்தில் பறந்து சென்று நாடு நகரங்களின் மீது இறங்கி நிர்மூலமாக்கினார்கள். சூரபத்மன் எத்தனை தடவை அவனுடைய தலையைக் கொய்தாலும் புதிய தலை அடையும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இராவணன், இந்திரஜித்து முதலிய ராட்சதர்கள் வானத்தில் மேகங்களில் மறைந்து கொண்டு கீழே உள்ளவர்கள் மீது அஸ்திரங்களைப் பொழியும் சக்தி பெற்றிருந்தார்கள். இத்தகைய சூழ்ச்சித் திறமை வாய்ந்த அசுர சக்திகளையே ‘முயலகன்’ என்னும் அசுரனாக நம் முன்னோர்கள் உருவகப்படுத்தியிருக்கிறார்கள். இறைவன் ஆனந்த நடனம் புரியும் போதெல்லாம் தம்முடைய காலடியில் அடக்கி வைத்திருக்கும் முயலகன் மீதும் சிறிது ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறார். கொஞ்சம் கவனக்குறைவாயிருந்தால் முயலகன் கிளம்பி விடுவான். சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் இருந்து அசுர சக்திகளுடன் தெய்வீக சக்திகள் போராடி வருகின்றன என்பதையே முயலகன் நமக்குத் தெரியப்படுத்துகிறான். ஆகையால், என் அருமை மக்களே! யுத்தமே கூடாது என்று நாம் எப்படிச் சொல்லி விட முடியும்?”

“தேவி! இதுவரையில் எங்களுக்கு விளங்காமலிருந்த பல விஷயங்களை இன்று தெரிந்துகொண்டோ ம். எங்களுக்கு என்ன கட்டளை இடுகிறீர்கள்?” என்று பொன்னியின் செல்வர் கேட்டார்.

“குழந்தைகளே! நீங்கள் எப்போதும் தெய்வீக சக்திகளின் பக்கம் நின்று போராடுங்கள் என்று மட்டுமே நான் சொல்ல முடியும். உங்களுக்குக் கட்டளையிட முடியாது. உங்களுடைய அந்தராத்மாதான் உங்களுக்குக் கட்டளையிட முடியும். அந்தக் கட்டளையைக் கேட்டு நடவுங்கள். சற்று முன்னால், இந்தச் செந்தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள கடல்களில் கப்பல் கொள்ளைக்காரர்கள் மிகுந்துவிட்டதாகச் சொன்னீர்கள். அதனால் தமிழ்நாட்டு வர்த்தகர்கள் பெரிதும் கஷ்ட நஷ்டங்களை அடைவதாகவும் கூறினீர்கள். அந்தக் கொள்ளைக்காரர்களை ஒழித்து நம் நாட்டு வர்த்தகர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது இராஜ குலத்தில் பிறந்த உங்கள் தர்மம். இன்று கடல் கொள்ளைக்காரர்களுக்கு இடங்கொடுத்து விட்டால் நாளைக்கு அவர்கள் இந்த தெய்வத் தமிழ்நாட்டிற்குள்ளேயும் பிரவேசித்து விடமாட்டார்களா? இன்று கைலாச வாசியாகிச் சிவபெருமானுடைய சந்நிதியில் சிவகணங்களுடன் வீற்றிருக்கும் என் கணவர் ஜீவிய வந்தராயிருந்தால், அவரும் உங்களுக்கு இதைத்தான் சொல்லியிருப்பார்!”

“தேவி! தங்கள் திருஉள்ளத்தை அறிந்து கொண்டோ ம் அதன்படியே நடந்து கொள்வோம்!” என்றார் இளவரசர் அருள்மொழிவர்மர்.

“பொன்னியின் செல்வ! நீ என்னுடைய விருப்பத்தை மதித்து நடப்பதாயிருந்தால், இன்னும் ஒன்று இப்பொழுது சொல்ல விரும்புகிறேன்!” என்றார் அந்தப் பெரு மூதாட்டியார்.

“தேவி! தங்கள் விருப்பத்துக்கு மாறாக இதுவரை நான் நடந்ததாக நினைவில்லையே? அப்படி ஏதேனும் செய்திருந்தால் மன்னியுங்கள்!”

“குழந்தாய்! இதற்கு முன்னால் நீ நடந்து கொண்டதெல்லாம் வேறு. இனிமேல் நடக்கப் போவது வேறு. இது வரையில் நீ அரண்மனையின் செல்லக் குழந்தையாக இருந்தாய். உன் விருப்பம் போல் நாங்கள் நடந்தோம். எங்கள் விருப்பத்தை நீயும் நிறைவேற்றி வைத்தாய். இனி, நீ இந்த மாநிலத்தை ஆளும் மன்னர் மன்னன் ஆகப்போகிறாய். முடிசூட்டு விழா நடந்த பிறகு, உன் விருப்பத்தின்படிதான் நாங்கள் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும்.”

“தாயே! அப்படிச் சொல்ல வேண்டாம். இனியும் நான் உங்கள் செல்லக் குழந்தையாகவே இருந்து வருவேன் உங்கள் விருப்பப்படியே நடப்பேன்.”

“அப்படியானால், இதைக் கேள்! இந்தப் புராதனமான சோழர் குலம் வாழையடி வாழையாகத் தளிர்த்து வளர வேண்டும். இராஜகுலத்தில் பிறந்தவர்கள் எப்போதும் வீர சொர்க்கம் அடையத் தயாராயிருக்க வேண்டியது தான். ஆனால் குலம் வளர்வதற்கும், முன்ஜாக்கிரதையாக ஏற்பாடு செய்ய வேண்டும். உன் தமையன் ஆதித்த கரிகாலன் கலியாணம் செய்து கொள்ளாமலே காலமாகி விட்டான். சோழ குலம் தழைப்பதற்கு நீ ஒருவன்தான் இருக்கிறாய்! ஆகையால் நீ மறுபடியும் கப்பலேறிக் கடல் கடந்து வெற்றித் திருமகளைத் தேடிப் போவதற்கு முன்னால் குலந்தழைப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்யவேண்டும். உன் மகுடாபிஷேகத்தோடு சேர்த்துத் திருமணத்தையும் வைத்துக் கொள். வானதியைப் போன்ற பெண்ணை மனைவியாகப் பெற நீ எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும். இந்தப் பெண்ணரசியின் மாங்கலியபலம் நீ போகுமிடமெல்லாம் மந்திரக் கவசம் போலிருந்து உன்னைப் பாதுகாக்கும்!”

“தேவி! அந்தக் கவசத்தை அணிய நான் சித்தமாகத்தானிருக்கிறேன். வானதிதான் மறுதலிக்கிறாள். ‘சிங்காதனம் ஏறமாட்டேன்; சபதம் செய்திருக்கிறேன்’ என்று பிடிவாதம் பிடிக்கிறாள்!” என்றார் இளவரசர்.

யாரும் எதிர்பாராத விதமாகப் பூங்குழலி அப்போது தலையிட்டு, “கொடும்பாளூர் இளவரசியின் பேச்சை அப்படியே நம்பிவிடவேண்டாம். நாமெல்லாரும் சேர்ந்து மேலும் உபசாரம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். பொன்னியின் செல்வர் இன்னும் கொஞ்சம் கெஞ்சிக் கேட்க வேண்டும்!” என்று சொல்லி நகைத்தாள்.

இது வேடிக்கைப் பேச்சு என்று எண்ணி மற்றவர்களும் சிரித்தார்கள். ஆனால் வானதி மட்டும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

“அசட்டுப் பெண்ணே! இது என்ன? எதற்காக நீ இப்படி விம்மி அழுகிறாய்?” என்று குந்தவை கேட்டுவிட்டு, வானதியின் கரத்தைப் பிடித்து அழைத்துக் கொண்டு கீழே போனாள்.

தியாக சிகரம் – அத்தியாயம் 88

பட்டாபிஷேகம்

அருள்மொழிவர்மர் தொடர்ந்து புலவரைப் பார்த்துக் கூறினார்: “ஐயா! தங்களை இன்னும் ஒன்று கேட்கிறேன். சிபிச் சக்கரவர்த்தி முதல் சிவஞான கண்டராதித்தர் வரையில் எங்கள் சோழ குலத்து மன்னர்களின் புகழைத் தாங்கள் விரித்துரைத்தீர்கள். அவையெல்லாம் இந்தப் புராதன குலத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்ற எனக்கு எவ்வளவு பொருத்தமோ, அவ்வளவு என் சிறிய தந்தையும் மகான் கண்டராதித்த சோழரின் உத்தமத் திருப்புதல்வருமான மதுராந்தகத் தேவருக்கும் பொருத்தமாகுமல்லவா?”

புலவர் “ஆம்” என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். சபையிலிருந்தவர்கள் அத்தனை பேரின் கண்களும் சுந்தர சோழரின் மறு பக்கத்தில் அடக்க ஒடுக்கத்துடன் அமர்ந்திருந்த மதுராந்தகத்தேவரின் மீது திரும்பின. இப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல் மதுராந்தகரைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்கள். முன்னமே மிக்க கூச்சத்துடன் அமர்ந்திருந்த மதுராந்தகர் இப்போது மேலும் சங்கோசம் அடைந்தவராகிப் பூமாதேவியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமலிருந்தார்.

இதற்கிடையில் மறுவேடம் பூண்டிருந்த ஆழ்வார்க்கடியான் மண்டபத்தின் ஒரு மூலைக்கு அவனை அழைத்துச் சென்ற சின்னப் பழுவேட்டரையரிடம் கவலை தரும் ஒரு செய்தியைக் கூறினான். பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளைச் சேர்ந்தவளும், படகோட்டி முருகய்யனின் மனைவியுமான ராக்கம்மாள் என்பவளை மகுடாபிஷேக வைபவத்துக்காக வந்து கூடியிருந்த ஜனத்திரளிடையே அவன் கண்டான். எதற்காக இங்கே அவள் வந்திருக்கிறாள் என்பதை அறியும் பொருட்டுப் பின் தொடர்ந்து சென்றான். சின்னப் பழுவேட்டரையரின் அரண்மனைக்கு அருகில் ஜனக் கூட்டத்தில் அவள் மறைந்து விட்டாள். ஆழ்வார்க்கடியான் அங்கேயே நின்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்த போது அவள் மறுபடியும் காணப்பட்டாள். அவளுடன் இன்னொரு பெண் இடுப்பில் ஒரு குழந்தையுடன் சென்றாள். அந்த இன்னொரு பெண் சின்னப் பழுவேட்டரையரின் மகளைப் போல் தோன்றவே ஆழ்வார்க்கடியான் இன்னது செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் திகைத்தான். சின்னப் பழுவேட்டரையரின் மகள்தான் என்று நிச்சயமாகச் சொல்லவும் முடியவில்லை. கொஞ்ச தூரம் அவர்களுடன் போய் உறுதி செய்து கொள்ளலாம் என்று போனான். கூட்டத்தில் அவர்களைப் பின்தொடர்ந்து போவது எளிய காரியமாக இல்லை, அவன் பின் தொடர்ந்து வருகிறான் என்பதை ராக்கம்மாளும் கவனித்திருக்க வேண்டும். அவள் திடீரென்று கூட்டத்துக்கு மத்தியில் “ஐயையோ! இந்த ஆள் எங்களைத் தொந்தரவு செய்கிறான். பெண்களைத் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறான்!” என்று கூச்சலிட்டாள். உடனே அங்கு நின்ற ஜனங்களில் பலர் ஆழ்வார்க்கடியானைச் சூழ்ந்து கொண்டு அவனைக் கண்டிக்கத் தலைப்பட்டார்கள்.

அவர்களிடம் ஆழ்வார்க்கடியான் அப்படியொன்றும் தான் செய்யவில்லையென்றும், இவர்கள் எல்லாரையும் போல நானும் மகுடாபிஷேகக் காட்சிகளைப் பார்க்க வந்தவன் என்றும் சத்தியம் செய்து கூறினான். அவனைச் சூழ்ந்துகொண்ட ஜனத்திரளைச் சமாதானப்படுத்திவிட்டு அவன் வெளியேறுவதற்குள் ராக்கம்மாளும் இடுப்பில் குழந்தையோடு கூடிய மற்றொரு பெண்ணும் மறைந்து விட்டார்கள். ஆழ்வார்க்கடியான் கோட்டை வாசல் வரையில் அவர்களைத் தேடிக் கொண்டு சென்றான். கோட்டை வாசலுக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு மூடுபல்லக்கில் குழந்தையுடன் கூடிய பெண் ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டான். பல்லக்கைச் சூழ்ந்து நாலு குதிரை வீரர்கள் நின்றார்கள். பல்லக்கில் அப்பெண் ஏறியதும், பல்லக்கும் குதிரைகளும் விரைந்து போகத் தொடங்கின. மேலும் அவர்களைத் தொடர்ந்து போகலாமா என்று யோசிப்பதற்குள் மகுடாபிஷேகத்தைப் பார்ப்பதற்காக வந்து கொண்டிருந்த ஒரு பெரிய ஜனக்கும்பல் ஆழ்வார்க்கடியானை இடித்துத் தள்ளிக் கொண்டு வந்து வெகு தூரம் கோட்டைக்குள் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. அந்தச் செய்தியைக் கோட்டைத் தளபதியிடம் உடனே தெரிவிப்பது முக்கியமானது என்று கருதி ஆழ்வார்க்கடியான் பட்டாபிஷேக மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான். அருள்மொழிவர்மரின் கட்டளையின் பேரிலேயே தான் இவ்வாறு மாறுவேடம் பூண்டிருப்பதாயும், ஜனக் கூட்டத்தில் அங்குமிங்கும் திரிந்து ஜனங்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள், என்பதை அறிந்து வந்து தம்மிடம் சொலும்படி பொன்னியின் செல்வர் பணித்ததாயும், அந்தக் கடமையை நிறைவேற்றி வரும் சமயத்திலேயே மேற்சொன்ன நிகழ்ச்சியைத் தான் காணும்படி நேர்ந்ததென்றும் ஆழ்வார்க்கடியான் விளக்கிய பிறகு, சின்னப் பழுவேட்டரையர் அவனுடைய வார்த்தைகளில் பூரண நம்பிக்கை கொண்டார். தன்னுடைய மகளாகிய பழைய மதுராந்தகன் மனைவியைப் பற்றி அவருக்கு முன்னமே கவலை இருந்து வந்தது. திருமலை கூறிய செய்தி அவருக்குத் திகிலை விளைவித்து மனக்குழப்பத்தையும் உண்டாக்கி விட்டது. தாம் தன் அரண்மனைக்குச் சென்று உண்மையை அறிந்து வருவதாகவும், தாம் அவசரமாகப் போக நேர்ந்ததைப் பற்றி முதன்மந்திரி அநிருத்தர் மூலம், சுந்தர சோழருக்கும், பொன்னியின் செல்வருக்கும் அறிவிக்கும்படியும் பணித்து விட்டுச் சின்னப் பழுவேட்டரையர் அந்த மண்டபத்தில் இருந்து வெகு வேகமாக வெளியேறினார்.

ஆழ்வார்க்கடியான் வந்து பொன்னியின் செல்வரிடம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தமிழ்ப்புலவர் நல்லன் சாத்தனாரிடம் பேசிக் கொண்டிருந்தபோதே இளவரசர் சின்னப் பழுவேட்டரையர் மீதும் கவனம் செலுத்தி வந்தார். அவர் மண்டபத்தை விட்டு அகன்றவுடன் பொன்னியின் செல்வருடைய திருமுகம் முன்னைக் காட்டிலும் ஒளி பொருந்தியதாயிற்று. சக்கரவர்த்தியின் பக்கம் திரும்பி நின்று அவர் கம்பீரமான குரலில் கூறலுற்றார்:

“தந்தையே! நம் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையர் ஏதோ மிக அவசர காரியமாக வெளியே செல்லுகிறார். அது காரணமாக இந்த மகுடாபிஷேக வைபவம் தடைப்பட வேண்டியதில்லை. இந்தச் சபையில் இன்னும் பல பெரியோர்கள் இருக்கிறார்கள். வீர மறக்குலத்து முதல்வர்கள் இருக்கிறார்கள். வேலும் வாளும் ஏந்தி எத்தனையோ போர்க்களங்களில் போர் செய்து விழுப்புண் பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரேனும் தங்கள் வீரத் திருக் கரத்தினால் இந்தப் புராதன சோழ குலத்தின் மணிமகுடத்தை எடுத்துச் சூட்டலாம். அவ்வளவு பேரும் இந்தப் பொற் கிரீடத்தையும் உடைவாளையும் செங்கோலையும் தங்கள் ஆகிவந்த கரத்தினால் தொட்டு ஆசி கூறியிருக்கிறார்கள். ஆகையால் இனி என் கரத்தினால் நானே எடுத்து இம்மணி மகுடத்தைச் சூடிக் கொண்டாலும் தவறு ஒன்றுமில்லை. ஆனால் அப்படிச் செய்வதற்கு முன்னால், தந்தையே! தங்களிடத்தும் இங்கே விஜயம் செய்திருக்கும் பெரியோர்களுக்கும் மறக் குலத்தவர்களுக்கும் விண்ணப்பம் ஒன்று செய்து கொள்ள விரும்புகிறேன். புறாவின் உயிரைக் காப்பதற்காகச் சதையை அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்தவன் நான். அதனால் நம் குலத்தவர் அனைவரையும் போல ‘செம்பியன்’ என்ற குலப்பெயர் பெற்றிருக்கிறேன். கன்றுக்குட்டியை இழந்த பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டு மகனுக்கு மரண தண்டனை விதித்த மனுநீதிச் சோழரின் வம்சத்தில் வந்தவன் நான். நம் குலத்து முன்னோர்கள் அனைவரும் போர்க்களத்தில் புறமுதுகிடாத வீரர்கள் என்று புகழ் பெற்றது போலவே, நீதி நெறியிலிருந்து அணுவளவும் தவறாதவர்கள் என்ற புகழையும் அடைந்து வந்திருக்கிறார்கள். அவர்களுடைய வழியில் வந்தவனாகிய நான் நீதி நெறிக்கு மாறாக நடக்கலாகுமா? இன்னொருவருக்கு நியாயமாக உரிய பொருளையோ, பதவியையோ அபகரிக்கலாமா? நம் ஆஸ்தானப் புலவர் நம் குல முன்னோர்களைப் பற்றி அழகான சந்தக்கவியில் பாடி வந்தபோது அவர்கள் அனைவரும் என் மனக் கண்முன்னால் வந்து தரிசனம் அளித்தார்கள். இராஜ கேசரிகளும், பரகேசரிகளும் வரிசை வரிசையாக நின்று காட்சி தந்தார்கள். நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும், பெருங்கிள்ளியும், கோச்செங்கணாரும் என்னைக் கருணை ததும்பும் கண்களால் நோக்கி ‘எங்கள் குலத்தில் உதித்த மகனே! இந்தச் சிங்காதனம் உனக்கு உரியதா என்று சிந்தித்துப் பார்!’ என்றார்கள். விஜயாலயரும், ஆதித்தரும், பராந்தகரும், இராஜாதித்தரும் என்னை வீரத் திருவிழிகளால் பார்த்து, ‘குமாரா! நீ இந்தச் சிங்காதனத்தில் ஏறுவதற்கு உரியவனாக என்ன வீரச் செயல் புரிந்தாய்? சொல்?’ என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு மறுமொழி சொல்லத் தயங்கினேன். பின்னர் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவர்களைக் கைகூப்பி வணங்கி விண்ணப்பித்துக் கொண்டேன். ‘சோழ குலத்து முதல்வர்களே! நீங்கள் செய்த அரும்பெரும் செயல்களில் ஆயிரத்தில் ஒன்றுகூட நான் செய்யவில்லை. ஆனால் உங்கள் ஆசியுடன் இனிமேல்தான் அத்தகைய காரியங்களைச் செய்யப் போகிறேன். நீங்கள் நிலைநாட்டிய சோழ குலத்துப் புகழ் மேலும் வளர்ந்தோங்கி நீடூழி நிலைத்திருக்கும்படியான காரியங்களைச் செய்யப் போகிறேன். செயற்கரிய செயல்களைச் செய்யப் போகிறேன். உலகம் வியக்கும் செயல்கள் புரியப் போகிறேன். வீராதி வீரர்களாகிய நீங்களே பார்த்து மெச்சும்படியான தீரச் செயல்களைப் புரிந்து உங்கள் எல்லாருடைய வாழ்த்துக்களையும் பெறப்போகிறேன்!’ என்று இவ்விதம் என்னுடைய குலத்து முன்னோர்களிடம் நான் தெரிவித்தேன். அவர்களும் முகமலர்ந்து எனக்கு அன்புடன் ஆசி கூறினார்கள்….”

ஆவேச உணர்ச்சி ததும்புமாறு பொன்னியின் செல்வர் கூறி வந்த சொற்களைக் கேட்டுக்கொண்டு இருந்த அச்சபையில் உள்ளோர் எல்லாரும் ரோமாஞ்சனம் அடைந்தார்கள். அவர்களில் ஒருவர் “வீரவேல்! வெற்றி வேல்!” என்று முழங்கிய ஒலி பட்டாபிஷேக மண்டபத்துக்கு வெளியிலும் கேட்டது. அங்கே கூடியிருந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டாக்கிற்று.

பொன்னியின் செல்வர் எல்லாருடனும் சேர்ந்து தாமும் “வெற்றி வேல்! வீர வேல்!” என்று முழங்கினார். முழக்கம் அடங்கியதும் கூறினார்: “தந்தையே! சோழ நாட்டு வீரர்களுக்குரிய இந்த முழக்கம் ஒரு சமயம், தங்கள் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் வடபெண்ணைக்கு அப்பால் துங்கபத்திரை – கிருஷ்ணாநதி வரைக்கும் கேட்டது. அந்த நதிகளுக்கு அப்பாலுள்ள வேங்கி நாட்டாரும், கலிங்க நாட்டாரும் கல்யாண புரத்தாரும் மானிய கேடத்தாரும் அந்த முழக்கத்தைக் கேட்டு நடுநடுங்கினார்கள். இன்னும் மேற்குத் திசைகளிலும், தெற்குத் திசைகளிலும், கிழக்குத் திசைகளிலும் நூறு நூறு மரக்கலங்களில் ஆயிரம் பதினாயிரம் சோழ நாட்டு வீரர்கள் சென்று இந்த நாட்டு வர்த்தகத்தைக் காப்பாற்றி வந்தார்கள். தந்தையே! தாங்கள் நோய்வாய்ப்பட்டுப் படுத்த நாளிலிருந்து சோழ நாட்டு வீர முழக்கத்தின் தொனி குறைந்திருக்கிறது. நாலா புறமும் பகைவர்கள் தலையெடுத்து வருகிறார்கள். வேங்கியும், கலிங்கமும், கல்யாணபுரமும், மானிய கேடமும் நம்மை வலுச் சண்டைக்கு அழைக்கின்றன. வடக்கே இமய மலைக்கு அப்பாலிருந்து இந்தப் பழம் பெரும் பாரத தேசத்துக்கு வந்து கொண்டிருக்கும் பகைவர்களின் பேராபத்தைப்பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. சோழ நாட்டின் வளத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டுப் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மகிந்தன் இன்னமும் படை திரட்டிச் சேர்த்து கொண்டிருக்கிறான். வீரபாண்டியன் இறந்து விட்டாலும் அவனுடைய குலத்தைச் சேர்ந்தவன் என்று யார் தலையிலாவது பாண்டிய நாட்டு மணி மகுடத்தைச் சூட்டிக் கலகம் உண்டாக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். மகிந்தனும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளும் சேர்ந்து சதி செய்து, வீரத்திலே அபிமன்யுவையும், அரவானையும் நிகர்த்த என் அருமைத் தமையனார் ஆதித்த கரிகாலரின் உயிருக்கு இறுதி தேடிவிட்டார்கள். மேற்கே சேர மன்னன் பெரியதோர் யானைப் படையையும் மரக்கலப் படையையும் சேகரித்துக் கொண்டிருக்கிறான். சேரனுக்கு மரக்கலப் படையைத் தயாரித்துக் கொடுப்பதில் மேற்குத் திசையிலிருந்து புதிதாகக் கிளம்பியிருக்கும் ஒரு முரட்டுக் கூட்டத்தார் உதவி செய்கிறார்கள். சோழ நாட்டைச் சூழ்ந்திருக்கும் புதிய பேரபாயம் இது. தந்தையே! நெடுங்காலமாக அரபு தேசத்தவர்கள் கப்பல் தொழிலில் சிறந்து விளங்குகிறார்கள். சீன தேசம் வரையில் சென்று வர்த்தகம் நடத்தி வருகிறார்கள். நமது நாட்டுத் துறைமுகங்களுக்கும் அவர்கள் அடிக்கடி வந்து செல்வதுண்டு. நாகரிகத்தில் சிறந்த அந்தப் பழைய அராபியர்களை அடக்கி ஒடுக்கி விட்டு, புதிய அராபியக்கூட்டம் ஒன்று இப்போது கிளம்பியிருக்கிறது, அவர்கள் அராபியர்கள்தானா அல்லது அக்கம் பக்கத்து நாட்டவர்களோ, நாம் அறியோம். ஆனால் மூர்க்கத்தனத்தில் அவர்களை மிஞ்சியவர்களை எங்கும் காண முடியாது. நானே அவர்களுடைய செயல்களை நேரில் பார்க்கும்படி நேரிட்டது. என்னைச் சிறைப்படுத்தி அழைத்துக் கொண்டு வருவதற்காகத் தங்கள் கட்டளையின் பேரில் நம் கோட்டைத் தலைவர் சின்னப் பழுவேட்டரையர் இரண்டு கப்பல்களில் வீரர்களை அனுப்பி வைத்திருந்தார்….”

சுந்தர சோழர் இந்தச் சமயம் குறுக்கிட்டுத் தழுதழுத்த குரலில், “மகனே! அப்படி நான் அனுப்பிய காரணத்தை நீ அறியாயா?” என்று கேட்டார்.

“தந்தையே! அதை நான் நன்கு அறிந்துள்ளேன். இங்கே அரசியல் உரிமை பற்றிக் குழப்பம் நேர்ந்திருந்தது. பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தீர்கள். ஆகையால் என்னைப் பத்திரமாகத் தங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே சிறைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னீர்கள். என் மீது தங்களுடைய அளவில்லாத அன்பும் பரிவுந்தான் அத்தகைய கட்டளை இடும்படி செய்தது. எல்லாருக்கும் அது நன்கு தெரியட்டும் என்றுதான் இங்கே சொல்கிறேன். அப்படி என்னைச் சிறைப்படுத்த வந்த நம் வீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். ஈழ நாட்டுக் கடற்கரையில் உடைந்த கப்பலிலிருந்து வந்து ஒதுங்கியிருந்த அராபியர்களோ பத்து பேருக்கு மேலிருக்க மாட்டார்கள். நம் வீரர்களில் எத்தனை பேரை அவர்கள் திடீரென்று தாக்கிக் கொன்று விட்டார்கள் என்பதைப் பார்த்த நான் அடைந்த வேதனை இன்னமும் என் மனத்தை விட்டு அகலவில்லை. அந்தப் புதிய அராபிய சாதியார் சேர மன்னனுக்குக் கப்பல் கட்டுவதில் உதவி செய்கிறார்கள். அது மட்டுமல்ல, கலிங்க நாட்டாருடனும் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். மூன்று நாட்டாரும் சேர்ந்து சோழ நாட்டுக் கடல் வாணிபத்தை அடியோடு அழித்துவிடத் தீர்மானித்திருக்கிறார்கள். கடல் கொள்ளைக்காரர்களின் அரபு நாட்டவராயிருந்தால் தானென்ன, அல்லது நம்முடன் எத்தனையோ விதத்தில் தொடர்பு கொண்ட சேர தேசத்தாராயிருந்தால் தானென்ன? நம் கடல் வாணிகத்தைக் காப்பாற்றி கொள்ள வேண்டுமானால், நமது கடற்படையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஆயிரமாயிரம் புதிய மரக்கலங்களைக் கட்டவேண்டும். புதிய புதிய மாலுமிகளைப் பழக்க வேண்டும். கப்பலில் இருந்து கொள்ளைக்காரர்களுடன் போரிடக்கூடிய வீரர்களைச் சேர்க்க வேண்டும். கீழைக் கடலில் உள்ள தீவுகளில் எல்லாம் புலிக் கொடியை நாட்டி, ஆங்காங்கே நம் வீரர்களை நிறுத்தி வைக்க வேண்டும். தந்தையே! இந்தக் காரியங்களையெல்லாம் செய்வதாக நம் குலத்து முன்னோர்களுக்கு நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதை நிறைவேற்றுவதற்குத் தங்களுடைய அனுமதி வேண்டும். இந்தச் சபையிலுள்ள பெரியோர்களின் சம்மதமும் வேண்டும்!”

இவ்வாறு பொன்னியின் செல்வர் கூறி நிறுத்தியவுடன் சுந்தர சோழர், “மகனே! சோழ குலத்து வீரப் புகழை நீ வளர்ப்பதற்கு நான் தடை செய்வேனா? சோழ நாட்டுக் கடல் வாணிபத்தைப் பாதுகாப்பதற்கு இந்த மகா சபையில் உள்ள பெரியவர்கள்தான் தடைசொல்லப் போகிறார்களா?” என்றதும், மீண்டும் அச்சபையில் “வீரவேல்! வெற்றி வேல்!” என்று முழக்கம் எழுந்தது.

“தந்தையே! தாங்களும் இச்சபையோரும் தடை சொல்ல மாட்டீர்கள். நான் ஏற்கும் காரியங்களில் வெற்றியடைய வேண்டும் என்று ஆசி கூறியும் அனுப்புவீர்கள். தங்கள் ஆசி நிறைவேறி நான் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், முதலில் என் உள்ளத்தில் நிம்மதி ஏற்பட வேண்டும். ‘நேர்மையற்ற காரியம் எதையும் நான் செய்யவில்லை, என் குலத்து முன்னோர்கள் அங்கீகரிக்க முடியாத செயல் எதுவும் நான் புரியவில்லை, பிறருக்கு உரியதை நான் ஆசையினால் அபகரித்துக்கொண்டு விடவில்லை’ என்ற உறுதியை நான் அடையவேண்டும். குல தர்மத்துக்கு ஒவ்வாத காரியத்தை இங்கே நான் செய்துவிட்டுப் புறப்பட்டேனானால், என் உள்ளம் என்னை வருத்திக் கொண்டேயிருக்கும். பகைவர்களிடம் போரிட்டு எப்படி வெற்றி கொள்வேன்? தர்மத்தை நிலைநாட்டப் போராடுகிறோம் என்ற நம்பிக்கை என் மனத்தில் எப்படி ஏற்படும்? முன்னொரு தடவை இலங்கைச் சிங்காதனத்தை நான் கவர்ந்து கொள்ள ஆசைப்பட்டதாக ஒரு பெரும் வதந்தி ஏற்பட்டது…”

“குழந்தாய்! அதை யாருமே நம்பவில்லையே! நீ அத்தகைய குற்றத்தைச் செய்யக் கூடியவன் என்று எவரும் எண்ணவில்லை” என்றார் சக்கரவர்த்தி.

“தாங்கள் நம்பியிருக்கமாட்டீர்கள், தந்தையே! ஆனால் அத்தகைய பேச்சு என் காதில் விழுந்ததும் என் மனம் எவ்வளவோ வேதனைப்பட்டது. ஈழ நாட்டுப் பிக்ஷுக்கள் எனக்கு அளித்த மணி மகுடத்தை நான் வேண்டாம் என்று மறுதளித்ததை என் நண்பர்கள் இருவர் அறிவார்கள். அவர்கள் அப்போது என் அருகிலேயே இருந்தார்கள்…”

சபையில் இருந்த புத்த பிக்ஷூக்களின் தலைவர் “ஆம், ஆம்! நாங்களும் அதை அறிவோம்” என்று சொன்னார்.

“ஒரு பொய்யான அவதூறு என் உள்ளத்தில் அவ்வளவு வேதனையை உண்டாக்கியது. அதைத் தாங்கள் நம்பவில்லையென்றால், நம்பியவர்கள் சிலரும் இருந்தார்கள். உண்மையாகவே நான் இப்போது இன்னொருவருக்கு உரிமையாக வேண்டிய சிங்காதனத்தை அபகரித்துக்கொண்டேனென்றால், அதனால் இந்தச் சோழ குலத்துக்கு எத்தனை அபகீர்த்தி உண்டாகும்? என் வாழ்நாளெல்லாம் அதைப்பற்றி வேதனைப்பட்டுக் கொண்டிருப்பேன். வேறு எந்தப் பெரிய காரியத்திலும் மனத்தைச் செலுத்த முடியாது, உற்சாகமாகச் செய்யவும் முடியாது…”

வெகு நேரம் குனிந்த தலை நிமிராமலிருந்த மதுராந்தகத்தேவர் இப்போது பொன்னியின் செல்வரை அண்ணாந்து பார்த்து ஏதோ சொல்வதற்குப் பிரயத்தனப்பட்டார். பொன்னியின் செல்வர் வந்தியத்தேவனைப் பார்த்துச் சமிக்ஞை செய்யவே அவ்வீரன் மதுராந்தகத்தேவர் பக்கத்தில் போய் நின்று கொண்டான். அவர் காதில் மட்டும் கேட்கும்படியான மெல்லிய குரலில், “நண்பா! சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய முதல் தேவாரத்தின் முதல் அடி என்ன?” என்று கேட்டான்! இந்தச் சமயத்தில் இது என்ன கேள்வி என்ற வியப்புடன் மதுராந்தகர், “பித்தா! பிறைசூடி!” என்றார். வந்தியத்தேவன் கள்ளக் கோபத்துடன் “என்ன, ஐயா, என்னைப் பித்தன் என்கிறீர்? நீர் அல்லவோ பெண்பித்துப் பிடித்து அலைகிறீர்? அதோ, பாரும்! உமது தர்மபத்தினி பூங்குழலி உம்மைப் பார்த்துச் சிரிப்பதை!” என்றான். இது என்ன? இந்த நல்ல சிநேகிதன் இப்படி திடீரென்று வலுச்சண்டைக்கு வருகிறானே என்ற எண்ணத்துடன் மதுராந்தகர் பெண்மணிகள் வீற்றிருந்த இடத்தை நோக்கினார். உண்மையில், அப்போது பூங்குழலி இவர் பக்கம் பார்க்கவேயில்லை. பூங்குழலி, குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி, வானமாதேவி ஆகிய அரண்மனைப் பெண்மணிகள் யாவரும் அளவில்லாத ஆர்வம் கண்களில் ததும்பப் பொன்னியின் செல்வரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மறுபடி மதுராந்தகர் பொன்னியின் செல்வரைப் பார்த்த போது அவர் சோழ குலத்தின் புராதன மணி மகுடத்தை தமது கரங்களில் தாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

“தளபதி சின்னப் பழுவேட்டரையர் இன்னும் திரும்பி வரவில்லை. அதனால் என்ன? குறிப்பிட்ட வேளையில் முடிசூட்டு விழாவை நானே நடத்தி விடுகிறேன்! தந்தையே! விஜயாலய சோழர் முதல் நம் முன்னோர்கள் அணிந்து வந்த இந்த மணிமகுடத்தை தாங்கள் எனக்கு அளிக்க உவந்தீர்கள். சாமந்தர்கள், தளபதிகள், கோட்டத் தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் அதை அங்கீகரித்தார்கள். ஆகையால், இந்தக் கிரீடம் இப்போது என் உடைமை அகிவிட்டது. என் உடைமையை நான் என் இஷ்டம் போல் உபயோகிக்கும் உரிமையும் உண்டு அல்லவா! என்னை விட இந்தக் கிரீடத்தை அணியத் தகுந்தவர் இங்கே இருக்கிறார். என்னை விட பிராயத்தில் மூத்தவர். இந்தச் சோழ இராஜ்யத்துக்கு என்னை விட அதிக உரிமை அவருக்கு நிச்சயமாக இருந்த போதிலும், அவர் அதைக் கோரவில்லை. நான் முடிசூட்டிக் கொண்டு சிங்காதனத்தில் அமர்வதைப் பார்த்து மகிழச் சித்தமாக இங்கு வந்திருக்கிறார். அவர் என் உயிரை ஒரு தடவை காப்பாற்றினார். இந்தச் சோழ குலத்துக்கு நேர்வதற்கு இருந்த பெரும் விபத்து நேரிடாமல் தடுத்தார். இப்படிப்பட்ட சிறப்பான காரியம் எதுவும் நான் இதுவரையில் இந்நாட்டுக்குச் செய்தேனில்லை. ஆகையால் இந்த மணி மகுடத்தை மகான் கண்டராதித்தரின் குமாரரும், என் சிறிய தந்தையுமான மதுராந்தகத் தேவரின் தலையில் சூட்டுகிறேன்!”

இவ்விதம் பொன்னியின் செல்வர் சொல்லிக் கொண்டே சக்கரவர்த்தியின் மறுபக்கத்தில் வீற்றிருந்த மதுராந்தகரின் அருகிலே சென்று அவர் சிரசில் கிரீடத்தை வைத்தார். மகுடத்தை வைக்குங்கால் மதுராந்தகர் அதைத் தடுக்காமலிருக்கும் பொருட்டு வந்தியத்தேவன் முன் ஜாக்கிரதையாக அவர் பின்னால் நின்று அவருடைய தோள்கள் இரண்டையும் நட்புரிமையுடன் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். ஆனால் மதுராந்தகரோ அப்படி ஒன்றும் செய்ய முயலவில்லை. அவர் மெய்மறந்து தன் வசமிழந்து உண்மையிலேயே பித்துப்பிடித்தவர் போல் நாலுபுறமும் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மணி மகுடத்தைச் சூட்டியதும் பொன்னியின் செல்வர் “கோப்பரகேசரி மதுராந்தக உத்தமச் சோழ தேவர் வாழ்க!” என்று முழங்கினார்.

“சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உத்தமச் சோழர் வாழ்க!” என்று வந்தியத்தேவன் பெருங்குரலில் கூவினான்.

இத்தனை நேரமும் பிரமித்துப் போய் நின்ற முதன்மந்திரி அநிருத்தர் முதலியவர்கள் அனைவரும் இப்போது “கோப்பரகேசரி மதுராந்தக சோழர் வாழ்க!” என்று முழங்கினார்கள்.

சுந்தர சோழர் சக்கரவர்த்தி உணர்ச்சி மிகுதியால் பேசும் சக்தியை அடியோடு இழந்திருந்தபடியால் தம் கையிலிருந்த பல நிற மலர்களை மதுராந்தக உத்தமச் சோழர் மீது தூவினார்.

அரண்மனைப் பெண்மணிகளும் சக்கரவர்த்தியைப் பின்பற்றி மதுராந்தகர் மீது மலர் மாரி பொழிந்தார்கள். மதுராந்தகர் சிறிது திகைப்பு நீங்கியதும் எழுந்து நேரே செம்பியன் மாதேவியிடம் சென்று கும்பிட்டு நின்றார். அந்த மூதாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவி போலப் பொங்கிப் பொழிந்து கொண்டிருந்தது.

“மகனே! இறைவனுடைய திருவுள்ளம் இவ்வாறு இருக்கிறது! நீயும் நானும் அதற்கு எதிராக நடப்பது எப்படிச் சாத்தியம்?” என்றார்.

பொன்னியின் செல்வர், சபையில் கூடியிருந்த மற்றப் புலவர் பெருமக்கள், பட்டர்கள், பிக்ஷுக்கள் ஆகியவர்களைப் பார்த்து, “நீங்கள் இனி உங்கள் வாழ்த்துக் கவிதைகளை உசிதப்படி மாற்றிக் கொண்டு சொல்லுங்கள்!” என்றார்.

அவர்களும் அவசர அவசரமாக வாழ்த்துக் கவிதைகளை மாற்றி அமைத்துக்கொண்டு பாடத் தொடங்கினார்கள்.

மதுராந்தக உத்தமச் சோழருக்கு மணி மகுடம் சூட்டப்பட்ட சிறிது நேரத்துக்குள்ளே அந்தச் செய்தி தஞ்சை வீதிகளில் கூடியிருந்த மக்களிடையில் பரவி விட்டது. அது விரைவாகப் பரவுவதற்கு வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் பெரிதும் காரணமாக இருந்தார்கள். பொன்னியின் செல்வர் கட்டளைபடி அவர்கள் வீதிகளில் ஆங்காங்கே ஆட்களை நிறுத்தியிருந்தார்கள். அவர்களிடமெல்லாம் அவசரமாகச் சென்று சொல்லி, “கோப்பரகேசரி உத்தமச் சோழர் தேவர் வாழ்க!” என்று முழங்கச் செய்தார்கள். இளவரசர் அருள்மொழிவர்மர் தமக்கு அளிக்கப்பட்ட இராஜ்யத்தைத் தம் சிறிய தந்தை மதுராந்தகருக்கு அளித்து விட்டார் என்றும், கடற் கொள்ளைக்காரர்களை அடக்குவதற்காகப் பெரிய கப்பல் படை சேர்த்துக்கொண்டு சீக்கிரம் புறப்படப் போகிறார் என்றும் வாய்மொழியான செய்தி மக்களிடையே விரைந்து பரவிக் கொண்டிருந்தது. சிலர் இதை உடனே நம்பினார்கள். பொன்னியின் செல்வரின் பெருங்குணத்தைக்கு இது உகந்ததே என்று அவர்கள் கருதினார்கள். இன்னும் சிலர், “கையில் கிடைத்த பேரரசை யார்தான் இன்னொருவருக்குக் கொடுப்பார்கள்?” என்று ஐயுற்றார்கள். ஏககாலத்தில் பலவாறு பேசிய பதினாயிரக்கணக்கான குரல்களும், “வாழ்க! வாழ்க!” என்னும் முழக்கங்களும் சேர்ந்து புயற்காற்று அடிக்கும்போது அலைகடலில் கிளம்பும் பேரொலியைப் போல் ஒலித்தன.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் மீது அமைத்த பொன்மயமான அம்பாரியில் அமர்ந்து மதுராந்தக உத்தமச் சோழர் பவனி கிளம்பியதும் எல்லாச் சந்தேகங்களும் மக்களுக்குத் தீர்ந்துவிட்டன. யானையின் கழுத்தில் யானைப்பாகனுடைய பீடத்தில் அமர்ந்திருப்பவர் பொன்னியின் செல்வர் என்பதைக் கண்டதும் மக்களுடைய உற்சாகம் எல்லை கடந்ததாயிற்று. “கோப்பரகேசரி மதுராந்தக உத்தமச் சோழர் வாழ்க!” என்று மக்களின் குரல்கள் முழங்கின. ஆனால் அவர்களுடைய உள்ளங்களில் பொன்னியின் செல்வரின் செயற்கருஞ் செயலே குடிகொண்டிருந்தது. அதை எண்ணியதனால் அவர்களுடைய அகங்களைப்போல் முகங்களும் மலர்ந்திருந்தன. பொன்னியின் செல்வர் மணி மகுடம் சூட்டிக்கொண்டு, பவனி வந்தால் மக்கள் எவ்வளவு குதூகலத்தை அடைந்திருப்பார்களோ, அதைவிடப் பன்மடங்கு அதிகமான குதூகலத்தை இப்போது வெளியிட்டார்கள்.

இமயமலைச் சிகரத்தில் புலி இலச்சினையைப் பொறித்த கரிகால் பெருவளத்தானைப் பொன்னியின் செல்வர் மிஞ்சிவிட்டார் என்றும், தியாக சிகரத்தில் இவர் தமது இலச்சினையை என்றும் அழியாத வண்ணம் பொறித்து விட்டார் என்றும் அறிஞர்கள் மகிழ்ந்தார்கள். சாதாரண மக்களோ, அப்படியெல்லாம் அணி அலங்காரங்களையும், உபமான உபமேயங்களையும் தேடிக் கொண்டிருக்கவில்லை. மதுராந்தகர் தலையில் மணி மகுடத்தைச் சூட்டி விட்டுப் பொன்னியின் செல்வர் பட்டத்து யானையை ஓட்டிக்கொண்டு செல்லும் காட்சி அவர்கள் உள்ளத்தைப் பரவசப்படுத்தி விட்டது. ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், வாழ்த்திக் கொண்டும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டும், மலர்களைத் தூவிக் கொண்டும், மஞ்சள் நிற அட்சதையை வாரி இறைத்துக் கொண்டும் மக்கள் ஒரே கோலாகலத்தில் தங்களை மறந்து ஆழ்ந்திருந்தார்கள்.

இவ்விதம் குதூகலத்தினால் மெய்மறந்து கூத்தாடிக்கொண்டிருந்த மாபெரும் ஜனக்கூட்டத்திடையே பட்டத்து யானையைச் செலுத்திக் கொண்டு போவது எளிய காரியமாயில்லை. பொன்னியின் செல்வரும் அவசரப்படாமல் ஜனங்களின் குதூகலத்தைத் தாமும் பார்த்துக் கவனித்துக் கொண்டு அங்கங்கே அறிமுகமான முகம் தென்பட்டபோதெல்லாம் ஏதேனும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டும், மெள்ள மெள்ள யானையைச் செலுத்திக் கொண்டு போனார். வீதி வலம் முடிந்து அரண்மனைக்குத் திரும்புவதற்குள் மாலை மயங்கி முன்னிரவு வந்துவிட்டது. வானத்து விண்மீன்களுடன் வீதிகளில் ஏற்றிய தீபங்கள் போட்டியிட்டுப் பிரகாசித்தன. அரண்மனை மேலேயிருந்து மலர் மாரி பொழிந்தது. “யானைப்பாகா! யானைப்பாகா!” என்று ஓர் இனிய குரல் கேட்டது. பொன்னியின் செல்வர் அண்ணாந்து பார்த்தபோது வானதியின் புன்னகை மலர்ந்த முகம் அங்கே தோன்றியது.

“பெண்ணே! அஞ்சவேண்டாம்! மதுராந்தக உத்தமச் சோழரின் தர்ம இராஜ்யத்தில் யானையும், புலியும் கலந்து உறவாடும்; பூனையும், கிளியும் கொஞ்சிக் குலாவிக் கூடி விளையாடும்!” என்றார் பொன்னியின் செல்வர்.

5 Replies to “அசுர சக்திகளும் தமிழ் வீரர்களும் அரசுரிமையும்: அமரர் கல்கி”

  1. Goodness heavens.

    We have never understood or realized the warning that the great historical writer had given us long long ago. Had we realized the Coimbatore bomb blasts or Mumbai bomb blasts would never have happened. 🙁

    But, when we read it now with proper perspective, we could only bow before the greatest writer.

    Tamilhindu shows the correct perspective. Hats off to you.

  2. // .. இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மகிஷாசுரன் கட்டளையிட்டான்… //
    // மௌடீகத்தோடு அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா //
    // இந்தப் புண்ணிய பரத கண்டத்தின் வடமேற்குத் திசைக்கு அப்பால் மௌடீக அசுர சக்திகள் சில தோன்றியிருப்பதாக அறிகிறேன். //

    இஸ்லாமிஸ்ட் பயங்கரவாதம் பற்றி த் தமிழில் விரிவாக முதலில் எழுதியவர் நேசகுமார் தான்.. ஆனால் அமரர் கல்கி வெகுகாலம் முன்பே ஒரு நாவலில் நடுவில் இந்த விமர்சனத்தைப் பொதிந்து தந்து விட்டார்!

    அற்புதம் !

    படிக்கும்போதே வீரவேல், வெற்றிவேல் என்ற அந்த கோஷம் நெஞ்சில் எதிரொலிக்கிறது.
    ராஜராஜ சோழன் பெயரைக் கூறி தம்பட்டமடிக்கும் தமிழக அரசியல்வாதிகள், அவனது தியாகம், வீரம் போன்ற நற்பண்புகளில் இம்மியளவாவது நம்பிக்கை வைத்திருக்கிறார்களா?

  3. Thank you.
    Just yesterday, picked up Ponniyin Selvan and this chapter.
    Bookmarked it to read.
    Very STUNNED to see it online today.
    God Bless your efforts.
    anbudan,
    srinivasan. V.

  4. I was wondering why Kamala hassan dropped the idea of taking a film on Ponniyin Selvan and started shooting Maruthanayakam.

    Can anybody tell me why?

  5. Wonderful!!! Very timely…what a great writer Kalki was?
    MGR, Kamal, Manirathnam and many people thought of making PS as a movie but dropped the idea because the complexity and the way Kalki portrayed the story can never be captured in the silver screen. Its next the impossible to visualize this great epic. A recent attempt to animate is being done by many…one such attempt is released as a atrailer. Please search http://www.Youtube.com for ponniyin selvan trailer.

    Also, I like to inform the readers that there is an event being organized by Ponniyin Selvan Yahoogroup members on Aug 15th. Please visit https://festival2009.ponniyinselvan.in

    Satish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *