ஒரு கதையாகச் சொல்வதற்கு டைம் அவ்வளவு எளிதான படமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் திரைப்படமாகப் பார்க்கும்போது இந்தத் திரைப்படத்தை இதை விட எளிமையாகச் சொல்லியிருக்க முடியாதோ என்று தோன்றுகிறது.
ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவமனையிலிருந்து முகமுடி அணிந்த ஒரு பெண் வெளிவருகிறாள். வழியில் அவசரமாக ஓடும் ஓர் இளம் பெண் அவளுடன் மோதுவதால் முகமுடி அணிந்த பெண்ணின் கையிலிருக்கும் புகைப்படம் கீழே விழுந்து சிதறுகிறது. இளம் பெண் அந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சரிசெய்யப் புறப்படுகிறாள். அந்த இளம்பெண் ஷெ ஹீ.
இந்த உலகில் எந்த ஒரு விஷயத்திலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரத்தக்கது காலம்தான். இதை ஷெ ஹீ முற்றிலும் அறிந்தவளாகவே இருக்கிறாள். ஜீ வூ-உடனான தன்னுடைய இரண்டு வருடத்துக் காதல் இந்தக் காலத்தால் மாற்றமடைந்து வருவதாக அவள் உணர்கிறாள். சந்தேகம் பிறக்கிறது. சண்டைகள் எழுகின்றன. ஏறக்குறைய பிரிவை நோக்கித் தள்ளப்படுகிறது உறவு.
தன்னுடைய காதலைக் காப்பாற்ற தானே வேறு ஒரு மனுஷியாக அவதாரம் எடுக்கத் தீர்மானிக்கிறாள் ஷெ ஹீ. ஆறு மாதம் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவாகிறாள். தனிமையில் தவிக்கிறான் ஜீ வூ. பல பெண்களையும் சந்திக்கும் அவனால் ஷெ ஹீயை மறக்க முடியவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதன் மூலம் முற்றிலுமாக வேறு ஒரு மனுஷியாக தோற்றத்தில் மாறி ஜீ வூ-வை மீண்டும் காதலிக்கிறாள். அந்தக் காதலில் அவள் மகிழ்ச்சியுடனிருந்தால் குழப்பமில்லாமல் ஒரு வண்ணத்தை நாம் ஷெ ஹீ மீது பூசிவிடலாம். ஆனால் அவளின் அடையாளச் சிதைவினால், தானும் அமைதி இழந்து தன்னுடைய காதலையும் சிதைக்கிறாள். கடைசிவரை இந்தக் கதாபாத்திரத்தின் தன்மை நமக்கு விளங்கவேயில்லை.
புதிய முகத்தைக் கொண்ட தன்னை வேறு ஒரு புதிய மனுஷியாக நம்பி, காதலன் ஏற்றுக்கொண்ட போது தன் காதல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கு மகிழும் அவள் – தன்னுடைய பழைய சுயம் காதலில் தோற்றதை எண்ணி வருந்துகிறாள். ஒரு கட்டத்தில் பழைய காதலி ஜீ வூ சந்திக்க விரும்புவதாக தானே கடிதம் எழுதி, தன் புதிய காதலை சோதனைக்குட்படுத்துகிறாள். அந்தக் கடிதத்தைக் கண்ட ஜீ வூ ஆழமான தன் பழைய காதலைத் தேடிப் போகப்போவதாக முகம்மாறி வந்த ஷெ ஹீயிடம் சொல்கிறான். தன்னுடைய புதிய காதல் சிதையக்கண்ட ஷெ ஹீ அவனுடன் சண்டையிடுகிறாள். இந்தச் சமயத்தில் இத்தனை நாள் ஷெ ஹீ நடத்திய நாடகம் ஜீ வூ-க்குத் தெரிய வருகிறது. மனம் உடைந்து போகிறான்.
அவளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாத ஜீ வூ, ஷெ ஹீ எடுத்த அதே முடிவையே தானும் எடுக்கிறான். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதன் மூலம் தானும் புதிய மனிதனாக அவதாரம் எடுக்க முடிவு செய்கிறான். புதிய முகம் கொண்ட ஜீ வூ யாராக இருக்க முடியும் என்று தெரியாமல் தவிக்கிறாள் ஷெ ஹீ. தனியாக இருக்கும் எந்த ஆணும் ஜீ வூவாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறாள். இந்தச் சமயத்தில் ஷெ ஹீக்கு ஜீ வூ தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான் – ஆனால் முற்றிலுமாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆடுகிறான் (தான் பட்ட தவிப்பு அவளும் படட்டுமே என்று இருக்கலாம்). அவனைப் பின்தொடர்ந்து துரத்திச் செல்லும் போது ஜீ வூ ஒரு டிரக்கில் அடிபட்டு இறக்கிறான்.
மனப் பிழற்சி ஏற்பட்ட நிலையில் தனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த டாக்டரிடம் ஜீ ஹீயின் ரத்தத்தின் கறை படிந்த கைகளோடு சென்று மன்றாடுகிறாள் ஷெ ஹீ. அந்த டாக்டரின் அறிவுரையின் பேரில் மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு மீண்டும் இந்த உலகத்தைப் புதிதாகச் சந்திக்க முடிவு செய்கிறாள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு வெளியே வரும் அவள் மீது வேகமாக ஓடி வரும் இளம் பெண் மோதுகிறாள். இரண்டாம் முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதற்கு அவள் எடுத்துக் கொண்ட புகைப்படம் அவள் கையிலிருந்து விழுந்து சிதறுகிறது. மோதிய இளம் பெண் அந்தப் புகைப்படத்தை சரிசெய்து கொடுப்பதாகக் கூறி எடுத்துச் செல்கிறாள். எடுத்துச் செல்லும் இளம் பெண் வேறு யாருமல்ல – எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொள்வதற்கு முன் இருந்த ஷெ ஹீ. திரைப்படம் முடிகிறது.
இந்தக் கடைசிக் காட்சியையும் முதல் காட்சியையும் இணைத்த சாமர்த்தியம் சற்றும் எதிர்பாராதது. கவித்துவமோ அலங்காரங்களோ இல்லாமல் சென்ற இந்தத் திரைப்படம் ஏன் இப்படி முடியவேண்டும்? ஒரு விதத்தில் பார்த்தால் கடைசி காட்சியும் முதல் காட்சியும் (உண்மையில் இவை இரண்டுமே ஒரே காட்சிதான்) திரைப்படத்தில் இல்லாமல் இருந்திருந்தால் எந்த மாற்றமும் வந்திருக்காது. அப்படி இருக்க இந்தக் காட்சியமைப்பு எதற்காக? ஷெ ஹீ-இன் சிதைவிற்கு அவளே காரணம் என்ற இயக்குநரின் கருத்தை அந்தக் குறியீடின் வாயிலாக அவர் அங்கே பதிவு செய்திருப்பதாகத்தான் நாம் கொள்ளவேண்டும். இந்த இடத்தில் மட்டுமே கிம் கி டுக் நம்முடன் நேரிடையாகப் பேசுகிறார்.ஒரு திறமையான இயக்குநரால் எப்படி ஒரு திரைப்படத்திற்கு கவித்தன்மையைப் புகுத்த முடியும் என்பதற்கு இது உதாரணம்.
முதல் பாதியில் சந்தேகிக்கும் ஒரு காதலியிடம் பிரிந்த காதலன் அப்பிரிவில் ஒரு ஆணுக்குரிய சபலங்களாலும் காதலியின் மேல் கொண்ட பிரேமையினாலும் திரிசங்கு சொர்க்கத்தில் சிக்கித் தவிக்கிறான். அவள்மேல் கொண்ட காதலினால் பிற பெண்களைச் சந்திக்கும்போது குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. அவளது பிரிவின் வலியில் துடிக்கிறான். பிற பெண்களை அணுகாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் காதலியையும் மறக்க முடியவில்லை. அவள் இருக்கிறாளா இல்லையா என்ற நிலையும் தெரியாமல் தவிக்கிறான்.
பிற்பகுதியில் காதலி தன் காதலின் மேல் கொண்ட அபாரமான பிரேமையினால் அவள் தன்னைத் தானே வருத்திக் கொள்கிறாள். ஏறக்குறைய இரண்டு விதமான ஆளுமைகளில் சிக்கித் தவிக்கிறாள். அவளின் இந்தக் குழப்பமான ஆளுமையால் காதலனை அவள் சோதனைகளுக்குட்படுத்தும் போது நமக்கு காதலன் மீது பச்சாதாபம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் பகுதியில் ஜீ வூ பட்ட எல்லாத் தவிப்பையும் ஷெ ஹீ இரண்டாம் பகுதியில் அனுபவிக்கிறாள். இந்த இரண்டாம் பகுதியில் ஷெ ஹீயின் தவிப்பும் பார்ப்பவர் எல்லாம் ஜீ வூவாக இருப்பார்களோ என்ற எதிர்பார்ப்பும் தன்னுடைய காதலைக் காக்க அவளின் போராட்டமும் அவளின் நிலையில்லா மனதின் மீது பரிதாபத்தையே ஏற்படுத்துகின்றன.
இந்தக் கதாபாத்திரங்கள் அனைவரும் சராசரியான மனிதர்களாகவும், சிதையும் மன நிலைக்கு ஆட்படுத்தப்பட்ட சமுகத்தின் பிரதிநிதிகளாகவும்தான் இருக்கின்றனர். மனதிற்கு பதில் முகமும் உடலுமே தனது அடையாளங்கள் என்று ஏற்றுக் கொண்ட ஒரு சமூகத்தின் பின்னடைவையும் இப்படிப்பட்ட சமூகத்தின் அவலத்தையும் கிம் கி டுக் அம்பலப்படுத்துகிறார்.
பொதுவாகவே கிம் கி டுக்-இன் திரைப்படங்கள் அணுகுவதற்கு எளிதாக இருப்பதில்லை. அதனால் கிம் கி டுக்-இன் திரைப்படங்களைப் பார்க்க விரும்புவோருக்கு டைம்-இல் இருந்து தொடங்குங்கள் என்று ஆலோசனை கூறுவேன். பூடகத்தன்மையும், முற்றிலும் மாறுபட்ட தளத்தில் இயங்கும் தன்மையும் கொண்ட அவரின் மற்ற திரைப்படங்களைக் காட்டிலும் டைம் சற்றே எளிமையானது என்பது என் கருத்து. சில சமயம் திரைப்படங்களை அணுகும்முன் அதன் இயக்குநர்கள் பற்றிய ஒரு கருத்தைத் தேற்றிக் கொள்வது திரைப்படத்தை அணுக எளிதாக இருக்கும்.
நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்று தான் தோன்றுகிறது. நன்றி கிருஷ்ணன் 🙂
I too want this movie. Thanks for this review.
இது நல்ல படமா, கெட்ட படமா??
🙂
உலகப்படம் என்ற போர்வையில் வரும் எல்லாப்படங்களும் அசாதாரன மக்களைக் குறிவைத்து மட்டுமே தயாரிக்கப்படுமோ?? நமக்கு எப்பொதும் வெளிநாட்டுக்காரன் உருவாக்கும் படங்கள் மீதான மதிப்பு அதிகம்.. அதன் விளைவே இப்படியான ரம்பங்களைக் கூட பொறுமையாகப் பார்த்து விமர்சனம் செய்கிறீர்கள்…
ஜெயகுமார்,
எந்தப் படமும் உலகப்படம் என்ற போர்வையில் வெளிவருவதில்லை.வெளிவந்த பின்பே அது உலகப் படமாகவோ, உங்களுக்கான படமாகவோ ஆகிறது.
படத்தைப் பார்க்காமல் எப்படி ரம்பம் என்கிறீர்கள்? பார்க்காமல் விமர்சனம் செய்வதுதான் பொறுமையினையின் இலக்கணமா?
அருமையான பதிவிற்கு நன்றி. கிம் ஒரு அற்புத இயக்குநர். மிகச்சிறந்த படைப்பாளி.
என்னதான் இவ்வளவு உலக சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்ற இவரை அதீத புத்திகாரர் கொடுமைகளை சித்தரிக்கும் இவர் இயக்குனரே அல்ல என்று சில கொரிய ரசிகர்கள் இவர் மீது தீரா கோபத்திலும் உள்ளனர்.ஆமாம் உள்ளூரில் மிகவும் விமர்சிக்கப்பட்டவர்.
ஆனால் இவரோ நான் சினிமா என்பதை முற்றிலும் வேறு விதமாகவே பார்க்கிறேன்.கொரியா மட்டுமே என் இலக்கு எல்லை..என் எல்லையும் இல்லை. எப்போதும் மற்ற திரைப்படங்களின் பாதிப்பு இல்லாத சினிமாவையே விரும்புகிறேன் . உலகமே வேறு மாதிரி எனக்கு தோன்றுகிறது அவையே என் படைப்புகள் என்கிறார். அவற்றிற்கும் மேலாக அனைவரையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய என்னால் இயலாது அது எனது வேலையும் இல்லை.. சற்று காட்டமாகவும் சொல்ல வேண்டுமென்றால் பன்றிக்கும் முத்துவிற்கும் என்ன சம்மந்தம் ..?? (Pearl has no meaning to a Pig) யார் முத்து? ??? யார் பன்றி????என்று நீங்களே முடிவு செய்யுங்கள் எப்படி இருந்தாலும் எனக்கு ஒன்றுதான் என்று தன் விமர்கர்களையும் வித்தியாசமாகவே கையாளும் Kim Ki-duk ஒரு வித்தியாசமான படைப்பாளிதான்.
மேலும் அறிய இந்த பதிவையும் பாருங்கள். https://butterflysurya.blogspot.com/search/label/Kim%20Ki-duk
எந்தப் படமும் உலகப்படம் என்ற போர்வையில் வெளி வருவதில்லை. வெளிவந்த பின்பே அது உலகப் படமாகவோ, உங்களுக்கான படமாகவோ ஆகிறது.மிகச்சரி.
அவர்கள் அப்படி நினைத்து படமும் எடுப்பதில்லை. ஆனால் nativity மாறாமல் கதையே நம்பி அதை சொல்லும் விதத்தில் தான் அதன் அழகு கூடுகிறது. மஜித் மஜிதி, அப்பாஸ் கிராஸ்தமி போன்றவர்களின் இரானிய படங்கள் மிகச்சிறந்த உதாரணம்..
SUPER NARRATION AND SCRIPT WRITING. KEEP IT UP.
https://news.bbc.co.uk/2/hi/south_asia/8315980.stm
இப்படத்தினை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. நமக்கு பிடித்தமான நபர் இறந்து போவதைவிட கொடூரமானது, சுயம் தொலைத்தல். அதனை மிகப் பிரமாதமாக எடுத்திருக்கிறார் இயக்குனர். நன்றி இப்படிபட்ட உலக சினிமாக்களைப் பற்றி சிறந்த தளம் மூலமாக பேசுவதற்கு.