சற்றே கலங்கி, மண்ணின் வண்ணத்தைக் காட்டியபடி சீறிப்பாய்ந்து வரும் கங்கையை ஹரித்துவாரின் அந்தப் பாலத்திலிருந்து பார்க்கும்போது அதன் கம்பீரம் நம்மைக் கவர்கிறது. அமைதியாயிருந்தாலும் ஆரவாரமாயிருந்தாலும் கங்கைக்கென்று ஒரு தனி கம்பீரம் இருக்கத்தான் செய்கிறது.. பத்தாயிரம் அடி உயரத்தில் உருகிய பனியாகத் துவங்கும் கங்கை 250கீமி தூரம் மலைகளின் வழியே வந்து முதலில் தரையைத் தொடும் இடம் ஹரித்துவார். மன்னர் விக்கரமாதித்தியனால்(கிமு 1ம் நூற்றாண்டு) கட்டப்பட்டதாக சரித்திரம் சொல்லும் இந்த நீராடும் துறையில் பல நூற்றாண்டுகளாக நீராடிய பலகோடிப் பேர்களைப் போலவே இன்று நாமும் நீராடப் போகிறோம்.. பாலம் முழுவதும் மக்கள் வெள்ளம். நகரும் கூட்டத்தோடு பாலத்தைக் கடந்து படிகளிலிறங்கி கருப்பு வெள்ளை பளிங்குச் சதுரங்களாக விரிந்திருக்கும் நதிக்கரையின் தளத்தையும் அதைத் தொட்டடுத்திருக்கும் படித்துறைக்கும் போக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். கொடுத்த மிதியடிகளுக்கு டோக்கன் வாங்க முண்டியடித்துக்கொண்டிருக்கும் கூட்டதையும் குவிந்திருக்கும் செருப்புமலைகளையும் கடந்து ஒரு வழியாக ஒடும் கங்கையை உட்கார்ந்து பார்க்க படிகளில் ஒரிடம் பிடிக்கிறோம். மணி மதியம் இரண்டு.
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் நீடித்த அந்த சூரிய கிரகண நாளில், கிரகண காலத்தில், ஹரித்துவாரில் ஹர்-கி-பெளரி (Har-Ki-Pauri.) கட்டத்தில் காத்திருக்கிறோம். நகரில் 30க்கும் மேற்பட்ட ஸ்நான கட்டங்களிலிருந்தாலும் இங்கு சிவன், விஷ்ணு, கங்காதேவி கோவில்களிருப்பதால் இது கடவுளின் காலடியாகக் கருதப்படுகிறது. கிரகண காலம் துவங்கிவிட்டதால் கரையிலுள்ள கோவில்கள் மூடப்பட்டிருக்கின்றன. கங்கையில் இறங்க எல்லோரும் காத்திருக்கிறார்கள். எப்போதும் பலர் குளித்துக்கொண்டிருக்கும் அந்தப் புனித நதி அந்தப் பொழுதில் யாருமில்லாமலிருக்கிறது. கங்கை மிகப் பெரும் ஓசையுடன் வேகமாகப் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அறுந்து தொங்கும் பாதுகாப்புச் சங்கிலிகள் தன் அசைவில், நதியின் வேகத்தைச் சொல்லுகின்றன. நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கோபுரத்தில் பைனாகுலர்களுடனும், நதியில் போலீஸ் என்று எழுதப்பட்டிருக்கும் லைஃப் ஜாக்கெட்களுடனும் காவலர்கள். ஓயாது தினசரி பலரைக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கும் அந்த நதிக்கு இது ஒரு நல்ல ஓய்வாகயிருக்குமோ என்று தோன்றுகிறது.
இந்த கிரகண நாளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் “கும்பமேளா”வும் துவங்குகிறது. இமயமலைச் சரிவுகளிலிருந்து வரும் சாதுக்கள் நீராட தனியிடம் ஒதுக்கியிருப்பதால் அவர்கள் கூட்டம் இங்கில்லை.
இந்தியாவின் பல மாநில முகங்கள்; நிறைய இளைஞர்கள்; குழந்தைகளுடன் குடும்பங்கள்; பல மொழிகளில் பிரார்த்தனைகள்; சிலர் வாய்விட்டுப் படிக்கும் ஸ்லோகங்கள். அந்தப் படிக்கட்டுகளில் பரவிக்கிடக்கும் அத்தனைபேரும் எதோ ஒருவகையில் தங்கள் மனதை ஒருமுகப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தாலும் அந்த இடம் மிகுந்த இரைச்சலுடன்தான் இருக்கிறது. கிரகண காலம் முடிந்தபின் குளிக்க அனுமதிக்கப்படும். அதுவரை குளிக்க முயற்சிக்கவேண்டாம் போன்ற அறிவிப்புகள் அந்தச் சத்தத்தில் கரைந்துகொண்டிருக்கின்றன. எதிர்க்கரையின் நடுவே நிற்கும் உயர்ந்த காவி வண்ண மணிக்கூண்டின் கடிகாரத்தின் மீது பல கண்கள். வானம் கறுத்துக் கொண்டிருக்கிறது.
சற்று தொலைவில் பெரிய திரையில் விளம்பரங்களுக்கிடையே மாறி மாறி வரும் கன்யாகுமரி, இராமேஸ்வரக் கிரகணக் காட்சிகள். கருவட்டதைச் சுற்றி மின்னும் முழு வெள்ளி வளையமாக சூரியன் தோன்றிய அந்த வினாடி அத்தனைபேரும் நீரில். அந்த அளவுகடந்த கூட்டத்திலும் சில்லென்று நம்மை வேகமாகத் தொட்டுச்செல்லும் கங்கையினால் சிலிர்த்து நிற்கிறோம். ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வின்போது இப்பபடியொரு இடத்தில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து பிரார்த்திக்கிறோம். பெரும் மணியோசைக்குப் பின் ஆரத்தி துவங்குகிறது. இன்று கிரகணம் என்பதால் முன்னதாகவே மாலைக்கால ஆரத்தி. கோயில்கள் திறக்கப்பட்டு அபிஷேகங்ககளும் பூஜைகளும் துவங்குகின்றன. வெளியே வர மனமில்லாமல் குளித்துக்கொண்டிருப்பவர்கள், அவர்களைத் தள்ளிக்கொண்டு பூஜைக்குச் செல்ல அவசரப்படுபவர்கள் என, கூட்டம் கலகலத்துக் கொண்டிருக்கிறது.
சூரிய கிரகணம் என்பது சுழலும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிகழும் கோள்களின் நிலை மாற்றத்தைக் காட்டும் இயற்கையான நிகழ்வு. அந்த நேரத்தில் கடைபிடிக்கும் சம்பிராதாயங்களுக்கு விஞ்ஞானபூர்வமான விளக்கம் எதுவும் இல்லை என்பது இந்தக் கூட்டதிலிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த மக்கள் வெள்ளம்- இந்துமதம் என்பது ஒரு வாழ்க்கை முறை; அந்தப் பாரம்பரியம் காலம்காலமாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த கங்கையைப்போல எதற்கும் எப்பொழுதும் நில்லாது, தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.
புகைப்படங்கள்: வி. ரமணன்
படங்கள் அருமை நன்றி …… பிரகதீஸ்வரன்
அற்புதமானப் படங்கள். நல்ல கட்டுரை.
அன்புடன் வணக்கம்
சூர்யா சந்திர கிரகனங்களுக்கு விங்கனபூர்வ விளக்கம் — சுர்யனும் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் வரும்போது பூமி ஈர்க்கப்படும்– அதிகமாக அம்மாவாசை பௌர்ணமி காலங்களில் சமுத்ரத்தில் ஏற்படும் மாற்றங்கள்…… அலைகள் அதிகம் அதே போல் மனிதனாகிய நமது உடம்பில் நீர் அதிகம் அந்த நீர் மேல் நோக்கி இளுக்கபடும் ஆகவே அந்நேரம் உணவு உண்ணாது மாற்ற நல்ல காரியங்கள் விலக்கி இருக்க வேண்டும் .. புனித ஆறுகளில் நீராடி வழிபாடு செய்து உணவு உண்பது உடல் ஆரோக்கியம்
nice post and article
அருமையான கட்டுரையும் புகைப்படங்களும்
கட்டுரையின் கடைசி வாக்கியம் உண்மை, எல்லாராலும் உணரப்படவேண்டியது.
Very good article and quite informative.