அற வழியில் நால்வர்: ஒரு பார்வை

ramana maharishiபகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியைப் பற்றி அறிந்தவர்களுக்கு, அவர் மதுரையில் ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்ற போதெல்லாம் அறுபத்துமூவராகிய நாயன்மார்கள் முன் எப்படி உள்ளம் உருகி நின்றார் என்பது தெரிந்திருக்கும். அந்த நாயன்மார்களில் மூவரையும், சிவ புராணம் அருளிய மாணிக்கவாசகர் என்ற பெருந்தகையையும் சேர்த்து நால்வர் என்று பொதுவாகக் குறிப்பிடுவர். அனேகமாக எல்லாச் சிவன் கோவில்களிலும் இந்நால்வருக்கும், ஸ்ரீ நடராஜரைப் பார்த்த மாதிரி ஒரு தனி சந்நிதி கூட அமைந்திருக்கும். அந்நால்வரின் வாழ்நாள் எண்ணிக்கை பற்றி ஒரு வெண்பா உண்டு. அந்த வெண்பாவையும், பகவான் ரமணர் இயற்றிய “உபதேச உந்தியார்” செய்யுள் ஒன்றையும் கலந்து ஒப்பிட்டு எழுதப்படுவதுதான் இக்கட்டுரை. இதன் மூலம் அந்நால்வரின் வாழ்க்கை அற நெறிகளை, ரமணர் கூறிய விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முயற்சிப்பதுதான் எமது நோக்கம். “உபதேச உந்தியார்” என்ற அந்த நூலில் பகவான் சம்பிரதாயமான நான்கு யோக முறைகளைப் பற்றி முதல் 15 செய்யுள்களில் கூறிவிட்டு, மீதி உள்ள 15 செய்யுள்களில் வேத சாரமாகிய “தன்னைத் தான் அறிந்து” கொள்ளும் முறையான மகா யோகம் என்று குறிப்பிடப்படும் “நான் யார்?” என்ற நேர் வழியையும் விளக்கிச் சொல்கிறார்.

திருநாவுக்கரசர் என்ற அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் என்ற அந்த நால்வரும் சற்றே மாறுபட்ட நான்கு அற நெறிகளைக் கடை ப் பிடித்தவர்கள் என்று கூறப் படும். அந்த நான்கு வழிகளையும் தாச மார்க்கம், பக்தி மார்க்கம், சக மார்க்கம், ஞான மார்க்கம் என்று பொதுவாகச் சொல்லலாம். இம்மார்கங்களைச் சற்று வேறுபடுத்திச் சொல்பவர்களும் உண்டு . இந்நால்வர்களில் அப்பரும் சம்பந்தரும், வயதில் பெரும் வித்தியாசமானவர்கள் என்ற போதிலும் சம காலத்தவர்கள். சுந்தரர், அறுபத்துமூவரைப்பற்றியும் எழுதியுள்ளதால் பிற்காலத்தவர் ஆவார். மாணிக்கவாசகர் காலம் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருப்பினும், அவரைப் பற்றி இம்மூவர் எழுதிய தேவாரத்தில் சில குறிப்புகள் காணப்படுவதுபோல் இருப்பதால், அவர் இவர்களினும் மூத்தவர் என்று கொள்ளலாம். அது எப்படி இருப்பினும், எம்முறையைப் பின் பற்றினாலும் உய்வதற்கு ஒரு வழி உண்டு என்று வாழ்ந்துகாட்டிச் சென்றவர்கள் அவர்கள் என்பதே நாம் கருத்தில் கொள்ளவேண்டியது.

நான்கு வழிகள் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அவைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு கொண்டவை அல்ல. அது மட்டுமன்றி ஒன்றிலொன்று இணையவும், ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அதைப் பயில்பவர்கள் எளிதாகச் செல்லக் கூடிய வழிகள் தான் அவை. அதனால் எவர்க்கு எவ்வழி செல்லத் தகுமோ அதை அவர்கள் பின்பற்ற முடியும். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் தன் வழியைத் தானே தேர்ந்தெடுக்க முடியுமா முடியாதா என்பது பற்றி இப்போது நாம் அலசவில்லை. அது ஒரு தனி விவாதப் பொருள் என்று தற்சமயம் விட்டுவிடுவோம்.

அந்நால்வரின் வாழ்நாள் எண்ணிக்கை பற்றிய வெண்பாவானது:

“அப்பருக்கு எண்பத்தொன்று அருள்வாதவூரருக்கு
செப்பிய நாலெட்டில் தெய்வீகம் – இப்புவியில்
சுந்தரருக்கு மூவாறு தொன் ஞானசம்பந்தருக்கு
அந்தம் பதினாறு என்று அறி”

அப்பர் 81 வயதிலும், திருவாதவூரைச் சார்ந்த மாணிக்கவாசகர் 32 வயதிலும், சுந்தரமுர்த்தி நாயனார் 18 வயதிலும் திரு ஞான சம்பந்தர் 16 வயதிலும் காலமானார்கள் என்று தெரிவிக்கிறது இந்தப் பாடல்.

appar_thirunavukkarasarஎந்நாளும் தொண்டு புரிந்தே வாழ்ந்த அப்பர் தாச மார்க்கம் வழியில் வாழ்ந்தவர். எப்போதும் ஒரு உழவாரப்படை எனப்படும் ‘புல் செதுக்கி’ ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு கோவில் பிரகாரங்களைச் சுத்தம் செய்து கொண்டிருப்பார். அவரின் கடைசி காலத்தில் இறைவன் அவரைச் சோதனை செய்ததுண்டு. அவரின் மனோ திடத்தைச் சோதனை செய்வதற்காக புல் பூண்டுக்குப் பதிலாக வைரம், வைடூரியம் போன்ற நவ ரத்தினங்களை இறைவன் வரச் செய்தார். அப்பர் அதைக் கண்டாலும் பூண்டைப் போலவே அவைகளையும் செதுக்கியால் களைந்து எறிந்தார். அதாவது, இறைவன் அருட் பார்வை தவிர பொன் பொருள் எதுவும் ஒரு பொருட்டு அல்ல என்பதை நன்கு உணர்ந்தவராக இருந்ததால் அவரால் அப்படிச் செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த அப்பர் உண்மையிலேயே ஒரு தூய கர்ம யோகியே. அவர் 81 வயது வரை வாழ்ந்தார்.

மாணிக்கவாசகர் பக்தி மார்கத்தின் பிரதிநிதி என்று கொள்ளலாம். அவர் பொருட்டு மதுரையில் சிவ பெருமானே “பரியை நரியாக்கியது ” போன்ற சில திருவிளையாடல்களை நடத்தியுள்ள பெருமைக்கு உரியவர். அவர் அரசன் கொடுத்த செல்வத்தை சிவன் ஆலயம் ஒன்று கட்டுவதற்காக முனைந்த போது நடந்த நிகழ்ச்சி அது. சிவனே எழுந்தருளி காப்பற்றப்படும் அளவுக்கு உள்ள பக்திமான் அவர். ஊர் ஊராக, நாடு நாடாகச் சென்று பக்தி பரவசத்துடன் பாடல்களைப் பாடி வந்தவர் அவர். இப்போது ஆதி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் உள்ள அடி அண்ணாமலை கிராமம் தான் அப்போதைய திருவண்ணாமலையாக இருந்திருக்கக் கூடும். அவர் அங்கு சென்று பாடிய பாடல்தான் மிகவும் புகழ் பெற்ற திருவெம்பாவை. மலை சுற்றி வரும் கிரி வலப் பாதையிலேயே அக்கிராமத்தில் அவருக்கு ஒரு சிறு சந்நிதி உண்டு. இன்றும் அடி அண்ணாமலையாருக்குக் கும்பாபிஷேகம் நடக்கும் போதெல்லாம், மாணிக்கவாசகருக்குத்தான் முதல் கலச அபிஷேகம் நடை பெறுகிறது.

மாணிக்கவாசரது திருவாசகம் , சிவ புராணம் இவற்றை அடியொற்றியே,  பிற்காலத்தில் பகவான் ரமணரைப் பற்றிய ரமண புராணம் , சந்நிதி முறை எல்லாம் ரமண பக்தர் முருகனார் இயற்றினார். அதைக் குறிப்பால் உணர்த்துவது போல, பகவானும் முருகனாரும் சந்திக்கும் முதல் சந்திப்பில் முருகனாரை பகவான் “திருவாசகம் போல் எழுதுவீரோ ?” என்று கேட்கிறார். அப்படியே பின்பு நடந்தது என்று சொன்னால் அந்த சந்திப்பின் மஹிமையையும் உணரலாம், மகான்களின் மஹிமையையும் உணரலாம்.

manikkavachakarஅப்படிப் பாடிக்கொண்டு நாடு வலம் வந்தவர், தனது கடைசி காலத்தில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலுக்கு வருகிறார். அங்கு அவர் தான் முன்பே இயற்றியிருந்த சிவ புராணத்தை மனம் உருகப் பாடுவதைக் கேட்டிருந்த ஒரு வயோதிக அந்தணர் அந்தப் பாட்டின் கையெழுத்துப் படிவத்தை வேண்ட, மாணிக்கவாசகரும் அதைச் சொல்ல சொல்ல அந்தணரும் ஓலையில் எழுதிக்கொள்கிறார். மறுநாள் காலை கோவிலுக்குச் சென்ற மாணிக்கவாசகருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. காலையில் கோவிலைத் திறந்து கருவறைக்குள் சென்ற குரு தீக்ஷிதர் இறைவன் பாதத்துக்கு அருகே ஓர் ஓலைச்சுருள் இருந்ததாகவும், அதை எடுத்துப் படித்துப் பார்த்ததில் அதில் மணிவாசகர் அடிக்கடி ஓதும் சிவ புராண வரிகள் தென்பட்டதாகவும், அதனால் அது அவருடையதாகத்தான் இருக்கும் என்று சொல்லி அவரிடம் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு அதன் பொருளையும் சொல்லித் தருமாறு வேண்டுகிறார்.

அப்போதுதான் மணிவாசகருக்கு முன்நாள் வந்து தன்னை புராணம் சொல்லச் சொல்லி ஓலையில் எழுதியவர் ஆனந்தக் கூத்தாடும் பெருமானே அன்றி வேறு எவரும் அல்லர் என்பதை உணர்ந்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, பொருள் வேண்டிக் கேட்டவருக்கு “இதுதான் பொருள்” என்று சொல்லிக் கொண்டே நடராஜர் திருப்பாதங்களில் கலந்து அங்கேயே முக்தி அடைகிறார். அந்நிகழ்ச்சியின் நினைவாக இப்போதும் மாணிக்கவாசகர் தரிசனம் என்று ஒரு நாள் ஆருத்ரா தரிசன நாளுக்கு முன்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி வாழ்ந்த மாணிக்கவாசகர் உண்மையிலேயே ஒரு தூய பக்தி யோகியே. அவர் 32 வயது வரை வாழ்ந்தார்.

sundararசுந்தரமூர்த்தி நாயனாரை சக மார்கத்தின் பிரதிநிதி என்று கொள்ளலாம். அதன் படி இறைவனை ஒரு தோழனாகவோ தோழியாகவோ கருதி ஒரு சக பாவத்தை வளர்த்துக் கொள்ளலாம். இதன் வேறொரு வடிவம் தான் நாயக-நாயகி பாவம் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு நண்பனாக சிவ பெருமான் வெவ்வேறு வேலைகளை சுந்தரருக்குச் செய்து கொடுத்திருக்கிறார். சுந்தரருக்கு அவர் மனைவியுடன் மனத்தாபம் ஏற்பட்டபோது, அவர் பொருட்டு இறைவன் தூது போயிருக்கிறார் என்றால் அந்த நட்பின் வலிமையும் பெருமையும் புரியும். அவர் திருவாரூரில் இருந்தபோதுதான் 63 நாயன்மார்களைப் பற்றியும் விவரங்களைத் தொகுத்து வழங்கினார். அத்திருவாரூரில் இப்போதும் “தூது நடந்த தெரு” என்று ஒரு தெரு இருக்கிறது.

வேறொரு முறை, சுந்தரர் காட்டின் வழியாக வரும் போது, அவர் தன் கையில் பொற்காசுகள் இருந்தால் கொள்ளையர்கள் வழிப்பறி செய்யக்கூடும் என்ற பயத்தில் இறைவனை வேண்டிக்கொண்டு, அருகில் இருந்த ஆற்றில் அவை அனைத்தயும் போட்டுவிட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். ஊர் திரும்பிய சுந்தரர் அதை கோவில் அருகே உள்ள குளத்திலிருந்து எடுக்கும்போது அப்பொன்னின் தரம் பற்றி சந்தேகம் கொண்டார். நண்பனாகிய இறைவனையே சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவருக்கு இறைவனிடம் அன்யோன்யம் உண்டு. ஆதலால் குளக்கரையில் அமர்ந்திருந்த விநாயகரிடம் பொன்னின் தரத்தைச் சோதிக்கச் சொல்கிறார். அதன் நினைவாகப் பெயரிடப்பட்ட விநாயகரை இன்றும் அங்கே காணலாம். இப்படியாக இறைவனிடம் தோழமை கொண்டு வாழ்ந்த சுந்தரர் 18 வருட காலமே இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தார்.

sambandhar1அவரது பெயரே குறிப்பிடுவதுபோல், திரு ஞான சம்பந்தர் ஞான மார்கத்தின் பிரதிநிதி. சிவனின் துணைவியாகிய பார்வதி அம்மன் அழுது கொண்டிருந்த குழந்தை சம்பந்தருக்கு தனது முலைப் பாலையே அளித்ததும், அதைக் குடித்து விட்டு அது வரை பேசாத குழந்தை உடனே “தோடுடைய செவியன் …” என்று முதல் பாடலாக பாடவும் பேறு பெற்ற ஞானப் பிறவிதான் அவர். அப்படி ஆரம்பித்து அவர் இயற்றிய பாடல்கள் மற்றவர் இயற்றியதை விட எண்ணில் ஏராளம் ஏராளம். அவர் உயிருடன் உலகில் இருந்ததோ மற்றவர்களை விட மிக மிகக் குறுகிய காலம் . அவர் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரும்போது, அவருக்கு இறைவன் உதவியும் செய்கிறான், பாடங்களும் நிறையப் புகட்டுகிறான். அவருக்கு அண்ணாமலையார் எங்கு ஒளி வடிவமாய் காட்சி தருகின்றாரோ அதே அரகண்டநல்லூர் என்னும் இடத்தில் பகவான் ரமணருக்கும் காட்சி தருகின்றார். ஞானத்தின் திரு உருவாய் விளங்கிய சம்பந்தர் 16 வயது வரை வாழ்ந்தார்.

நமக்குக் காலமும் இங்கு பக்கங்களும் இருப்பின் இம்மகான்களைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். நாம் அலச வேண்டிய முக்கிய விஷயத்துக்கு இவர்களைப் பற்றி இவ்வளவு தெரிந்துகொண்டது போதும் என்று நினைக்கிறேன். இம்மகான்கள் வெவ்வேறு நெறிகளைப் பின்பற்றினாலும், அவர்கள் அனைவருமே கோவில்களுக்குச் செல்வது, அங்குள்ள இறைவன்-இறைவி மேல் பாடல்கள் இயற்றுவது என்ற வழக்கத்தைக் கடைசி வரை கடைப்பிடித்தனர். அதனாலேயே அந்தத் தலங்கள் யாவும் ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்ற புகழோடு விளங்குகின்றன. அதனால் வெறும் பாடல்கள் மட்டும் பாடி விட்டால், அதைப் பக்தி வழி என்று கொள்ளக்கூடாது. பாடுபவர் வாழும் முறையையும், அவருக்கு நேரும் அனுபவங்களையும் எடுத்துக் கொள்ளவேண்டும். அது தவிர வெவ்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டாலும், அவைகள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஒரே ஒரு வழியே முதன்மையானதாக இருக்கும்; மற்றதன் பாதிப்புகளும் ஓரளவுக்கு இருக்கும். நாம் மேலே சொல்லப்பட்ட நான்கு வழிகளைப் போற்றிய அந்நால்வர்களின் நிறைவு கால வயதைப் பார்த்தால் வேறு ஒன்றையும் காட்டுவது போல அமைந்திருக்கிறது. அதை விளக்கத்தான் பகவான் இயற்றிய உபதேச உந்தியார் பாடல் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து மேலும் சில விவரங்களை அலசிப் பார்க்கிறோம். அந்தப் பாடல்தான் இது:

“திடம் இது பூஜை ஜபமும் த்யானம்
உடல் வாக்கு உளத் தொழில் உந்தீபற
உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீபற”

இச் செய்யுளின்படி “நிச்சயமாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் பூஜை, ஜெபம், த்யானம் மூன்றும் முறையே உடல், வாக்கு, மற்றும் உள்ளத்தால் செய்யப்படும் தொழில்கள்தான்; மேலும் அவை முறையே ஒன்றில் ஒன்று உயர்வானது”. அதாவது அம்மூன்றில் த்யானமே உத்தமமானது. மற்றவைகளை ஒன்றுக்குப்பின் ஒன்றாக வரிசைப் படுத்தலாம்.

இந்தக் கூற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் , சொன்னவர் ஒரு மஹரிஷி. மற்றும் அவர் சொல்லும்போதே அதை ” திடம் இது..” என்று தொடங்குகிறார். ஆகையால் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு பார்க்கும்போது, முதலில் நாம் அவை மூன்றையுமே வெவ்வேறு விதமான தொழில் வடிவம் என்று கூறுவதை முதலில் பார்க்கவேண்டும். எந்தக் கருவியைக் கொண்டு செய்யப்படுகிறதோ அதில் மட்டும் தான் வேற்றுமை தெரிகிறது. பூஜை (கர்மம்) உடல் உறுப்புகளாலும், ஜெபம் (பக்தி) உணர்வு அலைகளாலும், தியானம் (சகமார்க்கம்: தோழமை/ எப்போதும் நினைவில் கொள்வது) எண்ண அலைகளாலும் செய்யப்படுகிறது. இந்த மூன்று நிலைகளில் தான்-மற்றது என்ற பாகுபாடு உண்டு. அதாவது செய்பவன்-செய்யப்படுவது என்ற இருநிலை பேதம் உள்ளது. மற்றும் இந்நிலைகளில் தான் ஒன்றை ஒன்று ஒப்பிட்டு, உயர்ந்தது-தாழ்ந்தது என்றும் சொல்லமுடியும். மேலும் , இம்மூன்றினும் முதல் இரண்டான கர்மம், பக்தி நெறிகளில் செய்கை-செயல் பாகுபாடு என்பது கண்ணால் காணக்கூடிய பொருட்கள் அளவிலும், சக மார்கத்தில் அப்பாகுபாடு உணரக் கூடிய உள்ளத்தளவில் மட்டுமே உள்ளது. அம்மூன்றினும் உள்ள பொதுத் தன்மையானது மேலே குறிப்பிடப்பட்ட இருநிலை பேதம் தான்.

உபதேச உந்தியாரில் முதல் 15 செய்யுள்களில் இம்மூன்று யோக நெறிகளை விளக்கிவிட்டு , பின் வரும் 15 செய்யுள்களில் ஞான மார்கத்தின் பெருமையை ரமணர் விளக்குகிறார். இவ்வாறான மூன்றுக்குப் பதினைந்து, மற்றும் ஒன்றுக்குப் பதினைந்து என்ற கணக்கே ஞான மார்கத்தின் பெருமையைப் பறை சாற்றுவதுபோல் அமைந்திருக்கிறது.

அவரவர் தன்மைக்கு ஏற்ற வழியை ஒருவர் தேர்ந்தெடுக்கும்போது, இங்கே கூறப்பட்டுள்ள நான்கு வழிகளில் வந்த நால்வர்களின் வாழ்நாள் எல்லை நமக்கு உணர்த்துவது என்ன? நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா? நால்வருமே உயிரிருக்கும்போதே இறைவனை உணர்ந்த ஜீவன் முக்தர்கள். அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள். தேகத்தைத் துறந்து முக்தி அடையும் போது ஞான வழியில் வந்த சம்பந்தருக்கு 16 வயதும், சக மார்க்கத்தைப் பின்பற்றிய சுந்தரருக்கு 18 வயதும், பக்தி வழி நின்ற மணிவாசகருக்கு 32 வயதும், கர்ம யோகியான அப்பருக்கு 81 வயதும் ஆகியிருந்தது. அதாவது கர்ம வழியில் நின்றவருக்கு விதேக முக்தி காண வாழ்நாட்கள் மிகுதியாகவும், ஞான மார்கத்தில் நின்றவருக்கு அது குறைவாகவும் இருப்பது கண்கூடாக இருப்பது தெரிகிறது.

nalvar_sculptureஏற்கனவே நாம் பார்த்தபடி ஜீவன் முக்தர்களான நால்வர்களுக்கு முக்தி நிலை என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் வரக்கூடியது. ஆதலால் அவர்களை சாமான்யர்களாக எண்ணாது, அவர்கள் வாழ்ந்த கால எண்ணிக்கையை கூர்ந்து கவனித்தால் அதிலும் நமக்கு ஒரு படிப்பினை இருக்கும் போலிருக்கிறது. மேலே குறிப்பிட்டபடி, செயல் திறன் மிக்க கர்ம யோக வழி நிற்பவரை விட மிகவும் சூக்ஷமமான ஞான வழி செல்பவர் வெகு சீக்கிரமே கைவல்ய முக்தி அடையக்கூடும் என்று சொல்ல முடியுமோ? அல்லது, நாட்கள் பல ஆனாலும் கர்ம யோகம் ஒருவரை நல்வழி நடத்திச் சென்று மற்ற யோக நெறிகளுக்கும் தானே தவறாது இட்டுச் செல்லும் என்று கூறத்தான் இயலுமோ?

அதாவது, ஞானம் பற்றி அறிவு சற்றும் இல்லாத ஒரு சாமான்யர் தனிப்பட்டோ அல்லது பொதுவாகவோ சேவை செய்ய ஆரம்பித்து, அதுவே நல்ல மனத்துடனும் கருத்துடனும் செய்யப்படும்போது அதில் ஆர்வம் மிகுந்து காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, செய்யப்படும் கர்மமானது செய்பவர் உள்ளத்தில் பக்தியாக மலரக்கூடும். அப்படி மலரும் பக்தியின் விளைவாக, அவர் மனத்தில் அந்த செய்கை மேலோ அல்லது அதன் பயனை அடைபவர் மேலோ ஓர் தோழமை உணர்வை வளர்த்துக் கொள்ளலாம். அது உலகியல் அளவில் உள்ள ஒரு உணர்ச்சி. அத்தோழமை உணர்ச்சியே முதுர்ச்சி பெற்ற நிலையில், தனக்கும் பிறருக்கும் எந்த ஒரு வித்தியாசமு ம் காணமுடியா ஒன்றிய நிலையாக உணரப்படுமோ? உணர்ச்சி படிப்படியாக வளர்ந்து முற்றுவதற்கு கால தேசம் தேவைப்படுகிறது. அப்படி அந்த முற்றிய நிலைக்கு வளர்வதற்குத் தேவைப்படும் காலவரையைக் குறிப்பிடும் வகையில், நாம் பார்த்த சமயக் குரவர் நால்வரின் வயது வரம்புகளை அமைத்து, இறைவன் நமக்கு அதை சூக்ஷமமாக உணர்த்துகிறாரோ? எந்த வழியையும் ஒருவர் பின்பற்றலாம் எனும்போது, அந்த நான்கு முறைகளில் ஓர் உயர்வு-தாழ்வு இருப்பது போல் காணப்படுவதின் உள்ளர்த்தத்தை இப்போது நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அது நான்கு வழிகளில் உள்ள ஏற்றமோ இறக்கமோ அல்ல; அதைப் பின் பற்றுபவனின் துவக்க நிலையையே குறிக்கிறது என்றும், எது நேர்வழி எது சுற்றுவழி என்பதையும் ஓரளவு குறிப்பிடுகிறது என்றும் அறியலாம்.

கண்ணால் காணக்கூடிய உலகியலையும், மனத்தால் உணரக்கூடிய உணர்வுகளையுமே அறியும் ஒருவன், “கால தாமதம் செய்யாது சீக்கிரமே தன்னை உணர தானே வழியைத் தேர்வு செய்ய முடியாதா?” என்று கேட்கலாம். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்னும் மகாவாக்கியத்தை அறிந்தோருக்கு அப்படி ஒரு கேள்விக் கணை பிறக்குமோ?

15 Replies to “அற வழியில் நால்வர்: ஒரு பார்வை”

 1. Nice article Sri. Ramanan. Can you please let me know in which literature the poem, that denotes the ‘nalvars’ age appears?
  Also, you have mentioned that the other three have refered to ‘Manickavasagar’ in their padigams. Can you please provide me with the exact padigams, so that it will help me to understand better?

  Thanks,
  Satish

 2. Thankyou for the wonderful article Sri Raman.
  This is new angle-I read somewhere that those who follow the Gnana marg and achieve self realisation soon leave their bodies and merge with the infinite.
  What you say confirms that .
  Appar thru his selfless uzhavara pani shows us the way -for most of us it may be a good starting point.
  Thanks
  Saravanan

 3. இந்தக் கருத்து சிறிது வித்தியாசமானது என்றாலும் புதிதல்ல. பாகவதர்கள்/ சிந்தனையாளர்கள் பல விதமான சிந்தனை/ தேடுதல் பயனாக இத்தகு கருத்தைக்கூறியிருக்கிறார்கள். ஆனால், எந்த மார்க்கமும் ஒன்றில் ஒன்று குறைந்ததல்ல எனற கருத்தே மேம்பட்டதாக எனக்குப் படுகிறது. ஏனெனில், அப்பர் பெருமான் நெடுங்காலம் இந்தப் பூவுலகில் வாழக் காரணம் அவர் தேர்ந்தெடுத்த பாதை நெடும்பாதை என்றோ அல்லது திருஞானசம்பந்தரின் ஞானவழி எல்லாவற்றிலும் சீக்கிரம் இறையடிக்கு இட்டுச்செல்லும் என்றோ வரும் கருத்து ஒரு வழியைவிட மற்றொன்று சீரியது என்ற பொருளைத்தரக் கூடும். இது சரியல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து. அப்படியான கருத்து உண்மையானால் நெடுங்காலம் இப்பூவுலகில் வாழ்ந்த மகான்கள் எல்லாம் தங்கள் பிறவி முக்தி நிலையை எய்த அதிக காலம் எடுத்துக்கொண்டனர் என்றோ அவர்களது வழியிலோ அல்லது ஏதோ ஒன்றிலோ சிறிது குறைபாடு உளது அதனைக் கழிக்க மேலும் வாழ்ந்தனர் என்றோ பொருள் வந்துவிடும்.

  அப்பர் பெருமானின் சேவை, நம்மிடையே அண்மையில் வாழ்ந்து நம்மை வழிநடத்திய காஞ்சி பரமாச்சாரியாரின் சேவை இந்த மண்ணிலுள்ள மக்களுக்கு மேலும் மேலும் தேவை என்பதாலேயே இறைவன் அவர்களை இந்த மண்ணில் பல நெடுங்காலம் இருக்க வைத்தான் என்பதே எனக்குப் படுகிறது.
  நாங்கள் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஒருவன் சரியாக வேலை செய்யவில்லை எனில் அவனுக்கு ஊதிய உயர்வு கொடுத்து ஊக்கப்படுத்து. ஒருவன் நன்கு உழைக்கிறான் என்றால் அவன் வேலையை அனுபவித்து சுகித்து செய்கிறான் எனவே அவனுக்கு மேலும் மேலும் வேலை கொடு என்பதே சரியான மனிதவளக் கொள்கை என்று. இறைவன் அதைப்பின்பற்றித்தான் இத்தகைய உழைப்பாளிகளான மகான்களை நெடுங்காலம் நம்மிடையே இருக்க வைத்தானோ என்று வேடிக்கையாகத் தோன்றுகிறது.

  ‘அவ‌ன் அருளே’ உட‌ன‌டி முக்தியா இல்லை நூறாண்டுக்குப்பின் முக்தியா என்ப‌தை முடிவு செய்கிற‌து.

 4. மிக சிறந்த கட்டுரை. நன்றி.
  நால்வரின் வயது பற்றிய புதிய பார்வை.

  //அப்பர் 81 வயதிலும், திருவாதவூரைச் சார்ந்த மாணிக்கவாசகர் 32 வயதிலும், சுந்தரமுர்த்தி நாயனார் 18 வயதிலும் திரு ஞான சம்பந்தர் 16 வயதிலும் காலமானார்கள் என்று தெரிவிக்கிறது இந்தப் பாடல்.//
  காலமானார்கள் என்பது சரிஇல்லை, இறைவனோடு கலந்தார்கள் என்பதே சரி.

  //அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள்.//
  நால்வர் பெருமக்கள் இறைவனால் தென் திசைக்கு அனுப்பப்பட்டவர்கள். சைவத்தையும், தமிழையும் போற்றி இசைக்கவே அவதரித்தவர்கள்.

 5. To All: Thanks for the appreciation and the comments.

  To Mr. Satish:
  I am not Ramanan. I used to tell my firends as a joke that if only I got an ‘A’ grade I would have been RamanA. Anyway, regarding your 2 queries. I read somewhere (forgot where) about that venba, which was referred to as “தனிப் பாடல்”. No source was identified there. I just noted it down as it was a good mnemonic of their lifetimes. Regarding Manikkavasagar’s period, there are different versions. The one I have referred to is based on what I heard from an old man who had read thevarams. He had also added that there were only indirect references to him. It did not occur to me to note down the related details. So I am sorry that I am not enlightening you any more. May be some thevaram researcher could be of help.

  திரு. உமா சங்கர்:
  ஒரு முறை ஒரு அன்பரோடு பேசியபோது, அவர் நினைவு தெரியும் நாள் முன்பாகவே வாரம் தவறாது விஷ்ணு சஹஸ்ர நாம பஜனையில் கலந்து கொண்ட அவருக்குக் கிருஷ்ண பரமாத்மா முதலில் எங்கோ இருக்கும் கடவுளாகவும், பின் அவர் பக்தியுடன் வணங்கும் பெரியவராகவும், தற்சமயம் தோழனாகவும், சில சமயம் பரமன் தன்னுளே இருப்பது போலவும் கூறினார். அன்று தோன்றியதை மனதில் கொண்டே இங்கே கட்டுரையாக எழுதியுள்ளேன்.

  நான் குறிப்பட்டது போல் அவரவர் துவக்க நிலைக்கேற்ப (முன் செய்த கர்ம வினைக்கேற்ப) அவரவர் மனமும் ஒரு வழியை நாடும். அதனாலேயே அவன் தாள் வணங்குவோருக்கு அது பற்றிய கேள்வியும் எழாது என நினைப்பதாகவே எழுதியுள்ளேன்.

 6. உமாசங்கர் அய்யா

  உங்களின் கருத்தை ஒத்ததே எனது கருத்து

  //
  இந்தக் கருத்து சிறிது வித்தியாசமானது என்றாலும் புதிதல்ல. பாகவதர்கள்/ சிந்தனையாளர்கள் பல விதமான சிந்தனை/ தேடுதல் பயனாக இத்தகு கருத்தைக்கூறியிருக்கிறார்கள். ஆனால், எந்த மார்க்கமும் ஒன்றில் ஒன்று குறைந்ததல்ல எனற கருத்தே மேம்பட்டதாக எனக்குப் படுகிறது. ஏனெனில், அப்பர் பெருமான் நெடுங்காலம் இந்தப் பூவுலகில் வாழக் காரணம் அவர் தேர்ந்தெடுத்த பாதை நெடும்பாதை என்றோ அல்லது திருஞானசம்பந்தரின் ஞானவழி எல்லாவற்றிலும் சீக்கிரம் இறையடிக்கு இட்டுச்செல்லும் என்றோ வரும் கருத்து ஒரு வழியைவிட மற்றொன்று சீரியது என்ற பொருளைத்தரக் கூடும். இது சரியல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து
  //

  இதை வெறும் அபிமான கருத்தாக பார்க்கவும் – என் மனதில் படுவது மட்டுமே

  சிவ பெருமான் சம்மந்தரை பார்த்திருப்பார் – சம்மந்தர் உம்மால் இந்த உலகம் திருந்தி உய்யவே உம்மை அவர்தாரமாக அனுப்பினோம் – ஆனால் நீரோ மக்களுக்கு எளிதில் புரியும் படி ஏதும் செய்யாமல் உம்ம்முள்ளே என்னை மட்டும் வைத்து போஒலோகத்திலும் ஞானியாகவே வாழ்கிறீர் – நீர் அங்கு வெகு நாள் இருந்து சாதிக்க வேண்டியது இல்லை, – திரும்பலாமே என்றிருப்பார்

  ஆனால் அப்பர் செய்த உழவார பனியோ இன்று வரை தொடர்கிறது – நான் கடைசியாக பார்த்தது வைணவம் மறுமலர்ச்சி அடைய முதற் காரணமாக இருந்த திருநாரயனபுரம் (காட்டும் மன்னார் கோவில்) ஊரில் உள்ளல் திருநாராயண கோவிலில் – சமய வேறுபாடு இல்லாமல் தூய உள்ளத்துடன் அனைவரும் அசதி பார்க்காமல் பனி செய்துவந்தனர் – ஒரு காட்டுமிராண்டி கடவுள் மறுப்பு அரசாங்கம் இருக்கையில் கோவில்களை இது போன்ற தொண்டு தான் காப்பாற்றுகிறது

  ஞான மார்க்கம் என்பது சிலருக்குதான் பொருந்தும் ஆனால் இறைவனின் தொண்டோ அனைவருக்கும் வரும் – சம்பந்தரின் ஆயுள் காலம் சிலருக்கு ஞான மார்கத்தை உபதேசிக்க போதுமாக இருந்தது. அப்பரோ இறை பணியில் நெடுங்காலம் ஈட்டுபட்டு பலரின் மனதை கவர்ந்து பலரை அவர் வழியில் ஈடுபட செய்திருப்பார்

  இப்படிப்பட்டவர்களின் அவதாரங்களில் இருந்து யார் சீக்கிரம் என்று பாராமல் இறைவன் அவர்களை வைத்து என்ன சாதித்து கொண்டார் என்பதே எனக்கு முக்கியமாக படுகிறது

 7. // ஆனால், எந்த மார்க்கமும் ஒன்றில் ஒன்று குறைந்ததல்ல எனற கருத்தே மேம்பட்டதாக எனக்குப் படுகிறது. //

  உமாசங்கரின் இந்தக் கருத்துடன் ஒன்றுபடுகிறேன். சமயக் குரவர் நால்வர் மட்டுமல்ல, அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒவ்வொருவரது பக்தி வழியுமே ஒவ்வொரு மாதிரி. ஆயினும் அவர்களை இணையாக வைத்து ஒன்றுபோல வணங்குவதே சைவ மரபு. மார்க்க பேதங்கள் இருக்கலாம், ஆனால் உயர்வு தாழ்வு என்பது கிடையாது என்பதே சைவத்தின் கொள்கை.

  மேலும், நால்வரது பக்தி முறைகளும், வழிகளும் ஒற்றைப் படையானவையும் அல்ல, பன்முகத் தன்மை கொண்டவை. அதில் பிரதானமாக இருந்த அம்சத்தை எடுத்து “தாச மார்க்கம், சக மார்க்கம் என்று பின்னாளில் விளக்கினார்கள், அவ்வளவே. கர்மயோகி அப்பர், “கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்.. எங்கும் ஈசன் எனாவதவர்க்கு இல்லையே” என்றும் உபதேசம் செய்வதைக் கவனிக்க வேண்டும்.

  // சம்மந்தர் உம்மால் இந்த உலகம் திருந்தி உய்யவே உம்மை அவர்தாரமாக அனுப்பினோம் – ஆனால் நீரோ மக்களுக்கு எளிதில் புரியும் படி ஏதும் செய்யாமல் உம்ம்முள்ளே என்னை மட்டும் வைத்து போஒலோகத்திலும் ஞானியாகவே வாழ்கிறீர் – நீர் அங்கு வெகு நாள் இருந்து சாதிக்க வேண்டியது இல்லை, – திரும்பலாமே என்றிருப்பார் //

  சாரங், இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதை மட்டும் வைத்து இப்படிப் பட்ட ஊகங்களுக்கெல்லாம் தயவுசெய்து வந்து விடவேண்டாம். சம்பந்தர் வரலாறு பற்றி நீங்கள் அடிப்படை விஷயங்களைக் கூட அறியவில்லை என்று தோன்றுகிறது.

  தமிழகத்தில் ஏற்பட்ட சமய, பக்தி எழுச்சியின் விடிவெள்ளி சம்பந்தரே. பௌத்த, சமணத் தாக்கத்தை பெருமளவில் அகற்றி பின்னாளைய சைவ, வைஷ்ணவ சமயங்கள் இரண்டுமே தழைப்பதற்கு அஸ்திவாரம் இட்டவர் அவரே. தமிழ் இசையையும், தமிழ் மொழியின் அந்தஸ்தையும் மீட்டவரும் அவரே. இது பற்றி ”சம்பந்தரின் சமூக மீட்சியும் கழுவேற்ற கற்பிதங்களும்” (பாகம் 1, பாகம் 2) என்ற எனது கட்டுரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

  நால்வரில், அனைவரையும் விட அதிகத் தலங்களுக்கு சம்பந்தரே சென்றிருக்கிறார்.. ஈழத்தில் உள்ள திருக்கேத்தீஸ்வரம், மாதோட்டம் தலங்களுக்குக் கூட சம்பந்தர் தேவாரம் உள்ளது. ,

  சம்பந்தர் விஷயத்தில் “ஞானம்” என்று கூறப்படுவது சம்பிரதாயமான வேதாந்த ”ஞான மார்க்க” விளக்கத்திலிருந்து வேறுபட்டது. சம்பந்தர் ஞானப் பால் அருந்தியவுடன் ஏற்பட்ட நிலை பற்றிய பிரபலமான பெரிய புராணப் பாடலைப் படித்தாலே இது விளங்கும் –

  சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
  பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்
  உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
  தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

  பசு-ஞானம், பாச-ஞானம், பதி-ஞானம் என்ற படித்தரங்களை வைத்தும் சைவ சித்தாந்தத்தில் இதனைப் பேசுவார்கள். முனைவர் ஐயாவைக் கேட்டால் அருமையாக விளக்கம் சொல்வார்.

  சம்பந்தர் வாழ்நாள் குறுகியது, ஆனால் அவர் உள்முகப் பட்ட ஞானி மட்டுமல்ல, மாபெரும் சமூக நிர்மாண சக்தியாக விளங்கியவர்.

  ஒரு குறிப்பிட்ட சட்டகத்துள் நின்று நாயன்மார்களது மார்க்கங்களை இந்தக் கட்டுரை பேசுகிறது. அதனால் தான் “ஒரு பார்வை” என்று சரியாகவே தலைப்புக் கொடுத்திருக்கிறார்கள் எடிட்டர்கள்.

 8. ஜடாயு அவர்களே

  //
  சாரங், இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதை மட்டும் வைத்து இப்படிப் பட்ட ஊகங்களுக்கெல்லாம் தயவுசெய்து வந்து விடவேண்டாம். சம்பந்தர் வரலாறு பற்றி நீங்கள் அடிப்படை விஷயங்களைக் கூட அறியவில்லை என்று தோன்றுகிறது.
  //

  நான் முடிவு கட்டவில்லை. சம்மந்தரின் அவதார விஷயத்தை குறைத்து கூறவும் முயற்சிக்க வில்லை – ஒரு அபிமானமாக எல்லா மார்க்கமும் நல்ல மார்க்கம் என்று கருத்து வெளிபட சொன்னது தான் [இந்த கட்டுரையில் சொன்ன கருத்துக்கு மாறாக இப்படியும் கருத்து கொள்ளலாம் அல்லவா என்று தான் நினைத்தேன் – இப்படி பிரச்சன வரக் கூடாது என்றே எனது பதிலில் ஒரு “disclaimer” கூட உள்ளது 🙂 ] – அதற்க்கு நான் எடுத்துக்கொண்ட உதாரணம் தவாறாக இருப்பின் வருந்துகிறேன்

 9. திரு. சாரங்:
  தாங்கள் கூறுவது – “…ஒரு அபிமானமாக எல்லா மார்க்கமும் நல்ல மார்க்கம் என்று கருத்து வெளிபட சொன்னது தான் [இந்த கட்டுரையில் சொன்ன கருத்துக்கு மாறாக இப்படியும் கருத்து கொள்ளலாம் அல்லவா என்று தான் நினைத்தேன்…..”

  அப்படியா இக்கட்டுரையைப் புரிந்து கொண்டிருகிறீர்கள்? ஒவ்வொரு மார்க்கமும் ஒவ்வொருவர் நிலையைப் பொறுத்தது என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது. பத்து வயதில் Ph.D., பட்டம் பெறுபவர்களும் இருக்கிறார்கள், ஐம்பது வயதில் பத்தாம் வகுப்பு தாண்ட முடியாதவர்களும் இருக்கிறார்கள் அல்லவா? அதே சமயம் LKG-யும் PhD-யும் ஒன்றாகுமா? மெய் வழி, வாய் வழி, மன வழி, உள்ளத்தே உள்ளல் என்பவை grossest level-லிருந்து subtlest level-க்குச் செல்வதாகும். எவருக்கு எது தகுமோ அதைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று சொல்வது எதையும் தாழ்த்தியோ உயர்த்தியோ சொல்லப்படுவது அல்ல. நாம் எந்த level-ல் இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே. Grossest level-ல் தெரியும் நான்-நீ பேதங்கள் மேலே செல்லச் செல்ல
  மறையும்.

 10. திரு ராமன் அவர்களே

  நீங்கள் சொன்னதை தவறாக புரிந்து கொள்ளவில்லை – மாறாக என்பதற்கு பதில் in addtion to என்று கொண்டால் சரியாக வரும் என்று நினைக்கிறேன் அதாவது நான் சொல்ல வந்தது இது தான் – நமது மார்க்கம் இது என்று நாம் தீர்மானம் செய்வதில்லை அது இறைவன் நம்மை எப்படி பயன் படுத்த நினைக்கிறானோ அவ்வண்ணமே ஆகிறது – அவதார புருஷர்களை இறைவன் ஒரு வித நோக்குடன் தன அவதாரம் செய்ய வைக்கிறார் அப்படி இருக்கையில் இது உயர்வு இது தாழ்வு என்றில்லை என்றே சொல்ல முற்பட்டேன்

 11. / திருநாவுக்கரசர் என்ற அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் என்ற அந்த நால்வரும் சற்றே மாறுபட்ட நான்கு அற நெறிகளைக் கடைப் பிடித்தவர்கள் என்று கூறப்படும். அந்த நான்கு வழிகளையும் தாச மார்க்கம், பக்தி மார்க்கம், சக மார்க்கம், ஞான மார்க்கம் என்று பொதுவாகச் சொல்லலாம். /

  இக்கருத்துப் பற்றி ஒரு விளக்கம் அளிக்க விரும்புகின்றேன். சைவம், “சன்மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாதமார்க்கம் என்று சங்கரனை அடையும் நன்மார்க்கம் நான்கு” என்றும் அவை சரியை, கிரியை, யோகம் ஞானம் என்று நான்குவகைப்படும் என்றும் சரியையாகிய தாதமார்க்கத்தில் நின்றவர் சிவலோகத்தில் இருப்பதாகிய சாலோகபதவியை அடைவர் என்றும், கிரியையாகிய சற்புத்திரமார்க்கத்தில் ஒழுகியவர் சிவனுக்கு அணுக்கத்தில் இருப்பதாகிய சாமீப பதவியை அடைவர் என்றும், சகமார்க்கமாகிய யோகத்தில் ஒழுகியவர் சிவனது வடிவமாகிய சாரூப பதவியை அடைவர் என்றும் சன்மார்க்கமாகிய ஞானமார்க்கத்தில் நின்றவர் சிவனுடன் இரண்டறக் கலத்தலாகிய சாயுச்சிய முத்தியை அடைவர் என்றும் கூறும்.(சிவஞானசித்தியார் செய்யுள் 270)

  சாலோக சாமீப சாரூபமுத்திகள் மூன்றும் பதமுத்திகள்.சாயுச்சியம் ஒன்றே பரமுத்தி. பதமுத்தியடைந்தவ்ர் அப்பதத்திலிருந்தே தவம் செய்து பரமுத்தி அடைவதும் உண்டு. பதமுத்தி இன்பத்தை நன்கு அனுபவித்துச் சிவனின் ஆணையால் அப்பத முத்திகளினின்றும் நீங்கி இப்பூவுலகத்தில் உயர்ந்த நற்குலத்தில் தோன்றி குருவினால் ஞானநிட்டை அடைந்து பரமுத்தி அடைவர்.(சிவஞானசித்தியார் 276). சரியை முதலிய மூன்றினால் அடைவது பதமுத்தி. ஞானத்தினால் மட்டுமே பரமுத்தி அடைதல் இயலும். பரமுத்தியே மீண்டும் பிறப்புக்கு வாராத உயர்ந்த முத்தி.

  திருஞானசம்பந்தர் சீகாழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகவாகப் பிறப்பதற்கு முன் சிவனடியே சிந்தித்திருக்கும் பதமுத்தியில் இருந்தவரே. அவரை சிவன்,’பரசமயங்களை நிராகரித்துத் திருநீற்றொளி” பரப்ப மையல் செய்து அனுப்பி வைத்தான். அதனைத் திருஞானசம்பந்தரே, “துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல், பிறக்குமாறு காட்டினாய்” என்று திருத்துருத்திப் பதிகத்தில் எடுத்து ஓதினார்.

  அப்பர் பெருமான் மருணீக்கியாராகத் திருவவதாரம் செய்யுமுன் திருக்கயிலைச் சாரலில் (சாலோகம்) ‘வாகீசர்’ என்னும்பெயருடன் முனியாகத் தவம் செய்துகொண்டிருந்தார். உலகு திருத்தொண்டின் பெருமையை அறிந்து உய்யவேண்டும் என்னும் கருத்தில் இறைவன் அவரை மண்ணுலகிற்கு அனுப்பினான். இதனைத் திருநாவுக்கரசர் புராணம், ” திருநாவுக்கரசு, வளர்திருத் தொண்டின் நெறிவாழ, வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் , பெருநாமச்சீர் பரவ லுறுகின்றேன்” என்று பாடுகின்றது

  திருத்தொண்டத்தொகை பெற்றுத் தமிழ்த் தேசம் உய்ய வேண்டும் எனும் கருத்தால் இறைவன் தனக்குத் திருக்கயிலையில் சாரூபத்துடன் அணுக்கத் தொண்டு செய்து கொண்டிருந்த ஆலாலசுந்தரை நம்பியாரூரராகப் பிறக்கச் செய்தான்.

  மணிவாசகப் பெருமானும் இம்மண்ணுலகில் திருவாதவூரராக வருமுன் சாமீபபதம் பெற்றுத் திருக்கயிலையில் இறைவனுக்கு அண்மையில் கணநாதராகத் திருத்தொண்டு செய்தவரே. இறைவன் அவரை அப்பதமுத்தி நிலையிலிருந்து விலக்கி மண்ணுலகில் பிறக்கச் செய்ததனை, அடிகள்,” நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப் பெய்து” (திருவாசகம் அதிசயப்பத்து 8) எனக் குறிக்கின்றார்.

  பத முத்தியில் இருந்த இந்நால்வரும் இறைவன் குறிப்பினால் மண்ணுலகில் தோன்றி உலகை வாழ்வித்துப் பின் பரமுத்தியாகிய மேலான முத்தி அடைந்தனர் என்பது சைவசாத்திரம் கூறும் உண்மை.

  நால்வரும் முறையே தாதமார்க்கம் சற்புத்திர மார்க்கம் சகமார்க்கம் சன்மார்க்கம் எனும் நால்வகை நெறியில் நின்றனர் என்று கூறுவது பிழை. நால்வரும் ஞானநெறியில் நின்று பதமுத்தி அடந்தனர் என்பதே சாத்திரம் கூறும் உண்மை. ஆன்மபோதமாகிய தற்போதம் கெட்டவர்கள் (நான் எனது எனும் அகங்காரம் மமகாரம் அழிந்தவர்கள்) எந்த நெறியில் நின்றாலும் அது ஞானநெறியாக அவர்க்ளுக்கு பரமுத்தியைஎய்துவிக்கும். இதனை,
  “நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
  நல்லசிவ ஞானத்தால் நானழிய – வல்லதனால்
  ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
  ஆரேனுங் காணா அரன்”(திருக்களிற்றுப்படியார் 15) எனும் ஞானசாத்திரம் கூறுகின்றது.

 12. முனைவர் ஐயா அவர்களின் மறுமொழி மூலம் அளித்த பல விளக்கங்களுக்கு மிக்க நன்றி. அப்படியே அவர் மாணிக்கவாசகர் காலம் பற்றியும் (வேறு ஒரு மறுமொழியில் கேட்டிருந்தபடி) உள்ள கருத்துக்ககளிக் கொடுத்திருந்தால் இன்னும் பயனடைந்திருப்போம். நல்லது, இப்போது தாங்கள் கூறிய சில விளக்கங்களைக் காண்போம்.

  தாங்கள் கூறிய நான்கு மார்க்கங்களைப் பற்றி நான் திரு முருக கிருபானந்த வாரியார் உரைகளின் மூலம் ஓரளவு அறிவேன். தாங்கள் சொல்லிய “சிவ ஞான சித்தியார்” மூலத்தைப்பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். நன்றி. வேறு விதமாகச் சொல்வர் என்பதையே நானும் கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிட்டுள்ளேன்.
  “…….அந்த நால்வரும் சற்றே மாறுபட்ட நான்கு அற நெறிகளைக் கடை ப் பிடித்தவர்கள் என்று கூறப் படும். அந்த நான்கு வழிகளையும் தாச மார்க்கம், பக்தி மார்க்கம், சக மார்க்கம், ஞான மார்க்கம் என்று பொதுவாகச் சொல்லலாம். இம்மார்கங்களைச் சற்று வேறுபடுத்திச் சொல்பவர்களும் உண்டு ……”

  எவரும் தனது முந்தைய வினைப்படி ஒவ்வொரு விதமாக வாழ்கின்றனர் என்பதையே நானும் இப்படிச் சொல்லியதாகக் கருதுகின்றேன்.
  “… வெறும் பாடல்கள் மட்டும் பாடி விட்டால், அதைப் பக்தி வழி என்று கொள்ளக்கூடாது. பாடுபவர் வாழும் முறையையும், அவருக்கு நேரும் அனுபவங்களையும் எடுத்துக் கொள்ளவேண்டும்….”
  “… நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா? நால்வருமே உயிரிருக்கும்போதே இறைவனை உணர்ந்த ஜீவன் முக்தர்கள். அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள். தேகத்தைத் துறந்து முக்தி அடையும் போது …..”
  ஆக அனைவரும் முக்தர்களே என்பதிலும் எனக்குச் சந்தேகம் இல்லை.

  நான் வேறு ஒரு மறு மொழியில் கூறியது போல் ஒருவரின் அனுபவங்களைக் கேட்டதும் எனக்குத் தோன்றிய எண்ணங்களையே இரு வேறு செய்யுள்களை இணைத்து இப்படியாக அளித்துள்ளேன்.
  “… நாம் மேலே சொல்லப்பட்ட நான்கு வழிகளைப் போற்றிய அந்நால்வர்களின் நிறைவு கால வயதைப் பார்த்தால் வேறு ஒன்றையும் காட்டுவது போல அமைந்திருக்கிறது. அதை விளக்கத்தான் பகவான் இயற்றிய உபதேச உந்தியார் பாடல் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து…..”

  அவர்களின் வயது வரம்பினையும் வெவ்வேறு முறைகளையும் பார்க்கும்போது தோன்றியதை எழுதியுள்ளேன். இது ஒரு Comparative ஆராய்ச்சிக் கட்டுரை போன்றதே. இது போன்றது எந்த மூலத்திலும் இருக்க முடியாது. ஆதலால் இது ஒரு பார்வையே. அவர்கள் வாழ்க்கை அனுபவங்களில் ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் அன்றி இதை எப்படி பிழை என்று கொள்ள முடியும்?

 13. Thanks for this wonderful article on Nalvar from Ramanar’s vision

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *