இப்படித்தான் ஆரம்பம் – 1

kannadasan11எனக்குப் பிடித்த பித்துகளில் முதல் பித்து கண்ணதாசன் பித்து.ஒன்பதாம் வகுப்பு படிக்கிற போது பிடித்த பித்து. இதுவரை தெளியாமல் என்னை இன்றும் இயக்குகிற பித்து.1981 அக்டோபர் 17ல் கண்ணதாசன் இறந்தார். 1981 ஜூன் மாதம் தொடங்கிய கல்வியாண்டு என்னைப் பரம எதிரியாய்க் கருதியிருந்தது. நானும் பதில்சண்டை போடாமல் பள்ளிச்சீருடையிலேயே பள்ளிக்குப் போவதாய் சொல்லிவிட்டு ஊர்சுற்றத் தொடங்கியிருந்தேன். எங்கள் ஓவிய அசிரியர் திரு.தண்டபாணி தொடங்கிய ஸ்வீட் என்கிற சிறுவர் இதழின் துணை ஆசிரியராகவோ உதவி ஆசிரியராகவோ வேறு நியமனமாகியிருந்தேன்.

ஆசிரியர் சொல்லாமல் நானாக மேற்கொண்ட வேலை , தினந்தோறும் பள்ளி நேரங்களில் டவுன்ஹால் காந்திபுரம் என்று பகுதி பகுதியாகப் போய் ஸ்வீட் விற்பனை எப்படி இருப்பது என்று விசாரிப்பது. ஸ்வீட்டும் சரியாகப் போகவில்லை.நானும் பள்ளிக்கு சரியாகப் போகவில்லை.

ஒருமுறை கடையொன்றில் இதழ் பற்றி நான் கேட்க,உள்ளே எங்கேயோ வைத்திருந்த கடைக்காரர் தேடத் தொடங்கினார்.எங்கள் உரையாடலைக்கேட்டுக் கொண்டிருந்த ஒருவர்,”ஸ்வீட்னு ஒரு பத்திரிகையா?ரெண்டு ரூபா தானா? கொடுங்க பார்க்கலாம்” என்று கேட்டு நின்று கொண்டிருந்தார். பத்திரிகை கிடைத்தபாடில்லை.ஸ்வீட் வாசகராகியிருக்க வேண்டி விரும்பிக்கேட்ட அவர் சர்க்கரை நோயாளியாக இருந்திருப்பாரோ என்று இப்போது சந்தேகம் வருகிறது.ஆனாலும் வாரம் மூன்று நாட்களாவது கடைகளில் என் அதிரடி சோதனையும்,அதைத்தொடர்ந்து காலை பத்து மணிக்கு ஏதாவதொரு காலைக்காட்சியும் வாடிக்கையாகிப்போனது.

மதிப்பெண்கள் “சரசர”வென்று குறையத்தொடங்கின.வீட்டில் ஏச்சும் பேச்சும் அதிகரிக்க, காலைக் காட்சியுடன் மேட்னிஷோவும் சேர்த்துப் பார்க்கத் தொடங்கினேன்.

எங்கள் உறவினர் திரு.சிவசுப்பிரமணியம் கோவை மதுரா வங்கியில் கிளை மேலாளராக இருந்தார். சிதம்பரத்தில் புகழ்பெற்ற குடும்பம் அவருடையது.ஆஜானுபாகுவாய் சிவந்த நிறமாய் சிரித்த முகமாய் இருப்பார்.என்போன்ற சிறுவர்களையும் ‘வாங்க போங்க’ என்றுதான் பேசுவார்.

பள்ளி அளவிலான பேச்சுப்போட்டிகளில் நான் வெட்டி முறிப்பதைக் கேள்விப்பட்டு,ஊக்கம் கொடுப்பார். 1981 ஆகஸ்ட் 1ல் என் பிறந்தநாளைக்கு கண்ணதாசன் கவிதைகள் ஆறாவது தொகுதியையும் மேத்தாவின் ”அவர்கள் வருகிறார்கள்” தொகுப்பையும் பரிசாகத் தந்தார். அன்று பிடித்த பித்தில், கண்ணதாசன் கவிதைகள் தொகுதி என்னுடன் எல்லா சினிமாக்களுக்கும் வரத்தொடங்கிவிட்டது. இதைக் கேள்விப்படாமலேயே கவிஞருக்கு உடல்நலம் குன்றியது. அமெரிக்கா போனார். அமரரானார். அவரை வெறியுடன் படிக்கத் தொடங்கியது அப்போதுதான்.

இடையில் ஸ்வீட் விற்பனை கவலைக்கிடமாய் இருந்தது. ஒருநாள் தண்டபாணி ஆசிரியர் அறையில் ஆசிரியர் குழு கூட்டம் கூடியது. என் வகுப்புத் தோழன் கதிர்வேலும் நானும் குழுவில் இருந்தோம். அவன் கதிர் என்ற பேரில் எழுதுவான். தண்டபாணி ஆசிரியர்,ஸ்வீட் சிறுவர் இதழாக இல்லாத பட்சத்தில் இன்னும் நன்றாகப்போகும் என்று நம்பிக்கை கொடுத்தார். அதற்கு அவர் அறிவித்த திட்டம்தான் அதிரடியானது.

ஸ்வீட் இதழின் அட்டையில் சில்க் ஸ்மிதா படத்தைப்போடுவதுதான் அந்தத் திட்டம்.எங்கள் ஆலோசனையைக் கேட்டார்.”சரிங்க சார்’ என்பதுதான் எங்கள் பதிலாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் அப்போது பெரிய பத்திரிகையாளர்கள் ஆகியிருந்தோம். புகழ்பெற்ற பத்திரிகை துணை ஆசிரியர் ஒருவர்,தன்னிடம் வந்த சிறுகதைகளை மேலோட்டமாகப்படித்துவிட்டு ‘குப்பை.குப்பை’ என்று சொன்னதாய் எதிலோ படித்தேன்.அந்த ஹோதா எனக்கு ரொம்பப்பிடித்துவிட்டது. வகுப்புத் தோழர்களிடம், “கதை எழுதிக்கொடுத்தால் ஸ்வீட்டில் போடுவேன்” என்று ஆசைகாட்டுவேன். எழுதிக் கொண்டுவந்து தருவார்கள்.அலட்சியமாய் பக்கங்களைப் புரட்டிவிட்டு “குப்பை,குப்பை” என்று சொல்ல கதிர் ஆரவாரமாய் சிரிப்பான். முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன்கள் மறுநாளும்
கதை எழுதிக் கொண்டுவருவார்கள்.

shops-in-templeஅப்படித்தான் கே.தேவராஜ் எழுதிக் கொண்டுவந்த கதை. திருப்பதியில் அர்ச்சனைக்குத் தேங்காய் பழம் வாங்கிய ஒரு மனிதனைப்பற்றியது. தேவராஜ் திருப்பதி பார்த்ததில்லை. ஆனால் உள்ளூர்க்கோயில் வாசல்களில் தேங்காய் பழக்கடைகளைப் பார்த்திருக்கிறான். இது போதாதா?
கதையின் நாயகன் திருப்பதியில் தேங்காய் பழம் வாங்கி காசு கொடுக்காமல் கோயமுத்தூர் வந்துவிடுகிறான். கடைக்காரனும் பின்தொடர்ந்து அதே பஸ்ஸில் ஏறி வருகிறான்.வீட்டுக்குள்
நுழைந்து கதவை சார்த்திக்கொள்கிற கதாநாயகன்,கடைக்காரன் கதவைத்தட்டினால் தான் இல்லையென்று சொல்லச் சொல்லிவிடுகிறான்.இவன்குணம் தெரிந்த கடைக்காரன், மணிஆர்டர் வந்திருப்பதாக சொல்ல கதாநாயகன் வெளியே வந்து கடைக்காரனிடம் மாட்டிக் கொள்கிறான்.

இந்த நீதிக்கதையை எழுதிய கே.தேவராஜ் பத்திரிகை தர்மத்தை மீறிச் செய்த ஒரு காரியம்தான் என் கோபத்தைக்கிளறியது. வகுப்பில் நான் கடைசி பெஞ்ச் என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள். கே.தேவராஜ் முதல் பெஞ்ச். கிளாஸ் லீடர் வேறு. கடைசி பெஞ்ச்சுக்கு வந்து கதையைக் கொடுத்துவிட்டு காத்திருப்பதுதான் பத்திரிகை தர்மம். ஆனால் முதல் பெஞ்ச்சில் போய் உட்கார்ந்துகொண்டு,ஓணான் போல் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு நான் படித்து முடித்ததும்,அங்கிருந்தே “எப்படி” என்றான்.அரைகிலோ அதிக அழுத்தத்துடன் “குப்பை குப்பை” என்று நான் குரல் கொடுக்க அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. “போடா டேய்” என்று கத்த பதிலுக்கு நான் கத்த ஒரே ரகளை.

இத்தகைய அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள சில்க் ஸ்மிதா படத்தை அட்டையில் போடுவதே சிறந்த வழி என்று தோன்றியது. தீவிரமாக யோசித்த தண்டபாணி ஆசிரியர், “முத்தையா! நாளைக்கு வர்றபோது சில்க் பற்றி ஒரு கவிதை எழுதிக்கிட்டு வா! அவங்களும் உழைச்சுதான் மேலே வந்திருக்காங்க! இதை உணர்த்தற மாதிரி இருக்கணும்” என்றார். அடுத்த நாளே கவிதையைக் கொண்டுபோய் ‘பிடிசாபம்’ என்று அவர் கைகளில் கொடுத்துவிட்டேன்.

“உழைப்பதில் எண்ணம்
உயர்வது திண்ணம்
தழைத்தே சிலுக்கு வாழ்க”

என்பதாகத் தொடங்கும் அந்தக் கவிதையின் முதல்வரி மட்டும் நினைவிலிருக்கிறது. படித்துப்பார்த்த ஆசிரியரின் முகம் இருண்டது. அப்புறம் ஸ்வீட் இதழ் வரவில்லை. சில்க்கின் தற்கொலையும் தள்ளிப் போனது. என் உறவினர்கள் பலரிடம் 20 ரூபாய் சந்தா வேறு வசூல் செய்து கொடுத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோருக்கு அது ஞாபகத்தில் இல்லை என்பது எனக்கு ஆறுதலாக இருந்தது.

ஸ்வீட் நின்ற சோகத்தில் இருந்தஎன்னை நிலைகுலையச் செய்தது கண்ணதாசனின் மரணச்செய்தி. தோல்வி பயமும் தாழ்வு மனப்பான்மையும் மண்டிக்கிடந்த பொழுதுகளில்,”உனக்குள்ளும் இருக்கிறது தமிழ்” என்று என்னை உசுப்பியவை அவருடைய வரிகள்.

தினத்தந்தியில் வந்த கண்ணதாசனின் புகைப்படத்தை வெட்டி,சயின்ஸ் நோட் அட்டையில் ஒட்டி, வீட்டு மாடியில் இரங்கல் கூட்டம் நடத்தினேன். எதிர்வீட்டில் இருந்த சஜ்ஜி,(இன்று சுயமுன்னேற்றப் பயிற்சியாளராக அறியப்படும் சஞ்சீவ் பத்மன்) அடுத்த வீட்டில் இருந்த பொடியன்கள் கணேஷ் மகேஷ் ஆகியோர் என் மிரட்டலின் பேரில் இரங்கல்கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்றே மூன்று பார்வையாளர்கள். கவிஞர் படத்தை சுவரோடு திருப்பி வைத்து விட்டு,”இப்போது படத்திறப்பு” என்று அறிவித்துவிட்டு படத்தை நேராக வைத்தேன்.பிறகு இரங்கலுரையும் ஆற்றினேன்.

அந்தப்படத்திற்கு தினமும் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிப்போடத் தொடங்கினேன்.இன்னும் என்னென்ன விதங்களில் கண்ணதாசன் நினைவைக் கொண்டாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, எங்கள் பள்ளிச்சுவரிலேயே கவிஞரின் உருவப்படத்துடன் பலவண்ணங்களில் மின்னிக் கொண்டிருந்தது “கவிஞர் கண்ணதாசன் நினைவு மன்றம்”என்ற விளம்பர அறிவிப்பு!

(தொடரும்)

4 Replies to “இப்படித்தான் ஆரம்பம் – 1”

  1. கலக்கலான ஆரம்பம். ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.

  2. யருய்யா இந்த கிரன்.
    ஓவர் வெயிட் மாஜி நடிகைகளெல்லாம் தமிழ் இந்துவுக்குத் வராமல் இருப்பது நலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *