UP – Animation Movie. ( பறக்கும் வீடு)

up_movie_2-1வால்டிஸ்னி – பிக்ஸார் குழுமத்தின் சிறப்பான குழந்தைகளுக்கான அனிமெஷன் படங்களை உருவாக்கும் திறனை மான்ஸ்டர் இன்க் படம் முதலில் காட்டியது என நினைக்கிறேன். ( நான் முதலில் பார்த்ததே அந்தப் படமாகவும் இருக்கலாம்)

அதன்பின்னர் “அப்” என்ற ஆங்கிலப் பெயரில் ஒரு குழந்தைகளுக்கான படம் வந்திருக்கிறது அவசியம் பாருங்கள் என நண்பரின் பரிந்துரையில் இந்தப்படத்தைப்பார்க்க ஆரம்பித்தேன்..

முதலில் இதை ஒரு குழந்தைகளுக்கான படம் என்பதையே நாம் நம்ப முடியாது, அவ்வளவு அருமையாக எடுத்திருக்கிறார்கள்.

charlesmuntzசார்லஸ் முண்ட்ஸ் என்ற சாகசவீரரை தனது ஆதர்சமாகக் கருதும் கார்ல்பிரடெரிக்சனும், சாகசத்தில் ஆர்வமுள்ள அதேசமயம் கார்லைப்போலவே சார்லஸ் முண்ட்ஸை தனது ஆதர்சமாகக் கருதும் எல்லியும், நண்பர்கள். சார்லஸ் முண்ட்ஸ் தென் அமெரிக்கக் காடுகளில் இருக்கும் ஒருவகையான அபூர்வப் பறவையின் எலும்புக்கூடைக் கொண்டுவர அதை அறிவியலாளர்கள் அவர் எலும்புக்கூடுகளை வைத்து இல்லாத ஒன்றைக் காண்பித்துவிட்டார் என அறிவிக்க, அவரது அறிவியலாளர் குழு உறுப்பினர் தகுதி கூட பறிக்கப்படுகிறது. அவமானமடைந்த சார்லஸ் உண்ட்ஸ் , அவர் காண்பித்த எலும்புக்கூட்டிற்கு சொந்தமான அதே இனப்பறவையை உயிருடன் பிடித்துவருவேன், அதுவரை திரும்பமாட்டேன் என சபதம் செய்து ஆகாய பலூனில் பறந்து செல்கிறார். அதன் பின்னர் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

தென் அமெரிக்காவில் இருக்கும் பாரடைஸ் பால்ஸுக்கு அருகில் வீடு கட்டுவதும் அங்கு சென்று மனிதனின் கால்படாத இடங்களைப் பற்றி ஆராய்வதும், அங்கிருக்கும் விலங்கினங்கள், பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதும் எல்லியின் கனவு. எல்லியைப்போலவே ஒத்த சிந்தனை கொண்ட கார்லும் நட்பைத்தொடர்கின்றனர்.

காலப்போக்கில் எல்லியும், கார்லும் காதலும் செய்து, திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதும், அவ்வப்போது தென் அமெரிக்காவில் பாரடைஸ் ஃபால்ஸில் வீடுகட்டும் கனவை அசைபோடுவதும் அதன் பின்னர் பலவித காரணங்களால் அதைத் தள்ளிப்போட நேர்வதுமாக காலம் கழிகிறது. தென் அமெரிக்கா செல்வதற்காக பணமும் சேகரிக்கிறார்கள். அந்தப் பணம் சேகரிக்கும் உண்டியல் வீட்டின் பல தேவைகளுக்காக மகிழ்ச்சியுடனே உடைக்கப்படுகிறது.

up-4இதற்கிடையில் எல்லி, கார்ல் இருவருக்கும் குழந்தைகள் இல்லையே என்ற சோகமும் படர்கிறது. ஒரு நாள் கார்ல் தென் அமேரிக்கா செல்ல இருவருக்கும் விமான டிக்கெட் வாங்கி வீட்டிற்கு வரும் போது எல்லிக்கு உடம்பு சுகமில்லாமல் போகிறது. அதன் பின்னர் சில காலத்தில் எல்லி இறக்கிறாள். தனிமையில் தவிக்கும் கார்ல், எல்லியின் நினைவாகவே வாழ்ந்து வருகிறார். அவரது தனிமையில் ஒரு சிறுவன் குறுக்கிடுகிறான் (ரஸ்ஸல்). சாரணச் சங்கத்தைச் சேர்ந்த அவனுக்கு பலமெடல்கள் கிடைத்தாகி விட்டது. இன்னும் வயதானவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் இன்னொரு பதக்கத்தை அவன் பெற்றால் அவனது பதக்கப் பட்டியல் பூர்த்தியாகும். அவன் கார்லிடம் வந்து உங்களுக்கு எப்படி உதவ முடியும் எனக் கேட்க, அவனை துரத்துவதற்காக அவரது தோட்டத்தில் ஒரு விசித்திரப் பறவை வருவதாகவும், அதைப் பிடிக்கும்படியும் சொல்கிறார்.

ஒருநாள் அவரது வீட்டின் எதிரில் கட்டிட வேலைகள் நடக்கிறது. அவர்கள் கார்லின் வீட்டையும் வாங்குவதற்காக தரமுடியுமா எனக் கேட்கின்றனர். கிடைக்கும், ஆனால் நான் செத்த பிறகு எனச் சொல்லி கதவை அடைக்கிறார். மனைவியின் நினைவாய் அந்த வீட்டைத் தர மறுக்கிறார். ஒருநாள் அங்கு வேலை செய்யும் ஒருவன் தெரியாமல் அவர்களது வீட்டின் தபால் பெட்டியை வாகனத்தால் இடித்து விடுகிறான். அது கார்லும், அவரது மனைவியும் வண்ண மையினால் தங்களது கையை அதில் பதித்து செய்த தபால் பெட்டி. அதை சேதப்படுத்திவிட்டானே என்ற ஆத்திரத்தில் இடித்தவனை தனது வாக்கிங் ஸ்டிக்கால் ஒரு போடு போட ரத்தம் வருமளவு அடிபட்டு விடுகிறது. உள்ளூர் கோர்ட்டில் நடக்கும் கேஸில் பெரியவர் கார்லை முதியோர் இல்லத்தில் சேர்க்க தீர்ப்பாகிறது.

அவரை அழைத்துச் செல்ல வருபவர்களிடம், ஒரு நிமிடம் இருங்கள் என சொல்லிவிட்டு வீட்டினுள்ளே செல்பவர் அப்படியே ஆயிரக்கணக்கான பலூன்களின் உதவியால் வீட்டோடு … ஆமாம் வீட்டோடு பறந்து போகிறார், தனது மனைவியின் ஆயுள் கால கனவான தென் அமெரிக்கக்காடுகளில் இருக்கும் பாரடைஸ் ஃபால்ஸ் நீர்வீழ்ச்சியை நோக்கி… பறந்துகொண்டிருக்கும்போது அவரது வீட்டுக் கதவு தட்டப்படுகிறது..

அங்கு பார்த்தால் நம்ம ஸ்கௌட் ரஸ்ஸல் நிற்கிறான். கார்ல் வீட்டில் தொந்தரவு செய்துவந்த பறவையைப் பிடித்துவிட்டதாகவும், அவரோடு சேர்ந்து கொள்வதாகவும்..வேறு வழியின்றி அவனையும் சேர்த்துக் கொண்டு செல்கிறார். பலவித சிக்கல்களுடன் வீடு பறந்து, பறந்து தென் அமெரிக்கக் காடுகளை அடைகிறது.

up-movie3பின்னர் இருவரும் இணைந்து தென் அமெரிக்கக் காடுகளில் சுற்றி வருகின்றனர். பெரியவர் தனது மனைவி எல்லி சொன்ன இடத்தைத் தேடி அதில் அவரது வீட்டை வைத்துவிட ரஸ்ஸல் உதவியுடன் முயல்கிறார். அங்கு அவர்கள் பேசும் நாய்களையும், விநோதப் பறவையையும் சந்திக்கின்றனர். உடனே ரஸ்ஸல் அந்த வண்ண மயமான, நீள்மூக்கு கொண்ட பறவைக்கு கெவின் எனப் பெயரிடுகிறான். முதலில் கார்லிடம் பினங்கும் கெவின் பின்னர் கார்ல், ரஸ்ஸல் இருவரிடமும் நட்பு பாராட்டுகிறது.

ஊரில் சபதம் செய்துவிட்டு வெளியேறிய விஞ்ஞானி ஊண்ட்ஸ், அந்தப் பறவையை ( கெவின் என ரஸ்ஸல் பெயரிட்ட) பிடிப்பதற்காக காடுகள் முழுவதும் இதைப் போன்ற பேசும் நாய்களை உலவ விட்டிருப்பார். இவர்களிடம் அந்தப் பறவை இருப்பதை அந்த ஆராய்ச்சியாளர் அந்த உளவு நாய்கள் மூலம் அறிய வர அவர்களை வீட்டோடு அங்கு இழுத்து வரவைக்கிறார்.

கார்லுக்கு அவரது ஆதர்ச சாகச வீரரை நேரில் பார்த்த சந்தோஷத்தில் நீங்கள் சார்லஸ் முண்ட்ஸ் தானே எனக் கேட்க ஆமாம் என அவர் ஆமோதிக்க கைதிபோல வந்த கார்ல் தற்போது விருந்தினர் ஆகிவிடுவார். ஆனால் அவர் கெவின் என்ற அந்தப் பறவையைப் பிடிக்கத்தான் இங்கு இருக்கிறார் என அறிந்தவுடன், முண்ட்ஸிடமிருந்து பறவையைக் காப்பாற்றுவதுதான் ரஸ்ஸல் மற்றும் கார்லின் வேலையாகிப் போகிறது.

பலவிதப் போராட்டங்களுக்குப் பின்னர் முண்ட்ஸ் மற்றும் அவரது பேசும் நாய்களிடமிருந்து கெவினைக் காப்பாற்றி இறுதியில் கெவினை அதன் குடும்பத்துடன் சேர்த்து விட்டு கார்ல் மற்றும் ரஸ்ஸல் முண்ட்ஸின் பலூன் விமானத்திலேயே ஊர் திரும்புகின்றனர்.

முழுக்க முழுக்க கிராஃபிக்ஸில் செய்ப்பட்டிருந்தாலும், நாம் அதை உணர முடிவதேயில்லை என்பது அதன் மிகப்பெரிய பலம். கார்லும் சரி, அவரது மனைவி எல்லியும் சரி அப்படியே ஒரு ஆதர்ச கணவன், மனைவியாக வாழ்வதையும், சந்தோசமான தருணங்களை ஒரு மரத்தடியில் தலைக்குத் தலை தொட்டுக்கொண்டு வானத்தைப் பார்ப்பதும், சோகமான நேரங்களில் இருவரும் இருட்டில் இருக்க வெளியிலிருந்து நிழல்கள் போல காண்பிக்கும் நேரங்களிலும், முதுமையடையும் தருணங்களையும் மிக மிக அழகாக எடுத்துள்ளனர்.

செலவினங்களுக்காக தென் அமெரிக்கா போக சேர்த்துவைக்கும் உண்டியலை உடைக்க நேரும்போது இது வைத்தியத்துக்கு, இது வீடு மேல் மரம் விழுந்துவிட்டதால் பராமரிப்பிற்கு என நமது நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையைப் போல வாழ்வதும், அதை சந்தோஷமாய் செய்வதும் இயல்பு..

படத்தில் முதியோர் இல்லத்தில் அவரை அழைத்துச் செல்ல வந்திருப்பவர்களிடம் கொஞ்சம் பொறுங்கள் என உள்ளே சென்றுவிட்டு, இத்தனை நாள் செய்துவைத்திருந்த பலூன்களை விடுவிக்க வீடு அப்படியே காற்றில் மிதந்து செல்வதும், ஒவ்வொருவரும் அவரவர் வீடு மாடியிலிருந்து பார்ப்பதும், கிராஃபிக்ஸ் என்பதை நினைக்கவே மலைப்பாக இருக்கிறது.. ஆயிரக் கணக்கான வன்ன வன்ன பலூன்கள் அப்படியே கூம்புவடிவத்தில் இருக்க அவற்றை இனைத்துள்ள நூல்களின் உதவியுடன் வீடு பறப்பது அழகு.

கார்ல் தானே வடிவமைத்த சுக்கான் உதவியுடனும், பாய்மரத்துடனும் காற்றில் பறந்து செல்வதும், திசைகாட்டும் கருவியை வைத்து தென் அமெரிக்கக் காடுகளை அடைவதும், ரஸ்ஸலின் தொந்தரவையும், அதே சமயம் அவனது எதையும் நல்லவிதமாகவே அனுகும் முறையும் அந்தந்த பாத்திரத்தை இயல்பாய் வைக்கின்றன.

2 Replies to “UP – Animation Movie. ( பறக்கும் வீடு)”

 1. நல்ல விமர்சனம் ஸ்ரீ. ஜெயகுமார்.

  உண்மையில் இந்த மாதிரி சின்ன படங்களில், மிகப்பெரிய வாழ்க்கைப் பாடங்கள் அடங்கியிருக்கும். லயன் கிங் படமும் இது மாதிரிதான், அதில் கடமை, பழி, வீரம், வாழ்க்கை சக்கரம் எல்லாம் உண்டு.

  இந்த படத்தைப் பார்த்தாலும் நிச்சயம் சில நீதிகள் விளங்கும். மேலும் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

 2. Hello, I watched this movie yesterday. Brilliant!
  Pixar studios have done this movie and so far none of their movies have been bad.
  All good. You should Wall E also.

  This Hollywood people are coming out different ideas and concept with colourful movies.
  This, after all was just an animated movie. But you could feel all the characters are for real and have emotions. The Husband and wife bonding was very touching compared to our any of the recent tamil movies i’ve seen.

  Here our kollywood people like Mani rathnam and Kamal Hassan are talking about taking tamil movie into different direction. Whatever they are doing are crap. For once they should stop talking nonsense and watch this kind of movies. Period!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *