பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்

இணையமும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் ஒரு புதிய உலகை சிருஷ்டித்து வருகின்றன. உற்பத்தியாளர், வாடிக்கையாளர் போன்ற வரையறைகள் கரைந்து உருகுகிற உலகம் அது. முக்கியமாக, வேற்றுக்கிரக ஆராய்ச்சி முதல் ஐ-பாட் வடிவமைப்பு வரை, பொது மக்கள் பங்குகொள்கிற விஷயங்களாக அனைத்தும் வேகமாக மாறி வருகின்றன. முன்பெல்லாம் நிறுவனங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்தமான கார் டிசைன் எது என்பதை பெரிய ஏஜென்ஸிகளை கொண்டு சர்வே செய்து கண்டுபிடித்து படு இரகசியமாக வடிவமைப்பார்கள். ஆனால் இன்றைக்கு நிலை மாறி வருகிறது. வாடிக்கையாளர்கள் என்பது முகமற்ற அல்லது ஆய்வுகளில் எண்களாகவும் கிராப்களாகவும் தெரியும் மந்தையல்ல. மாறாக சுயம் கொண்ட தனி மனிதர்கள். ஒரு தனிமனிதன் தன் தனித்தன்மைக்கு ஏற்ப, ஒரு சேவையை பெரும் நிறுவனத்திடமிருந்து பெற முடியும். அதி வேகமாக மாறிவரும் மின்னணு சமுதாயத்தின் உற்பத்தி நியதி இது.

ck_prahladஇவ்வாறு, ”ஒரு சேவையின் இறுதிப்பயனாளி (end-user) அதன் வடிவமைப்பை, தன் தனித்தேவைக்கு. தனி-இஷ்டத்துக்கு ஏற்ப மாற்றுவது, இனிவரும் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கப் போகிறது” என்று சொன்னவர் உலகப் புகழ்பெற்ற வணிக, பொருளாதாரத் துறை பேராசிரியர் C.K. பிரகலாத். 2000 இல் அவரும் வெங்கட் ராமசுவாமியும் (மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் துறையில் பேராசியர்) இணைந்து ‘சக-படைப்பு’ (co-creation) எனும் கோட்பாடாக இதனை முன்வைத்தனர்.

சி.கே.பிரகலாத்
தோற்றம்: ஆகஸ்ட் 8,1941 –  மறைவு: ஏப்ரல் 16, 2010.

சக-படைப்பு என்பதை எப்படி விளக்குவது? ஆப்பிளின் ஐ-பாட் தொழில்நுட்பத்தை இதற்கான தலை சிறந்த உதாரணமாக சொல்லலாம். இந்த தொழில்நுட்பம் உங்கள் இசையை நீங்கள் தேர்ந்தெடுக்கவும், இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும், பிற இசைப்பிரியர் குழுமங்களுடன் இணைந்து பெரிய நெட்வொர்க்கை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகிறது. ஆக, இது ஒரு அனுபவத்துக்கான மேடையாகிறது. இந்த அனுபவம் உங்களுக்கே உரித்தானது. சந்தைப்படுத்தப்பட்ட முகமற்ற அனுபவத்தில் நீங்கள் ஐக்கியமாகவில்லை. மாறாக நீங்கள் உங்கள் அனுபவத்தை உருவாக்கிக் கொள்ள ஒரு தொழில்நுட்ப மேடையை அது வழங்குகிறது. இந்த இணையம், குழுமம், விரும்பிய பாடல்களின் நீண்ட வரிசையை உருவாக்கி, அவற்றை தரவிறக்கம் செய்யும் வசதி, அவற்றை உங்கள் ஆன்லைன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி – இவையெல்லாம் இல்லையென்றால் ஐ-பாட் ஒரு தொழில்நுட்பமாக வெற்றி பெற முடியாது. ஆக, தனிமனித அனுபவ தேடல் மற்றும் ஒரு தொழில்நுட்ப மேடை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் ஆப்பிள் ஒரு வெற்றிகரமான வர்த்தக மாதிரியை உருவாக்கியுள்ளது – பயனாளிகளின் அனுபவத்துடன் இணைந்து. இதுவே சக-படைப்பு. இணைய உலகில் வலைப்பதிவுகள், யூட்யூப் ஆகியவை அதைத்தான் செய்கின்றன.

சக-படைப்பு மூன்று விஷயங்களை முன்வைக்கிறது: ஒன்று, தனிமனிதரை ஆதாரமாகக் கொள்வது; இரண்டு, அந்த தனிமனிதனது மைய அனுபவத்தேவைகளின் நிரல்வரிசை என்ன என அறிந்து கொள்வது. மூன்று, பின்னர் அதனைத் தரும்படியான நெகிழ்ச்சியும் திறனும் கொண்ட தொழில்நுட்ப மேடையை உருவாக்குவது. ஒருவிதத்தில் இதை பாரத பாரம்பரிய மருத்துவ முறையுடன் ஒப்பிடலாம். இங்கு நோய் எனும் முகமற்ற ஒரு நிகழ்வுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட படிப்பின் மூலமும், உருவாக்கி அளிக்கப்பட்ட பெரிய மருந்து தொழிற்சாலைகளின் மருந்து பட்டியல் மூலமும், வைத்தியர் சிகிச்சை அளிப்பதில்லை. பெரும்பாலும் வட்டார வழக்கில் உள்ள மூலிகைகளும் அந்த குறிப்பிட்ட நோயாளியின் தனித்தன்மையும் அந்த நோயின் தன்மையும் பரிசீலிக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு ஏற்ற தனித்துவம் கொண்ட ஒரு சேர்க்கை (பத்தியம்+உணவுமுறை+மருந்து) உருவாக்கப் பட்டு அளிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நோயாளியும் அந்த வைத்தியருடன் இணைந்து தனது நோய்க்கான தீர்வை, சக-படைப்பை, செய்கிறான். இன்றைக்கு துரதிர்ஷ்டவசமாக, சித்த ஆயுர்வேத மருந்துகள் பெரும் கம்பெனிகளால் மேற்கத்திய மருந்து வகைகள் போலவே புட்டிகளில் அடைத்தும், அலுமினிய ஃபாயில்களில் மாத்திரைகளாகவும் வழங்கப்படுகின்றன. அதனால், பாரத பாரம்பரிய மருத்துவத்தில் தன்னியல்பிலேயே இருக்கும் இந்த சக-படைப்பு (co-creation) அதன் இயல்பான பரிணாம வளர்ச்சியை அடையாமல் மேற்கத்திய மாதிரிகளை பிரதியெடுக்கிறது.

fortune_at_the_bottom_of_the_pyramid_ck_prahladபாரத பாரம்பரிய அறிவியல் புலங்களின் சக-படைப்பு இன்னும் முக்கியமானது. இதனை பிரகலாத்தின் அடுத்த ஒரு முக்கிய கண்டடைவுடன் இணைப்பது சில சுவாரசியமான பார்வைகளை நமக்கு தருகிறது. சி.கே.பிரகாலத்தின் புகழ்பெற்ற நூல் 2004 இல் வெளிவந்த “பிரமிடின் அடித்தளத்தில் இருக்கும் பொக்கிஷம் : லாபம் மூலம் வறுமையை ஒழிப்பது” (“The Fortune at the Bottom of the Pyramid: Eradicating Poverty Through Profits”) எனும் நூல். சமுதாய பிரமிடின் அடித்தளத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு தேவைப்படும் சேவைகளையும் பயன்பாடுகளையும் அளிப்பதன் மூலம் கார்ப்ரேட் அமைப்புகள் இலாபம் பெற முடியும், அதே நேரத்தில் வறுமையை ஒழிக்கவும் முடியும் என்பதே இந்த நூலின் மையக்கருத்து.

இதற்காக பல எடுத்துக்காட்டுக்களை அளிக்கிறார் பிரகலாத் – ஜெய்ப்பூர் செயற்கை கால்கள்; அரவிந்த் கண் மருத்துவமனை போன்றவை.

ஜெய்ப்பூர் செயற்கை கால்களைப் பொருத்தவரை அது பொதுவாக வளரும் நாடுகளின், குறிப்பாக பாரதத்தின் காரணிகளால் செதுக்கப்பட்டது. ஒவ்வொரு காரணியும் செயற்கைகால் உற்பத்தியை அதன் தன்மையை தீர்மானித்தது –

  • வறுமை (முடிந்தவரை உற்பத்தி செலவைக் கட்டுப்படுத்துதல்)
  • ஒரு மூடிய பொருளாதாரச் சூழல் (வெளிநாட்டு பொருட்கள் பயன்படுத்தப் படுவதை தடுத்தல்)
  • வாழ்க்கைத்தரச் சூழல் (பெரும்பாலான செயற்கை கால் பொருத்தப் பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்கனவே செய்த தொழிலுக்கு -உடலுழைப்புக்கு திரும்ப வேண்டியிருக்கும். அந்த சூழலுக்கு செயற்கை கால் தாக்குப்பிடிக்க வேண்டும்)
  • பண்பாட்டு சூழல் (சம்மணமிட்டு இருப்பது, குத்த வைத்து இருப்பது, சமமற்ற தளத்தில் நடக்க வேண்டியிருப்பது போன்றவை )
  • குறைந்த அளவில் இருக்கும் தொழில்முறை தொழிலாளர்கள் (உற்பத்தி முறை எத்தனைக்கு எத்தனை எளிதாக உள்ளதோ, அத்தனைக்கு நல்லது).

jaipur_footசுருக்கமாக சொன்னால், ஏதோ கருணை கொண்டு பணத்தை அள்ளிக் கொடுத்து உருவாக்கும் தாராள மனப்பான்மையால் விளைந்ததல்ல ஜெய்ப்பூர் செயற்கை கால்கள். மாறாக, அடித்தள மக்களின் தேவைகளிலிருந்து, அடித்தளத்திலிருந்து, அதன் அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்து உருவானது.

அதே போல, செயற்கை கால்களை பூட்டுவதென்பது வேறெங்கும் மிகவும் சிக்கலான வழிமுறைகள் மூலம் செய்யப்படுவது. ஆனால் இங்கோ, வழிமுறைகள் மிகவும் இலகுவாக்கப் பட்டுள்ளன. ஏனெனில், பெரிய நிறுவன நடைமுறைகள் போல அவை திணிக்கப்படுபவை அல்ல. மாறாக, மக்களின் தேவைகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டவை. உதாரணமாக வளர்ச்சி பெற்ற நாடான அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு நிறுவனங்களின் பாலிஸிகள் மற்றும் அதீத செலவு ஆகியவற்றின் காரணத்தால் செயற்கைக் கால்கள் தேவை உடைய மக்களில் 50 சதவிகிதத்தினர்தான் அந்த சேவையை பெற முடிகிறது. ஆனால் ஜெய்ப்பூர் செயற்கை கால்கள் பொருத்துவதைப் பொருத்தவரை, வந்து வரவேற்பறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்வது முதல் பொருத்துவது வரை எல்லாம் ஒரே நாளில் முடிந்துவிடும். இதன் விளைவாக ஜெய்ப்பூர் செயற்கைகால்கள் அமைப்பு வெற்றிகரமாக செயல்பட முடிகிறது.

ஆப்கானிஸ்தானில் மட்டும் தாலிபானிய-அமெரிக்க வல்லாதிக்க போர்களால் ஏற்பட்ட கண்ணிவெடி சேதத்தால் கால்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 300,000. ஒவ்வொரு ஆண்டும் இது 15,000 – 20,000 என அதிகரித்து வருகிறது. அங்குள்ள குழந்தைகளுக்கு ஜெய்ப்பூர் செயற்கை கால்கள் பெரும் வரப்பிரசாதம். தோட்டாக்களின் உலோகங்கள் அங்கு ஜெய்ப்பூர் செயற்கை கால்கள் செய்ய பயன்படுகின்றன! கம்போடியாவில் உள்ளூரில் கிடைக்கும் டயர்கள்! ஏன்? அந்தந்த பிராந்தியங்களில் கிடைக்காத பொருட்களால் செய்யப்படும் செயற்கை கால்கள் சமூக ஏற்றதாழ்வை அதிகரிக்கும்; தேவையற்ற பிளவுகளை கொண்டு வரும்.

மார்ச் 2009 வரை மகாவீர் விக்லங்க் சகாயதா சமிதியின் ஜெய்ப்பூர் செயற்கை கால்கள் தொழில் நுட்பத்தால் பலனடைந்தவர்களின் எண்ணிக்கை 10,900,000.

aravind-eye-hospitalமருத்துவர் வேங்கடசாமியால் உருவாக்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவ மனையை மற்றொரு எடுத்துக் காட்டாக முன்வைக்கிறார். ஒரு சராசரி நாளில் அரவிந்த் கண் மருத்துவமனை 6000 வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது; 4-6 கண் ஆய்வு முகாம்களை கிராமப்புறங்களில் நடத்துகிறது;

1500 பேருக்கு கண்பரிசோதனை செய்கிறது. 850-1000 கண் அறுவை சிகிச்சைகளை செய்கிறது. இது போக கண் மருத்துவ சிகிச்சை வகுப்புகளை நடத்துகிறது. உலகின் மிகப்பெரிய கண் சேவை மருத்துவ மையமாகவும் கண் மருத்துவ பயிற்சி மையமாகவும் அரவிந்த் செயல்படுகிறது. இங்கு வரும் பெரும்பான்மை மக்கள் இலவச சிகிச்சை பெற்று செல்கின்றனர் என்றாலும் இந்த பெரிய நெட்வொர்க், தான் உருவாக்கும் செல்வத்தாலேயே இயங்குகிறது.

வறுமை ஒழிப்பில் ஈடுபடுவதன் மூலம் – அடித்தள மக்களுடன் இணைந்து அவர்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படும் சேவைகளையும், பயன்பாட்டு பொருட்களையும் வழங்குவதன் மூலம் – நிச்சயமாக இலாபம் அடைய முடியும் என கார்ப்பரேட் உலகில் உரக்கக் கூறினார் பிரகலாத். அதற்கு அசைக்கமுடியாத ஆதாரங்களையும் எடுத்து வைத்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற e=mc2 சமன்பாட்டை அவரும் தமது புலத்தில் வந்தடைந்ததாக வேடிக்கையாக கூறுவார் பிரகலாத்:

“Markets do create social equity when you co-create them with empowered communities” – அதாவது

e(quity) = m(arket) x c(o-)c(reativity)

இந்திய பாரம்பரிய மருத்துவ அமைப்பு, இந்தியாவின் கிராமப்புற நீர் மேலாண்மை , விவசாயம், பாரம்பரிய உணவு, கட்டிடக்கலை இவை அனைத்துமே இத்தகைய சக-படைப்பாக உருவாக்கப் பட்டவை தாம். ஆனால் சந்தை என்பதோ முழுக்க முழுக்க மேற்கத்திய முறையில் இயங்கும் பெரும் கார்ப்பரேட் அமைப்புகளால் நிரம்பியது. பிரகலாத் காட்டியிருப்பது எப்படி பிரமிடின் அடித்தளத்தில் செல்வம் காத்திருக்கிறது என்பதை. எப்படி பெரும் நிறுவனங்கள் சக-படைப்பாளிகளாக வந்து மக்களுடன் இணைந்து, அவர்கள் தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளை அவர்களுடன் சேர்ந்தே உருவாக்கி, இந்த செல்வத்தை அடையலாம் என்பது குறித்து.

நாம் இன்னும் ஒரு படி மேலே சென்று கேட்கலாம். நம் பாரம்பரிய சகபடைப்பு அமைப்புகளை நாம் ஏன் மேலும் மேம்படுத்தக் கூடாது?

இதற்கான செயல்முறை உத்திகளைக் கண்டடைவது சக தமிழரான கோயம்புத்தூர் கிருஷ்ணராவ் பிரகலாத்தின் வாழ்க்கைக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும். அவருக்கு அஞ்சலி செலுத்துவதையும் மறந்து, ஐபிஎல்லின் சாக்கடை சண்டைகளை நாளேடுகளின் முதல் பக்கங்களில் நாம் ரசித்திருந்தத கீழ்மைக்கு ஒரு கழுவாயாகவும்.

7 Replies to “பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்”

  1. C K பிரஹாலாத் ஒரு தலை சிறந்த வணிக பேராசிரியர். தமிழ்நாடு அரசு இவர் பெயரில் Management Day என்ற ஒரு நாளை அனுசரிக்கலாம்.

  2. தமிழ் ஹிந்து தளத்தினால் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது! ஏற்கனவே இவரைப் பற்றி படித்தாலும் இன்னும் நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது! நன்றி!

  3. பேராசிரியர் சி கே பிரகலாத் மிகப்பெரிய சிந்தனையாளர். இந்தியரான அவரால் பயன்பட்ட வெளிநாட்டோர் அதிகம். அவரின் சிந்தனைகளை செயலக்குவதன் மூலமே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி. தமிழ் ஹிந்து இணையதலத்திற்கு நன்றி இது போன்ற மேலும் ஆக்கங்களை எதிர்பார்கின்றோம்.

  4. very good article நாம் இன்னும் ஒரு படி மேலே சென்று கேட்கலாம். நம் பாரம்பரிய சகபடைப்பு அமைப்புகளை நாம் ஏன் மேலும் மேம்படுத்தக் கூடாது? இந்தியாவின் கிராமப்புற நீர் மேலாண்மை , விவசாயம், பாரம்பரிய உணவு save our planet

  5. Thanks for this article Mr.Neelakantan,
    Would you kindly clarify whether this book by Mr.Prahlad, called for entrepreneurs from the ‘western economies’ to exploit or tap the hidden fortune in the highly populated countries such as ours ?… Isnt that already what every entrepreneur does & has been doing? make use of the consumer volume & potential here along with the cheap labour ? .. ‘Aravind’ and ‘Jaipur Viklang Rehabs’ are mainly successful coz of their timely and friendly supply of unique demands….there sure are costly services by them…isnt it?..

    Also whether this book was translated in any of our languages or taught in Indian management schools ?

  6. பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.

    அன்புள்ள சிவாத்மா,

    நீங்கள் கூறியது போல மேற்கின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு qualitatively different service ஐ BOP இல் வழங்கச் சொல்வதன் மூலமும் co-creation மூலமும் பிரஹலாத் ஒரு புதிய சிந்தனையை மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கிறார். மூன்றாம் உலக நாடுகளின் அடிப்படை வளங்களை சுரண்டி போகப்பொருட்களை சமுதாயத்தின் உயர்மட்டத்துக்கு மட்டும் வழங்கும் பன்னாட்டு நிறுவன பார்வையைக் காட்டிலும் இது மேம்பட்டது. அதே நேரத்தில் இதே செயல்பாடுகளை நாமும் முயன்று செய்ய முடியும். பிரஹலாத் அமெரிக்காவில் இந்தியாவுக்கே உரித்தான் தொழில் மாதிரி ஒன்றை முன்வைத்தார். ஆல்வின் டாஃப்லர் (Alvin Toffler) ஏற்கனவே அமெரிக்க/மேற்கத்திய பொருளாதாரம் மற்றும் சமுதாயம் வேகமாற்றங்களை கொண்டுவரும் மின்னணு தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்க குவித்தன்மையற்ற மேலாண்மை மாற்றங்கள் மற்றும் நிறுவன மாற்றங்களைக் குறித்து 1980களிலேயே பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு பின் அதே பார்வையில் அடுத்த முன்னகர்வாக பிரஹலாத்தை குறிப்பிடலாம். பாரத பாரம்பரியத்தில் தன்னியல்பிலேயே அமைந்திருக்கும் குவித்தன்மையற்ற தன்மையும் (de-centralized nature) பன்மைத்தன்மையும் இனிவரும் மின்னணு பொருளாதார-சமுதாய அமைப்புகளுக்கு உகந்தவை என்பதே இவை அனைத்தும் சொல்லும் விஷயம். நாமோ smoke-stack தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சமூக சூழலின் வளங்குன்றாத்தன்மையற்ற (unsustainable) வாழ்க்கைமுறைக்கு நம் பாரம்பரியத்தை விட்டு கொடுத்து வருகிறோம். நம் பாரம்பரிய வாழ்க்கை குற்றம் குறையே அற்றதென்பதல்ல. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டு தகவமைப்புக்களை அது கொண்டது. அதிலிருந்து அதன் மூல்யங்களை அடிப்படையாக பெற்று முன்னகர்வது நமக்கு இன்னும் எளிதாக இருக்கும் அதே நேரத்தில் இத்தகைய பாரதீய ஆதார மதிப்பீடுகள் இன்றைய மின்னணு சமூக-பொருளாதார சூழலில் நமக்கு ஒரு added-advantage ஐ அளிக்கின்றன. அதனை பிரஹலாத் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதனை பயன்படுத்தப் போவது நாமாக இருந்தால் நாம் வெல்வோம். உலகின் மற்ற வளரும் நாடுகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைவோம். இதையும் பன்னாட்டு அமைப்புகள் கவ்விக் கொண்டு சென்றால் … அதற்கு நாம் நம் அசிரத்தையையும் பார்வையின்மையையுமே குறை சொல்ல வேணும்.

    அரவிந்தன் நீலகண்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *