வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்

sambandhar_and_nammalvarவைகாசி மாதம் இரு பெரும் பக்தித் தமிழ் வல்லார்களின் திருநாட்கள் வருகின்ற அற்புத மாதம். அவ்விருவருள் ஒருவர் சைவத்திருமுறைகள் அருளிய திருஞானசம்பந்தர். மற்றையவர் சடகோபர் என்றும் தமிழ்மாறன் என்றும் பேசப்படும் நம்மாழ்வார். பக்தித்தமிழின் மாண்பைப் பரப்பிய இவ்விருவரையும் இன்றைய சூழலில் மனதில் கொள்வது அவசியமாகும்.

வேதம் தமிழ் செய்த மாறன்:

வைணவ வரலாறுகளின் அடிப்படையில் பாண்டிய நாட்டிலுள்ள இன்றைய ஆழ்வார் திருநகரி என்ற திருக்குருகூரில் உழுதுண்டு வாழும் வேளாள குலத்தில் காரிகையாருக்கும் உடைய நங்கைக்கும் வைகாசி விசாகத்தில் ஒரு அபூர்வ ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை மற்றைய குழந்தைகள் போல அழவில்லை. பாலுண்ணவில்லை. கண்களைத் திறக்கக் கூட இல்லை. இதனால் பெற்றோர் மிக வருந்தினர். வழியறியாமல் தம் குல தெய்வமான குருகூர் ஆதிநாதப்பெருமாள் ஆலயத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு கொண்டு செல்லப் பெற்ற குழந்தை தவழ்ந்து சென்று அங்கிருந்த பழைமையான புளிய மரப்பொந்தினுள் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கியது.

ஒன்றல்ல இரண்டல்ல, பதினாறாண்டுகள் அம்மரப்பொந்தினுள் அசையாதிருந்த அக்குழந்தை உண்ணாமலும் உறங்காமலும் ஆழ்நிலைத் தியானத்தில் ஆழ்ந்திருந்தது. ஆனால் வயதிற்குரிய வளர்ச்சியை இயல்பாகவே பெற்றது.

இந்த நிலையிலேயே விண்மீன் வழிகாட்ட குருகூர் வந்த மதுரகவியாழ்வார் கட்டிளமையோடு திகழ்ந்த அக்குழந்தையைக் கண்டார். குருவாக ஏற்றார். உபதேசிக்க வேண்டினார். குழந்தை வாய்மலர்ந்தது. திருவாய் மொழி பிறந்தது.

சுமார் முப்பத்திரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இந்தக் குழந்தையாகிய சடகோபர் அல்லது நம்மாழ்வார் என்று போற்றப்பெறும் மாறன் நான்கு வேதங்களையும் திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி என்பனவான சுமார் ஆயிரத்து முந்நூறு அருந்தமிழ்ப் பாக்களை அருளினார்.

“ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக்கிடந்தாய் கண்டாய் எம்மானே”

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராயும் ஆச்சாரியார்களுள் முதன்மை பெற்றவராயும் விளங்கும் இவ்வாழ்வாரின் திருநாமத்திலேயே வைணவ ஆலயங்களில் சிரசில் வைத்து ஆசீர்வதிக்கப் பெறும் “சடாரி” விளங்குகிறது.

மதுரகவியாழ்வார் தன் குருவாகிய இவ்வாழ்வாரையே அன்றி பெருமாளைக் கூடப்பாடவில்லை. “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்று தொடங்கும் அவர் பாடிய பதிகம் பிரபலமானது.

nammalvar“கண்டு கொண்டு என்னைக் காரி மாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண்திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபன் அருளையே”

என்று அவ்வாழ்வார் உருகிப் பாடக்காணலாம். சைவத்திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி என்ற அடியவரைப் போல நாலாயிரம் திவ்விய பிரபந்தங்களைத் தொகுத்த நாதமுனிகள் நம்மாழ்வரின் துணைக் கொண்டே அதைச் சாதித்தார். இவரைப் போலவே நம்மாழ்வாருக்குப் பின் சுமார் மூன்று நூற்றாண்டுகளின் பின் தோன்றிய வைஷ்ணவ ஜகதாச்சாரியர் ஆகிய இராமானுஜர் தவம் செய்து நம்மாழ்வாரைத் தரிசித்ததாகக் கூறுவர்.

கவியரசர் கம்பநாடாழ்வாரும் நம்மாழ்வார் மீது “சடகோபர் அந்தாதி” பாடிப் போற்றியுள்ளார்.

தெய்வத் தமிழ்க்குழந்தை திருஞானசம்பந்தர்:

பரசமயமான சமண சமயத்தைச் சேர்ந்த குருமார்கள் தமிழகத்தில் கடும் மதப்பிரச்சாரம் செய்து வந்த காலத்தில் சோழதேசத்தில் சீர்காழியில் கௌண்டின்ய கோத்திர அந்தண மரபில் பிறந்த குழந்தை தன் மூன்றாவது வயதில் இறை தரிசனம் பெற்று ஞானப்பால் உண்டு தேவாரம் பாடியது. திருஞான சம்பந்தன் ஆயிற்று. “சம்” என்றால் நல்ல. “பந்தம்” என்றால் உறவு. எனவே சிவஞானத்துடன் நல்லுறவு கொண்டவர் ஞானசம்பந்தர்.

“யாவர்க்கும் தந்தையாய் எனுமிவரிப் படியளித்தார்
ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராம் அகில
தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும்
தாவில் தனிச்சிவ ஞானசம்பந்தர் ஆயினார்”

என்று சேக்கிழார் இச்சிறப்பை பெரியபுராணத்தில் பாடுகிறார். ஏராளமான தமிழ்ப்பாக்களைப் பாடி அனேக அற்புதங்களைச் செய்த ஞானசம்பந்தர் திருமருகலில் பாம்பு தீண்டி இறந்த வணிகனை உயிர்ப்பித்ததும் மதுரையில் பாண்டியன் வெப்பு நோய் நீக்கி அன்பு நெறி வளரச் செய்ததும் மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பலை தன் தமிழிசையால் உயிரளித்ததும் வியக்கத்தக்கன.

வெறும் பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஞானசம்பந்தரது சாதனைகள் பல்லாயிரமாண்டுகள் வாழ்வோராலும் நயக்கவும் வியக்கவும் மட்டுமே உரியனவாயுள்ளன. நிறைவில் தான் மட்டுமன்றி தன்னைச் சார்ந்தோர் யாவருக்கும் ஜோதியுள் கலக்கும் பேறளித்தவர் இப்பெருமானார்.

மூன்றாவது வயதிலேயே தனக்கு பால் தந்தவர் யாரென்று வானத்தை நோக்கிக் கை காட்டி,

“தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளம் கவர் கள்வன்..”

என்று தான் கண்ட இறை காட்சியைத் தன் தந்தையாருக்கும் காட்டியவர் ஞானசம்பந்தர். ஆக இவர் நமக்கு இறைவனைக் காட்டித் தரவல்லவர். இறைவனுடன் இணைக்க வல்லவர். நம்மைப் பற்றி இறைவனிடம் பரிந்துரை செய்ய வல்ல புனிதர்.

அறுபத்துமூன்று நாயன்மார்களின் புனிதவரலாற்றினைக் கூறும் பெரியபுராணம் என்னும் மாபெரும் காப்பியத்தில் செம்பாதி “ஆளுடைய பிள்ளை” என்று வழங்கப் பெறும் திருஞானசம்பந்தப் பெருமானது சரிதம் தான். அது பற்றியே ’பிள்ளை பாதி புராணம் பாதி’ என்ற வழக்கு ஏற்பட்டது.

”வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க
பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”

என்று சேக்கிழார் ஞானசம்பந்தரின் பெருமையைப் போற்றிப் புகழ்ந்து தொழுது பாடுகின்றார்.

ஞானசம்பந்தப்பெருமானின் குருபூஜை நாள் வைகாசி மூலம் (30.05.2010) ஆகும். நம்மாழ்வரின் ஜயந்திநாள் வைகாசி விசாகம் (26.05.2010) ஆகும். செம்மொழியாகிய தமிழின் செழுமைக்கும் சீருக்கும் இவ்விருவரின் பக்தித்தமிழும் ஆற்றிய பங்களிப்பை எவராலும் மறுக்க இயலாது.

5 Replies to “வேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்”

  1. செம்மொழியாகிய தமிழின் செழுமைக்கும் சீருக்கும் இவ்விருவரின் பக்தித்தமிழும் ஆற்றிய பங்களிப்பை எவராலும் மறுக்க இயலாது…. It’s true

  2. திருஞானசம்பந்தர் பிறந்த ஹோத்திரம் “கௌண்டின்யம்” என்பது புதிய செய்தி. சேக்கிழார் ‘கௌணியர்கோன்’ என்று குறிப்பிடுவது இதனைத் தானோ?

    “ஆராவமுதே..” என்று தொடங்கும் நம்மாழ்வார் பாசுரத்தை குறிப்பிட்டுள்ளார். இப்பாசுரத்தை திருக்குடந்தையில் கேட்ட நாதமுனிகள் இதைப் போல இன்னும் ஆயிரம் பாசுரங்கள் இருப்பதாக அறிந்து பிறவற்றையும் நம்மாழ்வாரின் கருணையோடு பெற்று நாலாயிரம் திவ்விய பாசுரங்களைத் தொகுத்தார் என்பது கர்ணபரம்பரைச் செய்தி.

  3. மிக சிறந்த காலத்திற்கு ஏற்ற கட்டுரை. பன்னிரு திருமுறைகளும் , நாலாயிரம் திவ்விய பிரபந்தங்களும் தான் தமிழ் வேதமாக போற்றப்படுகின்றது. உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் இவைகளை பற்றியும் பேசவேண்டும்.
    சோமசுந்தரம்

  4. நேற்றைய தினம் இரவு பொதிகைத் தொலைக்காட்சிச் செய்தியில் “செம்மொழி மாநாடு” தொடர்பாக நிகழ்ந்து வரும் தொடர் கலந்துரையாடலில் கலந்துகொண்ட டாக்டர்.இரா.செல்வகணபதி அவர்கள் செம்மொழியும் சைவபக்தி இலக்கியங்களும் என்ற விஷயம் பற்றி இங்கே குறிப்பிடும் சாயலில் பேசியமை கருத்தில் கொள்ள வேண்டும். சேக்கிழார் பெருமானுடைய “பெரியபுராணம்” பற்றித் தான் ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எது எப்படியாகிலும் இது தொடர்பான எண்ணப்பாங்குகள் செம்மொழி மாநாட்டில் நிலை நிறுத்தப்படவேண்டும். எல்லாம் சிவமயம்…. ஓம் நமச்சிவாய…

  5. தமிழின் செழுமைக்கும் சீருக்கும் இவ்விருவரின் பக்தித்தமிழும் ஆற்றிய பங்களிப்பை எவராலும் மறுக்க இயலாது. தமிழ் தமிழ் என்று நூற்றுக்கு நூறு முறை கொக்கரிக்கும் நம் தமிழ் அரசியல்வாதிகள் இவர்களின் சேவையை உணரவேண்டும். இவர்கள் ஆற்றிய தமிழ் தொண்டுகளை நினைவு கூர்ந்தாலே நாம் இவர்களுக்கு செய்யும் மாபெரும் தொண்டு ! வேறெதுவும் தமிழுக்கு செய்ய வேண்டாம் என்பது என் தாழ்மையான விண்ணப்பம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *