சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

Ananda K Coomaraswamy
Ananda K Coomaraswamy

முந்தைய பகுதி

ரத நாட்டியத்தை, சதிர் என்று இழிவாகப் பேசப்பட்ட நிலையிலிருந்தும், அதை விரைவில் எதிர்நோக்கியிருந்த அழிவிலிருந்தும் மீட்டு அதற்கு சமூகத்தில் அதுவும் ஒரு  கலையென ஒரு அங்கீகாரத்தை திரும்பப் பெற்றுத் தந்ததற்கு –  ஈ.கிருஷ்ணய்யர், ஆனந்த குமாரஸ்வாமி, ருக்மிணி தேவி, பாலசரஸ்வதி போன்றோருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்த நூற்றாண்டின் இருபது முப்பதுக்களில், சரித்திர அறிவோ, கலை உணர்வோ அற்ற வெற்று சமூக சீர்த்திருத்த கொள்கைகளே கொண்டிருந்த ஆங்கிலக் கல்வி பெற்ற மேல் தட்டு ஜீவிகள் பரதத்தை அழிவுக்குத் தான் தள்ளிக் கொண்டிருந்தனர். இச்சமூக சீர்த்திருத்த் வாதிகளிடமிருந்து பரதத்தைக் காப்பதற்கு தைரியமும், தியாக உணர்வும், சமூக தூஷணையைத் தாங்கிக் கொள்ளும் மனமும் தேவையாக இருந்தது. ஈ.கிருஷ்ணய்யரும், ருக்மிணி தேவியும் சமூக பிரஷ்டத்திற்கு ஆளானார்கள். பிராமண குலத்தவர் சதிர் ஆடவாவது என்ற முகம் சுளிப்பும் பகிஷ்காரமும் அவர்கள் பெற்றது. ஆனால் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோமோ என்றிருந்த நிலையிலிருந்து பரதம் மீட்கப்பட்டது. தமிழ் நாட்டில் இப்பெரியவர்களால் பரதநாட்டியத்திற்குக் கிடைத்த ஒரு மறுமலர்ச்சி, இந்திய துணைக்கண்டம் முழுதுக்கும் மற்ற பிராந்தியங்களிலும் கிளர்ந்து, ஒரு விழிப்புணர்வு பரவுவதற்கான காரண சக்தியாகவிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

எனவே, இந்தக் கலைஞர்கள் பரதக் கலையை மீட்டுத் தந்ததோடு, அவரவர் பார்வைக்கும் ரசனைக்கும் ஏற்ப தம் பாணியை உருவாக்கிக் கொண்டது பற்றியும் எனக்கு ஏதும் பிரசினைகள் கிடையாது. அவர்கள் பணி வரலாறாகிவிட்ட பணி. மேலும் சென்று, ருக்மிணி தேவி, சதிர் என்று வழங்கிவந்த பாரம்பரியத்தின் அவப்பெயரை நீக்க தான் உருக்கொடுத்த பரத்நாட்டியத்தில் பக்திக்கு பிரதான்யம் கொடுத்ததிலும் ஒரு பிரசினையும் இல்லை. அதேசமயம் பாலசரஸ்வதி தன் பரதத்தில் சிருங்காரத்திற்கே முதலிடம் தந்தது பற்றியும் பிரசினை இல்லை. இரண்டுமே பரதத்தின் இரு பக்கங்கள் தான். இருவருமே அவரவர் பார்வையில், அவர்கள் கால 30-களிலும் 40-களிலும் பரதத்தை குதிரைப் பட்டைப் பார்வை கொண்ட சமூக சீர்த்திருத்த வாதிகளின், அதைக் கறைபடுத்திய சமூகத்தின, பிடிகளிலிருந்து காப்பாற்றி அதன் ஆத்மாவை கண்டறிந்து மீட்கும் பணியில் சரியாகவே செயல் பட்டிருக்கிறார்கள்.

ஆனால், இன்று எண்பதுகளில், பரதம் ஒரு கலையாக, த்மிழ் நாட்டின் அடையாளமாக ஏற்கப்பட்டு, உலக அங்கீகாரமும் பெற்ற்பிறகு, அதற்குரிய சிறப்பான இடத்தை சமூகத்தினிமிருந்து மீட்டெடுத்த காலகட்டத்தில், பரதத்தில் சிருங்காரமா?, பக்தியா? என்று ஒன்றை மறுத்து மற்றொன்று என யாரும் வாதமிட்டால் – அது, தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய  அவருடைய அறியாமையையே வெளிக் காட்டும். சங்க கால அகப் பாடல்களிலிருந்து தான் பக்தி இயக்கம் பிறந்தது, சிருங்காரமும் பக்தியும் ஒரே உணர்வின் இரு பாவனைகள், நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

(4)

ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் வேறு. பரதத்தை அதன் மீது படிந்திருந்த கறைகளை நீக்கி, அதன்  இழிவு நிலையிலிருந்து மீட்டாயிற்று. சரி. அதற்காக, பரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா? இன்று பரதம் ஆடும் கலைஞர்கள் ஏன் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட காதலன் வருகைக்காக ஏங்கும் காதலியாக, தன் சகியிடம் என்னேரமும் புலம்பும் பெண்ணாகவே தம்மை பாவித்துக்கொண்டு, அந்த ஏக்கத்தையும் புலம்பலையுமே பாடி ஆடிக்கொண்டிருக்கவேண்டும்?  அவளை விரக தாபத்தில் ஏங்கி உடல் மெலிய, வளைகள் கைகளிலிருந்து ந்ழுவி விழச் செய்யும் அந்த ஆள் மேலே மேகங்களிடையே உலவித் திரிகிறவனாக இருந்தால், அவன் அங்கேயே இருந்து கொள்ளட்டும், இங்கு இறங்கி வந்து நடன மேடையையும் மொத்த குத்தகை எடுத்து ஆக்கிரமித்துக்கொள்ள அவனை அனுமதிக்கவேண்டாமே.

Yamini Krishnamurthy
Yamini Krishnamurthy

ஏனெனில், மேடையில் பரதம் ஆடும் பெண் காரைக்காலம்மையாரோ, ஆனந்தமயி மாவோ இல்லை. நம் ஊரில், நம் தெருவில், நம் அடுத்த வீட்டில் அன்றாடம் நாம் படும் அவஸ்தையையே  அவளும் கொஞ்சம் கூடவோ குறைவாகவோ படுகிறாள் தான். அந்த மேகங்களிடையே வானத்தில் உறையும் அந்த காதலன், இப்படித்தான் எதிர்ப்படும் பெண்களையெல்லாம் ஆசை காட்டி ஏமாற்றி ஓடுகிற, தெற்கு தில்லி க்ரேட்டர் கைலாஸ், டிஃபென்ஸ் காலனி திடீர் பணக்கார வீட்டு இளைஞன் போன்றவன் என்றால் –  ஒன்று நிச்சயம், மேடையில் நடனமாட வந்துள்ள பெண் இன்னொரு க்ளோரியா ஸ்டைனெனாகத் தான் இருப்பாள்  (Gloria Steinem – பிரபல அமெரிக்க பெண்ணியவாதி). அவளுடைய சுதந்திரத்தையும் பெண்மையையும் ஆக்கிரோஷத்துடன் நிரூபிக்கும் பெண்ணாகத்தான் இருப்பாள். பாலசரஸ்வதியின் நினைவு மாலை (Balasaraswati Memorial Evening) ஏற்பாடு செய்திருந்த கமானி அரங்கத்தில் சங்கீத் நாடக் அகாடமி சேர்மன், டாக்டர் நாராயண மேனனை, இந்த கண்டித நாயகிகள் (மூன்று உலகறிந்த நடன கலைஞர்கள்: யாமினி கிருஷ்ணமூர்த்தி, சோனல் மான் சிங், மூன்றாமவர் நினைவுக்கு வர மறுக்கிறார் –  வெ.சா. 26.5.2010) தம் உரிமை என்று தாம் கருதியது தமக்கு மறுக்கப்பட்டதை எத்தனை ஆக்ரோஷத்துடன் வறுத்தெடுத்தார்கள் என்பதை நாம் பார்த்தோம். என்றென்றைக்குமா அவர்கள்  விப்ரலப்தைகளாகவும் விரஹத் கண்டிதாக்களாகவும் இருபபார்கள்?

அன்று உமா ஷர்மாவும் அருணா வாசுதேவும் கூட்டாக உருவாக்கி, உமா ஷர்மா நடனமாடிய் ‘ஸ்த்ரீ’ யைப் பார்த்ததும் எனக்கு இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. யுகம் யுகமாக, ஆண்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த  சமூகமும் பெண்களை அடக்கி ஆண்டு கொடுமைப் படுத்திய சோகத்தை நடனமாகச் சொல்ல வந்தவர்கள், சன்னமான பாவாடை யையும், கதக்கின் அடையாளமே ஆகிப்போன ’சக்கரை’யும்  விட்டு விடவில்லை. (தெருக்கூத்தின் கிரிகை போல, அல்லது பாலேயின் பிரூட், pirouette போல. பிரூட் ஒற்றைக்காலில் அதுவும் நிமிர்த்திய குதிகாலின் பலத்தில் சுழன்று ஆடுவது. பாலே நடனத்தில் ஒன்றிப்போவது). ’சக்கர்’ ஆடும்போது, இந்தப் பாவாடை இடுப்பளவு மேல் எழுந்து வட்டமாக சுழ்லும். இந்தச் ’சக்கர்’ என்பதே, கதக் மொகலாய தர்பார்களிலும் பின்னர் நவாபுகளின் அரண்மனைகளிலும் நுழைந்ததும், நவாபுகளின் கண்கள் பிரகாசித்துக் குதூகலித்திடும ஆண் ரசனைக்காக் கண்டுபிடிக்கப்பட கவர்ச்சி ஐட்டம். (அன்றைய ஐட்டம் நம்பர் என்று இன்றைய சினிமா பாஷையில் சொல்லலாம்)

kathak-dancerஆக, பெண்கள் ஆண்களின் சுலப ரசனைக்கான கவர்ச்சிப் பொருளாக்கப்பட்டதன் அடையாளம் தான் சக்கர். Crowning Glory விளம்பரப் படத்துணுக்கில், டிம்பிள் கபாடியா நனைந்து உடலை ஒட்டிக்கொண்டிருக்கும் மெல்லிய உடையுடன் நீச்சல் குளத்திலிருந்து வெளிவருகிறாளே, அதிலிருந்து அதிக வித்யாசப் பட்டதில்லை, சக்கரின் நவாப் தர்பார் நோக்கங்கள். பெண்கள் காலம் காலமாக போகப் பொருளாக அவமானப் பட்டதைச் சொல்ல வந்த கணடனக் குரல் ’ஸ்த்ரீ’யில் சக்கர்! மெல்லிய பாவாடையுடன். முகலாய தர்பாரிலும், நவாப் அரண்மனைகளிலும் கதக் நுழைந்தபோது,  ‘கதா வாசக்’கும்  (அபிநயங்களுடன் ஆடிப் பாடிக் கதை சொல்பவர்), பரத முனிவனும் வெளியேற்றப்பட்டது போல, மொகலாய, நவாப் கால பெண்ணடிமைச் சின்னமான சக்கரும் சன்ன பாவாடையுமாவது இப்போது 1980-ல் எழும் கண்டனத்திலாவது வெளியேற்றி இருக்க வேண்டாமா? வேறு எதற்காகவும் இல்லாவிட்டாலும், தம்மை உறுத்தும் மனச்சாட்சியைச் சமாதானப் படுத்தவாவது இதைச் செய்யத் தோன்றவில்லையா?

”ப்ரமரி”  (சுற்றலடவுகள்) நம் நாட்டிய பாரம்பரியத்தில் வரும் ஒன்று தானே என்று சொல்லலாம். வாஸ்தவம் தான். ஆனால் கதக் நாட்டியக் கலைஞர்களைத் தவிர வேறு யாரும் இதைத் தம் நடனத்தில் சேர்த்துக்கொள்ளவில்லையே, இது பரதனின் ஒப்புதல் பெற்றது என்று சொல்வதாக இருந்தாலும், பரதனின் திட்டத்தில் இருக்கும் எத்தனையோவற்றில் இது ஒன்று தானே. எனக்குப் புரிகிறது, இந்த சக்கர் ஒரு ஆவேச உணர்வை, கோபத்தை, (நமது தெருக்கூத்தில் வரும் கிரிகை போல)ச் சொல்வதாக இருக்கும் அல்லது கதக்கிலேயே ஓர் பரவச்த்தைச் சொல்வதாகவும் இருக்கும். அப்படியானால் அது ஏதோ ஒரு கட்டத்தின் உச்சமாக வருவதில் தவறில்லை. உஷா ச்ர்மாவின் ‘ஸ்திரீ”யிலேயே கூட, ‘நவரசங்களும் என்னில் தான் அடக்கம்” என்று ஒவ்வொரு ரசமாகச் சொல்லி வரும்போது, ஒவ்வொரு பதம் முடிந்தபிறகும் வரும் சக்கர் அதை வலியுறுத்தும் பரவச உணர்வாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். அது சுருக்கமாகவும் ஒன்றின் முடிவில் வரும் முத்தாய்ப்பாகவும், பெண் தன் பலதரப்பட்ட் சக்திகளை ஒவ்வொன்றாகச் சொல்லி பெருமை கொள்வதாகவும் இருக்கும். அது பொருள் அறிந்து கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கும்.

மரபு என்றால் என்ன?தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்? இந்த ‘சக்கர்’களையும், ‘தத்கார்’களையும், ஏன் தரங்கத்தையும் தான் (குச்சிப்புடியில் தாம்பாளத்தின் மீது ஆடும் நடனம்) இவை எல்லாவற்றையும் ஜெமினி சர்க்கஸ்காரர்களுக்கு விட்டு விட்டால் நன்றாகவும் பொருத்தமாகவும் இராதா? அல்லது அப்படி எதையும் சர்க்கஸுக்கு விட்டுக் கொடுக்க இஷ்டமில்லையெனில், தத்காரை கயிற்றின் மேல் ஆடுவதாக, சக்கரை மிஸோராம் பெண்க்ளைப்போல, மூங்கில் கழிகளின் மேல் ஆடுவதாக, அல்லது தரங்கத்தை மூன்று கால் நாற்காலி மேல் ஆடுவதாக புதுமைகளைப் புகுத்தலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் சொல்வது பொருத்தமாக இருக்கும். சிலப்பதிகாரத்தில் ‘குடக்கூத்து” என ஒரு நடனம் பேசப்படுகிறது. திருவிக்கிரம மங்கலம் சிற்பங்களில் இதைக் காணலாம். இதுவும் ஏதோ ஒரு சர்க்கஸ் வித்தையாகத் தான் காட்சி தருகிறது. இருப்பினும்,  அது இன்று நம்மிடையே இல்லை. அதை யாரும் நடனம் ஆட எடுத்துக்கொள்ளவில்லை. பரத நாட்டியத்தின் வரலாற்றுப் பதிவுகளில் கூட அது எங்கும் தொடரப் படவில்லை. ஒரு வேளை அதன் தாயாதியாகத் தான் இன்றைய கரகாட்டம்  நம்மிடையே வாழ்கிறதோ என்னவோ. உண்மையில் இம்மாதிரியான  உடல் பயிற்சிகளுக்கான இடம் அது தான் – நாட்டுப்புற நடனங்கள்.

இவையெலலாம் செவ்வியல் மரபைச் சார்ந்தனவாகக் கொள்ளமுடியாது. இவை நவாப் தர்பார்களின், கலை ரசனைக்குத் தீனி போட உருவானவை.

இதையெல்லாம் சொல்லும் போது என்னைத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவற்றைத் தவிர வேறு எதையும் அங்கீகரிக்க மறுப்பவனாக, யாரும், நினைக்கக் கூடாது. வேடிக்கை என்னவென்றால், இம்மாதிரியாக தன்னைப் போஷிப்பவர்களின் முகம் பார்த்து அவர்களைக் குஷிப்படுத்தும் காரியத்தை பரதநாட்டியத்திலும் பார்க்கலாம்.

kavuthuvam_dance_namaaste_poseடாக்டர் ராகவன் ஒரு உதாரணம் தருகிறார். கவித்வம் என்று அறியப்பட்ட ஒன்று பின்னால், இன்றும் கூட அதற்குப் பெயர் கௌத்துவம் தான். அதன் பதம் ‘சலாமுரே’ என்ற உருதுச் சொல்லுடன் முடியும். இது ஏதோ காலத்தில் நவாபுகளின் சந்தோஷத்துக்காகத் தொடங்கியது, தஞ்சை மராட்டிய அரண்மனையிலும் தொடர்ந்தது என்றும் தான் அதை ‘நமஸ்தே’ என்று மாற்றியமைத்ததாகவும் சொல்கிறார் டாக்டர் ராகவன். கணேசர் தன் முன் ஆடும் நடனமணி, ‘சலாம்’ வைப்பதைக் கண்டால் வேடிக்கையாகத் தான் இருக்கும். கவித்வம், அல்லது இன்றைய கவுத்துவம் அல்லாவின் முன்னோ ஏதும் நவாபின் முன்னோ ஆடப்படுவதும் இல்லை. ஆடுபவர் மீனாட்சிபுரத்திலிருந்து சமீபத்தில் மதம் மாறியவரும் இல்லை.

மன்னர்களின் முன்னும், ஜமீந்தார்களின் முன்னும் ஆடப்பட்ட காலத்தில், தம்மை ஆதரித்து போஷிக்கும் அம்மன்னர்களின், ஜமீந்தார்களின் அருமை பெருமைகளை, சாகஸங்களை, அழகைப் போற்றிப் புகழ்ந்து எத்தனையோ குறவஞ்சிகள் இயற்றப்பட்டன, ஆடப்பட்டன தான். ஆனால் அவை எதுவும் இன்று ஜீவித்திருக்கவில்லை. யாருக்கும் நினைவிலும் இல்லை. ஆடுவதும் இல்லை. மன்னர்களும், ஜமீந்தார்களும் போன வழியிலேயே இவற்றுக்கும் விடைகொடுக்கப் பட்டுவிட்டன. வெகு எளிதாக சிக்கல் எதுவும் இல்லாது தீர்க்கப்பட்டு விட்ட பிரசினை. போஷிப்பார் இல்லை. ஆடுவாரும் இல்லை. சந்தைப் பொருள் போலத் தான். அந்த குறவஞ்சிகளை இப்போது ஏதும் சுவடிக் காப்பகத்தில் தான் காணமுடியும்.  கொஞ்ச காலம் முன் வரை, ஒரு தாசி தன் மகளுக்கு தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுப்பதான  பதங்கள் வழங்கி வந்தன்..  ”காசில்லாதவன் கடவுளேயானாலும், கதவைச் சாத்தடி” போல.

நாற்பதுக்களுக்குப் பிறகு இந்தப் பதங்களும் நடனமும் போன இடம் தெரியவில்லை. இந்தப் பதத்திற்கு சஞ்சாரி பாவம் ஆடும் நடனமணியின் கற்பனையில் என்னென்னவெல்லாம் வந்து அலைமோதும் என்பதை அவரவர் கற்பனைக்குத் தான் விடவேண்டும். இப்போது நடன மேடைகளில் அதைக் காணமுடியாது. ஆனால், கதக் நடனக் கலைஞர்கள், நவாப்களின் ரசனைக்காகத் தயாரிக்கப்பட்ட சக்கர்களை இன்னம் விடாது பற்றிக் கொண்டு அதை செவ்வியல் நடனம் என்று உரிமை கொண்டாடிக் கொள்கிறார்கள். கதக் நடனம் அதன் வரலாற்றில் கதாவாசக்குடன் தொடங்கியது. அந்த கதாவாசக் இப்போது போன இடம் தெரியவில்லை.

குழந்தையை வெளியே எறிந்தாயிற்று. அதைக் குளிப்பாட்டிய  தண்ணீர் என்னவோ பத்திரமாகத் தொட்டியில் இருக்கிறது.

(5)

சில நூற்றாண்டுகளே பழமையான் அர்த்தமில்லாத, நடனமுமில்லாதவற்றை, இன்னம் மோசம் அவை கதக் நாட்டிய பத்ததிக்கு வெளியிலிருந்து பெற்றவை, அவற்றையே கதக் விட்டுவிட முடியவில்லை என்றால், பரத நாட்டியம் அதன் 2000 வருட பழமையை, அவை அர்த்தமுள்ளதாகவும், அதன் நாட்டிய பத்ததியின் அங்கமாக இணைந்த ஒன்றாக இருந்த போதிலும், விட்டு விடமுடியவில்லை என்றால், அதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை தான்.

இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள். அவர்களது பாண்டித்யம், பரதத்தின் எல்லைக்குட்பட்டதாகச் சொல்லமுடியாது. மற்ற பிராந்தியங்களின், நாட்டிய பத்ததிகளைப் பற்றியும் அவர்கள் முடிந்த அளவு தெரிந்து வைத்திருப்பதாக நாம் அனுமானிக்கலாம். அவர்கள் தாம் ஆடும் நடனத்திற்கு எடுத்துக் கொள்ளும் பதங்கள் அதிகம் போனால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையானவை அல்ல எனப்தும் அவர்களுக்குத் தெரியும். சமீபகாலமாகத் தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, பிரபந்தங்கள், திருவாசகம் போன்றவற்றிலிருந்து தம் நடனத்திற்கான பாடல்களை எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியம் மிக அகண்டது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொடர்வது சுமார் 400 – 500 வருட காலம் தொடர்ந்து பிரவாஹித்து ஒரு சமுத்திரமாக முன்னிற்பது. இந்த வளமையும் பிரம்மாண்டமும் அதன் சிருஷ்டி மேதமையும் இதுகாறும் மீறப்படாதது. இதெல்லாம் போக, இன்று ஆடப்படும் பரதம் அதன் பதங்கள் சிருங்காரமே பக்தியாக, பக்தியே சிருங்காரமாக வெளிப்பாடு பெறும் பதங்கள். அவர்கள் தாம் ஆடும் பரதம் தெய்வத்திற்கு சமர்ப்பணம் என்றும் சொல்கிறார்கள். இருப்பினும், பிரபந்தங்களையும் தேவாரத்தையும் அவ்ர்கள் காணத் தொடங்கியது சமீப காலத்தில் தான். இன்று அவர்கள் ஆடும் நாட்டியப் பதங்கள் 200 வருடங்களுக்கு மேல் பழமையானவை அல்ல. அதோடு, இன்று ஆடப்படும் பரத நாட்டியத்தின் அமைப்பு, அலாரிப்பு, வர்ணம், பதம், தஞ்சாவூர் சகோதரர்களால், திருவனந்தபுரம் மன்னர் ஸ்வாதித் திருநாளின் காலத்தில் தீர்மானிக்கப் பட்டது.

ஆக, பரதம் 2000 ஆண்டு பழமையான ஒரு மரபு என்று உரிமை கொண்டாடிக்கொண்டு நாம் நடைமுறையில் செய்வது அதை 200 ஆண்டுகளுக்குள் சிறைப்பட்ட ஒன்றாக ஆக்கியது தான். கதக் ஆடுபவர்களும் இதைத் தான் செய்கிறார்கள். அவர்கள் பரதத்தை விட இன்னும் கொஞ்ச தூரம் பின்னால் போய்க்கொள்கிறார்கள். மொகல் தர்பார் வரை. இங்கும் டாக்டர் ராகவன் ஒரு சுவாரசியமான தகவலைத் தருகிறார். தஞ்சாவூர் சகோதரர்களிடமிருந்த பெற்ற அமைப்பு தேவேந்திரனின் (தேவன்னா) ’சங்கீத முக்தாவளி’ என்ற நூல், லாஸ்யத்தின் வெளிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்ததைத் தான் பின்பற்றியது. இந்த லாஸ்யம் தானே இன்றைய பரத நாட்டியமும்.. தஞ்சை சகோதரர்கள் அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று சிறு சிறு மாற்றங்களைத் தான் செய்திருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் ராகவன்.

(6)

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முதலாக பேசப்படும் பெயர் தெரிந்த தலைக்கோலி என்று மன்னரால் விருது அளிக்கப்பட்டவள் மாதவி என்னும் தாசி. 5-ம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்தில் பேசப்படுபவள். அவளும் சங்க கால இலக்கியங்களில் பேசப்படும் விறலியரும் எல்லாம் ஆடிய நடனங்கள் எதைப் பற்றியனவாக இருந்தன? பொதுமக்கள் ஆடிய நாட்டுப் புற நடன்ங்கள் பற்றியும், அவர்கள் நடனங்கள் எவவாறு ஆடப்பட்டன, எப்பொருளைப் பற்றியனவாக அந்த நடனங்கள் இருந்தன என்பதைப் பற்றியும் சிலப்பதிகாரம் விவரமாக பதிவு செய்துள்ளது. அவர்கள் கண்ணனைப் போற்றிப் புகழ்ந்து ஆடினர். அவர்கள் ஆடிய நடனங்களின் நுணுக்கங்களைப் பற்றியும் விவரமாக சிலப்பதிகாரம் சொல்கிறது. ஆனால் மாதவி ஆடிய நடனம் எதைப் பற்றி? அந்த நடனத்தின் ஆட்ட நுணுக்கங்கள் என்ன? அது செவ்வியல் மரபைச் சார்ந்ததா, அல்லது பொது மக்கள் ஆடும்  நாட்டுப்புற மரபில் வந்ததா?

ashtanayika சிலப்பதிகாரத்தின் கானல்வரி, வேனிற்காதை பகுதிகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள், அவை காதலைப் பற்றிய்தாக அதன் பல்வேறு வகைகளைப் பற்றியதாக, நாம் ”அஷ்டநாயிகா” என்று சொல்கிறோமே அது போன்றதாக, பல்வேறு மெய்ப்பாடுகளைச் சொல்வதாக இருந்தது எனத் தெரிகிறது. ஆக, அவை ஆண் பெண் உறவுகளைப் பற்றியதாக, என்றென்றைக்குமாக ஜீவித்திருக்கும் அவன்- அவள் சந்திப்புகள், உறவுகள், ஈர்ப்புகள், ஏமாற்றங்கள் பற்றியதாக இருந்தது.  அத்தோடு குடக்கூத்து பற்றியும் அறிகிறோம் குடக்கூத்து பற்றிய ஒரு சிற்பப்படிமம் கேரளத்தில் உள்ள திருவிக்கிரமங்கலத்தில் காணப்படுகிறது. மேலும் சிலப்பதிகாரம் பேசும் சாக்கியார் கூத்து, இன்றும் கேரளத்தில் வழங்கும் நாடக பாணியாகும். பந்தாட்டம் பற்றியும் அது பேசுகிறது. பந்தாட்டம் கந்துகம் என்றும் அறியப்படுகிறது. அது கேரளத்தில் ஆடப்படும் மோஹினி ஆட்டத்தின் ஒரு அங்கம். இவை எல்லாமே ஒரு காலகட்டத்தில், சிலப்பதிகார காலத்தில் தமிழ் நாட்டில் வழங்கிய நாடக, நாட்டிய பத்ததிகளாகும் ஆனால் இன்று தமிழ் வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்டவை. ஆனால், கேரளத்தில் இன்றும் ஜீவித்திருப்பவை.

இன்று பரத நாட்டியம் என்று அறியப்படுவது முப்பதுக்களில் ‘சதிர்’ என்று வழங்கப் பட்டது. இது தமிழ் நாட்டிற்கே உரிய மரபான நாட்டுப்புற வடிவங்களும் செவ்வியல் மரபுகளும் அகில இந்திய பின்னணியின் தாக்கத்தில் ஒன்றையொன்று கலந்த ஒன்றாகும். இது கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து நிகழ்ந்து வருவது. இதில் பரதனின் நாட்டிய சாஸ்திரத்துடனோ அல்லது பின் வந்த மற்ற நாட்டிய நூல்களுடனோ முழுக்க முழுக்க அவைவழி செய்யப் பட்டதாகக்  காணமுடியாது போகலாம். தன் பரிணாம வளர்ச்சியில், பின் வந்த காலங்களில், குடக்கூத்து, ப்ரமரி போன்றவற்றை தன்னிடமிருந்து கழற்றி விட்டதைப் போல, பல புதியவற்றைத் தன்னுள் சேர்த்துக் கொண்டும் உள்ளது. இது பல நூற்றாண்டுகளின் பரிணாமம்.

சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”,  பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல, 17-ம் நூற்றாண்டிலிருந்து 19- நூற்றாண்டு வரையான காலகட்டத்தில், தன் போஷகனான எந்த மன்னனின், நவாபின், ஜமீந்தாரின் முன் ஆட நேர்ந்துள்ளதோ அந்த போஷகனுக்கு , தேவனைக்குறித்த ‘அவன்’ இடத்தைக் கொடுத்து, அவனைப் போற்றி புகழவோ, அவன் காதலுக்கு ஏங்கும் நாயகியாகவோ தன்னை வரித்து ஆட நேர்கிறது.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள். ‘உலா’, ‘குறம்’ போன்ற தமிழ் பிரபந்தங்கள் குறவஞ்சி என்னும் நாட்டுப் புற நாட்டிய் நாடக வடிவை உருவாக்கிப் பின்னர் அது செவ்வியல் நடனமாகவும் பரிணாமம் பெற்று பரதத்தின் ஒரு அங்கமாகவும் ஆயிற்று. குறவஞ்சி நாட்டிய நாடகத்தின் ஆரம்பம் நாட்டுப்புற பாடல் வகையிலாகும். ஆக,  பரத நாட்டியம், தான் அதற்கு முன்னர் அமர்த்தியிருந்த  சிம்மாசனத்திலிருந்து தன்னைச் சிருஷ்டித்த கடவுளையே கீழிறக்க முடிந்ததென்றால், இந்த நாயக-நாயகி கால் விலங்கிலிருந்து  தன்னை மீட்டுக்கொள்ள அதற்கு ஏன் இத்தனை தயக்கம்?

(தொடரும்)

5 Replies to “சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2”

  1. இக்கட்டுரைகள் புத்தகமாக வந்தால் தமிழுலகுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும். தமிழ் ஹிந்து தளமே ஒரு புத்தக நிறுவனம் துவங்கி இதைக் கொணர்வது நல்லது. இது போன்ற பல புத்தகங்களையும் வெளியிட்டு, இந்திய, இந்து, தமிழ் கலைகளையும், இலக்கியத்தையும் போஷிப்பது நீண்ட கால வளர்ச்சிக்கும், சமூக வளத்துக்கும் நிச்சயம் உதவும்.

  2. அய்யா வெங்கட் சுவாமிநாதனுக்கு.. நன்றிகள் ..தமிழ் ஹிந்துவிற்கும் ..
    பரத கலை புராதானமானது ..அது பக்தியுடன் இணைக்கப்பட்டு ..மக்களின் வாழ்வியல் மேம்பட உதவியது ..அந்த நடனத்தையும் அதன் அம்சங்களையும் வேறு எதொடும் ஒப்பிட்டு பார்க்க முடியாது ,,நடராஜ நடனத்தை தவிர..இப்போது மரபு என்றால் தெரியாமல் ,,சில அதி மேதாவிகள் ..கலப்பு (fusion),புதிததாக தங்கள் மேதாவித்தனத்தால் ஏதோ கண்டுபிடிப்பதாக கூறிக்கொண்டு (experimentation)..அதன் இயல்பை கொச்சை படுத்துகிறார்கள் ,,எல்லாம் மண்டைகணம் செய்யும் வேலை ..என்ன செய்வது? ஆனால் இன்னும் மரபு மாறாமல் கலை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் சில நல்ல ஆசிரியர்களால் அக்கலை தழைத்து கொண்டு வருகிறது ..இந்த கலை எல்லோரும் படித்து விடமுடியாது .இயற்கையிலையே சில நல்ல விஷயங்கள் பிள்ளைகளுக்கு வர வேண்டும் ..பக்தி ,கவனக்குர்மை,எல்லாம் வேண்டும் ..கலைக்கு மரியாதை செய்தால்தான் கலை கைக்கு வரும்..சும்ம்மா பக்தியை விட்டுவிட்டு ஆங்கில மேதாவிகளோடு சேர்ந்துகொண்டு மரபை கெடுப்பதால் ஒன்னும் கிட்ட போவதில்லை அதன் சிதைவை த்தவிர..

  3. Respected sir,

    Thanks for this excellent article series. Your exposition of the history of Bharatanatyam as an art form is profound and very insightful. I am awaiting to read the upcoming parts..

    Your views abt sticking to tradition and gyrations of Kathak are thought-provoking.. and appear to be contrarian. Shringar is called the King of Rasas – in a way it actually encompasses all other Rasas. Do you intend to say that Shringar should not be the main theme of bharatnatyam at all? or are you saying there should be more innovations even while dealing shringar? it is not clear.

  4. இதைவிட அருமையாய் பரதக்கலையை அலச முடியுமா? எவ்வளவு விஷயங்கள், பரதக்கலையை பற்றிய விமர்சனப்புத்தகத்தில் இவ்வளவு தகவல் செறிவுகளா?

    அருமையான கட்டுரையை வழங்கிய வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு நன்றி.

  5. “நாட்டியாஞ்சலி”
    தஞ்சை வெ.கோபாலன், தலைவர், ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழு, திருவையாறு &
    இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

    இன்றைய அறிவியல் உலகத்தின் கண்டுபிடிப்புகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்கள் கண்டுபிடித்து அதற்கு உருவகங்களைக் கொண்டு விளக்கமும் அளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட விளக்கங்களில் ஒன்றுதான் நடராஜப் பெருமானின் தாண்டவத்தின் தத்துவமும். சிவபெருமான் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழித்தும் வருவதாக நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள். இம்மூன்று செயல்களோடு மறைத்தல், வீடுபேறு அளித்தல் எனும் இரண்டும் அடங்கிய “பஞ்ச கிருத்தியங்கள்” எனப்படும் தொழிலைச் சிவபெருமானுக்கு அளித்து பெருமை பெற்றிருக்கிறார்கள்.

    வான்வெளியில் கூட்டங்கூட்டமாக சக்தியின் வெளிப்பாடு வந்து கொண்டிருப்பதையும், அப்படிப்பட்ட சக்தியை உள்ளடக்கிய அணுவை பிளந்தால் அதிலிருந்து வெளிப்படும் சக்தி ‘மாபெரும் சக்தியாக’ உருவெடுப்பதையும் மேலை நாட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்த போது, இந்த கண்டுபிடிப்புகளை இந்தியாவில் ஆன்மீகமாகக் கண்டுபிடித்து, இப்பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, முதன்முதல் உருவான காற்று, அது எழுப்பிய ஓசை இவற்றை இறைவனின் தாண்டவமாகக் கருதி ‘நடராஜர்’ அதாவது நடனத்துக்கு அரசர் என்று சிவனை முன்னிருத்தி வணங்கி வந்ததைப் போற்றி பாராட்டி எழுதியிருக்கிறார்கள்.

    இந்து புராணங்களின்படி சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடினார். எதற்கு? தான் அதிகம் படித்துவிட்டதாக ஆணவம் கொண்டு சில முனிவர்கள் இறைவனை மறந்த காரணத்தால், அவர்களுக்கு உண்மை விளங்கிட வேண்டுமென்பதற்காக இந்த ஆனந்த தாண்டவம் ஆடினார். நம் புராணங்களின்படி சிவபெருமான்தான் தாண்டவங்களுக்கு எல்லாம் முதல்வன். சிவனும் பார்வதியும் போட்டியிட்டு ஆடியதாக புராணம் கூறும். சிவன் ஆடிய ஆட்டம் ‘தாண்டவம்’. இது பிரபஞ்சம் தோன்றிய போதும், அழிக்கப்படும் போதும் ஆடிய தாண்டவமாகும். முதலில் ஆடியது ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிவின் போது ஆடியது ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அறிகிறோம். பார்வதி ஆடிய ஆட்டத்துக்கு ‘லாஸ்யம்’ என்று பெயர். இது முன்னதைப் போல் வேகமும், துள்ளலும் கொண்டதல்ல. பார்வதியின் லாஸ்யம் நளினமானது, உணர்வைத் தூண்டவல்லது, இனிமையானது. பெண்கள் ஆடுவது லாஸ்யம் என்று கூறப்படுகிறது.

    சிவனுடைய இந்த ஆட்டத்துக்கு ஓர் உருவம் கொடுத்து பஞ்சலோக விக்கிரகம் படைத்தது தமிழகத்தில்தான். கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கம் தோன்றியிருக்கிறது. அப்படி சிவபெருமான் ஆடிய தலங்களை ஐந்து இடங்களில் காணமுடிகிறது. அவற்றில் முதன்மையானது சிதம்பரம். இங்கு இருப்பது கனகசபை, மதுரையில் ரஜத சபை அதாவது வெள்ளி சபை, திருவாலங்காட்டில் ரத்தின சபை, திருநெல்வேலியில் தாமிர சபை, குற்றாலத்தில் சித்திர சபை என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

    பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த போது, அவர் மகாலக்ஷ்மியிடம் பரமேஸ்வரனின் ஆனந்த தாண்டவத்தின் சிறப்பினை எடுத்தியம்பிக் கொண்டிருந்தார். அப்போது அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிசேஷன் மகாவிஷ்ணுவிடம் தான் அந்த ஆட்டத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறவும், அவரை பூமிக்கு அனுப்பி பதஞ்சலி முனிவர் என்ற பெயரோடு சென்று அந்த ஆட்டத்தைக் காணப் பணித்தார். அவருடன் வியாக்கிரபாத முனிவர் எனும் புலிக்கால் முனிவரும் சேர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் இறைவனின் ஆட்டத்தைக் காண்பதை மகாவிஷ்ணுவும் பார்த்துக் கொண்டிருந்தார். இதையொட்டியே சிதம்பரத்தில் நடராஜர் ஆலயத்தில் கோவிந்தராஜ பெருமாளுக்கும் ஒரு சந்நிதானம் அமைக்கப்பட்டதாகக் கூறுவர்.

    இதே சிதம்பரத்தில்தான் நடராஜப் பெருமானுக்கும் காளிக்கும் போட்டி ஏற்பட்டு இருவரும் ஆட, ஆட்டத்தின் இடையே சிவபெருமான் தன் இடது காலை உயரே தூக்கி ஊர்த்துவ தாண்டவமாக ஆட, காளியால் அப்படி ஆட முடியாமல் தலை குனிந்து ஊரை விட்டு வெளியேறி கோயில் கொண்டாள் என்றும் வரலாறு உண்டு.

    சிவனுடைய தாண்டவம் பிரபஞ்சத்தின் தோற்றம் மட்டுமல்ல, உயிரினங்கள், புல், பூண்டுகள், மரம் செடிகொடிகள், ஊர்வன, பறப்பன, மிருகங்கள், மனிதர்கள் என்று இவை பிறப்பது, வாழ்வது, இறப்பது என்பதை தத்துவார்த்தமாகக் காட்டும் நோக்கில் ஆடப்பட்டது. இவை முன்பே கூறியதைப் போல பஞ்ச கிருத்தியங்களின் வெளிப்பாடுதான்.

    நடராஜப் பெருமானுடைய விக்கிரகம் தமிழ்நாட்டில்தான் சுமார் ஆயிரம் ஆயிரத்தைனூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம். சாதாரணமாக சிவன் கோயில்களில் லிங்க வழிபாடுதான் நடப்பதை நாம் அறிவோம். நடராஜர் சிவனுடைய வடிவம்தான் எனும்போது இந்த உருவத்துக்குக் காரணங்களை அறிந்து கொள்ள வேண்டாமா? நடராஜர் விக்கிரகம் வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை மடித்துக் கொண்டு ஆடுகிறார். சில இடங்களில் இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கியும் ஆடுவது போன்ற தோற்றமும் உண்டு. இந்த உருவத்துக்கு நான்கு கரங்கள், வலப்புறம் ஒரு கரத்தில் டமருகம் எனும் உடுக்கை வாத்தியமும், இடது கையில் சந்திரபிரபை போன்று வளைந்த உள்ளங்கையில் தீப்பிழம்புகளும், மற்றொரு வலக்கை அபயஹஸ்தமாகவும், இடக்கையை மார்புக்கு நேரே வளைத்தும் வைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். முதலில் காற்றுதான் தோன்றியது. அந்த காற்று ஓசை எழுப்பியது என்பதற்காக டமருகம். தீப்பிழம்பு, உலகை அழிப்பதைக் காட்டுவதற்கும், இடக்கை மடக்கி கால் நோக்கி வளைந்திருப்பது, இறைவனின் அடிபணிவதால், வலக்கரம் காட்டும் அபயஹஸ்தம் அனைவருக்கும் அடைக்கலமளிக்கும் என்பதையும் விளக்குவதாகக் கூறுகிறார்கள்.

    இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. நடராஜர் காலை ஊன்றி நிற்குமிடத்தில் காலடியில் ஓர் உருவம் கிடப்பதைப் பார்க்கலாம். இந்த உருவம் அபஸ்மாரம் எனப்படுபவனின் உருவம். இந்த அபஸ்மாரம் உலகில் உள்ள தீமைகள், நோய்கள் இவற்றின் உருவகம். மனத்தின் வக்கிரம், கொடுமை இவற்றையும் இது எடுத்துக் காட்டுகிறது. இவற்றைக் காலில் போட்டு அழிப்பதுதான் சிவபெருமான் செய்யும் தாண்டவத்தின் நோக்கம். இப்படி ஒரு கடவுளின் உருவத்தைப் படைப்பதன் மூலம், அறிவியல், உலகின் தோற்றம், வளர்ச்சி, அழிவு இவ்வளவையும் இறைவன் அணுவளவும் பிசகாமல் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

    ‘நடராஜா’ எனும் சொல் ‘நடனத்துக்கு அரசன்’ எனும் பொருளில் வழங்கப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் இலக்கணப்படி இச்சொல் வழக்கில் வந்தது. இது மட்டுமல்லாமல் வெறு சில விளக்கங்களும் நடராஜர் சிலைக்குக் கொடுக்கப்படுகிறது. அவரது இடையிலும் கரங்களிலும் பாம்பு சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள குண்டலினி சக்தியைப் பாம்பாகக் காட்டுகிறது என்கிறார்கள். இவரது உருவத்துக்கு சுற்றிலும் தீ வட்டத்தைக் காணலாம். இது இந்த பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்படும் துன்பங்கள், மும்மலங்கள் இவற்றைக் குறிக்கிறது.

    நாட்டியம் என்பது அதன் இயக்கத்தை, ஆட்டத்தை, அதனோடு தொடர்புடைய இசை, தாளம், பாவம் இவற்றைப் பார்த்து ரசிக்கக் கூடிய கலை. இது சமயம் சார்ந்த வழிபாடுமட்டுமல்லாமல், மனித வர்க்கத்தின் ஆளுமைக்குட்பட்ட, கோபம், காதல், அன்பு, வீரம், சோகம், இரக்கம் இவற்றையும் காட்டக்கூடிய கலை. அதனால்தான் நவரஸங்களும் அடங்கிய ராகம், அந்த ராகத்திற்கேற்ற பாடல் இவற்றைக் கொண்டு இந்த ஆட்டங்களை நடத்திக் காட்டுகிறோம். இதனால் இவ்வாட்டங்களுக்குள் அடங்கியுள்ள மனித உணர்வுகளை பலரும் அறியும் வண்ணம் இந்த நாட்டியங்கள் அமைக்கப்படுகின்றன.

    இவ்வகை நாட்டியங்களை மூன்று வகையாக வகுத்திருக்கிறார்கள். அவை ‘நாட்டியம்’, ‘நிருத்தியம்’, ‘ந்ருத்தம்’ என்பன. முதல் வகை நாட்டியம் என்பது ஒரு வரலாற்றை அல்லது கதையை வரிசையாகச் சொல்லும் ஆங்கில Opera போன்றது. இவற்றை நாட்டிய நாடகம் எனலாம். இதில் பாத்திரம் ஏற்றிருப்பவர்கள், தங்கள் பங்கை நடிப்பின் மூலமும், பாடல்கள் மூலமும், பாவங்கள் மூலமும் காட்டமுடியும். இரண்டாவது வகை நிருத்தியம். இது நவரஸங்களில் ஏதாவதொரு ரஸத்தில் அமைந்த பாடலுக்கு கருத்துக்கேற்ப பாவமும், ரஸம் வெளிப்படும்படியான ஆட்டமும் ஆடிக் காண்பது. மூன்றாவது வகையில் தாளக்கட்டும், உடல் அசைவும் இருக்கும் ஆனால் அவற்றுக்கு மேற்சொன்னவை போல எந்த பொருளும் கிடையாது.

    மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் இப்போதெல்லாம் ‘நாட்டியாஞ்சலி’ எனும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் பரதம் பயின்ற நாட்டியக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டி அருமையாக நடனம் ஆடுகிறார்கள். எல்லா கலைகளுக்கும் முதன்மையானவரான சிவபெருமானுக்கு அவன் அளித்த நாட்டியம் மூலமாகவே அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்ச்சிகள் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.

    மற்றெல்லா நாடுகளிலும் கூட இசையும் நாட்டியமும் உண்டு. ஆனால் அவை பொழுது போக்குக்காகவும், அந்தந்தக் கலைகளில் கலைஞர்களின் திறமைகளை வெளிக்காட்டும் விதத்திலும் அமைந்திருக்கும். ஆனால் நம் பாரத புண்ணிய பூமியில் எல்லா கலைகளும் அந்த இறைவனுக்கே என்று அர்ப்பணிக்கும் உணர்வோடு இவற்றைக் கையாண்டு வருகிறார்கள். சிவபெருமான் நாட்டியத்தில் வல்லவர் என்றால், இசைக்குரிய வீணை சரஸ்வதியின் கையில் இருக்கிறது. நாரதருடைய கையில் தும்பூர் எனும் வாத்தியம் இருக்கிறது. நந்தி மத்தளம் வாசிக்கிறார். கண்ணன் குழல் ஊதுகின்றான். இப்படி இசையும் மற்ற கலைகளும் இறைவனுக்கே என்று அர்ப்பணம் செய்வதால்தான் இந்த கலைகளை நாம் பக்தியோடும், பரவசத்தோடும் பயில்கிறொம், கற்றுக்கொண்டு அவற்றில் நம் திறமைகளை வெளிக்கொணர்கிறோம். அப்படி சிவபெருமானுக்கு நாம் செலுத்தும் அஞ்சலிதான் “நாட்டியாஞ்சலி” எனும் நிகழ்ச்சி.

    நாட்டியம் என்பது பல செயல்களை ஒருங்கிணைத்து செயல்படும் ஒரு யோகம் எனலாம். தாளம் பிசகாமல் கால் தாளமிட வேண்டும். சொல்லும் கருத்துக் கேற்ற ரஸத்தை வெளிப்படுத்தும் ராகம் வேண்டும். அதற்கேற்ப முகமும் உணர்ச்சிகளையும், கைகளும், விரல்களும் முத்திரைகளையும் காட்ட வேண்டும். இவற்றுக்கு மனம் யோகத்தில் திளைத்தல் வேண்டும். அப்போதுதான் இவை அனைத்தும் சிறிதும் பிசகாமல் செய்து முடிக்க முடியும். எனவே நாட்டியம் என்பது ஒரு யோக சாதனை. இது சாதாரணமாக எல்லோராலும் செய்யமுடிவதல்ல. இதற்கென்று ஆர்வமும், விடாமுயற்சியும், நல்ல பயிற்சியும் எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல குருநாதர்களும் அமைய வேண்டும். குருபக்தி இந்த கலைகளில் மிகவும் அவசியம்.

    இந்த கலைகள் நம் பாரம்பரிய சொத்துக்கள். இவற்றை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கெல்லாம் இருக்கிறது. இந்தக் கடமையைச் செவ்வனே செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *