இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2

black-and-white-tvமுந்தைய பகுதி

அனேகமாக அந்த வருடம் 1974 என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் TV என்று சொன்னால் அது “தூர்தர்ஷன்” ஒன்றுதான். அனைவர் வீட்டிலும் TV- யும் இருக்காது; எங்கள் வீட்டிலும் இல்லை. அது ஒரு சனிக்கிழமை என்று ஞாபகம் இருக்கிறது. அன்று மாலை- இரவு நிகழ்ச்சியாக TV- யில் “நவராத்திரி” திரைப் படம் வரப் போவதாக அறிவித்திருந்தார்கள். அப்போதெல்லாம் சனி, ஞாயிறு தினங்களில்தான் படங்கள் திரையிடப்படும். நான் முன்பே அந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்திருந்தாலும், மறுபடி பார்க்கலாம் என்று தோன்றியது. நான்கைந்து மைல் தொலைவிலிருக்கும் என் நண்பன் வீட்டில் ஒரு நல்ல தொலைக் காட்சிப் பெட்டி இருந்ததால் அங்கு போய்ப் பார்க்கலாம் என்றிருந்தேன்.

1. போகலாம் என்று தோன்றினாலும் நான் செல்லும் இடத்தில் மின்சாரம் அடிக்கடி தடைப்படுமே; போவது உசிதம்தானா என்றும் உள்ளுணர்வில் தோன்றியது. இருந்தாலும் போய்த்தான் பார்ப்போமே என்றும் தோன்றியது. அன்று மதியம் நன்கு உறங்கிவிட்டு, சுமார் நான்கு மணிக்கு வீட்டை விட்டு எனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன். புறப்படும் முன் எனது மனைவி போகும் வழியில் உள்ள ஒரு கடையிலிருந்து காபிப் பொடி வாங்கி வரச் சொன்னார்கள்.

2. சரி என்று சொல்லிவிட்டு, சிறிது தூரம் சென்ற பின் நான் கண்ணில் பூச்சி விழுவதைத் தடுக்கும் Driving Glaases  எடுத்து வர மறந்து போனது ஞாபகம் வந்தது. போகும் வழியில் சாலையின் இரு பக்கமும் புதர்கள் மண்டியிருக்கும்; அதனால் பூச்சிகள் பறந்து மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கண்களில் விழலாம் என்று உள்ளுணர்வு இருந்தும், வீட்டுக்குத் திரும்பிவராது சென்று விட்டேன்.

3. நான் போகும் வழியிலேயே காபிப் பொடி வாங்கி அதை பக்கத்தில் இருக்கும் side box ஒன்றில் வைக்கும் போது காபிப்பொடி சுற்றி வைத்திருந்த பாக்கெட் சற்று சூடாக இருந்ததால், மூடி வைக்கப்போகும் box-க்குள் ஒருவேளை பாக்கெட் வெடித்து சிதறி விடுமோ என்று மனதுக்குள் ஒரு சலனம் ஏற்பட்டது. அதுபோன்று நடந்த முன் அனுபவம் ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

போகும் வழியிலேயே நான் எதிர்பார்த்திருந்த இடத்திற்கு சற்று அருகாமையில் கண்களில் பூச்சி விழுந்துவிட்டது. சற்று வண்டியை நிறுத்தி கண்களைத் துடைத்துக் கொண்டு நண்பன் வீடு போய்ச் சேர்ந்தேன்.

நண்பன் வீட்டுக்குச் சென்று திரைப் படம் பார்க்க ஆரம்பித்து சுமார் ஒன்றரை மணி நேரம் இருக்கும். மின்சாரம் தடை பட்டு நின்றது.

சிறிது நேரம் பார்த்துவிட்டு, மின்சாரமும் வராததால், நண்பனிடம் அதுவரை நினைத்ததுபோல் நடந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளில் மூடியிருந்த  box-த் திறந்த எனக்கு சப்த நாடியும் ஒடுங்குவதுபோல்  இருந்தது. ஆமாம், பாக்கெட் வெடித்து காபிப் பொடி உள்ளுக்குள் சிதறி விழுந்திருந்தது. ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தாலும் சிறிது பயமும் தொற்றிக் கொண்டது. நண்பனிடம் போய் நடந்த இந்த மூன்றாம் நிகழ்ச்சியையும் சொல்லிவிட்டு அவன் வீட்டில் இருந்த ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து, பொடியை அள்ளிக் கொண்டு வந்தேன். மின்சாரமும் திரும்பி வந்தது, படத்தையும் பார்த்து முடித்தோம.

வீடு திரும்பும் வழியெல்லாம் மனதில் தோன்றி பின் நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிகளையே பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு புதிது. சித்தர்கள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் சித்துக்கள் எல்லாம் முக்தி அடைய விரும்புவோரின் வழிக்கு நல்லது அல்ல என்றும் படித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் ரமணர் காட்டிய சகஜ நிலை ஒன்று பற்றித்தான்  யோசித்துக் கொண்டிருப்பேன். மேலும் எந்த ஒரு யோக வழியையும் நான் சிறப்பாக பயிலுவதும் கிடையாது. ஆதலால் அன்று பெற்ற அனுபவங்கள் எல்லாம் என்னை சிறிது யோசிக்கவும் வைத்தது.

4. இரவில் வீட்டில் மற்றவர்கள் எல்லோரும் நன்கு தூங்கிவிட்டனர். வீடு திரும்பி உணவு அருந்தியபின், இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததால் உடனே தூக்கம் வரவில்லை. Zvi Kohavi என்றவர் எழுதியிருந்த Finite Automata Theory என்ற கணினி சம்பந்தப்பட்ட புத்தகத்தைப் படிக்க உட்கார்ந்தேன், நிகழ்வலைகள் தொடர்ந்து வீசிக் கொண்டிருந்ததால் தொடர்ந்து படிக்கவும் இயலவில்லை. அப்போது தோன்றிய மின்னல் வெட்டு போன்ற ஒரு எண்ணத்தால் ஒரு சோதனை செய்யலாம் என்று தோன்றியது. இந்தக் கணம், இக்கணமே இங்கும் மின்சாரம் தடைபட்டு போய்விட்டால்….. என்று நினைத்த அக்கணமே மின்சாரம் போய்விட்டது. நிசமாகவே மின்சாரம் போய்விட்டதா என்று கண்கள் இரண்டையும் மூடி மூடித்  திறந்து பார்த்தேன். ஆமாம், நான் இருட்டில்தான் உட்கார்ந்து இருந்தேன். அந்த இருட்டில் தனியே உட்கார்ந்திருந்த எனக்குத்தான் தெரியும் அப்போதைய எனது மனநிலை. இரண்டு நிமிடங்கள் கழிந்தபின் மின்சாரமும் வந்து விட்டது. ஆனால் அதற்கு மேலும் என்னால் படிக்கவும் முடியுமா? புத்தகத்தை மூடிவிட்டு படுத்துவிட்டேன். தூக்கமோ வெகு நேரம் கழிந்தபின்தான் வந்தது.

subconsciousமறுநாள் காலை என் மனைவியிடம் நடந்ததைச் சொன்னேன். என்னைப்போல் அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. அத்துடன் விட்டுவிட்டோம். ஆனாலும்  அவ்வப்போது என் நண்பர்கள் சிலரிடம் இதைச் சொல்லி வருவதுண்டு. ஞாநிகளுக்கெல்லாம் இதுபோல் வருவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் ஞானிகள் இதைச் சட்டை செய்யமாட்டார்கள் என்றும் தெரியும். அது சரி, ஞானிகளுக்கு வரலாம், என் போன்ற முதல் நிலை ஆன்மீக மாணாக்கனுக்கு – அதுவும் எந்த ஒரு சாதகமும் செய்யாதிருப்பவனுக்கு  –  ஏன் வரவேண்டும்?  உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளைச் சாது ஒருவர் செய்வார் என்று  கேள்விப்பட்டால் நான் அவர்களை நாடுவதும் கிடையாது. ஆகவே இவை அனைத்தும் எனக்கு சற்று புதுமையாகத்தான் இருந்தது. நடந்ததை நடந்தபடியாக ஒரு சாட்சியைப்போல் பார்த்துக் கொண்டிருப்பதில் தவறேதுமில்லை; தான் நினைத்ததை நடத்துவதுபோல் எண்ணுவதுதான் தவறு என்று புரிந்து கொண்டோம். நடப்பதற்கு முன் முளைத்த எண்ணங்களும் தானாகவே தோன்றியதுபோல், நடப்பதும் தானாகவே நடப்பது என்று எடுத்துக் கொண்டோம்.

ஒன்பது அல்லது பத்து வருடங்கள் சென்றிருக்கலாம். 1983 -ம் வாக்கில் “தூர்தர்ஷனில்” இந்தியில் ஒவ்வொரு வியாழன் மாலையும் “ஹோனி-அன்ஹோனி” என்ற ஒரு அரைமணி நேரத் தொடர் சித்திரம் வந்து கொண்டிருந்தது. அதில் எனது மேற்கண்ட அனுபவங்களைப் போல் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டிக்கொண்டு வந்தனர். எனது அனுபவங்களைப்போல் இருந்ததால் நானும் தவறாது பார்த்துக் கொண்டு வந்தேன். அது சமயம் ஒரு வார காலத்திற்கு எனக்கு ஒரு நுழைவுத் தேர்வு சம்பந்தமாக முதல் நிலை தாள் திருத்துவோர் பொறுப்பு வந்து சேர்ந்தது. ஒரு வியாழன் மாலை எனது அடுத்த நிலை திருத்துவோரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நான் தொடர் சித்திரம் பார்க்க விரும்புவதாகச் சொன்னேன். அதுபோல் நான் எப்போதுமே கேட்டிராததால், அவருக்கு ஆச்சரியம் அதிகமாகி அந்தத் தொடரைப் பற்றிக் கேட்டார். அதையும் சொல்லி, நான் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு விளக்கமாக அதைப்போல எனக்கு நடந்த மேற்கண்ட விஷயங்களையும் சொன்னேன். அப்படிச் சொல்லும்போது நான் கடைசியாகப் படித்துக் கொண்டிருந்த அந்த புத்தகத்தின் விவரங்களையும் அந்த ஆசிரியர் பெயரையும் தேவையில்லை என விட்டுவிட்டேன்.

அவர் என்னைப் போகச் சம்மதித்ததோடு, நான் முயன்றால்  எனக்கும் அது போன்ற சக்திகள் வரலாம் என்றார். நான் அதற்கு அவைகளை நாடக் கூடாது என்றும், ரமணர் சொன்ன:

“சித்தத்தின் சாந்தியதே சித்தமாம் முக்திஎனில்
சித்தத்தின் செய்கையின்றி சித்தியாச் – சித்திகளில்
சித்தம் சேர்வார் எங்கன் சித்தக் கலக்கம் தீர்
முக்தி சுகம் தோய்வார் மொழி”

என்ற பாடலைச் சொல்லி விளக்கமும் கொடுத்து விட்டு தொடரைப் பார்க்கச் சென்றுவிட்டேன். திரும்பி வந்து அவரை உணவருந்தச் செல்ல அனுப்பும்போது அவர் என்னிடம் ஒரு தாளை நீட்டி “நாம் சாதாரணமாக எதிரபார்க்கும் விடை இல்லாது இந்த மாணவர் வேறு ஒன்றை எழுதியிருக்கிறாரே,  இதையும் சரி எனக் கொள்ளலாமா?” எனக் கேட்டார். தாளைப் பார்க்கிறேன்; அதில் அந்த மாணவர் தனது விடையை ஆரம்பிக்கையில், “According to Zvi Kohavi ….” என்று  எழுதியிருந்தார். நான் என் நண்பரைப் பார்த்து “நான் புறப்படும்போது சொன்ன எனது அனுபவங்களின் கதை முடியவில்லை போலிருக்கிறது. நான் அப்போது குறிப்பிட்ட புத்தகம் இதே ஆசிரியர் எழுதியதுதான். நான் அப்போது விவரம் தரவில்லை, இப்போது தானாக வந்திருக்கிறது” என்றேன். என் நண்பரின் ஆச்சரியத்தை அது மேலும் கிளறி விட்டது என்று சொல்லவும் வேண்டுமா?

மேலும் சுமார் ஆறு வருடங்களுக்குப் பிறகு, 1989 -ல் நான் அமெரிக்கத் தலைநகரமான வாஷிங்க்டனில் ஒரு முனைவராக வேலை பார்க்கச் சென்றிருந்தபோது நான் இந்தியாவிலிருந்து சென்றது போல் இன்னொரு முனைவரும் அங்கு வேலை பார்க்க  இஸ்ரேலிலிருந்து வந்திருந்தார். அவருக்கு ஆங்கிலம் கொஞ்சம் தடுமாறும். ஆதலால் என்னிடம் அடிக்கடி வந்து பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். அப்படி அவரிடம் ஒருநாள் அதிசயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தனக்கு அப்படி எதிலும் நம்பிக்கை இல்லை என்றார். அப்போது நான் மேலே சொன்ன சம்பவங்களைச் சொன்னேன். அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு எல்லாம் தானே நிகழ்பவைகள்தான் என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றார். சென்ற சில நிமிடங்களில் எனது அறைக்குத் திரும்பி வந்தார். “நான் ஒன்று உங்களிடம் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன Zvi Kohavi இஸ்ரேலில் வேலை பார்க்கும் எனது நண்பர்தான். இஸ்ரேலில் எனது அடுத்த அறையில்தான் அவரது அலுவலகமும் உள்ளது. நான் ஏன் இதைச் சொல்ல வந்தேன் என்றால், உங்களிடம் பேசி விட்டு எனது e -mail பார்க்கப் போனபோது அவரைப் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது, அதற்காகத்தான் உடனே வந்து சொன்னேன்” என்றார்.

divine_lightஆனாலும் ஒருவரைப்பற்றி தொடராக – அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு தொடர்புடன் – வருகிறது என்றால் அதற்கு என்ன பொருள்? அதுவும் அவர் பெயர் ஏதோ ஒரு சம்பந்த்ததில் எனது மற்ற எண்ணங்கள்-நிகழ்வுகளுடன் தொடர்பாக வருகிறது என்றால் என்ன பொருள்? ஏதோ ஒன்று இருக்க வேண்டும். ஆக நம்மைத் தாண்டி, நமது அனுபவங்களைத் தாண்டி ஒரு பரம்பொருள் உண்டு; அது அவ்வப்போது ஏதோ ஒரு விதத்தில் தான் இருப்பதை காட்டிக் கொண்டும் வருகிறது என்று கொள்ளலாம் அல்லவா?  அதை நாம் தேட வேண்டாம். அது ஒன்று இருப்பதை நாம் நம்பினால் போதும்; அது என்றும் நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்று இருந்தால் போதும். நாம் அதற்குத் தகுதியாக இல்லாவிட்டாலும் அது தன்னை ஏதோ ஒரு விதத்தில் காட்டிக் கொள்ளும். மேலும் சில அனுபவங்களினாலும் சொல்லுகிறேன் என்று இப்போது கொள்ளுங்கள்.

அதிசயங்கள் என்று சொல்ல வரும்போது Friedman என்ற பௌதிக விஞ்ஞானி கொஞ்சம் வேடிக்கையாகச் சொல்வாராம். “நான் இங்கு வந்து இறங்கிய taxi காரின் எண்ணைப் பார்த்தேன். அதில் ‘NYC 911’ என்று  இருந்தது. அப்படி இருப்பது ஒரு பெரிய அதிசயம் இல்லையா? மில்லியனில் ஒரு முறைதான் நான் அப்படி இங்கு வரும்போது பார்க்க முடியும் இல்லையா?” என்பாராம். (உண்மையில் நான் அப்படிப்பட்ட கார் எண்ணை அமெரிக்காவில் சமீபத்தில் பார்த்தேன். அது ஞாபகம் வந்ததால் ஏதோ எண்ணுக்குப் பதிலாக அதை இங்கு எழுதினேன். அது இருக்கட்டும்.) அவர் வேடிக்கையாகச் சொல்வதும் உண்மைதான். ஆனால் அந்த எண் நான் போகும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமயங்களில் கண்ணில் தென்பட்டது என்றால் அவர் என்ன சொல்வார்?

நம்மில் நம்புபவர்கள், நம்பாதவர்கள் என்று இரு வகைதான் உண்டு. நம்புபவர்களுக்கு இங்கு சொல்லியது போல நடந்ததைக் கேட்பதால் மேலும் நம்பிக்கை வளர்ந்து நல்லதே அமையும். ஒருவேளை அவர்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் நேரலாம். அப்படி நேராவிட்டாலும் பரவாயில்லை. நேரவேண்டும் என எதிர்பார்ப்பதும் தவறு. நேர்ந்தவர்கள் மற்றவரைவிட எதிலும் மிகத் தேர்ந்தவர்களும் அல்ல என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். எங்கு எப்படி  நடக்க வேண்டுமோ அங்கு  அப்படி நடக்கும் என்ற திடமான நம்பிக்கை வளர்ந்தால் போதும். நாம் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது செய்து கொண்டிருக்க வேண்டும்; அவ்வளவுதான். நம்பாதவர்களுக்கும் ஒரு காலம் வரும்; காய் கனிந்துவர வேண்டாமா? நாம்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறோமே: இறைவனே இல்லை என்றவர்கள், ஒருவனே தேவன் என்கிறார்கள், ஏழையில் காண்போம் என்கிறார்கள். மற்றும் “ஓம் சூர்யாய நமஹ:” என்பதற்கு “ஞாயிறு போற்றுதும்” என்கிறார்கள் அல்லவா, அது போலத்தான்.

(தொடரும்)

One Reply to “இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 2”

  1. நன்றி
    இதேபோல் நிகழ்வுகள் நிறைய பேருக்கு வருவதுண்டு, ஆனால் நிறய பேருக்கு மறதியால் நிகழ்வுகளை நினைத்து, சேர்த்து பார்க்க தெரிவிடில்லை.
    நமக்கு ஞாபகம் ஏற்படித்து தருவதும் அந்த ஈஸ்வரனின் செயல அன்றி வேறு என்ன இருக்க முடியும்.
    ஓம் நமோ பகவதே ராமனாய நமஹா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *