இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1

ramana_and_lakshmi1993 -ம் வருடம் என்று நினைக்கிறேன். ஒரு முறை திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து திருவண்ணாமலை சென்றடைந்தேன்.

அப்போதெல்லாம் கிரி வலம் செல்வதற்கோ, ரமண ஆஸ்ரமத்தில் தங்குவதற்கோ வரும் மக்கள் கூட்டம் இப்போது உள்ளது போல் அதிகமாக இல்லாததால் ஆஸ்ரமத்திற்கு கிட்டத்தட்ட எப்போது வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்று இருந்தது; இப்போதெல்லாம் அது சாத்தியமில்லை. அன்று நான் ரமணாஸ்ரமம் செல்லும்போது கிட்டத்தட்ட முன்னிரவு கடந்து விட்டது. ஏற்கெனவே சொல்லியிருந்ததால் ஆச்ரமவாசி ஒருவர் எனக்காக ஒரு அறையின் சாவியை வைத்துக்கொண்டு தாழ்வாரம் ஒன்றில் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரை எழுப்பி சாவியை எடுத்துக்கொண்டு எனது அறைக்குச் சென்றேன். நேரம் மிகவும் கடந்துவிட்டதால் தூக்கம் அவ்வளவாக வரவில்லை. மறுநாள் காலையே பஸ் பிடித்து சென்னை செல்ல வேண்டி இருந்தததால், சிறிது நேரம் படுக்கையில் படுத்து களைப்பாறிவிட்டு, சுமார் காலை 4-மணி வாக்கில் குளித்தேன். பொழுது விடியும் முன்னரே கிரி வலம் புறப்பட்டு விட்டேன்.

கிரி வலம் முடிந்ததும் நேராக காலை உணவு அருந்தும் இடத்துக்குச் சென்றுவிட்டேன். அன்று வெள்ளிக்கிழமை. அங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, சாதாரணமாக எப்போதும் திறக்கப்படாமல் இருக்கும் கதவைத் திறந்து கொண்டு ஆஸ்ரமத் தலைவரும், நாராயணன் என்னும் ஆஸ்ரம அணுக்கத் தொண்டர் ஒருவரும் வெளியே சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். எனக்குத் தெரிந்து அந்தக் கதவு விசேஷ காலங்களில் திறக்கப்பட்டு சாப்பிட்ட இலைகளை எடுத்துக்கொண்டு போவதைத்தான் பார்த்திருக்கிறேன். அன்றோ கூட்டம் ஏதுமில்லை, விசேஷமும் இல்லை. அப்படியும் சாப்பாடு நடந்து கொண்டிருக்கும்போதே சாதாரணமாக திறக்கப்படாத கதவை எதற்குத் திறந்தார்கள், தலைவரும் எதற்காகப் போனார் என்ற யோசனை வந்தாலும், சாப்பிட்ட பின் நான் கை கழுவப் போய்விட்டேன்; எனக்குத்தான் சென்னை திரும்பும் அவசரமும் இருந்ததே. ஆனாலும் கை கழுவும்போது என் பார்வை எதேச்சையாக சற்று தூரத்தே சென்றது. நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பார்த்த அவ்விருவரும் ஆஸ்ரமத்தில் அப்போது கோசாலையில் இருக்கும் பசுக்கள் எல்லாவற்றுக்கும் முதன்மையாகக் கருதப்படும் லக்ஷ்மி எனும் பசுவின் சமாதி அருகே நின்று கொண்டிருந்தனர்.

அங்கு ஏதேனும் பூஜையாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே, ஆஸ்ரமத்திலிருந்து புறப்படுவதற்கு ஏதுவாக பகவான் சந்நிதி இருக்கும் அறையை நோக்கிச் சென்றேன். வழியில் இடது புறம் இருக்கும் கிணற்றைத்தாண்டி அறைக்குள் நுழையும்போது, எதிர்ப்புறம் சுவற்றில் உள்ள ஒரு பெரிய பகவான் ரமணர் படத்தைப் பார்க்க நேர்ந்தது. சமீப காலமாக அந்த புகைப்படம் அந்த இடத்தில் இல்லை. பகவான் என்னைப் பார்த்து “வந்த வேலை முடியவில்லை போலிருக்கிறதே” என்ற ஒரு கேள்விக் குறியுடன் பார்ப்பதுபோல் எனக்கு நொடிப் பொழுதில் தோன்றிற்று. என்ன என்று புரியாவிட்டாலும் என்னை வந்த வழியே திரும்பிப் போகச் சொல்வது போல் என்னுள் தோன்றியது. ஏற்கனவே ஆஸ்ரமத் தலைவரின் செய்கையைக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு மேலும் போக விரும்பாது வந்த வழியே திரும்பி லக்ஷ்மி சமாதி அருகே சென்றேன். அங்கு சென்று என்ன விசேஷம் என்று ஒருவரை வினவினேன். அவரும் “இன்று வெள்ளிக்கிழமையல்லவா, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லக்ஷ்மிக்குப் பூஜை செய்வதுண்டு, அதுதான் நடக்கிறது” என்றார். நான் “அப்படியா, இன்று லக்ஷ்மிக்கு வேறு ஏதோ விசேஷம் என்று நினைத்தேன்” என்றேன். எங்கள் இருவரது பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த நாராயணன், “இன்று துவாதசி நாள். ஆனி மாதம், வளர்பிறை வேறே. அடாடா, இன்று லக்ஷ்மியோட விமுக்த நாளாயிற்றே. மறந்துவிட்டோமோ?” என்று சொல்லிக் கொண்டே, அருகே இருந்த சந்திரமௌலி என்ற இன்னொரு அணுக்கத் தொண்டரைப் பார்த்து, “ஆபீசுக்குப் போய் பஞ்சாங்கத்தைப் பார்” என்று சொன்னார்.

(இங்கு உங்களுடன் ஒரு விஷயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையை எழுதும்போது, எனக்கு ரமணர் லக்ஷ்மி சமாதியில் எழுதி வைத்துள்ள இரங்கற்பா எந்த வரியும் சுத்தமாக ஞாபகத்திற்கு வரவில்லை. ஏனென்றால் அதை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் படித்ததுதான். நடுவில் எப்போதாவது எங்காவது படித்திருக்கலாம், சில நாட்களுக்கு முன் ஆஸ்ரமத் தலைவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொன்னபோது அவரும் அந்த பாடலைச் சொல்லிக் கேட்டதுதான். அதற்கு மேல் ஏதும் ஞாபகம் இல்லை. ஆதலால் என்னிடம் இருந்த புத்தகங்கள் பலவற்றைத் தேடி பார்த்தும், வலைத்தளம் சென்று பார்த்தும் எனக்கு அதன் விவரங்கள் உடனே கிடைக்கவில்லை. சரி தொடர்ந்து எழுதுவோம், அப்புறம் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று மனதில் தோன்றிய விவரங்களை மேலே நீங்கள் காண்பது போல் எழுதிவிட்டேன். சில மணி நேரங்கள் கழிந்தபின் வலைத்தளம் சென்று பார்க்கும் போது, விவரங்கள் எல்லாம் நான் குறிப்பிட்டபடி அப்படியே இருந்தது எனக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்.)

ramana_and_lakshmi2அங்கிருந்த மற்றவர்களுக்கும் அந்தத் திதி ஞாபகம் வரவே, மௌலியும் ஆபீசுக்கு விரைந்து செல்ல நானும் அவருடன் புறப்பட்டேன். “நல்ல வேளை, இன்று கவனக் குறைவாய் இருந்து விட்டோம் போலிருக்கிறது. உடனே நோட்டீஸ் ஒன்று டைப் செய்ய வேண்டும், நீங்களும் மதிய உணவுக்கு இருப்பீர்கள் அல்லவா?” என்றார். அம்மாதிரி நாட்களில் எல்லாம் விசேஷ பூஜை செய்துவிட்டு வடை, பாயசத்துடன் மதிய உணவும் பலமாக இருக்கும். “இல்லை, எனக்கு சென்னை செல்லவேண்டிய நிர்பந்தம்” என்று சொல்லிக் கொண்டே பகவான் என்னை அன்று ஒரு கருவியாக உபயோகப்படுத்திக் கொண்டதற்கு உள்ளத்தில் நன்றி சொல்லிக் கொண்டே சென்னைக்குப் புறப்பட்டேன்.

ரமணரிடம் முதன்முறையாக வந்த லக்ஷ்மி பசு, அவரது நான்கு ஜெயந்தி தினத்தன்று நான்கு கன்றுகளைப் பெற்றுக் கொடுத்ததும் அல்லாமல் மேலும் கன்றுகளை ஈன்றது. அது மட்டுமன்றி தனது கடைசி மூச்சு விடும் தருணத்திற்கு சிறிது நேரம் வரை அவரது மடியில் தலை வைத்துப் படுத்திருந்து அவரது தயவால் விதேக முக்தியும் அடைந்தது. அன்பர் ஒருவர் கேட்கும்போது ரமணரே அதை உறுதிப் படுத்தினார்; தனது இரங்கல் செய்யுளிலும் “விமுக்தி நாள்” என்றே குறிப்பிட்டார். அந்தச் செய்யுளே லக்ஷ்மியின் சமாதியில் பொறிக்கப்பட்டுள்ளது. லக்ஷ்மி பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் கீழ்கண்ட வலை தளத்தில் காணலாம்:

https://www.sriramanamaharshi.org/pdf/Saranagathi_eNewsletter_July_2008.pdf

முன்பு ஒருமுறை எனது முதல் கிரி வலத்திற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறினேன். இப்போது கிரி வலத்திற்கு பின் நடந்த நிகழ்ச்சியை விவரித்தேன். இன்னொரு கட்டுரையில் கிரி வலம் நடக்கும்போதும், பின் அதன் தொடர்பான நிகழ்ச்சிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

இது போன்ற சில அனுபவங்கள் வரும்போதும் நாம் பெறுவது இறை அனுபவம்தான். இவை எவையுமே ஒருவரை முன் நிறுத்தி வருவதில்லை. ஆதலால் இவை எவருக்கு வருகிறது என்பதும் முக்கியமில்லை. இப்படியாக நடப்பதிலிருந்து நாம் அனைவரும் நமது குறுகிய எண்ணங்களையும், மனப் பான்மையையும் விட்டுவிட்டு இறைவன் நம்மைத் தேடி வரும் நிலையை நாம் அடையும்படி நாம் வளர வேண்டும் என்பதே முக்கியம். இப்பேர்பட்ட நிகழ்ச்ச்சிகளைக் கேட்டறிவதால் எந்த பக்தனும் மனம் தளராது மேலும் தனது சாதனைகளைத் தீவிரப்படுத்தினால் அது அவருக்கு நன்மையே பயக்கும். ஆதலால் இது போன்ற நிகழ்வுகள் எப்படி ஆரம்பித்தது என்று என் நினைவுக்குத் தெரிந்தவரை கொடுக்க முயல்கிறேன். அதே போல் அவ்வப்போது திருவண்ணாமலை ஆன்மீக வாசிகளின் எழுத்துக்களையும், நான் அவ்வப்போது வாசிக்கும் புத்தகங்களின் சில பகுதிகளையும் இத்தள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

4 Replies to “இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 1”

  1. Thiru Raman
    I like the article very much as it strengthens my belief that some incidents happen with a reason.When we keep our inner ear open, we certainly can hear the inner voice.Please keep sharing more on Shri Maharishi as it would be an eye opener for many .
    Thankyou
    Saravanan

  2. கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. தாங்கள் கொடுத்த நிரலில் உள்ள கடிதத் தொகுப்பைப் படித்தேன். பகவான் லக்ஷ்மியைத் தனது தாயாகப் பாவித்து அவரருகில் இருந்து கழுத்தை நீவிக் கொடுத்தததைக் கடிதத்தில் விவரித்திருக்கும் விதம் சொல்லவொண்ணாத உணர்வுகளை எழுப்பியது.

    பகவான் தன்னுடன் இருந்த பசு, வெண்மயில், நாய், காக்கை முதலானவற்றில் பிரம்மனைக் கண்டவிதம் புரிந்துகொண்டால் அத்வைதத்தின் சிறப்பை உணரலாம்.

  3. வாழ்க வளமுடன்

    உணர்வு பூர்வமான பதிவு இறைவனை உணர மட்டுமே முடியும்

    நன்றி

    வாழ்க வளமுடன்

    நடேசன்
    அமீரகம்

  4. மேலும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கு,சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *