அகமதாபாதில் ஒரு நாள்

ஒரு கிணறு அதிகபட்சம் எவ்வளவு அழகாகவும்,கலைநயமிக்கதாகவும் இருக்கமுடியும்? இது பற்றிய கற்பனைகளை எல்லாம் விஞ்சுவதாக இருந்தது அகமதாபாத் நகரின் ஒரு ஓரத்தில் உள்ள ”தாதா ஹரீர் வாவ்” (Dada Harir Vav), அதாவது தாதா ஹரீரின் கிணறு.

நுழைவாயிலில் இருந்து பார்த்தால் ஒரு நீண்ட கல்மண்டபத்தின் கூரை போன்று தோற்றம்.

dada-hari-vav-entrance-view

படிகள் இறங்கி உள்ளே செல்லச் செல்ல அடுக்கடுக்காகவும், ஒன்றுக்குள் ஒன்றாகவும் காட்சியளிக்கும் மண்டபங்கள். அந்த மண்டபங்களுக்கிடையே திறந்த வெளிகள்.ஒளியும் இருளும் கலந்து விளையாடும் விளையாட்டுக்கள். படிகளைத் தாங்கும் மண்டபச் சுவர்களில் கோயில் கோஷ்டங்கள் போன்று அலங்கார மாடங்கள்.

dada-hari-vav-entrance-view

கீழே செல்லச் செல்ல படிகள் பாசி படர்ந்திருக்கின்றன.ஒரு அலாதியான குளுமை கால்கள் வழியாக மேலேறி உடல் முழுவதையும் ஆட்கொள்ளுகிறது. மழைக்காட்டுப் பிரதேசங்களில் நடக்கையில் சருகுகளிலிருந்து எழும் அந்த நீர்மணம் லேசாக எழுகிறது. எந்தக் கடுங்கோடை நாளிலும் இந்த இடம் சில்லென்று இருக்கும் என்கிறார் கூட வந்த ஆட்டோக் காரர். ஏதோ ஒரு மர்மப் பிரதேசத்திற்குள் நுழைகிறோம் என்ற பிரமையுடன் ஐந்தாறு தளங்கள் கீழிறங்கி அடித்தளத்தை அடைந்தால் கடைசித் தட்டுப் படிகளுக்குப் பின் சிறிய சதுரவடிவக் கிணறு!

dada-hari-vav-entrance-view

அங்கிருந்து பார்த்த வட்ட வடிவ வானத் துண்டு அழகாக இருந்தது.

dada-hari-vav-entrance-view

இத்தகைய படிக்கட்டுக் கிணறுகள் குஜராத்தின் தனித்துவம் மிக்க ஒரு அம்சம்.நெடும் கோடை மாதங்களிலும் இடையூறின்றி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மழைக்காலங்களில் நீரைத் தேக்குவதற்காக உருவாக்கப் பட்ட அமைப்புக்கள் இவை. குஜராத்தில் பல இடங்களில் இது போன்று 500-600 வருடங்கள் பழமையான கிணறுகள் உள்ளன.இத்தகைய நீர்மேலாண்மைத் தொழில்நுட்பம் மிகப் பழங்காலத்தில் இருந்தே இந்தப் பகுதியில் உருவாகி வளர்ந்து வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.சிந்துவெளி நாகரீக காலத்திலேயே இருந்த “பெரிய குளம்” பற்றி வரலாற்றில் படிக்கிறோம்.சிந்து சமவெளி நாகரீக அகழ்வாராய்ச்சி இடமான “லோதல்” அகமாதாபாத்திலிருந்து 80 கிமீ. தொலைவில் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்தக் குறிப்பிட்ட கிணறு 1501ல் சுல்தான் பாயி ஹரீர் என்ற மன்னரின் அந்தப்புர நாயகிகளில் ஒருவரால் மன்னர் நினைவாக உருவாக்கப் பட்டிருக்கிறது.கிணறு தொடர்ந்து இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இருமதத்தவர்களாலும் பொதுச்சொத்தாக பேணப் பட்டு, பயன்படுத்தப் பட்டு வந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. “ஊருணி நீர் நிறைந்தற்றே, உலகவாம்” என்று திருக்குறள் சொல்வதற்கு ஒரு பிரத்யட்ச உதாரணம். படிக்கட்டுச் சுவர்களில் அராபிய,பாரசீக,சம்ஸ்கிருத மொழிக் கல்வெட்டுகள் இணைந்து காணப் படுகின்றன. ஒரு காலத்தில் அகமாபாத் நகரம் முழுவதற்கும் இத்தகைய கிணறுகளே நீராதாராமாக இருந்தனவாம்.

இந்தியாவில் பெய்யும் மழையில் 90 சதவீதம் சேமிக்கப் படாமல் வீணாகிக் கடலுக்குத் தான் போகிறது, இதில் இன்னும் ஒரு 5 சதவீதத்தை நாம் சேமிக்க முடிந்தால் கூட இந்தியாவின் தண்ணீர்ப் பஞ்சம் பெருமளவில் தீர்ந்து விடும் என்று சமீபத்தில் எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் படித்தேன். (அதைச் சொல்லியிருந்தவர் தண்ணீர் வியாபாரத்தில் முதல் இடத்தில் இருக்கும் பிஸ்லேரி கம்பெனியின் தலைவர் சோக்ஸி. அவரது சமூக அக்கறைக்கு ஒரு சபாஷ்!) பழைய காலத்திலேயே, வறண்ட பகுதிகளிலும் இத்தகைய கிணறுகளைக் கட்டிப் பராமரித்த நமது பாரம்பரிய நீர்மேலாண்மையை எண்ணிப் பெருமிதம் ஏற்பட்டது.

dada-hari-vav-entrance-view

********

குஜராத்தின் அதிகாரபூர்வ தலைநகர் இங்கிருந்து 20 கிமீ. தொலைவில் உள்ள காந்தி நகர்.ஆனால் மாநிலத்தின் பெரிய நகரம் அகமதாபாத் தான். பொ.பி 10ம் நூற்றாண்டில் கர்ண சோலங்கி என்ற சோலங்கி வம்ச மன்னரால் கர்ணாவதி என்ற பெயரில் இந்தப் புராதன நகரம் தோற்றுவிக்கப் பட்டது. பின்னர் கஜினி முகமதுவின் சோமநாதபுர படையெடுப்பைத் தொடர்ந்து 14ம் நூற்றாண்டு முதல் குஜராத் முற்றிலுமாக முஸ்லிம் மன்னர்கள் ஆளுகையின் கீழ் வந்தது. அகமது ஷாவின் ஆட்சியில் நகரம் அகமதாபாத் என்று பெயர்பெற்றது. 18-ம் நூற்றாண்டில் மராட்டியர்கள் இந்த நகரைக் கைப்பற்றி ஆண்டனர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நவீன நகரமாக உருமாறியது. தொடக்க காலம் முதலே சிறந்த வியாபார மையமாக இருந்து வந்த இந்த நகரம், பல்வேறு தொழில்களுக்காகவும், குறிப்பாக ஆடை உற்பத்திற்காக, பெரும் புகழ் பெற்றிருந்தது. அது இன்றுவரை தொடர்கிறது.அதுவும் கடந்த சில ஆண்டுகளில் நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் கல்வி, விவசாயம், தொழில்வளர்ச்சி என்று அனைத்துத் துறைகளிலும் பெருவளர்ச்சி கண்டு வருகிறது.அகமதாமாதின் அகன்ற சாலைகளும், பாலங்களுமே அதற்குக் கட்டியம் கூறுவது போன்று இருந்தன.

நகரின் புதிய பகுதிகளில் மிதமான புகை, இரைச்சலுடன் வாகனங்கள் செல்லும் அகன்ற சாலைகள் பெங்களூர்வாசியான எனக்கு மிகவும் ஆறுதலை அளித்தன.சிறிய நகரமாயினும், பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறியிருக்கும் ஊர் இது. பரந்த கடைவீதிகள் தவிர, மால்களில் மால்கொண்டு நிற்கும் மக்கள் கூட்டங்களையும் காணமுடிந்தது. Naveli என்ற ஒரு நேர்த்தியான உணவகத்தில் (சாடிலைட் சாலை பகுதியில் உள்ளது) மிகச் சுவையான குஜராத்தி உணவு அளவான விலையில் சாப்பிட முடிந்தது. வாடிக்கையாளர்களுக்கு இலவச wi-fi இனைப்பு தரும் இந்த உணவகத்தில் பேப்பர் மெனு கிடையாது, அதற்குப் பதிலாக கணினியுடன் இணைக்கப் பட்ட தொடுதிரையில் (touch-screen) தான் மெனு! இதனை நான் பெங்களூரில் கூட பார்த்ததில்லை; அசந்து போனேன். இன்னொரு உணவத்தில் (The Village restaurant @ Himalaya Mall) இரவு ஏழு மணிக்குச் சென்று டின்னர் பஃபேக்காக ஒரு டோக்கன் வாங்கி உள்ளே போனதுமும் இடது புறங்கையைக் காட்டச் சொல்லி முத்திரை குத்தினார் ஒருவர். நான் ஒன்றும் புரியாமல் விழிக்க, 11 மணி வரை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து சாப்பிட்டுப் போகலாம், நடுவில் ஷாப்பிங் கூட போய்விட்டு வரலாம் என்றார். உள்ளே நுழைந்து பார்த்தால் தான் அவர் சொல்வதன் முழு அர்த்தம் புரிந்தது. பானி பூரி, சாட் உணவுகள் தொடங்கி வகைவகையான பஞ்சாபி,ராஜஸ்தானி,குஜராத்தி பதார்த்தங்கள்; குல்பி,ஜிலேபி,ரஸ்மலாய் இனிப்பு வகைகள் வரை அங்கு அலங்கரிக்கப் பட்ட பந்தல் போன்ற கூடங்களின் கீழ் இருந்தது. ஒரு மாபெரும் மார்வாரி திருமணத்திற்கு வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. ’இது உணவகம் அல்ல, ஒரு அனுபவம்’ என்று அங்கிருந்த விளம்பர போர்டு சொன்னது முற்றிலும் உண்மை!

பழைய பகுதிகள் அவற்றிற்கே உரிய வசீகரமும், நெரிசலும், புழுதியும் கொண்டு விளங்கின. இங்கே எங்கு போனாலும் வரலாறு துரத்திக் கொண்டே இருக்கிறது. 3-4 சதுர கி.மீ சுற்றளவே உள்ள பழைய நகரில் ”தர்வாஜா” எனப்படும் இஸ்லாமிய பாணி கம்பீரமான நுழைவாயில்கள் மொத்தம் 12 இருக்கின்றன. இதைத் தவிர பல பழைய கட்டிடங்கள், கோயில்கள், மசூதிகள். walled city என்று கிலோமீட்டர்களுக்கு கோட்டைச் சுவர் பயமுறுத்துகிறது.

swami-narayan-temple-view

அன்று காலை முதலில் சென்றது காலுபுர் பகுதியில் உள்ள சுவாமி நாராயண் ஆலயத்திற்கு. சுவாமி நாராயண் சம்பிரதாயம் குஜராத்தின் முக்கியமான வைணவ சமயப் பிரிவாகும்.இன்று லண்டன் முதல் தில்லி வரை உலகின் பல நகரங்களில் “அக்‌ஷர் தாம்” எனப்படும் கலைநயமிக்க,பிரம்மாண்டமான சுவாமி நாராயண் கோயில்கள் பிரபலமாக உள்ளன. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், மகான் சுவாமி நாராயண் அவர்கள் (1781 – 1830) தானே பிரதிஷ்டை செய்து 1822ல் உருவாக்கிய உலகின் முதல் சுவாமி நாராயண் கோயில் இதுதான்!

swami_narayanஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிலைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் அயோத்திக்கு அருகே உள்ள ஒரு சிற்றூரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ஸ்வாமி நாராயணன், தன் இளவயதில் நீலகண்ட வர்ணி என்ற பெயரில் ஏழு வருடங்கள் பாரதம் முழுவதும் அலைந்து திரிந்து இறுதியில் குஜராத் வந்து தனது குருவைத் தேடிக் கண்டடைந்தார். சகஜானந்தர் என்று துறவுத் திருநாமம் பூண்டார். பல்வேறு தரப்பு மக்களிடையேயும் எளிய பக்தி, புகை-போதைப் பொருள்களை முற்றிலும் தவிர்த்தல், தூய சைவ உணவு, ஒழுக்கமான வாழ்வு, ஏழைகளுக்கு அன்னமளித்தல், பெண்களை மரியாதையுடனும்,கௌரவத்துடனும் நடத்துதல், சமூகத்தில் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகிய கொள்கைகளை வலியுறுத்தி வைஷ்ணவ பக்தி மார்க்கத்தைப் பிரசாரம் செய்தார். தன் வாழ்நாளில் நர-நாராயண அவதாரமாகப் போற்றப் பட்டார்.அவரது சீடர்களில் முஸ்லிம்களும், பார்சிகளும் கூட இருந்தனர்; பிரிட்டிஷாரும் அவருக்கு மதிப்பளித்தனர். இன்று லட்சக் கணக்கானோர் அவரது பக்தர்களாக உள்ளனர். சுவாமி நாராயண் சமயப் பிரிவைச் சேர்ந்த குஜராத்திகளில் பலரும் மிகப் பெரும் செல்வந்தர்களாகவும், உலக அளவில் பெரும் தொழிலதிபர்களாகவும், பல்துறை விற்பன்னர்களாகவும் உள்ளனர். அதோடு, தங்கள் சமயப் பாரம்பரியத்தைப் பெருமிதத்துடன் கட்டிக் காப்பதிலும் மிகவும் முனைப்பாக உள்ளனர். ஒழுக்க நெறிகளுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவமே தொழில், வணிகம் ஆகிய துறைகளில் அவர்கள் பெரிதும் முன்னேறுவதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

swami-narayan-temple-view
(புகைப்படம் – நன்றி: விக்கிபீடியா)

காலுபுர் சுவாமி நாராயண் கோயில் வண்ணமயமான மரவேலைப் பாடுகளுடன் கூடிய அழகிய கோயில். கூம்பு வடிவ (நாகர பாணி) விமானங்களும், குருத்வாராக்களில் உள்ளது போன்ற கும்மட்டங்களும் இணைத்துக் கட்டப் பட்டிருக்கிறது. ராதா கிருஷ்ணர், சியாமள கிருஷ்ணன், நரநாராயணர்கள், ஸ்வாமி நாராயண் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.பளபளக்கும் அலங்காரங்கள் கொண்ட திருவுருவங்கள்.

மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே

என்ற ஆழ்வார் பாடலுக்கேற்ப என்றும் திகட்டாத இனிப்பான சியாமள கிருஷ்ணனுக்கு சாக்லேட்டுகளாலேயே அலங்காரம் செய்திருந்தார்கள்!

swami-narayan-temple-view

இக்கோயிலில் ஸ்வாமி நாராயண் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் பழமையான சித்திரங்கள் உள்ளன – குஜராத்திய பாணி பாரம்பரிய கோட்டோவியங்கள், ஐரோப்பிய பாணி கலந்த ஆயில் ஓவியங்கள் என்று பலவகை. எல்லாவற்றிலும் ஸ்வாமி நாராயண் ஒரு பெரிய மகாராஜாவாகவே தோற்றமளிக்கிறார்.

swami-narayan-temple-view

தர்பாரில் அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, வாளும், துப்பாக்கியும் ஏந்திய வீரர்கள் சுற்றி நின்று பாதுகாக்க, இருமருங்கிலும் காவியுடை சீடர்களும், இசைக்கருவிகளைக் கொண்டு பஜனை பாடும் கலைஞர்களும் சூழ அமர்ந்திருக்கிறார்கள். சில ஓவியங்களில் ஒரு ஏவலர் குடைபிடிக்க கம்பீரமாகக் குதிரையில் உட்கார்ந்து சவாரியும் செய்கிறார்!

கோயிலிலிருந்து எழுந்த பஜனை ஒலிகளையும், தூபதீப நறுமணங்களையும் காற்றில் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் சவாரி செய்து நான் ஜூமா மசூதி சென்றடைந்தேன். அகமதாபாத் பழைய நகரத்தில் பல பழமையான மசூதிகள் உள்ளன – சையத் சித்திகி மசூதி, ராணி ரூபமதி மசூதி (சுல்தானின் இந்து மனைவி கட்டியது), Jhulta Minar என்கிற ஊஞ்சலாடும் மினார் மசூதி (இங்குள்ள மினார் என்ற தூண்வடிவ கோபுரங்கள் காற்றில் லேசாக அசையுமாம்!)… அவற்றில் “கீழைத் தேசங்களிலேயே மிகவும் அழகான மசூதி” என்று யாத்ரிகர்களால் ஒரு காலத்தில் புகழப் பட்டது ஜூமா மசூதி.1423ம் ஆண்டு சுல்தான் அகமது ஷா இதைக் கட்டியிருக்கிறார்.

juma-masjid-ahmedabad-view

மசூதிக்கு முன்னால் மையத்தில் குளம் போன்ற அமைப்பு கொண்ட மிகப் பரந்த மைதானம் மசூதியின் பொலிவை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது. மைதானத்தைச் சுற்றிலும் தூண்கள் கொண்ட வராண்டாக்கள். மசூதியின் இருபுறமும் இருந்த பிரம்மாண்டமான மினார்கள் 18ம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஒரு பூகம்பத்தில் சரிந்து விழுந்துவிட்டனவாம்.

juma-masjid-ahmedabad-view

பெரும்பாலும் வெண்சலவைக் கற்களாலேயே கட்டப் பட்ட மசூதிகளைப் பார்த்துப் பழகிருப்பதால், முற்றிலும் கருங்கல் மற்றும் மஞ்சள் கற்களால் (yellow stone) கட்டப்பட்ட இந்த மசூதி முதல் பார்வையில் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறது. மூன்று அலங்கார வளைவுகள் கொண்ட பிரம்மாண்டமான நுழைவாயில்.

juma-masjid-ahmedabad-view
(புகைப்படம் – நன்றி: விக்கிபீடியா)

நுழைவாயிலில் பூங்கொத்துக்கள், தோரணங்கள் போன்று மிக நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகள். இந்து சிற்பக் கலையின் அம்சங்களையும் கலந்து இந்தோ-சார்சானிய (Indo-sarcenic) கட்டிடக் கலைப் படி கட்டப் பட்ட மசூதி என்று பயணியர் கையேட்டில் விளக்கமும் இருந்தது.

juma-masjid-ahmedabad-view

மசூதிக்கு உள்ளே விசாலமான இடம். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தது போல் இருக்கிறது. அந்த வளாகம் முழுதும் அழகிய, நீண்ட தூண்கள் சீராக நிற்கின்றன. ஒரு வரிசையில் ஒரே வண்ணத்தில் தொழுகைக்கான பாய்கள் விரிக்கப் பட்டிருப்பது மிக அழகாக இருக்கிறது.

juma-masjid-ahmedabad-inside-pillars1

மேலே அற்புதமான சிற்ப வேலைப் பாடுகள் கொண்ட அடுக்குகளால் ஆன உப்பரிகைகள். மேற்கூரையில் மலர்கள் மற்றும் தாமரை மொட்டுக்கள் போன்ற சிற்ப வேலைப்பாடுகள் பேலூர், ஹளேபீடு கோயில்களை நினைவுபடுத்துகின்றன. மொத்தம் 260 தூண்கள், 15 கும்மட்டங்கள் (domes) என்று கையேடு தெரிவிக்கிறது.

juma-masjid-ahmedabad-view

மசூதியின் பிரதான சுவரில் வேலைப் பாடுகள் அமைந்த பிரபை போன்ற அமைப்புகள். அவற்றுக்குள் மயில்பீலிக் கற்றைகளை அலங்காரமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அது எதற்காக என்று முதலில் புரியவில்லை. திரும்பி வரும்போது வெளிமுற்றத்தில் ஒருவர் மயில்பீலித் துடைப்பத்தை வைத்துப் பெருக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அன்று சனிக்கிழமை. அவ்வளவு பெரிய மசூதிக்குள் மூன்று நான்கு சுற்றுலாப் பயணிகளைத் தவிர யாருமே இல்லை.அதனால் ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.அப்படியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து அந்த ஆழ்ந்த அமைதியை சிறிது நேரம் அனுபவிக்க முயன்றேன். இருந்தாலும் மனம் நிலை கொள்ளவில்லை. அங்கிருந்து கிணற்றைப் பார்க்கக் கிளம்பினேன்.

**********

நகரில் மையமாக ஓடுகிறது சபர்மதி நதி. இதன் குறுக்காக ஆறு பாலங்கள் உள்ளன. நகரில் பயணம் செய்யும்போது நதியும் பாலமும் சேர்ந்த காட்சி பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது.இதன் மேற்குக் கரையில் தான் புகழ்பெற்ற சபர்மதி ஆசிரமம் உள்ளது. உள்ளூரில் ‘காந்தி ஆஷ்ரம்’ என்று அழைக்கிறார்கள்.

ஆசிரமத்துக்குள் நுழைந்ததும் அது எனக்கு மிகவும் பழக்கமான ஒரு இடம் போல உணர்ந்தேன்.அதன் இயல்பான எளிமை ஒரு காரணம். காந்திய நூல்களில் பலமுறை இந்த ஆசிரமத்தைப் பற்றிப் படித்து மனதில் படிந்து விட்டிருந்தது இன்னொரு காரணம்.

sabarmati-ashram-view

முதலில் அகமதாபாதில் கோச்ரப் என்ற இடத்தில் தான் காந்திஜி தனது ஆசிரமத்தைத் தொடங்கினார். பிறகு சபர்மதிக் கரைக்கு ஆசிரமம் மாறியது. கிராமிய வாழ்வு, பசு வளர்ப்பு, இராட்டையில் நூல் நூற்றல், பெரிய அளவில் தொண்டர்களுக்குப் பயிற்சியளித்தல் போன்ற செயல்பாடுகளுக்கு பெரிய இடம் தேவைப்பட்டது. அதோடு ததீசி முனிவர் தேவர்களுக்காக தனது முதுகெலும்பைத் தானம் செய்த இடம் என்ற உள்ளூர் ஸ்தலபுராணத்தை தியாகத்தின் குறியீடாக காந்திஜி எண்ணினார்.அதை விட முக்கியமாக இன்னொரு காரணம் இருந்தது. இந்த இடத்திற்கு ஒருபுறம் சிறைச்சாலையும், மறுபுறம் மயானபூமியும் இருந்தன. ஒரு சத்யாகிரகி தன் வாழ்நாளில் கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டும் என்று காந்தி கருதினாராம். சரிதான்! “செய், அல்லது செத்து மடி” என்பதல்லவோ அவரது உபதேசம்.

sabarmati-ashram-view

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகளின் கேந்திரமாக இந்த ஆசிரமம் இருந்திருக்கிறது.ஏராளமான சமூகத் தொண்டர்கள்,அரசியல் தலைவர்கள்,பிரமுகர்கள் இந்த ஆசிரமத்திற்கு வந்து எளிய மக்களோடு ஒன்றுகலந்து காந்தியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அகமதாமாத் மில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி ஆலை முதலாளிக்கெதிராக நடத்திய போராட்டம் இங்கு தான் பிறந்தது. பனியா காந்தி தான் அதற்கு வழிகாட்டினார்.இங்கிருந்து தான் உப்புச் சத்தியாக்கிரத்தின் போது தண்டி யாத்திரை தொடங்கியது. பின்னர் ஆசிரமத்தின் சொத்துக்களை எல்லாம் பிரிட்டிஷ் அரசு பறிமுதல் செய்தது.சத்யாகிரக போராட்டத்திற்குப் பின்னர் திரும்பக் கிடைத்ததும், அரசியல் செயல்பாடுகளுக்காக அல்லாமல் முற்றிலும் ஹரிஜன சேவைக்காக மட்டுமே இந்த ஆசிரமம் பயன்படுத்தப் படவேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது.

சுதந்திரத்திற்குப் பின் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக சபர்மதி ஆசிரமம் அறிவிக்கப் பட்டது. இப்போது சபர்மதி ஆசிரம டிரஸ்ட் இந்த இடத்தை நிர்வகித்து மிக நேர்த்தியாகவும், அழகாகவும் பராமரித்து வருவது கண்டு சந்தோஷமாக இருந்தது.இந்தியாவில் ஒருசில வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்காவது இப்படி ஒரு பாக்கியம் கிடைத்திருக்கிறது.

sabarmati-ashram-view
ஆசிரமத்துக்குள் காந்தியும், கஸ்தூரிபாவும் வசித்த வீடு

காந்தியின் வாழ்க்கை சம்பவங்களை விளக்கும் படங்கள், புகைப்படங்கள்,ஆவணங்கள் அடங்கிய மூன்று காட்சியகங்கள் உள்ளன. மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி ஒரு மகாத்மா ஆக பரிணமித்தார் என்பதை சிறப்பாக விளக்குமுகமாக அவை உள்ளன. கேள்வி பதில் அடிப்படையில் காந்தியின் வாழ்க்கை மற்றும் கொள்கைகளை விளக்கும் காட்சியகம் மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது.

”ஏகாதச வ்ரத்’ என்று அழைக்கப் படும் காந்தியின் பதினொரு விரதங்கள் (நெறிகள்) மையமாகக் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன:

அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம் (திருடாமை),
பிரமசரியம், அஸங்க்ரஹம் (சொத்து சேர்த்து வைக்காமை),
சரீர-ஸ்ரமம் (உடல் உழைப்பு), அஸ்வாதம் (உணவில் ருசியைப் பொருட்படுத்தாமை)
ஸ்வதேசி, ஸ்பர்ச-பாவனா (தீண்டாமையை ஒழிப்பு)
வினம்ரதா (பணிவு), விரதநிஷ்டா (இந்த விரதங்கள் அனைத்தையும் கடைப்பிடிக்கும் உறுதி).

இதில் முதல் நான்கு நெறிகள் இந்துமத தர்மசாஸ்திரங்கள் எடுத்துரைத்தவை. பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் முதல்படி நிலையான யம-நியமம் என்பதில் அவை வருகின்றன. பின் உள்ளவற்றை காந்திஜி இணைத்திருக்கிறார். இந்த ஒவ்வொரு நெறியையும் ஆசிரமவாசிகள் ஒவ்வொருவரும் நடைமுறையில் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று காந்தி அறிவுறுத்தியிருக்கிறார். இதை மனதில் கொண்டு ஆசிரம விதிகள் பற்றிய விரிவான கையேடு ஒன்றையும் அவர் உருவாக்கினார்.

உடல் உழைப்பு பற்றிச் சொல்லவருகையில் ஆசிரம விதிகள் இப்படிப் போகின்றன –

“நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள, வளர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வேலைகள் அனைத்தையும் தாங்களே செய்து கொள்ளவேண்டும்.நியாயமான காரணங்கள் இருந்தால் ஒழிய, மற்றவர்கள் அவர்களுக்காகப் பணிவிடை செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது. அதே சமயம் குழந்தைகளையும், முதியவர்களையும், ஊனமுற்றவர்களையும், நோயுற்றவர்களையும் கவனித்துக் கொள்ளும் பணிகளை செய்வது சக்தியுள்ள ஒவ்வொருவருக்கும் கடமையாகிறது. இதனை மனதில் கொண்டு ஆசிரமத்தில் வேலைக்காரர்கள் என்று யாரையும் பணியமர்த்துவதில்லை. சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, அவர்கள் ஊதியத்திற்காகப் பணியமர்த்தப் பட்டாலும், அவர்களுடன் நடந்து கொள்ளும் முறை வேலை வாங்குபவர் – வேலை செய்பவர் என்ற அளவில் இருக்கக் கூடாது. அவரும் ஆசிரமவாசிகளில் ஒருவரே என்ற எண்ணத்துடன் பழக வேண்டும்.”

sabarmati-ashram-view

இதனை காந்தி தன்னளவில் செயல்படுத்தியும் காட்டினார். அவரது அன்றாடப் பணிகளில் பெருக்கித் துப்புரவு செய்வது, சமையல்,நூல் நூற்றல் எல்லாமே இருந்தது. இதை நேரில் கண்டு கார்ட்டூன்களாக ஆர்.கே.லக்ஷ்மண் வரைந்திருக்கிறார். அந்த அருமையான கார்ட்டூன்களும் காட்சியகத்தில் உள்ளன.

இன்றைக்கு காந்தியை விமர்சனம் செய்யும் சிலர் இந்தச் சின்ன சின்ன விஷயங்களில் அடம்பிடிப்பது காந்தியின் ஒருவிதமான stunt என்று கூறுகிறார்கள். அது தவறான கருத்து. இன்றைக்குக் கூட இந்திய சமூகத்தில் உடலுழைப்பை கேவலமாக, இழிவானதாக கருதும் நிலப்புரபுத்துவ கால மனநிலையை நாம் சாதாரணமாகப் பல இடங்களில் பார்க்க முடிகிறது. வீடு குப்பையாக இருந்தால் துடைப்பத்தை எடுத்துப் பெருக்கு என்று தன் மனைவியையோ, மகளையோ ஏவுபவர்களாகவே, இன்றும் நகர்ப்புறங்களில் வாழும் உயர்கல்வி கற்ற குடும்பத் தலைவர்கள் இருக்கிறார்கள். காந்தி போராடியது இந்த மனநிலையை எதிர்த்துத் தான். இன்றைக்கே இப்படி என்றால் அன்று அந்த சூழலில் தேசத்தின் மாபெரும் தலைவராகக் கருதப் பட்ட ஒருவர் தானே இத்தகைய வேலைகளை முன்வந்து செய்து வழிகாட்டியது எப்பேர்ப்பட்ட புரட்சிகரமான செயல்பாடு என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

sabarmati-ashram-view
ஆசிரமத்தில் கலப்புத் திருமணம் நடத்தி வைக்கும் காந்தி

சபர்மதி ஆசிரமம் பற்பல தேசிய, சமூக செயல்பாடுகளுக்கான பரிசோதனைக் கூடமாகவே விளங்கியிருக்கிறது. நூல் நூற்பதற்கு சிரமமாக இருந்த பழங்கால இராட்டையின் வடிவமைப்பில் பல்வேறு விதமான பரிசோதனைகள் ஆசிரமவாசிகளால் செய்யப்பட்டு அதன் டிசைன் அபாரமாக மேம்படுத்தப் பட்டது.இந்த இராட்டைகளின் மாதிரிகளை ஆசிரம அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள். சுதேசி தொழில்நுட்பம் இயல்பாகவே மலர்ந்து வளரும் என்பதற்கான சிறந்த உதாரணம் இது. கிராம அளவில் குடிநீர் வினியோகம், கழிப்பறைகள் கட்டுதல், அடிப்படை சுகாதாரம் என்று பல விஷயங்களில் ஒரு வழிகாட்டும் தலமாக சபர்மதி ஆசிரமம் இருந்தது. கழிப்பறைகள் பற்றிய அறிதல் கூட இன்றி பொது இடங்களை மக்கள் அசுத்தம் செய்து வந்த அவலம் பற்றி அக்காலத்திய கனவான்களான அரசியல் தலைவர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை. காந்தி மட்டுமே ஒரு நவீன சமூகத்தின் மலர்ச்சிக்கு, வளர்ச்சிக்குத் தேவையான இத்தகைய அடிப்படை விஷயங்களை ஒளிவு மறைவின்றியும், வெளிப்படையாகவும் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆசிரமத்தின் ஒரு பகுதியாக சபர்மதி நதிக்கு இட்டுச் செல்லும் படித்துறை உள்ளது.இந்த நதியிலும் கழிவுகள் கலக்கத் தொடங்கி சீர்கேடுகள் ஆரம்பித்துவிட்டன. உடனடியாக நகராட்சியினர் தலையிட்டு சீர்செய்ய வேண்டும் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

சபர்மதி ஆசிரம வாசத்தின் போது காந்தி எழுதிய நூல்கள், அறிக்கைகள், கடிதங்கள் ஆகியவற்றின் மூல பிரதிகள் இங்கு பாதுகாக்கப் பட்டு வருகின்றன.இவற்றை இன்று பார்க்கும்போது மலைப்பு ஏற்படுகிறது. துடிப்பான அரசியல், சமூக செயல்பாடுகளுக்கு மத்தியிலும் காந்தி ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார். யங் இந்தியா, ஹரிஜன் முதலான பத்திரிகளைத் தொடங்கி பல ஆண்டுகள் நடத்தியிருக்கிறார். அனேகமாக தனக்குக் கடிதம் எழுதிய ஒவ்வொருவருக்கும் அவர்களது கேள்விகளுக்கு விடையளித்து பதில் கடிதம் எழுதியிருக்கிறார். தொடர்ச்சியாக தேசத்துடன் அவர் உரையாடியபடியே இருந்தார்.ஆனால் அடிப்படையில் அவர் கர்மயோகி,வாய்ச்சொல் வீரர் அல்ல.

“எனது எழுத்துக்கள் என் உடலுடன் சேர்த்து தகனம் செய்யப் படட்டும். நான் என்ன செய்தேன் என்பது தான் நிற்கும், நான் என்ன சொன்னேன், எழுதினேன் என்பதல்ல.சத்தியம், அகிம்சை ஆகிய மகோன்னத லட்சியங்களை நீங்கள் உள்வாங்கிக் கொள்வதற்கு உதவும் என்ற வகையில் அந்த எழுத்துக்களுக்குப் பயன் இருக்கிறது. அவைகளை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளவில்லையானால், அந்த எனது எழுத்துக்களால் ஒரு உபயோகமும் இல்லை” (ஹரிஜன் 1-5-1937).

sabarmati-ashram-view

ஆசிரமத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையத்தில் காந்திய சிந்தனைகளை பல்வேறு தலைப்புகளில் பகுத்தும் தொகுத்தும் நவஜீவன் டிரஸ்ட் பதிப்பகம் பல வகையான புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். Christian Missions and their role in India, Essentials of Hinduism ஆகிய புத்தகங்களைப் பார்த்தேன். அவற்றின் உள்ளடக்கம் மிகச் சிறப்பாக இருந்தது.

விமானத்தில் அன்றைய பயணத்தை அசைபோட்டுக் கொண்டே இரவு வீடு வந்து சேர்ந்தேன். சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டில் இருந்த பிரபல பயண வழிகாட்டி நூலை எடுத்து அதில் அகமதாபாத் பற்றி போட்டிருப்பதைப் படிக்கத் தொடங்கினேன். ஜூமா மசூதி பற்றி இப்படி இருந்தது –

”அகமதாபாத்தின் முந்தைய காலத்திய இந்த மசூதியின் பெரும்பகுதி தகர்ப்பட்ட இந்து மற்றும் ஜைனக் கோயில்களின் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.நுழைவாயிலின் பிரதான அலங்கார வளைவில் உள்ள பிரம்மாண்டமான, வேலைப்பாடுகள் கொண்ட அடுக்குக் கல் முன்பு ஒரு ஜைன தெய்வ உருவத்தின் பீடமாக இருந்தது என்று கூறப் படுகிறது. அது போன்ற பல தெய்வ உருவங்கள் உடைக்கப்பட்டு,மசூதியில் நுழையும் படியின் அஸ்திவாரத்தில் மசூதிக்கு வரும் பக்தியுள்ள இஸ்லாமியர்கள் காலால் மிதிபடுமாறு கீழே புதைக்கப் பட்டுள்ளன.”

(Page 744, India Guidebook 8th Edition, Lonely Planet)

மசூதியின் அதிர்வற்ற அமைதியிலும் என் மனம் நிம்மதியின்றித் தவித்ததை எண்ணிப் பார்த்தேன். தங்கள் நாட்டைக் காக்கப் போரிட்டு உயிரிழந்தவர்களின் ஓலம் தான் ஒருவேளை கீழே புதைந்திருந்த சிலைகளில் தெறித்து ஆழத்தில் அங்கே அதிர்ந்து கொண்டிருந்ததோ?

புகைப்படங்கள்: ஜடாயு

45 Replies to “அகமதாபாதில் ஒரு நாள்”

  1. Pingback: Indli.com
  2. //மசூதியின் அதிர்வற்ற அமைதியிலும் என் மனம் நிம்மதியின்றித் தவித்ததை எண்ணிப் பார்த்தேன். தங்கள் நாட்டைக் காக்கப் போரிட்டு உயிரிழந்தவர்களின் ஓலம் தான் ஒருவேளை கீழே புதைந்திருந்த சிலைகளில் தெறித்து ஆழத்தில் அங்கே அதிர்ந்து கொண்டிருந்ததோ//

    கவித்துவமும் மானுட வரலாற்றின் சோகமும் அதிரும் வார்த்தைகள். ஒவ்வொரு கிறிஸ்தவ இஸ்லாமிய வழி[பாட்டுத்தலமும் மானுட உடல்கள் அல்லது மனங்களின் சிதைவுகளின் மேல்தான் எழுப்பப்பட்டுள்ளன. அருமையான கட்டுரைக்கும் நன்றி ஜடாயு.

  3. வாழ்த்துக்கள் ஜடாயு.
    அற்புதமான ஆவணப் பதிவாக அமைந்துள்ள கட்டுரை.
    புகைப்படங்கள் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன; உடனே அகமதாபாத் செல்லத் தூண்டுகின்றன. கட்டுரையின் நடை, வசீகரிக்கிறது.
    மீண்டும் வாழ்த்துக்கள்.

  4. அகமதாபாத்துக்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. முதலில் சொன்ன வரிகளைப் படித்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள குளங்களைத் தூர் வாரி செம்மைப் படுத்தி வைத்தாலே தண்ணீருக்காக யாரிடமும் கெஞ்ச வேண்டியதில்லை, என்று தோன்றியது! வாய்ச்சொல்லில் அல்லாமல் செயல் வீரர்களைத் தான் நாடு இப்போது தேடிக் கொண்டிருக்கிறது! நன்றி!

  5. வழக்கம்போல ஜடாயு ஒரு அருமையான கட்டுரையைத் தந்துள்ளார். காந்திஜியைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு பல விஷயங்களைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும். காந்திஜி என்பவர் வருடத்தில் ஒருநாள் விடுமுறை வாங்கித்தந்தவர் என்றோ அல்லது பொதுப்படையாக இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் என்றோ அறிவதை விட்டு அவர் கடைப் பிடித்த (நடைமுறையில்) கடுமையான கொள்கைகளையும் எளிமையான வாழ்க்கையையும் அறிய வேண்டும்.

  6. அருமையான, தெளிவான, அதே நேரத்தில் நேர்மையான பயணப்பதிவு.

    ஜடாயுவுக்கும், த்மிழ் இணைய உலகில் முக்கியமான தளமாக ஆகியிருக்கும் தமிழ் இந்துவுக்கும் வாழ்த்துக்கள்.

  7. யதார்த்தமாக எளிய நடையில் அருமையான பயண பதிவு,
    ”அகமதாபாத்தின் முந்தைய காலத்திய இந்த மசூதியின் பெரும்பகுதி தகர்ப்பட்ட இந்து மற்றும் ஜைனக் கோயில்களின் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.நுழைவாயிலின் பிரதான அலங்கார வளைவில் உள்ள பிரம்மாண்டமான, வேலைப்பாடுகள் கொண்ட அடுக்குக் கல் முன்பு ஒரு ஜைன தெய்வ உருவத்தின் பீடமாக இருந்தது என்று கூறப் படுகிறது. அது போன்ற பல தெய்வ உருவங்கள் உடைக்கப்பட்டு,மசூதியில் நுழையும் படியின் அஸ்திவாரத்தில் மசூதிக்கு வரும் பக்தியுள்ள இஸ்லாமியர்கள் காலால் மிதிபடுமாறு கீழே புதைக்கப் பட்டுள்ளன.”

    “மசூதியின் அதிர்வற்ற அமைதியிலும் என் மனம் நிம்மதியின்றித் தவித்ததை எண்ணிப் பார்த்தேன். தங்கள் நாட்டைக் காக்கப் போரிட்டு உயிரிழந்தவர்களின் ஓலம் தான் ஒருவேளை கீழே புதைந்திருந்த சிலைகளில் தெறித்து ஆழத்தில் அங்கே அதிர்ந்து கொண்டிருந்ததோ?”
    இதை படித்த நமக்கும் அதேதவிப்பு
    இந்தியர்களுக்கு அத்தவிப்பு ,வேதனை நிச்சியம் இருக்கும்.

    உங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க மனமார வாழ்த்துகிறேன்.

    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  8. என்னடா கண்ணுகளா, ஒங்க வெப்சைட்டுல இருக்குற வந்தேமாதரம் பாட்டுல குதிரைகளைக் காட்டுறீங்க !!! குதிரை முஸ்லீம்கள் இந்தியாவுக்கு கொண்டு வந்ததுங்கடா கண்ணுகளா. இந்தியாவுட சொத்து மாடுங்க மட்டும் தானுங்கட கண்ணுகளா

  9. ஏன் இவ்வளவுகாலமாக ஆமதாபாத்தை கர்ணாவதி என்று பெயர் மாற்றம் செய்யாமல் இருக்கிறார்கள்?

  10. மதிப்புமிக்க ஆசிரியர் ஜடாயு அவர்களுக்கு
    கண்களை பணிக்க செய்து விட்டீர்கள் . அருமையான கட்டுரை . மனதை விட்டு நீங்கா புகைப்படங்கள் .
    பிரமிக்க வைக்கிறது நம் முன்னோர்களின் கட்டிடகலை . நன்றி
    பணிவுடன்
    சிவா
    நெல்லை

  11. அகமதாபாத் நகரத்துக்கு நேரில் சென்று வந்தது போல் இருந்தது. பல புதிய தமிழ் சொற்கள் மின்னல் கீற்று போல் வருகின்றன. நீர் சேகரிப்புக்கான கிணறுகளின் முக்கியத்துவத்தை கூறி அழகான கிணற்றின் அமைப்பை நிழல் படங்களுடன் விளக்கி உள்ளீர்கள். நாராயணர் கோவிலை மட்டும் சொல்லாமல் மசூதியையும் படம் பிடித்து கட்டி கோடமையை நிலைநிறுத்தி உள்ளீர்கள். காந்தியின் ஆசிரமம் பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். தங்கள் தகவல் களஞ்சியத்திற்கு மிக்க நன்றி.

  12. மானனீய ஸ்ரீ மோடி ஜீ அவர்களால் தர்ம பரிபாலனம் செய்யப்படும் குஜராத் மாநிலத்திற்குப் புனித யாத்திரை மேற்கொள்வது ஒவ்வொரு தமிழ் இந்துவுக்கும் தம் வாழ்நாளில் கிட்டக்கூடிய பெரும் பாக்கியமாகும். காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் க்ஷேத்திராடனம் செல்வதோடு மட்டுமல்லாமல் குஜராத்தையும் தரிசித்து உய்வடைவோம்.

    – பா. ரெங்கதுரை

  13. அன்புள்ள ஜடாயு

    அற்புதமான பயண அனுபவம். கூடவே சென்று வந்த உணர்வு. அகமதாபாத்தில் இவ்வளவு கலை நுணுக்கமான விஷயங்கள் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். கூர்மையான பார்வை அழகான விவரிப்பு. நன்று, நன்று

    அன்புடன்
    ச.திருமலை

  14. Please read the bit of news about water management by the Modi regime :

    Gujarat govt.’s “Water and Sanitation Management Organization (WASMO) had won the prestigious UN Public Service Award for ‘fostering participation in policy-making decisions through innovative mechanisms’- 13 May 2009

    From the above article, it is seen that traditionally Gujarati’s had managed water resources well and the current govt. utilised these traditional skills to improve the water availability througout the state. I wish to visit Dwaraka and after reading this article, I have got interest on Ahmedabad too.
    Delhi’s Akshardham temple is also a marvellous place to visit.

  15. Judicial guess
    Not just Horses, even donkeys were brought from Arabia and Middle-east. You are one such species.

  16. This author committed 2 great sins.

    First one is entering a jumma masjid. You can’t enter a jumma masjid without trampling upon some Devata murti.

    Second one is eulogising the greatest hindu drohi (MKG). Perhaps he has not read Collected Works of MG

  17. Hello Jatayu,

    Good Article and pictures. But I realise one thing all of us Hindus are only interested in visiting this sort of Muslim places and most importantly agra in delhi. Why no one or at least tamil hindus visits Chitoor Fort rajasthan, Rani padmini palace, Shivenari fort. Mara Rana Pratap Musuem.
    Somantha Temple at gujarat? What about Vijayanagar at Hampi?

    Expecting some visits to that kind of places from some one here and a good article with pictures. 🙂

  18. //Kumudan

    First one is entering a jumma masjid. You can’t enter a jumma masjid without trampling upon some Devata murti.
    Second one is eulogising the greatest hindu drohi (MKG). Perhaps he has not read Collected Works of MG//

    How such comments on gandhiji is published in tamilhindu,this people kind of persons is another sect. who are just brainwahed,which without reading gandhji books, understanding his views,just by hearing other core,adament,said to be hardcore hindus.
    Please be aware of this kind of persons who are real threats of our great nation.
    But i seen surprisingly this people and Christians and Muslims are on platform while commenting ill on nation’s father.

    KK

  19. நவஜீவன் டிரஸ்ட் பதிப்பகம் அண்மையில் மகாத்மா காந்தியின் முழு வரலாற்றையும் சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

  20. Mr. Hindunesan,

    Can you explain how somebody is threat to a nation if he critisizes gandhi?
    Can you tell me which books you read on MKG? Did you read CWMG?

    (edited and published)

  21. பாராட்டும் அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி.

    // அகமதாபாத்தில் இவ்வளவு கலை நுணுக்கமான விஷயங்கள் இருப்பது நீங்கள் சொல்லித்தான் தெரியும். //

    திருமலை, எனக்கும் சபர்மதி ஆசிரமம் தவிர மற்ற இடங்கள் பற்றி எதுவும் தெரியாது.. பயணப் புத்தகத்தில் பார்த்துத் தான் அறிந்தேன்.. பொதுவாக குஜராத் பயணத்திற்கும், சுற்றுலாவுக்கும் அவ்வளவு பேர்போன இடம் இல்ல தான். ஆனால் இந்தியாவில் எங்கு போனாலும் நமக்கு ஆச்சரியங்களும், புது அனுபவமும் கிடைக்கும்!

    // But I realise one thing all of us Hindus are only interested in visiting this sort of Muslim places and most importantly agra in delhi. Why no one or at least tamil hindus visits Chitoor Fort rajasthan, Rani padmini palace, Shivenari fort. Mara Rana Pratap Musuem.
    Somantha Temple at gujarat? What about Vijayanagar at Hampi? //

    கிருஷ்ணா, நான் வேறு ஒரு வேலையாக அகமதாபாத் சென்ற போது கிடைத்த ஒரு நாளில் தான் இதையெல்லாம் சுற்றிப் பார்த்தேன்.. திட்டமிட்டுப் போகவில்லை.

    ராஜஸ்தான் கோட்டைகள் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்கள். வெளிநாட்டவர்கள் கூட ஏராளம் அங்கு வருகிறார்கள்.

    நான் ஒரு பத்து வருடங்கள் முன்பு சிவனேரி, தோரண்கட், ராய்கட், சிம்ஹகட் ஆகிய சிவாஜியின் கோட்டைகளைப் பார்த்திருக்கிறேன்.. 7-8 வருடம் முன்பு ஹம்பி போய் இரண்டு நாட்கள் தங்கி அந்த நகரம் முழுவதையும் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அந்த நினைவுகள் எல்லாம் பழசாகி விட்டன.. மறுபடியும் இங்கெல்லாம் போக வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக அது பற்றி எழுதுவேன்..

  22. // Kumudan
    20 August 2010 at 1:52 pm
    This author committed 2 great sins.
    First one is entering a jumma masjid. You can’t enter a jumma masjid without trampling upon some Devata murti.

    குமுதன், உங்கள் மறுமொழி கண்மூடித் தனத்தில் விளைந்தது. இதை விட்டு வெளியே வாருங்கள்.

    பழைய மசூதிகளையும், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும் இந்துக்கள் பெருமளவில் சென்று பார்க்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.. குறிப்பாக ஓரளவு இந்து உணர்வும், சமூக பிரக்ஞையும் உள்ள இந்துக்கள் கண்டிப்பாக இதனைச் செய்ய வேண்டும். நமது வரலாற்றின் பல பக்கங்களை நேரடியாக நாம் உணர்ந்து கொள்ள இது உதவும்.

    உதாரணமாக, சென்னையிலேயே இருக்கும் சாந்தோம் சர்ச் ஒரு பிரபல சுற்றுலாத் தலம், யார் வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம்.. நமது நண்பர்களில் எத்தனை அங்கு சென்று பார்த்திருக்கிறார்கள்? போகாதவர்கள் கண்டிப்பாக ஒரு ரவுண்ட் போய்விட்டு வாருங்கள்… மதமாற்றம் எல்லாம் ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல சார் என்று தத்துவம் பேசும் உங்கள் நண்பர் யாரேனும் இருந்தால் கட்டாயும் கூட்டிப் போங்கள்.. அங்கே இருபுறமும் மயில்கள் சூழ, தாமரைப் பீடம் மீது நிற்கும் ஏசுவையும், “மயிலை மாதா”வையும், வரலாற்றை விளக்குவதற்காக அல்ல, திரிப்பதற்காகவே உருவாக்கப் பட்ட ஒரு அட்டகாசமான, நேர்த்தியான மியூசியத்தையும் பார்க்கலாம்..

  23. // Kumudan
    Second one is eulogising the greatest hindu drohi (MKG). Perhaps he has not read Collected Works of MG //

    அன்பரே, நான் காந்தியின் கருத்துக்களை பலகாலமாகப் படித்து வந்திருக்கிறேன்.

    உங்கள் தகவலுக்காக: ”மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்” என்ற ஒரு பழைய பதிவில் இது பற்றி ஏராளமாக விவாதம் ஏற்கனவே நடந்திருக்கிறது.. காந்தியை நீங்கள் கூறும் ரீதியில் வசைபாடி ஒருவர் எழுதிய முழுப்புத்தகத்தையே அதில் அலசியிருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தை எழுதியவரே வந்து மறுமொழிகள் போட்டிருக்கிறார்.

    https://tamilhindu.com/2009/10/mahatma-gandhi-and-hindu-dharma/

    தயவு செய்து இதையெல்லாம் படித்து விட்டு, ஏதேனும் புதுசாக சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

    போகிற போக்கில் கொசு அடிப்பது போன்று காந்தியைப் பற்றி இப்படி ஒரு வெறித்தனமான கருத்தை உளறிவிட்டுப் போவது வேண்டாம்.. ..

  24. Jatayu Avargale,

    I’ll definitely read your reference whenever I get time. You have not answered my question of whether if you have read CWMG or not. It is the collection of works written by people who lived with him very closely. It is not Vasaipadum ilakkiyam by third party.

  25. Jatayu Avargale,

    I just read the link as referred by you. I thought there will be point by point rebuttal of the person who criticized him. But it was more on the secularists line like any talk on Hindu being branded as communalists or saffronites. If you are so convinced about your belief why don’t you write a rejoinder by citing facts?

  26. (Simple living and high thinking) என்பதற்க்கு முன்உதாரணமாக திகழ்ந்தவர் மகாத்மா காந்தி. இருந்தும் சந்திரனிலும் கரை இருப்பது போல் அவர் செய்த தவறு முஸ்லீம்களால் பலமுறை அவமானப்பட்டபின்பும் அவர்களை அரவணைத்து சென்றது ஏற்புடையதுதான ? சுதந்திரம் பெறும் சமயத்தில் இந்து முஸ்லீம் கலவரம் கோரதாணடவம் ஆடியது. இதில் மிகவும் பாதிக்கப்படவர்கள் இந்துக்களே. இதைபார்தபின்னும் சுதந்திரம் பெற்றபின் நாட்டில் பல தலைவர்கள் இருந்தபொழுதும் பாதி முஸ்லீம்மான நேருவையே காந்தி தேர்வு செய்தது ஏன் ? ”ஈஸ்வர அல்லா தேரே” நாம் என்ற காந்தி அறிவுரையை பல தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இன்றுவரை மசூதியில் ஒருநாளைக்கு ஐந்துமுறை அல்லாவை தவிற வேறு கடவுள் இல்லை என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார்கள்

  27. The brotherhood of Islam is not the universal brotherhood of man. It is brotherhood of Muslims for Muslims only. There is a fraternity but its benefit is confined to those within that corporation. For those who are outside the corporation, there is nothing but contempt and enmity.

    Dr.B.R.Ambedkar
    Appeasement means buying off the aggressor by convincing at his act of murder, rape, arson and loot against innocent persons who happen for the moment to the victims of his displeasure… the policy of concession has increased Muslim aggressiveness, and what is worse, Muslim interpret these concessions as a sign of defeatism on the part of the Hindus and the absence of the will to resist. This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards Hilter. This is another malaise, no less acute than the malaise of social stagnation. Appeasement will surely aggravate it. (BODHI STTVA BAASAHEB AMBEDKAR)

  28. // ss
    22 August 2010 at 5:02 pm
    அது என்ன சார்? பொ.பி??? //

    பொ.பி – பொது சகாப்தத்திற்குப் பின், அதாவது CE (Common Era, Circa).

    முன்பு கிறிஸ்தவ-ஐரோப்பிய மையவாதம் கோலோச்சிய போது கி.மு, கிபி (B.C, A.D – கிறிஸ்துவுக்கு முன், பின்) என்ற காலக் குறியீட்டுப் பெயரைப் பயன்படுத்தி வந்தனர்.

    பிறகு, கிறிஸ்து என்பவர் பற்றிக் கூறப்படும் வரலாற்றுத் தகவல்கள் பெரும்பான்மையும் ஆதாரமற்றவை என்று வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து, அந்தக் குறியீட்டுப் பெயரை நிராகரித்தார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே, உலகளவில் வரலாறு தொடர்பான எல்லா எழுத்துக்களிலும், BCE (before common era), CE (comman era) ஆகிய குறியீடுகளையே பயன்படுத்துகிறார்கள்.

    அதன் தமிழ் வடிவங்கள் தான் பொ.மு, பொ.பி.

  29. The facts about Gandhi is somewhere in between what protogonists and antagonists say about him.
    No doubt he was a cut above the rest as far as individual personal character is concerned
    But he had his own faults
    just because he was called Mahatma we cant overlook his foibles
    One example is his unjust treatment of subhas Bose, who had won the post of President of the Congress .
    But Gandhi projected Pattabhi Seetharamaiah for the post and said that his defeat was his personal defeat.
    It was very shocking to Bose and the gentleman that he was, promptly resigned.

  30. “The facts about Gandhi is somewhere in between what protogonists and antagonists say about him.
    No doubt he was a cut above the rest as far as individual personal character is concerned”

    His experiment with brahmacarya was par excellence. If this character is cutting above the rest then imagine the character of other congress-walahs. Unfortunately the greats like Tilak and Aurobindo are sidelined. Let’s continue to worship the false gods…

  31. // kumudan
    21 August 2010 at 4:08 pm
    Jatayu Avargale,

    I just read the link as referred by you. I thought there will be point by point rebuttal of the person who criticized him. But it was more on the secularists line like any talk on Hindu being branded as communalists or saffronites. If you are so convinced about your belief why don’t you write a rejoinder by citing facts? //

    Rejoinder?? to what? If you had read that entire debate flowing thru comments (not just the article), the very premise of that hate literature abt Gandhi has been questioned and exposed.

    I dont understand your harping about CWMG (collected works of Mahatma Gandhi).. its a collection similar to Compelte works of Swami Vivekananda that contains all of Gandhi’s writings, letters, speeches etc .. It is published by Navjiavan Trust itself. How can, of all, *that* contain *bad* about Gandhi?

    I am not saying Gandhi is free of any faults or follies. (Which social/political leader was/is, for that matter??).. but these blemishes does not take away the greatness and immense contributions that he has made to India and its people.

  32. //Jatayu
    Rejoinder?? to what? If you had read that entire debate flowing thru comments (not just the article), the very premise of that hate literature abt Gandhi has been questioned and exposed.

    Gr8 joke. Do you call this as exposure? It just quotes who said what abt gandhi and nothing more. You call that as a hate literature. Does that literature quote anything out of context? Can you show one example? That’s what i meant by rejoinder.

    //Jatayu
    I dont understand your harping about CWMG (collected works of Mahatma Gandhi).. its a collection similar to Compelte works of Swami Vivekananda that contains all of Gandhi’s writings, letters, speeches etc .. It is published by Navjiavan Trust itself. How can, of all, *that* contain *bad* about Gandhi?

    You don’t need to be a great scholar to understand his character by reading that. If you still admire, I’ve nothing else to say.

    //Jatayu
    I am not saying Gandhi is free of any faults or follies. (Which social/political leader was/is, for that matter??).. but these blemishes does not take away the greatness and immense contributions that he has made to India and its people.

    The man who calls Sivaji, Bhagat Singh and other heroes as a mis-gudided patriot. Is it just a folly? The man who says Bhagavat Gita is only a fiction and not a real history. Is it just a folly? Did he ever study any of the Jnani’s bhashya of Gita? His stupid experiments with brahmacarya? Is it just a folly? How different is this from Nityananda? The man who calls the fanatic as his friend even though he killed the Arya Samaj leader. Is it just a folly? I can go on…
    If an individual makes mistake it will only impact him. if an householder then his house but if a person leading a nation does then it costs the whole nation. Then it can’t be dismissed only as follies. Though others did mistake the impact is not so severe compared to what he did.

  33. வுட்டா புரட்சித்தலைவிய கூட மகாத்மான்னு சொல்லுவீங்க போலிருக்கு. அவங்க பண்ண ஒரே தப்பு ஹிந்து தர்ம ஆச்சர்யறரை சிறையில் அடைத்துதான்

  34. Kumudan
    If you are giving some unauthentic (info)link…
    Please go through this one,an authentic link
    Which on several months of hardwork,references by an know author…i think this say what unauthentic means 🙂 )
    https://groups.google.co.in/group/anbudan/browse_thread/thread/fef6609fb91c8f90
    (Subash Chandra boss,bagath singh…facts and truth’s are answered in the above link)

    Dear friend,I am sure this won’t change your views as your not willing to accept something your which can’t……….even though the truth is there
    Because you are fallen into a pit what you dig and won’t want to come from that
    (Sorry to say this)
    Atleast other tamilhindu brothers and sisters can view and I believe most would have gone through this.

    Sarve jana sukhino bhavantu

  35. Instead of debating about gandhi who is no more, we Hindus have to guard ourselves against getting cheated for a second time in the name of gandhism- that is losing our ancestral Nation trying to be good to muslim fanatics and extremists.

    Gandhi, the vysya, tried to impose the conduct of a brahmin in the field of the Kshatriya (politics).

    that was the problem.

  36. //karthikeyan
    If you are giving some unauthentic (info)link…
    Can you say why the link is unauthentic?

    //karthikeyan
    Please go through this one,an authentic link.Which on several months of hardwork,references by an know author…i think this say what unauthentic means 🙂 )

    Again no reason in what way the link is authentic. The author has taken just 3 points and I don’t know why it needs several months to write this (I’m just questioning your comment and not sure if author has really taken so much of effort). Again the author doesn’t quote any reference to his belief.

    Subash chandra bose would have brought Japanese to India is a great fantasy. No reference here why he thinks so or at least evidence to Gandhi’s thinking in this line.

    Calling Bhagat singh as a misuided person is nothing but a gross insult to his patriotism. If his Ahmisa is so powerful, why couldn’t he prevent the partition? Gandhi’s Ahimsa is a great failure. This is not said by me but by Paramacharya of Kanchi. See this link https://www.kamakoti.org/souv/5-32.html (Hope this you consider as an authentic link)

  37. Let me quote a known author (Hope you consider so) i.e. Sita ram goel:https://www.bharatvani.org/books/hhce/Ch14.htm

    “But, at the same time, it has to be admitted that Mahatma Gandhi’s prolonged dialogue with Christian theologians, missionaries, moneybags, and the rest, left the Hindus at home more defenseless vis-a-vis the Christian onslaught than they had been ever before. Whatever laurels the Mahatma may have won abroad, he has proved to be a disaster for the Hindus in India…”

    “Mahatma Gandhi’s recognition of these ideologies as dharmas as good as Sanatana Dharma leads only to two conclusions. Either his own perception of Sanatana Dharma was not as deep as it sounds. Or the politician in him prevailed over his spiritual perception and he said what he did from the platform of Sarva-dharma-samabhAva in the hope of winning over Christians and Muslims to the nationalist camp. In any case, the utter failure of his attempt to achieve this goal proves that the attempt was foolhardy….”

    //karthikeyan
    Because you are fallen into a pit what you dig and won’t want to come from that. (sorry to say this)

    This comment very well applies to you my friend

  38. //R. Sridharan
    Gandhi, the vysya, tried to impose the conduct of a brahmin in the field of the Kshatriya (politics).

    Well said.

  39. Dear Mr.Kumudan
    //Calling Bhagat singh as a misuided person is nothing but a gross insult to his patriotism. If his Ahmisa is so powerful, why couldn’t he prevent the partition? Gandhi’s Ahimsa is a great failure. This is not said by me but by Paramacharya of Kanchi. See this link

    https://www.kamakoti.org/souv/5-32.html (Hope this you consider as an authentic link)///
    One thing i really shocked,if he is particular about british has given indpedence of thier will,by this Paramacharya is saying none of the leaders struggle(Bhagat singh,azad,Bose) has gone into vain?

    Does he mean that?

    Why this link can’t be questioned?
    Why Paramacharya of Kanchi can’t be views questioned?

    Let his thought be for himself?

    I think you might have known that once writer kalki commented
    (on harijans entering into temple, kanji seer told -that this will not be good for Hindu dharma)
    “Paramacharya of Kanchi is not sole representative of Hindus, not even for all Brahmins, let him not involve into nor comment into social evaluation.”

    The same i say?

    Jai hind

  40. //அவற்றில் “கீழைத் தேசங்களிலேயே மிகவும் அழகான மசூதி” என்று யாத்ரிகர்களால் ஒரு காலத்தில் புகழப் பட்டது ஜூமா மசூதி.1423ம் ஆண்டு சுல்தான் அகமது ஷா இதைக் கட்டியிருக்கிறார்.//

    கிழித்தார்.

    அது ஹிந்துக்களின் பத்ரகாளியம்மன் கோவில். அதை இசுலாமியர்கள் ஆக்கிரமித்து மசூதியாக மாற்றிவிட்டார்கள். அந்தக் கோவிலில் ஹிந்துக்களின் கோவில்களுக்கே உரிய வேலைப்பாடுகள் இருப்பதை ஜடாயு குறிப்பிட்டு இருந்தார். ஹிந்துக் கோவிலில் ஹிந்துக்களுக்கே உரிய வேலைப்படுகள் இருக்கத்தான் செய்யும். உள்ளங்கையில் வெண்ணை இருந்தாலும் அதைப் பற்றிச் சொல்ல முடியாத நிலையில்தான் ஹிந்துக்கள் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *