சிந்தனைக்கினிய கந்தபுராணம்

சம்ஸ்க்ருதத்தில் பதிணெண் புராணங்கள் உள்ளன:

சைவம், பவிஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், மத்ஸயம், கூர்மம், பிரம்மாண்டம், காருடம், நாரதீயம், வைஷ்ணவம், பாகவதம், பிரம்மம், பத்மம், ஆக்னேயம், பிரம்மகைவர்த்தனம் என்பவற்றுள் ஸ்கந்தபுராணம் என்ற மஹாபுராணமும் ஒன்று.

“முருகப்பெருமானின் திருவரலாறாகிய கந்தபுராணத்தைக் காதலுடன் இப்புவியில் படிப்போர், கேட்போர், நினைப்போர் யாவரும் இந்திரனைப் போலத் தலைமைத்துவமும் இன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்து இறுதியில் பரமானந்த நிலையாகிய சிவபதப் பேறும் பெறுவர்”

என்று நூற்பயனை விதந்து உரைக்கிறது இப்பாடல்:

“இந்திராகிப் பார் மேல் இன்பமுற்றினிது மேவிச்
சிந்தையில் நினைந்த முத்தி சிவகதி அதனில் சேர்வர்
அந்திமில் அவுணர் தங்கள் அடல் கெடமுனிந்த செவ்வேள்
கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்தோதுவோரே”

kachiappamunivar2பெருமை மிக்க இப்புராணத்திலுள்ள ஆறு பெரிய சங்கிதைகளுள் ஒன்று சங்கரசங்கிதை. இச்சங்கிதையிலுள்ள பதின்மூன்றாயிரம் ஸ்லோஹங்களால் ஆக்கப்பெற்றது சிவரஹஸ்ய காண்டம் என்ற உயர்ந்த பகுதி. இதில் ஏழு காண்டங்கள் உள்ளன. அவ்வேழு காண்டங்களுள் முதன்மையான ஆறு காண்டங்களை இணைத்து அழகுத் தமிழில் ‘கந்தபுராணம்’ என்ற ஞானக்களஞ்சியமாக தந்திருக்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

பொ.பி 12, 13ம் நூற்றாண்டுகளில், தமிழகத்தின் காஞ்சியில், குமரகோட்டம் முருகன் ஆலய அர்ச்சகராகத் திகழ்ந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகனே ‘திகட சக்கர’ என்று முதல் அடியெடுத்துக் கொடுக்க 10345 அருந்தமிழ்ச் செய்யுள்களால் கந்தபுராணத்தை அவர் ஆக்கியிருக்கிறார்.

‘உபதேச ரத்னாகரம்’ என்று போற்றப்படும் கந்தபுராணம் காப்பிய இலக்கணங்கள் மிக்கதாக, சித்தாந்தக் கருத்துக்களின் செறிவுடையதாக, தத்துவார்த்த உண்மைகள் பொருந்தப் பெற்றதாக அமைந்திருக்கிறது. தமிழ்க் கந்தபுராணத்தின் தமிழ் நடையும் வியந்து நயந்து உண்ண வேண்டியது.

முருகப்பெருமானாலேயே ஆணையிடப்பெற்று, அவனாலேயே தினமும் பரிசீலனை செய்யப்பெற்றது.  ஆயினும், அரங்கேற்றத்தில் அறிஞர் முன்றலில் இலக்கணச் சந்தேகம் உண்டானது. அப்போது கந்தவேட் பெருமானே சிறுவடிவு தாங்கி வந்து, தன்னால் அங்கீகரிக்கப்பெற்ற நூல் அது என்று யாவரும் அறிய சந்தேகம் நீக்கினார். மிகத் தெளிவாக ‘இறையாணை’ பெற்ற நூல் கந்தபுராணம் என்பது சைவத்தமிழ் மக்களின் நம்பிக்கை.

அரிய தத்துவப்புதையல்

கந்த புராsoma0243ணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.

கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம்.  என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.

அவனது மனைவியராகப் புராணம் இரு தேவியரைக் காட்டும். அவளுடைய வலது பக்கம் விளங்குபவள் வள்ளி. அவள் இச்சா சக்தி. மண்ணுலகில் பிறந்து வளர்ந்தவள். தமிழ்மகள். வேடுவனான நம்பிராஜன் புதல்வி. அத்தேவி இகலோக சுகத்தைத் தருவாள். அத்தேவியை முருகன் காந்தர்வ விவாகம் செய்து கொண்டான்.

முருகனின் இடது பக்கம் எழுந்தருளுபவள் தேவசேனா. விண்ணுலகில் பிறந்தவள். தேவராஜனின் புதல்வி. கிரியாசக்தி. அவளை இறைவன் கற்பு முறையில் பிரம்ம விவாகம் செய்தான். முருகனை வழிபடுவோருக்கு அத்தாய் பரலோக வாழ்வில் இடம்தருவாள்.

முருகனின் மூன்றாவது சக்தி வேல். முருகனின் கரத்தில் விளங்குகிறது. வெற்றியைத் தருவது. ஞானமே வடிவெடுத்த ஞானசக்தி அது.

‘வெல்’ என்ற வினையடியில் தோன்றியது ‘வேல்’. அது ஞானமே உருவானது. ஆழந்து அகன்று கூர்மையாகி அறிவின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. செவ்வேட் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் சேவற்கொடி அஞ்ஞான இருளகற்றி ஞானஒளி வரக் கூவுகிறது. (கொக்கு- மாமரம், அற- அறுத்த, கோ- நம் அரசே) வாகனமான மயில் ஆசை என்ற பாம்பை அடக்கி பிரம்மசக்தியாக ஓம்கார ரூபமாக விளங்குகிறது.

முருகன் கைவேலுக்கு உரிய சிறப்பு வேறு எப்படைக்கும் இல்லை. தமிழ் இந்துக்களில் பலருக்கு ‘வேலாயுதம்’ என்றே பெயர் இருக்கிறது. இப்படி எவரும் வேறு எந்தப் படைக்கலனையும் தங்கள் பெயராகக் கொள்வதாகத் தெரியவில்லை. இலங்கையிலுள்ள பிரபல யாழ். நல்லூர் போன்ற பல முருகன் ஆலயங்களில் கருவறையில் முருகனின் திருவுருவத்திற்குப் பதிலாக வேலாயுதமே விளங்கிடக் காணலாம்.

‘அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த அன்பால்
எந்தை கண்ணின்றும் வந்த இயற்கையால் சக்தியாம் பேர்
தந்திடும் பனுவல் சொன்ன தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டு உளக்கவலை தீர்த்தோம்’

என்று தேவர்களின் வாக்காக வேலாயுதத்தைக் கந்தவேளாகவே கண்டு போற்றியதாகக் கந்தபுராணம் குறிப்பிடுகின்றது.

இறையருள் துணையுடன் ஆணின் விந்துவும் பெண்ணின் நாதமும் கலந்து குழந்தையாகிறது. (அருணகிரிநாதர் ‘நாத விந்து கலாதீ நமோ நம’ என்று இதனைத் திருப்புகழில் பாடுவார்.) இறைவனிடமிருந்து வந்த நாமெல்லோரும் இறுதியில் இறைவனையே சென்றடைய வேண்டும். அழிவின் பின்னர் சூரபத்மன் நாதவுருவாகச் சேவலாக மாறி இறைவனின் கொடியாகவும் விந்துருவுருவாக மயிலாக மாறி முருகனின் வாகனமாயும் மாறியது இதை வெளிப்படுத்துகின்றது என்பர். அவனையே அடைந்து அவனருளாலே அவன் தாள் வணங்குதலே முக்தி. இதனைப் பெற்றான் சூரன். இச்சம்பவத்தை ‘சூரன் பெற்ற பேறு’ என்று கொண்டாடுவார்கள்.

ஆன்மாக்கள் நல்லறிவை நாடித் தவிக்கும் போது இறைவனே குருவாக வந்து அருள்வான் என்பதை சிவனார் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு உபதேசித்தமை சுட்டுகிறது.

சிவனார் காமனை எரித்ததும் காலனைக் காலால் உதைத்ததும் அவர் காமத்தையும் மரணத்தையும் வென்றவர் என்பதையும், அவர் அடியார்களுக்கும் இவற்றால் துன்பமில்லை என்பதையும் உணர்த்தி நிற்கிறது.

இறைவனை இகழ்ந்து அவனை அவமதிப்பவர்கள் மிகுந்த அல்லல்களை அநுபவிப்பர் என்பதை  தக்கன் யாகத்தை இறைவன் அழித்தமை காட்டுகின்றது.

20

2528

கந்தபுராணத்தில் தாரகன், சிங்கன், சூரபத்மன் என்ற மூன்று அசுரச் சகோதரர்களின் கதை கூறப்படுகின்றது.  தாரகன் உலகமே உண்மை என்று வாழ்ந்தவன். சைவசித்தாந்த நிலையில் அவனை “மாயா மலத்திற்கு” உவமிப்பர். சிங்கன் கன்மத்திற்குக் கட்டுப்பட்டவன்; அவனைக்  “கன்ம மலத்திற்கு” உவமிப்பர். சூரபத்மன் “ஆணவ மலம்”. இறுமாப்பே அவன் இயல்பு.

இம்மூவரையும் முறையே அழித்தமை ஞானம் எனும் வேல் கொண்ட வேந்தனால் மட்டுமே இயல்பாகச் செய்ய வல்ல பெருஞ்சிறப்பு.

‘தன்னைத் தான் காதலாகில் எனைத் தோன்றும்
துன்னற்க தீவினைப் பால்’

என்பது வள்ளுவர் மொழி.

அதாவது ‘நீ உன்னை விரும்பி, உனக்கு நன்மையை விரும்பி, தீவினை ஏதும் செய்யாமல் இருப்பாயாக’ என்று அறிவுறுத்துகிறார். சூரனோ எல்லா விதத் திறனும் அறிவும் உடையவனாய் இருந்தும், இறையருள் பெற்றவனாய் இருந்தும், தீவினை செய்து தன்னைத் தானே அழித்துக் கொண்டமை வள்ளுவர் வாக்கிற்குத் தக்கச் சான்றாகும்.

இயற்கையும் தெய்வமே

மூவுலகிற்கும் முதல்வன் குழந்தையானான். தேவர்களின் வேண்டுகோளின் படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பிறந்து ஆகாயத்தில் தவழ்ந்து வாயுவாலும் அக்கினியாலும் தாங்கப் பெற்று ப்ருதிவியிலே ‘சரவணப்பொய்கை’  ஜலத்திலே குழந்தையாய் மாறியது என்று இப்புராணம் சொல்லுகிறது. இப்படிச் சொல்வது பஞ்சபூதங்களினூடாக இறையாட்சியை அவதானிக்கச் செய்கிறது. முருகனின் தோற்றத்தில் பஞ்சபூதங்களின் பங்களிப்பு வியக்க வைக்கிறது.

ஆலய கும்பாபிஷேகக் கிரியைகளில் ஆகாயச் சூரியனிலிருந்து ‘சூரியாக்கினி’ என்ற நெருப்புப் பெறப்படுகிறது. அந்த அக்கினி மண்ணில் உள்ள குண்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டு வாயுவின் துணையுடன் வளர்க்கப்பெறுகிறது; பின், அதனை கும்பஜலத்தில் இணைத்து வழிபாடாற்றுவதுடன், இறுதியில் இறை திருவுருவத்தில் நீரால் அபிஷேகித்து இறைசாந்நதித்யம் உண்டாகப் பிரார்த்திக்கப்படுகிறது. இதைப் பஞ்சபூதங்கள் இணைந்து செயல்படும் நிகழ்வோடு இணைத்து நோக்கலாம்.

இந்த இடத்தில் ‘ஒருதிரு முருகன் வந்து உதித்தனன்’ என்று கச்சியப்பர் குறிப்பிடுவார். அதாவது என்றுமுள்ள இறைவன் இந்த வேளையில் முருகனாக உதித்தனன். (காலையில் சூரியன் பிறப்பதில்லை. உதிக்கிறான். ஏனெனில், அவன் முன்னரே இருப்பவன்.)

போரும் சீரும்

போருக்கு முன் இரு முறை தூதனுப்பியமை, மறைந்து நின்று போராடாமை, ஆயுதம் ஏந்தாதவனுடன் போராடாமை, தனக்குச் சமானமற்ற வீரனுடன் போராடாமை, புறங் கொடுப்பவனைக் கொல்லாமை ஆகிய செயற்பாடுகள் கந்தபுராணத்திலுள்ள போரில் ‘அசுரர்களால் கூட’ அநேகமாகக் கடைபிடிக்கப்படுவதைப் பார்க்கிறோம். செஞ்சோற்றுக்கடனுக்குச் சிங்கனும், பிதிர்க்கடனுக்கு இரணியனும், மானத்திற்குச் சூரனும், கற்பிற்கு சூரன் மனைவியும் கந்தபுராணத்தில் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றனர்.

madanee-bomb-copy2262010145316250ஆனால், இன்றைய உலகில் நடைபெற்ற, நடைபெறும் மோதல்கள் இவற்றை எல்லாம் புறக்கணிக்கிறது.  எந்தப் பிரச்சினையிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்கிற மருத்துவமனையையும் தாக்குகின்றனர்.

இவையெல்லாம் நிச்சயமாக இன்றைய சமூகத்தைக் காட்டிலும் கந்தபுராண காலச் சமூகம் உள, ஒழுக்க ரீதியில் உயர்வானதாகவே இருந்திருக்கும் என நம்பச் செய்கின்றன.

கந்தபுராணம் என்பது தமிழரின் வாழ்வோடு இணைந்தது. ஆக, இதில் ஊறிய எவரும் இதைக் கதை என்று சொல்வதில்லை. சிற்சில இடங்களில் கதைக்குரிய உயர்வு நவிற்சி இருந்தாலும், இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்மையில் நடந்த சம்பவம் என்றே அவர்கள் நம்புகிறார்கள்.

இவ்வாறான ஆய்வுகளின் படி முருகன் பிறந்தது கைலாசச் சாரல் என்றும், தரை வழி யுத்தம் நடந்தது திருப்பரங்குன்றம் என்றும், விண் வெளி யுத்தம் நடந்தது திருப்போரூர் என்றும், கடல் வழிச் சமர் நடந்தது திருச்செந்தூருக்கு அப்பாலுள்ள கடல் என்றும் ஐதீகம். இலங்கையின் கதிர்காமத்தில் படைவீடு அமைத்துத் தங்கி, அப்பால் தெற்கே சூரனுடைய நகரை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுவதால் சூரன் அக்கால ஆப்பிரிக்கதேச அரசன் என்று கருதுவாரும் உள்ளனர். முருகனின் வலது புறம் எழுந்தருளியிருக்கும் வள்ளியம்மை தமிழ் மொழி பேசும் குறவர் இனப் பெண் என்பது வேறு ஐதீகம். இதுவும் ஆய்விற்குரியதே.

யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரத்தில் உள்ள பிரபல  ஸ்கந்த ஸ்தலம் ‘மாவிட்டபுரம்’.  ஆக, திருச்செந்தூருக்கும் மாவிட்டபுரத்திற்கும் இடைப்பட்ட பரந்த சமுத்திரப் பகுதியில் மாமரமாகி மாயா ஜாலங்கள் செய்து முரகனுடன் சூரன் போராடியிருக்கிறான்.

‘தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்’

என்ற கந்தபுராண அறைகூவல் எங்கள் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி “ஓ… அஞ்ஞானிகளே, கடந்த காலம் போயது. உங்கள் அறியாமை மூட்டைகளை நீக்க நல்ல ஒரு வழி கிடைத்திருக்கிறது. உடனடியாகக் கந்தப்பெருமானின் கழலடிகளைப் போய்ச் சேருங்கள். நீங்கள் ஞானியராவீர்கள்…” என்று நமக்கெல்லாம் அரிய பெரிய நற்செய்தி சொல்கிறது.

காதல் முருகனைக்  காதலி

valli-400முருகு என்பது அழகு. ஆதன் மறு பெயர் அன்பு. அவன் பால் காதல் கொண்டோர் அனேகர்.

இறைவனின் இரு-பெண் திருமணம் சமூக சமத்துவத்தைக் காட்டி நிற்கிறது. தேவலோக அரசனின் மகளைத் திருமணம் செய்த அதே இறைவன், தானே வலிய வந்து மனிதர்களில், அதிலும் சாதி முதலிய வேறுபாடுகள் பாராமல் வேடுவர் குல மகளைத் திருமணம் செய்திருக்கிறான். இதை நம் புராணங்கள் மிகவும் தெளிவாகக் காட்டி வந்துள்ளன. இவை தவிர பூவுலகைச் சேர்ந்த வள்ளியம்மைக்குக் கொடுக்கப்படும் உயர்ந்த அந்தஸ்து தனிச்சிறப்பு. எவருமே ‘முருகனுக்கு வள்ளி’ என்றே கூறக் கேட்கிறோம்.

மேலும் வள்ளி தமிழ் மகள். இது தமிழுக்குக் கிடைத்த சிறப்பு.

“….. ஒரு கோடி முத்தம்  தெள்ளிக் கொழிக்கும் கடற் செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே”

shiva-parvatiஎன்று இதைப் பற்றி அருணகிரிப் பெருமான் உருகிப்பாடுகிறார்.

ஆணும் பெண்ணும் கூடி வாழும் வாழ்விற்கு இந்துப்பண்பாடு கொடுத்த முதன்மையையும்,  காதற் சிறப்பையும்,  அன்னை உமையாளுக்கும் இறைவனுக்கும் நிகழ்ந்த திருமணமும்  வெளிப்படுத்துகின்றது.

‘கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’

என்ற ஞானசம்பந்தர் வாக்கு ஈண்டு சிந்திக்கத் தக்கது.

சைவ-வைஷ்ணவ ஒற்றுமை

கந்தபுராணக் கதையுடன் இராமாயணக் கதையை ஒப்பு நோக்கும் போது சைவ-வைஷ்ணவ ஒற்றுமையை உணரலாம்.

சைவசமயிகளின் பரம்பொருளான சிவபெருமானின் புதல்வன் முருகன். வைஷ்ணவர்களின் பரம்பொருளான விஷ்ணுவின் புதல்விகளாகவும் கொண்டாடப்பெறும் வள்ளி, தேவசேனா தேவியரைக் கல்யாணம் செய்தமை சமய ஒற்றுமை.  தவிர முருகன் சிவகுமாரனே ஆகிலும் விஷ்ணு அம்சம் நிரம்பப் பெற்றவன். ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களில் நடைபெற்ற அத்புத நிகழ்ச்சிகளோடு அவனது ஒவ்வொரு செய்கையையும் இணைத்துப் பார்க்கும் போது ஏற்படும் இன்பமே தனியானது. அலாதியானது.

இதனை உண்மையிலேயே செயற்படுத்தியவர் சந்தக்கவி அருணகிரியார். திருப்புகழ் எங்கும் முருகன் பெருமை போலவே  திருமால் பெருமையும் நிறைந்திருக்கிறது. தவிர,  முருகனை அவர் ‘பெருமாள்’ என்றே விளித்துப் பெருமை செய்திருக்கிறார்.

‘காலமாய்க் காலமின்றிக் கருமமாய் கருமமின்றி
கோலமாய்க் கோலமின்றி குணங்களாய் குணங்களின்றி
ஞாலமாய் ஞாலமின்றி அநாதியாய் நங்கட்க்கு எல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண்டுற்றான்’

என்ற கச்சியப்ப சிவாச்சாரிய ஸ்வாமிகளின் திருவாக்கை மனங் கொண்டு அப்பெருமானின் திருவடிகளில் சரண்புகுவோம்.

018முருகனுடைய ஆறுதிருமுகங்களும் அன்பு, அறிவு, ஆற்றல், அழகு, அமைதி, ஆளுமை ஆகிய பண்புகளை உணர்த்தும். நாற்றிசையும் மேலும் கீழும் ஆக, ஆறு பக்கங்களும் பார்த்து நிற்கும் இத்திருமுகங்களை நம்புவோருக்கு துன்பம் எத்திசையாலும் வாரா. அவனது கரங்கள் பன்னிரண்டும் கொடுப்பதற்கென்றே பிறந்தன. அதனை,

“முழுமதி அன்ன ஆறுமுகங்களும் முன் நான்காகும்
விழிகளில் அருளும் வேலும் வேறுள படையும் சீரும்
அழகிய கரம் ஈராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும்
செழுமலரடியும்….”

என்று தெவிட்டாத தேனாகத் தமிழில் பாடுவார் கச்சியப்பர்.

கந்தபுராண காவிய ரசனையை உளத்தில் கொள்வோம்.

செம்மொழியான செந்தமிழின் தலைவன் முருகன். அவனடி பணிவோம். தமிழ்ஹிந்து தர்மம் சிறக்கப் பிரார்த்திப்போம்.

38 Replies to “சிந்தனைக்கினிய கந்தபுராணம்”

 1. கந்தபுராணத்திற்கு நல்லதொரு அறிமுகம். கந்தபுராண நவ்நிதியம் என்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றை வாசித்துள்ளேன். சைவசித்தாந்தக் கோட்பாடுகளை உருவகிக்கும் காப்பியம் கந்தபுராணம் என்று அந்த நூல் நன்கு விளக்கியது நினைவுக்கு வருகின்றது. வடமொழி ஸ்காந்தத்தில் இல்லாதபகுதி, கந்தபுராணத்தில் வள்ளி திருமணம்.

 2. மிக அருமையான கட்டுரை. கந்த புராணத்தை முழுமையும் படிக்க ஆவலை ஏற்படுத்திய கட்டுரை. மயூரகிரி சர்மா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

 3. நாம் நம் திருமந்திரம் பற்றிய ஆய்வுகளை இத் தலத்தில் வெளியிட வேண்டும் அதில் மறைந்துள்ள அறிவியல் உண்மைகளை நாம் வெளியே கொண்டுவர வேண்டும் அதற்கு இந்து தல ஆசிரியர்கள் உதவ வேண்டும் ……………

 4. சைவசமயிகளின் பரம்பொருளான சிவபெருமானின் புதல்வன் முருகன். வைஷ்ணவர்களின் பரம்பொருளான விஷ்ணுவின் புதல்விகளாகவும் கொண்டாடப்பெறும் வள்ளி, தேவசேனா தேவியரைக் கல்யாணம் செய்தமை சமய ஒற்றுமை.
  மற்றது
  இறைவனின் இரு-பெண் திருமணம் சமூக சமத்துவத்தைக் காட்டி நிற்கிறது. தேவலோக அரசனின் மகளைத் திருமணம் செய்த அதே இறைவன், தானே வலிய வந்து மனிதர்களில், அதிலும் சாதி முதலிய வேறுபாடுகள் பாராமல் வேடுவர் குல மகளைத் திருமணம் செய்திருக்கிறான்.
  அற்புதமான வித்தியாசமான செய்திகள்…

 5. கட்டுரை அருமை…ஆனால் இந்த அரும்பெரும்பெருமைகளைக் கொண்ட தெய்வத்தை ஏன் வடநாட்டார் அறியாதிருக்கிறார்கள் என்று கூறவில்லையே..?

 6. // இறைவனின் இரு-பெண் திருமணம் சமூக சமத்துவத்தைக் காட்டி நிற்கிறது. தேவலோக அரசனின் மகளைத் திருமணம் செய்த அதே இறைவன், தானே வலிய வந்து மனிதர்களில், அதிலும் சாதி முதலிய வேறுபாடுகள் பாராமல் வேடுவர் குல மகளைத் திருமணம் செய்திருக்கிறான்…அற்புதமான வித்தியாசமான செய்திகள்…//

  எல்லாம்வல்ல இறைவனுக்கு ஏதையா பெண்டு பிள்ளைகளெல்லாம்?
  இதெல்லாம் லோக்கல் சமாச்சாரம்…விடுங்க‌…டென்சன் ஆகாதீய‌..!

 7. //
  ஆனால் இந்த அரும்பெரும்பெருமைகளைக் கொண்ட தெய்வத்தை ஏன் வடநாட்டார் அறியாதிருக்கிறார்கள் என்று கூறவில்லையே..?
  //

  “ஆடு நனைகிறதே” என்று ஓநாய் அழுததாம்….

  ஹிந்து தெய்வங்களைத் தமது தளத்தில் கண்டபடி தூற்றியுள்ள இந்த சில்லிசாமுக்குத் தக்க பதிலடி தரவேண்டும்.

 8. Pingback: Indli.com
 9. அருமையான கட்டுரை, வாசிக்க மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால் மயூரகிரி சர்மா அவர்களதும் முனைவர் ஐயா அவர்களதும் இரு கருத்துக்களின் எனக்கு உடன்பாடில்லை.

  நான் வடமொழி ஸ்கந்த புராணத்தின் சிவரஹஸ்ய காண்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை படித்துள்ளேன், அதன்படி:

  1. புதப்படைகள் பாக்கு நீரிணையை கடந்து இலங்கையை வந்தடைந்த பின்பே சூரபத்மனுக்கும் தேவசேநாதிபதிக்கும் இடையில் போர் தொடங்குகின்றது. போரின் பின்னர் தான் திருச்செந்தூரில் படைவீடு ஏற்படுகின்றது. போர் திருச்செந்தூரில் நடைபெறவில்லை.

  2. நான் வாசித்த வடமொழி ஸ்கந்த புராணத்தின் சிவரஹஸ்ய காண்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வள்ளி திருமணம் நிச்சயமாக இடம்பெற்றுள்ளது. இது நான் வாசித்த வடமொழி மொழிபெயர்ப்பின் தவறா என நான் அறியேன், ஆனால் முழு மொழிபெயர்ப்பையும் நான் படித்த மட்டில் அப்படியெதும் தெரியவில்லை.

 10. பின்னூட்டம் வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்…

  முனைவர் அவர்கள் குறிப்பிட்டது போலவே காசிவாசி சி.செந்திநாதையர் அவர்கள் எழுதி 1886ல் வெளியிட்ட ‘கந்தபுராண நவநீதம்’ என்ற நூலை யானும் படித்திருக்கிறேன். அந்நூல் தத்துவார்த்த ரீதியாக, முக்கியமாக சைவசித்தாந்த ரீதியாக கந்தபுராணத்தை ஆராய்கிறது. இருந்த போதிலும் அதில் தத்துவார்த்தமான கருத்துக்களுக்கு அப்பால் குறிப்பிட்டிருந்த சில கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அதில் முக்கியமாக

  ‘இக்காலத்தில் நம் நாட்டுச் சைவர்களில் சிலர் தேவர்களும் அசுரர்களும் ஆகாயத்தில் நின்று போரிட்டமை பற்றிக் கந்தபுராணம் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு பரிகசிக்க அதனை மேலை நாட்டவர் இன்றும் கண்டு வியக்கிறார்கள் என்றும் அவ்வாறு அவர்களாலும் இற்றைப் பொழுதும் இது பற்றிய அறிவு அவர்களுக்கும் சிறிதும் இல்லையே’ என்று குறிப்பிட்டிருப்பதும் (1886) இற்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னரே (அதாவது விமானம் போன்ற எதுவும் கண்டுபிடிக்க முன்பே) ஐயரவர்கள் துணிந்து கருத்துக் கூறியுள்ளமையை மிகவும் வியக்கிறேன்.

  இவ்வளவு சிறப்பான கடவுளை வடநாட்டார் ஏன் அறிந்திருக்கவில்லை என்று ஒருவர் கேட்டிருக்கிறார். மஹாகவி காளிதாஸன் இப்பெருமான் பற்றி “குமாரசம்பவம்” என்ற காவியத்தை எழுதியிருக்கிறார். புதுடில்லியில் மலை மந்திர் ராமகிருஷ்ணபுரத்தில் “உத்தரஸ்வாமிமலை” என்ற ஸ்தலம் முருகனுக்காக இருக்கிறது என்றும் கேள்விப்படுகிறேன்.

  மேலும் ஸ்கந்தனை ஈசபுத்திரனாக பிரம்மச்சாரியாக கண்டு வழிபடும் வழக்கம் அவர்களிடமும் இருக்கிறது. ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு வழிபாடு மிகச்சிறப்பாக இருந்திருக்கிறது. ஆகவே தமிழர்கள் முருகனை தம் தனிப்பெருந் தெய்வமாக வணங்கியிருக்கிறார்கள். இங்கு இவ்வழிபாடு மிகச்சிறப்புற்றிருக்கிறது.

  இலண்டனில் ஸ்ரீமுருகன் கோயில் இருக்கிறது. அங்குள்ள இந்துக்கள் யாவரும் வடநாடு, தென்னாடு என்ற பேதமின்றி ஏராளமாக வந்து வழிபடுகின்றனர். அண்மையில் நடைபெற்ற தேரோட்டத்தில் மட்டும் இருபதாயிரம் மக்கள் கலந்து கொண்டதாக அங்கிருக்கிறவர்கள் குறிப்பிட்டார்கள். இங்குள்ளவர்கள் அங்கே தொழிலுக்காகச் சென்று வாழ்வை நடாத்தும் நிலையில் குமரனுக்குக் கோயில் எழுப்பி கொண்டாடுவதை எண்ணும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.. சுவிஸில், அவுஸ்ரேலியாவில், ஜேர்மனில், பிரான்ஸில், கனடாவில், அமெரிக்காவில், போன்ற தேசமெங்கும் முரகவழிபாடு நடைபெற்று வருவதாயும் அறிகிறேன். ஆகவே நிச்சயமாக முருக வழிபாடு அகிலமெல்லாம் பரவியிருக்கிறது. பரவிவருகிறது.

  இலங்கையின் யாழ்ப்பாணத்து நல்லூரில் தற்சமயம் இருபத்தைந்து நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இவ்விழா யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய பண்டிகை போல மிகச்சிறப்பாக இருக்கிறது. பௌத்த மக்களும் ‘கதிரகம தெய்யோ’ என்று கந்தப்பெருமானிடத்தில் பேரன்பு செலுத்துகிறார்கள். காவடி சுமந்து காணிக்கை செலுத்துகிறார்கள். இவற்றை நினைத:தப் பார்த்தால் முருக வழிபாட்டின் உலகாளாவிய பரவலை அவதானிக்கலாம்.

 11. அறிந்ததும் அறியாததும்,
  அறிந்தும் அறியாததும்
  அறியாது அறிந்ததும்
  அறியாது அறியாததும்
  அவை யாவும் என்னென்ன?

  ஏசு உயிர் பிரியும் முன்னர் கடைசியாகச் சொன்னதாக லுகா என்கிற சீடர் கூறியது:

  “என் தேவனே, என் தேவனே, இவர்களை மன்னியும், தங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.”

  அவர் இப்படிக் கூறியது திரு. chillsam போன்றவர்களைக் குறித்துத்தான். திரு chillsam, தான் செய்வது சொல்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்/ சொல்கிறார். பாரத மக்கள் அனைவரும் அறிந்த, தொழுகின்ற மூர்த்தியாகவே கந்தன் திகழ்கிறார். ஸ்கந்தபுராணம் என்பது சமஸ்கிருதத்தில் உள்ள முக்கியப் புராணங்களில் ஒன்று என்பதை கட்டுரை முதல் பத்தியிலேயே கூறுகிறது. சம்ஸ்கிருத ஸ்கந்தன்தான் தமிழ்க் கந்தன் என்பதை திரு chillsam அறிந்தும், அறியாதிருக்கிறார்.

  வட பாரதத்தில் இருந்த தொன்மையான கோவில்களெல்லாம் இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது அவர்களால் குரூரமாக அழிக்கப்பட்டன என்பதை திரு chillsam அறிந்தும், அறியாதிருக்கிறார். இவற்றில் ஸ்கந்தன் கோவில்களும் போயின என்பதையும் திரு chillsam அறிந்தும், அறியாதிருக்கிறார். தென் பாரதம்தான் காட்டுமிராண்டிகளின் தாக்குதல்களிலிருந்து பெரிதும் தப்பின என்பதையும் திரு chillsam அறிந்தும், அறியாதிருக்கிறார்.

  இவ்வளவு ஏன், ஏசுவின் கடைசி வார்த்தைகள் என்னென்ன என்பதையே அவரது சீடர்கள் “முழுவதுமாக” அறியாதிருக்கிறார்கள். லூகா மேற்சொன்ன விதம் சொல்ல, மார்க் என்பவரும் மத்தேயு என்பவருமோ, ஏசு “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கூறியதாகச் சொல்கிறார்கள். அதன் பொருள்: “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” ஜான் என்பவரோ “எல்லாம் முடித்துவிட்டது” என்று கூறியதாகக் கூறுகிறார். லூகா மேலும் “என் தேவனே உம்மிடம் நான் என்னை ஒப்புக்கொடுத்து விட்டேன்” என்று கூறியதாகக் கூறுகிறார்.

  ஆக ஏசு சொன்னதாக அவரது சீடர்களே முழுவதுமாக எதையும் அறியாதிருக்கிறார்கள். இதிலே திரு chillsam எதை அறிந்திருப்பார்? எதை அறியாதிருப்பார்?

  திரு chillsam அவர்களின் தளத்தில் அவரது வார்த்தைகள் அவருக்கே பொருந்தும். ///”‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ ‘ என யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம்;அது ஒரு போதும் மெய்ப் பொருளை அடைய உதவாது;
  நமது நோக்கம் மெய்ப் பொருளையடைவதாக இருக்குமானால் அமர்ந்து கற்றுக் கொள்ள முன்வரவேண்டும்;”///

 12. கந்தபுராணத்தைப் பற்றித் தீந்தமிழில் ஒரு அழகிய கட்டுரையை அளித்திருக்கிறீர்கள் சர்மா அவர்களே. உங்கள் பெயரே மயூரகிரி என்று கவித்துவமாக இருக்கிறது!

  தமிழகத்தில் வாரியார் சுவாமிகள், புலவர் கீரன் காலத்திற்குப் பின் கந்தபுராணச் சொற்பொழிவுகள் அருகிவிட்டன என்று தோன்றுகிறது. அடுத்த தலைமுறை புராணப் பேச்சாளர்களை உருவாக்குவது சைவ சமய அமைப்புகளும், முருகனடியார் குழாங்களும் செய்ய வேண்டிய முக்கியக் கடமையாகும்.

  // இந்த அரும்பெரும்பெருமைகளைக் கொண்ட தெய்வத்தை ஏன் வடநாட்டார் அறியாதிருக்கிறார்கள் என்று கூறவில்லையே..? //

  தவறி. வடநாட்டில் முருக வழிபாடு மிகச் சிறப்பாக இருந்தது இன்றும் தொடர்கிறது.

  இந்திய வரலாற்றின் பொற்காலமாகக் கருதப் படும் குப்தர் காலத்தில் முருகன் முதன்மைத் தெய்வ்மாக வணங்கப் பட்டான். குப்த வம்சத்தின் முக்கிய மன்னர்களான குமார குப்தர், ஸ்கந்த குப்தர், கார்த்திகேய குப்தர் ஆகிய மூவரும் முருகன் பெயரைத் தாங்கியவர்கள். குப்தர் கால நாணயங்களில் மயில் மீதமர்ந்த கார்த்திகேயன் உருவம் சிறப்பாக இடம் பெற்றிருந்தது. இன்றைய ஆப்கானிஸ்தானம், மதுரா, உஜ்ஜயினி, வங்கம், கலிங்கம் (ஒரிஸ்ஸா) ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகளில் பல்வேறு வடிவுகளில் முருகன் திருவுருவங்கள் கிடைத்துள்ளன.. வரலாற்றில் முதன்முதலாக நமக்குக் கிடைத்திருக்கும் முருகன் சிலை *வட நாட்டை* சேர்ந்ததே. தென்னாட்டு சிலைகள் பிற்காலத்தியவை. புராணங்களிலேயே மிகப் பெரியதாக ஸ்கந்த புராணம் உருவாக்கப் பட்டதே, முருக வழிபாட்டுக்கு இருந்த முதன்மைக்கு ஒரு சான்று. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களிலும் குமரனைப் பற்றி பற்பல குறிப்புக்கள் உள்ளன.

  குமரன் தேவசேனாபதியாக, போர்த் தெய்வமாக பிரதானமாக வணங்கப் பட்டான் (1800களில் வந்த குமார சம்பவத்தின் முதன்முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு “Birth of the War God” என்றே வழங்கப் பட்டது). எனவே பௌத்த, சமண சமயங்களின் எழுச்சி பெருமளவில் நிகழ்கையில், போர், வீரம், சேனைகள் ஆகியற்றுடன் தொடர்புடைய முருக வழிபாடே மற்றெல்லாவற்றையும் விட அதிகமாக தேய்ந்து மறைந்தது.. சங்கரருக்குப் பின் இந்துமத மறுமலர்ச்சி நிகழ்கையில் கௌமாரம் அறுசமயங்களில் ஒன்றாக இருந்தபோதும், வடநாட்டில் அதன் மீட்சி பெரிய அளவில் நிகழவில்லை. மிச்சம் மீதி இருந்த புராதன சிவ, முருக ஆலயங்கள் சில முஸ்லிம் படையெடுப்பில் அழிந்தும் போயிருக்கலாம்..

  வடநாட்டில் சிவாலயங்கள் அனைத்திலும் சிவன், அம்பிகை, விநாயர், கார்த்திகேயர், நந்தி என்ற ஐந்து தெய்வ ரூபங்களும் கட்டாயம் இருப்பார்கள். “சிவ பஞ்சாயதன்” என்றே இதற்குப் பெயர். வங்கத்திலும், ஒரிஸாவிலும் துர்கா பூஜைப் பெருவிழாவில் தேவிக்கு இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி, கணேசர், கார்த்திகேயர் ஆகிய நால்வரும் இருப்பார்கள் (இதற்குப் பெயர் ’துர்கா பஞ்சாயதன்’). இந்த வங்காள பாணி சித்திரத்தில் முருகன் எவ்வளவு திவ்யமாக இருக்கிறார் பாருங்கள் –
  https://tamilhindu.com/wp-content/uploads/durgapujapanel_beautiful.jpg

  கார்த்திக், குமார் ஆகிய முருகனின் திருநாமங்கள் பாரதம் முழுமையும் மிகப் பரவலானவை. அதோடு, சைவ-கௌமார சமயங்களின் உட்பொருள் அறிந்தவர்கள் முருகன் என்பது ஏதோ தனிப்பட்ட தெய்வமோ, ஆளோ அல்ல; சுத்த சிவஸ்வரூபமே சுப்பிரமணியர் என்பதை உணர்ந்து தெளிந்தவர்கள்.

  எனவே வடநாட்டினருக்கு முருகன் தெரியாது என்று சொல்வது திரிபுவாதம், துஷ்பிரசாரம்.

  அதுவும், செமித்திய பாலைவனத்தில் ஒரு சிற்றூரில் சிலுவையில் மாண்டுபோன ஒரு உள்ளூர் சமயப் பிரசங்கியே உலகத்தின் பாவம் எல்லாவற்றையும் என்றென்றைக்கும் கழுவுவார் என்ற டுபாக்கூர் சங்கதியை வைத்து உலகத்தை ஆக்கிரமிக்க விரும்பும் ஒரு ’கல்ட்’டைப் பின்பற்றுபவர், பிரசாரம் செய்பவர் ஒருவர் திருவாயிலிருந்து இப்படி ஒரு முத்து உதிர்வது இன்னும் பெரிய வினோதம்!

 13. // எல்லாம்வல்ல இறைவனுக்கு ஏதையா பெண்டு பிள்ளைகளெல்லாம்?
  இதெல்லாம் லோக்கல் சமாச்சாரம்…விடுங்க‌…டென்சன் ஆகாதீய‌..! //

  “இயேசு இறைவனின் ஒரே பிள்ளை” என்று நீங்கள் மட்டும் பேய்க்கத்து கத்துகிறீர்களே?

 14. அன்பிற்குரிய உமாசங்கர்,ஜடாயு,

  தாங்கள் குறிப்பிட்டது போல படையெடுப்புகள் நம் பல சொத்துக்களை அழித்திருக்கும் என்பது எனது நம்பிக்கை. இஸ்லாமிய, போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய என்று நம் இந்திய நாடு கண்ட படையெடுப்புகள் ஏராளம். இவற்றில் போர்த்துக்கேயர் தமிழ் இந்துப் பேராலயங்கள் பலவற்றைத் தரை மட்டமாக்கியிருக்கிறார்கள். வலிந்து தம் சமயத்தைப் (கத்தோலிக்கம்) புகுத்தியிருக்கிறார்கள். தமிழ் ஹிந்து அரசை தடயம் இல்லாமல் அழித்திருக்கிறார்கள். நம் பெருங்கோயில்களை சிதைத்து அது இருந்த இடத்திலேயே சிதைத்த கோயில் கற்களைக் கொண்டு தமது தேவாலயத்தை நிறுவியிருக்கியிருக்கிறார்கள். இது நான் கண் கண்ட உண்மை. இதனை காட்ட முயன்ற சிறு ஆவணப்பட முயற்சி இது

  https://www.youtube.com/watch?v=lGrx0Zsx_nk

  ஜடாயு அவர்களின் வரலாறு பூர்வமான செய்திகள் எவராலும் மறுக்க இயலாதன. மிகவும் அத்புதம்.. மிக்க நன்றிகள். தாங்கள் குறிப்பிடுவது போல வாரியார், கீரன், கி.வா.ஜ ஆகியோர் வழியில் பலரும் கந்தபுராணச் சொற்பொழிவுகளாற்ற முன்வர வேண்டும். தமிழில் உள்ள கச்சியப்ப சுவாமிகளின் கந்தபுராணத்தை படனம் செய்வதும் சிறப்பு.

  “ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த:” என்று “சேனைத் தலைவர்களுள் நான் முருகன்” என்கிறார் பகவத்கீதையில் கண்ணன். குமாரதந்திரம் என்ற ஆகமம் முருக வழிபாட்டு முறையைப் பேசுகிறது. இது சம்ஸ்க்ருத்திலேயே அமைந்துள்ளது. சிவ சக்தி ஐக்கிய ரூபமே குமரன். குப்தர் காலத்தில் கௌமார சமயம் வடநாட்டில் மிகச்சிறப்பாக நிலவியிருக்க வேண்டும் என்று தங்கள் கருத்துக்கள் மூலம் உணர முடிகிறது. இவை பற்றி தங்களைப் போன்றவர்கள் சிறப்பான ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.

 15. ///தமிழகத்தில் வாரியார் சுவாமிகள், புலவர் கீரன் காலத்திற்குப் பின் கந்தபுராணச் சொற்பொழிவுகள் அருகிவிட்டன என்று தோன்றுகிறது. அடுத்த தலைமுறை புராணப் பேச்சாளர்களை உருவாக்குவது சைவ சமய அமைப்புகளும், முருகனடியார் குழாங்களும் செய்ய வேண்டிய முக்கியக் கடமையாகும். ///

  இளம் பிராயத்தினரான திரு மயூரகிரி சர்மா அவர்கள் சென்னையில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தச் சம்மதிப்பாரே ஆனால் அதனை ஏற்பாடு செய்ய நான் தயார்.

 16. //
  “இயேசு இறைவனின் ஒரே பிள்ளை” என்று நீங்கள் மட்டும் பேய்க்கத்து கத்துகிறீர்களே?
  //

  அவர் தான் இறந்து விட்டாரே – இப்போது பிள்ளைகள் கிடையாதல்லவா – சகோதிரிகள் அனைவரும் கையில் மோதிரம் அணிவார்கள் – நீங்கெல்லாம் nun ஆச்சே none ஆகா தானே இருக்கணும் நன்னா கையில மோதிரம் போட்டுண்டு இருக்கேளே என்றால் – we are married to christ என்கிறார்கள் – எல்லாம் வல்ல இறைவனுக்கு வெள்ளை gown போட்ட பல பெண்டாட்டி .தேவையா – இஸ்ரவேல் என்பது செங்கல்பட்டு size அதன் குட்டி தேவதை கர்த்தர் ௦ – அவரை பத்தி மன்கோளியாவுல யாருக்கும் தெரியாதுங்கோ – வட துருவத்தில் இருக்கும் எஸ்கிமொசுக்கு எல்லாம் வல்ல இறைவனை பற்றி தெர்யுமா

  இஸ்ரவேல் மகாநாட்டிற்கு சற்றே வடக்கே இருக்கும் ஊற்றில் பொய் ஏசுவே என்றால் எண்ணெய் சட்டியில் போட்டு விடுவார்கள் – வாடா நாட்டில் எவ்வளவு பேர் சுப்ரமண்யம் என்று பெயர் வைத்துள்ளார்கள் என்று சில்லிசாமுக்கு தெரிய வாய்ப்பு இல்லை

  கன்னி மரிக்கு இயேசு பிறந்து மட்டும் லோக்கல் மேட்டர் இல்ல அது பாரின் மேட்டர் என்ன அது இஸ்ரவேல்ல நடந்தது – அவர சிலுவைல ஏத்தி கொன்னுட்டாங்க ஆனா அவர் சாகல – இதுவும் பாரின் மேட்டர் தான் – அவர கொள்வதை ஒரு கேள்வி கூட கேட்காம அவரின் இனிய சீடர்கள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் – இதுவும் பாரின் மேட்டர் தான்
  இன்னிக்கு வரைக்கும் நம்மாளுங்க இயேசுவின் ரத்தத்தை குடிக்கிறார்கள் – இது ரொம்ப பழைய பாரின் மேட்டர்

  இயேசுவை ஒரு கூட்டம் போஅ பிதாவே என்று கூப்பிடுகிறது – அது எப்படிங்கோ

 17. அன்புள்ள திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு

  தங்கள் கொடுத்த குறும்படத்தைப் பார்த்தேன்.
  https://www.youtube.com/watch?v=lGrx0Zsx_nk

  மதம் மாற்றுவது மட்டுமல்ல, கோவில்களையும் மாற்றும் வேலையை எப்படி கிறிஸ்தவர்கள் காலம் காலமாக உலகெங்கிலும் செய்து வந்திருக்கிறார்கள் / செய்து வருகிறார்கள் என்பதை தெள்ளென நிரூபிக்கிறது இந்தப் படம்.

  திரு chillsam போன்றவர்கள் இவை குறித்து எதுவும் பேசவும் மாட்டார்கள். கிறிஸ்தவம் பேசும் மனித உரிமை அவ்வளவுதான். போப் எனப்படும் நபரோ, உள்ளுக்குள்ளே மத்தாப்பு, உதட்டிலே ஆதங்கம் என்று நாடகம் நடிப்பார். இவற்றைப் பார்க்கும்போது மீண்டும் ஒரு சத்ரபதி சிவாஜி வரவேண்டும் என ஏக்கம் பிறக்கிறது.

 18. //எல்லாம்வல்ல இறைவனுக்கு ஏதையா பெண்டு பிள்ளைகளெல்லாம்?
  இதெல்லாம் லோக்கல் சமாச்சாரம்…விடுங்க‌…டென்சன் ஆகாதீய‌..!//
  ஐயா தங்கள் சொல்ல வருவது என்ன ? கொஞ்சம் தெளிவாக சொல்லவும்.
  உங்களின் தாய் மதத்தை இகலும் நற்பண்பு மிகவும் போற்றுதலுக்கு உரியது.இதற்கு பெயர் நாகரீக நக்கலா? அல்லது வஞ்சப்புகழ்ச்சியா ?
  வளர்க நீவிர் தொண்டு, வாழ்க உங்கள் வளர்ப்பு தாய் (மதம்).
  உங்கள் வீட்டு கண்ணாடி முன் ஒரு முறை இதனை சொல்லி பாருங்கள் நண்பரே.

 19. The Jaffna (nalloor) kingdom documentary film is a Good work…
  this is a tamiz hindu Kingdom… it’s sure…

 20. உமாசங்கள் அவர்களுக்கு,
  தங்கள் கருத்துக்கு நன்றிகள்… நான் யாழ்ப்பாணத்தில் ஒரு சில கந்தபுராணச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளேன். ஏன் இளைய தலைமுறையினர் புராணச் சொற்பொழிவுகள் ஆற்ற முடியாதா? சென்னையிலும் என்னால் நிச்சயமாக கந்தபுராணச் சொற்பொழிவாற்ற இயலும் .ஆயினும் யான் தற்சமயம் யாழ்ப்பாணத்தில் அல்லவா? இருக்கிறேன்.
  எனது குறும்படம் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. மதம் மட்டுமல்ல கோயில்களையும் மாற்றியிருப்பது உண்மை. வேளாங்கண்ணி தொடர்பிலும் இவ்வாறான சந்தேகம் இருக்கிறதே? தாங்கள் அறிவீர்களா?

  பாபு, கந்தர்வன், சாரங், ஆகிய அன்புள்ளங்கட்கும் நன்றிகள்..

 21. //எல்லாம்வல்ல இறைவனுக்கு ஏதையா பெண்டு பிள்ளைகளெல்லாம்?
  இதெல்லாம் லோக்கல் சமாச்சாரம்…விடுங்க‌…டென்சன் ஆகாதீய‌..!//

  எல்லாம் வல்ல இறைவனுக்கு ஒரே ஒரு ஏக புத்திரனாம் அந்த தறுதலையை பெத்துக்க ஒரே ஒரு கன்னிதான் வேணுமாம். பரிசுத்த ஆவி எப்படிடா கன்னிக்கு கர்ப்பம் உண்டாக்கிச்சுன்னா, கன்னிக்கு மேல நிழலா படந்துச்சாம். அப்படி பெத்த பய எப்படி இருப்பார்? கள்ளச்சாராயம் காச்சுனதுதான் அவர் செஞ்ச முதல் அற்புதமாம். கழுதை திருடி அதுக்கு மேல உள்ளாடி போனாராம். அவர் காலுல ஒருத்தி கூந்தலால துடைச்சாளாம். டேய் யூதாஸு ஏதோ உன் காலம் உன் கைல லெனின் மாதிரி வீடியோ கேமிரா இல்லடா … இல்லைன்னா எல்லாம் வல்ல தேவ மவனது கள்ளக்காதல் யூட்யூப்ல வந்திருக்குமேடா…

  சரி மச்சி இன்னும் சில சுவிசேசம் இருக்குதாம் கிறிஸ்தவர்கள் மறைச்சது அதுல மேரி மக்தலேனுக்க உதட்டோட உதடு வைச்ச் ஏசு ப்ரெஞ்ச் கிஸ் அடிக்கிறதெல்லாம் இருக்குதாம். உதடும் உதடும் ஒட்டி அடிச்சா ஏசு-மகதலேன் கிஸ்ஸுன்னு அர்த்தம்,. அப்படீன்னு பாட்டுக் கூட பாடலாமாம்.

  ஏங்கண்ணா சிஸ்லாம், மயூரகிரி எத்தனை உசந்த விசயங்களை பேசிகிட்டிருக்காரு…ஆணவம் கன்மம் மாயை அபப்டீங்கிறாரு ஞானம் அபப்டீங்கிறாரு இதையெல்லாம் புரிஞ்சுகிடுற கொடுப்பினைதான் இல்லை இந்த இடத்துல வந்து கிறிஸ்தவம்கிற நரகலை வைக்கணுமாக்கும்?

  (edited and published).

 22. காசி ஸ்தல சேத்திர பாலகராக எழுந்தருளியுள்ள ஸ்ரீ தண்டாயுதபாணியும் சுப்பிரம்மண்யர் தானா? இம்மூர்த்தி பற்றி இக்காலத்தில் வேறு ஒரு கதை நிலவுகிறது. (அதாவது ஒரு சிவபக்தன் சிவனருளால் அடைந்த பதவி என்று) ஆனால் உண்மையில் இது முருக வழிபாட்டின் ஒரு வடிவமோ? என்பது எனது சந்தேகம்.
  அறிந்தவர்கள் தயவு கூர்ந்து கூறவும். நேற்றைய தினம் அன்பர் ஒருவர் கதிர்காம முருகனின் பழைய சிலை ஒன்று போர்த்துக்கேயரால் களவாடப்பெற்று போர்த்துக்கல் நாட்டு அரும்பொருட்சாலையில் இருப்பதாகத் தெரிவித்தார் இது பற்றிய தகவலும் தாங்கள் எவரேனும் அறிந்துள்ளீர்களா?

 23. அன்புக்கினிய திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு

  தங்கள் கேள்வி: // ஏன் இளைய தலைமுறையினர் புராணச் சொற்பொழிவுகள் ஆற்ற முடியாதா? //

  நான் எழுதிய கருத்து வேறு அடிப்படையில். இளம்பிராயத்தினர் சொற்பொழிவு ஆற்றும்போது, எப்படி திருஞானசம்பந்தர் பாடும் பொது மக்கள் மயங்கி மகிழ்ந்து நல்வழிப்பட்டனரோ அத்தகைய சூழல் உருவாகும் (the effect will be manifold as the audience will be in the awe of the presenter)

  தாங்கள் சென்னை வரும் வாய்ப்பிருக்கும்போது சொல்லுங்கள். நிச்சயம் தியாகராயநகர் சிவா விஷ்ணு ஆலயத்தில் ஒரு சொற்பொழிவை ஏற்பாடு செய்வோம்.

 24. Dear Mr.Mayoorakiri Sharma

  Thanks for an excellent article. The temple in Delhi for Murugan is in RK Puram and it is called Malai Mandir. He is worshipped in the name of “Swaminatha Swami”. I have seen so many North Indians including Sikhs participate in the temple festivals.

  There is also a small temple near my home called Baba Balaknath Temple – I have seen pictures of this god with peacock. He is considered as one of the incaranation of Lord Karthikeya. Possibly it could be another form of Skanda worship in North. May be someone can do some reserarch on that.

  Best regards

  R.Sivaramakrishnan
  New Delhi

 25. அன்பர் திரு மயூரகிரி சர்மா அவர்களே,

  வேளாங்கண்ணி கோவில் பற்றிய தகவல் எனக்குப் புதிதே. அதிக அளவில் தகவல் பரிமாற்றம் இல்லாத காலங்களில் கிறிஸ்தவர்கள் எதுவும் செய்திருப்பார்கள் என்பது உண்மையே.

  ஸ்பானியர்களும் போர்ச்சுகீசியர்களும் போட்டி போட்டுக் கடற்கொள்ளை செய்தவர்கள். சில கடல் கொள்ளைக்கார போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டதுதான் வேளாங்கண்ணி சர்ச். இதை விட வேறு என்ன வேண்டும்? கோவாவில் செய்தவர்கள் இங்கும் செய்திருப்பார்கள்.

  லண்டன் மியூசியத்தில் பல பாரதச் சிலைலளையும் சிற்பங்களையும் கண்டேன். அவை புத்த சமண ஹிந்துக் கடவுளர்/ அருளாளர்/ அருகர் மூர்த்தங்கள். அனைத்தும் இங்கிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் எடுத்துச் (கொள்ளையடித்துச்) செல்லப்பட்டவைதானே? இதைப்போலவே பல ஐரோப்பிய மியூசியங்களும் இருக்கும்.

 26. வங்காளத்திலும், ஒரிசாவிலும் நடை பெரும் துர்கா பூஜையில், துர்க்கைக்கு ஒரு புறம், வேல் தாங்கிய “கார்த்திகேயரின்” உருவம் வழிபாடு செய்ய படுகிறது. இதை நான் நிறைய துர்கா பூஜை பந்தல்களில் பார்த்து இருக்கிறேன். அங்கே “கார்த்திக்” என்ற பெயரில் மக்கள் முருகனை அறிந்து இருக்கிறார்கள்.

 27. மதிப்பிற்குரிய உமாசங்கர் அவர்களுக்கு,

  தாங்கள் என் போன்ற இளைஞர்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் ஆதவிற்கும் மிக்க நன்றிகள். தாங்கள் தெரிவித்துள்ளது போல எனக்கு வாய்ப்பு இறையருளால் ஏற்படுமாகில் மிக்க மகிழ்ச்சியடைவேன். .

  தங்களின் புலமையைக்கண்டு வியப்புறுகிறேன். வேளாங்கண்ணி என்ற பெயரில் அங்கயற்கண்ணி, என்ற சொற்பத கருத்து…. வேல்+ அம்+ கண்ணி என்றது போன்ற உணர்வு இருக்கிறதல்லவா? இதுவே இப்படி நான் எழுதச் செய்தது. “வேல் நெடுங்கண்ணி”யே வேளாங்கண்ணி என்றாயிற்று என்று நண்பர் ஒருவர் எழுதியதும் நினைவிற்கு வருகிறது.

  மேலைநாட்டு மியூசியங்கள் பலவற்றிலும் ஹிந்து சமயச் சார்பான பல விஷயங்கள் இருப்பதாகவே நானும் அறிகிறேன். இது கொள்ளையடிக்கப்பட்டதான பொருட்களாயும் கிறிஸ்துவம் வர முன் உலகெங்கும் பரவியிருந்த ஹிந்து மதத்தின் அடிப்படையில் வந்த பொருட்களாயும் இருக்கலாம் என நம்புகிறேன்.

 28. பாவம் ,இந்து சமயத்தின் கடல் போன்ற தத்துவங்களும்,நூல்களும்,ஆயிரக்கணக்கான மகான்களும்,தேவதைகளும்,கடவுளர்களும் அது சார்ந்த வழிபாடுகளும் கண்டு சுவிசேஷகர்களின் வயிறு எரிகிறது.

 29. கடந்த சில நாட்கள் முன் தினமலர் செய்தியில்,வேளங்கன்னியில் ஒருவர் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது ஒரு பஞ்சலோக சிலை கிடைக்கவும் மேற்கொண்டு அரசாங்க அதிகாரிகள் வந்து உடனிருந்து மேலும் பல சிலைகளை (எல்லாம் தெய்வ மூர்த்தங்கள்) அகழ்ந்தெடுத்திருக்கிரார்கள்.

  சம்பந்தப்பட்ட துறை சிலைகளை எடுத்து சென்று விட்டனர்.அதனை அவர்கள் பாதுகாப்பாக மியுசியத்தில் வைத்து விடுவார்கள்,எந்த காலத்தில் யார் கட்டிய கோவிலின் சிலை அது ஏன் புதைக்கப்பட்டது,இதன் பின்னல் நடந்த சதி என்ன என்று எல்லாம் (எல்லோர்க்கும் புரிந்திருக்கும்) ஆராயவோ,உண்மையை வெளியிடவோ மாட்டார்கள். தேவைப்பட்டால் அது வேளங்கன்னியில் கிடைத்தது என்பதையே மறைத்து விடுவார்கள்.(மத சார்பற்ற அவுரங்கசிப், மன்னர் ஜனநாயக ஆட்சி)

  இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ எப்படி வந்தது.அது ஏற்கனவே அங்கே இருந்து வழிபட பட்டு பின்னர் புண்ணியமான அப்பாவிகளால் அன்றைய அரசாங்கத்தின் பேருதவியோடு சமாதானமாக( ஹி,ஹி) கோவிலை இடித்து தரைமட்டமாக்கி சுவடுகளை அழித்து மண்ணில் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.அல்லது அதை காப்பாற்ற அங்கே இருந்த எஞ்சிய சில பாவிகள் அதனை புதைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு.கோவா பற்றிய கதையை நாம் ஏற்கனவே இந்த தளத்தில் படித்ததை நினைவு படுத்தியது.

  தமிழ் இந்து தளத்திற்கு ஒரு வேண்டுகோள்
  திரு மயூர கிரி சர்மா அவர்கள் இந்திய வந்து சொற்பொழிவாற்றினால் தயவு செய்து அதனை இந்த தளத்தில் வெளியிடுங்கள்,இன்னும் வேறு யார் யார் எங்கு சொற்பொழிவு செய்கிறார்கள் என்பதையும் முடிந்தவரை வெளியிட்டால் நன்றாக இருக்கும்,அந்த அந்த ஊர் நண்பர்கள் சென்று கலந்து கொள்ள வசதியாக இருக்கும்.பரிசீலிக்கவும்.

  வருங்கால இந்து சமுகத்திற்கு புதிய சொற்பொழிவளர்கள் இல்லை என்ற கவலை எனக்கும் உண்டு. பள்ளி கல்லுரி மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு சுகி சிவம் போன்ற பேச்சாளர்கள் பயிற்சி தரவும் முயற்சி எடுக்க வேண்டும்.
  முடிந்தால் ஜூனியர் டாப் சிங்கர் போல போட்டி வைத்து சிறுவர்களின் பேச்சு திறமையை,சமய அறிவை வளர்க்கவேண்டும்.இதனால் சிறந்த உபன்யாசகர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது. இதற்க்கு ஆதீனங்கள் முன் வந்தால் முடியும். (கற்பனையின் உச்சம் என்று நினைக்கிறேன்).

  வாரியர் சுவாமிகளின் சிஷ்யை என்று ஒரு பெண்மணி சன் டிவி ,தெய்வ தரிசனம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அவர் அத்துடன் தன் சேவையை நிறுத்திகொள்கிறாரா அல்லது சமய உபன்யாசங்களும் தன் குரு வழியில் செய்கிறாரா என்று தெரியவில்லை.
  இருக்கும் ஒருசில உபன்யாசகர்களும் நகரத்தோடு தம் சேவையை முடித்து கொள்ள வேண்டியுள்ளது.அழைப்பு இருந்தால் தானே அவர்களும் கிராமங்களுக்கு வருவார்கள்.இதற்க்கு நாமே அவரவர்க்கு முடிந்தவரை அவரவர் கிராமங்களில் ஏற்பாடு செய்யலாம்.
  பாகவதம்,பகவத் கீதை, கந்தபுராணம்,சௌந்தர்யா லஹரி ………………… எல்லாம் என்ன என்றே நிறைய இந்துக்களுக்கு (அதிலும் படித்த,தெய்வ நம்பிக்கை உள்ள ) தெரிவதில்லை.கிராமங்களில் இந்த விழுக்காடு அதிகம்.

 30. பெரியபுராணம்,திருவிளையாடல் புராணம்,தேவாரம், திருவாசகம்,திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி ……………………………என்று சொன்னால் இது எல்லாம் என்ன என்று கேட்பவர்கள் நிறைய உண்டு அதனை படித்திருக்க வேண்டாம்,குறைந்த பட்சம் அது என்ன? அதன் கருத்து என்ன? என்றாவது தெரிந்திருக்கவில்லை என்றால் பின்னாளில் அது திருத்தி (கேவலமாக,அக்னி ஹோத்ரி ஐயங்கார் நக்கீரனில் எழுதியது போல ) எழுதப்பட்டு நம் மக்களிடம் இவையெல்லாம் தவறானவையாக காட்டப்பட்டு மதம் மாற்ற முயற்சிக்கப்படும். இதனை தவிர்க்கவாவது எதில் எதை பற்றி இருக்கிறது.என்று மேலோட்டமாகவாவது பொது மக்களிடம் போய் சேர ,தெளிவாக உபன்யாசகர்கள் வேண்டும்.
  வைணவ பெயர் கொண்ட கிறித்தவ கைப்பாவை அக்னி ஹோதிரிக்கு எதிர் வாதாட இன்று நமக்கு ஒரு கிறித்துவ பெயர் கொண்ட ஜான் என்ற உண்மை வைணவர் உள்ளார் என்பது ஒரு சிறிய மகிழ்ச்சி.

 31. திரு சர்மா அவர்கட்கு,
  மிகவும் ஆராயிந்து எழுதிய கந்தபுராணம் எமது சொந்த புராணம் தமிழ் ஈழம் மக்களின் உண்மை நிலை .நீங்கள் இதில் உள்ள சால்மலி தீபம் விபரம் கவனத்தில் எடுக்கவில்லை .வீரமஹென்றபுரம் .மிகவும் முக்கியமானது எனது கருத்து ..இந்தியாவில் பஞ்சாப் மாநிலதில் உள்ளமுருகன் கோவில் வடநாட்டவர் முருகனை கர்திக்ச்வாமி என்று வழிபடுகின்றனர்.ஆனால் இன்று ஈழமண்ணில் எமது சந்ததிகள் அழிந்து சரித்திரங்கள் அழிந்து தவிக்கும் ஈமது மக்களை எல்லாம் வல்லமுருகன் காப்பாற்றுவான் இன்று ஈழம் மக்களின் முயற்சியினால் சைவமும் தமிழும் கலாசாரமும் உலகமெல்லாம் சரித்திரம் படைக்கின்றது இங்கிலாந்தில் இப்போது ஐந்து தேர்த்திருவிழா முடிந்து என்னும் இரண்டு தேர் திருவிழா நடிபெற உள்ளது முயற்சிக்கு உங்களஊக்கு முருகன் துணை.

 32. இன்று வானொலியில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவில் இருந்து ‘கந்தபுராணத்தின் முதல்’ பகுதியை ஒலி பரப்பினார்கள். அதை ஆனந்தமாக கேட்டோம். அப்பொழுது திரு மயூரகிரி சர்மா அவர்கள் எழுதிய இந்த கட்டுரை என் நினைவிற்கு வந்தது.

  சோமசுந்தரம்

 33. வேளாங்கன்னியில் சர்ச் இருக்கும் இடத்தில் பழங்காலத்தில் ஒரு சித்தர் இருந்ததாகவும் அவர் அங்கு ஜீவ சமாதி ஆகி வேண்டுபவருக்கு வேண்டும் வரம்அளித்துக் கொண்டு இருந்ததாகவும் அதன் மீதுதான் சர்ச் கட்டப் பட்டது என்றும் கூறப்படுகிறது.

 34. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி இங்கு இத்தளத்தில் பதிவு செய்தமை போல 2011 இம்மாதம் பெப்ரவரி 22ம் திகதி பிரம்ம.. தி.மயூரகிரி சர்மா அவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் திருமிகு சட்டவாளர் உமாசங்கர் அவா’;களின் இல்லத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கந்தபுராணம் பற்றி சிறப்புச் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.

  இது போல இவ்வாரமும் இதற்கு முதல் வாரமும் தமிழகத்தில் தங்கியிருந்த சர்மா அவர்கள் காஞ்சி சங்கராச்சார்ய மடம் சென்று பெரியவரையும் பாலபெரியவரையும் சந்தித்திருக்கிறார்.

  அங்கே ஜெயேந்திர பஞ்சரத்னம் ஒன்று பாடி பெரிய ஸ்வாமிகளுக்கும்- தமிழில் விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு சில பாடல்களும் எழுதியும் சமர்ப்பித்து ஆசீh’;வாதம் பெற்றிருக்கிறார். காமாட்சியம்பாளின் ரதோத்ஸவ நிகழ்வில் காமாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடி சமர்பிபித்திருக்கிறார். காஞ்சி மட வாயிலில் அம்பாள் ரதத்தில் வந்த போது இப்பாடல்கள் பாடப்பெற்றதாகவும் அறியவருகிறது.

  இது போலவே திருத்தலங்கள் பலவற்றை தரிசனம் செய்ததுடன்.. திருவாவடுதுறையாதீனம்- திருப்பனந்தாள் ஆதீனம்- தருமபுரம் ஆதீனம் ஆகியவற்றிற்குச் சென்று மகாசந்நிதானங்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். திருவாவடுதுறையாதீனத்தில் சிறப்புக் கௌரவமும் மாசிமகத்தன்று பெற்றிருக்கிறார்.

  தமிழ்ஹிந்துத் தளத்தில் ஏற்பட்ட நட்புறவே இவற்றிற்கு எல்லாம் வாய்ப்பளித்தஜருக்கிறது என்று இது தொடர்பில் நீர்வேலி இணையம் என்கிற இணையமும் குறிப்பிட்டிருக்கிறது.

 35. அருட்திரு மயூரகிரி சர்மா அவர்களின் சிந்தனைக்கினிய கந்தப்புராணம் அருமையாக அமைந்துள்ளது. கந்தபுராணத்தின் தத்துவமும் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது அதில் காணப்படும் அழகியலும் சமய சமரசமும் இனிமையாக எழுதப்பட்டுள்ள்ளது. இறைவனுக்கு பெண்டா பிள்ளையா? வட நாட்டில் முருகன் இல்லையே என்ற திரு சிசில் சாமுக்கு அருமையான விடை அளித்துள்ளார்கள் அன்பர்கள். வாரியார் சுவாமிகளுக்குப்பிறகு தமிழகத்தில் கந்தப்புராண சொற்பொழிவு செய்ய ஆள் இல்லையே என்று பல நண்பர்கள் வருந்துகிறார்கள். வாழையடி வந்தத்திருக்கூட்டத்தில் என்றும் குறைவில்லை.நீங்கள் அவசியம் தமிழ் தொலைக்கட்சிகளில் நம் சமயம் ஆன்மிகம் சார்ந்த நிகழ்சிகளைக் காணுங்கள். ஜெயா, விஜய்(பக்தி), போன்ற ஒருசில நம்பிக்கை ஊட்டுகின்றன.
  இன்றைக்கு நம் சமயத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் குறை ஆள் இல்லையே என்பதல்ல மாறாக தொலைத்தொடர்பு சாதனம் இல்லையே என்பது தான். ஹிந்தியில் உள்ள ஆஸ்தா, சம்ஸ்கார் போல தமிழில் ஆன்மீக டிவி இல்லையே என்பது வேதனை. கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் ஆன்மீகத்திற்கு தனி டிவி சேனல்கள் உள்ளனவே. அருளோடு பொருளுடையோர் இதற்க்கு ஆவன செய்ய வேண்டும். அதற்கு ஆடல் வல்லான் அருள் செய்ய வேண்டும்.
  அன்பன்
  சிவஸ்ரீ விபூதிபூஷன்

 36. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் பல. .பல அத்தியாயங்களை ஒரு குறுகிய பக்கங்களில் திறமையாக வெளியிடுவது என்பது முடியாத காரியம். இருந்தும் தாங்கள் எல்லாவித கருத்தக்களையும் புகுத்தி , யாவரும் படிக்கும் அளவில் நிறைவு செய்திருப்பது பெருமைக்குரியது .என் தந்தை திரு. கி.வா.ஜ. அவர்கள் ‘.கந்தன் கனியமுதம்” என்ற நூல் எழுதியிருக்கிறார் . அதைப் படிப்பவர்களுக்கு திருமணம்
  நிச்சயம் கூடும் . அவ்வாறே இதைப் படிப்பவர்களுக்கும் நல்லதே கிட்டட்டும் .
  உமா பாலசுப்ரமணியன்

 37. வருகிற புதன் கிழமை நவம்பர் ௧௪
  மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வரர் ஆலயத்தில் கந்த புராணம்
  ஏன் இளையவர்கள் படிக்க வேண்டும் என்ற தலைப்பில் பேச
  இருக்கின்றேன். எனது முயற்சி சிறக்க தொடர வாழ்த்துங்கள்

 38. very nice article. but the article contains the photo of kavi rakshasa Kachiyappa munivar why i dont know. the tamil translation of kandhapurana was done by Kachiyappa sivachaariyar who is different from Kachiyappa munivar…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *