சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் -1

(தொடர்ச்சி….)

girlsசென்ற பகுதிக்கு, பெண்கள் தரப்பில் இருந்து இரண்டே பேர்களைத் தவிர வேறு யாருமே இதற்குப் பின்னூட்டமிடவில்லை. நண்பர் ஒருவர் சொன்னது சரிதான் என்று நினைக்கிறேன். “எல்லாப் பெண்களும் உங்க கிட்டே கோபமாய் இருப்பாங்க. உங்களை இந்த மட்டோடு விட்டுட்டாங்களேனு நினைச்சு சந்தோஷப்படுங்க!” என்று சொன்னார். அவர் சொன்னப்போது சிரிப்பு வந்தாலும் உண்மையில் பல பெண்களும் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். சந்திரா என்னை அடிப்படைவாதி என்று சொன்னதில் ஆச்சரியமும் இல்லை. சுதந்திரம் என்பதற்கான அளவுகோல் என்ன?? அதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சுயக் கட்டுப்பாடு இல்லாத எந்தச் சுதந்திரமும் பலன் அளிப்பதே இல்லை. இன்றைக்கு நம் நாடு இருக்கும் நிலைமைக்குக் காரணமே  கிட்டத்தட்ட 50 விழுக்காடு பெண்கள் இந்தச் சுயக் கட்டுப்பாட்டில் இருந்தும் கலாசாரத்திலிருந்தும் விலகிப் போனதுதான்.
 
ரிஷி ரவீந்திரன், கட்டுரை சமநிலையில் எழுதப்படவில்லை என்கிறார். அது எப்படி என்று அவர் சொல்லவே இல்லை.  இன்றைய காலகட்டத்தில் ஆண்களும், சரி, பெண்களும் சரி எல்லாவகை குணங்களையும் கொண்டு இருந்தாலும் சமுதாயத்தில் இன்னமும் பெண்ணின் முக்கியத்துவம் குறையவில்லை என நினைக்கிறேன். குறைய ஆரம்பித்து வருகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.  ஒரு பெண் அப்பாவியாக வெகுளியாக இருந்துவிடலாம், தப்பே இல்லை.  ஏனெனில் அந்தப் பெண்ணால் எப்படிப் பட்ட புத்திசாலியான கணவனையும் தன்வயப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் முட்டாள் கணவன் என்றாலோ மிக மிகப் புத்திசாலியான பெண்ணே தேவை. அத்தகைய புத்திசாலித்தனம் இன்றைய பெண்களிடம் இருக்கிறதா? அதற்காக ஒட்டுமொத்த ஆண்களை நான் முட்டாள் என்றெல்லாம் சொல்லவில்லை.  இந்த இடத்தில் கணவனைச் சாமர்த்தியமாகவும், திறமையாயும்  தன் வயப்படுத்துவதையே குறிப்பிடுகிறேன். ஏனெனில் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இன்னமும் திருமணமும், கணவனும் முக்கியமான அங்கம் வகிக்கின்றனர்.

wivesபடித்து லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் முறையான திருமணவாழ்வு இல்லாமல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி வாழ்க்கை நிறைவடைவதே இல்லை. மேலும் பெண்ணானவள் ஆலமரத்தைப் போல் விழுது விட்டுப் படரும் இயல்பு கொண்டவள்..  மரத்தை எப்படி வேரோடு பிடுங்கினால் பாதிப்பு ஏற்படுமோ அப்படியே குடும்பம் என்னும் வேரில் இருந்து பெண் தன்னை விடுவித்துக் கொள்வதும் கடினமே.  ஒரு பெண்ணால் எல்லாப் பந்தங்களையும் அறுத்துத் தன்னை விடுவித்துக்கொண்டு வெளிக்கிளம்புவது மிகக் கடினம்.  வெளிக்கிளம்புவது என்பது இங்கே வேலைக்குச் செல்வதை மட்டுமே குறிக்கவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்திரா நூயியே, “அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே நான் என் குழந்தைகளுக்குத் தாயாகவும், என் கணவருக்கு மனைவியாகவும் மாறிவிடுகிறேன்.” என்று சொல்லி உள்ளார். ஒரு பெரிய குளிர்பானக் கம்பெனியின் நிர்வாகியான அவரே இப்படிக் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது நம் நாட்டுப் பெண்கள் அதிலே பாதியானும் காட்டுகிறார்களா?

பெண்களாகிய நாம் நமது உரிமைகளை மட்டுமே நினைத்து அவைகளைப் பெற ஓடினோமானால் என்ன நடக்கும்? நம் கைகளுக்கு அவை எட்டாத் தூரத்திலேயே காட்சி அளிக்கும். வேண்டுமானால் போராட்டங்கள் நடத்திக்  கடுமை காட்டிப் பெறலாம். அதுவா நன்மை? உரிமைகளை மட்டுமே மனசிலே நினைத்துக்கொண்டு நம் கடமைகளை மறக்கலாமா?  கடமைகளுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் அல்லவா? கடமைகளைச் செய்தோமானால் நாம் கேட்காமலேயே அனைத்து உரிமைகளும் நம்மிடமே தானாகவே வருமே!

ஆணைவிடவும் பெண்ணுக்கு இயற்கை அறிவும், உள்ளுணர்வும் அதிகம் என்றே சொல்லலாம். அநேகமாய்ப் பெண்களின் உள்ளுணர்வுகள் நூற்றுக்கு நூறு சதம் சரியாகவே இருக்கும்.  ஆணிடம் இந்த ஆக்க சக்தியும், ஆன்ம இயல்பும் இயல்பாகவே குறைந்தே காணப்படும். இது இயற்கை விதித்த நியதி. அதை ஈடு கட்டும் வகையிலேயே பெண்ணிடம் இவை அபரிமிதமாய்க் காணப்படுகின்றன.  வில்லையும், அம்பையும் எடுத்துக் கொள்ளுங்களேன். தனித்து இயங்க முடியுமா? வில்லில் அம்பைப் பூட்டி நாணால் வளைக்கவேண்டும் குறி வைத்த இடத்தில் தாக்க. குடும்பத்திலும் அப்படியே. வில்லாகிய ஆண், நாணாகிய பெண்ணால் அவள்பால் வளைந்தே அம்பு என்னும் குடும்பத்தைப் பூட்டுகிறான். அது தர்மம் என்னும் குறியைச் சரியாகப்போய்த் தாக்கும்.  தன் அன்பால் பெண் ஆணை வளைக்கிறாள்; என்றாலும் அவனுக்குக் கீழ்ப்படிகிறாள். அதே சமயம் அவனைத் தன்பால் இழுக்கவும் செய்கிறாள். ஆனாலும் அவனையே பின்பற்றிச் செல்கிறாள். வில்லுக்கு நாண் இல்லாமல் எப்படி வேலை இல்லையோ அப்படியே ஆணுக்குப் பெண் இல்லாமலும், பெண்ணுக்கு ஆண் இல்லாமலும் குடும்ப அமைப்பு என்பதே இல்லை. இளம் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது இதைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னவை:

“பெண்ணுரிமைவாதிகள் தங்கள் கடமைகளைத் தட்டிக் கழிப்பதற்காகப் போராட்டம் என்னும் போர்வைக்குள்ளே ஒளிந்து கொள்கிறார்கள். சமூகத்தில் பல வேறு வேறு தளங்களில் இயங்கும் பெண்களுக்கும் உண்மையாகவே அவர்களின் நியாயமான உரிமை மறுக்கப் படுகிறது. அத்தகைய பெண்களை அவர்கள் இனம் கண்டு அவர்களுக்காகப் போராடுவதில்லையே, ஏன்? அதிகம் படித்த சுயமாகத் தன் காலில் நிற்கும் பெண்களே இத்தகைய பெண் உரிமைப் போராட்டங்களை நடத்துகிறார்கள்; இந்தச் சித்தாந்தத்தை அவர்களே முழுமையாகப் பின்பற்றுகிறார்கள். மேலும் நகரத்துப் பெண்களிடமிருந்து கிராமப் புறத்துப் பெண்கள் வெகுதூரம் வேறுபட்டு இருக்கிறார்கள். அவர்களின் உரிமைகள் பற்றி என்றும், யாரும், எதுவும் பேசுவதில்லை. இப்போது சென்ற பதிவில் நீங்கள் எழுதி இருப்பவை, நகரத்துப் பெண்களுக்கே செல்லும். ஆண்களே இல்லாத உலகில் பெண்கள் இருக்கப் போகிறார்களா? பெண்களே இல்லாமல் ஆண்களால்தான் இயங்க முடியுமா? இப்படிச் சில பெண்கள் பெண்ணுரிமை பேசிக் கொண்டு ஆண்களை எதிரிகளாய்ப் பார்த்தால் அந்த இயக்கம் எவ்வாறு வெற்றியடையும்?”
 
city_girlsஇவையே அவர் சொல்வதன் சாராம்சம். கிராமத்திலும் பெண்களின் நிலைமை மோசம் என்று சொல்லக் கூடிய அளவில் இல்லாவிட்டாலும், நவீன, நகர, நாகரிகத் தாக்குதல்கள் அங்கே அதிகமாகவே காணப்படுகின்றன. அடிக்கடி எங்கள் கிராமத்திற்குச் செல்பவள் என்ற முறையில் சிலவற்றைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். நகரங்களிலேயே வசிக்கும்  எனக்குக் கூடத் தெரியாத பல அழகு சாதனப் பொருள்களும், உடை அலங்காரங்களும் கிராமத்துப் பெண்களுக்குத் தெரிந்திருக்கின்றன. அதற்குக் காரணம் தொலைக்காட்சியும், அதன் தாக்கமுமே. நகரத்துப் பெண்கள் என்றாலே தலையை விரித்துப் போட்டுக் கொண்டு (இதுக்கு யார் என்ன சொல்லப் போறீங்களோ சொல்லுங்கள், ஆவலோடு காத்திருக்கிறேன்), சல்வார், கமீஸ் போட்டுக் கொண்டு/ அல்லது மிக மிக நாகரிகமாய்க் குட்டைப்பாவாடை அணிந்த வண்ணம்/, கவர்ச்சியான உடை உடுத்திக்கொண்டுதான் இருப்பார்கள் என்றும் அடிக்கடி ஹோட்டல்களில் அதுவும் நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற ஹோட்டல்களில் சாப்பிடலாம் என்பதும் அவர்கள் கனவு.   அப்படி எல்லாம் இல்லை என்றாலும் சிலருக்கு நம்பிக்கையும் வருவதில்லை.  நகரத்துப் பெண்களின் உடை அலங்காரங்களைத் தான் விளம்பரங்களிலே பார்க்கிறோமே என்பார்கள். இப்படியான ஒரு வாழ்க்கைக்காகவே,  எங்களுக்குத் தெரிந்த ஒரு பெண் தன் கணவனை நச்சரித்து நகரத்தில் வீடு பார்த்துக் குடிவைக்கும்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறார். தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலிப் பக்கத்துக் கிராமத்தில் அழகான, ஓரளவு இன்னும் மாசுபடாத தாமிரபரணிக் கரையில் இருக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணான அவர், “இங்கே வராதே, உனக்கு இங்கெல்லாம் சரிப்படாது!” என்று நான் சொன்னதன்பின் என்னை எதிரியாகவே பார்க்கிறார். ஆனால் அவர் கணவரோ அவரை விட மன முதிர்ச்சி பெற்றவராய், “நீங்கள் சொல்வதின் உண்மை அவளுக்கு இங்கே வந்து பட்டபின்தான் தெரியும், வந்து இருக்கட்டும்,” என்று சொல்லிக் குடித்தனம் வைத்திருக்கிறார். இது ஒரு சின்ன உதாரணம்தான்.

turmeric-powderஇதற்கெல்லாம் காரணமே தொலைக்காட்சிகளும் அதன் நிகழ்ச்சிகளும் அவற்றின் தாக்கங்களுமே. தொலைக்காட்சி விளம்பரத்தின் சிகப்பழகு க்ரீம் விளம்பரத்தைப் பார்த்துட்டு அதை வாங்காத பெண்ணே தமிழ்நாட்டின் எந்தக் கிராமத்திலும் இல்லை என அடித்துச் சொல்லலாம். நம் மஞ்சளும், கஸ்தூரி மஞ்சளும் செய்யாத ஒன்றையா இவை செய்துவிடப் போகின்றன?? எனக்கு முகப்பரு வந்தபோது நான் போட்டுக் கொண்ட க்ரீம்– வசம்பு, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் சந்தனக் கல்லில் அரைத்து, விளக்கெண்ணெய் விட்டுக் குழைத்து இரவு படுக்கும்போது போட்டால் காலை அவை அமுங்கிவிடும். இது என் சொந்த அனுபவம். இப்போது அதற்கெல்லாம் நேரம் எங்கே என்பவர்கள் வாரம் ஒருநாள் ஒதுக்கி இவைகளைப் பொடிசெய்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாமே? நிச்சயமாய்ப் பலன் தரும்.

“அட, உனக்குச் சரியாப் போச்சுன்னா எல்லாருக்குமா?” என்று கேட்பவர்களுக்கு ஒரு வார்த்தை. இதன் மகத்துவம் தெரிந்தே தான் மஞ்சளுக்குப் பேடண்ட் வாங்கி இருத்திருக்கிறார்கள் மேல்நாட்டுக்காரர்கள். அங்கே இருந்து இதே அறிவுரை வந்தால் நாம் ஏற்றுக்கொள்வோம். நம் நாட்டிலேயே சொன்னால் அதை கேலி செய்வோம். மூடப் பழக்கம், பழங்காலம் என்றெல்லாம் சொல்லுவோம்.

இந்தச் சிவப்பழகு க்ரீம் போட்டுக்கொள்ளவில்லை என்றால் கருப்பாகவே இருப்பார்கள் என்று வேறு சொல்கிறார்கள். மேலும் கருப்பான பெண் என்றால் கல்யாணம் செய்துகொள்ள மாட்டார்கள் என்று முன்பு வந்த விளம்பரங்களிலே காட்டிக்கொண்டிருந்தார்கள். அது பரவாயில்லையா? அதை நிறபேதம் கற்பிக்கப் படுவதாய் ஏன் பெண்ணுரிமைக்காரர்கள் எவரும் நினைக்கவில்லை? அதை ஏன் அவர்கள் எடுத்துச் சொல்லவே இல்லை? ஏன் பெண் கருப்பாய் இருந்தால் மட்டம் என்று நம்மைப் பற்றி நாமே ஏன் தாழ்வாக நினைக்க வேண்டும்? அதற்காகவெல்லாம் மனம் சோர்ந்து போகலாமா? இப்பொழுதும் கருப்பான பெண்ணுக்கு  வேலை கிடைக்காது; மாடல் ஆக முடியாது; நடன அரங்கில் திறமையாக ஆடத்தெரிந்தாலும் பின்வரிசைக்குத்தான் போகவேண்டும்;  டல் திவ்யாவிற்கு டேட்டிங் போக வகுப்பில் சக மாணவன் கிடைக்க மாட்டான்; கருப்பாக இருப்பவள் சொல்லும் பிக்னிக் ஸ்பாட்டை யாருமே கவனிக்கமாட்டார்கள்… அப்படி இப்படி என்று என்னென்னவோ சொல்லிப் பயமுறுத்தல்கள். கல்யாணம் தான் வாழ்க்கையா ஒரு பெண்ணுக்கு என்பவர்கள், இந்த மாதிரி மாடல் ஆனதோடு, அல்லது சினிமாவில் நடிப்பதோடு, அல்லது நல்லதொரு வேலை கிடைப்பதோடு திருப்தி ஆகி விடுகிறதா என்பதைக் கேட்டால் பதில் சொல்ல முடியுமா? வாழ்க்கையில் இப்படியோர் உயர்ந்த நிலைக்கு வந்தாலும் அந்தப் பெண்ணால் மன அமைதியோடு இருக்க முடியுமா?

fair-and-lovely

இந்தச் சிவப்பழகு க்ரீமை வாங்கிப் பூசிக்கொண்டால்தான் (அதுவும் ஏழே நாளில் வித்யாசம் ஏற்பட்டு) உயர்ந்த இடத்துக்கு வரமுடியும்; இதை  வாங்கினால்தான் உனக்கு வாழ்க்கையே என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் வாழ்க்கையின் மன மகிழ்வுக்கு இது மட்டுமே போதுமா என்று அவர்களைக் கேட்டால் அதை ஒத்துக்கொள்வார்களா? அவர்களுக்கு அவர்கள் தயார் செய்யும் பொருள் விற்பனையில் முதலிடத்தில் இருக்கவேண்டும். இதை ஒரு வியாபாரத் தந்திரம் என்று மட்டுமே சொல்லலாம். மற்றபடி பெண்கள் இதனால் உயர்ந்து விட்டார்கள் என்று சொல்ல முடியுமா?  இதை ஒரு மதிநுட்பம் படைத்த முதிர்ச்சியடைந்த பெண் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போய்விடுவாள். ஆனால் படித்த பெண்களிடமே இதற்கு எதிர்ப்பே இல்லை. அவர்களும் இதனால் என்னவோ வாழ்க்கையே சாபல்யம் அடைவதாக நினைத்து வாங்குகிறார்கள்.

ஆண்களுக்கான ஷேவிங் க்ரீம் விளம்பரமா? அதற்கும் ஒரு பெண் வந்தால்தான் விளம்பரமே சாபல்யமடையும். அந்த ஆணைப் பார்த்த பெண்கள் அவனுக்காகவே  வரிசையிலே நிற்பார்கள். இன்னும் செல்போன் என்னும் கைபேசி விளம்பரம்… ஓர் ஆண் அனுப்புகிற எஸ்.எம்.எஸ்ஸுக்கும், அவனோடு பேசவும் பெண்கள் வரிசையிலே வருவார்கள். வேறு வேலைவெட்டி எதுவும் எல்லாமல் என்னவோ இதற்காகவே பெண்கள் காத்துக்கிடக்கிறாற் போல் காட்டுவார்கள். எந்தப் பெண்ணுரிமைக் கழகம் அல்லது சங்கம், அல்லது மக்கள் பிரதிநிதிகள் இதை எதிர்க்கிறார்கள்?
 
immoralஇங்கே என்னை அடிப்படைவாதி என்று சொல்லும் குலசை சேகர் அவர்கள் இதை எல்லாம் ஆதரிக்கிறாரா? இதற்காகக் குரல் கொடுத்த பெண்ணுரிமைக்காரங்களைச் சுட்டிக் காட்டட்டும். அவங்க கேட்பது 33% பெண்களுக்கான ஒதுக்கீடு தான். பாக்கி??? பாக்கியிலே எதுவும் வேண்டாமா?  இந்த ஒதுக்கீடு கொடுத்த உடனே பெண்கள் முன்னேற்றம் அடைந்து இந்தியாவின் எல்லாப் பெண்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிடுமா? பெண்களால் அடிமைப்படுத்தப் பட்டு, அவங்களால் கஷ்டப்படும் ஆண்களையும் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரலாமா?  திரு.குலசை சேகர் கள்ளக்காதல் என்பதையும் சர்வசாதாரணமாக் கூறி இருக்கிறார். இது ஒன்றும் புதுசு இல்லை என்பது அவர் கட்சி. அதனால் நடந்தால் நடக்கட்டும் என்று விட்டுவிடலாமா? வேண்டுமானால் கள்ளக்காதலையும் அங்கீகரிக்க வேண்டும் என்று பெண்கள் போராடவேண்டும் என்று சொல்கிறாரா?  நல்லவேளையா அது பெண்கள் உரிமை என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.

எங்கோ நடந்திருக்கலாம். நடக்கும், நடக்கிறது. ஆனால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் மற்றப் பெண்களும் அதைப் பற்றி அறிய நேரிடுகிறதே? அதற்காக ரகசியமாக நடக்கவேண்டும் என்கிற அர்த்த்த்திலே எல்லாம் சொல்லவில்லை. அடிப்படையான பெற்றோர் வளர்ப்பு முறையே சரியில்லாமல் போனதே இவ்வளவு அவலங்களுக்கும் காரணம். ஆன்மிகம் வேண்டாம் என்று சொல்ல முடியாது. பெண்களை உயர்த்துவதே ஆன்மிகம் ஒன்றுதான். அதுவும் பக்தி கலந்த ஆன்மீகம்.  இன்னும் முடிக்கவில்லை…

(தொடர்வேன்…)

29 Replies to “சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 2”

  1. மிக மோசமான பெண்ணடிமை மனோபாவம். த்மிழ் ஹிந்து தளம் இதை பிரசுரித்தது ஒரு தரப்பு வாதம் என்பதால் என்றால் சரி, ஆனால் தமிழ் ஹிந்து தள ஆசிரியர் குழு இக்கருத்துக்களை ஏற்கிறதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

  2. //மிக மோசமான பெண்ணடிமை மனோபாவம்.// அமாவாசை, ஆண்களை திட்டிக்கொண்டே இருக்கவேண்டுமா என்ன? தவறான வழிநடத்தல்களுடன் நடைபெறும் பெண்ணியத்தை எதிர்த்தால் அதுவும் பெண்ணடிமைத்தனமா? அதுவும் ஒரு பெண்ணே பெண்ணியம் என்கிற போக்கு பெண்களை தவறா வழிநடத்திவிடக்கூடாது என்று சமூகத்திற்குச் சொல்வது பெண்ணடிமைத்தனமா? என்னய்யா உங்கள் புரிதல்? கலாச்சார அல்லது சமூக கட்டுப்பாடு என்று கூறினால் உடனே தாலிபானிஸம் என்று கூற வேண்டியது, பெண்களின் கட்டுப்பாடற்ற தன்மையை பற்றி எடுத்துச் சொன்னால் பெண்ணடிமைத்தனம் என்று கூற வேண்டியது. பின் ஒரு சமூகம் எப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள். கட்டுப்பாடே இல்லாத வேசித்தன வாழ்க்கை தான் உங்களுக்குத் தேவையென்றால் அதை வெளிப்படையாக சொல்லுங்கள். அதைப்பற்றியாவது பரிசீலிப்போம்.. எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் வெறும் குறை மட்டும் சொன்னால் எப்படி?

  3. I am not sure the point the author trying to convey. It look as if the author is stuck in the 18th century and wants the womenfolk stay home, do the cooking and have lots of babies and be under the finacial constraints set by the men. Morals and ethics are to be taught at home and developed. Please repeat it: ten times: “A girl talking to a man is not crime or an immoral act..Neither texting or sending e mails.There is nothing immoral about a girl using makeups or trying to make herself pretty.” As per the author,it is ok to use ” Manjal” but not ok to use anything modern to get rid of pimples- weird! And WOW, TV apparently has spoilt the poor, ignorant village girls. Now, can you believe,crime of crime, these country girls are trying out various beauty products and modern outfits/dresses!! How dare they? It is a big no, no for the author.
    We do not want to start another Hindu Taliban here.

  4. பெண்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது பெண் அடிமை மனோபாவமா – தன் வீட்டு பெண் கடமை உணர்வு இல்லாமல் இருப்பாரேயானால் அதனால் ஏற்படும் கஷ்டங்களையும், வேதனைகளையும், பாதிப்புகளையும் அனுபவித்தவருக்கே ஆசிரியர் சொல்லவருவது புரியும்.

  5. நீதி மன்றமே சொல்லியுள்ளது திருமணத்துக்கு பிறகு ஏது சுதந்திரம் (ஆண் மற்றும் பெண் இருவருக்கும்) என்று, என்று தான் இந்த நவநாகரிக பெண்கள் இதை புரிந்துகொள்வார்களோ தெரியவில்லை……

  6. dear Rama,

    you are trying to dwell on the statements alone and not on the intent

    //
    , can you believe,crime of crime, these country girls are trying out various beauty products and modern outfits/dresses!! How dare they? It is a big no, no for the author.
    We do not want to start another Hindu Taliban here.
    //

    this is not a crime – however putting this at the centre of life and driving life entirely through this perspective as many women and men do today is definitely regrettable. if they earn 10,000 rupees they spend 10,000 on make up, 5,000 on cell phone and 5,000 on dresses.- well if one spends 4 hours on the cell phone a day, what time will they have to do their agreed up on responsibilities.
    if this is the outlook of the millenium, then it is far worse than the 18th century state
    I am sure you are living in a different world and haven’t seen what is reality – there are women who leave 4 months old baby with their parents and go to work just because they need poket money

    the author does not say that it is a crime for women to look pretty – in an effort to become pretty they fall to cheap marketing and spins like this is recommended by Pond’s laboratory which in reality never existed, exists nor will exist. The author is only raising a voice against using women as a medium to sell men’ shaving cream, cell phones and bikes – if you consider this as the mark of the women of the milleniem then it is definitely regrettable
    have you ever seen Axe ad – do you want or do you think women are that kinds

    many women instead of investing on education, career and learning to live a complete life, throw hard earned money on useless things

    many women and men too, can’t surive a crisis nor handle a complex situation today – for them life is as they see in TV and movies. The aurhor is think wants women to be like indra nooyi and not as trishas and asins – if you think this is 18th century outlook – so be it.

    i for sure think, you are mixing up and over strething author’s view points – the points are equally applicable to men also

  7. டிவியின் தாக்கமும் அதனால் ஏற்பட்ட ஒப்பனை மோகமும் (அது பயனில்லாத எதிர்விளைவுகளை தரக்கூடிய கெமிக்கல் பொருள்களின் மேல் என்பதால் மட்டுமே ஆசிரியர் எதிர்க்கிறார் என்று
    நினைக்கிறேன் ) ஒப்பனை வேண்டாம் என்று அவர் கூறுவதாக தெரியவில்லை .ஒருவாரத்தில் சிவப்பழகு கிடைப்பது உண்மை என்றால் எதற்கு இன்னும் இத்தனை கருப்பான பெண்கள் இருக்கிறார்கள். சீரியல்களினால் ஏற்படும் அலட்சிய போக்கு, சீரியல் மோகம், அதனால் பரப்படும் வில்லத்தனம்,வரம்பு மீறல் வரும் தலைமுறைக்கு பரவ இருக்கும் அபாய வாய்ப்பு,இவற்றை தான் கண்டிப்பதாக தெரிகிறது.

    மேலும் கருப்பான பெண்களை இழிவாக காமிப்பதை எப்படி ஒப்பு கொள்ளமுடியும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தானே நம் மரபு பின் எதற்கு ஐந்து பெண்களை கவருவதற்கு ஒரு பாடி ஸ்ப்ரே,ஒரு டூத் பேஸ்ட் என்று கண்டு பிடித்து அது டிவியில் ஒரு வில்லத்தனம் நிறைந்த பெண் கதாபாத்திரம் கொண்ட தொடருக்கு விளம்பரம் கொடுக்கும் போது.தொடரினாலும் விளம்பரத்தாலும் பெண்களை இழிவு படுத்தும் போது ,இளம்பெண்கள் மனம் பதிக்கபட வாய்ப்பிருக்கும் போது , அதை எதிர்த்து எந்த பெண்ணுரிமை அமைப்பாவது போராடியது உண்டா? என்ற ஆசிரியரின் கோபம் நியாயமானதே.
    ஆண்களை விட பெண்களை சில இடத்தில் உயர்த்தித்தான் சொல்கிறார். இக்கட்டுரை இருபாலருக்கும் பொதுவான விசயங்களாகவே,இருபாலரும் கவனிக்க வேண்டிய விசயமாகவே படுகிறது.

  8. The basic problems are (A) what are the rights that should be available to woman (b) what is her role in the society and family nd (C) does she have the frrdom or libery to side step some of the duties inherent in (b)?The conflict is not peculiar to India, it is an age old problem all over the world.It is accentuated by the economic independance and global exposure to multiple cultures and societies and ultimately the decision becomes personal and peculiar to the indiviali concerned who may be lon g to to a touring paant suit brigade or family loving individual.Some misunderstanding of the changes brought about by tempora in the mores of the day have to be left to be sorted out the women themselves with their intuitin and experience.There cannot be a straight jacket.

  9. Pingback: Indli.com
  10. //
    சமுதாயத்தில் இன்னமும் பெண்ணின் முக்கியத்துவம் குறையவில்லை என நினைக்கிறேன்.

    ஆணைவிடவும் பெண்ணுக்கு இயற்கை அறிவும், உள்ளுணர்வும் அதிகம் என்றே சொல்லலாம். அநேகமாய்ப் பெண்களின் உள்ளுணர்வுகள் நூற்றுக்கு நூறு சதம் சரியாகவே இருக்கும். ஆணிடம் இந்த ஆக்க சக்தியும், ஆன்ம இயல்பும் இயல்பாகவே குறைந்தே காணப்படும்.
    //

    இப்படி ஆசிரியர் சொல்லிருப்பதை யாரும் கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை – இது ஆண்களுக்கு எதிராக செய்யும் விமர்சனம் என்று கூட யாரும் போர் கொடி தூக்கவில்லை 🙂

    ஒடனே டபக்குன்னு இது பத்தாம் நூற்றாண்டு சிந்தனை என்று சொல்லிவிடுகிறோம் – பத்தாம் நூற்றாண்டு ஒன்றும் அவ்வளவு கேவலமாக இல்லை நன்றாகவே இருந்தது

    பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் GDP உலக GDP யில் 24 to 27% ஆகா இருந்தது – இதை நோக்குக இன்றைக்கு அது 2 to 4 % ஆகா குறைந்து விட்டதையும் நோக்குக

  11. ஆசிரியர் அவர்களுக்கு,

    முதல் பாகத்தை படித்தவுடன் என் உள்ள குமுறல்களை கொட்டி விட்டேன்.
    ஆண், பெண் உறவு போன்ற விஷயங்களை பற்றியெல்லாம் என்னால்
    கருத்து கூற முடியாது. ஆனால் இன்றுள்ள நிலையில் சட்டமும், சமூகமும்
    பெண்ணிற்கே ஆதரவாக இருக்கின்றன. இது இந்தியா மட்டுமல்லாது
    உலகம் முழுவதும் தோன்றியுள்ள வியாதி என்றே நான் கருதுகிறேன்.

    என்னைப்பொருத்தவரை ஆண்களை அவமானபடுத்தி, போலீஸ்
    ஸ்டேஷனில் கேவலப்படுத்தி, மிரட்டி பணம் பறிக்கும் பெண்களின்
    அடாவடியை எதிர்ப்பது மட்டுமே என் நோக்கம். பெண்களின் சுதந்திரம்
    பெண்களின் பிரச்சினை. என் இனத்தவர்களை சட்ட விரோதமாக
    அழிப்பதை மட்டுமே நான் எதிர்க்கிறேன். மற்றபடி பெண்களின்
    மனநிலையை நான் புரிந்து கொள்ள முயன்றதில்லை. அது என்னை
    போன்றவர்களுக்கு தேவையுமில்லை.

    ஆனால் ஒன்றை கூற முடியும். இந்தியா உலகமயமாக்குதலுக்கு உட்பட்டு
    நடைபோடுவதால் சில கலாச்சார மாற்றங்கள் ஏற்படும் என்றே தெரிகிறது.
    ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த மேற்கத்திய
    கலாச்சாரம் ஒரு சுழற்று சுழற்றி இருக்கிறது.

  12. It look as if the author is stuck in the 18th century and wants the womenfolk stay home, do the cooking and have lots of babies and be under the finacial constraints set by the men. //

    நல்லா ரசிச்சுச் சிரிச்சேன், ரொம்ப நன்றி. பெண்களுக்கு அடுப்பங்கரை தான் கதினு நான் எங்கேயும் சொல்லலை. மற்றப் பின்னூட்டங்களை இன்னும் ஆழ்ந்து படிக்கலை. பின்னர் வருகிறேன்.

  13. நான் இந்த கட்டுரையை வரவேற்கிறேன்
    என் அம்மா வேலைக்கு சென்றார்கள். என் தந்தை என் அம்மா வை விட குறைவாக படித்தவர் குறைவாக சம்பாதித்தவர். எங்களையும் என் அம்மாவையும் எந்த பகுப்படும்மின்றி முழு சுதந்திரம் கொடுத்தார். எனது அக்கா நன்கு படித்தவர் அவரது கணவரும் நன்கு படித்தவர்தான் இருந்தலும் எனது அக்காவுக்கு கட்டுபாடுகள் அதிகம். அவள் ஒன்றும் நகர பெண்கள் போல இருக்க ஆசை படவில்லை. இருந்தாலும் அடிப்படையாகவே சில விஷயங்களில் அவள் அடிமைபடுத்தபடுகிறாள். ஆனால் அவள் இன்றும் அதை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. மிக நுட்பமாக கவனித்துபார்த்தால்
    மிக அதிகபடியாக பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள் எல்லோரும் பக்கத்து இலைக்கு பாயசம் கேட்பவர்கள் போல. (குறிப்பு: நான் எல்லோரையும் சொல்ல வில்லை). ஆனால் பெண்ணுரிமையை நிஜமாக எதிர் பார்க்கும் பெண்களோ அதிகம் பேசுவதில்லை. அதை விரதமாக/ பத்தியமாக எடுத்துக்கொள்கிறார்கள் (அதான் அவர்களை பதிவிரதை ன்னு சொல்றோம் போல). சுருக்கமாக சொல்லணும் என்றால் பெண்ணுரிமையை அதிகம் பேசுபவர்களுக்கு (Obesity) ஒரு சிறு விண்ணப்பம் வாழ்கை / குடும்பம் என்பது பணம் சேர்க்கும் corporate
    நிறுவனம் அல்ல. அது ஒரு அறம்.
    என்னை கவர்ந்த மிக சிறந்த பெண்கள் என்று சொல்ல வேண்டும் என விருப்பப்படுகிறேன்
    ௧. என் தாய்
    ௨. என் மனைவி
    ௩. என் அக்கா
    ௪. என் மகள்
    ௫. உங்களுக்கு எல்லாம் தெரிந்த சங்கீத கலாமணி M.S சுப்புலக்ஷ்மி
    – ஷங்கர்

  14. Mr Sarang,I appreciate your view but the article is apparently about women’s rights ( and too much of them) and not about abuse of money and inappropriate financial management by women. Whatever you say is truely applicable to men also.Anyhow, we have to remind the author that we have moved on from the time when women were just cooks and baby making machines. If she wants to do anything useful for women, her first call should be Islam. Let her address the atrocious way women are treated in Islam and the delibrate lethargy shown by human rights activitists in ignoring their plight. Let her also address the problem of the dreadful dowry in our culture. Or the female infanticide in our villages. Then, we can move on to the subject of ” too much rights” enjoyed or demanded by our women.

  15. Respected Rama-ji,

    //
    Whatever you say is truely applicable to men also.
    //

    True. But only in the case of women, abuse of money etc. happen in the guise of womens rights, and this specific aspect is extremely harmful for women in the first place and society in the second place.

    //
    Anyhow, we have to remind the author that we have moved on from the time when women were just cooks and baby making machines.
    //

    Nobody is talking about machines here. This sort of name-calling belongs to short-sighted feminists of the 60’s and 70’s (who are, btw, on the decline in the Western countries as they have realized that feminism has only made women less happy in life).

    To the best of my knowledge, the author has not said anything that amounts to “forcing women to stay at home and just cook and make babies”. In any case, let us say that some people advocate that it is best for women (as opposed to “women should be forced”) to be good homemakers. If you do not agree with this, please cite facts and reason out scientifically/logically why that is not correct, instead of resorting to name-calling.

    //
    If she wants to do anything useful for women, her first call should be Islam. Let her address the atrocious way women are treated in Islam and the delibrate lethargy shown by human rights activitists in ignoring their plight. Let her also address the problem of the dreadful dowry in our culture. Or the female infanticide in our villages. Then, we can move on to the subject of ” too much rights” enjoyed or demanded by our women.
    //

    The author wants to talk about a certain topic (abuse of power by feminists) which is a genuine problem in several cases, whereas you want her to talk about something else. This is like going to a drama based on Homer’s Illiad and then complaining that there were no pieces from the Shakespere’s works. Why don’t you write an article about the topics that you want to put on the table and give it to Tamilhindu editors?

    Plus that was a silly response… everybody knows about the evils of infanticide, Islamic torture of women, and dowry culture, and everybody here genuinely wants to do everything to stop it. On the other hand, the issue raised in this essay is largely overlooked by today’s “educated” society.

  16. இந்த பாரத பூமி அவ்வையும், வள்ளுவரின் மனைவி வாசுகியும், மண்டன மிஷரரின் மனைவி சரசவாணியும், இவர்களைப்போன்ற எண்ணற்ற பெண் அறிஞர்கள் வாழ்ந்த பூமி.

    இப்போதும் இது போன்ற மகளிர் இருக்கிறார்கள். அவர்களது அடக்கமே அவர்களது அறிவைப் பிரகாசிக்கவைக்கிறது என்றால் மிகையாகாது. இந்த நிரலியில் உள்ள கட்டுரையைக் காண்க.

    https://koottanchoru.wordpress.com/
    ஆகஸ்ட் 18, 2010
    கிரி ட்ரேடிங் கலைவாணியும் ஆதி சங்கரரின் தத்வ போதமும்….
    Posted by srinivas uppili under Misc

  17. Sorry Mr Gandharvan, with due respect,
    I never called the author by any names and I am not sure where you got this idea. The women were cooks and baby making machines in the past in our society.( it was common for a woman to have 9-10 babies , contraception was unheard of). Few women worked and were self reliant financialy, unlike now.Women have come a long way since. I presume you agree to this point
    “The author is not forcing anyone to stay home”.
    Ok, Sir, where did I say that the author did? It was my impression after reading the article( the sentence starts with” it looks like”)
    “Some people feel that women should be good homemakers.”
    Good.
    You are also asking me to provide evidence for YOUR other statements.Pleaseeee!
    You say that the topic is about abuse of power by feminists.
    I did not get that impression.My point being, a girl can be Western in her appearence and still very traditional in her views.I am so proud of some of the young women of India who can give the Western women a run for their money.I know few of them personally as they so happend to be my realtives.They have a large manufacturing base in India and travel overseas regularly for business deals. One of them I know can recite the entire Vishnu Sahshranam by heart. I would like Indians to be modern in outlook but traditional in our dharmic beliefs. Let us not just judge anyone by mere apppearence and what they wear.Of course, as with everything else, there are girls who are exceptions to what I am talking about.For them, being modern means being Western ONLY.
    Where does the poor village girl dressing up come into feminist abuse of rights? Where does this “Manjal”for acne come from?
    Even if the topic is about feminist’s abuse of women’s rights, I, for one, do not think that it is most imporatnt topic we have to deal with at present and of course that is MY opinoin.Like I said earlier, there are a number of vital issues facing women in our country which,in my opinion, need to be addressed first than worry about feminist’s abuse of power.
    Sorry Sir, If my statments have caused you any distress.
    Regards
    Rama

  18. இந்தக் கட்டுரையை நான் வரவேற்கிறேன். பெண்கள் சுதந்திரத்தின் வாசல் வழி உள்ளே நுழைவது சுய நலம் என்னும் கட்டுக்குள்.
    சுதந்திரத்தின் முதல் படியே உடையில் இருந்து தான் துவங்குகிறது. இதன் வரையறையை பெண்களே தான் நிர்ணயிக்கவும் வேண்டும். இதை வேறு யாரும் வந்து செய்தால் அது சரியாகாது. உடையில் துவங்கும் சுதந்திரம் அவரவர் விருப்பத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப ஒரு கட்டுப்பாட்டுக்குள் நிற்கவோ, அல்லது திக்கற்று போகவோசெய்கிறது.

    பெண்ணியம் எதை நோக்கி என்ற என் கேள்விகுறி இந்தக் கட்டுரைகளின் மூலமாக,

    https://www.virutcham.com/category/articles/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-articles/

  19. கட்டுரை ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்.இன்றைய நிலையில் மிகவும் தேவைப்படும் கட்டுரை.
    சொல்லத்துடிக்குது மனசு என்ற ஜீ டிவி நிகழ்ச்சி -கதையல்ல நிஜம் format -அதன் trailer பார்க்கையில் , திருமணம் முடிந்த சில காலத்திலேயே விவாகரத்து கேட்டு கணவனை கொடுமைக்குள்ளாகும் மனைவிகள் அதிகமாகி விட்டார் போலிருக்கிறது.இவர்கள் முக்கிய கோரிக்கையே கணவன் சொத்து தான்.
    போன கட்டுரையிலும் பின்னூட்டத்தில் சொன்னேன்-இந்த சிகப்பழகு கிரீம்கள் மற்றும் ஆண்கள் aftershave முதலியவைகளின் விளம்பரங்கள் கேவலத்திலும் கேவலம்.
    அந்த aftershave விஷயம்-ஒரு எருமையோ டிநோசாரோ இதை போட்டுக்கொண்டாலும் பெண்கள் இப்படித்தான் அடித்துப்பிடித்து மேலே பொய் விழுவார்களோ? இதை பெண்கள் எதிர்க்காததன் காரணம் சத்தியமாக புரியவில்லை.வெறும் கிறக்கமான வாசனைக்கு மயங்குபவர்களா அவர்கள்?
    கட்டுரை ஆசிரியர் சொல்வது போல் உள் உணர்வு மிக்கவர்கள் அல்லவா அவர்கள்? வீட்டில் அம்மாவோ அக்காவோ, மனைவியோ, இவர்கள் .இன்னாரை நம்பலாம் , இன்னாரை நம்ப வேண்டாம் என்று சொல்வது மிக சரியாகவே இருக்கும்.
    facebook தளத்தில் தெரிந்தவர் மகளின் போட்டோ பார்க்க நேர்ந்தது. நல்ல படிப்பாளி-தன முயற்சியால் வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கிறாள்.அவள் அணிந்திருந்த குறைந்த உடைகளை பார்த்த எனக்கு அதிர்ச்சி.
    அவள் பெற்றோருக்கு இது பெரிதாக த்தெரியவில்லை.அவர்களுக்கு ஒரே பெருமை தான். அர்ஜுனன் கீதையில் புலம்புவதைப்போல் [ ஒரு சில] பெண்கள் மதி மயக்கம் அடைந்து விட்டார்கள்.கலாசார வேர்கள் பூச்சியரித்துப்போனால் என்னாகும்?
    ஆணோ பெண்ணோ , அவர்கள் பெருமை ஒழுக்கத்தில் உள்ளது. miniskirt என்பது முதல் அடி தான். எதை அணிந்தாலும் என் மனசு சுத்தம் என்று டயலாக் அடித்தால் , பார்கிறவன் எல்லாம் வள்ளுவர் சொன்ன பேராண்மைக்காரன் அல்லவே? இந்த உடைகள் அணிபவர்கள் மனதின் பலவீனத்தின் வெளிப்பாடுகள் தான். ” என் அறிவோ படிப்போ எனக்கு பெரிதல்ல , குறைந்த உடை அணிந்தால் தான் என்னை உலகம் மதிக்கும்” என்றால் அது தாழ்வுணர்ச்சியை அல்லவா காட்டுகிறது?
    உலக லெவல் டென்னிஸ் போட்டிகளிபாருங்கள். அதில் பெண் போட்டியாளர்களின் உடைகள் நிலைமை-விளையாட வசதி என்கிறார்கள்-ஆண் டென்னிஸ் போட்டியாளர்கள் பின் எப்படி ஷார்ட்ஸ் அணிந்து நிம்மதியாக விளையாடுகிறார்களாம்?!
    ஆண்களுக்கு நிகரான , ஏன், சில விஷயங்களில் மேலான அறிவு படைத்தவர்கள் விழிப்பார்களா? தாங்கள் வெறும் போகப்போருட்களல்ல என்று உணர்வார்களா?
    வேதனையுடன்
    சரவணன்

  20. Dear Rama,

    I regret if I misunderstood your comments. But to equate someone advocating traditional Sanatana Dharmic ways to “Hindu Taliban” is indeed name calling.

    Also, try to give a consideration to the possibility that true traditionalists will respect women and not ill treat them. There are innumerable examples to support this… Sita as the quintessence of the ideal married woman, Andal the daughter of Periyazhwar, Andal the wife of Koorathazhwan who spearheaded the Vaishnavite cause as a widow after the latter’s ascent to Paramapadam, Mirabai, etc. All of them are celebrated as great role models.

    Due to the influence of Kali, some people abused and ill-treated women, it may also have been widespread… there is no doubt. But the medicine for all this is proper education of our Sanatana Dharmic values, and not Westernization and materialism. They only aggravate problems.

    Now, coming to your points…

    // I am so proud of some of the young women of India who can give the Western women a run for their money.//

    You somehow find pride in the fact that there are some rich women. I do not see any reason for pride in it… nor am I proud that there are men in India who are extremely rich. What I would be proud of are men/women of our country who are religious-minded, good, disciplined, full of wisdom, and decent.

    // They have a large manufacturing base in India and travel overseas regularly for business deals. One of them I know can recite the entire Vishnu Sahshranam by heart. //

    They are indeed blessed… but what does traveling overseas have anything to do with values and attire? They can still have Indian values and Indian culture, and still earn money and travel overseas. Nobody will deny them a visa/green card if they apply turmeric instead of fair and lovely.

    // Few women worked and were self reliant financialy, unlike now. //

    I am not old enough to personally know clearly how things were 100 or even 50 years ago. Granted, women are more self-reliant financially and it is a good thing in many families. But the need for womens’ self-reliance itself comes from a decline in social values. Back then, men were willing to take proper care of women, and women were not dumb baby-making machines. They may not have had the opportunity to learn calculus and organic chemistry, but there are enough examples of them having been great in spiritual pursuits.

    Leaving this aspect aside… In any case, I do not think that the author Smt Sambasivam is regretting that women are earning. Aping the Western work culture is what is harmful… it is turning our men and women into pigs (Personally, I am no exception to this as I do fall into this category). Again, in today’s “educated” women engaging in typical work-culture-related activities (such as going to pubs etc.) is seen as a sign of “womens empowerment”… That is what is bad. People know very well how in certain circles, young women wearing saris and choosing to be homemakers are made fun of and pooh-poohed and called “losers” by their ‘friends’.

    // Of course, as with everything else, there are girls who are exceptions to what I am talking about. //

    The article is about what you call ‘exceptions’. Spending a day in any big mall/shopping center/airport in urban India will give you the revelation that what you call as ‘exception’ is more like a rule, and what you see as ‘normal’ is more like the exception.

    // I would like Indians to be modern in outlook but traditional in our dharmic beliefs. //

    That is a self-contradictory statement. That statement either means that dharmic beliefs have a bigoted outlook or that they lack something. Hindu sacraments (Samskaras) are meant to make an individual a better person in all aspects.

    The problem is that you have a problem with advocating traditional attire for women. Somehow you see that as a sign of “Talibanism”. Also, you tend to see consumerism (expensive cosmetics, clothing, telephone bills) as part of womens’ empowerment and somehow giving them “financial security”. I do not blame you for this, but this is what materialism does to our young men and women.

    If you have agreed with whatever I have written, you do not have any difference with the author. The author is simply deploring rejection of traditional values and pursuit of materialism by women.

  21. Thanks Mr Ghandarvan, You have missed my points. My point being, being western in attire does mean traditional values are devalued and I feel this article implies just that. I repeat again, some of the women who give run for the money( it is a just a Aussie saying) are just upper middle/middle class and they are not drowned in money.I never said they were all rich.
    The restriction we are willing to impose on our women by thinking what WE FEEL IS RIGHT FOR THEM, just amounts to Talibanisation.I do not know where you got the idea that I have a PROBLEM in advocating traditional attire for women.My wife loves to wear saris whenever she gets an opportunity here in Sydney.In fact we are going for a charity Bharathnatiyam dance performance organised by local indians this evening( money goes to India) and you can bet almost 100% of women will be in traditional (mostly) Kancivaram saris!I am of the opinion that you should not knock someone down due to their appearence.
    Anyhow, It will be a long drawn and tiring affair for BOTH of us if we continue on this vein,so let us both agree to disagree.
    Cheers

  22. Sri Rama,

    This is my last word on this topic… I do respect your stand on this issue, but I do not think I got any points wrong.

    // The restriction we are willing to impose on our women by thinking what WE FEEL IS RIGHT FOR THEM… //

    So, you are saying that the author/me/someone else who agrees with my position is simply “feeling” that it is right, rather than being based on careful and deep thinking.

    // …just amounts to Talibanisation.//

    Pray, did me or the author or anyone else here say anything about forcing women, imposing restrictions, or forcing/advocating Sharia-type punishments on women?

    // I am of the opinion that you should not knock someone down due to their appearence. //

    Neither am I. Again, nobody here is saying that someone has to be knocked down because of their dress. What you are saying is a classic confusion between macro values and micro values. Giving due respect and treating the individual equally (irrespective of sex, nationality, attire, kulam, jaati, etc.) is a micro value, whereas advocating and encouraging traditional modes of living while discouraging westernization/modernization is a macro value.

    The debate is about

    (1) Discouraging consumerism, westernization, showing off, and materialism is to be encouraged in the name of womens’ emancipation. Kindly note that this applies both to a. expensive jewellery and silk sarees, and b. imported perfumes and cosmetics.

    (2) Modesty in dressing and appearance (applies to men also). I too live in Australia (Adelaide). I know a few women here who have personally experienced this — if you are applying for a job as a receptionist or secretary, interviewers seem to be preferring women who are “young”, and who wear “modern” (read it as revealing) attire. You also know how ubiquitous the use of the term “chick” here is, even in a professional environment. This is just another form of hypocrisy, slavery, and sexism. Many young Indian women who shout “emancipation” seem to be unaware of this trap that is waiting for them.

    (3) Encouraging traditional practices so that traditional farming/trading communities are encouraged, rather than force them out of business and force them to migrate to cities, leading to further consumerism, urbanization, industrialization, stressful life, etc.

  23. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய்ப் பதில் சொல்ல முடியலை. நேரம் இல்லாமை தான் காரணம். அதோடு பதில்களும் நீண்டு விடும். ஆகவே கூடிய சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுகிறேன். திரு ராமா அவர்கள் தன் கருத்தையே திரும்ப வலியுறுத்துகிறார். ஆனால் இதுவும் ஒருவகை ஆணாதிக்கமே. பெண்கள் இஷ்டத்துக்கு இருப்பது ஆண்களுக்கு ஒருவகை செளகரியமோ?? வக்கிரமான செளகரியமோ? இங்கே பேசப்படுவது பெண்களின் அடாவடியான பெண்ணுரிமைப் போர்க்குரலைப் பற்றியே. அதிலே கொஞ்சமும் நீதியோ, நியாயமோ இல்லை என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. திரு ராமா பார்த்த பெண்கள் அவர் கூறியவாறு இருப்பார்கள் என்றால் எல்லாப் பெண்களும் அப்படி இருப்பதில்லை. அப்படிக் கடமையை மறந்த பெண்கள்தான் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கிறார்கள். நேற்றுக் கூட தாட்ஸ் தமிழ்.காம் ல் ஒரு செய்தி. குடித்துவிட்டு தி.நகர் உஸ்மான் ரோடில் நட்ட நடுரோடில் ஆடை விலகிக் கிடந்த ஒரு இளம்பெண், கல்லூரி மாணவியைப் பற்றி. படிச்சதிலே இருந்து மனசு கொதிக்கிறது. இதிலே சிலர் பெண்கள் குடிச்சால் என்ன தப்புனு வேறே கேட்கிறாங்க. ஒரு ஆண் குடிச்சால் அது அவன் குடும்பத்தோட முடியும். அதுவே தப்புத் தான். ஆனால் இதே ஒரு பெண் குடிச்சால் அது மொத்த சமூகத்தையுமே பாதிக்கும். அவளால் ஒரு சமுதாயமே அழியும். பெண் ஆக்கத்தான் வேண்டுமே தவிர, அழிப்பவள் இல்லை. அதனாலேயே நாம் வணங்கும் அன்னையை பராசக்தியாகவே வணங்குகிறோம். பார்க்கலாம் அடுத்த பதிவில்.

  24. //திரு ராமா அவர்கள் தன் கருத்தையே திரும்ப வலியுறுத்துகிறார்// அது ‘ராமா’ வா அல்லது ‘ரமா’ வா? ஆனா? பெண்ணா? டவுட்டா இருக்கே?

  25. ஒரு பின்னூட்டத்தில் தன் மனைவி காஞ்சிபுரம் பட்டுச் சேலை உடுத்தி பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு வரப் போவதாய்ச் சொல்லி இருக்கிறார். ஆகையால் ஆணே. ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்றும் சொல்லி இருக்கிறார்.

  26. கட்டுப்பாடு இல்லாத பெண் அல்லது ஆண் சுதந்திரம் என்பது ஒரு சுதந்திர நாட்டிற்கு சட்டங்களே தேவையில்லை என்று சொல்லுவது போல் உள்ளது. அப்படி இருந்தால் அந்த நாடே அழிந்து போகும். பெண் சுதந்திரம் என்று போலியாக கூச்சலிட நினைப்பவர்கள் பெரியார் ஈ வே ரா கூறியது போல் திருமணம் செய்வதை நிறுத்துங்கள் அப்புறம் உங்கள் கர்ப்பபையை நீக்கி விடுங்கள் இதுவே பெண் அடிமைதனத்திலிருந்து வெளிவர உதவும்.
    பெண் விடுதலை வேண்டுபவர்கள் செய்வார்களா?

  27. வணக்கம் அம்மா ..ரொம்ப ஆசிரியமாயி இருக்கிறது ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்பிடி பெண்களுக்கு எதிராக பேச என்ன துணிச்சல் ????? அடிப்படையில் இந்த பெண்ணியவாதிகள் எப்படி வேணுமானால் ஒழுக்கம் கெட்டும் , ஏதோ யந்திரத்தனமாக உணர்வுகள் இன்றி ,விலங்குகளை போல தெய்வீகத்தன்மை, பாரம்பரியம் ,குடும்ப அமைப்பு ,சுயமரியாதை இல்லாமல் வாழ்வதையே விரும்பிகிறார்கள் ….எல்லாம் தானே செய்வதாக ஒரு ”நான் ”என்ற அகங்காரம் ,அடிப்படையில் கடவுளுக்கு மரியாதை இல்லை ,,எல்லாம் அதிமேதாவிதனமும் ,நிறைய பணமும் பொருளும் எல்லோரையும் முட்டாளாகவும் ,மட்டமானவர்களாகவும் மாற்றிவிட்டது ..எவன் கூடையோ சம்பந்தம் இல்லாமல் காரணமே இல்லாமல் லொட லொட வென்று படிக்கும் ,வேலை பார்க்கும் இடங்களில் நேரிலும் கைபேசியிலும் ”பெண்கள் ” ‘பேசுவதை ,இப்படி எல்லாம் சுயமரியாதை இல்லாமல் முட்டாளாக இருக்காதீர்கள் என்று சொன்னால் ஆணாதிக்க ”சண்முகம்” ஆண் பெண் ”நடப்பை ” விரும்பாத தாலிபானிய பிற்போக்குவாதி.. போலித்தனமாக எவனைப்பார்தாலும் பல்லையும் ”மற்றதைகளையும் ” காட்டிக்கொண்டு,கட்டி கொண்டு ஹாய் ஹாய் என்று ”பழகோ பழகு ” என்று போலித்தனமாக பகழ வேண்டும்.. ஏன் இப்பிடி இருக்க வேண்டும் என்று காரணம் கேட்டால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள் வாழ வேண்டியவன் என்று ஏளனம்..இன்னும் சிலர் அப்பிடி எல்லாம் இல்லை என்றால் பழைய பஞ்சாங்கம் , பழம் என்று கூறிவிடுவார்களோ ,அவர்கள் முட்டாள் கூட்டத்தில் சேர்துகொள்ளமாட்டார்களோ என்று ஏமாந்து போகும் பெண்களை பார்திருக்கிறேன் .. .தங்களின் அறிவை வளர்த்து கொள்ள அப்பாவோ சகோதரனோ புத்தகமோ கிடைக்க வில்லை ?…அரைகுறை ஆடை பற்றியோ , திருமணத்திற்கு முன்னாலும் ,பின்னாலும் ஒழுக்கத்தை பற்றியோ ,குடும்ப அமைப்பை பற்றியோ ,கவுரவத்தை பற்றியோ சொன்னால் என உரிமை ,என் சுதந்திரம் நீ யார் இதை எல்லாம் சொல்ல ? என்று கேள்வி . இந்த ஆயி டி மற்றும் பிபிஒ வந்த பின்பு நடக்கும் கூத்துகளை பார்க்கூட வெறுப்பாக இருக்கிறது …அவர்களுக்கு ஒரு கூச்சமும் இல்லை
    யார் பார்க்க வேண்டும் கெமிக்கல் கிரிம்களை பூசி கொண்டு.அரைகுறை ஆடைகளோடு போகிறார்கள் ..இதற்க்கு மேல் இவர்களுக்கு என்ன சுதந்திரம் உரிமை தேவை என்று தெரியவில்லை ..எந்த ஆணாவது புடவை கட்டியோ சுடிதார் அணிந்தோ பார்த்து இருக்கீர்களா? இவர்கள் தான் தங்கள் உடல் இருக்க பனியனையும் ,டவுசரையும் போட்டு கொண்டு திரிகிறார்கள் ..கேட்டால் தங்களுக்கு ஆண்களிடத்திளிருந்து சுதந்திரம் கிடைத்து விட்டதாக சொல்கிறார்கள் ..இது ஒரு விதத்தில் ஆண்களுக்கு தான் அவர்களின் அழகை கண்டுரசிக்க வசதி ..தங்களை ஒரு ஆண் போல காட்டிகொல்லவே அவர்கள் விரும்புகிறார்கள் .சுய மதிப்பு இல்லாத இவர்கள் தங்களை ஒரு பெண்ணாக காட்டிக்கொள்ள முடியாத இவர்கள் எதற்கு பெண் சுதந்திரத்தை பற்றி பேசுகிறார்கள்? ,….
    என்னமோ ஆங்கிலத்தை பேசி கொண்டும் .புதிய தொழில்நுட்பத்தை கையாள தெரிந்த மேதாவித்தனத்தில் இவர்கள் தங்களின் மனித அடையாளங்களான அடிப்படை உணர்வுகளையும் ,பெண்மையையும் ,ஆன்மிக அடையாளங்களையும் ,தெய்வீகத்தன்மையும் ,அடுத்த தலைமுறையின் நலனையும் தொலைத்துவிடுகிறார்கள் .குடும்ப அமைப்பு சமுதாய அமைப்பில் சேர விரும்பாத தான் தோன்றிகள் ..பெற்றோர்கள் வளர்ப்பு சரியாக இல்லை ..யந்திரம் மாதிரி பணம் சம்பாதிப்பதால் ..தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை தெரிந்துகொள்ளாமல் முட்டாளாக இருந்து பிள்ளைகளையும் அப்பிடி வளர்க்கிறார்கள் ..அவர்களின் இன்றைய ”நான்’ என்ற திமிர்தனதிர்க்கும் ,தங்கள் மேதாவித்தனத்தால், தாங்கள் பார்க்கும் வேலையால் உலகத்தில் தங்களின் முத்திரையை பத்திப்பதாக நினைத்துகொண்டு தங்களின் பெண்மையை அடகு வைக்கிறார்கள் ,,இன்னும் சிலர் தங்களின் கற்ப்பை அடகு வைத்து விட்டு, பெண்களை மதிக்கதெரியாத, வணங்க தெரியாத சில மிருக ஆண்களை குறை சொல்ல கிளம்பிவிடுகிறார்கள் ..முட்டாள்தனதிர்க்கும் ஒழுக்ககேட்டிருக்கு அங்கீகாரம் தேடுகிறார்கள் ,இன்னும் சில நல்ல பெண்கள் இருப்பதால் தான் நேரம் தவறியாவது மழையும் ,நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் ,,கடவுளையும் ஆன்மிகத்தையும் விட்டு விட்டு உலகத்தில் என்னத்தை சாதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை .எல்லா பணத்தையும் ,பெரிய பெரிய கட்டடங்களையும் நகையும் ,வண்டிகளையும் செத்தபின் தலை கட்டி கொண்டா போகிறார்கள் ?.. அடிப்படை இயற்கையின் விதிகளான ஆண் பெண் வித்தியாசத்தை முட்டாள்தனமாக அறிவுத்திறன் மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் மாற்றி அமைக்க விரும்பும் பெண்போல இருக்கும் ”ஆண்களாலும் ” .பெண்ணியவாதிகளுக்கும் என்ன கிடைக்க போகிறது என்று தெரியவில்லை ?
    முட்டாள் தனதிருக்கும் பைதியகாரத்தனதிர்க்கு கூட்டம் அதிகமாக சேர்கிறது …நேர்மை, சத்தியம்,தியாகம் , ஒழுக்கம் ,ஆன்மிகம் இவற்றிக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது ..அடக்கம் ,அச்சம் ,மடம் நாணம் ,பயிர்ப்பு இல்லாத பெண்களை எந்த நேர்மையான ஆணுக்கும் பிடிக்காது …அவர்களை வெறும் சதையாக மிருகதனதிருக்கு வடிகாலாக பார்க்கும் ஆண்களின் கூட்டம் அதிகமாக போனதிற்க்கு தங்களை ”பெண்கள் ” சொல்லிக்கொண்டு போலித்தனமாக ஆண்கள் போல திரியும் பெண்கள் தான் காரணம் ..ஆண்கள் அல்ல ..அந்த மனோ வியாதிகாரர்களின் மன வியாதி தீர ஆண்கள் குழந்தை பெற்று கொள்வது எப்பிடி என்று கண்டுபிடிக்க வேண்டும் கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும் ..
    பட்ட படிப்பும் ,பணமும் போலித்தனமும் வாழ்க்கை ஆகி விட்ட பின்பு அவர்களிடத்தில் பெண்மையும் ,மேண்மையும் ,அவர்களுக்கே உரித்தான அவரர்களின் வெட்கத்தையும் எங்கே பொய் தேடுவது ?,,சும்மா வெட்டக படுவது போல் நடிக்க கூட இப்போது உள்ள பெண்களுக்கு தெரியவில்லை ..உண்மையிலையே எனக்கு ஒரு சந்தேகம் ..பெண்களிடத்தில் அதிகம் பேசியது இல்லை ஆனால் வெளியிலருந்து எப்பவாது கவனிக்கும்போது அவர்களிடத்தில் சில தேவை இல்லாத ,மட்டமான விசயங்களுக்கும் ஒரு தவிர்க்கும் கூச்சத்தை எத்ரிப்பார்ப்பது குற்றமா? இதைஎல்லாம் எதிர்பார்ப்பது தவறா? ஆனடிமைதனமா ?
    கடைசி குறிப்பு :இப்போது கூட இந்த பதிலை ஒரு நெட் சென்டரில் எழுதும்போது இரண்டு ”’பெண்கள் ” பனியனையும் சட்டையையும் போட்டு கொண்டு நான் பேச தயங்கும் அடுத்தவனின் தங்கையை குறித்து சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தையை சர்வ சாதரனமாயி பயன்படுத்திகொண்டும் ஆங்கிலத்தில் புலம்பிகொண்டும் பேச்பூக்கில் எவன் கூடையோ மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள் ..வடநாட்டில் ஒரு பெரிய நகரத்திலிருந்து ஒன்னும் புரியாத ஆண் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *