ஆசிரியர் தினம் – சில எண்ணங்கள்

sarvepalli_radhakrishnanஇந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் தான் இன்று நாடெங்கும் ஆசிரியர் தினமாக கொண்டாடப் படுகிறது. இவர் திருத்தணியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இருபது வயதிலேயே முதுகலை பட்டத்தில் ஆய்வு கட்டுரைகள் எழுதி அவரது ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றவர். பிறகு பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் (இங்கிலாந்து மேன்செஸ்டர் கல்லூரி உட்பட) பணியாற்றினார். பின்னாளில் UNESCOவில் இந்தியப் பிரதிநிதியாக பங்கு கொள்ளவும், ரஷ்யாவில் இந்திய தூதராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் துணை ஜனாதிபதியாகவும், பின்னர் இந்தியாவின் ஜனாதிபதியாகவும் முன்னேறினார். சிறந்த கல்வியாளராகவும், மாணவர்களை உருவாக்குவதில் சிறந்த ஆசிரியராகவும் இருந்ததாலேயே இவரது பிறந்த தினம் இவ்வளவு மரியாதைக்குரியதாக ஆகிறது.

இந்துப் பண்பாட்டில் ஒரு தினத்தை மட்டுமே ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது என்று அல்லாமல், ஒவ்வொரு நாளுமே எந்த நல்ல காரியம் துவங்கும் போதும் குருவந்தனம் செய்வது வழக்கம். தெய்வத்துக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களை நினைத்து வணங்குவதே நமது பண்பாடு. பாரத கலாசாரத்தில் பெரிய ஆளுமைகளாக இருந்த பலரும் ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஜகத்குரு – உலகாசிரியன் என்றே சொல்கிறோம். ஆதிசங்கரர், ராமானுஜர், என்று பலரும் குருமார்களே. மன்னனான ஸ்ரீ கிருஷ்ணனும், பரம ஏழையான குசேலனும் சாந்தீபிநி என்ற ஒரு குருவின் குருகுலத்தில் ஒன்றாக படித்திருக்கிறார்கள். விவேகானந்தரை வெளிக்கொணர ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்கிற குருவினாலேயே முடிந்தது. இது போன்ற பல்வேறு சிறந்த ஆசிரியர்களே இந்த தேசத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளனர். இவ்வளவு ஏன், நமது அப்துல் கலாம் தன் ஆசிரியர்கள் எவ்வாறு அவரை உருவாக்கினார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறாரே!

இவ்வளவு தூரம் ஆசிரியர்களை நினைத்து பெருமைப் பட்டு சிறந்த ஆசிரியர்களை வணங்குகிற அதே நேரத்தில், இன்றைய நாளில் ஆசிரியன் என்ற இந்த பெரும் தொண்டு ஒரு தொழிலாக ஆகிவிட்டதையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இன்று கொண்டாடப் படும் ஆசிரியர் தினம் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்த நாளின் உயரிய நோக்கம் கெட்டு வெறும் அரசியல் விழாவாக தலைவர்கள் கடமைக்கு வாழ்த்துச் சொல்லும் ஒரு நாளாக ஆகிவிட்டது. ஆசிரியர்களுக்கு உண்மையில் எவ்வளவு தூரம் மரியாதை கொடுக்கிறோம் என்று உதாரணத்திற்கு நமது திரைப்படங்களைப் பார்த்தாலே தெரியும் – பேராசிரியர்களாக காட்டப்படுவது வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, எம்.எஸ். பாஸ்கர் போன்ற காமடியன்களாகவே இருக்கிறார்கள். பஸ்சில் ஓட்டுனர் நடத்துனர் மாதிரி ஆசிரியர் பணியும் ஒரு தொழில் என்று தான் பலரும் எண்ணத் துவங்கி இருக்கிறார்கள்.

மாணவர்களின், அவர்களது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளும் மாறிவிட்டன. “இவனை எப்படியாவது படிக்க வைங்க… கண் இரண்டையும் விட்டு விட்டு தோலை உரித்தாலும் நான் ஏன் என்று கேட்க மாட்டேன். எப்படியாவது இவன் படித்தால் போதும்” என்று ஒரு காலத்தில் பெற்றோர்கள் சொல்வார்களாம். இன்று அந்த அளவுக்கு யாரும் ஆசிர்யர்களை நம்பி விடுவதில்லை – பணம் நிறைய செலவு செய்தால் நல்ல கல்வி கிடைக்கும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது. மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவதும் நிகழ்கிறது. பல நல்ல ஆசிரியர்கள் வெறுத்துப் போய் இந்த தொழிலை விட்டு வேறு நல்ல வேலைக்கு செல்ல விரும்புவதாகவே ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இதன் இன்னொரு பரிமாணமாக கல்வியில் புகுந்து விட்ட அரசியலையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் வளருவதற்கு படிக்கிற மாணவர்களை உபயோகித்துக் கொண்டது தெரிந்தது தான். கலவரங்களைத் தூண்டி விடுவதற்கு மாணவர்களையே உபயோகித்தனர். மாணவர்களுக்குள் ஜாதிப் பாகுபாடு, மதவாதம் எல்லாமே அரசியல்வாதிகளால் தூண்டப் படுகின்றன. வேலைவாய்ப்பில் தான் மதரீதியாகவும், சாதி வாரியாகவும் இட ஒதுக்கீடு என்றால் படிப்பிலுமா?

மாணவர்களுக்கு சீருடை அணிவிப்பது அவர்கள் பெற்றோர்களிடம் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு மாணவர்களிடம் வெளிப்படக் கூடாது என்ற உயரிய எண்ணத்தில் தான். ஆனால் இன்று சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவராக இருந்தால் அவருக்கு அரசின் பணஉதவி, அதுவே அந்த மாணவர் இந்துவாக இருந்தால் பரம ஏழையாக இருந்தாலும் அவருக்கு எந்த உதவியும் கிடையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

indian_primary_school_teacherஆசிரியர்களையும் அரசியல் விட்டு வைக்கவில்லை. ஆசிரியர் சங்கங்களே அரசியல் ரீதியாக பிரிந்து போயுள்ளன. பல்கலைக் கழகங்களில் நியமனம் பெறுகிற பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் சாதி பார்த்தே நியமிக்கப் படுகிறார்கள். சாதி அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. இதை மீறி ஒரு பல்கலையில் பேராசிரியராக நியமனம் பெற சில லட்சங்களை லஞ்சம் கொடுக்கும் நிலையும் உள்ளது. மத அமைப்புகளால் நடத்தப் படும் கல்வி நிறுவனங்களில் பிற மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் அவ்வமைப்புகளால் துன்புறுத்தப் படுவதும் நிகழ்கிறது.

அரசியலும், சமூகமும் ஆசிரியர் தொழிலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட ஆசிரியர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாமல், முடக்கி வருகின்றன. கல்வி என்பது வேலை வாய்ப்பிற்கான ஒரு வழி, பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தேவை மட்டுமே என்ற எண்ணமே ஆசிரியர்களின் மீதான சமூகத்தின் மரியாதையை குலைத்து வருகின்றது.

மிகச்சிறந்த முன் உதாரணங்கள் நமது கலாசாரத்தில், பண்பாட்டில், நமது வரலாறுகளில் இருந்தாலும், நமது இன்றைய நிலை சீரழிந்து போனது வருந்தத் தக்கது. ஒரு நாட்டின் மேன்மையை குலைக்க அதன் குடிகளில் இளம் தலைமுறையினரின் கல்வியை சிதைத்து விட்டால் போதும் என்று புரிந்தே நமது இன்றைய கல்விமுறையை மெக்காலே என்கிற வெள்ளையர், பிரிட்டிஷ் அதிகாரி வகுத்ததாக கூறுவர். மெக்காலேயின் திட்டம் மிகச்சிறப்பாக பலித்து விட்டதாகத்தான் சொல்ல வேண்டும். இந்த சமூகம் தாழ்ந்து போனதற்கு ஆசிரியர் சமூகத்தில் ஏற்பட்ட தாழ்வும் ஒரு காரணம் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த நிலை மாறவேண்டும், இன்றைக்கும் நேர்மையாக கல்விப்பணியைத் தொடர விரும்பும் ஆசிரியர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று இறைவனை இந்த நாளில் இறைஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை. இன்றும் பல கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகள் இயங்கிக் கொண்டுதான் வருகின்றன.

இன்னமும் பல இடங்களில் பெயர், முகம் வெளிப்படாமல், இன்றைய நிலையை நினைத்து மனதுக்குள் வெறுத்துப் போனாலும், விடாமல் தனது பணியை முடிந்தவரை சிறப்பாக செய்து வரும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் நாம் மரியாதை செலுத்த வேண்டும். அதற்காவது இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுவோம்.

8 Replies to “ஆசிரியர் தினம் – சில எண்ணங்கள்”

 1. Yes, I agree with the author. I saw and advertisement for the placement of Professor/Associate Professor of Sociology with VIT University, Vellor. They were mentioned in the news paper that they will reply for all application by e-mail.

  One of my friend, is still waiting for atleast the reply frok there for the past one month.

  Is castiesm is play there too.

 2. Pingback: Indli.com
 3. நமது இன்றைய கல்வி முறையும், மாணவ்ர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உள்ள இடைவெளியும் இனிமேலும் நல்ல குடிமகன்களை ஆசிரியர் உருவாக்குவார் என்றோ, மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடத்தி பாடம் சொல்லிக்கொடுப்பர் என நினைப்பதோ இயலாத காரியம். ஆசிரியர்கள் எவ்வளவு தூரம் மாணவர்களிடம் இருந்து விலல்கி இருக்கிறார்களோ அதை விட பலமடங்கு தூரம் மணவ்ர்கள் ஆசிரியரிடமிருந்தும், கல்வியிலிருந்தும் விலகி இருக்கின்றனர். நல்ல ஆசிரியரையும், நல்ல மாணவனையும் காண்பது இன்றைக்கு அத்திப்பூவாகி விட்டது.

 4. என் தாய் ஒரு அரசு பள்ளி ஆசிரியை. எங்கள் ஊரிலேயே நல்ல பெயர். தொண்டைத் தண்ணீர் வற்ற வகுப்பு எடுப்பார். மிகக் கண்டிப்பானவர்.

  அதே ஊரில் ஒரு அரசு மாணவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஒருவர் இருந்தார். இறுதித் தேர்வில் அவர் கொடுக்கும் தேர்ச்சி சதவிகிதம் இரண்டு அல்லது மூன்று மட்டுமே. அதுவும் அவரை மீறியே நடந்ததாகத் தான் இருக்கும்.

  என் தாயும் பிறகு தலைமை ஆசிரியர் ஆனார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த மாணவர் பள்ளித் தலைமை ஆசிரியர் அரசின் “நல்லாசிரியர்’ விருது பெற்றது தான்.

  என் தங்கையும் தாயை ஒட்டி மத்திய அரசின் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறாள். கேரளா போன்ற தேசங்களில் அரசியல் புகுந்து விளையாடும் தளமாகவே பள்ளிகள் உள்ளன என்றும் , உண்மை உழைப்பாளிகள் மட்டம் தட்டியே வைக்கப் படுவதாகவும் கூறுகிறாள்.

  நான் கல்லூரியில் படித்த பொது ஒரு ஆசிரியர் procedure என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாமல் ப்ரோஜீசர் என்றே என்னுடைய பொறியியல் படிப்பின் அனைத்து வருடமும் கூறி வந்தார். அவர் வகுப்புகள் காலியாகவே இருக்கும்.

  இட ஒதுக்கீட்டின் இருண்ட பக்கம் ஆசிரியர் பதவிகளிலேயே தான் உள்ளது.இன்று அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்க சாமானியர்களும் தயங்குவது இதன் விளைவே.

  உருப் போடுவது தான் இன்றைய படிப்பு. அதிலும் ப்ளூ பிரின்ட் என்ற குறுக்கு வழியில் இந்த இந்த பாடத்தில் இத்தனை மதிப்பெண் கேள்விகள் வரும் என்று ஊட்டிக் கொடுக்கின்றனர். இத்தனைக்குப் பிறகும் அரசுப் பள்ளிகள் பெருமளவில் பின் தங்கியே உள்ளன.

 5. கல்வி தனியார் மயம் ஆனது கூட ஆசிரியர் பணி ஒரு தொழிலானதற்குக் காரணம்.
  தனியார் பள்ளிகள் கதை கதையாகப் பணம் வாங்கிக் கொண்டு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல் பெற்றோரை புழு பூச்சி போல் துச்சமாக நடத்துவதும்தொடர்கிறது.
  http://wp.me/p12Xc3-108 (matric பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்து விட்டு நாய் படாத பாடு படும் பெற்றோர்களா நீங்கள்? )

 6. For LKG & UKG the fees fixing committee fixed Rs. 30000 and above in cities. It is too much & ubnormal. At the same time , many self finance colleges offer only Rs,5000- Rs,10000/- for degree courses. So, the Govt. should announce a ceiling for fees amount from LKG to +2 level.

 7. ஆசிரியர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டலும் அவை ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமையவில்லை. பெரும்பாலும் இன்று அவை மாணவர்களின் மகிழ்ச்சி கொண்டாட்டமாகவே அமைந்துள்ளது. இன்றைய மாணவர்களில் பலர் இவ்வாறே உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *