முன்குறிப்பு:
பேதைநெஞ்சே இன்றைப் பெருமை அறிந்திலையோ?
ஏது பெருமையின்றைக் கென்றென்னில்-ஓதுகின்றேன்
வாய்த்தபுகழ் மங்கையர்கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள்.
என்று கார்த்திகை நாளின் மேன்மையை எடுத்துச் சொல்லும் உபதேச ரத்தினமாலை.
கார்த்திகையில் கார்த்திகை- திருமங்கை ஆழ்வாரின் திருநட்சத்திரம். இந்த நன்னாளில் திருமணஞ்சேரி என்னும் திருத்தலத்திற்கு (எங்கள் ஊர்) ஆழ்வாரை எழுந்தருளச் செய்வதாக அமைந்த ஒரு கற்பனைச் சித்திரத்தை இங்கு உங்களிடம் விண்ணப்பம் செய்கிறேன்.
-0-
ஓரிருக்கை
(திருமங்கை ஆழ்வாரின் சரித்திரத்தில் ஒருநாள் நிகழ்வு-கற்பனை)
அன்று ஏகாதசி. கோலவில்லி இராமனைத் தரிசித்துவிட்டு அடுத்தநாள் காலை இந்தளூர் பரிமள ரங்கநாதனைச் சேவிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் திருவெள்ளியங்குடி கோயில் பிரகாரத்தில் வலம்வந்து கொண்டிருந்தார் திருமங்கை மன்னன்.
“கோயில் படியிடை மாடத்துத் தூண்களில் பதித்த மணிகளின் ஒளியால் பகல் இரவு என்ற பேதமே இல்லாமல் இருக்கிறதே. பொழுது சாய்ந்து நேரமானதுகூட அறியமுடியாமல் இருக்கிறதே! இன்னும் சற்று முன்னரே கிளம்பியிருந்தால், நாம் நினைத்தபடி நாளை காலை இந்தளூர் செல்லமுடியும்..” என்று சிந்தனையை ஓடவிட்டுக்கொண்டிருந்தார் ஆழ்வார்.
துவாதசிப் பாரணைக்கு இந்தளூர் செல்லவேண்டும் என்பது ஆழ்வாரின் கருத்து. ‘ஏகாதசி விரதம் இருந்த அம்பரீஷனுக்கு அனுக்ரஹம் செய்த பெருமாள் எழுந்தருளி இருக்கும் தலமாயிற்றே! ஆனால், இப்படி நேரம் போனதே தெரியாமல் இருந்துவிட்டோமே, அடடா என்செய்வது?’– அன்று அந்த நினைவிலேயே ஆழ்ந்துவிட்டார் ஆழ்வார்.
முடியுடை அமரர்க் கிடர்செய்யும் அசுரர் தம்பெரு மானையன் றரியாய்
மடியிடை வைத்து மார்வம்முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்தபல் மணிகளின் ஒளியால்
விடிபகல் இரவென் றறிவத ரிதாய திருவெள்ளி யங்குடி யதுவே
என்று மீண்டும் ஒருமுறை கோலவில்லி இராமனை மங்களாஸாஸனம் செய்துவிட்டுத் தன்பரிவாரங்களோடு ஆடல்மா ஏறிப் புறப்பட்டுவிட்டார் ஆலிநாடன்.
குதிரைகளின் குளம்பொலி மெல்ல மெல்ல திருவெள்ளியங்குடி நகரை நீங்க, அவரது பயணம் காவேரிப்பட்டினம் செல்லும் மணற்சாலையில் தொடர்ந்தது. ஒவ்வொரு குளம்படியும் ஒலிக்கும்போதும், திருமந்திரத்தைச் சொல்லுவதுபோல் ஒருசீராக ஓசை வந்துகொண்டிருந்தது. அடியார் குழாத்துடன் இருந்தால் குதிரைகளின் குளம்பொலியும் நாடிக் கண்டுகொள்ளாதோ நாராயண நாமத்தை?
“மன்னா, நாம் இப்போது சூரியனார் கோயிலை நெருங்கிவிட்டோம்,” என்று தோலாவழக்கன் அறிவித்தான்.
“ஆ அப்படியா?” என்ற பதில்மட்டும் ஆழ்வாரிடமிருந்து வந்தது. அவர்தான் ஆடல்மாவின் ஓட்டத்திலே திருமந்திரம் கேட்டுக்கொண்டபடி வந்துகொண்டிருக்கிறாரே, அவருக்கு இதில் கவனம் செல்லவில்லை. பொன்னி நதியின் வளத்தால் செழித்து வளர்ந்துள்ள நெற்கதிர்கள் ஆழ்வாருக்குச் சாமரம் வீசி வரவேற்க, பொன்விளையும் பூமியான காஞ்சனூர் வழியே குதிரைகள் விரைகின்றன. காஞ்சனம் என்றாலே பொன்தானே! பொன்விளையும் பூமியைக் காஞ்சனூர் (மருவி இன்று கஞ்சனூர் ஆகிவிட்டதா?) என்று சொல்வதில் வியப்பேதுமில்லை. மருத நிலத்தின் வனப்பைக் கண்டு மகிழ்ந்த வண்ணம் புரவியின் மேல் அமர்ந்த ஆழ்வார் கோஷ்டி மேலே சென்று கொண்டிருந்தது.
காஞ்சனூர் தாண்டி, துகிலி என்ற கிராமம் வருவதை அறிந்த நீர்மேல் நடப்பான் என்னும் சிஷ்யர், “மன்னா! துகிலி என்னும் சிற்றூர் அடுத்து வருகிறது. தாங்கள் புரவியிலிருந்து இறங்கிச் சற்று சிரமபரிகாரம் செய்து கொள்ளலாமே!” என்று ஆலோசனை சொன்னார். ஆழ்வாரும் அதனை ஆமோதித்தவர்போல், ஆடல்மாவின் கடிவாளத்தைத் தளர்த்தி வேகத்தைக் குறைத்துக்கொண்டார்.
மருதத்தின் செழிப்பிற்கு இலக்கணமாய், தோட்டங்கள் அங்கே இருந்தன. வாழை, தாழை, மாழை (மா), வேழம்(கரும்பு), இஞ்சி என்பன பல. நீர்மேல்நடப்பான், தன்னையும் அறியாமல், பாடத்தொடங்கிவிட்டார்.
மருத வனத்தைத் துளக்கி யுழக்கி
மணக்கு மிஞ்சி செண்பகம்
மாழை வாழை தாழை வேழம்
வருக்கை பலவும் நெருக்கியே
இவரின் கவித்திறமையைப் பார்த்து, ஆச்சர்யப்பட்டவராய் ஆழ்வாரும் புருவத்தைத் தூக்கி, “ஆம் சிஷ்யரே, நன்று சொன்னீர். கங்கையில் புனிதமாய காவிரியின் அனுக்ரஹத்தாலே மருதம் செழிக்கிறது. நாராயண, நாராயண..” என்று சொல்லியபடியே மீண்டும் புரவியில் ஆரோகணித்தார்.
இளைப்பாறியதால், புதிய வலிமையுடன் மீண்டும் மனோவேகத்தில் அசுவங்கள் பயணத்தைத் தொடர்ந்தன. வானம் இருண்டு கொண்டு வந்தது. “நாராயணா! இது என்ன சோதனை? நாளை துவாதசிக்கு இந்தளூர் எம்பெருமானைத் தரிசிக்க எண்ணியிருந்தேனே, மழை வந்து பயணத்தைத் தடைசெய்துவிடுமோ?” என்று விசனப்பட்டார். மனதில் கவலை குடிகொண்டாலும், அது குதிரைகளுக்கா தெரியப்போகிறது? அவை எப்பவும்போலே மிடுக்காய்ப் பாய்ந்துகொண்டிருந்தன.
தூறல் வலுத்தது. ஆழ்வாரும் நனைய ஆரம்பித்துவிட்டார். இதைக்கண்ணுற்ற சிஷ்யர்களுக்கு மனம் பொறுக்கவில்லை. ஆழ்வாரோ ஒன்றும் நடக்காதவாறு மேலே சென்றுகொண்டிருந்தார். அவர்தான் கண்ணன் கழலிணையின் கருணாப்ரவாஹத்தில் நனைந்து கொண்டிருக்கிறாரே, அவருக்கு இந்த மழை ஒருபொருட்டா?
ஆனால், நிழலில் ஒதுங்குவானுக்கோ மனம் கடந்து துடிக்கிறது. என் குரு இப்படி மழையில் நனைகிறாரே. “ஆசார்யரே! க்ஷமிக்கணும். இப்படி இந்த மாந்தோப்பின் மரத்தினடியில் சற்றே நின்று விட்டுப் போகலாம்” என்று நாலுகால் பாய்ச்சலில் ஆடல்மாவின் முன்னே சென்று கடிவாளத்தைப் பிடித்தான். ஆழ்வாரும் “பெருமாள் திருவுள்ளம் இப்படியும் இருந்ததுவோ” என்று எண்ணி மாந்தோப்பில் நுழைந்தார்.
சட்டச்சட சட்டச்சட டட்டா, பயங்கர மழை.
நிலவெழ விண்மே லெங்கணு மின்னி
நெருங்கிய காலுற நின்றதிர
நலவரை நகரம் பொழில்வன மெங்கணும்
நன்மழை மாரி பொழிந்ததுவே.
கானக மிருக சாதிகள் பறவைகள்
கட்புலன் மூடி நடுங்குறவே
தேனிசை பயில்கதி ராபுரி யெங்கணும்
செழுமழை மாரி பொழிந்ததுவே
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அறிகுறி எங்கணும்!
வனமதி லுறைதரு மதகரி யுலவையில்
வலிகெட நளிருட னுலைவுறவே
சினைமணி களுமிக நிறைவுற வருவெளம்
திசைதிசை தோறு நிறைந்ததுவே
காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலமையில் ஆற்றைக் கடக்கமுடியாது. மழை நின்றதும், ஆழ்வார், அடியார்களுடன் பயணத்தை மேலும் தொடர்ந்தார். ஆற்றின் கரையை அடைந்ததும், புரவிகள் மேலே செல்ல மறுத்தன. மீண்டும் மீண்டும் கடிவாளத்தை இறுக்கிப் பார்த்தும் பயனில்லை. மேலே ஒரு அடி வைக்க மறுத்தன அப்புரவிகள்.
எம்பெருமான் சங்கல்பம் என்பது இதுதானோ? அடியார் குழாத்துடன், வடக்கு நோக்கித் திரும்பினார் ஆழ்வார். மனதில் புத்துணர்ச்சி பெற்றதுபோல், ஏதோ தாம்தேடிவந்த ஒருவரைக் கண்டதுபோல் துள்ளிக் குதித்துக் கிளம்பின புரவிகளும். ஆழ்வாருக்கு ஒரே ஆச்சர்யம். இது என்ன புரியாத புதிராக இருக்கிறதே! எம்பெருமான் எம்மை காவிரிக்கு வடக்கே வரச்சொல்லுகிறானே. இந்தளூர் இன்னும் கிழக்கில் அல்லவோ இருக்கிறது என்று சிந்தித்தபடி இருந்தார். விக்கிரமன் ஆறு இங்கிருந்து பிரிந்து தெற்கு வடக்காகப் பெருகுகிறது. ஆற்றின் மேலக்கரை வழியாகப் பயணித்து, வெள்ளம் குறைவான இடத்தில் கிழக்கு நோக்கி மறுகரைக்குச் சென்றார்கள்.
சோழ வளநாட்டின் செழிப்பை முழுதும் காண வேண்டுமாயின் ஆழ்வார் அன்று சென்ற இந்த இடங்களைக் கட்டாயம் காணவேண்டும். சேறு நிரைந்த வயல்களில் செந்நெற்கதிர்கள் மட்டுமா இருக்கின்றன? கயலும் கெண்டையும் தாவிக்குதிக்கும் வனப்பொடு திகழும் வளமையும் உண்டே! அட, இவை கழனிகளா? கடல்தானா? என்று வியக்கும் வண்ணம் மீன்கள்.
மண்டிக் குதித்துக் கடலின் மீன்களும்
வாவிக் கழியின் மீன்களும்
மதத்துச் சினத்துக் குதித்துப் பாயும்
வளமை பாடும்
சோழநாடு அல்லவா?
“வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடி யுயரும், குடியுயரக் கோனுயர்வான்” என்று ஆசீர்வாதித்தபடியே அடியார் குழாத்துடன் ஆழ்வார் சென்றுகொண்டிருந்தார். காவேரியிலிருந்து பிரிந்துசெல்லும் விக்கிரமன் ஆற்றின் வடக்குக் கரையோரம் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.
வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும் பள்ளர்கள், மழைவிட்டவுடன் பாடிக்கொண்டே வரப்போரம் செல்கின்றனர். மீண்டும் நாளை மழைபெய்யும் என்று அவர்கள் அறிவார்கள். மண்ணில் கலந்துவந்த வாசனையும், மின்னலும் அவர்களுக்கு மீண்டும் மழைவருவதற்கான அறிகுறிகளைக் காட்டிக்கொடுத்துவிட்டன போலும்.
ஆற்று வெள்ளம் நாளைவர தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
என்று பள்ளுப்பாடல் பாடிக்கொண்டே நடந்துகொண்டிருந்தனர்.
தாவிவரும் குதிரைகளின் குளம்போசை கேட்ட மண்டூகங்கள் சேற்றில் தாவிக்குதிக்கின்றன. அந்தத் தவளைகளின் சத்தம் “நாகணையாய், நாகணையாய்” என்று சொல்வதுபோல் ஆழ்வாருக்கு இருந்தது. எம்பெருமான் வீற்றிருக்கும் மங்களதேசம் அருகில் இருக்கவேண்டும், இங்குள்ள மண்டூகங்களும் திருமந்திர உச்சாடனம் செய்கின்றவே என்று வியப்புற்றவராய், தோலாவழக்கரைப் பார்த்து, “ஐயா, தோலாவழக்கரே! யாம் இப்போது எந்த திவ்ய தேசத்திற்கு அருகில் இருக்கிறோம்? நாராயணனின் சுகந்தம் எங்கும் பரவி இருக்கிறதே” என்று வினவுகிறார்.
மெல்லத் தடவிச் செல்லும் தென்றல் காற்று வண்டுதுளைத்த மூங்கில் வழியாக ஊடுருவிச் செல்லுகையில் கண்ணன் குழலூதும் ஓசையைத் தருவதால், இங்கு கண்ணன் நித்யவாசம் செய்கிறானோ?
தோலாவழக்கர் ஆழ்வாரைப் பார்த்து, “ஆசார்யரே! நிச்சயமாக இங்கு எம்பெருமான் நிறைந்திருக்கிறான். பகவத் சாந்நிதியத்தால், இங்குள்ள அனைவரும் அசித்துப்பொருள்களும் அனைத்தும் பாகவதர்களே. மூங்கில்களும் வளைந்து நின்று ஆசார்யரான உங்களுக்கு வந்தனம் செய்கின்றவே, தேவரீர் கடாக்ஷித்தருள வேண்டும்,” என்று பிரார்த்திக்கிறார்.
மற்றொரு அடியாரான தாளூதுவார், “ஸ்வாமி! க்ஷமிக்கணும். நமது தொண்டர் குழாத்தில் இந்த பக்கத்தைச் சேர்ந்த ராஜகோபால ஸ்வாமி இருக்கிறார். இவரைக் கேட்போம். ஸ்வாமிக்கு திருமணஞ்சேரி பூர்விகமாம்..” என்று ஒருஅடியாரைக் காட்டியருளினார்.
அவரும், ஆழ்வாரைத் தெண்டனிட்டு, “ஆசார்யரே! நாம் இப்போது திருமணஞ்சேரி என்ற க்ஷேத்திரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கு எம்பெருமான் வரதராஜராகவும், லக்ஷ்மிநாராயணராகவும் இந்தத் திருப்பதியில் சேவை சாதிக்கிறான். தேவரீர் எம்பெருமானை சேவித்து, இன்றிரவு இங்கே தங்கி சிரமபரிஹாரம் செய்துகொண்டு, நாளை காலை விடியுமுன்னர் இந்தளூர் செல்லலாம் என்று பிரார்த்திக்கிறேன்!” என்று சொல்லி சாஷ்டாங்கமாக விழுந்து ஆழ்வாரின் பாதகமலங்களைப் பிடித்துக் கொண்டார்.
இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த கிராமத்து மக்கள் விஷயம் அறிந்து ஆழ்வாரையும் அடியார்குழாத்தையும் எதிர்கொள்ள வந்துவிட்டனர். வேத கோஷங்கள் முழங்க பூர்ண கும்ப மரியாதையுடன் கோயில் பட்டர் வந்துவிட்டார்.
என்ன திருமணஞ்சேரி என்று ஒரு க்ஷேத்திரத்தில் எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறாரா? அஷ்டாக்ஷர மந்திரம் அறியத்தந்தத் திருமணங்கொல்லை போலவே இந்த தேசமும் உண்டோ? என்று ஆழ்வார் ஆச்சரியப்படுகிறார்.
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்
என்று திருமந்திரத்தைக் காட்டிக்கொடுத்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இந்த பூமிக்கு அடியேனை அழைத்துக்கொண்டு வந்தது தெய்வசங்கல்பம் என்று வியந்தார்.
“திருமணங்கொல்லையில் எம்பெருமானுக்கே திருமணம் நடந்தது. இந்த ஊரில் எம்பெருமானின் சகோதரியான பார்வதிக்குத் திருமணம் நடந்தது. கன்னிகாதானம் செய்துவிட்டு பெருமாள் இங்கே எழுந்தருளியுள்ளார்,” என்று ராஜகோபால ஸ்வாமி ஆழ்வாரிடம் விண்ணப்பித்தார்.
“ஆஹா! அப்படியா! மிகவும் தன்யனானேன்” என்றார் ஆழ்வார்.
நேரம் கடந்துவிட்டதாலே கோயில் கதவு சாத்தப்பட்டுவிட்டது. இன்று சேவை கிடைக்காது. நாளை விடிவதற்கு முன்னரே பயணமாக வேண்டும். ஆழ்வார் மானசீகமாக எம்பெருமானிடம், இந்தமுறை க்ஷமித்தருளவேண்டும். அடியேன் துவாதசி பாரணைக்கு முன்னர் இந்தளூர் எம்பெருமானைச் சேவிக்க வேண்டும். பிறகு வந்து தேவரீருக்கு மங்களாசாஸனம் செய்வேன் என்று மனதில் சங்கல்பித்துக் கொண்டார். “இந்தளூர் எம்பெருமானே! அடியேனுக்கு இங்கிருந்தே சேவை தாருங்கள், காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான் வாசி வல்லீர் இந்தளூரிர், வாழ்ந்தே போம் நீரே” என்று பாடினார்.
இப்படியாக ஓரிரவு ஆழ்வாரும் அவரது பரிவாரங்களும் எழுந்தருளி இருந்தமையால், ஓரிருக்கை என இன்றும் வழங்கிவருகிறது.
அங்கே எழுந்தருளிய விருந்தினர்களுக்கு ஏகாதசி இரவு உணவான பழங்கள், பால் முதலியன அவ்வூர் ஜனங்கள் சமர்ப்பணை செய்தனர். அன்று கங்கைக் கரையில் சக்கரவர்த்தித் திருமகனார் இளவலுடன் பிராட்டியோடு எழுந்தருளியிருக்க, அன்பாக மீனும் தேனும் கொணர்ந்த குகப்பெருமானின் அன்பில் திளைத்து, அவனை ஆலிங்கனம் செய்துகொண்டு, இளையபெருமாளிடம், இவன் உன்தம்பி என்றும், பிராட்டியிடம் இவள் உன்தோழி என்று சொல்லி அந்த வேடனது ஸமர்ப்பணையை உகந்து ஏற்றுக்கொண்ட காட்சி அவர் மனக்கண்முன் ஓடியது.
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கியுன் தோழி, உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உகந்து
தோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,
ஆழி வண்ணநின்னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே
குகப்பெருமானாய் அன்று ஆழ்வாரின் அடிசேர்ந்த திருமணஞ்சேரி வாசிகளான அனைத்து அடியார்களுக்கும் ஆழ்வாரின் அனுக்ரஹம் அன்றுபோல் இன்றும் நிலவிவருகிறது.
வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் – வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்
மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன்
ஆறங்கம் கூற அவதரித்த – வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகைநாள் என்றென்று காதலிப்பார்
வாய்த்தமலர்த் தாள்க(ள்)நெஞ்சே வாழ்த்து.
திரு செளந்தர், பக்திச்சுவைமிளிர நல்லதமிழில் ஆழ்வார் அமுதத்தைத் தந்துள்ளீர்கள். பைந்தமிழ்ப் பின்சென்றபச்சைப் பசுங்கொண்டலின் புகழ்மாலைகளின் சுவை அனுபவத்தை மேலும் தங்களிடமிருந்து எதிர்நோக்குகின்றோம்.
அருமையிலும் அருமை. நல தேனும்,பாலும் கலந்தளித்த இனிமை.
\\\\\\\\\\\\ஒவ்வொரு குளம்படியும் ஒலிக்கும்போதும், திருமந்திரத்தைச் சொல்லுவதுபோல் ஒருசீராக ஓசை வந்துகொண்டிருந்தது. அடியார் குழாத்துடன் இருந்தால் குதிரைகளின் குளம்பொலியும் நாடிக் கண்டுகொள்ளாதோ நாராயண நாமத்தை?\\\\\\\\\\\\\\\
தேவரீரின் மேற்கண்ட வாக்யத்தை படித்த பின் ஞாபகம் வந்தது
“கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையோர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணனே”
இது நினைவில் வந்த பின் மேற்கொண்டு வ்யாசத்தை படிக்காது இதையே பலமுறை திரும்பி திரும்பி படித்தேன்.
பின் மேலே படிக்கையில்,
\\\\\\\\\\\\\\\\\அவர்தான் கண்ணன் கழலிணையின் கருணாப்ரவாஹத்தில் நனைந்து கொண்டிருக்கிறாரே\\\\\\\\\\\\
என்று யாம் நினைத்த வண்ணம் தேவரீரின் மேற்கண்ட வாக்யத்தில் கண்ணனின் கழலிணையை படித்த பின் கண்கள் பனிக்காமல் இருக்குமோ
“உண்ணும் உணவும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே” என்ற படி அந்த கண்ணனே வாழ்கையை நடத்த வேண்டும்.
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
தன்யோஸ்மி
க்ருஷ்ணகுமார்
mikavum nanra irukirathu
thiru indalur pattum serthu irukalam.
” munna vannam palin vannam muthum nirai ninna
pinna vannam kondal vanam vannam ennum kaal
ponnin vannam maniyin vannam purayum thirumeni
inna vannam ennu katir indalurere”.
which tells about the colour’s of emberuman in different yugas…
அருமையான பதிவு! திருமங்கை மன்னன் ஆழ்வார்களில் கடைகுட்டி திவ்ய தேசங்களுக்கு போய் போய் மங்களாசாசனம் செய்து 1253 பாடல்களை நமக்கு அருளி சென்றுள்ளார். அவர் காட்டிக்கொடுக்காவிட்டால் பல்வேறு திவ்ய தேசங்கள் நமக்கு தெரியாமலேயே போயிருக்கும்.
“நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம். “
Dear sir,
I am very thankful for sending sucH a beautiful article.
I am also from Thirumananjery.son of TS.Venkatachary.
You have done a marvelous job.
I pray the Almighty for your long life.
Regards
V.RANGANATHAN
அன்பிற்குரிய சௌந்தர்,
ஒரு வரலாற்றுச் சிறுகதையை வாசித்த உணர்வு தங்களின் கட்டுரையை (சிறுகதையை) வாசித்த போது ஏற்படுகிறது. நீண்ட நாளாக இதற்கு பாராட்டி மறுமொழி இட வேண்டும் என நினைத்தேன். தாமதத்திற்கு வருந்துகிறேன். தங்களின் எழுத்து நடையும் வர்ணனையும் மிகச்சிறப்பாயுள்ளது. தொடர்ந்து ஆழ்வார்களைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எனினும் இயலுமான வரையில் புதுப்பாத்திரங்களை உள்வாங்கி சரித்திர சம்பவத்தை திரிபுபடச் செய்ய வேண்டாம். உள்ளதை கவித்துவத்துடனும் காவிய உணர்வுடனும் எழுதுங்கள்.தங்கள் பணி தொடரட்டும். நாராயண….
Sri Soundar has taken us to Thirumanancheri , that too, to the 12th Century. His imaginative picturising the episode is really wonderful and takes us all in the journey to Thirumanancheri. This also instils the bhakti cult and how we would have really wished that Kaliyan had done one paasuram for this Perumal. May Sri Soundar’ s endeavours continue with Sri Perumal’s Blessings.
Comments on the article ORIRUKKAI. COMMENTS OF T.S. Rajagopalan
The piece titled “Orirukkai—Alwar vaazhvil oru naaL” is an excellent write-up in literature.
As I read through it I felt as if I was one of the followers of Thirumangai mannan in the band of cavalry that traversed their way from ThiruveLLiangudi to Thiruindalur via Thirumanancheri. His mount, the Adalmaa had truly a horse sense. He smelt the divine air from Thiruvelliangudi and followed the scent. He deviated from the sand-track of Kaveripattinam chalai and took the Alwar to Thirumanancheri. The Alwar, in his turn read the language of the horse.
The description of the natural scenery is good. Such descriptions can be found in the writings of Kalki. One should walk the distance from Kuttalam to Thirumanancheri to enjoy the description of the green fields, the Kandiyur thoppu with iluppai trees and mango trees, the Kali voikkaal that flows parallel to the sandy road, the othiya maram opposite to which there was a mile stone reading one mile from anjaruvaartalai, the Raman odaai with palm trees on both the banks, then the Nagamangalam, with huge banyan trees right upto Muniswaran koil, the single palm tree or cocoanut tree laid as a bridge across the voikkal to go to Nagamangalam, the manmmudasami koil that can be seen from Nagamangalam, the rice mill owned by some pillai, later on by Ramaswami, the mill that was running on oil, the narrow passage from near the mill till you turned towards Velarkulam-the passage lined on both sides by Thazhaikkadu, snakes and mongooses crossing your way, and then the Velar kulam where you can see neerkakkai which can swaim, dive, and fly catching fish, the bent bamboo trees touching the water surface, the meenkothi bird perched on the bamboo suddenly diving into the water, catching a fish, resurfacing and then flying and so on and so forth—that is or that was Thirumancheri in the forties of last century.
Soundar has stated that even the mandookams croaked the name of Lord Narayana. The bamboo groves paid namaskarams to the visitors by their bent stalks. The local people were very hospitable to the retinue and towards the horse also as they fed it by grass and water. In fine the Alwar enjoyed the hospitality like Sri Rama at the hands of Guha. He felt the divine presence of Sri Lakshminarayan
And the bamboo groves provided music by their screechings.
I am reminded of a few parallels in English and Sanskrit literature. On Shakespeare’s As You Like It, the Duke Senior was able to read sermons in stones, books in running brooks and good in every thing.
The Alwar`s attitude was like that. The horse plays in literature. Richard II, Richard III, Rana Pratap Singh had famous horses,–the Chetak express of Udaipur named after Pratap`s horse.
We can find the chetanaas and achetanaas are moved by the Divine presence. In Sohrab and Rustby Lord Tennyson—at the height of sword fight between Sohrab and Rustum when the metal clanging reverberated throughout the cold banks of Oxus the poet says the horse neighed as if it understood the danger of its master. He also says that “Òxus curdled“,–not because of the below zero temperature but because of the intensity of the sword fight. In English it is called figure of speech, in Sanskrit it is called Alankara sastra, that is even inanimate objects are responding to the gravity of the situation. Here we find , in the article, the horse neighing, the bamboos prostrating, the frogs chanting etc. The Alwar had one regret, that is he was not able to do the mangala sasanam to the Lord. On the whole it is a nice poetic composition that is readable and enjoyable.