கும்பாபிஷேக விழா என்பது நினைக்கும் போதெல்லாம் இன்பம் தரவல்லது. கும்பாபிஷேகத்தை அதன் விளக்கங்களை உள்வாங்கி தரிசிப்பது மேலும் இன்பம் தரவல்லது. விரிவான கிரியைகளைக் கொண்டும் பல்வேறு ஆழமான தத்துவங்களின் அடிப்படையிலும் ஆற்றப்பெறும் கும்பாபிஷேகக் கிரியைகளில் மிக ஈடுபாட்டுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் ஓரளவேனும் அக்கிரியை முறைகளை அறிந்திருப்பது அவசியம். ஆகவே, மிகச் சுருக்கமாக கும்பாபிஷேகக் கிரியைகளை எம் அறிவிற்கேற்ப விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஆகாயவடிவில் எங்கும் பரந்திருக்கும் இறைவன், வாயுவாகவும் அக்கினியாகவும் மிளிர்கின்றான். நீராகவும் மண்ணாகவும் அவன் காட்சி கொடுக்கிறான். எனினும் அவனை மண் உருவில் நாம் உணர்தல் இலகுவாக இருப்பதால் மண்ணோடு தொடர்புற்று இருப்பதாகிய செம்பு, பொன் முதலிய உலோகங்களிலும் கல்லிலும் இறைவனை ஆவாஹித்து வழிபடுவதைக் காணலாம். தைத்திரிய உபநிஷத் பஞ்சபூத உருவாக்கம் பற்றி “ஆத்மன ஆகாச’: ஸம்பூ⁴த:, ஆகாசா’த்³ வாயு:, வாயோரக்³நி:, அக்³நேராப: அத்³ப்⁴ய: ப்ருத்²வீ”” என்று அழகாகச் சொல்கிறது. கும்பாபிஷேகக் கிரியைகளிலும் இப்படியான முறைப்படுத்தப்பெற்ற ஒழுங்கை அவதானிக்கலாம். ஆகாய வெளியில் இருந்து காற்றின் துணையுடன் சூர்யாக்னி எடுக்கப்பெற்று, கும்பாபிஷேக யாகசாலையில் அக்னி ஆவாஹனம் செய்யப்பெற்று, ‘கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை’ என்று ஞானசம்பந்தப்பெருமான் சொல்வது போல் உரிய வேதாகமப் பிரகாரம் எரியோம்பும் வழிபாடு நடக்கிறது. அங்கிருந்து கும்பத்தில் உள்ள புனிதநீரிலும் இறைவனை உருவேற்றி செம்மைசால் ஆராதனைகள் நடைபெற்றுப் பின்அங்கிருந்து இறைமூர்த்தத்துடன் ‘ஸ்பரிஸாஹூதி’ என்ற உன்னதமான கிரியையூடாகவும் கும்ப அபிஷேகம் மூலமாகவும் விக்கிரகத்தில் இறையருட் பிரவாகம் ஏற்படுத்தப் பெறுகின்றது.
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பரமானந்தமாகிய பரம்பொருளை அர்ச்சக ஸ்வாமியானவர் மந்திரம், பாவனை, கிரியைகள் மூலம் திருவுருவில் நிலைபெற்றிருந்து சர்வான்மாக்களுக்கும் அருள்புரியும் வண்ணம் செய்தலே மஹாகும்பாபிஷேகம். இறைவனை ஆவாஹிக்கும் திருவுருவை நமது தேசத்தில் அநேகமாக, நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பஞ்சபூத சேர்க்கையைத் தெளிவுறக் காட்டும் கருங்கல்லிலும் பஞ்சபூதங்களையும் பிரதியீடு செய்யும் பஞ்சலோகத்திலும் ஆக்குவது வழக்கமாக இருப்பதனை அவதானிக்கலாம். முக்கியமாக பேரரசர்கள் கட்டிய பெருங்கோயில்களில் ஆலயக் கருவறை விமானத்தையே பொன் வேய்ந்த போதும் மூலமூர்த்தியை கற்சிலையாகவே அமைத்துள்ளமையும் ஈண்டு சிந்திக்கத்தக்கது.
‘அர்ச்சகஸ்ய ப்ரபா⁴வேன சி’லா ப⁴வதி ச’ங்கர:’– என்று இதனையே காட்டுவர். வெறும் சிலையானது அர்ச்சகரின் மந்திர பாவனை மற்றும் கிரியைகளாலேயே சிவமாக… சங்கரனாக (இறைவனாக) மாற்றம் பெறுகிறது. எனினும் விரிவான கிரியைகளுடன் கூடிய கும்பாபிஷேகத்தை ஆற்றும் போது பக்திக்கு முதன்மை தரப்பட வேண்டியதும் அவசியம். பக்தியற்ற வெறும் கிரியைகள் உயிரற்ற உடல் போன்றவை. ஆகவே, கும்பாபிஷேகத்தில் ஈடுபடக்கூடிய குருமார்கள், ஆலய பரிபாலன சபையினர், கோயில்சார் அடியவர்கள், கும்பாபிஷேக விழா ஏற்பாட்டுக் குழுவினர், யாவரும் பக்திமயமாக இவ்வழிபாட்டில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.
நால்வகைப் பேறும் அருளவல்ல கும்பாபிஷேகம்
தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பேறுகளையும் அருளவல்லது கும்பாபிஷேகம். சிவாகமங்கள் கும்பாபிஷேகத்தையும் நான்கு வகையாக வகைப்படுத்திப் பேசும். ஆவர்த்தனம், அநாவர்த்தனம், புனராவார்த்தனம், அந்தரிதம் என்பனவே அவை.
ஆலயம் இல்லாத இடத்தில் புதிதாக ஓர் ஆலயம் அமைத்து, புதிதாக மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது அநாவர்த்தனம். முன்பிருந்த ஆலயம் முற்றாக அழிந்து விட்டால் அவ்விடத்தில் மீள ஆலயம் செய்து பிரதிஷ்டை செய்வது ஆவர்த்தனம். ஆலயத்தினுள் கொலை, கொள்ளை முதலியன நடைபெற்றால் அங்கே மூர்த்திகரம் குன்றாமலிருக்க, பிராயச்சித்தமாகச் செய்யப்பெறுவது அந்தரிதம். இத்தகு கும்பாபிஷேகங்கள் ‘பிராயச்சித்த கும்பாபிஷேகம்’ என்ற பெயரிலே கடந்த கால போரனர்த்தங்களின் போது இலங்கையில் அடிக்கடி நடைபெற்று வந்துள்ளன. பூஜை, உத்ஸவங்கள் நடைபெறக் கூடிய கோயிலில் திருத்த வேலைகளின் பொருட்டு பாலஸ்தாபனம் செய்து செய்யப்பெறும் கும்பாபிஷேகம் சம்பிரோக்ஷண புனராவர்த்தனப் ப்ரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம். பொதுவாக இத்தகு கும்பாபிஷேகங்கள் நடைபெறுவதையே பலரும் அறிந்திருக்கக் கூடும்.
பூரணமான மஹாகும்பாபிஷேகம் ஐம்பத்தைந்து கிரியைகளைக் கொண்டது என்று ஆகமங்கள் விவரிக்கின்றன. இத்தகு பாரிய முயற்சியாகிய கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு (பொதுவாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) நடைபெறுவதால் அதனைப் பார்ப்பது, கலந்து கொள்வது, பங்கேற்று சேவை செய்வது பெரும் புண்ணியமாகும்.
கும்பாபிஷேகத்தை பெரியளவில் பாதுகாப்பு, பிரசார, சுகாதார ஏற்பாடுகளுடனும் செய்வது நல்லது. ஆயினும் இவை கும்பாபிஷேகக் கிரியைகளை குழப்பாததாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விழாக்களுக்கு வருகை தருகிற அரசியற்பிரமுகர்கள் தெய்வகாரியத்திற்கு இடையூறின்றி தரிசனம் செய்து செல்ல முயலவேண்டும். கும்பாபிஷேக நிகழ்வுகளை வர்ணனை செய்வதும் கும்பாபிஷேக மலர் வெளியீடு செய்வதும் கூட வழக்கில் இருந்து வருகிறது.
புனரமைப்பின் போது செய்யப்பெறும் பாலஸ்தாபனம்
சைவாகமக் கிரியைகளை காமிகம், காரணம், போன்ற ஆகமங்களின் படி செய்வது வழக்கம். ஆகமக் கிரியைகளைச் சுருக்கி இன்றைய கிரியைநெறி முறைகளை பத்ததிகளாக எழுதியோர் பலர். காஞ்சி காமாக்ஷியம்பாள் ஆலய வழிபாட்டு முறைகள் ‘துர்வாச கல்பம்’ என்ற பத்ததிப்படி ஆற்றப் பெறுகின்றதாம். ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலங்களில் வைகானஸ, பாஞ்சராத்திர ஆகமங்களின்படி சம்பிரோக்ஷண விழா நடைபெறும். இது போலவே சிவாகம வழி நிற்கும் பதினெட்டுப் பத்ததிகள் சொல்லப்படுகின்றன. ஆயினும் இவற்றில் பலவற்றையும் இன்று நாம் காணமுடியாதுள்ளது. கால வெள்ளமும் போற்றுவாரின்மையும் இவற்றைச் சிதைத்திருக்க வெண்டும். எனினும் இன்று தமிழகம் மற்றும் இலங்கையிலுள்ள சிவாலயங்களில் ஸோமசம்பு சிவாச்சார்யார் பத்ததி, அகோர சிவாச்சார்யார் பத்ததி, ஸத்யோஜாத சிவாச்சார்யார் பத்ததி என்பனவே வழக்கில் உள்ளன.
பத்ததிகளுக்கு இடையில் சிற்சில பேதங்கள் இருப்பினும் யாவும் ஆகமங்களின் வழி எழுதப்பெற்றவையே.. இதே வேளை ஆகமப் பிரதிஷ்டை போலவே வைதீகப் பிரதிஷ்டையும் வழக்கில் உள்ளது. கேரளாவில் இவ்வகை வைதீகப் பிரதிஷ்டையே அதிகளவில் பின்பற்றப்பெறுகிறது. ஆனால் இக்கட்டுரை ஆகமப் பிரதிஷ்டைசார் கும்பாபிஷேகம் பற்றியே எழுதப்பெறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ‘இளங்கோயில்’ என்று போற்றப் பெறுவதும் ‘தருணாலயங்கள்’ என்று சொல்லப் பெறுவதும் பாலாலயங்கள் என்று கூறப்படுகின்றன. கும்பாபிஷேகத்திற்கு முன்னர் கோயில் திருப்பணி செய்யப்பெறும் போது சிறிய பாலாலயம் ஒன்று அமைக்கப்பெற்று மூலவரின் நாமம் தாங்கிய பாலமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பெறுவார். சிற்சில இடங்களில் மூலமூர்த்தியையே பெயர்த்து திருப்பணி வேலை நிறைவுறும் வரையில் பாலாலயத்தில் பிரதிஷ்டை பண்ணி வைத்திருப்பதும் வழக்கம்.அங்கே அப்படிப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வதை ‘பாலஸ்தாபன கும்பாபிஷேகம்’ என்று கூறுவர்.
பாலஸ்தாபனம் செய்யப்பெறும்போது மூல பிம்பத்திலிருந்து கும்பத்தில் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து, பின் கும்பத்திலிருந்து பாலபிம்பத்தில் ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பெறுவார். இதையே ‘பாலஸ்தாபன கும்பாபிஷேகம்’ என்பர். பாலஸ்தாபன காலத்திற்கு ஏற்ப கத்தி, கண்ணாடி, சித்திரம், பாதுகை, ஆயுதம், மரச்சிலை, கல்லுருவம் ஆகியவற்றை பாலபிம்பமாகப் பயன்படுத்திப் போற்றி வழிபடுவர். நினைத்தவுடன் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்து விட்டு பின்னர் திருப்பணிகள் நடைபெறத் தாமதிக்கின்றனவே என்று கவலை கொள்ளாது முறைப்படி இறைவனிடம் அநுக்ஞை பெற்று திருப்பணிக்கான சகல ஆயத்தங்களையும் செய்துகொண்டு, கோயில் திருப்பணிக்காக ஒரு குழுவையும் நியமித்து, அதனை செவ்வனே இயங்க வழிசெய்து இத்தனையாம் நாளில் கும்பாபிஷேகம் செய்வது (நாலு மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வது) என்று முடிவு செய்துகொண்டு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்தால், விரைவாகத் திட்டமிட்டு பணிகளை நடாத்தி கும்பாபிஷேகம் செய்ய வாய்ப்பாயிருக்கும்.
நான் அறிந்த வரையில் சில முக்கிய ஆலயங்களில் கும்பாபிஷேக நாளை நிர்ணயம் செய்த பின்னரே பாலஸ்தாபனம் செய்கின்றனர். பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது. ஏனெனில் ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காகவாம்.
கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகள்
கும்பாபிஷேகத்திற்கு முன்னேற்பாடாக முகூர்த்த நிர்ணயம், ஆசார்ய வரணம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். முகூர்த்த நிர்ணயம் என்பது கும்பாபிஷேக முகூர்த்தத்தை நிர்ணயிப்பதாகும். மிகவும் கவனமாக ஆராய்ந்து, இத்துறையில் மிக்க அனுபவம் கொண்டவராயும் இறை பக்தி மிக்கவராயும் உள்ள ஜோதிஷர் மூலம் வளர்பிறையினையுடையதாய் இதனை ஆற்ற வேண்டும். இதே போலவே ஆசார்ய வரணம் என்பது கும்பாபிஷேக பிரதான ஆச்சார்யாரைத் தெரிவுசெய்து (வரித்து) அழைத்து வருதலாகும். ஒழுக்கம் மிக்க வாழ்வு கொண்டவராயும் வேதாகம அறிவு மிக்கவராயும் ஆச்சார்ய இலக்கணம் மிக்கவராயும் உள்ள குருவானவரைத் தெரிவுசெய்து, அவரை வணங்கி வேண்டி அழைத்து வர வேண்டும்.
குருக்கள் என்பவர் இறைப்பணியாற்றுபவர். அவருக்குரிய மரியாதையை வழங்க வேண்டியது இந்துக்களின் கடன். பிற சமயிகள் தமது குருமார்களுக்குக் கொடுக்கும் மரியாதையை நம்மவர்கள் கிருகஸ்தர்களாக உள்ள அர்ச்சகர்களுக்குக் கொடுப்பதில்லை என்று பலரும் வருந்துவர். இதற்குப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கின்றனர். காரணங்கள் என்றும் எதற்கும் இருக்கும். ஆனால் நம் தர்மத்தை செவ்வனே வாழச் செய்ய சிறந்த குருமார்களின் உருவாக்கத்திற்கு பணி செய்வது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இறைவனே அர்ச்சக வடிவு கொண்டு பூஜை பண்ணியதாக கூறும் பல கதைகள் உள்ளதும் ஈண்டு சிந்திக்கத்தக்கது.
அடுத்து முதற் கிரியையாக, புண்ணியாகம் செய்யப் பெற்று தூய்மைப் படுத்தும் காரியம் இடம்பெறும். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்துள்ள பிராம்மணர்களிடமும் விக்கினங்களை அழித்து அருளும் விநாயகர், மூலமூர்த்தி, உத்ஸவமூர்த்திகள், அஸ்த்திரதேவர் (ஸ்வாமியின் ப்ரதிநிதியான ஆயுதம்) ஆகியவர்களிடம் வழிபட்டு, கும்பாபிஷேகம் செய்ய ஆதரவும் ஆசியும் அனுமதியும் அருளும் தந்தருளுமாறு பிரார்த்திப்பர். இதனை ‘அனுஜ்ஞை’ என்பர்.
அடுத்து, கும்பாபிஷேக திரவியங்களைச் சுத்திசெய்தல், அவற்றை பாகம் செய்தல் என்பவை நடைபெறும். ஆகமங்கள் கும்பாபிஷேகத் திரவியங்களைப் பதினொரு பங்காக வகுக்க வேண்டும் என்று சொல்வதால் அதனைக் குறிக்கப் பதினொரு நாணயங்களை வைத்து குருக்கள் வகுப்பார்.
எனினும் ஆகமங்கள் மற்றும் பத்ததிகள் கூறுவது போல திரவிய விபாகம் நடைமுறையில் எங்குமே செய்வதுமில்லை. செய்யவும் முடியாது. சம்பிரதாயக் கிரியை நடக்கிறதே அன்றி கால மாற்றமும் செலவுப் பெருக்கமும் உண்மையில் ஆகம முறை திரவிய விபாகத்திற்கு இடந்தருவதாக இல்லை. இதனையடுத்து ஆகமம் கட்டாயப்படுத்தாத இடத்தும் கட்டாயம் செய்ய வேண்டிய கிரியை கணபதி ஹோமம். அனேகமாக ஐந்து குருமார்கள் இணைந்து விநாயகப்பெருமானுக்காக ஹோம வழிபாட்டை ஆற்றுவர். விநாயகர் அகவல், காரியசித்தி மாலை, விநாயகர் அநுபூதி போன்ற தமிழ்ப் பாசுரங்களையும் இவ்வமயம் பாராயணம் செய்தல் சிறப்பு. அடுத்து கிராமசாந்தி, பிரவேசபலி ஆகியன நடைபெறும்.
கிராமசாந்தி என்பது பைரவப்பெருமானை முன்னிட்டுக் கொண்டு காமம், குரோதம் முதலிய அகப் பகைகளை அசுரர், ராட்சசர், பூதர், பிசாசர் என்று உருவகித்து ஆலயமுள்ள கிராமத்திலுள்ள குற்றங்களை நீக்கும் முகமாக நீற்றுப்பூசணிக்காயை வெட்டி பலி கொடுத்து வழிபடுவது இதுவாகும். இலங்கையில் சில ஆலயங்களில் இன்றும் கிராமசாந்தியின் போது பலி மேளம் முழங்க, சேவலின் பூவை வெட்டி ஹோமம் செய்யும் வழக்கம் இருக்கிறது.
பிரவேசபலி என்பதும் கிராமசாந்தி போன்ற கிரியையே. ஆலயத்தைச் சுற்றி எண்திசைகளிலும் இன்னும் பிரம்மஸ்தானம் என்ற இடத்திலுமாக ஒன்பது இடங்களில் (நவசந்திகளில்) பலி கொடுத்த பூஜை செய்வதாகும். இதே போல ராஷஸர்களை அழிக்கும் ரஷோக்னதேவரை முன்னிறுத்திப் போற்றி ரஷோக்ன ஹோமம் செய்வர்.
சிவாஸ்திரம், அகோராஸ்திரம், பிரத்தியங்கிராஸ்திரம், பாசுபதாஸ்திரம் ஆகிய நாற்பெரும் ஆயுதங்களைப் போற்றிச் செய்வதாக திசாஹோமம் செய்வர். இவ்விழாவில் வாய்ப்புண்டாகிற சமயத்தில் சிறப்பாக கோபூஜை, கஜபூஜை ஆகியவற்றையும் செய்யும் வழக்கம் உள்ளது.
சிறப்பு மிக்க கிரியைகள்
அடுத்து வாஸ்து சாந்தி நடைபெறும். வாஸ்து புருஷன் என்பவர், ஒருவராலும் அழிக்க இயலா ஆற்றல் பெற்றவராகக் கருதப்படுகிறார். அவரை அசையாமல் இருக்குமாறு வேண்டி நாகபந்தனம் செய்து அவர் மீது காயத்திரி ஸாவித்திரி ஸமேத பிரம்மா உள்ளிட்ட ஐம்பத்துமூன்று தேவர்களையும் பிரதிஷ்டித்து பூஜை செய்வதே வாஸ்து சாந்தி. (வாஸ்து புருஷன் அசைந்தால் பூகம்பம் உண்டாகும் என்பர்.) இது எந்த ஒரு நற்கருமத்திற்கும் முன்னதாகச் செய்யப்பெறுகின்றது. ஆக, வாஸ்து புருஷனை பிரபஞ்ச சக்தியாக அதாவது இயற்கையாகக் கருதமுடியும்.
இந்நிகழ்விலும் வாஸ்து ஹோமம் உண்டு. கூஷ்மாண்டம் என்ற நீற்றுப்பூசணிக்காய வெட்டி பலி கொடுப்பர். நான்கு முழ அளவில் வைக்கோலால் (தர்ப்பையால்) ஓர் ஆளுருவம் செய்து, அதில் வாஸ்து புருஷனை ஆவாஹித்து, அவ்வுருவின் தலைப்பாத்தில் ஹோம அக்கினியை எரியூட்டி கோயில் முழுவதும் இழுத்து வருவர். பின்னால் சாந்திகும்ப நீர் தெளிக்கப்பெறும்.
கணபதி ஹோமத்தைப் போலவே சிறப்பிற்குரியது நவக்கிரஹமகம் என்ற நவக்கிரஹ ஹோமம். இதன் போது ஞானசம்பந்தப்பெருமான் அருளிய ‘கோளறு பதிகம்’ பாராயணம் செய்வதும் சிறப்பாக அமையும். இதையடுத்து இறைவனின் மூர்த்தி சாந்நித்தியத்தை வலுவூட்டும் முகமாக பதினொரு மந்திரங்களான சம்ஹிதா மந்திர ஹோமம் மற்றும் மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம் என்பன இடம்பெறும். இக்கும்பங்கள் மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்வதும் வழக்கு.
இவற்றினைத் தொடர்ந்து நிகழ்வது ம்ருத்சங்கிரஹணம். இது பற்றிய விரிவான விளக்கத்தை ‘கொடியேற்ற விழா எனும் தெய்வீக நிகழ்வு’ என்ற இத்தளத்திலே வெளியான கட்டுரையிலும் காணலாம். ம்ருத் என்றால் மண். சங்கிரகணம் என்றால் சேகரித்தல். ஏந்த ஒரு நற்காரியத்திற்கும் முன்னோடியாக அங்குரார்ப்பணம் செய்வது வழக்கம். அதற்குத் தேவையான மண்ணை மந்திரபூர்வமாகப் பெற்றுக் கொள்ளலே இக்கிரியையாகும். இதன் போது ‘பூ ஸூக்தம்’ ஓதப்பெறும்.
ம்ருத்சங்கிரஹணம் மூலம் பெறப்பெற்ற மந்திரபூர்வமான மண்ணை தலையிற் சுமந்து வந்து யாகசாலையை அடைந்து அதன் வடமேற்கு மூலையில் கிருத்திகா ரோஹிணி தேவியருடனாய அமிர்தேஸ்வரன் என்ற சந்திர பகவானையும் பன்னிரு சூரியரையும் பூஜித்து எடுத்து வந்த மண்ணை நிரப்பி அதில் ‘ஓஷதி ஸூக்தம்’ ஓதி பசும் பாலில் இடப்பட்டிருந்த நவதானியங்களை மண்ணில் விதைப்பர்.
ம்ருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் என்பவற்றை அடுத்து ரஷாபந்தனம் இடம்பெறும். கங்கணம் சாற்றுதல் என்றும் காப்புக்கட்டுதல் என்றும் சொல்லப்பெறும் இந்த ரஷாபந்தனத்தில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் குருமார்கள் அனைவரும் தமது வலது கை மணிக்கட்டில் காப்பணிந்து கொள்வர். காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை (கும்பாபிஷேகம் நிறைவுறும் வரை) செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது.
புதிய மூர்த்திகளுக்குச் செய்யப்பெறும் கிரியைகள்
புதிதாக உருவாக்கி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பெறவுள்ள மூர்த்திகளுக்கு நயனோன்மீலனம் போன்ற கிரியைகள் இடம்பெறும். அதாவது கண்திறத்தல், ஜலாதிவாசம் (நீருள் வைத்திருத்தல்), தானியாதி வாசம் (தானியத்துள் வைத்திருத்தல்), சயனாரோஹணம் (தூங்கச் செய்தல்), கிராமப் பிரதட்சணம் (ஊரைச் சுற்றி வலம் வரச் செய்தல்) போன்றவற்றைச் செய்வது வழக்கம்.
யாகமும் யாகபூஜைகளும்
யாகசாலையை ஆலய வீதியுள் (மூன்றாம் வீதியிலேனும்) அமைப்பது சிறப்பு. (பாதுகாப்பும் முக்கியம்.) கிழக்கு, ஈசானமூலை, வாயு மூலையில் அமைப்பதும் சிறப்பு. பூமியை ஒரு முழஆழத்திற்கு வெட்டி, புதுமண் பரப்பி, நடுவே ப்ரதான கும்பம் அமையவுள்ள வேதிகையின் கீழே ரத்னங்களிட்டு, மட்டம் செய்து பூசி, நடுவே, வேதிகையில் பத்மாசனம், கூர்மாசனம் ஆகியவற்றை உருவாக்குவதும் சிறப்பு. பிரதான யாகசாலைக்கேனும் பஞ்சாசன வேதிகை அமைப்பது மேலானதாகும். வசதியில்லாத இடங்களில் ஆலயத்திலுள்ள ஸ்வாமி எழுந்தருளும் சிம்மாசனத்தையே வேதிகையில் வைப்பதுமுண்டு.
சிவாகமத்தின் படி ருத்ரசூத்ரக்கிரமம், விஷ்ணு சூத்திரக்கிரமம், பிரம்மசூத்திரக்கிரமம், மநுசூத்திரக்கிரமம், ரவிசூத்திரக்கிரமம் என்று ஐவகையான யாக வடிவமைப்புகள் முக்கியமாக உள்ளன. ருத்ரசூத்ரக்கிரமப்படி அதிஉச்சமான 33 குண்டங்களையுடைய மஹாயாகம் அமைப்பர். மற்றையவற்றின் பிரகாரம் 25, 17, 09, 05 என்ற எண்ணிக்கையிலும் குண்டங்கள் அமையும். யாகசாலைகளுக்கு 100, 64, 36, 16 என்ற வகையில் தூண்கள் அமையும். வாழை, தோரணங்களால் யாகாசலை அலங்கரிக்கப்பெறும். 33 குண்டம் அமைத்துக் கும்பாபிஷேகம் செய்வது சிறப்பு என்ற எண்ணப்பாங்கு இலங்கையில் பரவி வருகிறது. சிறப்புத்தான் எனினும் அதற்குரிய வசதிகள் இல்லாத இடத்து ஒழுங்கற்ற முறையில் அவ்வாறு செய்வதைக் காட்டிலும் பஞ்சகுண்ட பக்ஷம், அல்லது ஏககுண்ட பக்ஷம் என்பவை மூர்த்திகரத்தை அதிகரிக்க சிறப்பாயமையும். குளிக்கப் போய் சேறு பூசலாகாதல்லவா?
பொதுவாக நவகுண்ட பக்ஷமாக கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். அட்டமூர்த்திகளான ஆகாயம், காற்று, நீர், நிலம், தீ, சூரியன், சந்திரன், ஆத்மாவுடன் மூலமூர்த்தியின் பிரதான குண்டம் ஆக ஒன்பது குண்டங்கள் இதில் அமையும். அநேகமாக பிரதான குண்டத்தை ஈசானத்திற்கும் கிழக்கிற்கும் இடையில் அமைப்பது வழக்கம். வேதிகைக்கு முன் அமைப்பதும் தவறல்ல.
ரக்ஷாபந்தனத்தையடுத்து சூரியனிலிருந்து பூதக்கண்ணாடி மூலம் நெருப்பை பஞ்சில் பெறும் ஸூர்ய காந்தாக்னி ஸங்கிரஹம் இடம்பெறும். இதன்போது பெறப்பெற்ற அக்கினி யாகசாலைக்குக் கொண்டு செல்லப்பெறும். கடஸ்தாபனம் என்ற கிரியை அடுத்து இடம்பெறும்.; வெண்துணியால் வடித்து எடுக்கப்பெறும் கங்கை முதலிய புனித நீர்கள் இதன்போது மந்திரபூர்வமாக பிரதான குடத்தில் சேர்க்கப்பெறும். இதன்பின் கும்பங்கள் அலங்காரம் செய்யப்பெறும். அடுத்து கலாகர்ஷணம் என்ற கிரியை மூலம் மூலபிம்பத்தின் இறைசாந்நித்யம் கும்பத்தில் சேர்க்கப்பெறும். அடுத்து மங்கல வாத்திய கோஷத்துடனும் வேத, திருமுறைப் பாராயணங்களுடன் கும்பங்கள் உரிய யாகசாலைகளுக்கு எடுத்து வரப்பெற்று வேதிகையில் பிரதிஷ்டை செய்யப்பெறும்.
இறைவனுக்கு கும்பத்திலும் பிம்பத்திலும் நடக்கும் ஆராதனை
தொடர்ந்து மிக மிக விரிவாக யாகமண்டபபூஜை இடம்பெற்று பிரதான குண்டத்தில் பிரதான ஆச்சார்யரால் சிவாக்னி ஆவாஹனம் செய்யப்பெறும். தொடர்ந்து அக்னி ஸம்ஸ்காரங்களும் மிக மிக விரிவாகப் பலமணிநேரம் தொடர்ச்சியாக நடைபெறுவது வழக்கம். இவ்வமயம் நடைபெறுகிற கிரியைகள் பற்றி சிவாச்சார்யார் (ஸர்வ ஸாதகாச்சார்யார்) ஒருவர் விளக்கவுரையாற்றி அடியார்களை கிரியையுடன் ஒன்றச் செய்வதும் ஓதுவா மூர்த்திகள் தமிழ் வேதபாராயணத்தில் ஈடுபடுவதும் அவசியம். ச்ருக்ச்ருவம் என்ற நெய்க்கரண்டிகளால் ஸம்ஸ்காரம் செய்யப்பெற்ற நெய்ப் பாத்திரத்திலிருந்து அக்னியில் விசேட ஆஹூதிகள் வழங்கப்பெறும்.
அக்னி ஸம்காரங்களில் சில வைபவங்களுக்கு பாலாக்னியைப் பயன்படுத்துவர். சிலவற்றிற்கு யௌவனாக்னி வரை ஸம்ஸ்காரம் செய்வர். ஆயினும் கும்பாபிஷேக விழாவிற்காக ஏற்படுத்தப் பெறும் மஹாயாக அக்னியில் விவாகம் வரையிலான ஸம்ஸ்காரங்கள் நடைபெறும். விருத்தாக்னி வரை பூஜிக்கப்பெறும். தொடர்ந்து பிரதான குண்ட அக்னியைப் பாகம்செய்து அதிலிருந்து பிற அனைத்துக் குண்டங்களிலும் அக்னி இணைப்புச் செய்யப்பெறும். அனேகமாக கும்பாபிஷேகத்திற்கு முதல்நாள் விரிவான முறையில் யாகத்தில் ‘விசேஷ த்ரவிய ஹோமம்’ நடைபெறும்.
பிரதான யாகம் தவிர்ந்த பிற பரிவார மூர்த்திகளின் யாகசாலைகளிலும் இவ்வாறே யாகபூஜை, ஹோமம், விசேஷ த்ரவிய ஹோமம் என்பன நடைபெறும். பல்வேறு குண்டங்களிலும் ஹோமம் செய்த பூர்ணாஹூதி நடைபெற்றபின் ஒவ்வொரு காலமும் சர்வ அக்னியும் பிரதான குண்டத்தில் சேர்ப்பிக்கப்பெறும். யாகசாலையில் பிரதானகும்பமூர்த்திக்கு அபிஷேகம் செய்யுமாறும் விதிக்கப்படுகிறது. இதற்காக அநேகமாக அஸ்திரதேவருக்கும் பிரதான கும்பத்திற்கும் நாடீசந்தானம் (நூலால் தொடுகை) செய்து அபிஷேகம் செய்கிற வழக்கம் உண்டு.
கும்பாபிஷேகத்திற்கு இருநாள்களுக்குமுன் சுபவேளையில் கலசஸ்தாபனம் (விமானங்களில், ராஜகோபுரத்தில் கலசம் என்கிற திருமுடிகள் வைக்கப்பெறும்.) மூலஸ்தானத்திலும் பரிவார சந்நிதிகளிலும் சுமங்கலிகளால் தீபஸ்தாபனம் என்பன இடம்பெறுவது வழக்கம். கும்பாபிஷேகத்திற்கு முன்னர் ஒரு மண்டலம் சிறப்பாக விசேட அபிஷேக ஆராதனைகளுடன் பூஜிக்கப்பெற்ற அந்தந்த மூர்த்திகளின் மஹோன்னதமான யந்திரங்கள் மூலாலயத்தில் ஸ்தாபிக்கப்பெறும். அன்றைய தினமே சுபவேளையில் பிம்பஸ்தாபனம் இடம்பெறும். அப்போது அஷ்டபந்தனம் என்ற சுக்காங்கல், குங்கிலியம், கொம்பரக்கு, தேன்மெழுகு, காவி, செம்பஞ்சு, எருமை வெண்ணெய், சாதிலிங்கம் என்பவை கலந்து இடித்து உருவாக்கப்பெற்ற அஷ்டபந்தனத்தால் பீடமும் ஸ்வாமி விக்கிரஹமும் இணைக்கப்பெறும்.
இவற்றினையடுத்து கும்பாபிஷேகத்திற்கு முதல், முதல் நாள்களில் முக்கிய நிகழ்ச்சியான தைலாப்பியங்கம் என்கிற ‘எண்ணைக் காப்பு’ சாற்றும் வைபவம் இடம்பெறும். இலங்கைத் திருக்கோயில்களில் இந்நிகழ்வின் போது அடியவர்கள் யாவரும் மூலட்டானேஸ்வரர் உள்ளிட்ட எல்லாக் கருங்கல் மூர்த்திகளுக்கும் கருவறை மற்றும் சந்நிதானங்களுள் சென்று தம் கைகளால் எண்ணைக் காப்பிடக் கூடிய பேறுபெறுகிறார்கள். இதனைப் பாக்கியமாகக் கருதி பலமணி நேரங்கள் எந்த ஜாதி, இன பேதமுமின்றி வரிசையில் காத்திருந்து இப்பணியில் ஈடுபடுகின்றனர். சில முக்கிய ஆலயங்களில் இதனை இரண்டு நாள்கள் செய்வதுமுண்டு. (மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதற்காக) இதே போலவே தென் தமிழகக் கோயில்கள் சிலவற்றிலும் மக்கள் இறைவனைத் தீண்டி எண்ணை சாற்றும் பேற்றைப் பெறுவதாகவும் அறிய முடிகின்றது.
பொதுவாக க்ருத ச்ரோர்ப்பணம், தைலாப்பியங்கம் என்ற இந்நிகழ்ச்சி சகல தமிழக ஆலயங்களிலும் நடைபெறுகின்றது. ஆச்சார்யார் மற்றும் அந்தணர்கள் மட்டுமேனும் இதில் கலந்து கொள்கிறார்கள். கும்பாபிஷேகத்திற்கு முன் நிகழக்கூடிய இந்நிகழ்ச்சியில் அனைத்து மக்களையும் பங்கேற்கச் செய்வது அனைவருக்கும் திருப்தி தரவல்லதாக இருக்கும் எனலாம்.
ஸ்பர்ஸாஹூதி என்ற மிக உயரிய கிரியை முறை
எண்ணெய்க் காப்பின் பின் பிம்பசுத்தி, தேவாலய சுத்தி செய்யப்பெற்று இறைமூர்த்தங்களுக்கு சந்தனம் சாற்றுவர். எல்லா இறை மூர்த்தங்களுக்கும் காப்பு நாண் சாற்றும் முறையும் உண்டு. அடுத்து கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் இரவுப் பொழுதில் நாடீ சந்தானம், ஸ்பர்ஸாஹூதி, தத்வார்ச்சனை ஆகியன இடம்பெறுவது வழக்கம். யாகசாலையிலுள்ள அக்கினி, பிரதானகும்பம், மூர்த்தி என்கிற மூன்றையும் தொடுப்புச் செய்து தர்ப்பைக் கயிறால் இணைத்து இக்கிரியை நடைபெறும். இதன் போது தொட்டு கும்பாபிஷேகம் வரையிலான காலத்தில் மூர்த்தங்களுக்கு வஸ்திரம் சாற்றும் முறை சில தமிழகக் கோயில்களில் இல்லாது இருப்பதால் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பெறுவதில்லை என்று தெரிகிறது. எனினும் இலங்கையில் தேவி மூர்த்தங்களுக்கு சிறிய எளிய வஸ்திரம் சாற்றியிருப்பார்கள். எப்படியாகிலும் பொது மக்கள் இக்கிரியைகளையும் தாராளமாகப் பார்க்கமுடியும். இப்படி ஒவ்வொரு ஆலயங்களிலும் சில வேறுபட்ட சம்பிரதாயங்கள் இருக்கலாம். ஆங்காங்கே சம்பிரதாயங்களை ஏற்று வழிபாடாற்ற வேண்டும்.
ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை. பொதுவாகவே கருவறையிலுள்ள இறைமூர்த்தங்களை படம் பிடிப்பதைத் தவிர்ப்பது இறை சாந்நியத்திற்கு குறைவுண்டாகாமல் காக்கும். திருவுருவங்களை கண்டத்திற்கு மேல் ருத்திரபாகம் என்றும் சிவதத்துவம் என்றும் கண்டத்திலிருந்து முழங்கால் வரையான பாகம் விஷ்ணுபாகம் என்றும் வித்யாதத்துவம் என்றும் முழங்காலுக்குக் கீழ் பாதம் வரையில் பிரம்மபாகம் என்றும் ஆத்மதத்துவம் என்றும் பாகம் செய்து தத்வார்ச்சனை செய்வர்.
ஆத்மதத்வாதி⁴பதயே பிரம்மணே ஸ்வாஹா என்று அக்னியில் ஆஹூதி செய்து பிம்பத்தின் பிரம்மபாக சுத்தி செய்து அப்பாகத்தில் பிரம்மனை நிலைபெறச் செய்து பிம்பத்தின் அடிப்பாகத்திலும் ஆச்சார்யார் ஆஹூதி செய்வார்.இதற்கிடையில் மூலமந்திர ஹோமங்கள் விசேட ந்யாசபூர்வ ஆராதனைகள் இடம்பெறும். இது போலவே விஷ்ணுபாகம், ருத்ர பாகம் என்பவற்றிற்கும் அக்னியிலும் பிம்பத்திலும் விரிவான ஆராதனைகளுடன் ஆஹூதிகள் வழங்கப்பெறும். தொடர்ந்து யாகாக்னியில் பிராயச்சித்த ஹோமங்கள் செய்து மூலவருக்கு சாந்தி கும்ப நீரால் அபிஷேகிப்பர். ஸர்வ லோகேஸ்வரனாகிய பகவான் பிம்பத்திலே நிலைபேறாக எழுந்தருளப் பிரார்த்தித்து செய்யப்பெற்ற கிரியைகளில் குற்றமுண்டாகில் மன்னிக்குமாறு ஸ்வாமியின் வலது திருக்காதில் ஆச்சார்யார் பிரார்த்திப்பர்.
கோலாகலம் நிறைந்த கும்பாபிஷேக நாள்
கும்பாபிஷேக நன்நாளன்று அதிகாலையிலேயே (கும்பாபிஷேக முகூர்த்தத்திற்கு சில மணிநேரம் முன்னதாகவே) யாகசாலாபூஜை நடைபெற்று பிராயச்சித்த, மூலமந்திர ஹோமம் செய்து மஹாபூர்ணாஹூதி வழங்குவர். இதே போலவே சகல யாகங்களிலும் பூர்ணாஹூதி நிகழும். பிரதான யாகசாலையில் பூர்ணாஹூதியை அடுத்து அக்னிவடிவாக எழுந்தருளியுள்ள பகவானுக்கு உபசாரங்களை வழங்கி திருப்தி செய்து நிறைவாக சகல அக்னிகளையும் பிரதான அக்னியில் சேர்த்து பிரதான அக்னியிலுள்ள இறைசக்தியை முறைப்படி கும்பத்தில் சேர்ப்பர்.
அந்தர்பலி, பஹிர்பலி என்பனவும் நிகழ்த்தி பிரதான கும்பமூர்த்திக்கு சோடச உபசாரபூஜை செய்து நால்வேதபாராயணம், தமிழ்வேத பாராயணம், கீத, ந்ருத்ய உபசாரங்கள் போன்றவற்றையும் பிரதான கும்பத்தின் முன்னே செய்து அர்ச்சகர்கள் ஸ்வாமி மற்றும் அம்பாளின் வாஹனங்களாக தம்மைக் கருதி இருக்க பக்திப் பரவசம் பொங்கவும் மங்கல இசை விண்ணைக் கிழிக்கவும் வேதபாராயணம், பஜனை என்பன நடைபெறவும் கும்பங்கள் அர்ச்சகர்களின் சிரசில் எழுந்தருளச் செய்து வீதியுலாவாகக் கொண்டு செல்வர்.
இதன்பின் ராஜகோபுரம், மூலவிமானம், விமானங்களில் ந்யாசபூர்வ அர்ச்சனையுடன் கும்பாபிஷேகம் நடைபெறும். தமிழகத்தில் இதனையே மக்கள் மிகச்சிறப்பாகப் பார்த்து மகிழ்வதுண்டு. அடுத்து வாயிலில் புஷ்பாஞ்சலியுடன் மூலஸ்தானத்திற்கும் பரிவார மூர்த்திகளின் சந்நிதிகளுக்கும் உரிய மஹாகும்பங்கள் கொண்டு செல்லப்பெறும். விசேஷ ந்யாசங்களின் மூலம் ‘.இறைவா, கும்பத்திலிருந்து இருந்து எம் போன்ற ஆன்மகோடிகளுக்கு அருளும் முகமாக இத்திருவுருவத்தில் எழுந்தருள வேண்டும்’ என்கிற பிராத்தனையை பலமுறை விண்ணப்பித்து மூலஸ்தான மூர்த்திக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறும்.
கும்பாபிஷேகத்தின்பின் யாகசாலையில் ஸ்திராஹூதி வழங்கி விசர்ஜனம் செய்வர். இலங்கையிலிருக்கும் வழக்கின்படி கும்பாபிஷேகம் நிறைவுற்றதும் மூலஸ்தான திருக்கதவு சாற்றப்பெறும். முன்னே கோ(பசு)வை நிறுத்திப் பூஜிப்பர். தவிர அஷ்ட மங்கலப் பொருள்களும் திருக்கதவின் முன்வைத்துப் போற்றப்படும்.
‘பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினால் வலஞ்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்மினே’
என்று உள்ள திருமறைக் காட்டுப் பதிகம் பாராயணம் செய்யப்பெற்று மங்கல வாத்திய முழக்கத்துடன் திருக்கதவு திறக்கப்பெறும். தொடர்ந்து யாவரும் மூலவரை நேரிலும் முன்னே வைக்கப்பெற்ற கண்ணாடியிலும் தரிசனம் செய்வர். ஸ்வாமி முன்றலில் ஸந்நியாசி, பிரம்மசாரி, சுமங்கலிகள், ராஜா, பிராம்மணர்கள் போன்றவர்களை நிற்கச் செய்து இதனை ஆற்றுவர்.
தொடர்ந்து சண்டஹோமம், ஆச்சார்ய உத்ஸவம், யஜமான உத்ஸவம், மஹாபிஷேகம், மாலையில் திருவீதியுலா தொடர்ந்து மண்டலாபிஷேகம் என்பன நடைபெறும். தமிழகத்தில் மண்டலாபிஷேகம் 15, 30, 45 என்ற கணக்கில் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. இலங்கையில் இது 12, 24, 36, 48 என்கிற கணக்கில் நடைபெறுகிறது. நிறைவு நாளன்று சஹஸ்ரசங்காபிஷேகம் செய்து திருக்கல்யாண உத்ஸவமும் செய்வது வழக்கம். (சில இடங்களில் கும்பாபிஷேகமன்று மாலையிலேயே திருக்கல்யாண உத்ஸவம் செய்யும் வழக்கம் உள்ளது.) வைஷ்ணவத் திருத்தலங்களிலும் சிற்சில வேறுபாடுகளுடன் மஹாஸம்ப்ரோக்ஷணம் என்கிற பெயரில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது. இதே போலவே காஞ்சி காமாக்ஷியம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திலும் சம்பிரதாய வேறுபாடுகள் உள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் பொதுவாக சிவாகம வழியில் பூஜை நடைபெறும் சிவாலயம், அம்பாள் ஆலயம், முருகன் மற்றும் விநாயகர் போன்ற ஆலயங்களில் கைக்கொள்ளப்பெறும் கும்பாபிஷேக நடைமுறைகளையே இங்கு காட்டியிருக்கிறோம்.
கும்பாபிஷேகத்தை தமிழில் ‘பெருஞ்சாந்தி வைபவம்’ என்றும் ‘திருக்குடமுழுக்கு’ என்றும் ‘திருக்குடநன்நீராட்டு விழா’ என்றும் சிலர் எழுதுகிறார்கள். ஆயினும் சில அறிஞர்கள் இச்சொற்கள் ‘கும்பாபிஷேகம்’ என்ற சொல்லிற்கு ஈடாகா என்றும் கருதுவதாக அறிய முடிகிறது. மிக்க ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து பங்காற்றுபவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்து சேரும் என்று ஆகமங்கள் உறுதி சொல்கின்றன. எனவே ஓரளவேனும் பொருள் தெரிந்து கிரியைகளில் நாமும் இணைந்து இவ்விழாவில் பங்கேற்பது பேருவகை தரவல்லதல்லவா?
திருச்சிற்றம்பலம்!
திரு மயூரகிரி சர்மா அவர்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அருமையான கட்டுரை. மந்திரம், கிரியை ,பாவனை (மனம், வாக்கு ,காயம்) இம்முன்றும் ஒருமித்து செய்யும் பூசையே பலனளிக்கும் என்பதே உண்மை. ஒவ்வொரு கிரியைக்கும் உள்ள உண்மை சிறப்பு பற்றி எழுதிய விதம் அருமை. கிரியைகள் பயனற்றவை அன்று, உயரிய தத்துவங்களை உள்ளடக்கியவை என்பது உணரற்பாற்று. மற்ற ஆடம்பரங்களில் பொருளையும், நேரத்தையும் வீணடிக்காமல் இவற்றில் சமயிகள் கவனம் செலுத்த வேண்டும். இன்று இதனை காண்பது அரிதாகி வருவது வேதனையே. தனிப்பட்ட வெறுப்புகள் கொண்டு குருக்களை மதியாதோரும் உண்டு. ஆசார்யனை சிவமாகவே பாவிக்க வேண்டும் என்பதே ஆகம,திருமுறை உண்மை. இனியேனும் நல்லவை நடக்கட்டும்.
இது போன்ற திருக்கோவில் விழாக்களில் அரசியலை கலப்பதும் அநாகரீகமே. அதற்காக அரசியல் வாதியாய் பணியாற்றுவோர் வரவேண்டாம் என சொல்லவில்லை. அவர்களும் ஆடம்பரம் இல்லாமல் ஒரு பக்தராக கலந்து கொண்டு அருள் பெறலாமே. அப்படி இல்லாமல் அவரை வி ஐ பி ஆக கொண்டு அவர் வரும் வரை கார்யங்களை நிறுத்துவது,அல்லது அவசரப்படுவது போன்று செய்து சிவ அபசாரத்தில் அவரையும் ஆட்படுத்தி தாமும் நரகு ஏகுவது ஏனோ? இன்று ஆலயங்களில் எல்லாம் அரசியல் கலந்த நிலை என்று மாறுமோ?
சு பாலச்சந்திரன்
பெருமதிப்பிற்குரிய மயூர கிரி ஷர்மா அவர்களுக்கு
நல்ல தகவல்களை தொகுத்து அற்புதமாக வழங்கியுள்ளீர்கள்.நன்றி. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் இந்த தகவல்களை நாம் எப்படி சேர்ப்பித்து, புரியவைப்பது என்று நம் முன் ஒரு பெரிய சவால் உள்ளது. எல்லாம் வல்லவனின் அருளால் நம் தமிழ் மக்கள் இதனை நிறைவேற்றுவார்கள். இது உறுதி.
திரு மயூர கிரி ஷர்மா அவர்களுக்கு,
மிக சிறந்த கட்டுரை. பலரும் அறியாத தகவல்கள்.
//கும்பாபிஷேக விழா என்பது நினைக்கும் போதெல்லாம் இன்பம் தரவல்லது.//
//எனினும் விரிவான கிரியைகளுடன் கூடிய கும்பாபிஷேகத்தை ஆற்றும் போது பக்திக்கு முதன்மை தரப்பட வேண்டியதும் அவசியம். பக்தியற்ற வெறும் கிரியைகள் உயிரற்ற உடல் போன்றவை. ஆகவே, கும்பாபிஷேகத்தில் ஈடுபடக்கூடிய குருமார்கள், ஆலய பரிபாலன சபையினர், கோயில்சார் அடியவர்கள், கும்பாபிஷேக விழா ஏற்பாட்டுக் குழுவினர், யாவரும் பக்திமயமாக இவ்வழிபாட்டில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.//
மிக உன்னதமான வரிகள். பல கோவில்களில் கும்பாபிஷேகத்தை வெறும் கிரியைகலாக மாற்றிவிட்டனர். சாதியத்தை அதில் புகுத்தி பலரின் வெறுப்புக்கு உள்ளாகிவிட்டனர். சிலர் அதைவைத்து பணமும் புகழும் தேடுகின்றனர்.
ஒரு சாரார், பக்தி என்ற பெயரில் திருமுறைகளை ஓதி வேள்விகள் செய்கின்றனர். வடமொழி மந்திரங்களுக்கு இணையாக திருமுறைகளில் இருந்து பாடல்களை எடுத்து அதை வைத்து வேள்விகள் செய்கின்றனர்.
சோமசுந்தரம்
//நடைபெறுகிற கிரியைகள் பற்றி சிவாச்சார்யார் (ஸர்வ ஸாதகாச்சார்யார்) ஒருவர் விளக்கவுரையாற்றி அடியார்களை கிரியையுடன் ஒன்றச் செய்வது அவசியம்//
இப்படி அடியார்களை ஒன்றச் செய்து வழிபாட்டைச் செய்யும் முயற்சி வெகு இடங்களில் காணவில்லை. சடங்குகள் ஒருபுறமும் சேவார்த்திகள் எண்ணம் வேறுபுறமுமாக இருக்கும் அவலநிலை பல இடங்களில் இருப்பது கண்கூடு.
இவை மாற, மனமொருமித்த உணர்வோடு இக்கிரியைகள் நடந்தேற, இறைவனைப் பிரார்த்திப்போம்.
‘/மண்ணினால் உமை செய் மறைக்காடரோ’/ இந்தத் தொடர் “மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ” என்றிருக்க வேண்டும்.
சைவானுட்டானத்திலிருந்து மஹாகும்பாபிஷேகம் வரை சைவக்கிரியைகளனைத்திற்கும் பாவனை மிகவும் இன்றியமையாதது.
பாவனையின் இன்றியமையாமையை,
“தாவரிய அன்பினால் சம்புவினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும்படி கண்டால் இனிதுவந்து
பாவனையால் நோக்கினால் பலர்காணப் பயன்பெறுவார்” எனச் சேக்கிழார் அருளுகின்றார்.
உளங்கலந்த பாவனையின்றிச் செய்யும் கிரியைகள் வெறும் சடங்குகளே. பாவனை அன்பினால் அதாவது பக்தியினால் வருவது. அந்த பக்தி சிவாச்சாரிய குலத்தில் பிறந்தவருக்கு உயிர்ப்பண்பாகும் என்ற காரணத்தால் தான்,
“எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறை வழுவாமே
அப்போதைக்கு அப்போதும் ஆவமிகு மன்பினராய்
முப்போது மர்ச்சிப்பார் முதற்சைவராம் முனிவர்”
என்றும்,” விரும்பிய அர்ச்சனைகள் சிவவேதிய ர்க்கே உரியன, அப்பெருந்தகையார் குலப்பெருமை யாம்புகழும் பெற்றியதோ” என்றும் தெய்வச் சேக்கிழார் போற்றுகின்றார். இந்தக்குலம் மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர்குலம்” தம் பெருமை தாமறியாத் தகுதியராய்,இக்காலத்தில் இக்குலத்தில் தோன்றியோர் வெறும் சடங்காம் கிரியா குருக்களாகக் குறைவுற்றமை சைவத்துக்கு இழப்பு.
சிவபூசகர்கள் திருமுறை ஓதி பத்தியினால் பிரதிட்டை செய்த திருக்கோவில்களிலும் சிவம் அருள்பாலிக்கும். ஐயம் வேண்டா
மயூர கிரி ஷர்மா மகாசாயவிற்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரம்.
பாஞ்சராத்ரம் மற்றும் வைகாசன ஆகமம் பற்றி வைஷ்ணவ சான்றோர்கள் காலக்ஷேபம் கேட்டு உள்ளேன். சைவ பக்ஷ வைதிக கிரியைகளை தெள்ளென தெளிவாக பதிவு செய்தது ஒரு கும்பாபிஷேகத்தில் கலந்தது போலவே இருக்கிறது.
அர்ச்சக ஸ்வாமி பற்றி தாங்கள் கருத்து தெரிவித்து இருந்தீற்கள். மிக்வும் போற்றப் பட வேண்டிய கருத்து. யாம் பால்யத்தில் சிவாலய தர்சனம் செய்யுங்கால் தர்சன பத்ததி மற்றும் தேவார திருப்புகழ் மஹிமை இவை பற்றியெல்லாம் எதுத்துரைத்த சேனாபதி சிவாசார்யர் அவர்கள் அர்சக ஸ்வாமி என்றதும் நினைவுக்கு வருகிறார். ஸ்வாமி அம்பாள் இவர்களின் பெருமையும் சிவாலய தர்சன பெருமையும் வரும் பக்தர்களிடம் கூறி பக்தர்களை பகவானோடு இணைக்கும் அர்சக ஸ்வாமிகளை பார்க்கும் போதே வினயம் என்னும் ஆத்ம குணம் பக்தர்களிடம் குடி கொள்ளும். இன்று பல கோவில்களில் பல அர்சக ஸ்வாமிகள் இவ்வாறே இருக்கிறார்கள். இவர்களால் சாமான்ய பொது ஜனங்களிடம் பகவத் பக்தி வளருகிறது.
பின்னிட்டும் ஐயா, குறை கூருவதாக எண்ண வேண்டா. சிகை, நிர்மலமான கச்சம் அல்லது வேஷ்டி, பளிச் என்று துலங்கும் திருநீறு ஆலயத்தில் பகவத் விஷயம் அன்றி வேரொரு விஷயம் பற்றி பேசாது இருத்தல் போன்ற அர்ச்சக லக்ஷணங்களில் இருந்து வேறுபட்டு கிராப்புடன் உள்ள சிரம், தூயமை குறைந்த வஸ்த்ரம் மற்றும் அன்ய விஷய பாஷணம் என்று ஒரு சில அர்ச்சக ஸ்வாமிகளும் உள்ளனர். இவர்களின் போக்கு மாற வேண்டும் என்று ஆடல்வல்லானின் பாதங்களையும் அவன்பால் பக்தி உண்டாக்கும் மிகப்பல தூய்மையே உருவான அர்ச்சக ஸ்வாமிகளின் பாதங்களையும் ஒரு சேர இறைஞ்சுகிறேன். கருத்தில் பிழை இருந்தால் க்ஷமிக்க வேண்டும்.
வைஷ்ணவர்களுக்கு கோவில் என்றால் எப்படி ஸ்ரீரங்கமோ அப்படியே சைவ பக்ஷமாய் கோவில் என்றால் ஆடல்வல்லானின் தில்லையம்பதியே. அதை பற்றி வள்ளல் அருணகிரி புகழ்கையில்
வேத நூன்முறை வழுவாமே தினம்
வேள்வியால் எழில் புனை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே
என்று வேதநூற்படி மூவாயிரவர் சேவையை தெரிவு செய்கிறார். ஆகம ப்ரதிஷ்டை மற்றும் வைதிக ப்ரதிஷ்டை பற்றி தாங்கள் எழுதி உள்ளீர்கள். அருணகிரிநாதரின் வாக்கை எண்ணுகையில் சிதம்பர க்ஷேத்ரத்தில் அனுஷ்டானத்தில் உள்ளது வைதிக பத்ததியா என்று எண்ணத்தோன்றுகிறது. கேரள ஆல்யங்களில் வைதிக பத்ததி தவிர தாந்த்ரிக பத்ததியும் உள்ளதா ஐயா.
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனாரையும்
அவர் தமதிடமே வாழ் சிவகாமி நாயகி தம் திருமேனி கைங்கர்ய பாக்யம் பெற்ற சான்றோர்களுக்கு
நமஸ்காரம்.
நமஸ்காரம்,
தங்கள் பதிவு அருமை.பாராட்டுக்கள்.ஆனால் தாங்கள் குறிப்பிட்ட க்ரியைகளின் படி பல இடங்களிலும் முறை வழுவாது இந்நிகழ்வு நடைபெறுவதில்லை.காரணம் பாம்பின் கால் பாம்பறியும்.சரி,ஆகம ஆலயங்களில் யந்திர ப்ரதிஷ்டை உண்டா?கட்டுரையாளர் உரிய ஆதாரத்துடன் பதில் வழங்கவும்.நன்றி
மதிப்பிற்குரிய செந்தில், பாலச்சந்திரன், சோமசுந்தரம், ராதாகிருஷ்ணன் ஆகிய அன்புள்ளங்களுக்கு வணக்கங்களுடன் கூடிய நன்றிகள் உரியதாகுக…
நான் முக்கியமாக இக்கட்டுரையில் சொல்ல வருகிற விஷயமே கிரியைகள் நடைபெறுகிற போது அடியார்கள் அக்கிரியைகளில் பங்கேற்க வேண்டும் என்பதையே… ஆக, பக்தி மயமாக அச்சூழல் அமைய வேண்டும்.. அதில் கலந்து கொள்பவர்கள் யாவரையும் உணர்வு பூர்வமாக அச்சூழல் ஈர்த்து அவர்களுக்கு ஸாந்தியைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். தாங்கள் யாவரும் இக்கருத்தில் இணைந்த கொள்வதையிட்டு மகிழ்வுடன் நன்றி சொல்கிறேன்.
எனினும் இக்கட்டுரை கும்பாபிஷேகக் கிரியைகள் தொடர்பான அறிமுகமே… என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பின்னூட்டல்கள் வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்…
முனைவர் முத்துக்குமாரசாமி அவர்களுக்கு,
தாங்கள் சொல்வது போல ‘மண்ணினால் வலம் செய் மறைக்காடரோ’ என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். தவறிற்கு பொறுத்தருள வேண்டுகிறேன். இப்பதிகமே மிகச்சிறப்பானது. ஒவ்வோருவரும் அறிந்திருக்க வேண்டியது. மாயாமலம் என்ற கதவை நீக்கி அருள் உருவமான இறைவனைக் காட்ட வல்ல அற்புதமான பதிகம் இது.
இப்பதிகத்தின் சில பாடல்களையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
‘சுண்ண வெண்பொடி சூடும் சுவண்டரோ
பண்ணி ஏறு உகந்தேறும் பரமரோ
அண்ணலாதி அணிமறைக்காடரோ
திண்ணமாக் கதவந் திறப்பிம்மினே’
…… இப்படியே தொடரும் இப்பதிகத்தின் நிறைவுப்பாடல்
‘அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கமொன்றில்லீர் எம்பெருமானீரே
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ
சரக்க இக்கதவம் திறப்பிம்மினே’
என்று அழகாக உள்ளது. இந்தப் பதிகம் பாடி வேதாரண்யத்துத் திருக்கதவத்தை ஞானசம்பந்தப்பெருமானும் நாவரசர் பெருமானும் திறந்ததாக வரலாறு பேசுகிறது. இதனை விட தாங்கள் சொல்வது போல பக்தியே முக்கியம்… வெற்றுக் கோஷங்கள் மட்டும் பலன் தரா…
கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
அர்ச்சகர்கள் பற்றிய அக்கறையை உங்கள் பதிவு வெளிக்காட்டுகிறது. பிற சமயிகள் போல அர்ச்சகர்களுக்கு உரிய பயிற்சியும் அவர்களின் சிறப்பான ஒழுக்க வாழ்விற்கு வழி செய்து தர முயல்வதும் கூட வேண்டற்பாலது. நாங்கள் எங்கள் கோயில்களில் ஸ்வாமியிடம் ‘எமக்கு நல்ல வழிகாட்டிகளான குருமார்களைத் தரவேண்டும்’ என்றும் பிரார்த்தனை செய்வோம்.
சிதம்பரத்தில் வைதீகமரபில் தான் தற்சமயம் பூஜைகள் செய்யப்பெற்று வருவதாக அறிகிறேன். ஆனால் அருணகிரிநாதர் சொன்னதை அப்படியே பொருள் கொள்ளலாமோ தெரியவில்லை. ஆகம பிரதிஷ்டை என்றால் அது வேதத்திற்கு மாறானதல்ல. இக்கரியைகள் யாவற்றிலும் வேதம் ஓதுல் முக்கிய இடம்பெறுகிறது. உரிய உரிய இடங்களில் உரிய உரிய வேதங்கள் சொல்லுமாறு ஆகமங்களே கட்டளையிடுகின்றன.
//பாஞ்சராத்ரம் மற்றும் வைகாசன ஆகமம் பற்றி வைஷ்ணவ சான்றோர்கள் காலக்ஷேபம் கேட்டு உள்ளேன//
தாங்கள் அறிந்திருந்தால் இயலுமாகில் இவற்றிலிருந்து அங்கே மாற்றமாக செய்யப்பெறும் கிரியைகள் பற்றி சிறிது விளக்கமாகச் சொல்லுமாறு மிகப்பணிவுடன் வேண்டுகிறேன்.
அன்பர் ஆகமக்கடலுக்கு,
ஆகமக்கடலுக்கு ஏற்பட்ட ஆகம சந்தேகத்தை நிவாத்தி செய்யும் அறிவு அடியேனுக்கு இல்லை. என்றாலும் நான் அறிந்ததைச் சொல்கிறேன். சிவாகமங்கள் சிவாலயங்களில் இரத்னப் பிரதிஷ்டையையே விதிக்கின்றன. (முக்கியமாக சிவலிங்க ஸ்தாபனத்திற்கு) என்றாலும் தற்போது யந்திரப்பிரதிஷ்டை செய்யும் வழக்கம் உண்டாகி பரவியுள்ளது.
ஆனால் சிவாகமங்கள் யந்திரப்பிரதிஷ்டை செய்வதை எதிர்க்கவில்லை என்றும் தெரிகிறது. பொதுவாக யந்திரப்பிரதிஷ்டையுடன் இரத்னப்பிரதிஷ்டையும் செய்யும் வழக்கம் உண்டு. சுயம்பு மூர்த்திகளுக்கு இது பொருந்தா..
எனக்குத் தெரிந்த வகையில் சைவாலயப் பிரதிஷ்டையில் காமிகம் முதலிய ஆகமங்களில் கர்ப்பக்கிரஹபதவிந்நியாசனம் நடைபெற்ற பின் ஆதாரசிலாஸ்தாபனம், சொல்லப்பெறுகின்றது. பின்னர் ரத்னதான்யஒளஷதாதி ஸ்தாபனம் சொல்லப்பெற்றுள்ளதைக் காண்கிறேன். பின்னர் ரத்னநியாசம், பஞ்சாசனார்ச்சனா செய்து லிங்கப்பிரதிஷ்டை செய்யவே விதிக்கிறது. ஆக, அங்கில்லை எனினும் யந்திரப்பிரதிஷ்டை செய்வதைத் தவறு என்று சொல்லமுடியாதென நினைக்கிறேன். ஆகவே தற்பொது யந்திரப்பிரதிஷ்டை வழக்கில் இருப்பதால் அதனைக் குறிப்பிட்டு இக்கட்டுரையில் சொன்னேன்….
ஸ்ரீ மயூரகிரி ஷர்மா மஹாசயா அவர்களுக்கு நமஸ்காரம்.
தங்களின் மற்ற பல வ்யாசங்களை படித்த பின் இதை எழுதுகிறேன்.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது வசனம். கும்பாபிஷேகம் ஆன பின் ஆலயத்து தெய்வ சான்னித்யம் ஆங்கே நடாத்தப் பெரும் நித்யோத்சவ பக்ஷோத்சவ மாஸோத்சவ சம்வத்சரோத்சவத்தை சார்ந்து இருக்க வேண்டும். ஆலய சான்னித்யம் விசேஷமாய் இருப்பதில் அங்கே வரும் தர்சனார்த்திகளுக்கும் பெரும் பங்கு உண்டு என நினைக்கிறேன்.
இவர்களூக்கு உபயோகமாய் சிவாலய மற்றும் விண்ணகர தர்சன பத்ததி விஷயமாய் விஸ்தாரமாக தாங்கள் எழுத வேணுமாய் விக்ஞாபிக்கிறேன். தவிர ப்ரதோஷம், மாஸ சிவராத்ரி ஆருத்ரா தர்சனம் பற்றியும் எழுதவும். முக்யமாய் a list of dos and donts in the temple vicinity.
நமஸ்காரம்.
ஆலய வழிபாட்டில் கும்பாபிஷேகம் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது.
திரு மயூரகிரி சர்மா அவர்களின் கும்பாபிஷேகம் பற்றிய க்கட்டுரை அருமையானது. சிவாகமங்கள் காட்டும் கும்பாபிஷேகத்தின் பல்வேறு அங்கங்களைத்தெளிவாக புரிகின்ற வகையில் எழுதியுள்ளார் சர்மா அவர்கள்.
ஆகமப் பிரதிஷ்டை போலவே வைதீகப் பிரதிஷ்டையும் வழக்கில் உள்ளது. கேரளாவில் இவ்வகை வைதீகப் பிரதிஷ்டையே அதிகளவில் பின்பற்றப்பெறுகிறது. என்று மயூரகிரியார் எழுதியுள்ளார்.
ஆலயம் கோயில் என்றாலே ஆகம அடிப்படையில் அமைந்துள்ளன. அங்கே வழிபாடுகள் ஆகம அடிப்படையில்தானே நிகழ்கின்றன. ஆகமங்கள் வேதத்தினை வேதமந்திரங்களை கொண்டே கிரியைகளை இயற்றுகின்றன. வேதங்களில் கிரியைகள் இல்லையே. அப்படியிருக்க ஆகமமின்றி பிரதிஸ்டை கும்பாபிஷேகம் வைதீகமுறைப்படி எப்படி இருக்க இயலும். தில்லை கோயில் சிதம்பரத்தில் கூட வைதீகமுறைப்படி நித்திய வழிபாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. வேதங்களில் கோயில் வழிபாடு இல்லையே. இது எப்படி விளக்கம் தேவை.
திரு மயூரகிரியார்
கும்பாபிஷேகத்தை தமிழில் ‘பெருஞ்சாந்தி வைபவம்’ என்றும் ‘திருக்குடமுழுக்கு’ என்றும் ‘திருக்குடநன்நீராட்டு விழா’ என்றும் சிலர் எழுதுகிறார்கள். ஆயினும் சில அறிஞர்கள் இச்சொற்கள் ‘கும்பாபிஷேகம்’ என்ற சொல்லிற்கு ஈடாகா என்றும் கருதுவதாக அறிய முடிகிறது
கோயில் ஆலயம் இவையெல்லாம் தமிழ் சொற்களே. குடமுழுக்கு கூடாததா என்ன.
முத்துகுமாரசுவாமி ஐயா அவர்கள் திருமுறை ஒதி குடமுழுக்கு செய்வதைப் பற்றி
“சிவபூசகர்கள் திருமுறை ஓதி பத்தியினால் பிரதிட்டை செய்த திருக்கோவில்களிலும் சிவம் அருள்பாலிக்கும். ஐயம் வேண்டா.
என்று இதற்கு பதில் சொல்கிறார்கள்”. ஆம் அதுவே நன்று.
சிவாகமங்கள் படி வேதமந்திரங்களைக்கொண்டு ஹோமங்கள் இயற்றுவது போல் தமிழ் வேதம் ஆகிய நால்வர் ஆணை மொழிகொண்டு வேள்விகள் வழிபாடுகள் செய்தலும் சிறப்பே. வேதகால ரிஷிகள் போன்றே இறைவனைக் கண்டவர்கள் அவருள் கலந்தவர் அன்றோ நம் அருளாளர் பெருமக்கள். வேள்விகள் இதுவரை செய்யாதவரையும் சென்று உயர்த்த தமிழ் வேள்வி வேண்டும். பலரும் இணைந்து ஒதிட தமிழ் மறை எளிது.
சமீப காலமாக தமிழ்முறை என்ற பேரில் கோயில் கும்பாபிஷேகங்கள், கல்யாணங்கள் மற்றும் இன்னபிற சுப/அசுப காரியங்கள் செய்ய ஒரு குழு சுற்றி வருகிறது. இவர்கள் எல்லாம் யார்..? இவர்களின் பின்னணி என்ன? சூழ்ச்சிகள் என்னென்ன?? இவற்றால் நாம் என்னென்ன இழப்புகளைச் சந்தித்தோம், சந்திக்க இருக்கிறோம், இவர்கள் ஏன் புறக்கணிக்கப்படவேண்டியவர்கள் என்பதை துகிளுரித்துக் காட்டும் ஆதாரங்களுடன் கூடிய பதிவு. அனைவரும் அவசியம் படிக்கவும், கோயில் மற்றும் சமூக பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு அனுப்பவும்.
https://www.karikkuruvi.com/2015/02/blog-post_9.html
எங்கள் வளாகத்தில் உள்ள கோவில் வைதிக பிரதிஷ்டை முறையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் இம்முறை ஆகம முறைப்படி வருஷாபிஷேகம் செய்யப்பட்டது. ஒரு சிலர் இது தவறு என்று கூறினர். அதாவது, வைதிக பிரதிஷ்டை கோவிலில் ஆகம முறைப்படியோ அல்லது ஆகம பிரதிஷ்டை கோவிலில் வைதிக முறைப்படி வழிபடுதல் மிகத்தவறு என்றனர். மற்றவர்கள் தவறு இல்லை என்றனர். இப்படி வழிபாட்டு முறையை மாற்றலாமா ? இரு முறைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன ? விளக்கங்குளுக்கு நன்றி.
வேதங்களி்ல் உருவமற்ற அருவ இறைவழிபாடான யாக யக்ஞங்களே பிரதானம்.28 சைவாகமங்களில்,இரண்டு வைணவாகமங்கள் மற்றும் பல தந்த்ரங்களில் உருவ வழிபாடே பிரதானம்.இங்குதான் கோயில் கட்டுமானம்;அவற்றில் சிலா விக்கிரஹ ப்ரதிஷ்டைகள் வரும்.வேதம் (அருவ வழிபாடு)ஆகமம்(உருவ வழிபாடு)இவை இரண்டிற்கும் பொதுவானது (அருவமும் -உருவமும் கூடிய)சிவலிங்க வழிபாடு ஒன்று மட்டும்தான்..அதனால் சிவலிங்கப் பிரதிஷ்டை தவிர வேறு (உருவமுடடைய)தேவதா பிரதிஷ்டடைகள் வேதத்திலில்லை.அப்படி பிரதிஷ்டை என்பதே வேதத்தில் இல்லாதபோது; வைதீகப் பிரதிஷ்டை எப்படி வரும்?அப்படி யார் கூறியது?(வேதத்தில் கூறிய வரிசைப்படி )நவக்கிரஹங்களை ஸ்தாபனம் பண்ணினால் அந்த ஒரு இடத்தி்ல் மட்டும் அதை “வைதீக பிரதிஷ்டடை”என குறிப்பிடுவர்.அது கூட அறியாமைதான்.ஏன் என்றால் அங்கும் வரிசைதான் வேதப்படியே தவிர;கும்பாபிஷேகம் ஆகம முறைப்படிதான் நடக்கும்.எனவே வைதிக பிரதிஷ்டை என்று குறிப்பிடுவதே அடிப்படடையில் தவறான வாதமாகும்.
கும்பபிசேகம் எந்தந்த மாதத்தில் நடைபெரும்
மிகவும் அருமை