ஆக்கம்: A. சூர்ய பிரகாஷ்
(நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 14/12/10)
தமிழாக்கம்: எஸ். ராமன்
உலக மகா பெரும் ஊழலான 2-G அலைக்கற்று ஒதுக்கீட்டு ஊழலை விசாரிக்க பாராளுமன்றக் கூட்டுக் குழு (JPC) அமைக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், மத்தியில் முதன்மை ஆளும் கட்சியான காங்கிரசோ தனது கட்சியின் மதிப்பிற்கும், அரசியல் வாய்ப்புகளுக்கும் பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கி JPC அமைப்பதைத் தவிர்க்கிறது. கடந்த கால வரலாற்றைப் புரட்டினால், இது போன்ற பல வாரங்களாகத் தொடரும் எதிர்ப்பை அந்தக் கட்சி இதுவரை எதிலும் காட்டியதில்லை; அதுவும் தோழமைக் கட்சியில் உள்ள ஒரு மந்திரியைக் காக்கும் முகமாக இப்படி நடந்து கொண்டதே இல்லை. இப்படியான அடாவடித்தனத்தில் ஒரு அதி சூட்சுமமான செய்தி ஒன்று இருக்கிறதோ? அதைப் புரிந்து கொள்ள இதற்கு முன் அமைக்கப்பட்ட மூன்று JPC-களின் நடவடிக்கைகளை அலசினால் ஒரு வேளை லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலுக்கு விடை தேடல் எப்படி இருக்கும் என்றும் யூகிக்க முடியுமோ?
Bofors பீரங்கி ஊழலைப் பற்றி விசாரிக்க என JPC முதன் முதலாக அமைக்கப்பட்டது. அதுவும் எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள்? அப்போதும் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசுதான் மத்தியில் இருந்தது. இந்திய அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் ஸ்வீடன் நாட்டின் Bofors பீரங்கி தயாரிப்போரிடமிருந்து கையூட்டு பெற்றார்கள் என்று பகிரங்கமாக ஸ்வீடன் ரேடியோவில் அறிவிப்பு வந்த பின், அதற்கும் மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்ற சமயத்தில்தான் அந்த JPC அமைக்கப்பட்டது.
ஊழல் பிரச்சினை வெடிப்பதற்கு ஒரு வருடம் முன்பாக அந்த Bofors பீரங்கி ஒப்பந்தம் ராஜீவ் காந்தியாலேயே கையொப்பம் இடப்பட்டிருந்தது. அப்போது 410 உறுப்பினர்கள் இருந்ததால் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு ஒரு மிருக பலம் இருந்தது. ஸ்வீடன் ரேடியோச் செய்தியைக் கேட்டு நடுக்கமுற்று, நடந்த மோசடியை மறைக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தன் மிருக பலத்தை வைத்துக் கொண்டு மிகவும் போராடினர்.
முக்கியமாக, ராஜீவ் காந்திக்கோ அவரது குடும்பத்திற்கோ அவர்களது நண்பர்கள், பேரம் பேசிய கம்பெனிகள், ஏஜெண்டுகள் மூலமாகவோ, ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் மூலமாகவோ அந்த ஊழலினால் எந்தப் பலனும் வரவில்லை என்று சொல்லி அந்தக் குடும்பத்தின் பெயரைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஆனாலும் மேலும் மேலும் வந்த ஊழல் செய்திகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் வலுவாகப் போராடி அந்த முதல் JPC-யைக் கொண்டு வந்தனர்.
ஊழல் செய்திகள் வந்து சுமார் மூன்று மாத கால தாமதத்திற்குப் பின், பிரதமருக்கும் இந்த ஊழலில் பங்கு இருக்குமோ, அதை மறைக்க முயல்கிறாரோ என மக்கள் சந்தேகிக்க ஆரம்பித்ததும் காங்கிரஸ் வேறு வழியின்றி விட்டுக்கொடுக்க நேர்ந்தது. அப்போதும் அந்தக் குழு முழுதும் செயல்பட முடியாதபடி செய்யப்பட தில்லு முல்லுகள் ஏராளம். அந்தக் குழு விசாரிக்க எனக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் மிகவும் குறுகிய நோக்கம் கொண்டவையாக அமைக்கப்பட்டன. அந்தக் குழு ஊழல் நடந்த வெளிநாடுகளான ஸ்வீடனுக்கோ, ஸ்விட்சர்லாந்துக்கோ செல்லவோ, அங்குள்ள சாட்சிகளை விசாரிக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை.
இப்படி இறுக்கப்பட்ட நிலையில் உள்ள குழுவை எதிர்க்கட்சிகள் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்புதான் என்று உணர்ந்து அந்தக் குழுவுடன் ஒத்துழைக்க மறுத்தது. ஆனால் காங்கிரசோ, JPC தானே உங்களுக்கு வேண்டும் இதோ இருக்கிறது என்று இறுமாப்புடன் ஏதோ ஒன்றை உப்புக்குச் சப்பாணியாக அமைத்து, அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நேரு-காந்தி குடும்பத்திற்கு வேண்டியவர்களைச் சேர்த்து, அவர்களின் ஆமாம்-சாமியான சங்கரானந்த் என்பவரையும் குழுத் தலைவராக நியமித்தது.
மிருக பலம் கொண்ட காங்கிரசுக்கு 410 உறுப்பினர்கள் இருந்ததால், பாராளுமன்ற உறுப்பினர்கள் விகிதாச்சாரப்படி அமைய வேண்டிய அந்தக் குழுவும் கிட்டத்தட்ட ஒரு காங்கிரஸ் குழு போலவே அமைந்தது. அதுவும் தவிர ஏனோ தானோ என்று பாராளுமன்றத்தில் ஒரு சில கசப்புகளுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த சில உதிரிக் கட்சிகளின் உறுப்பினர்களையும் குழுவில் இணைத்தது. இப்படியாக அனைத்தையும் நீர்த்துப் போகும்படி காங்கிரஸ் செய்து கொண்டு இருந்தது.
அவரது தலைவர் எதிர்பார்த்தபடியே கூழைக் கும்பிடு சங்கரானந்தும் ஒரு உப்புச் சப்பில்லாத குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். 1988 ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பீரங்கி வாங்கிய இந்திய அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையில் தரகர்கள் எவரும் கிடையாது, யாருக்கும் எவருக்கும் “கமிஷன்” போன்ற எந்த விதமான பணப் பட்டுவாடா ஆனதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்றும் குழு கூறியது. அரிசிக்கும் உமிக்கும் வித்தியாசம் தெரிந்த மனிதர்கள் எல்லாம் அந்த அறிக்கையை நிராகரித்தனர்.
அரசுக்கு இடர் தரும் எந்த மனிதரையும் குழு கூப்பிட்டு விசாரிக்கவில்லை, சங்கடம் தரும் கேள்விகள் எதையும் அது கேட்கவும் இல்லை. ஆனாலும் ஒரு சில வாரங்களிலேயே சோனியா-ராஜீவ் காந்தியின் இத்தாலிய நண்பரான ஆட்டோவியோ குவத்ரோச்சிக்கும், மற்றும் சிலருக்கும் Bofors நிறுவனம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 7.3 மில்லியன் டாலர்கள் போட்டிருப்பது பற்றிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன.
ஒரு வருடம் கழிந்தபின், மத்திய அரசின் தணிக்கை அதிகாரியே இடைத் தரகர்களையும், கமிஷனையும் பற்றி JPC-யின் அறிக்கையில் சொல்லப்பட்ட முடிவுகளையும் சேர்த்து வேறு பல ஐயங்களையும் கிளப்பினார். ஸ்வீடனில் இருக்கும் இந்திய அரசு தூதரின் அறிவுரைப்படி Bofors நிறுவனத்தின் கணக்குளை இந்தியத் தணிக்கையாளர்களைக் கொண்டு ஏன் சரி பார்க்கவில்லை என்றும், அந்நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் “இடைத் தரகர்கள் கூடாது” என்ற ஒப்புதலை ஏன் சேர்க்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இப்படியெல்லாம் புதுத் தகவல்கள் வந்து சேரச் சேர, அடி வருடி சங்கரானந்த் குழுவின் அறிக்கைத் தாள்கள் பல்பொடி கட்டக்கூட லாயக்கில்லை என்று அனைவருக்கும் தெரிந்து போயிற்று.
பாராளுமன்றம் என்ற ஒரு உன்னதமான மக்கள் குரலை எதிரொலிக்கும் நமது ஜனநாயகத் தூண் ஒன்றின் மதிப்பினை மண்ணோடு மண்ணாகச் சரித்து, சந்தி சிரிக்க வைத்ததில் அந்தப் பாராளுமன்றக் குழுவைப் போல வேறு எதுவும் இதுவரை சாதித்ததில்லை. அது மட்டுமா? காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்தைக் காப்பாற்ற என்று பாராளுமன்றத்தின் கௌரவத்தையும், நம்பகத் தன்மையையும் காற்றில் பறக்க விட காங்கிரஸ் என்றுமே தயங்கியதில்லை. நீதி மன்ற ஆணையினால் தனது பதவியை இழந்த இந்திரா காந்தியை அதில் தக்க வைக்க பாராளுமன்றத்தையே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் ஆக ஆக்கிய கட்சிதானே அது?
அந்த நேரு-காந்தி குடும்பம் சம்பந்தப்படவில்லை என்றால், காங்கிரசுக்கு எங்கிருந்தோ நடுநிலைத் தன்மை வெகுவேகமாக வந்துவிடும். சமீபத்தில் மும்பை ஆதர்ஷ் ஊழலின் எதிரொலியாக எந்தக் கால தாமதமுமின்றி தனது முதலமைச்சரான அசோக் சவானை பதவியில் இருந்து எப்படி இறக்கியது என்று பாருங்களேன்.
நரசிம்ம ராவ் அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத்தில், ஆகஸ்ட் 1992 -லிருந்து டிசம்பர் 1993 வரை நடந்த வங்கிப் பண பரிமாற்ற ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட இரண்டாம் JPC-யின் பணிகள் காங்கிரசின் எந்த விதக் குறிக்கீடும் இன்றி நடந்ததே, அதுவும் இன்னுமொரு சான்றுதானே?
அதேபோல வாஜ்பாயி அவர்கள் பிரதமராக இருந்த போது நடந்த பங்குச் சந்தை ஊழலை விசாரிக்க, ஏப்ரல் 2001-ல் அமைக்கப்பட்டு டிசம்பர் 2002-ல் முடிவுற்ற மூன்றாம் JPC குழுவின் பணிகளும் எந்த வித தாக்கங்களுக்கும் உட்படாது, விசாரணை அறிக்கையின் விளைவாக நிதித் துறையில் கண்காணிப்பு மற்றும் ஒழுக்கம் கொண்டு வர அமைப்புகளை உருவாக்க முடிந்ததே.
அந்த இரண்டு குழுக்களாலும், அந்நாள் மற்றும் முன்னாள் நிதி மந்திரியாக இருந்ததால் தற்போது பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் அவர்களும் தீர விசாரிக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல. காங்கிரஸ் ஆட்சியில் சுகாதார அமைச்சராகவும், பெட்ரோலிய அமைச்சராகவும் இருந்த சங்கரானந்த் அவர்களும், ஜனதா ஆட்சியில் நிதி அமைச்சராய் இருந்த மது தண்டவதே அவர்களும் அந்த இரண்டாம் குழுவினால் விசாரிக்கப்பட்டனர். அதுபோல மூன்றாம் குழு அந்நாள் அமைச்சர்கள் இருவரையும், முன்னாள் அமைச்சர்களான மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் அவர்களையும் விசாரித்தது.
அப்படி இரண்டு JPC-களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இன்னொருமுறை ஒரு குழுவைச் சந்திக்க என்ன தயக்கம் இருக்க முடியும்? யாரைத் தான் பாதுகாக்க அவர் முயல்கிறாரோ? இன்னுமொரு JPC- யாலும் அதன் விசாரணையாலும் ஆகப்போவது ஏதுமில்லை என்று சொல்பவர்கள் கடந்த இரண்டு குழுக்களின் விசாரணை அறிக்கைகளைப் படிக்கவில்லை என்றே பொருள் ஆகிறது. காங்கிரசின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் அப்படிச் சொல்லும்போது, அவர்கள் ஒருவேளை காங்கிரஸ் அரசு அமைத்த முதல் குழுவின் Bofors ஊழல் அறிக்கையை மனதில் வைத்துக் கொண்டு சொல்கிறார்கள் போலும்!
அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியின் படி, 2G அலைக்கற்றை ஊழலினால் நாட்டிற்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் வருமானம் நஷ்டமாயிருக்கக் கூடும். ஒரு அமைச்சரின் தன்னிச்சை முடிவினால் ஒரே ஒரு கொள்கை மூலம் ஒரு ஜனநாயக நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டங்களில் அளவில் மிகப் பெரியது இது ஒன்றே. இதை விசாரிக்க மக்கள் பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு அமைக்க முடியாது என்றால் வேறு எந்த காரணத்திற்காகத் தான் அத்தகைய அமைப்பு தேவைப்படும்?
இதைச் சிறிதும் உணராத காங்கிரஸ் அரசு பாராளுமன்றத்தின் குளிர் காலத் தொடர் முழுதும் அந்தக் குழு ஒன்றை அமைக்க ஒத்துக் கொள்ளாது, மக்களின் ஐயங்களைக் களைய எண்ணாது, அவர்களின் எண்ணங்களையும் சிறிதும் மதிக்காது, வீண் பிடிவாதத்துடன் பாராளுமன்றத்தின் வழிமுறைகளையும் அலட்சியப்படுத்தும் முகமாக, பாராளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. வரலாற்றைப் புரட்டினால், எப்போதெல்லாம் ஆளும் கட்சி அப்படிப்பட்ட பிடிவாதத்துடன் செயல்பட்டிருக்கிறது என்பது நன்கு தெரியவரும்.
ஆக இந்த இமாலய ஊழல் ஏதோ ஒரு ராஜாவினாலோ அல்லது அவரது கட்சியினாலோ என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் நாம் சற்று நிதானமாக யோசிக்க வேண்டும். நாய் ஒன்று திருடன் ஒருவன் மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று காற்றில் ஆடும் கிளைகளைப் பார்த்து, தவறான மரத்தின் அடியில் நின்று குறைத்துக் கொண்டிருக்குமாம். அதுபோல நாமும் உண்மையான திருடர்களை விட்டுவிட்டு கிளைகளைப் பார்த்து இரைந்து கொண்டிருக்கக்கூடாது.
காங்கிரஸ் கட்சி ஊழல்களின் ஊற்றுக்கண். இமாலய ஊழல் செய்தாலும் கடப்பாறையை விழுங்கியவன் போல் இருப்பார்கள். இப்போது ஆண்டிமுது ராசாவின் ஊழலை மறைப்பது கூட முக்கியமல்ல, இந்த ராசாவால் பயனடைந்த காங்கிரஸ் முதலை எதையோ காப்பாற்ற இந்த ஊழல் கூட்டம் முனைப்போடு செயல்படுகிறது. பிடிபட்ட திருடன் முதலில் ஏகத்துக்கும் முரண்டு பிடிப்பான். சம்பந்தமில்லாமல் என்னைப் பிடித்துத் தொல்லை தருகிறீர்கள் என்பான். தன்னைப் பிடித்தவர்களை வாயில் வந்தபடி ஏசுவான். அதைத்தான் காங்கிரசார் இன்று செய்கிறார்கள். மடியில் கணம் இல்லையென்றால் வழியில் எது பயம். திருடன் தான் திருடியதில் போலீசுக்கும் பங்கு கொடுத்திருந்தால், எகிறாமல் என்ன செய்வான். யார் அந்த திருட்டில் பங்கு வாங்கிய போலீஸ். அதைக் கண்டுபிடிக்கத்தான் ஜே.பி.சி. சம்மதிப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள். நடப்பது என்னவோ காங்கிரசுக்கும் பி.ஜே.பிக்கும் இடையே நடக்கும் யுத்தம் போல சோனியா பி.ஜே.பி. குறித்து வாயில் வந்தபடி பேசுகிறார். தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இந்தியர்களுக்கு மானம், ரோஷம், தேச பக்தி இவை இருக்குமானால் இதுபோன்ற தீய சக்திகளை இந்த நாட்டை விட்டு ஓட்ட வேண்டும், தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்து. செய்வார்களா?
போபார்ஸ் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பி, முக்கிய குற்றவாளி குவட்டரோசியை இந்த நாட்டை விட்டுத் தப்ப வைத்த தைரியத்தில் இப்போது 2G அலைக்கற்றை ஊழலில் இருந்தும் தப்பிவிடலாம் என்று தைய்யத் தக்க என்று குதித்து ஆர்ப்பாட்டம் செய்யும் காங்கிரஸ் தலைவி ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். திருடன் என்றுமே ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. ஒரு நாள் கண்டிப்பாக அகப்படுவான். அப்படி அவன் அகப்படும்போது என்ன நடக்கும் என்பதை இந்தக் கூட்டத்தின் தலைவி புரிந்து கொள்ள வேண்டும். தன மாமியாரைப் போல நடை பயில்வதாலோ, உடை அணிவதாலோ, பேச முயற்சிப்பதாலோ, இவர் அவராக முடியாது. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். அன்று? பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. மக்கள் வயிர்றேரிச்சல் இந்த ஊழல் கூட்டத்தை சும்மா விடாது.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது பழமொழி.
பல நாள் திருடி ஒருநாள் அகப்படுவாள் என்பது புதுமொழி.
இவ்வளவு ஊழல்களை நடத்திய பின்பும் காங்கிரஸ் கட்சியினால் தனித்தோ கூட்டாகவோ ஆட்சியில் இருக்க முடிகிறதென்றால், வழக்காடு மன்றங்களை மட்டுமே நம்பியிருக்கின்ற நிலைமை ஏற்பட்டு, அவைகளும் ஊழல்களுக்கு உள்ளாவதை ஏற்படுத்த, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டுக் களவாணிகளுக்கு வெகுநாட்கள் ஆகாது. இந்நிலையே, 2 G ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் நிலவுகின்றது. எனினும், வழக்காடு மன்றத்தின் இருதலைக்கொள்ளி எறும்பு நிலையை ஏற்படுத்தி, இவ்வளவு தூரமாகவாவது பணம் தின்னிகளை வெளிக்கொணர்ந்தது, நிச்சயமாக, ஏன், காங்கிரசுக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சியானது இல்லாமல், சுப்ரமண்யம் சுவாமியும் மற்றும் ஒரு அரசு சாரா அமைப்பு மட்டுமே இருக்கவேண்டும்.
https://www.sunday-guardian.com/a/1280
ராம் ஜெதமலானி கிழித்திருக்கிறார் அரசின் சட்டத்துறையை……