மைய அரசு, கல்வித் திட்டம், தேர்ச்சி இவற்றில் பல மாறுதல்கள் கொண்டு வருவதைப் பற்றி இந்நாளில் விரிவாகப் பேசத்தொடங்கியிருக்கிறோம். மருத்துவ படிப்பிற்கான ஒரே நுழைமுகத் தேர்வு என்பது அதன் ஓர் அங்கம். சில ஆண்டுகளில் மருத்துவம், பொறியியல் இரண்டிற்கும் பொதுப் பகுதிகளைக் (இயற்பியல், வேதியியல்) கொண்ட தேர்வாக மாற்றுவதற்கான முதற்படி என்றும் கூறப்பட்டது. இது தமிழக அரசினால் (வேறு சிலராலும்) உச்சநீதி மன்றத்தில் எதிர்க்கப்பட்டது. அண்மையில் பொதுத் தேர்விற்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்துள்ளது. இதை அ.தி.மு.க-வும் எதிர்க்கிறது.
தி.மு.க ஆட்சி, தமிழகக் கல்வியின் தரத்தைக் குழிதோண்டிப் புதைப்பதைத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மாணவர்களை அதிகத் தேர்ச்சியோடு தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும், நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வலுவுள்ளவர்களாகவும் ஆக்கும் கல்வியை அளிப்பதை விடுத்து, அவர்கள்பால் கரிசனம் கொண்டவர்கள் போல் நடிப்பதே தி.மு.க-வின் வாடிக்கை. அதன் அங்கமே இத்தேர்விக்கெதிரான ஒரு கூக்குரல். தரமான கல்வியைத் தருவதில் இந்த அக்கறையைக் காட்டலாம்.
எட்டாம் வகுப்பு மாணவர்களில் மேன்மையான திறன் உடைய மாணவர்களைக் கண்டறிந்து ஊக்கத் தொகையளித்து மேம்படுத்த NCERT, தேசியத் திறனறித் தேர்வை நடத்துகிறது. ஒவ்வோராண்டும் மூன்று கட்டமாக நடைபெறும் இத்தேர்வில் முதல் கட்டத்தை அந்தந்த மாநிலப் பள்ளிக் கல்வி ஆணையங்கள் நடத்துகின்றன. இதற்கு NCERT-இன் வழிகாட்டுதலும் உண்டு. ஒவ்வொரு மாநிலமும் எவ்வாறு இதில் செயல்படுகின்றன என்பதை ஆய்வுசெய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் செவ்வனே செயல்படவில்லை என்றும் தெரிவிக்கிறது. பார்க்க சுட்டி
இத்தேர்வில் முதற்கட்டம் மனப்பாடப் படிப்பை ஊக்குவிக்கும் தமிழகம் நடத்தும் தேர்வு. நுண்ணறிவையும் படித்தவற்றைச் சரியாகப் பயன்படுத்துதலையும் அளவிட முயற்சிக்கிறது மைய அரசு நடத்தும் இரண்டாம் கட்டம். நேர்முகப் பேட்டி மூன்றாம் கட்டம். திறமையான மாணவர்களை மனப்பாட அடிப்படையிலான முதற்கட்டம் நீக்கிவிடுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான CBSE பள்ளிகள் முதற்கட்டத்தைத் தாண்ட இயலவில்லை. மனப்பாடம் செய்து தாண்டும் மாணவர்கள் இரண்டாம் கட்டத்தில் வெளியேறிவிடுகிறார்கள்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களோடு தமிழகம் பெற்ற எண்ணிக்கையின் ஒப்பீடு இதை உறுதிப்படுத்துகிறது. நாடு முழுவதும் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் ஒவ்வொரு மாநிலமும் பெற்ற தேர்ச்சி எண்ணிக்கை விழுக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
அறிவியல் ஆய்வு ஆர்வத்தைத் தூண்டி, ஆய்வறிஞர்களை உருவாக்க KVPY (இளம் அறிவியலார் ஊக்கத் திட்டம்) என்றொரு தேர்வை பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு மைய அரசு நடத்துகிறது. சீனா அறிவியல் ஆய்விலும் அதனால் உண்டாகும் காப்புரிமையிலும் கவனம் செலுத்துகிறது. இதில் தற்சமயம் பின்தங்கியுள்ள இந்தியா முன்னேறக் கொணர்ந்த இத்திட்டம் பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இது எழுத்துத் தேர்வும் பேட்டியுமாக இரண்டு கட்டமாக நடக்கிறது.
இந்த இந்திய எதிர்பார்ப்பில் தமிழகத்தின் பங்கு சிறிதே. இத்தேர்வில் தமிழக நிலை சற்று சுமாராகத் தோற்றமளிக்கக் காரணம் CBSE பள்ளியில் பயின்ற (பயிலும்) மாணவர்கள் வெற்றி அடைவதே.
இவ்வாண்டு பேட்டி முடியவில்லை. முதற்கட்ட முடிவுகளைக் கொண்டே இவ்வட்டவணை தயாரிக்கப்பட்டது. நாடு முழுவதும் 555 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் ஒவ்வொரு பெருநகரமும் பெற்ற தேர்ச்சி எண்ணிக்கை விழுக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மாணவர்களைச் சலுகைகளை எதிர்நோக்கும் சவலைக் குழந்தைகளாக்கி, ஆசிரியர்களை அரசியல்வாதிகளின் கூட்டணிக் கட்சிகளாக்கும் தி.மு.க-வின் தந்திரத்தினால் தமிழகக் கல்வித் தரமே உளுத்துப் போயிற்று. தரமான கல்வியும் சவால்களைச் சந்திக்கும் மனப்பாங்கையும் வளர்த்தாலொழிய எதிர்காலம் இல்லை.