மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்

pmontv

ஒரு நல்ல தலைவனுக்குரிய முதல் தகுதி, தன் எண்ணங்களை, தன் நோக்கங்களை, திட்டங்களை, எதிர்காலக் குறிக்கோள்களை, இலக்குகளை, தடைகளை, சாதனைகளை தன் நிர்வாகத்தின் கீழ் இருப்பவர்களுடன் வெளிப்படையாகவும், தவறாமலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் பகிர்ந்து கொள்வதே. கார்ப்போரேட் நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்குத் தெரியும் அதன் சேர்மன் வருடம் இரு முறை அதன் ஊழியர்களைச் சந்தித்து, தன் திட்டங்களையும் இலக்குகளையும் மிகத் தெளிவாக விளக்குவார். அது போலவே இறுதி நிலை திட்ட மேலாளர்கள் வரை தங்களிடம் பணிபுரிவர்களிடம் தொடர்ந்து தங்களது இலக்குகளையும் சோதனைகளையும் நன்மை தீமைகளையும் தெரிவித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆக தொடர்பு என்பது எந்தவொரு தலைமைக்கும் இன்றியமையாதது. அது நான்கு பேர்களை நிர்வாகிக்கும் ப்ராஜக்ட் மேனஜராக இருந்தாலும் சரி, இரண்டு லட்சம் பேர்களை நிர்வாகிக்கும் நிறுவன அதிபர் பதவியாக இருந்தாலும் சரி, 200 பேர்களின் நலன்களைக் கவனிக்கும் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலராக இருந்தாலும் சரி, சில கோடி பேர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் மாநில முதல்வராக இருந்தாலும் சரி, பல கோடிப் பேர்களைக் கட்டிக் காக்கும் நாட்டின் தலைவராக இருந்தாலும் சரி கம்யூனிக்கேஷன் என்பது தலைமைப் பண்பிற்கு உண்டான அத்தியாவசிய அடிப்படைத் தேவை. ஒரு நல்ல தொடர்பாளனாக இல்லாதவனால் ஒரு நல்ல தலைமையை அளிக்கவே முடியாது அது சின்ன ப்ராஜக்ட் மேனஜரில் இருந்து நாட்டின் தலைவர் வரை அனைவருக்கும் பொருந்தும். தலைமைப் பண்பின் அடிப்படை அரிச்சுவடி தொடர்பு என்பது. 
 
ஆனால் துரதிருஷ்டவசமாக, மக்கள் தொடர்பைக் கண்டு அச்சப்படும்- அதன் முக்கியத்துவம் அறியாத ஒருவரை, இந்தியா தனது பிரதமராகக் கொண்டுள்ளது. இந்தியாவை ஆளும் கட்சியின் தலைவியும் அதே போல மக்கள் தொடர்பைத் திட்டமிட்டு தவிர்பவராகவே உள்ளார். ஆக, கட்சியின் தலைமையும் அந்தக் கட்சித் தலைமை கட்டுப்படுத்தும் பிரதமரும் மக்களிடம் நேரடியாகப் பேசுவதே கிடையாது. தலைமைப் பண்பின் ஆரம்பப் பாடத்திலேயே தோல்வி அடைந்தவர்களைத்தான் இந்தியா தன் தலையெழுத்தை நிர்ணையிக்க வேண்டிய தலைவர்களாகப் பெற்றுள்ளது, இந்தியா செய்த பாவம் அன்றி வேறென்ன? ஒரு நல்ல தலைவன் குறிபிட்ட கால இடைவெளிகளிலோ அல்லது வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தன் எண்ணங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். மக்களிடம் அதன் மூலம் உற்சாகத்தையும், நேர் எண்ணங்களையும், புத்துணர்ச்சியையும், நாடு அல்லது செய்யும் பணி மேலான பற்றையும் ஏற்படுத்த வேண்டும். pmmeetstveditors1பேசாத உறவு வளராது. கெடும். குறிப்பாக இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் நாட்டின் தலைமை தொடர்ந்து உரையாட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்களிடம் நம்பிக்கை வளரும், நாட்டுப் பற்றும் ஆர்வமும் வளரும். எந்தவொரு வளர்ந்த, முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்திலும் தொடர்பு கொள்வதில் ஆர்வமில்லாத எவரும் எந்தப் பதவியையுமே அடைய முடியாது. ஆனால் அந்தோ பரிதாபமாக இந்தியாவில் மட்டுமே மக்களையும் மக்களிடம் செய்திகளைக் கொண்டு செல்லும் ஊடகத்தினரையும் சந்திக்கப் பிடிவாதமாக மறுக்கும் இரண்டு பேர்கள் இந்தியாவின் தலைவிதியையே நிர்ணயம் செய்யக் கூடியவர்களாக உள்ளார்கள். இத்தகைய பரிதாப நிலை இந்தியாவைப் பிடித்த கேடு காலம் என்றே சொல்ல வேண்டும். ஆம், மன்மோகனும் சோனியாவும் மக்களை நேராகக் கண் நோக்கி நேர்மையுடன் உரையாடியதே கிடையாது. மக்களிடம் தொடர்பு கொள்ள அவர்களது வஞ்சக நெஞ்சம் தடுக்கிறது. ஜெயமோகனின் ‘ஏழாவது உலகம்’ நாவலில் பிச்சைக்காரர்களை அடிமைப் படுத்திய வியாபாரம் செய்யும் பண்டாரம் வானத்தில் மின்னும் துருவ நட்சத்திரத்தைக் காணவே கூசுவான். அதைக் காண அச்சப்படுவான். ஏனென்றால் அவன் உள்ளத்தில் தீமையும் சூதும் கபடமும் நிறைந்திருக்கும். அந்த நட்சத்திரம் அவன் மனசாட்சியின் அறத்தின் குறியீடு. அந்த நட்சத்திரம் என்னும் அறத்தைக் காணவே கூசும் கயவன் அவன். அதே போலவே மக்களை நேரடியாகச் சந்திக்க அச்சப்படும், கூச்சப்படும், வெட்கப்படும் பண்டாரங்களாக நமக்கு சோனியாவும் மன்மோகனும் வாய்த்திருக்கிறார்கள். ஏழாம் உலகப் பண்டாரம் பிச்சைக்காரர்களை விற்றுப் பிழைப்பு நடத்துவது போலவே இந்த இருவரும் இந்தியாவின் இறையாண்மையையும் வளங்களையும் பாதுகாப்பையும் ஒட்டுமொத்தமாக விற்று, ஈனப் பிழைப்பு நடத்துகிறார்கள். அதனாலேயே மக்களைக் கண்கொண்டு பார்க்க அஞ்சுகிறார்கள். 

மன்மோகன் சிங் மக்களுக்குச் செய்தி சொல்லும்விதமாக டிவி பத்திரிகையாளர்களைச் சந்திப்பதே ஓர் அபூர்வமான, அதிசயமான தருணமாக விளம்பரப் படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவர் மக்களைத் தொடர்பு கொள்ள இது போன்ற நேர்காணல்கள் ஒரு வழி. அதைச் செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஆனால் இந்தியாவில் மன்மோகன் சிங் மக்களைத் தொடர்பு கொள்வதே ஏதோ வானத்தில் இருந்து இறங்கிய தேவகுமாரன் மக்களைச் சந்திப்பது போல அதிசய நிகழ்வாகக் கருதப்படும் அவலம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். ஒரு நாட்டின் பிரதமர், தன் மக்களுடன் தொலைக்காட்சி, பத்திரிகை வாயிலாகத் தொடர்பு கொள்வது ஒருவித அடிப்படை எதிர்பார்ப்பு, அது அவருடைய அடிப்படைக் கடமை. தன் அடிப்படைக் கடமையைக் கூட ஒரு சலுகை போல, ஒரு வரம் போலக் கருதும் கேவலமான ஒரு மனிதரையே இந்தியா தன் பிரதமராக அடைந்துள்ளது. நாட்டின் தலைவர் தன் மக்களைத் தொடர்பு கொள்வது- அதிலும் ஒரு ஜனநாயக தேசத்தில்- இந்தப் பாரதத் திருநாட்டில் ஓர் அதிசய நிகழ்ச்சியாக மாறி விட்டது. தன் ஆட்சியின், தன் கொள்கைகளை, தன் செயல்பாட்டை அடிக்கடி மக்களுடன் ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதும் டவுண் ஹால் மீட்டிங்குகள், பொதுக் கூட்டங்கள் மூலமாகத் தன் நிலைகளை விவரிப்பதுமே ஒரு ஜனநாயக நாட்டின் தலைவருக்கு அழகு; நேர்மை. தன்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லாத எந்தவொரு அரசியல்வாதியும் உலகத் தலைவரும் இந்தியப் பிரதமரைப் போல பத்திரிகையாளர்களையும் மக்களைச் சந்திப்பதையும் தவிர்ப்பது கிடையாது. வாரம் ஒரு முறை அமெரிக்க அதிபரை ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்களுடன் உரையாடுவதையோ, ஏதாவது ஒரு சானலில் பேட்டி அளிப்பதையோ பத்திரிகை, டிவி நிருபர்களுடன் உரையாடுவதையோ தொடர்ந்து காணலாம். அப்படி ஊடகங்களையும் மக்கள் சந்திப்பையும் புறக்கணிக்கும் எவரும் அடிப்படையாக அந்தப் பதவியின் ஆரம்ப நிலைக்குக் கூடப் போட்டியிட அருகதையில்லாதவர்களாக ஆகி விடுவார்கள். எத்தனை முறை மன்மோகனும் சோனியாவும் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்கள்? எத்தனை முறை மாணவர்களிடம் நேரடியாக உரையாடியிருக்கிறார்கள்? அப்படியே அவர்கள் உரையாடியிருந்தாலும் பேட்டி அளித்திருந்தாலும் அது தங்களால் தேர்வு செய்யப்பட்ட கூலிப் பத்திரிகையாளர்களாக, தேர்ந்தெடுத்துக் கட்டுப்படுத்தப் பட்ட அடிமைக் கூட்டமாகவே இருக்குமே அன்றி அது ஒரு நிஜமான பேட்டியாக இருந்ததே கிடையாது.
 
மக்கள் தொடர்பு என்பது ஓர் அரசியல்வாதிக்கு முக்கியமானது. மக்களை நேரடியாகச் சென்று சந்திக்க முடியாவிட்டாலும்கூட, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் சந்திப்பது பொதுவாழ்வில்– அதிலும் முதல்வர், பிரதமர் போன்ற பதவியில்– இருப்பவர்களின் அடிப்படைத் தகுதியும் கடமையாகும். அதைச் செய்யத் தவறினால் அவர்களிடம் கள்ளம் கபடம் சூது உள்ளது என்றே அர்த்தம் ஆகும். மன்மோகன் என்றுமே நிருபர்களிடம் பேசுவது கிடையாது. மறைப்பதற்கு தன் நெஞ்சில் வஞ்சக எண்ணம் உள்ளவர், நேர்கொண்ட பார்வையுடனும் நிமிர்ந்த நன்னடையுடனும் மக்களை எதிர் கொள்ள முடியும்? நெஞ்சை உயர்த்தி யாருக்கும் அஞ்சேன் என்று சூளுரைக்க முடியும்? குற்றமுள்ள நெஞ்சும் குழி படைத்த கண்ணும், வழிப்பறித்த கொள்ளையும், நாட்டுக்கும் மக்களுக்கும் குழிப்பறித்த ஊனம் கொண்ட மனமும் உள்ளவர் மன்மோகன் என்பது அவர் மக்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதில் இருந்தே உறுதியாகிறது.
 
மன்மோகன் சிங் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் கிடையாது. டெல்லி தொகுதியில் நின்று தோற்றுப் போனவர். தனியாக நின்றால் ஒரு கார்ப்பரேஷன் வார்டு கவுன்சிலர் பதவிக்காகப் போட்டியிடக் கூட அருகதையற்றவர். அதற்கான ஆட்சித் திறமையோ, பேச்சுத் திறனோ, நேர்மையோ அவருக்கு என்றுமே இருந்ததில்லை. அவருக்கு மக்கள் தொடர்பே கிடையாது. கொல்லைப்புறம் வழியாக, அதிலும் அவருக்குச் சம்பந்தமேயில்லாத அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்புறம் வழியாகப் பிரதமர் பதவியில் அமர்த்தப் பட்டவர். இவர் ஓர் அமர்த்தப் பட்ட பொம்மைப் பிரதமர் என்பதை அவரது பேச்சுகளும் நடவடிக்கைகளும் மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன.
 
இவர் மக்களை என்றுமே நேர்மையாகவும் துணிவுடனும் அணுகியதே கிடையாது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தகுதியான பேச்சு வன்மை இவருக்குக் கிடையாது. மியாவ் மியாவ் என்று பூனை கத்துவது போல இவர் பேசும் எதுவும் என்றைக்குமே எவரையுமே கவர்ந்ததும் கிடையாது. இவருக்கு முன்னால் இருந்த பல பிரதமர்கள் அபாரமான பேச்சு வன்மை உடையவர்கள். அவர்களில் பலரும் என்றுமே பத்திரிகையாளர்களையோ பொது மக்களையோ ஊடகங்களையோ தவிர்த்தவர்கள் கிடையாது. அவர்கள் பத்திரிகையாளர்களுடன் மனம் விட்டு வெளிப்படையாகப் பேசுபவர்கள் இருந்தார்கள். நரசிம்மராவும், வாய்பாயியும் அற்புதமான பேச்சாளர்கள், உரையாடல்களில் ஆர்வம் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு ஓடி ஒளிந்தது கிடையாது. இத்தனைக்கும் இவர் மெத்தப் படித்தவர். உலகத்திலேயே சிறந்த தகுதிகள் கொண்டவராம். ஆனால் படிக்காத ஒரு காமராஜர் பேச்சில் இருந்த தெளிவும் துணிவும் என்றுமே இவரது பேச்சில் இருந்தது கிடையாது. இவரது பேச்சுக்கள் அனைத்துமே உறக்கம் வரவழைக்கக் கூடிய, சிந்தனையைத் தூண்டாத, வெற்றுக் குப்பைகளே. அலுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும் உணர்ச்சியற்ற சவம் போன்ற பேச்சு இவருடையது.
 
மன்மோகன் மட்டும் அல்ல, அவரது தலைவியான சோனியாவும் கூட என்றுமே வெளிப்படையாக தனது முகத்தைக் காட்டியது கிடையாது; தனது எண்ணங்களை ஒளிவு மறைவின்றி சொன்னது கிடையாது. அதற்குக் காரணமாக அவர் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர், அவர் ஓர் அரசியல்வாதி கிடையாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. உண்மையான காரணம், மனதிலும் செயலிலும் உள்ள கயமை மட்டுமே. அந்தக் கள்ளத்தனமும் கபடமுமே, வெளிப்படையாகக் கண்களைப் பார்த்து பேச அச்சம் ஊட்டுகிறது. அதன் காரணமாகவே சோனியாவும் மன்மோகனும் உலகத்தை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள். கூடிக்கூடிப் பேசி எழுதிவைத்துக்கொண்ட அறிக்கைகள் மூலமாக மட்டுமே எதிர்கொள்கிறார்கள். மேலும் இருவருக்கும் சேர்ந்தாற் போல நாலு வார்த்தைகளைத் திக்காமல் திணறாமல் பேசத் தெரியாது. அது ஒரு பெரிய குறை கிடையாது என்றாலும் தங்களது பலவீனத்தை மறைக்க முயல்கிறார்கள்.
 
முதலில் மன்மோகனது மதிப்பு தினம் தினம் அதல பாதாளத்துக்குப் செல்கிறது என்பதினால் அவரது மதிப்பைத் தூக்கி நிறுத்த அவரது பி.ஆர் ஆட்கள் செய்த ஒரு ஸ்டண்ட் மட்டுமே இந்த டிவி தமாஷா. ஆம், இது ஒரு காமெடி மட்டுமே. தனக்கு அடிமைகளாக, கைக்கூலிகளாகச் செயல்படும் இருபது டி.வி ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்து ஆளுக்கு ரெண்டு கேள்வி கேட்க வைத்து பிரச்சினையைக் குழப்பி, மழுப்பி விட்டால், அரைகுறையாகப் பேசிவிட்டால், அது, ‘மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை’ என்ற குறையையும் போக்கும்; அவரது இமேஜையும் கூட்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தோ பரிதாபமாக அவரது மதிப்பு இன்னும் கீழே போய் விட்டதுதான் இதில் நடந்த ஒரே நன்மை. இதில் கலந்து கொண்ட பெரும்பான்மையான டிவி நிருபர்கள் அல்லது அனைவருமே காங்கிரசின் கைக்கூலிகள். காங்கிரசின் ஊழலில் கலந்து கொண்ட ராஜ்தீப் சர்தேசாய் போன்ற புரோக்கர்கள் என்ன விதமான கேள்விகளை உருப்படியாகக் கேட்டு விட முடியும்? ராஜ்தீப் சர்தேசாய், பர்க்கா தத் போன்ற டிவி பிரபலங்கள் கூலிக்கு விலை போனவர்கள் என்பதை நீரா ராடியாவின் டெலிஃபோன் உரையாடல்கள் சந்தேகத்துக்கிடமின்றி உறுதி செய்தன. வேறு நாடாக இருந்திருந்தால் அவர்களின் மோசடி, தரகு வேலைகளுக்காக பல பத்தாண்டுகள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவிலோ அவர்கள்தான் இன்றும் கொண்டாடப் படும் டிவி பிரபலங்கள். அதே அடிவருடிகள்தான் இந்த மன்மோகன் நேர்காணலிலும் கேள்வி கேட்கிறார்கள். இவர்களின் கேள்விகளில் என்ன விதமான நேர்மை இருக்க முடியும்? ஆகவே இது திட்டமிடப்பட்ட நாடகத்தின் ஒரு பகுதியே. சோனியாவின் கதையமைப்பில் நடத்தப்பட்ட மற்றொரு காட்சி. இதில் கலந்து கொண்ட டிவி எடிட்டர்கள் மன்மோகனிடம் நாங்களும் ஒரு கேள்வி கேட்டோம் என்று ஜம்பம் அடித்துக் கொள்வதைத் தவிர இந்த வட்ட மேஜை பேட்டியினால் ஒரு புண்ணாக்குப் பயனும் ஏற்படவில்லை. மாறாக மக்களிடம் இவர் மீது அவநம்பிக்கையும், இவரது திறமையின்மையின் மீது, ஊழலின் மீது, தகுதியின்மை மீதான வெறுப்பையுமே இந்த டிவி பேட்டி சாதித்துள்ளது. மேலும் இந்தப் பேட்டிக்கு டிவி எடிட்டர்களை மட்டும் அழைத்ததிலும் ஒரு திட்டமிடப்பட்ட சூது, சதி உள்ளது. பத்திரிகை ஆசிரியர்கள் என்றால் சேகர் குப்தா, சோ ராமசாமி, குருமூர்த்தி, அருண் ஷோரி, பயனீர் சந்தன் மித்ரா போன்ற துணிவும் நேர்மையும் கொண்ட உறுதியான தேச பக்தர்கள் வந்து மன்மோகன் பதில் சொல்ல விரும்பாத முடியாத கேள்விகளை கேட்பார்கள். ஆனால் டிவி முழுக்க காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள். அவர்கள் காங்கிரசின் எடுபிடிகள். இடைத்தரகர்கள். ஆகவே அவர்களிடம் ஏற்கனவே எழுதப்பட்டக் கேள்விகளைக் கேட்கச் சொல்லி ஒரு துல்லியமான நாடகக் காட்சியைத் திட்டமிட்டு அரங்கேற்றி மக்களை ஏமாற்றுவது மிக எளிது; அதன் காரணமாகவே இதில் டிவி எடிட்டர்களை மட்டுமே அனுமதித்திருக்கிறார்கள்.
 
பேட்டியைப் கண்டதில் உருப்படியாக எந்தக் கேள்வியும் கேட்கப் படவில்லை. ஒரு நிஜமான பேட்டியாக இருந்திருந்தால் கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? எந்தவோர் ஊழல் பற்றி கூட, ஆழமாக ஒரு கேள்வி கூடக் கேட்கப் படவில்லை. கேட்க முயன்ற கோஸ்வாமியைக்கூட, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஹரெஷ் கடிந்து நிறுத்தி விட்டார். இது காங்கிரசின் அடிமைகள் கூடி அடித்த ஒரு குத்தாட்டம் மட்டுமே.
 
முதலில் மன்மோகனின் பேச்சில் நடுக்கம் நிறைந்திருந்தது. ஒளிவு மறைவுள்ள ஒருவரின் நேர்மை இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத, கம்பீரம் இல்லாத, ஆளுமை இல்லாத பேச்சாகவே நிகழ்ச்சி முழுவதும் இருந்தது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒரு பள்ளிக்கூட மாணவனுக்கு இருக்கும் அடிப்படைப் பேச்சாற்றல், குறைந்தபட்ச மொழி ஆளுமை கூட இல்லை. வார்த்தைகளைத் தேடித் தேடி, திக்கித் திக்கி, திணறித் திணறி பேசினார். தான் செய்த நேர்மையற்ற குற்ற உணர்வுகளால் உந்தப்பட்ட ஒரு தயக்கம் நிறைந்த பேச்சாக இருந்தது. தப்பு செய்த சின்னப் பையன்கள் தட்டுத் தடுமாறி மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல நடுக்கங்களுடனும் மழுப்பல்களுடனும் திணறல்களுடனும் இருந்தது. ஒரு நாட்டின் தலைவரிடம் காணப்படக் கூடாத மிகக் கேவலமான ஆளுமை வெளிப்பாடாக அமைந்து இருந்தது. மனதில் உண்மையும், சத்தியமும் இருந்தால் அது வார்த்தையில் வந்திருக்கும். மனதில் கள்ளமும் கபடமும் பொய்யும் மோசடி எண்ணங்களும் நிறைந்திருந்ததினால் அவரால் தன்னம்பிக்கையுடன் இந்த கேள்விகளையும் அதன் மூலம் மக்களையும் எதிர்கொள்ள முடியவில்லை. கண்களைப் பார்த்துப் பேசாதவன் மனதில் கபடம்தான் இருக்கும். கண்களைத் தாழ்த்திய அவரது பேச்சில் குற்றத்தின் குறுகுறுப்பே வெளிப்பட்டது ஓர் ஊழல் பிரதமரின், ஒரு கொள்ளைக் கும்பலின் தலைவியின் அடிமையின், ஒரு பலவீனமான, திறமையற்ற, கேவலமான மனிதரின் மனசாட்சியில்லாத, சத்தியம் இல்லாத, மோசடியான மழுப்பல்களாகவே இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது.

 
பிரதமரிடம் என்ன கேள்விகள் கேட்கப் பட்டிருக்க வேண்டும்? நேர்மையான பத்திரிகையாளர்களாக இருந்திருந்தால் ஒரு அருண் ஷோரியாக, ஒரு சோவாக, ஒரு குருமூர்த்தியாக இருந்திருந்தால் என்ன கேள்விகள் கேட்டிருப்பார்கள்? அவை எவையுமே கேட்கப் படவில்லை.

pmmeetstveditors

 
முதலில் அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில் இருந்த குழப்பங்களையும், மழுப்பல்களையும், ஏமாற்றுக்களையும், சமாளிப்புக்களையும் அதில் இருந்த ஓட்டைகளையும் , அவரிடம் அவசியமாகக் கேட்டிருக்கப் பட வேண்டிய ஆனால் கேட்கப் படாத கேள்விகளையும் அலசலாம்
 
1. ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடந்தது என்ன ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மழுப்பலாக “ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ராஜா சரியான திசையில் செல்கிறார் என்று சொன்னது ஏன்?” என்று கேள்வியே அவருக்கு வசதியாகக் கேட்கப் பட்டது
 
இந்தக் கேள்விக்கு எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்று மழுப்புகிறார். அது தெரியவில்லை என்றால் இவருக்கு இந்தப் பதவியில் தொடர என்ன அருகதையிருக்கிறது? இந்தப் பதிலைச் சொல்ல இவருக்குக் கேவலமாக இல்லை? ராஜா மீது புகார்கள் வந்ததாம்; இருந்தாலும் கூட்டணி தர்மத்தின்படி அவர் செய்வதை இவர் ஏதும் கேள்வி கேட்கவில்லையாம். இதையும் வெட்கமின்றி சொல்லுகிறார் இந்த உத்தம புத்திரன். இவர் ராஜாவுக்குக் கடிதம் எழுதினாராம். பதிலுக்கு உடனே அவரும் எல்லாம் சரியாக நடக்கிறது என்றாராம்; இவர் நம்பினாராம். எல்லாமே சரியாகவே நடந்ததாம். டிராய் சொன்ன படிதான் நடந்ததாம். அப்புறம் ஏன் ராஜாவைக் கைது செய்தீர்கள்? ஏன் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது? கபில் சிபலை விட மிகக் கேவலமாக ராஜா செய்ததை சரியென்று சொல்லி ஊழலில் தனக்கும் பங்கு உள்ளது என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார் இந்த ஊழல் பிரதமர். சின்ன உறுத்தல் கூட இவரிடம் காணப் படவில்லை என்பதுதான் வேதனையானது. ராஜா எந்தத் தவறையும் செய்திருப்பார் என்று தான் நினைக்கவில்லை என்றும் அது தொலைத் தொடர்பு துறைக்கும் நிதித் துறைக்கும் நடுவில் ஆனது; அதில் போய் நான் ஏன் தலையிடுவானேன் என்று இருந்து விட்டேன் என்றார்.
 
உடனே எந்தவொரு உண்மையான தொழில் தர்மம் உள்ள பத்திரிகையாளரும் என்ன செய்திருக்க வேண்டும்?
 
ஐயா பிரதமரே முதல் ஆட்சியிலேயே ராஜா செய்த ஊழல்கள் வெளி வந்து விட்டன. பத்திரிகைகள் பக்கம் பக்கமாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டன. தலையங்கங்கள் எழுதப் பட்டன. டிவி யில் காட்டினார்கள். சி.ஏ.ஜி தன் ஆட்சேபத்தைத் தெரிவித்தது. சி.வி.சி தன் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். சுப்ரமணியன் சுவாமி கடிதத்திற்கு மேல் கடிதமாக அனுப்பினார். அதையெல்லாம் நீங்கள் படிக்கவில்லையா? செய்தித்தாள் படிப்பதில்லையா? டிவி பார்ப்பதில்லையா? உங்களுக்கு வரும் லெட்டர்களைக் கூடப் படித்ததில்லையா? அத்தனை தூரம் வெளியான பின்னும் கூட வெட்கம் மானம் குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் இப்படி இது நிதித் துறைக்கும் டெல்காம் துறைக்கும் நடந்த விவகாரம், நான் ஏன் தலையிட வேண்டும் என்று கேட்கிறீர்களே? இது நியாயமா? தர்மமா, நேர்மையா? இதுதான் நீங்கள் ஊழலை ஒழிக்கும் லட்சணமா? உங்களுக்குக் கீழேயுள்ள மந்திரி நாட்டையே ஏலம் போடாமல் விற்று விட்டானே அதைக் கூட காண மறுத்ததும் கேட்க மறுத்ததும் கண்டிக்க மறுத்ததும் தடை செய்ய மறுத்ததும் அமைதி காத்ததும் அல்லாமல் ராஜா செய்வது எல்லாமே முறைப்படித்தான் நடந்தது நடக்கின்றது நடக்கும் என்று சொன்னவரும் நீர்தானே? இந்த ஊழலிலும் உங்களுக்கும் பெருத்த பங்கு இல்லாமல் இவ்வளவு தூரம் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருக்க முகாந்திரமே இல்லை. ஆகவே ஐயா ஊழல் பிரதமரே நீர் ஏன் ராஜினாமா செய்யக் கூடாது உம்மை ஏன் சிபிஐ இன்னும் விசாரிக்கவில்லை? நீர் ஏன் இன்னும் திஹார் ஜெயிலுக்குப் போகவில்லை என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப் பட்ட திட்டமிடப்பட்ட கதை வசனத்திற்கு, கூலிக்கு மாரடித்த எடிட்டர்கள் எவரும் இதைக் கேட்கவிலை அதனால் நாம் கேட்கின்றோம்– ஏன் உங்களை பதவியில் இருந்து அகற்றி ஊழல் குற்றசாட்டில் உடந்தையானவர் என்ற அடிப்படையில் விசாரிக்கக் கூடாது என்று.

 
2. ஐ.எஸ்.ஆர்.ஓ ஊழல் பற்றிய கேள்வி கேட்கப்பட்ட விதமே தவறு. முதலில் இவ்வளவு பெரிய வருமானம் வரக் கூடிய ஒரு விஷயம் ஏன் ஏலமின்றி ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வழங்கப்பட்டது? அதற்குப் பொறுப்பான மந்திரி நீங்கள் அல்லவா? இது எந்த விதத்தில் சரி? இது ஊழலுக்கு வழிவகுக்காதா? அந்த முடிவுக்குப் பொறுப்பான உங்களுக்கு எந்தவித பங்கும் கிடையாதா? இப்படி ஒரு மோசடி நடந்ததற்காக நீங்கள் ஏன் பதவி விலகவில்லை என்று கேட்டிருக்க வேண்டும். மாறாக விளக்கெண்ணெயில் வேகவைத்த வெண்டைக்காயாக ஒரு கேள்வியும் அதற்கு எழுதி வைக்கப்பட்ட மழுப்பலான ஒரு பதிலும் அளிக்கப்பட்டது. பேட்டியின் பொழுது எழுதி வைத்துப் படிக்கக் கூடாது என்று ஒரு முறை ஜெயலலிதாவுடன் ஆக்ரோஷமான சண்டைக்குப் போன கரண் தப்பார் போன்றவர்கள் மன்மோகன் எழுதி வைத்துப் படித்த பொழுது அமைதியாக ஆமோதித்தார்கள்.

 
3. ஜே.பி.சி குறித்து கேட்கப்பட்ட கேள்வியே தவறு. ஜே.பி.சி குறித்து தனக்கு பயமில்லை, அதில் ஆஜர் ஆவேன் என்கிறார் இந்தச் சூரப் புலி. அப்படியானால் ஏனப்பா நீயும் உன் கட்சியும் அதைப் பிடிவாதமாக அமைக்க மறுத்து வருகிறீர்கள் என்று எந்த டிவி சூரர்களும் கேள்வி கேட்கவேயில்லை; வசதியாக மறந்து போனார்கள். உனக்கு பயமில்லை என்றால் ஏன் ஜே.பி.சி-ஐ அமைக்க மாட்டோம் என்று மொத்த குளிர்காலத் தொடரையும் வீணடித்தீர்கள் என்று எவருமே கேள்வி கேட்கவில்லை. ஆனால் கேட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் கேனையன் என்ற நினைப்பில் பாராளுமன்றம் நடக்காததற்கு பி.ஜே.பி தான் காரணம் என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் மனசாட்சி இல்லாமல் உண்மையை மறுத்துப் பொய் சொன்னார் மன்மோகன் சிங். நீ சொல்வது பச்சைப் பொய், மோசடி, ஏமாற்று வேலை, அயோக்யத்தனம் என்று எதிர் கேள்வி கேட்க அங்கு ஒரு மானஸ்தன் கூட இல்லாமல் போனது பரிதாபம்.
 
மேலும் இத்தனை மோசடிப் பதில்கள் போதாது என்று பாராளுமன்றம் நடக்க விடாமல் பி.ஜே.பி மட்டும்தான் தடுக்கிறது. அதுவும் குஜராத் மந்திரி மீது போட்டிருக்கும் வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதினால்தான் பாராளுமன்றத்தை பி.ஜே.பி நடத்த விடாமல் செய்கிறது என்று பி.ஜே.பி மீது கடும் குற்றசாட்டை வீசினார். அரசு சிபிஐ-ஐத் தவறாகப் பயன்படுத்தி மோடியின் அரசை நடக்க விடாமல் செய்கிறது; அது நிறுத்தப் பட வேண்டும் என்று பி.ஜே.பியினர் கேட்டது உண்மைதான். ஆனால் பாராளுமன்றம் நடக்காமல் போனதற்கு அது காரணம் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் விஷயத்தில் 1.76 லட்சம் கோடியை கொள்ளையடித்த குற்றத்தை விசாரிக்க பி.ஜே.பியும் பிற எதிர்க்கட்சிகளும் ஜே.பி.சி அமைக்கக் கோரினார்கள். அதை அமைக்க காங்கிரஸ் கட்சி, பிடிவாதமாக மறுத்ததினாலேயே அவர்கள் போராட நேர்ந்தது. நீ யோக்யன் என்றால் ஜே.பி.சி யிடம் பயம் இல்லை என்றால் அதை அமைக்க மறுத்ததேன்?
 
இவரும் இவர் கட்சியும் ஜே.பி.சி அமைக்க ஒத்துக் கொண்டிருந்தால் பி.ஜே.பி ஏன் தடுக்கிறார்கள்? சரி பி.ஜே.பி-தான் குஜராத் மந்திரியின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து ஆளும் கட்சியை மிரட்டினார்கள். நியாயமான நிருபர்கள், உடனே மன்மோகனிடம் என்ன கேட்டிருக்க வேண்டும்? ஐயா பிரதமரே பி.ஜே.பி தன் மந்திரியைப் பழிவாங்காமல் இருக்குமாறு கேட்டார்கள் பாராளுமன்றத்தை அதனாலேயே நடக்கவிட்டாமல் செய்தார்கள் என்கிறீர்கள். சரி உம்மை நம்புகிறோம். பி.ஜே.பி அப்படி உள்நோக்கம் கொண்டு தடை செய்தார்கள். ஆனால் கம்னியுஸ்டுகளும், அதிமுக-வினரும் எதற்காகப் பாராளுமன்றத்தை நடக்க விடாமல் ஸ்தம்பிக்க வைத்தார்கள், அதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்? என்று ஒருவராவது இந்த ஏமாற்றுப் பிரதமரிடம் கேட்டிருக்க வேண்டும் அல்லவா? ஏன் கேட்கவில்லை? யாருக்காக நடத்தப் பட்டது இந்த நாடகம்? ஆகவே நாம் கேட்கின்றோம்– ஜே.பி.சி-யை எதிர்கொள்வேன் என்று டிவி-யில் சவடால் விடும் மன்மோகன் சிங் அவர்களே நீங்கள் விடும் சவடால் உண்மையானால் ஏன் இத்தனை காலம் அதை அமைக்க மறுத்தீர்கள்? மடியில் கனமில்லா விட்டால் வழியில் பயம் ஏன்? பதில் சொல்வீரா மிஸ்டர் (அ)க்ளீன்?

 
4. கருப்புப் பண விஷயத்தில் ஏன் பிடிவாதமாக நடவடிக்கை எடுக்க மழுப்புகிறீர்கள்? குதிரை வியாபாரி அலி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? சோனியாவுக்குக் கேஜிபி-யால் கொடுக்கப்பட்ட பத்து மில்லியன் டாலர்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று எவருமே இந்த திருவாளர் தூய்மையிடம் கேள்வி கேட்க வசதியாக மறந்து போனார்கள். ஜெர்மன் அரசாங்கம் ஸ்விஸ் வங்கியில் கள்ளப் பணம் வைத்திருபவர்களின் பெயர்களைத் தரத் தயாராக இருந்த போதும் ஏன் அதைக் கேட்டு வாங்க முதலில் மறுத்தீர்கள்? அதைப் பெற்ற பின்னும் வெளியிட மறுப்பதேன்; யாரைப் பாதுகாக்கிறீர்கள்? 800 பில்லியன் டாலர் கள்ளப் பணம் வைத்திருப்பவனை ஒரு சின்ன விசாரணை கூட இது வரை ஏன் செய்யவில்லை? இந்தக் கேள்விகள் எதையுமே கேட்கவில்லை டிவி கனவான்கள். அதனால் நான் கேட்கிறேன்– எதற்காக இந்த பேட்டி என்னும் நாடகம்? யாரை ஏமாற்ற?

 
5. ஊழலில் குற்றசாட்டப்பட்ட பி.ஜே.தாமசை எப்படி, எந்த யோக்யதையில் ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்க அனைவருமே திட்டம் போட்டு மறந்து போனார்கள். அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்னீஷீயா வந்து விட்டது. அதனால் நான் கேட்கின்றேன்– ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பி.ஜே.தாமசை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமித்தது ஏன்? அதற்கு முன் நவீன் சாவ்லா என்ற மற்றொரு கிறிஸ்துவரை மற்றொரு ஊழல் குற்றம் சாட்டப்பட்டவரை தேர்தல் கமிஷனராக நியமித்தது ஏன்? அதெப்படி உமது ஆட்சியில் தொடர்ந்து ஊழல் குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே முக்கியமான பதவிகள் வழங்கப் படுகின்றன? யாருக்காக இந்தப் பதவி அமர்த்தல்கள்? எதை மறைக்க இந்த ஊழல்வாதிகளை நியமித்தீர்கள்?
 
 
6. குவட்ரோச்சியை நாம் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டோம் என்று எந்த அடிப்படையில் சொன்னீர்கள் என்று எவருக்குமே கேட்கத் தோன்றவில்லை. ட்ரிப்யூனல் கமிஷன் வழங்கப் பட்டிருக்கிறது என்று தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட சிபிஐ-ஐ விட்டு உனது அரசாங்கம் ஏன் குவட்ரோச்சியின் மீதான வழக்கை வாபஸ் செய்ய உத்தரவிட்டது என்று கேள்வி கேட்க ஒருவருக்காவது துணிவில்லை. எந்த அடிப்படையில் குவட்ரோச்சியின் கணக்கை விடுதலை செய்தீர்கள் என்றும் யாரும் கேட்க மறந்து போனார்கள். அதனால் நான் கேட்கின்றேன்– குவட்ரோச்சியின் மீதான வழக்கை வாபஸ் வாங்கியது ஏன்? அவரது வங்கிக் கணக்கை அவருக்குத் திருப்பி தந்தது ஏன்? யாருக்காக இந்தச் சலுகைகள்? எதற்காக சிபிஐ அடியாள் போல பயன் படுத்துகிறீர்கள்? மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அதைக் கேட்டுச் சொல்ல முடியுமா?

 
7. சோனியா மீதும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்படுகிறதே, அது குறித்து என்ன சொல்லுகிறீர்கள் என்று எவரும் கேட்கவில்லை. கூலி வாங்கிக் கொண்டு நடித்த அந்த டிவி எத்தர்கள் கேட்காத கேள்வியை நான் கேட்கின்றேன்– சோனியாவுக்கு இந்த ஊழலில் என்ன பங்கு? சுப்ரமணியன் சுவாமி கொடுத்த புகாருக்கு பதில் என்ன? தாவூத் இப்ராஹிமுக்கும் பால்வாவுக்கும் சோனியாவின் சகோதரிகளுக்கும் என்ன தொடர்பு? விளக்க முடியுமா மன்மோகன் அவர்களே?
 
 
8. காமன் வெல்த் விளையாட்டில் மொத்தப் பணத்தையும் விநியோகித்தது நீங்கள்தானே, ஊழலுக்கும் திருட்டுக்கும் நீங்களும்தானே பொறுப்பு என்று யாருக்கும் கேள்வி கேட்க மனதில்லை. ஆகவே நான் கேட்கின்றேன்– காமன் வெல்த் கேம்ஸ்ஸின் நிதிப் பொறுப்பு பிரதமர் அலுவலகத்தில்தானே இருந்தது. பணத்தை வெளியிட்டது நீர்தானே? ஏன் கொடுத்த பணத்திற்குக் கணக்கு கேட்கவில்லை? யாருக்குச் சென்றது அந்த ஊழல் பணம்? இதுக்கு நீர் மட்டும்தானே முழுப் பொறுப்பு? நியாயமாகப் பார்த்தால் நீர்தானே குற்றவாளி? உம்மைத்தானே கைது செய்திருக்க வேண்டும்?

 
9. ஆஸ்திரேலியாவில் ஒரு பயங்கரவாதி கைதான பொழுது, எனக்குத் தூக்கம் போயிற்று என்று துக்கம் அனுஷ்டித்த மன்மோகன் அவர்களே, அனுதினமும் குண்டு வெடிப்பிலும் நக்சல் தாக்குதலிலும் கொல்லப்படும் இந்துக்களின் சாவுக்காக என்றாவது நீங்கள் தூக்கத்தை இழந்ததுண்டா என்று எவரும் கேட்கக் கனவிலும் நினைக்கவில்லை. நான் கேட்கின்றேன்– மும்பை தாக்குதல் முதல் ஏராளமான உண்மைக் குற்றவாளிகளை, முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்தினால் கைது செய்யாமல், தண்டனை கொடுக்காமல் இருக்கும் உமது அரசு அப்பாவி இந்துக்களை மட்டும் சித்ரவதை செய்வதேன்?

 
10. 2ஜி, ஆதர்ஷ், காமன் வெல்த் கேம்ஸ், ஐ.எஸ்.ஆர்.ஓ ஆகிய அனைத்திலும் ஊழல் செய்திருப்பவர்கள் தண்டனை அடைவார்கள் என்று சொல்லும் மன்மோகன் சிங் அவர்களை அதற்கெல்லாம் பொறுப்பாக தலைமை ஏற்ற மந்திரி சபையின் தலைவரான உங்களுக்குக் கீழே இவ்வளவு ஊழல்கள் நடந்திருக்கும் பொழுது அவற்றைத் தடுக்காத உங்களுக்கு யார் தண்டனை தருவது? என்ன தண்டனை கொடுப்பது? என்ற ஒரு சிறிய கேள்வியை யாராவது ஒருவராவது கேட்டிருந்தாலாவது இந்தப் பேட்டிக்கு அதைவிடச் சிறியதோர் அர்த்தமாவது இருந்திருக்கும். தவறு நடந்திருக்கிறதாம், தண்டிக்கப் படுவார்களாம் ஆனால் அதில் இவருக்கு சின்ன பொறுப்புகூடக் கிடையாதாம். இதையும் ஒரு பிரதமர் வெட்கமில்லாமல் மனசாட்சியில்லாமல் சொல்லுகிறார் அதையும் ஒரு தேசம் வெட்கமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 
11. ராஜாவை ஏன் மீண்டும் மந்திரி சபையில் சேர்த்தீர்கள் என்ற கேள்விக்கு, எனக்கு யாரைச் சேர்க்க வேண்டும் சேர்க்கக் கூடாது என்ற அனுமதி கிடையாது; என் மந்திரி சபையில் யார் யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை என்னிடம் கிடையாது; அதற்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது; எனக்குத் தெரியாது என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், வெட்கம் இல்லாமல், மானம் இல்லாமல், மனசாட்சி இல்லாமல், பொறுப்பு இல்லாமல் ஒரு பிரதம மந்திரி பதில் சொல்லுகிறார். அப்படியானால் இந்தப் பதவியில் இருக்க ஒரு நிமிடம் கூட உங்களுக்கு அருகதை கிடையாது, ராஜாவின் உடம்பில் ஆடைகள் இல்லை என்ற உண்மையைச் சொல்லும் துணிவு அங்கு ஒரு ஜீவனுக்குக் கூட இல்லாமல் போனது மன்மோகனின் நிலையை விடக் கேவலமாக இருந்தது. இவர்கள்தான் இந்தியாவின் நான்காவது தூணாகிய பத்திரிகை/டிவி தூணைத் தாங்கிப் பிடிப்பவர்கள். வெட்கக் கேடு.

 
12. நீரா ராடியா போன்ற ஒரு புரோக்கர் எப்படி உங்கள் உரிமையில் தலையிடலாம் என்ற கேள்விக்கே இடமில்லாமல் மன்மோகன் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நான் அவனில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.

 
13. மற்றொரு காங்கிரஸ் புரோக்கரும் வோர்ல்ட் விஷன் என்ற மதமாற்ற கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகியுமான காங்கிரஸ் எடுபிடி ராஜ்தீப் சர்தேசாய் மன்மோகனுக்கு ஒரு தியாகி பிம்பத்தை அளிக்கும் விதத்தில் தந்திரமாக ஒரு கேள்வி கேட்டார். உங்களைச் சுற்றி திருடர்கள் இருந்தபடியால் நீங்கள் பதவி விலக நினைத்தீர்களா என்று. அதற்கு மன்மோகன் அப்படியெல்லாம் நினைக்கவில்லை என்று அப்பாவியாகப் பதில் சொன்னதுடன் இன்னும் பல வேலைகள் முடிக்கப் படாமல் இருப்பதாகவும் அதுவரை தான் பதவியில் தொடருவேன் என்றும் சொன்னார். அதாவது இன்னும் கோடி கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்க வேண்டியது பாக்கி இருக்கிறது; அது வரை அலிபாபா மட்டும் அல்ல நாற்பது திருடர்களும் கூட கூட்டுக் கொள்ளை அடிப்போம் என்கிறார்.
 
 
14. அப்சல் குருவை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை? இப்படி ஒரு பயங்கரவாதியைப் பாதுகாத்தாவது இஸ்லாமிய ஓட்டைப் பொறுக்க வேண்டுமா? ஏன் இந்த தேசத் துரோகம் என்று ஒரு டிவி ஆசிரியரும் கேட்க நினைக்கவில்லை. அப்சல் குருவை தூக்கில் போட்டால் இவர்கள் அல்லவா முதலில் எதிர்ப்பார்கள்.
 
 
15. குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் என்று வெட்டி வீறாப்பு பேசும் பிரதமர் அவர்களே, உங்களுக்கு உண்மையிலேயே ஊழல் ஒழிப்பில் அக்கறையிருந்திருந்தால் ஏன் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆரம்பத்தில் இருந்தே நேர்மையுடன் விசாரிக்க ஆரம்பித்த சிபிஐ அதிகாரியை நீங்களே உத்தரவிட்டு மஹராஷ்டிரத்துக்கு இடமாற்றம் செய்தீர்கள்? இது என்ன விதமான ஊழல் ஒழிப்பு என்று நாங்கள் அறிந்து கொள்ளலாமா என்று ஒருவராவது கேட்பார் என்று நானும் கடைசிவரை காத்திருந்ததுதான் மிச்சம்.
 
 
மொத்தத்தில் இந்தப் பேட்டி மூலமாக கீழ்க்கண்ட உண்மைகள் உறுதி செய்யப் பட்டுள்ளன.

 1. மன்மோகன் மிகத் தெளிவாகவே ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆதரிக்கிறார். அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்று கபில் சிபல் சொன்னதையே இவர் வேறு வார்த்தைகளில் சொல்லியுள்ளார். 
 2.  ஜே.பி.சி நடத்தும் எண்ணம் கட்சிக்குக் கிடையாது என்று மறைமுகமாகச் சொல்லியுள்ளார்.
 3. ஊழல்களை ஒழிப்பேன் என்று வெறும் வெத்து வாய் ஜாலம் மட்டுமே காட்டுகிறாரே அன்றி அதை செயல்படுத்தும் எண்ணம் துளியும் இல்லை என்பதை இவரது மழுப்பலான பதில்கள் உறுதி செய்துள்ளன.
 4. கருப்புப் பணம் குறித்தோ, சேத்தின் பாதுகாப்பு குறித்தோ ஒரு சம்பிராதயத்திற்குக் கூடப் பேச இவர் தயாராக இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது

ஆகவே இந்த மோசடி நேர்காணலை, மக்களை இளிச்சவாயர்களாக நினைத்து ஏமாற்றும் சூழ்ச்சியை இந்திய மக்கள் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும். திட்டமிட்டு ஏமாற்றும் ஓர் ஏமாற்றுக் கும்பலிடம் நாட்டை ஒப்படைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி எழ வேண்டும். இவர்களிடமிருந்து, இந்தத் தேசத் துரோகிகளிடமிருந்து, இந்தியாவைக் கூறு போட்டு விற்கும் இந்த ரத்த வியாபாரிகளிடமிருந்து நாட்டை மீட்க ஒவ்வொரு தேச பக்தியுள்ள இந்தியக் குடிமகனும் உறுதி பூண வேண்டும். ஒட்டுமொத்தமாக தேசம் முழுவதும் ஊழலுக்கும் மோசடிக்கும் பயங்கரவாத ஆதரவுக்கும் எதிரான ஒன்றுபட்ட இந்தியக் குரல் எழும்ப வேண்டும். மக்கள் விழிப்படைய வேண்டும். இந்தப் புல்லர்கள் அகற்றப் பட வேண்டும். மன்மோகனின் மோசடிகளை நிறுத்தக் கூடிய வல்லமை இந்திய மக்களிடம் மட்டுமே உள்ளது. இவை போன்ற மோசடிப் பேட்டிகளுக்கு விலைபோகாமல், உண்மையை உணர்ந்து ஒவ்வொரு இந்தியனும் செயல்பட வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது. இதை இன்னமும் கூட நாம் உணராவிட்டால் நம் சந்ததியினருக்கு ஒரு சூனியமான சூறையாடப் பட்ட பாலைவனத்தையே நாம் விட்டுச் சென்று அவர்களின் தீராத சாபத்திற்கு நாம் உள்ளாவோம். விழிந்தெழுங்கள். அயோக்கியர்களை அகற்றுங்கள். இந்தியா நமது தேசம்; அதை அந்நியருக்கும் இனிமேலும் விற்க மாட்டோம் என்று உறுதி செய்யுங்கள்.

14 Replies to “மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்”

 1. விஸ்வாமித்ரா,

  அந்த ஏழாம் உலகப் பண்டாரம் ஒப்பீடு அபாரம் ! நாட்டு மக்களின் கோபத்தை இதை விட கூர்மையான மொழியில் சொல்ல முடியாது.

  துப்பாக்கிக் குண்டுகள் போல துளைக்கும் கேள்விகள்.. புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கை இவை ஒன்றும் செய்யாது தான்.. ஆனால் இந்த குண்டுகள் ஜாக்கெட்டில் தெறித்து விழுவதைப் பார்க்கும் மக்களுக்கு உண்மை புரியும்!

 2. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்’ மௌனமோஹனும் சோனியாவும் மக்களிடமிருந்து மறைந்து உறைதலுக்கும் அதுவே காரணம். ஏழாவது ம்னிதனில் பண்டாரம் குழந்தைகளின் நல்ல உறுப்புக்களைச் சிதைத்து ஊனப்படுத்தித் தான் வளம்படுதல் போலத்தான் இந்தத் தேசியத் தலைவர்களின் செயல்பாடுகள் உள்ளன.

 3. வழக்கமான விஸ்வாமித்ராவின் சாட்டையடி. மானம், ரோஷம் எதுமிருக்கும் உயிர்களிடம் ஏற்படும் சிறு அசைவு கூட இந்த யோக்கிய சிகாமணி மண்ணு மோகனுக்கு ஏற்படாது. இத்தாலிக் கும்பலுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்திருப்பவர் இவர். இவர் எழுதிக்கொண்டு தொலையட்டும். நாட்டையும் ஏன் இப்படி அடிமையாக்கி வைக்கிறார்? அடுத்தமுறை காங்கிரஸ் வருமானால் இந்தியா கிறிஸ்தவ நாடாகி அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் ஏற்படுத்திய பேரழிவையும், சுரண்டலையும் செய்து மீண்டும் இந்தியாவை காலணியாக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள். அப்போது மன்னுமோகனின் அமைச்சரவை இந்தியா முழுக்க குறுநில மன்னர்களாய் இருப்பார்கள்.

  உண்மையில் ரத்தம் கொதிக்கிறது. இவ்வளவு சுரண்டல்களையும், அநியாயங்களையும் செய்து விட்டு தான் யோக்கியன் என நம்பவைக்க முயலும் இவர்களைப் பார்க்கும்பொழுது.

 4. இந்த பேட்டியின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகவே புரிந்தது. மன்மோகன் has clearly lost his mental balance.

 5. நாட்டில் மற்ற அரசியல் வாதிகளைப் போல அதிகாரிகளும் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர் தானோ இந்த மன்மோகன்! மக்களை மடையர்களாக வைத்திருக்க நினைக்கிறார்கள்! இனியாவது மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்!

 6. நண்பர் விஸ்வாமித்திராவுக்கு,

  அற்புதமான கட்டுரை. நன்றி.

  உங்கள் ஒவ்வொரு வரியும் சாட்டையடி. ஆனால், அடிபட்டவர்கள் அனைவரும் தோல் மரத்துப்போன எருமைத் தோலர்கள். அவர்களுக்கு உறைக்கும் என்று தோன்றவில்லை; ஆனால், தூங்கிக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு சிறிதாவது உறைக்கும். இந்தக் கட்டுரையை சிறு வெளியீடாக நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். இக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனைத்து ஊடக அறிஞர்களுக்கும் (குறிப்பாக ஆங்கில செய்தி அலைவரிசை ஆசிரியப் பெருமக்கள்) அனுப்பிவைக்க வேண்டும்.

  உங்களுக்கு ஏற்பட்ட இதே மனக் கொந்தளிப்பு, மன்மோகன் நேர்காணலைக் கண்டபோது எனக்கும் ஏற்பட்டது. நம்மை எந்த அளவுக்கு இளிச்சவாயர்களாக இந்த கேடுகெட்ட நரிகள் நினைத்திருக்கின்றன என்று எண்ணினாலே உடல் கூசுகிறது. இது குறித்த நான் எழுதிய பிரத்யேகக் கட்டுரை (அதி மேதாவிகள் சபையில் அற்புதப் புனிதர்) எனது ‘எழுதுகோல் தெய்வம்’ வலைப்பூவில் உள்ளது. அதன் பிறகே உங்கள் கட்டுரையைப் படித்தேன். இருவர் உள்ளமும் ஒன்று போல சிந்தித்திருப்பது கண்டு வியந்தேன்.

  தற்போதைய நாட்டின் இழிநிலைக்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்து வாக்குகளை மட்டுமே நம்பி சில மாநிலங்களில் மட்டும் குறுக்கப்பட்டதாக மாறிவிட்ட பா.ஜ.க.வே மன்மோகன், சோனியா, கருணாநிதி உள்ளிட்ட கொள்ளைக் கும்பல்கள் துணிவுடன் நாடகமாட காரணம்.

  மதவாதப் பூச்சாண்டி காட்டியே எத்தனை ஊழல்கள் வேண்டுமானாலும் செய்யலாம் என்று கொள்ளைக்காரர்கள் நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கைக்கும் ஆதாரம் உள்ளது. கிட்டத்தட்ட நூறு தொகுதிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் மாறியுள்ள நிலையில், அவர்களுக்கு வேப்பங்காயாக பா,ஜ,க. காட்சி தரும் வரையில், சோனியா மட்டுமல்ல, குவாத்ரோச்சியே மீண்டும் இந்தியா வந்து மற்றொரு கொள்ளை அடித்தாலும் வேடிக்கை பார்த்துத் தான் ஆக வேண்டும். இந்நிலையை மாற்ற வேண்டியது பா.ஜ.க.வின் பொறுப்பு. அதற்கு உதவ வேண்டியது, நம்மைப் போன்றோரின் கடமை.

  எனது கட்டுரையின் சுட்டி இணைப்பு:
  https://saekkizhaan.blogspot.com/2011/02/blog-post_18.html

  -சேக்கிழான்

 7. “உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்”. ‘நெஞ்சில் உறமும் நேர்மைத் திறனும்’ உள்ளவராக இருந்திருந்தால் இவர் அன்றைக்கு ஆண்டிமுத்து ராசா, நான் செய்வதெல்லாம் பிரதமருக்குத் தெரியும் என்று சொன்னாரல்லவா , அன்றே மறுத்திருக்க வேண்டாமா? அன்று எல்லாவற்றையும் மூடிக்கொண்டிருந்து விட்டு இன்று ராசா தன்னிச்சையாக செயல்பட்டார் என்று சொன்னால் யார் நம்புவார்கள்? மேலும் அந்த கலந்துரையாடலில் மனமோஹனரின் முகத்தில் காணப்பட்ட சோகம், வார்த்தைகளில் தடுமாற்றம், ஒரு விதமான பயம் இவைகளைப் பார்க்கும் பொது, அவர் மனசாட்சிக்குப் புறம்பாகப் பொய் பேசுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. நேருவும், சாஸ்த்திரியும், இந்திராவும், வாஜ்பாயும் இருந்த இடத்தில் இந்த மனிதர்! ஊம்! நம் கேட்ட காலம், வேறு என்ன சொல்ல முடியும்.

 8. பிரதமர் தொலைக்காட்சி ஆசிரியர்களைச் சந்தித்தது போல பத்திரிகை ஆசிரியர்களையும் சந்திக்க வேண்டும். பொது மக்களின் பிரதிநிதிகளாக பொது நலத்தில் அக்கறை உள்ளவர்களையும் சந்திக்க வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். அவரது உதவியாளர், டைம்ஸ் நௌ ஆசிரியர் கோச்வாமியிடம் , ‘நீங்கள் குறுக்கு விசாரணை செய்கிறீர்களா? கேள்விகளை மட்டும் கேளுங்கள்’ என்று அதிகார தோரணையில் சொல்லுகிறார். இவர் என்ன சர்வாதிகாரியா? மக்களின் பிரதிநிதிகள் பத்திரிகையாளர்கள். அவர்கள் அப்படித்தான் கேட்டு உண்மையை வரவழைப்பார்கள். கூலிக்கு மாரடிக்கும் இந்த எடுபிடி ஒரு ஆசிரியரை அதட்டும் அளவுக்கு ஆணவத்தோடு நடந்துகொண்டதைக் கண்டிக்க வேண்டும்.

 9. சிறந்த ஆராய்ச்சி. ஜனநாயகத்தின் நான்காவது தூண் சரியாக இயங்காத பொழுது, விஸ்வமிதரா போன்ற ஃப்ரீலான்ஸர்கள் இயங்குவதால் தான் முகமூடிகள் கிழிக்கப்படக்கூடிய் சாத்தியங்களாவ்து இருக்கின்றது. வாழ்த்துக்கள் விஸ்வாமித்ரா!

 10. So much of incisive, informative, intelligent postings should also appear at least in other major languages of the country so that a small fraction of the computer literate get informed,irrespective of their appreciating and/or getting involved to do their bit in setting right the rot which has deeply set in.

  Kudos to “Tamil Hindu” for the excellent efforts.

 11. As I requested earlier, English translation of this incisive article will be very useful to pass it around to as many people as possible.

 12. good analysis.
  this govt is not fit to even stay a day more.
  my analysis in a brief manner is published in my blog given below
  see my blog: arnabonomics.blogspot.com
  pls go thru and give your feedback

 13. கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா..?
  மன்மோகன், சோனியா, ராஜா மற்றும் காங்கிரஸ், திமுக கும்பலின் ஊழல் ஆட்சி உலகம் முழவதும்
  அறிந்து ஒன்று.
  இருந்ததாலும், விஸ்வமித்ரா மிகவும் விளக்கமாக வெளிச்சம் போட்டு காண்பித்தாலும் கட்டுரை அருமை என்று பாராட்டும் நாம்,
  விஸ்வமித்ராவின் உண்மையான குமறலை என்று வீதிக்கு எடுத்து செல்வோம்..?
  அன்றுதான் விமோசனம்….!

 14. Pingback: Indli.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *