அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]

கடந்த சில மாதங்களாகக் கடுமையான போட்டியுடன் நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 6ம் தேர்தல் நாளன்று இரவே முடிவு அறிவிக்கப் பட்டு ஒரு முடிவுக்கு வந்து விடும். கடந்த 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா, அமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக மக்களிடம் நிலவிய எண்ணத்தைப் போக்கி அமெரிக்கா என்பது தகுதியையும் திறமையையும் மதிக்கும் ஒரு நாடு என்பதை நீரூபித்திருந்தார். திறமையுள்ள எவருமே அவருக்குத் தகுதியான பதவியை அடைய நிறம், இனம் எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதை அவரது வெற்றி காட்டியது. அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலாக கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தல் அமைந்திருந்தது. அமெரிக்க மக்களின் இந்தத் தேர்வு உலக நாடுகளிடையிலும் அமெரிக்கா மீதான ஒரு நம்பிக்கையும், நன் மதிப்பையும் ஈட்டியிருக்கிறது. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க இயலாத ஒரு கனவு நனவாகி இருந்தது.

2008ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் பதவிக் காலத்தை முடித்து இப்பொழுது தனது அடுத்த நான்காண்டுகளுக்கான தொடர்ச்சிக்காக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தன் துணை ஜனாதிபதியான ஜோ பைடனுடன் சேர்ந்து மீண்டும் போட்டியிடுகிறார் ஒபாமா. சென்ற தேர்தலில் இவர்களை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக ஜான் மெக்கெயின் என்பவரும் அவரது துணை ஜனாதிபதி வேட்ப்பாளராக சாரா பெல்லன் என்பவரும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தனர். இந்த 2012ம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் வேட்ப்பாளராக மிட் ராம்னி என்பவரும் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளராக பால் ரயான் என்பவரும் போட்டியிட்டு ஒபாமாவுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறார்கள்.

அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. இந்தியாவில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிக இடங்கள் பெற்ற கட்சியானது தங்களுக்குள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது. அவர் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தே தனது மந்திரி சபையைத் தேர்வு செய்து அமைத்துக் கொள்கிறார். இந்தியாவின் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் ஆளுங்கட்சிக்குக் கட்டுப் பட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகவே நின்று விடுகிறது. அமெரிக்காவின் சாசனப் படி மூன்று விதமான அரசியல் நிர்ணய அமைப்புக்கள் உள்ளன. ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் நிர்வாகத் தூணாகவும், காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றொரு தூணாகவும், நீதி மன்றங்கள் மூன்றாவது தூணாகவும் இருந்து அமெரிக்காவை ஆட்சி செய்கின்றன, சட்டங்களை உருவாக்கி அமுல் படுத்துகின்றன. இதில் ஜனாதிபதியை நேரடியாக மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை உறுப்பினர்களின் ஓட்டு என்ற கணக்கில் ஒவ்வொரு மாநிலத்த்திலும் எந்த வேட்பாளர் அதிக ஓட்டுக்கள் வாங்கி ஜெயிக்கிறாரோ அவருக்கு அந்த எண்ணிக்கை வழங்கப் பட்டு இறுதியில் அதிக பிரதிநிதித்துவ எண்ணிக்கப் பெறும் வேட்பாளர் வெல்கிறார். ஒட்டு மொத்தமாக அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி அடையவும் கூடும். கலிஃபோர்னியா மாகாணத்தில் யார் ஜெய்க்கிறார்களோ அவர்களுக்கு 55 ஓட்டுக்கள், ஃப்ளோரிடா மாநிலத்தில் ஜெயிப்பவருக்கு 27 வாக்குகள் என்று மொத்தம் யார் 270 வாக்குகளை மாநிலவாரியாகப் பெற்ற வெற்றியின் அடிப்படையில் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்க்ப் படுகிறார்கள். 2000 ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனாநயக் கட்சியின் வேட்ப்பாளரான அல் கோர் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்கா முழுவதுமாக அதிக வோட்டுக்கள் பெற்றிருந்தாலும் கூட ஃப்ளோரிடா மாகாணத்தில் மட்டும் சொற்ப வோட்டுக்களில் தோற்றபடியால் அந்த மாநில பிரதிநித்துவ வோட்டுக்களின் படி அவர் தோல்வி அடைந்தார். சென்ற 2008ம் ஆண்டு அப்படி பல மாநிலங்களில் அதிக ஓட்டுக்கள் பெற்று மொத்தம் 364 எலக்டோரல் காலேஜ் எனப்படும் பிரதிநித்துவ வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார் ஒபாமா. மேலும் ஒட்டு மொத்த மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலும் 52 சதவிகிதம் பெற்று சாதனை படைத்து ஒரு மெஜாரிட்டி ஆதரவு பெற்ற ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவர் தனது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக் கொள்வார். மந்திரிகள் பாராளுமனற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தகுதியும் திறமையும், அனுபவமும் உள்ள எந்தக் குடிமகனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் மந்திரிகளை செனட் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு சோதனை செய்து ஒப்புதல் அளித்த பின் அவர்கள் மந்திரியாகச் செயல் பட அனுமதிக்கப் படுவார்கள். அப்படி அதிபரின் தேர்வு மந்திரி செனட் உறுப்பினர்களினால் ஏகோபித்து நிராகரிக்கப் பட்டால் அதிபர் வேறு நபரை மந்திரியாக மீண்டும் தேர்வு செய்து மீண்டும் பாராளுமன்றத்தின் மெஜாரிட்டி ஒப்புதலைப் பெற வேண்டும்.

காங்கிரஸ் என்பதில் செனட், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் பிரதிநிதிகள் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன. செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள். செனட் உறுப்பினரின் பதவிக் காலம் 6 வருடங்கள். ஒரு மாநிலத்திற்கு இரண்டு உறுப்பினர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இதற்கு நமது பாராளுமன்றம் போல ஒட்டு மொத்தத் தேர்தல் இருக்காது, நமது ராஜ்ய சபை போல பதவி முடிய முடிய, தேர்வுகள் இருக்கும். பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் அவர்களின் பதவிக்காலம் 2 வருடம், ஒவ்வொரு இரண்டு வருடத்திலும் 435 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும். செனட்டில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் 53, ரிபப்ளிக்கன் கட்சியினர் 47 இடங்களிலும், சுயேட்சைகள் இரு இடங்களிலும் இருக்கிறார்கள். பிரதிநிதிகள் சபையில் 241 இடங்களை ரிபப்ளிக்கன் கட்சியினரும், 191 இடங்களில் ஒபாமாவின் ஜனாநாயக் கட்சியினரும் 3 இடங்களை சுயேட்சையினரும் ஆக்ரமித்திருக்கிறார்கள். தற்பொழுதைய நிலைப் படி செனட்டில் ஆளும் கட்சியும், பிரதிநிதி சபையில் எதிர்க் கட்சியினரும் பெரும்பான்மை வகிக்கிறார்கள். அதனால் எந்தவொரு சட்டத்தையும் ஜனாதிபதியினால் எளிதில் நிறைவேற்ற முடிவதில்லை.

அமெரிக்காவில் ரிபப்ளிக்கன் கட்சி, டெமாக்ரடிக் கட்சி என்ற இரு பெரும் கட்சிகள் இருக்கின்றன. இவை போக ஒரு சில சிறு கட்சிகளும் உள்ளன. அவர்களுக்கு ஒரிரு சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தொடங்கி விடுகின்றன. இரண்டு கட்சியிலும் ஜனாதிபதிக்குப் போட்டியிட விருப்பம் உள்ள அனைவரும் அவர்களது உள்கட்சி தேர்தலில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். ஒரு சில இடங்களில் பொது மக்களும் கலந்து கொண்டு ஓட்டளிக்கலாம். ஏற்கனவே ஜனாதிபதியாக இருப்பவரை அந்தக் கட்சி அடுத்த நான்கு வருடங்களுக்கும் வேறு எதிர்ப்பு இல்லாமல் நியமித்து விடும். ஆனால் எதிர்க் கட்ச்சியின் வேட்ப்பாளர் அந்தக் கட்சியில் கடும் போட்டியிட்டு உள்கட்சித் தேர்தலைச் சந்தித்தே அங்கீகாரத்தைப் பெற்ற்று கட்சியின் அதிகாரபூர்வமான வேட்பாளராக ஆக வேண்டும். ப்ரைமரி என்ற உட்கட்சித் தேர்தலில் வேட்பாளாரக ஆவதற்குக் கடும் போட்டி நிலவும். அவர்களுக்குள் ஏராளமான பொது விவாதம் நிகழும். அதையெல்லாம் சந்தித்து ஓட்டெடுப்பிலும் யார் அதிக வாக்குகள் பெற்று ஜெயிக்கிறார்களோ அவர்கள் அந்தந்தக் கட்சியின் வேட்பாளராக அந்தக் கட்சியின் மகாநாட்டில் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப் படுகிறார்கள். ஆகவே திறமையும். தகுதியும், ஆளுமையும், பேச்சாற்றலும், ஆதரவும் செயல் திட்டங்களும், பிரச்சாரத்திற்கான பண பலமும் உடையவர்களே இறுதி வரை போட்டியிட்டு வேட்பாளருக்கான தகுதியை அடைந்து அந்தந்தக் கட்சிகளால் தங்களது அதிகார பூர்வமான வேட்பாளர்களாக நிறுத்தப் படுகிறார்கள்.

ஒரு பெரிய மாநாட்டை நடத்தி இரண்டு கட்சிகளும் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளரை அறிவிக்கின்றன. அந்த மாநாட்டின் பொழுது ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர் தனது துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிக்கிறார். அதன் பிறகு இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் மக்களிடம் சென்று, மாநிலம் மாநிலமாகச் சென்று தங்களது கொள்கைகளையும் திட்டங்களையும் அறிவித்து ஆதரவு கேட்கிறார்கள். இவை போக மூன்று முறை ஜனாதிபதி வேட்பாளர்களும், ஒரு முறை துணை ஜனாதிபதி வேட்ப்பாளர்களும் டி வி யில் அனைத்து வாக்களர்களும் காணுமாறு நடக்கும் பொது விவாதத்தில் ஈடுபட்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்து வாக்களர்களைக் கவர வேண்டும். மக்களும் அவர்களது தகுதி, திறமை, கொள்கைகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, தத்தம் சார்புள்ள கட்சி ரீதியாகவோ அல்லது யார் சிறந்த வேட்பாளர் என்பதை பகுத்தறிந்தோ தங்கள் ஓட்டுக்களை அளிக்கின்றனர்.

ஒபாமவை எதிர்த்து ரிபப்ளிக்கன் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் மிட் ராம்னி, பால் ரயான் இருவரும் வலது சாரிகள். ரிபப்ளிக்கன் கட்சி தீவிரமான கிறிஸ்துவர்களின் ஆதரவினைப் பெற்ற மத ரீதியான கொள்கைகளைக் கொண்ட கட்சி. ஒபாமா சார்ந்துள்ள டெமாக்ரடிக் கட்சி சற்று பரந்த மனமுள்ள லிபரல் கட்சி. ரிபப்ளிக்கன் கட்சியானது கருக்கலைப்புக்கு எதிரானது,. உலகத்தை ஆண்டவன் மட்டுமே படைத்தான் என்பதில் நம்பிக்கையுள்ளது. ஓரினத் திருமணத்தை எதிர்ப்பது. வெள்ளை அமெரிக்கர்களால் பெரிதும் ஆதரிக்கப் படுவது. சர்ச்சுக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி. டெமாக்ரடிக் கட்சி லேசான இடதுசாரி கட்சி எனலாம். தொழிற்சங்கத் தொழிலாளர்கள், வெள்ளையரல்லாத இனத்தவர்கள் போன்ற பரவலான ஆதரவைப் பெற்றக் கட்சி. கருக்கலைப்பு செய்வது அவரவர் தேர்வு என்பதும், ஓரினத் திருமணத்தைச் சட்டப் படி தடை செய்யத் தேவையில்லை என்றும் சற்றே லிபரலான கொள்கைகள் உடைய கட்சி. ரிபப்ளிக்கன் கட்சிக்கு பெரும்பாலான மத்திய, தெற்குப் பகுதிகளில் பலத்த ஆதரவு உள்ளது. டெமாக்ரடிக் கட்சியினருக்கு கடற்கரையோர கிழக்கு, மேற்கு மாகாணங்களில் பலத்த ஆதரவு உள்ளது. மிட் ராம்னி ஒரு மார்மோன் கிறிஸ்துவர். அவரது துணை ஜனாதிபதி வேட்ப்பாளரான பால் ரயான் ஒரு தீவிரமான கத்தோலிக்கக் கிறிஸ்துவர். ஒபாமாவும், ஜோசஃப் பைடனும் தங்களைக் கிறிஸ்துவர்களாக அறிவித்துக் கொண்டுள்ளவர்கள். இருந்தாலும் இருவரும் கத்தோலிக்க திருச்சபையின் கொள்கைகளைப் பொது மக்கள் மீது திணிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள். மாறாக பால் ரயான் மிகவும் தீவீரமான மத நிலைப்பாடு கொண்டவர். ஒரு பெண் வன்புணர்வு செய்யப் பட்டு பிரசவமானாலும் கூட அப்படி வன்முறையினால் உருவான கருவைக் கலைக்கக் கூட அனுமதி அளிக்கக் கூடாது என்ற தீவிரமான கொள்கை உடையவர். மிட் ராம்னியின் மார்மோன் பிரிவு மற்றொரு தீவிரமான கிறிஸ்துவ அமைப்பாகும். அதில் அதன் மத குருமார்கள் சொல்வதே வேதவாக்காகும். அவர்களின் காதுகளில் கடவுள் வந்து பேசிக் கட்டளைகள் பிறப்பிப்பதாக ஐதீகம். அந்தச் சபையில் ஒரு பாதிரியாராகவும் மிட்ராம்னி சில காலம் செயல் பட்டுள்ளார். அந்தப் பிரிவின் கடுமையான சட்ட திட்டங்கள் படி அதன் பாதிரிகள் ஜெபித்துக் கொடுக்கும் உள்ளாடைகளையே அதன் உறுப்பினர்கள் அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கட்டளைப் படியே அவர்கள் நிச்சயித்த நாட்களிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்விக்க வேண்டும். இவை போன்ற ஏராளமான அடிப்படைவாத சம்பிரதாயங்கள் நிறைந்த ஒரு மதத்தின் உறுப்பினராக மிட் ராம்னியும், தீவிரமான கத்தோலிக்க மத அடிப்படைவாத நிலைப்பாடு உடையவராக பால் ராயானும் போட்டியிடுகிறார்கள்.

இவை போக இரண்டு கட்சியினருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும் பலத்த வேறு பாடுகள் உள்ளன. பொருளாதாரக் கொள்கையில் ரிபப்ளிக்கன் கட்சி அரசாங்கத்தின் செலவுகளும், வரிகளும் குறைந்து இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையது. அரசாங்கம் சிறியதாக இருக்க வேண்டும் என்பதும் தனியார் நிறுவனங்களுக்கு பெரும் அளவு இடம் அளிக்க வேண்டும் என்பதும், தனியார் பெரு முதலாளிகளுக்கு அதிக சலுகைகள் அளிக்க வேண்டும் என்பதும், ராணுவச் செலவுகள் அதிகரித்து வலுவான ராணுவம் இருக்க வேண்டும் என்பதும், அமெரிக்காவின் எண்ணை வளங்கள் தோண்டப் பட்டு மாற்று எரிசக்திக்கான ஆராய்ச்சிகள் குறைக்கப் பட வேண்டும் என்பதும் ரிபப்ளிக்கன் கட்சியின் பொருளாதார நிலைப்பாடு. டெமாக்ரடிக் கட்சியோ பணக்காரர்களிடம் அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையும்,குறைந்த ராணுவச் செலவு, குறைந்த போர்கள், அதிக அளவிலான ஆராய்ச்சிச் செலவுகள், வெளிநாட்டுக்குச் செல்லும் வேலைகளைத் திரும்பக் கொணர்தல், தனியார் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகம் இருக்க வேண்டும் போன்ற பொருளாதாரக் கொள்கைகளை உடையது.

இந்த முறை வெளியுறவுக் கொள்கையிலும் இரண்டு கட்சிக்கும் வேறுபாடுகள் இருந்தன. ஈராக்கிலும், ஆப்கானிலும் இன்னும் அதிக ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இருக்க வேண்டும் என்பதும், ஈரானுடன் அடுத்துப் போருக்குப் போய் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முன்னால் அதை போர் மூலமாகத் தடுத்து விட வேண்டும் என்பதும் மிட் ராம்னியின் கொள்கையாக இருக்கிறது. அவர் மேலும் சீனாவின் மீதும் ரஷ்யாவின் மீதும் அமெரிக்கா கடும் நிலைகளை எடுத்து அவர்களை எதிரிகளாக கருத வேண்டும் என்கிறார். ஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை முற்றிலும் வெளியற்றி விட்டார். ஆப்கானிஸ்தானின் ராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு 2014 ஆண்டு வாக்கில் அங்கிருந்தும் வெளியேற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறார். ஈரானைப் பொருத்த வரை போர் மூலமாக அல்லாமல் அதன் மீதான தடைகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே ஈரானை அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் அது செல்லாத பொழுது மட்டுமே படைகளை அனுப்புவது குறித்து யோசிக்க வேண்டும் என்கிறார்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் தோண்டி எண்ணெய் எடுக்க வேண்டும் என்பது மிட் ராம்னியின் நிலைப்பாடாகவும், மரபுசாரா மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் அதிக முதலீடு செலுத்தி பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டு பிடித்து அதன் மூலம் அரேபிய நாடுகள் மீதான அமெரிக்காவின் சார்பு நிலையைப் போக்குவேன் என்பது ஒபாமாவின் நிலைப்பாடாகவும் இருந்தது.

(தொடரும்)

3 Replies to “அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]”

 1. ஒபாமா முதல்முறை முறை ஜனாதிபதி தேர்தலில் நின்ற பொது அமெரிக்காவில் இருந்த ஒரு நண்பரை அவருடைய கருத்து என்ன என்று கேட்டேன். அவர் ‘ஒபாமா அமெரிக்காவின் கருணாநிதி என்று தோன்றுகிறது’ என்று ஒரே வார்த்தையில் சொன்னார்.
  ஏன் என்று கேட்டேன். ‘அழகாக வாய்ப் பந்தல்போடுகிறார் ‘ என்றார்
  மேலும் அவர் உள்ளூர இந்தியா மீது நல்ல எண்ணம் கொண்டவராகத் தெரியவில்லை.
  இந்தியா வந்தார். தன் நாட்டுக்கு ஐம்பதாயிரம் வேலைகளை பெற்றுக் கொண்டு திரும்பினார்.
  நம் நாட்டிலிருந்து செல்பவர்களுக்கு, விசா கட்டணத்தை அதிகரித்தார்.
  ஐயோ, Buffalo க்கு போக வேண்டிய வேலைகள் எல்லாம் Bengaluru குப் போகிறதே என்று வயிறு எறிந்தார்
  இந்தத் தேர்தல் பிரசாரத்திலும் ‘அவுட் சோர்சிங்’கை ஒழிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
  பதவி ஏற்பு விழாவிற்காக பல லட்சம் டாலர்களை செலவழித்தார்
  சர்ச்சுக்கு சென்று வழிபட்டு நேரே அங்கிருந்து பின் பதவி ஏற்க சென்றார்
  அவரை முஸ்லீம் என்ற போது ‘ அய்யா, நான் முஸ்லீம் இல்லை, கிறிஸ்தவன்தான் என்று மன்றாடினார்’
  ஆனால் எகிப்திய ஜனாதிபதியுடன் பேசும்போது ‘நானும் முஸ்லீம் தான்’ என்று பேசியதை மற்றவர்கள் கேட்டு விட்டனர்!
  அசடு வழிந்தார்!

 2. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனகொரு கவலையில்லை……

 3. அமெரிக்காவின் உத்தரவுகளை இந்தியாவில் அமுல் படுத்த எப்போதும் கைகட்டி வாய்பொத்தி தயாராக இருக்கும் மன்மோகன் சிங்கும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும், அமெரிக்காவை எந்தவகைகளில் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, இந்தக் கட்டுரையில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவரும் சிரித்த முகத்தோடு அரசியலுக்கும், எதிர்ப்புக்கும் அப்பாற்பட்டு நட்புடன் கைகோர்த்து நிற்கும் நிலைமையையாவது நம் நாட்டில் உருவாக்க முயலலாமே. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் குறிப்பாக மனீஷ் திவாரி போன்றவர்கள் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு எதிர் கட்சியினரை எதிரி நாட்டவராக நினைத்துச் சாடுவதை நினைத்தால் அமெரிக்க நாகரிகம் மனதுக்கு இதமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *