கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2

தேர்தல் கருத்துக் கணிப்புகளின் பின்னணியிலுள்ள அம்சங்களில் சிலவற்றை முந்தைய பகுதியில் கண்டோம். இதர அம்சங்கள்  இப்பகுதியில்…

எதிர்பார்ப்புடன் இயங்கும் கணிப்புகள்:

எந்த ஒரு மனிதருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும். நோக்கங்கள் கணிப்பை  நூறு சதவிகிதம் பாதிக்கும் எனில், விருப்பங்கள் கணிப்பை ஐம்பது சதவிகிதம் பாதிக்கின்றன. அதேபோல, எதிர்பார்ப்புகள் கணிப்பை இருபத்தைந்து சதவிகிதம் பாதிக்கும். பெரும்பாலான தமிழக பத்திரிகையாளர்கள் தி.மு.க. தலைவரை கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை; ‘கலைஞர்’ என்றே குறிப்பிடுவர். பத்திரிகையில்  பட்டப் பெயர்களுக்கு இடமில்லை என்றபோதிலும், தமிழக பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்தத் தவறைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்களது கலைஞர் மீதான உளச்சார்பு. இத்தகைய உளச்சார்பு இருப்பவரால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான அலையை  ஆமோதிக்க முடியுமா?

இன்று நாடு முழுவதும் வெட்டவெளிச்சமாகிவிட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்தாலே பத்திரிகையாளர்களின் ஒருசார்பு தெள்ளெனப் புரியும். உயிர்மை என்ற மாதப் பத்திரிகை, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரனால் நடத்தப்படுகிறது. அதன் டிசம்பர் மாத தலையங்கம் ‘குற்றத்தின் எல்லை’ என்ற தலைப்பில், ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கண்டித்துள்ளது. ஆனால், அதில் கருணாநிதி குறித்து ஒரு வரி வருகிறது. ‘ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிந்துவிட்டது’  என்று டில்லி பத்திரிகையாளர்களிடம் (2009) கருணாநிதி கூறியது அவரது கள்ளமற்ற குழந்தை உள்ளத்தையே காட்டியது என்று குறிப்பிடுகிறார் மனுஷ்யபுத்திரன். எது கள்ளம்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் பல்லாயிரம் கோடி மோசடி செய்த ராசாவை கடைசி வரை காப்பாற்றிய கருணாநிதியின் உள்ளமா? அது தெரிந்தும் மு.க.வை  குழந்தை உள்ளமாகச் சித்தரிக்கும் மனுஷ்யபுத்திரனின் உள்ளமா?

மனுஷ்யபுத்திரனுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அவரது உயிர்மை பதிப்பகம் மு.க.வால் லாபம் பெறலாம். இதுபோன்ற அணுகுமுறை பெரும்பாலான ஊடக நண்பர்களிடம் காணப்படுகிறது. எதிர்பார்ப்புகளே, முன்கூட்டிய தீர்மானங்களுக்கு (PRE JUDJE / PRE JUDICE) அவர்களை அழைத்துச் செல்கின்றன. இத்தகையவர்கள், தங்களுக்கு சாதகமானவர்கள் வெல்ல முடியும் (CAN WIN) என்று நம்புவார்கள். தங்களுக்குப்  பிடிக்காதவர்களை  தோற்கடிக்க தங்களால்   முடியும் (CAN DEFEAT) என்பதும் இவர்களது நம்பிக்கை. இவர்களது கருத்துக் கணிப்புகளில் நடுநிலைமை தவறாதவர்கள்  போல புள்ளிவிபரங்கள் அலசி ஆராயப்படும். இறுதியில் இவர்களது இலக்கை, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நாசூக்காக அடைந்து விடுவார்கள்.

election_rajdeep1

பெரும்பாலான ஆங்கிலச் செய்தி சானல்கள் (என்.டி.டி.வி, டைம்ஸ் நியூஸ், சி.என்.என்) இவ்வாறுதான் இயங்குகின்றன. சில சமயங்களில் இவர்களது கணிப்புகள் 60  சதவிகிதம் பலிக்கின்றன. 1998 ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது அடல் பிகாரி வாஜ்பாய்க்கு ஆதரவாக கார்கில் அலை வீசியது. ஆயினும், அதை மறைக்கும்விதமாக பலவாறான தந்திரங்களை ஆங்கில செய்தி சானல்கள் கையாண்டன. சவப்பெட்டி ஊழல் குறித்து ஓயாமல் சேதி வெளியிட்டு எஜமான சேவகம் செய்த சானல் ஒன்று, காங்கிரஸ் வெல்வது உறுதி என்றே முழங்கியது. ஆனால், அந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று, வாஜ்பாய் மீண்டும் பிரதமாரானார்.

அதே ஊடகங்கள் 2004 ல் மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்டின. காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும்  என்ற உள்ளக் கிடக்கையை வெளிப்படையாகவே அறிவித்த கணிப்பாளர்களும் இருந்தனர்.  குஜராத் கலவரம் அவர்களது பாடுபொருளாயிற்று. ஆளும் கூட்டணியைச் சிதைப்பதிலும் ஊடகங்களின் பங்களிப்பு (உதாரணம்: ஒரிசா) அப்பட்டமாகத்  தெரிந்தது.  வாஜ்பாய் அரசின் ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரசாரம் குறித்து நையாண்டியும் செய்யப்பட்டது. இறுதியில் அவர்கள் எதிர்பார்த்தது போலவே தேசிய ஜனநாயகக் கூட்டணி  அரசு வீழ்ந்தது.

2009  நாடாளுமன்றத் தேர்தலில் ஆங்கில ஊடக அறிஞர்கள் எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்பதற்கு, தேர்தல் முடிவுக்குப் பிந்தைய நீரா ராடியா  பேச்சின் ஒலிப்பதிவுகளே சாட்சி. என்.டி.டி.வி. யின் பர்கா தத்தும்,  ஹிந்துஸ்தான் டைம்ஸின் வீர் சாங்க்வியும் அமைச்சரவை உருவாக்கத்தில் காட்டிய முனைப்பு அவர்களது சாயத்தை அம்பலப்படுத்தியுள்ளது.  இத்தகையவர்களின் கருத்துக் கணிப்புகள் 2009  தேர்தலில் எப்படி இருந்திருக்கும்? அவை மக்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தின? இவை எல்லாம் ஆராய வேண்டியவை. அதற்கு நமது மக்களுக்கு நேரமுமில்லை.

உண்மையில் நோக்கம், விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் கணிப்புகளை விட, உண்மைக்கு அருகில் இருப்பது போலத் தோன்றும், எதிர்பார்ப்பின் அடிப்படையில் இயங்கும் கணிப்புகள் ஆபத்தானவை. இவையே மக்களை திசை திருப்புவதில் வெற்றி காண்கின்றன.

மதிப்பீட்டுடன் இயங்கும் கணிப்புகள்:

இப்போதுதான் உண்மையான கருத்துக் கணிப்பின் அருகில் எட்டிப் பார்க்கிறோம். உண்மையில் கணிப்பு என்பதே ஒரு யூகம் (ASSUMPTION) தான். ஒரு நாணயத்தைச் சுண்டினால் தலை விழுமா, பூ விழுமா என்று கேட்டால் இரண்டும் சாத்தியமே என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். பத்து முறை சுண்டியதில் ஆறு முறை பூவும் நான்கு முறை தலையும் விழுந்ததெனில், அதன் நிகழ்தகவு 6:4. கருத்துக் கணிப்புகளும் இத்தகைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுபவையே. அதனால் தான் கணிப்புகள் பெரும்பாலும் நிச்சயமற்ற எதிர்கால வினைச் சொற்களால்  (MAY WIN  / MAY DEFEAT ) குறிப்பிடப்படுகின்றன.

சென்ற தேர்தலில் மக்களின் மனநிலை எப்படி  இருந்தது? தற்போதைய நிலையில் மக்கள் மனநிலை எப்படி இருக்கும்? என்ற ஒப்பீட்டில், கிடைத்துள்ள தரவுகளின் ஆதாரம் மீது மதிப்பீடுகளைக் கட்டியமைத்தால், இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும். இதற்கு திரட்டப்படும் புள்ளிவிபரங்களின் (DATAS)  துல்லியமும், ஆராய்ச்சி நெறியும் (RESEARCH METHODALGY)  நடுநிலையும் (IMPARTIALITY) அத்தியாவசியம். ஆனால், நமது ஊடகங்களிடம் ஒன்றிருந்தால் இன்னொன்றில்லை என்ற அளவிலேயே மேற்கூறிய அம்சங்கள் காணக் கிடைக்கின்றன.

60  கோடி வாக்காளர்களைக்  கொண்ட நமது நாட்டில், மக்களின் மனநிலையை வெறும் ஆயிரம் தரவுகளின் ஆதாரத்தில் கணிப்பது துல்லியமாக இருக்க முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையிலேயே நமது கணிப்புகள் இதுகாறும் இருந்துள்ளன. ஆனால், பிராந்திய வேறுபாடுகளும், அரசியல் வேறுபாடுகளும் வாழ்க்கைச் சூழலில் உள்ள பெரும் மாற்றங்களும் நாடு முழுவதும் ஒரே சீராக இல்லாதபோது,  இந்த அணுகுமுறை உதவாது.

உதாரணமாக,  கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான எண்ணச்சூழலை  நாடு முழுவதும் கண்டபோதும், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், டில்லி ஆகிய மாநிலங்களில் நிலவிய பிரத்யேக அரசியல் சூழல்களால் தேர்தல் முடிவுகள் மாறிவிட்டதைக் கண்டோம்.  காங்கிரசுக்கு எதிரான அலையை மக்களிடம் கொண்டுசெல்ல ஆங்கில ஊடகங்கள்  தவறியபோதிலும்,  காங்கிரஸ் வெல்வதில் அவற்றுக்கு சந்தேகங்கள் இருந்ததை கருத்துக் கணிப்புகள் பூடகமாகக் காட்டின. ஆயினும், தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறுபட்டதாக வெளிவந்து கணிப்பாளர்களின் இயலாமையை வெளிப்படுத்தின. குஜராத்தில் பா.ஜ.க. வீழ்ச்சி அடையுமென்ற கணிப்பு இம்முறையும் பொய்த்தது.

கணிப்புகள் விஞ்ஞானபூர்வமாக இருப்பினும், அடித்தளத்திருந்து பெறப்படும் தரவுகள் உண்மையானவையாக இல்லாவிட்டால், கணிப்புகள் கற்பனைக் கோட்டையாகவே மாறிவிடும். தரவுகள் சரியாக இருப்பினும், உள்நோக்கத்துடன் அமர்ந்துள்ள கணிப்பாளரிடம் நடுநிலையான ஆய்வு நெறிமுறை  இல்லாதபோது, முடிவுகளும் குழப்பத்தையே தோற்றுவிக்கும்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கணிப்பாளர்களின் முடிவுகள் சில இடங்களில் வென்றன; சில இடங்களில் தோற்றன. ஆக, தங்கள் கணிப்பின் இயல்பை ஐம்பது சதவிகித வெற்றி என்று அவர்களால் கொண்டாட முடியும். துரதிருஷ்டம் என்னவென்றால், அரைக் கிணறு தாண்டுவதால் பயனில்லாதது போலவே, ஐம்பது சதவிகித துல்லியமான (?) கணிப்புகளாலும் பயனில்லை.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு:

இதுவரையிலும், நான்கு மனநிலைகளின் அடிப்படையில் இரு சாத்தியங்களின் ஊடாக எட்டு விதமான கணிப்புகள் எவ்வாறு அமைகின்றன என்று கண்டோம். புள்ளியியல் ஆதாரத்தில் அமையும் கணிப்புகளில் மனோவியல் எவ்வாறெல்லாம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதையும் கண்டோம். இப்போது தேர்தல் கருத்துக் கணிப்புகள் தேவையா என்ற கேள்விக்கு வருவோம்.

நமது நாடு ஜனநாயக நாடு. இங்கு மக்களின் கருத்தை கட்டியமைப்பதிலும்,  ஒருங்கிணைப்பதிலும் பிரசாரம் பெரும் பங்கு வகிக்கிறது. இன்னும் நமது ஆட்சி அமைப்பின் நிலையையே அறியாத கோடிக் கணக்கான மக்கள் வாழும் நாடு நமது நாடு. நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட காந்தியின் காங்கிரசுக்கும்,  குவத்ரோசியைத்   தப்பவிட்ட சோனியா காந்தியின் காங்கிரசுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். சாயும் பக்கமே சாயும் மனநிலையும் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. அதாவது தான் அளிக்கும் வாக்கு வீணாகிவிடக் கூடாதாம்! வெற்றியாளரையே பூஜிக்கும் மரபும் இங்குண்டு. இப்படிப்பட்ட நிலையில், நமது கருத்துக் கணிப்பு அறிவுஜீவிகளும் தங்கள் பங்கிற்கு குட்டையைக் குழப்புகின்றனர். அப்படியானால், கருத்துக் கணிப்புக்கு தடை விதிப்பதுதானே நியாயம்?

இக்கேள்வி நமது கருத்து சுதந்திரத்தின் அடிப்படை அறியாதவர்கள் எழுப்புவது. கண்ணில் தூசி விழுந்துவிட்டதற்காக கண்ணைத் தோண்டி எறிய வேண்டியதில்லை; மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தக் கூடாது. இதுவே கருத்துக் கணிப்பு எதிர்ப்பாளர்களுக்கான பதிலாக இருக்க முடியும்.

நமது அதிகார வர்க்கம் என்றுமே ஆளும்கட்சிக்கு சாதகமான கருத்தையே முன்வைக்கும். உண்மையில், ஆள்பவர்களால் ரகசியமாக முன்மொழியப்பட்டு வழிமொழியப்படுபவையே அதிகாரவர்க்கத்தின் கருத்துக்கள். நமது தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று கூறி இருப்பது, அவரது கருத்து என்று யாரேனும் நினைத்தால் அவருக்கு காங்கிரஸ் கலாசாரம் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ச்சியான பல லட்சம் கோடி ஊழல்களால் முடைநாற்றமெடுக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிரான அலைகள் நாடெங்கும் நீறுபூத்த நெருப்பாக எழுந்துள்ள நிலையில், மக்களின் கருத்துகளை ஒருங்கிணைப்பதை கண்டிப்பாக காங்கிரஸ் விரும்பாது. எனவே தான், காங்கிரஸ் சார்பாக குரேஷி முழங்கி இருக்கிறார்.

இந்த ஆலோசனையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஊடகங்களின் ஒருபக்கச்சார்பு வெளிப்பட்டுள்ள நிலையில் கணிப்புகளை அவர்கள் மடை மாற்றினால் நல்லதுதான். அவர்கள் தங்களது தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை குரேஷி ஏன் தடுக்க வேண்டும்? தற்போதைய தேர்தல் ஆணையர் குரேஷி முந்தைய ஆணையர் நவீன் சாவ்லா போல நடுநிலை தவறக் கூடாது.

நமது ஜனநாயகம் பல பலவீனங்களுடன்  இயங்குவது தான். அதற்காக ஒட்டுமொத்த தேர்தல் அமைப்பே தவறு என்று மறுதலிக்க முடியாது. உலக அளவில் நாம் மட்டுமே வளர்ந்துவரும் ஒரே ஜனநாயக  நாடு. தவறு செய்வதன்மூலமாக அவற்றைத் திருத்திக் கொண்டு முன்னேறிவரும் நாடும் நமதே.

நமது மக்கள் விவரம் குறைந்தவர்கள் தான். அதற்காக அவர்களை முட்டாள்கள் என்று யாரும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. நாடு முழுவதும் எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்துவிட்டு தேர்தல் நடத்திய இந்திரா காந்தியை வீட்டுக்கு அனுப்பியவர்கள் (1977)  நமது மக்கள். அவர்களை எக்காலத்திற்கும்  ஏமாற்ற முடியாது.

நமது மக்கள் லாலு போன்ற பல தவறான நபர்களைத்  தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதே சமயம் நாணயமான  நல்லவர்களையும் அவர்களே தான் தொடர்ந்து வெற்றி பெறச் செய்கிறார்கள். குஜராத்தின் நரேந்திர மோடியும், பிகாரின் நிதிஷ் குமாரும் பெற்றுள்ள வெற்றி தான் நமது நம்பிக்கை; மக்களை கணிப்புகளால் குழப்ப முடியாது என்ற நம்பிக்கை.

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது தான் ஜனநாயகத்தின் அடித்தளம். நமது தேர்தல் கணிப்புகள் மக்களை சிலகாலம் குழப்பலாம். ஆனால், குழப்பத்திற்குப் பிறகு இறுதியில் தெளிவு கிடைத்தே தீரும். இது கணிப்பல்ல. நடைமுறை யதார்த்தம்.

11 Replies to “கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 2”

 1. நமது பத்திரிக்கை உலகத்தின் அவலம் பற்றி சேக்கிழான் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. பெரும்பாலான மக்களும் இந்த உண்மையை உணர்ந்திருக்கிறார்கள். திராவிட இயக்கம் தலை தூக்க ஆரம்பித்த பிறகுதான் இதுபோன்ற பட்டப் பெயர்களைத் தாங்களே சூட்டிக்கொள்ளும் கேவலம் தொடங்கியது. அறிஞர், கலைஞர், நாவலர், பேராசிரியர், சிந்தனைச் சிற்பி இப்படிப் பலப்பல. அப்படி ஒரு பட்டப்பெயரைத் தாங்க ஆரம்பித்தவுடன் இவர்களுடைய இயற் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிவிட்டால் போதும், “ஐயஹோ, என் பெயரைச் சொல்லி பேசும் அளவுக்குத் தமிழக அரசியல் கெட்டுவிட்டதே” என்று புலம்புவார்கள். அந்தக் காலத்தில் பெண்கள் அனைவரும் பண்பாட்டுச் சின்னங்களாக இருந்தார்கள். வேசிகள் என்போர் தனியாக சமூகத்தில் ஒதுங்கி இருந்தார்கள். இன்று யாரையும் இனம் கண்டு கொள்ள முடியாத நிலை. என்ன செய்வது. பத்திரிகைகள் இன்று செய்யும் வேசித்தனம் கேவலமானது மட்டுமல்ல, நல்லவர்கள் தலை குனிய வேண்டிய அவமானமும் ஆகும். காசுக்கும், சலுகைகளுக்கும், அச்சத்துக்கும் ஆட்பட்டிருக்கும் வரை இவைகளுக்கு விமோசனம் இல்லவே இல்லை.

 2. @author

  DATAS – correct it .. it must be DATA – Datum is Singular and Data is Plural. No need to suffix ‘S’. METHODALAGY should be METHODOLOGY.

 3. For searching a biased e or print media, no need to spend time…
  Yes, already you are on that type of place only…

 4. நன்றி! முதலில் விவரம் உள்ளவர்கள் என்று நினைப்பவர்கள் வாக்கு பதிவு செய்யச் செல்ல வேண்டும்! அதிகமான அளவில் வாக்குப் பதிவு நடந்தாலே கட்சிகள் பயப்படும் நிலை ஏற்படும்! நன்றி!

 5. தமிழகத்தின் கோணலான தலையெழுத்தின் அடையாளச் சின்னமான சன் டிவி தலைஎடுத்துக்கொண்ட நேரத்தில், “இன்று செய்தியில் அதைச் சொன்னான், இதைச்சொன்னான்” என்றும் “இன்று டிவியில் அந்தப்படம், இந்தப்படம்” என்று பலர் ஆர்ப்பரிக்கையில், DD ஒன்றையே தொலைகாட்சி அலைவரிசையாக என்னில் சிலர் நினைத்துக்கொண்டு, அப்படி செய்தியில்லையே, அந்தப்படம் காண்பிக்கப்படுவதாக இல்லையே என்று சொல்லும்போதுதான், செய்தி, திரைப்படம் என்றால், DD யில் காண்பிக்கப்படுவதுதான் என்று போய், பெரும்பாலான மக்கள் மத்தியில், சன் டிவி யில் சொல்வதுதான் செய்தி என்றும் அதில் காண்பிக்கப்படுவதுதான் திரைப்படம் என்று ஆகிவிட்டிருந்தது தெரிந்தது. அதேபோல் தான், ரஜினிகாந்த் என்கின்ற துரோகியை, அடிமையைப் பேசவைத்து, வோட்டுக் கறக்கும் பாணி கையாளப்படுகையில், கருத்துக்கணிப்பை விட, மக்கள் மயங்கும், எந்திரத்தால் மேலும் அடிமைப்பட்ட அடிமைகளின் குறவளையைத்தான் இறுகக வேண்டும்.

 6. ரஜினி காந்த்தை வீணாக தாக்கி விமரிசனம் செய்யும் வேலை வேண்டாம்.அவரை துரோகி என்று சொல்லும் நண்பர் அவ்வாறு சொல்வதற்கான காரணங்களை சொன்னால் அவற்றுக்கு ஏதாவது அடிப்படை உள்ளதா என்று ஆராயலாம். அதை விட்டு வெறுமனே ‘துரோகி ‘ என்பது தேவை இல்லாதது.ரஜினியை அடிமை என்று சொன்ன நண்பர் இது போன்ற பெட்டை புலம்பலை உடனே நிறுத்தவேண்டும். ரஜினி எவனுக்கும், அடிமை இல்லை. அவர் பல தேர்தல்களில் தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். சில தேர்தல்களில் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி பட்டும் படாமலும் இருந்திருக்கிறார்.

  1996 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ .தி .மு.க ஆட்சியை மாற்றி மஞ்சளாரின் ஆட்சியை அவர் உருவாக்கினார் என்பது உண்மை. அதே சமயம் 1998 பாராளுமன்ற தேர்தலில் மஞ்சளாருக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்ந்த திமுக அணிக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்பதும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியில் நின்ற அண்ணாதிமுக அணியே வெற்றி பெற்றது என்பதும் வரலாற்று உண்மை.

  ரஜினியே ஒரு தனிக்கட்சி ஆரம்பித்தால் தான் மக்கள் அவருக்கு முழு ஆதரவு தருவார்கள். அவர் கை காட்டும் பக்கம் எல்லாம் எப்போதும் ஒட்டு போட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர் கை காட்டுபவர்களில் சிலர் நல்லவர்களாகவும், சிலர் மோசமானவர்கலாயும் இருப்பதை எல்லோரும் அறிவார்கள். எனவே இந்த தளத்தில் தேவை இல்லாமல் ரஜினியை வம்புக்கு இழுக்க வேண்டாம்.

  நம் மக்களை கேனையர்கள் என்று நினைப்பதாலேயே இதுபோன்று எழுதுகிறார்கள். சற்று சிந்தித்துப்பாருங்கள். 1977 ஆம் ஆண்டில் எமர்ஜன்சி முடிந்து தேர்தல் நடந்தபோது இந்திரா அரசு குப்பை கூடைக்கு போனது.

  பின்னர் எம் ஜி ஆர் 1977 முதல் 1987 ல் தான் மரணம் அடையும் வரை பத்து ஆண்டுகள் மக்களின் பேராதரவுடன் ஆட்சிபுரிந்தார். தீய சக்திகளான இந்திரா கும்பலும், திமுக குடும்பமும் கூட்டணி வைத்து, எம் ஜி ஆர் அரசை கவிழ்த்து , ஆட்சியை எப்படியாவது பிடிக்கவேண்டு மென்று கலைஞரால் சதித்திட்டம் தீட்டப்பட்டபோது , அதை நம் மக்கள் முறியடித்தனர்.எம் ஜி ஆருக்கே மீண்டும் வெற்றி மாலை சூட்டினர்.

  1989 தேர்தலில் போபர்ஸ் ஊழல் காங்கிரஸ் மீண்டும் புதைகுழிக்கு மக்களால் அனுப்பப்பட்டது. 1999 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா வாஜ்பாய் அரசை கவிழ்த்ததை விரும்பாத தமிழக மக்கள் மீண்டும் வாஜ்பாயை
  ஆட்சியில் அமர்த்தும்பொருட்டு திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற செய்தனர்.

  இந்த முறை டூஜி மற்றும் இலவச டி வி கூட்டணி , பாட்டாளி மக்கள் கட்சியுடன் சேர்ந்து பரலோகம் போகப்போகிறது. அரசியலில் இருக்கும் தீய சக்திகளில் மிக குறைவான தீய சக்தியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தான் தற்போது உள்ளது. எனவே வீண் வம்பு பேசும் நண்பர்கள் ரஜினியை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

 7. Walter Lippman has pointed out long ago quoting emerson that media truths are relative and they will tend to make moles mountains and of mountains moles.Anyone who reads the memoirs of election managers in USA and the Manchester”s book on selling the President will know how the indian political class and the media have adopted the same strategies and tecniques to fool the publicThe recent scandal about bought news is only the tip of f the iceberg.By carefully selecting the area for poll findings. preparing questionares in such a way any findings could be made to suit the fortunes of an individuls and the party.Any party which has its agens inthe media by having it repeatedly broadcast can brainwash a gullible electorate and win the election without the people knowing that they have committed harakiri.

 8. இந்த செய்தி அனைத்தும் யாரை திருப்தி படுத்த எழுதப்பட்டது? எதாவது யாகம் நடத்தியாவது உமது விருப்ப அணிய்னரை வெற்றி பெறச் செயவேண்டியதுதானே ?

 9. THIS IS MEDIA TERRORISM they are always happy to insult and injure hindu sentiments and beliefs.

  Sometime back a book was released about MK STALIN and THE EDITORS OF ALL TAMIL MAGAZINES AS WELL AS ENGLISH DAILY PARTICIPATED .THEY TOOK TURNS TO FELICTATE HIM AS IF HE IS A GREAT HERO.

  THE DMK HAS ALREADY MADE VAST INROADS INTO MEDIA AND IS INFLUENCING THE NEWS OUTCOME.

  DMK HAS MASTERED THE ART OF SILENCING THE MEDIA THROUGH COLLUSION AND COHERSION .

  PLEASE SEE THE COVERAGE GIVEN BY SOUTHERN MEDIA FOR SPECTRUM….

 10. நண்பர்கள் மீடியாவை பற்றி சொல்வதெல்லாம் உண்மைதான். வடக்கில் மீடியாக்களின் செயல்பாடுகள் மிக மோசம். உண்மை எதுவாக இருந்தாலும், தங்கள் விரும்புவதை அல்லது தாங்கள் சார்ந்துள்ள அமைப்பு / கட்சியின் வளர்ச்சியை ஒட்டிய கருத்துக்களை, மீண்டும் மீண்டும் இடைவிடாது பிரசாரம் செய்வார்கள். தேவைப்பட்டால் ஒரு செய்தியை இருட்டடிப்பும் செய்வார்கள். அவர்கள் தங்களை நீதிபதியாகவே பாவித்துக்கொண்டு தங்கள் என்னத்தை மக்கள் மீது வலிந்து திணிப்பார்கள். அவர்களுக்கு நாட்டு நலன் இரண்டாம்பட்சம்தான். தங்களது சேனலின் ரேட்டிங் தான் முக்கியம். ரேட்டிங் போட்டியின் உச்சகட்டமாக மும்பை தாக்குதலின்போது லைவ் டெலிகாஸ்ட் என்ற பெயரல் அவர்கள் எதிரிகளுக்கு தேவையான தகவல்களை எல்லாம் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தார்கள் என்பதை நாடே அறியும். முழு விபரம் வேண்டினால் இணையத்தளத்தில் தேடிப்பாருங்கள். சுய கட்டுப்பாடு இல்லாத மீடியாக்களுக்கு கடிவாளம் யார் போடுவது. மக்கள் இதை சிந்திக்க வேண்டும். அத்தகைய தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளை புறக்கணிக்க வேண்டும்.

 11. Pingback: Indli.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *