கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1

தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று அண்மையில் சென்னை வந்த தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறிச் சென்றிருக்கிறார். இது குறித்து ஆணையர் ஏன் திடீரென்று முழங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், பல்லாண்டு காலமாகவே பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது அனைவரும் அறிந்ததே.

தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கருத்துத் திணிப்புகளாக இருப்பதால், உண்மையான முடிவுகளை அவை பிரதிபலிப்பதில்லை. ஆனால்,  மின்னணு ஊடகங்களுக்கு கணிப்புகள் வெளியிடுவதென்பது, ஒரு அற்புதமான வசூல் வாய்ப்பு. விளம்பரம் வாயிலாக மட்டுமின்றி,  கட்சிகளின் கவனிப்பாலும் தேர்தல் சமயங்களில் கணிப்பு ஊடகங்கள் லாபமடைகின்றன. அரசியலில் நேர்மை ,  தேர்தலில் நாணயம் பற்றிப்  பேசிக் கொண்டிருக்கும்  கட்சி  வழக்கம்போல, இந்த ஊடகங்களால் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்படும்.  இப்போதும்கூட, கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது என்று ஊடக அரங்கிலிருந்தே தீனமான  குரல்கள் கேட்டுக் கொண்டுதான் உள்ளன.

தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை அறியச் செய்யும் வழிமுறையே. உலக நாடுகள் பலவற்றில் இம்முறை வெகுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபரின் செல்வாக்கு உயர்வு- சரிவு குறித்து அவ்வப்போது கணிப்புகள் வெளியாவதுண்டு. அரசின் கொள்கைகள் – அதன் விளைவுகள் குறித்தும்கூட கருத்துக் கணிப்புகள் அங்கு வெளியிடப்படுகின்றன. ஒருவகையில் அரசினை இத்தகைய கணிப்புகள் திருத்தி, வழிநடத்துகின்றன.

ஆனால், நமது நாட்டில் ஊடகங்கள் பத்திரிகை தர்மப்படி செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. தனிப்பட்ட விருப்பு- வெறுப்பு, சுயநல நோக்கம், வர்த்தக தந்திரம், அச்சம் போன்ற காரணங்களால் தடுமாறும் இந்திய ஊடகங்களிடம் நடுநிலையான கருத்துக் கணிப்பை எதிர்பார்ப்பது, முட்டாள்தனமானது.

தேர்தல் கருத்துக் கணிப்புகளை அரசியல் கட்சிகளும், தங்களுக்கு சாதகம் என்றால் ஏற்பதும், பாதகம் என்றால் எதிர்ப்பதும் வாடிக்கை. ஆனால், சில ஊடகங்கள் வெளியிடும் கணிப்புக்கள் தேர்தல் முடிந்தபிறகு முற்றிலும் தவறாக இருக்கும். அதைப் பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. பொய்த்துப்போன கருத்துக் கணிப்பை வெளியிட்ட ஊடகங்களைக் கண்டிக்க வேண்டிய நுகர்வோரான வாசகர்கள் கண்டுகொள்ளாததால், ஒவ்வொரு தேர்தலிலும், இத்தகைய முட்டாள்தனமான கணிப்புகளும் தொடர்ந்து  வெளிவருகின்றன.

விழிப்புணர்வற்ற சமுதாயத்திற்கு, திட்டமிடலுக்கு உதவும் அரிய சாதனமான கருத்துக் கணிப்புகளை பயன்படுத்தத் தெரிவதில்லை. எனவே தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளது போல,  கணிப்புகளுக்கு முழுமையாக தடை விதிப்பதே சரியாக இருக்கும் என்பது நாட்டுநலனில் அக்கறை கொண்டோரின் கருத்தாக உள்ளது. எனினும் ஆணையர் கூறியுள்ளதாலேயே, அவரது யோசனையை எதிர்த்தாக வேண்டியுள்ளது.

கணிப்பு என்பது என்ன?

நாட்டு மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதை குறிப்பிட்ட மாதிரி (SAMPLE) அளவில், கேட்டறிந்து, அந்தப் புள்ளிவிபரங்களின் (STATISTICS) அடிப்படையில் அரசியல் காற்று  வீசும் திசையை ஆவதானிப்பதே  தேர்தல் கணிப்பு. ஒவ்வொரு முக்கிய அரசியல் கட்சியும், பிரத்யேக கணிப்பாளர்களைக் கொண்டு இத்தகைய கணிப்புகளைப் பெற்று, அதன் அடிப்படியில் தங்கள் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன. அவை பெரும்பாலும் ரகசியமானவை என்பதால், அவற்றால் எந்த சர்ச்சையும் ஏற்படுவதில்லை. பொதுஜன ஊடகங்களில்  வெளியாகும் கருத்துக் கணிப்புகளே சர்ச்சைகளைக் கிளப்புகின்றன.

பொதுவாக, கணிப்பு என்பது முன்னறிவிப்பு, நிர்ணயம், கணக்கீடு, மதிப்பீடு, கருத்து என பல பொருள்களில் அணுகப்படுகிறது (நன்றி: க்ரியாவின் தமிழ் அகராதி) உரிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நடுநிலையுடன் மதிப்பிட்டு, தெளிவான முடிவுகளை நிர்ணயிப்பதும், மதிப்பீடுகளை உருவாக்குவதும், மக்களுக்கு முன்னறிவிப்பதும், கருத்து தெரிவிப்பதும் கணிப்பின் கடமை. ஆனால்,  நமது ஊடகங்களின் கணிப்புகள் நடுநிலை இன்றி செயல்படுவதால் அவற்றின் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

நமது ஊடகங்களின் கணிப்புகளை, அடிப்படையில் இரு பிரிவாகப் பிரிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வெற்றி பெறும் / தோல்வி பெறும் (WIN  / DEFEAT) என்பதே கணிப்பின் ஆதாரம். இது மட்டுமே பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பது. ஆனால், இதற்குள் நான்கு வகையான உட்பிரிவுகளும் அதன் அடிப்படையில் எட்டு விதமான முடிவுகளும் இருப்பது யாருக்கும் தெரிவதில்லை. அவற்றைத் தெரிந்துகொண்டால், என்.டி.டி.வி.யோ, அவுட்லுக்கோ  வெளியிடும் கருத்துத் திணிப்புகள் கண்டு நீங்கள் ஆயாசம் அடைய மாட்டீர்கள்.

எந்த ஒரு கணிப்பிற்கும் பின்புலத்தில் நோக்கம், விருப்பம்,  எதிர்பார்ப்பு,  மதிப்பீடு ஆகிய நான்கு நிலைகள் இருக்கின்றன. இந்த நான்கு நிலைகளின் அடிப்படையில் ஒரு கட்சியின் வெற்றி அல்லது தோல்வி கணிக்கப்படும்போது அவை எட்டு வகையான முடிவுகளைத் தரலாம். அவற்றை நாம் இங்கு ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..

நோக்கத்துடன் இயங்கும் கணிப்புகள்:

ஒரு தி.மு.க. தொண்டரிடம் சென்று, அடுத்த சட்டசபை தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்  என்று கேட்டுப் பாருங்கள். உங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, அடுத்த நிமிடமே ”கலைஞர் தான் அடுத்த முதல்வர்” என்பார். வேறு பதிலை அவர் சொன்னால்தான்  அதிசயம். அதாவது தி.மு.க. தொண்டரைப் பொருத்த வரை, திமு.க. வெல்லும் என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, நோக்கமும் கூட.

அவரிடமே அ.தி.மு.க.வின் நிலை பற்றிக் கேட்டுப் பாருங்கள். ”அக்கட்சிக்கு முன்வைப்புத் தொகைகூடக் கிடைக்காது” என்பார். அதாவது நோக்கத்துடன் கூடியவரின் கணிப்பு, ஒரு கட்சி வெல்ல வேண்டும் அல்லது தோற்க வேண்டும் (MUST WIN / MUST DEFEAT) என்பதாகவே இருக்கும்.

நமது ஊடகங்களின் கணிப்புகளிலும் இத்தகைய அணுகுமுறையை நீங்கள் கண்டிருக்கலாம். நக்கீரன் வாரஇதழ் வெளியிடும் கணிப்புகள் பெரும்பாலும் இப்படி அமைபவையே. சென்ற சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க வெல்லும் தொகுதிகள் என்று நக்கீரன் அறிவித்த தொகுதிகளில் அக்கட்சி ஜெயித்திருந்தால், தி.மு.க  அரசுக்கு ‘மைனாரிட்டி அரசு’ என்ற அவப்பெயர் ஜெயலலிதாவால் சூட்டப்பட்டிருக்காது.

namo-no-1

சென்ற குஜராத் சட்டசபை தேர்தலிலும் இதே போன்ற அணுகுமுறையை ஆங்கில ஊடகங்கள் வெளிப்படுத்தின. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் அமைந்துவிடக் கூடாது என்பதை ஒரு பிரசார இயக்கமாகவே  அவை முன்னெடுத்தன. அவற்றின் கணிப்புகளிலும், ‘மோடி மண்ணைக் கவ்வுவார்’ என்றே குறிப்பிட்டன. ஆனால், ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசி, மீண்டும் வென்று, கணிப்பாளர்களை மண் கவ்வச் செய்தார் மோடி.

தமிழகத்தில் நக்கீரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு திமு.க. வெல்ல வேண்டும் (MUST WIN) என்ற அடிப்படையிலானது. குஜராத்தில் ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பா.ஜ.க. தோற்க வேண்டும் (MUST DEFEAT) என்ற அடிப்படையிலானது. இந்த இரண்டு வகையான கணிப்புகளும் மக்கள் மன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. ஆயினும், தேர்தல் சமயத்தில் இந்த கணிப்புகள் ஏற்படுத்திய உளவியல் தாக்கங்களையும் நெருக்கடிகளையும் சிந்தித்துப் பாருங்கள். ஊடகங்களின் அதர்மம் புரியும்.

விருப்பத்துடன் இயங்கும் கணிப்புகள்:

ஏதாவது ஒரு தமிழக அரசு ஊழியரிடம் சென்று, வரும் தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த நிமிடமே, தி.மு.க வெற்றி பெறுவதற்கான  வாய்ப்புகளை பட்டியலிடத் துவங்கி விடுவார். வானவில் ஊழலால் தனிப்பட்ட வகையில் குடிமகன் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை என்றுகூட அவர் சொல்லக்கூடும் (எனது அனுபவம் இது).  தங்களுக்கு அள்ளி வழங்கிய  கலைஞர் மீண்டும் முதல்வராவார் (SHOULD WIN) என்பது அரசு ஊழியர்களின் விருப்பம். அதுவே அவர்களது கருத்திலும் கணிப்பிலும் எதிரொலிக்கும்.

அடுத்ததாக, ஒரு முஸ்லிம் குடியிருப்பிற்குச் சென்று அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானி பிரதமர் ஆவாரா அன்று கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு இது ஒரு சோதனை. என்ன பதில் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? உண்மையிலேயே அத்வானி பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்பும் இஸ்லாமியரும் கூட, அதை தனது குடியிருப்பில் கருத்துக் கணிப்பின்போது வெளிப்படையாகச் சொல்வார்  என்று எதிர்பார்க்கிறீர்களா?

பெரும்பாலான சிறுபான்மையினர், பா.ஜ.க.வின் எதிரிகள் நடத்திவரும் துஷ்பிரசாரத்தால், அக்கட்சியை எதிரியாகவே அனுமானிக்கிறார்கள் என்பது ரகசியமல்ல. சென்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு  தெரிவித்தவர்களில் சிறுபான்மையினரின் உட்பிரிவு சதவிகிதம் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை   என்பது இந்தியா டுடே கணிப்பில் தெரியவந்தது. அதாவது, அதிகப்படியான  சிறுபான்மையினரின் தேர்வு ‘அத்வானி பிரதமராகக் கூடாது’ (SHOULD NOT WIN) என்பதாக இருந்துள்ளது.

எதிர்காலத்தைக்  குறிக்கும் துணைச் சொல்லான ‘SHALL’ என்பதன் உறுதிப்படுத்தப்பட்ட வடிவமே ‘SHOULD’. அதாவது நமது யூகம்  விருப்பத்தின் அடிப்படையில் அமையும்போது, அது உறுதிப்படுத்தப்பட்ட கணிப்பாகவே வெளிப்படுகிறது. அரசு ஊழியர் தி.முக. வெல்லும் (SHOULD WIN ) என்கிறார்;  இஸ்லாமியர் பா.ஜ.க. வெல்லாது (SHOULD NOT WIN) என்கிறார். இவை இரண்டுமே விருப்பத்தை அடித்தளமாகக் கொண்டவை.

விருப்பங்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படலாம். அதற்காகத்தான் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கணிப்பாளரே விருப்பத்தின் அடிப்படையில் செயல்படக் கூடாது.

சென்ற சட்டசபைத் தேர்தலில் குமுதம் ரிப்போர்ட்டர்  வெளியிட்ட கணிப்புகள், தி.மு.க. சார்ந்த திணிப்புகளாகவே இருந்ததற்குக் காரணம்,  அதன் அடித்தளத்தில் இயங்கிய  விருப்பங்கள் தான்.  சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது துக்ளக் கூறிய ஹேஷ்யங்கள் பலிக்காமல் போனதும், பா.ஜ.க. சார்ந்த துக்ளக்கின் அணுகுமுறைதான்.

நோக்கத்துடன் கூடிய கணிப்புகள் போலவே விருப்பத்துடன் கூடிய கணிப்புகளும் தோல்வியில் முடிகின்றன. ஆனால், தேர்தல் காலத்தில் கட்சிகளுக்கு பின்பலமாக இவை உதவுகின்றன. கட்சிகளின் கொள்கைகள் மீதான அபிமானம், அரசுகளின் செயல்முறை மீதான நாட்டம்,  நன்றியுணர்வுடன் கூடிய ஆசை  போன்றவை விருப்பக் கணிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம். எப்படியாயினும், இத்தகைய அணுகுமுறை வாசகர்களை குறிப்பிட்ட அளவில் முட்டாளாக்கி அவர்களை தவறாக வழிநடத்துகிறது என்பது உண்மை.

(எதிர்பார்ப்புக் கணிப்பு,  மதிப்பீட்டுக் கணிப்பு குறித்து அடுத்த பகுதியில்…)

4 Replies to “கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1”

 1. இன்றைக்கு பெருபாலான மீடியாக்களை நடத்துபவர்கள் கிறிஸ்தவர்கள்.. கிறிஸ்துவ மீடியாக்கள் கிறிஸ்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதும் முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதும் இயற்கையே ஏனென்றால் ஓட்டு வங்கிக்காக போலி மதசார்பற்ற அரசியல் வாதிகள் அவர்களை அப்படி மாற்றிவிட்டனர்.. கிட்டத்தட்ட 90 சதவித இந்துக்கள் உள்ள நாட்டில் இந்துக்களின் நலனில் அக்கறை செலுத்தும் இந்துக்களின் நலனுக்காக போராடும் பிஜேபி கட்சிக்கு இந்துக்கள் ஓட்டு போடாமல் புறகனிப்பது வேதனைக்குரிய விஷயம்..இந்து விரோத அரசியல் கட்சிகளுக்கு நம் இந்துக்கள் வாக்களிப்பது தற்கொலை செய்வதற்கு சமம்..வேற எந்த நாட்டிலும் இந்த கொடுமை நடக்காது.. இதுவே நம் அண்டை நாடுகளில் பாருங்கள் பாகிஸ்தானில் ஒரு இந்து அதிபராகவோ பிரதமராகவோ ஆகா முடியுமா?. இலங்கையில் இந்துக்களான தமிழர்கள் அதிபர் ஆகா முடியுமா? இதற்கெல்லாம் காரணம் அந்ததந்த நாடுகளில் பெருபான்மையாக உள்ள மக்கள் அந்த சமுகத்தை சேர்ந்த அந்த சுமுக நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு மட்டுமே வாக்களித்து தேர்தலில் வெற்றி பெற செய்வர்..இது இந்தியாவில் தலை கிழாக உள்ளது…இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு தான் பெருபாலான இந்துகள் வாக்களிகின்றனர்… இந்துகளுக்கு எதராக செயல்படும் அனைத்து மீடியாக்களையும் இந்துகளுக்கு எதராக செயல்படும் அரசியல்கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் நம் இந்துக்கள் புறகணிக்க வேண்டும்..அப்பொழுதுதான் நம் உரிமைகளை பாதுகாக்க முடியும்.. இனிமேலாவது இந்துக்கள் இந்து விரோத மீடியாகளை புறகணிக்க வேண்டும்.மேலும் இந்து விரோத அரசியல் கட்சிகளை புறக்கணித்து இந்துகளுக்கு ஆதரவாக செயல்படும் பிஜெபி போன்ற கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்

 2. அற்புதமான வெப் சைட் இன்றுதான் கண்டேன் நன்றி

  கிருஷ்ண பாலு
  ஹைதராபாத்

 3. ஐந்து முறை வாக்குச்சாவடி தலைமை அலுவலராகவும், ஒரு முறை மண்டல அலுவலராகவும் பணியாற்றிய பொழுதும் காவல்துறையினருடனும், பத்திரிக்கையாளர்களுடனும் உரையாடும் சந்தர்பங்கள் கிடைத்தன. கருத்துக்கணிப்பா அல்லது திணிப்பா என்று கேட்டபோது ஒரு பத்திரிக்கையாளர் பெரும்பான்மையாகத் திணிப்புகளே என்றார்.அப்போது அருகிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகுதியைச் சொல்லி(சென்னை மாநகரத்தில் அடங்கியது) பத்திரிக்கைகளில் வெளியான கணிப்பைச் சொல்லி அது போல் முடிவு அமையாது என்றும் எதிர்மறையான முடிவுதான் என்றும் சொன்னார். நானும் அது எவ்வாறு என்று கேட்க அவர் பத்திரிக்கைகளின் அணுகுமுறையையும் தனிப்பட்ட முறையில் சிலர் செய்த ஒரு ஆய்வையும் விளக்கிக் கூறினார். தேர்தல் முடிவும் அவர் கூறியது போல் அமைந்தது. எனவே எல்லா நேரங்களிலும் எல்லாக் கருத்துக் கணிப்புகளும் சரியான முறையில் அமைவதில்லை. தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் வாக்காளரின் மனதில் ஒரு தவறான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆனால் #அழகிரி# பார்முலா ஏற்படுத்தும் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது தற்போது கணிக்கவியலாது.

 4. A team from Loyola college, chennai conduct opinion polls at the time of elections. They always show the result that DMK is the most favoured party.

  It is an open secret that the media are paid by political parties to publish opinion polls in their favour.

  Why, I know of many journalists who are bribed even for writing favourable reviews for movies.

  Regarding the forthcoming assy elections for Tamil nadu, in spite of all the corruption that the DMK has engaged in, I feel it will still win bcos of the “thirumangalam” formula.

  As they say ” Thirudanaayi paarthu thirundhaa vittaal, thiruttai ozhikka mudiyathu”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *