ஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை

 

ஓராசிரியர்  பள்ளிகள்

(ஸ்வாமி  விவேகானந்தா  ஊரக வளர்ச்சிச்  சங்கம்)

 

எண்: 12, ராமானுஜம் தெரு, தி.நகர், சென்னை – 600017 

தமிழ்நாடு, இந்தியா. 

 தொலைபேசி: (0) 91-44-24345665 / 24342095

 E-Mail: brh.sts@gmail.com  URL: www.singleteacheerschools.org

 

 

கிராமப்புற ஏழை மக்களின் கல்வி நிலை

மானுடத்தின் மிகப்பெரும் செல்வமாகக் கருதப்படுவது கல்விச்செல்வம். கல்வியில் சிறந்த சமுதாயம் அது சார்ந்திருக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடுவதால் அது மிக முக்கியமான சொத்தாகும். பொருட்செல்வம் மட்டுமே கொண்டிருந்து கல்வியறிவு இல்லாத மனிதரை மக்கள் அவ்வளவாக மதிப்பதில்லை.

sts-1

பாரத தேசத்தில் அடிப்படைப் படிப்பறிவு பெற்றோர் 68%-ஆகவும், தமிழகத்தில் அடிப்படைப் படிப்பறிவு பெற்றோர் 72% ஆகவும் தற்போது இருப்பதாக அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அடிப்படைப் படிப்பறிவு இல்லாத மக்கள் பெரும்பாலும், கிராம மற்றும் மலைப் பகுதிகளில் வாழ்பவர்களாகவும், ஏழ்மைக் குறியீட்டிற்குக் கீழ் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர். அத்தகைய குடும்பத்தினர் தமிழகத்தில் 5.24 லட்சம் குடும்பங்கள் என்று புள்ளிவிவரம் சொல்கின்றது.

அடிப்படைப் படிப்பறிவை 100 சதவிகிதத்திற்கு உயர்த்த வேண்டுமென்றால், இன்றைய குழந்தைகள் அனைவருக்கும் கல்வி போதிப்பது மிகவும் இன்றியமையாததாகும். கடைக்கோடியில் உள்ள கிராமங்களிலும், கடலோரக் கிராமங்களிலும், மலைக் கிராமங்களிலும் உள்ள குடும்பங்களின் குழந்தைகள் கல்விச்சாலைகளின் வாசனையே இல்லாமல் வளர்கின்றனர். கல்விக்கான கட்டுமானங்கள் அவ்விடங்களில் இல்லாமலோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் முப்பதாயிரத்திற்கும் அதிகமான கிராமங்கள் அந்த நிலையில் இருக்கின்றன.

அங்குள்ள குழந்தைகள் ஆரம்பக் கல்விக்குக்கூட பல காத தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு வெகு தூரம் நடந்து செல்வதனாலேயே அக்குழந்தைகள் தளர்ச்சி அடைந்து பின்னர் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல், பள்ளிக்குச் செல்வதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல், பல குடும்பங்களில் ஏழைமையின் காரணமாக, குழந்தைகள் சிறு வயது முதலே பெற்றோர்களுக்கு உதவியாகத் தங்களால் முடிந்த அளவு பணம் சம்பாதிக்கச் செல்லவேண்டிய சூழ்நிலை இருப்பதாலும் பள்ளி செல்ல இயலாமல் போய்விடுகிறது.

ஆகவே, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகப் பள்ளிகளை கிராமப்புறங்களுக்கும் மலைக் கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் சிந்தனை எழுந்தது. ஆயினும் கட்டுமானங்கள், ஆசிரியர்கள், மற்ற அலுவலர்கள் என பல தேவைகள் கவனிக்கப்படுவது மிகவும் சிரமமான காரியம் என்பதால், “ஓராசிரியர் பள்ளிகள்” எனும் சிந்தாந்தம் உருவானது.

sts-2

ஆர்ஷ வித்யா பீடாதிபதி பூஜைக்குரிய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ஆசியுடன், ஸ்ரீ விவேகானந்தா ஊரக வளர்ச்சிச் சங்கம் (Sri Vivekananda Rural Development Society) தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றது.

 தொடர்புடைய   YouTube சுட்டி

ஓராசிரியர் பள்ளிகள் உருவாகும் விதம்

sts-4* கிராமத்தில் இருக்கும் அதிகம் படித்த இளைஞரைத் தேர்வு செய்தல்.

அவரை ஊக்குவித்து, ஆசிரியராக நியமித்து, சிறந்த நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டங்களைக் காண்பித்து, அவருக்குச் சரியான பயிற்சி அளித்தல்

கோயில், கோயிலுக்கு அருகில் உள்ள மைதானம், பெரிய மரத்தடி, மற்றவர்களால் உபயோகப்படுத்தாத இடம் என கிடைத்த எதாவதொரு நல்ல இடத்தில் வகுப்பை நிர்மாணித்தல். கரும்பலகை வைத்தல்.

5 வயதிலிருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளை மாணவர்களாகச் சேர்த்துக் கொள்ளுதல்

1 முதல் 5-ஆம் வகுப்புக்கான பாடங்களை மாலை 5.30 முதல் 8.30 மணி வரை நடத்துதல்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அடிப்படை அறிவியல் ஆகியவற்றோடு, ஒழுக்கம், நன்னடத்தை, சுத்தம், சுகாதாரம், அடிப்படை யோகா, உடற்பயிற்சி போன்றவையும் சொல்லிகொடுத்தல். ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, போன்ற குழந்தை இலக்கியங்களும் திருக்குறள், பாரதியார் பாடல்களும் கற்றுத்தருதல். தெய்வீகப் பாடல்கள், காயத்ரி மந்திரம், பஜனைப் பாடல்கள், தேச பக்திப் பாடல்கள் போன்றவையும் சொல்லிக் கொடுத்தல். திருவிழாக் காலங்களில் அவற்றில் போட்டிகள் நடத்திப் பரிசளித்தல்.

ஆசிரியர்கள் போலவே ஒவ்வொரு கிராமத்திற்கும் சுகாதார அலுவலர் ஒருவரையும் நியமித்தல். அவர் மூலம் முதலுதவிகள், அடிப்படை மருந்துகள் அளித்து, கிராம மக்களுக்கு சுத்தத்தையும், சுகாதரத்தையும் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல்.

ஆசிரியர்களுக்குத் தேவையான பொருள்கள், மாணவர்களுக்குப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சுகாதார அலுவலருக்குத் தேவையான முதலுதவிப் பெட்டி, மருந்துகள் ஆகியவற்றை அளித்தல்.
 
 ஓராசிரியர் பள்ளிகளினால் கிடைக்கும் பயன்கள்

* சிறுவயதிலேயே வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையிலிருந்து கல்வி கற்கும் சூழ்நிலைக்குக் குழந்தைகள் மாற்றப்படுகிறார்கள். அதனால், அவர்களுக்கு கல்வி கற்பதில் ஈடுபாடு ஏற்பட்டு, கற்கும் திறனும் அதிகரிக்கிறது. அனைத்துக் குழந்தைகளும் ஒரே இடத்தில் கூடி ஒழுக்கமும் கட்டுப்பாடும், நன்னடத்தையும் கூடிய பாடத்திட்டங்களைப் படிப்பதால், அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை ஏற்படுகிறது.

* ஆசிரியர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களின் சமூக அந்தஸ்து உயர்ந்து, அவர்கள் கிராம மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.

* மாணவர்கள் மட்டுமில்லாமல் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்குமே, தீண்டாமை, குடிப்பழக்கம், புகைப்பழக்கம் போன்ற தீய பழக்க வழக்கங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி அதிகரித்து அவை பெருமளவில் குறையவும் செய்கின்றது.

* மொத்தத்தில் கிராமத்தின் நிலையே உயர்கிறது.
 

சில சாதனைகள்

sts-3* மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும் “அழகான வீடும் அடிசாய்ந்து போகும் ஆகாத குடி போதையில்…” என்கிற அருமையான பாடலினால் பல தகப்பன்மார்கள் தங்களின் குடிப்பழக்கத்தையும், போதை மிகுதியால் மனைவிமார்களை அடிப்பதையும், துன்புறுத்துவதையும் நிறுத்தியுள்ளனர்.

* காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி, முகம்-கை-கால் கழுவி, நெற்றியில் விபூதி/குங்குமம் இட்டு, பெற்றோர்களை வணங்குதல், இறைவன் முன்னால் பிரார்த்தனை செய்தல், நல்ல முறையில் ஆடைகள் உடுத்துதல், யோகா உடற்பயிற்சி செய்தல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற நல்ல வழக்கங்கள் மாணவர்களின் தினப்படி நடைமுறையிலேயே வந்து விடுகின்றன.

* குடிப்பழக்கம் இருக்கும் தகப்பன்மார்களை குழந்தைகள் வணங்குவதில்லை. தாயாரை மட்டும் வணங்குகின்றனர். அவமானப்படும் தகப்பன்மார் கேட்கும்போது, “நீங்கள் குடித்துவிட்டு வந்து அம்மாவைத் துன்புறுத்துகிறீர்கள். குடிப்பழக்கத்தை நிறுத்தினால்தான் உங்களையும் வணங்குவோம்” என்று குழந்தைகள் சொல்வதும், அந்தக் குறிப்பிட்ட பாடலை மீண்டும் மீண்டும் பாடுவதும், தகப்பன்மாரை பெரிதும் பாதிப்பதால் அவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்துகின்றனர். உடனே நிறுத்த முடியாதவர்கள், பெரிதும் குறைத்தும், வீட்டில் குடிப்பதை நிறுத்தியும், தங்கள் மனைவிமார்களைத் துன்புறுத்துவதைக் கைவிட்டும் மனம் திருந்துகின்றனர்.

* அனைத்து சமூக மாணவர்களும் ஒன்றாக இருந்து ஓம் மந்திரம், காயத்ரி மந்திரம், பஜனைப் பாடல்கள், தேச பக்தி பாடல்கள் போன்றவற்றைக் கற்பதால், அவர்களிடையே ஜாதி வேற்றுமைகள் ஏற்படுவதில்லை. அதைப் போலவே, கிராமத்தில் உள்ள அனைத்து சமூகப் பெண்களும் ஒன்றாகச் சேர்ந்து ஓராசிரியர் பள்ளி ஆசிரியர்கள் நடத்தும் விளக்குப் பூஜையில் கலந்து கொள்வதால், அவர்களிடையேயும் ஒற்றுமை உண்டாகி, ஜாதி வேற்றுமைகள் மறைந்து விடுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஜாதி வேறுமைகள் இல்லாதது ஆண்களிடத்திலும் நாளடைவில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

* ஆயலூர் என்கிற கிராமத்தில் பெரும்பான்மை சாதி மக்கள் கோயில் கட்ட முயற்சி செய்தபோது அதற்கு ஷெட்யுல்டு வகுப்பு மக்களும் பொருளுதவி செய்தனர். ஆனால் கோயில் கட்டிய பிறகு ஷெட்யூல்டு வகுப்பு மக்கள் கோயிலில் நுழையக்கூடாது என்று மற்றவர்கள் கோயிலைப் பூட்டிவிட்டனர். அப்படியானால் பெரும்பான்மை மக்களும் கோயிலைப் பயன்படுத்தக்கூடாது என்று ஓராசிரியர் பள்ளி அலுவலர் அதிரடி நடவடிக்கையாக அந்தப் பூட்டின் மேல் மற்றொரு பூட்டைப் போட்டுவிட்டார். (அவர் பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது). பின்னர் காவல்துறைக்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட்டு அவர்கள் சமரசம் செய்ததன் பேரில், பெரும்பான்மை சாதி மக்களும் தங்கள் தவறை உணர்ந்து தற்போது அனைத்து கிராம மக்களும் ஒற்றுமையாகக் கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.

* செல்லியம்மன் நகர் என்கிற கிராமத்தில், “இருளர்” சமூகத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி வாசனையே இல்லாமல் இருந்த போது, அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அக்குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தார் ஓராசிரியர் பள்ளி அலுவலர். இத்தனைக்கும் அந்தக் குடும்பங்கள் வெளியில் இருந்து வந்தவர்கள். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. தற்போது அந்தக் குழந்தைகள் ஒழுங்காக ஒழுக்கமும், கல்வியும் கற்று வருகின்றனர்.

* கரும்பாக்கம் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண் குழந்தைகள் குடும்பநிலை காரணமாக பள்ளிக்கு வராமல் இருந்த நிலையில், ஓராசிரியர் பள்ளி அலுவலரும் ஆசிரியரும் அவர்களின் பெற்றோர்களிடம் பேசி அந்தப் பெண்களைப் பள்ளியில் சேர்த்தனர். தற்போது அந்தப் பெண்கள் நன்றாகப் படித்து, அனைத்துப் போட்டிகளிலும் முதலாவதாக வந்து பரிசுகள் வெல்கின்றனர்.

* ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் தேசபக்திப் பாடல்கள் கற்றுத்தரப் படுவதில்லை. ஆனால் ஓராசிரியர் பள்ளிகளில் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் பரிசுகளை வெல்வதால், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலும் தற்போது தேசபக்திப் பாடல்கள் கற்றுத்தரப் படுகின்றன.

* சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியத் திருவிழாக்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, நவராத்திரி, பொங்கல் போன்ற திருவிழாக்களும் ஓராசிரியர் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும்போது, மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்படும். அப்போட்டிகளில் நடுவர்களாக ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களும், கிராமத்துப் பெரியவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

* ஓராசிரியர் பள்ளிகளில் அனைத்து மதத்தைச் சார்ந்த குழந்தைகளும் படிக்கின்றனர். பண்டிகை தினங்களில் மாறுவேடப் போட்டிகள் நடத்தப்படும்போது, அக்குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ராமராகவும், கிருஷ்ணராகவும், ராதையாகவும், சீதையாகவும் அலங்கரித்து அனுப்பும் வழக்கமும் உண்டு. ஓராசிரியர் பள்ளிகள் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாகவும் திகழ்கின்றன.

 நன்கொடை உதவிகள் தேவை

தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் 474 கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகள் நடைபெற்று, கிட்டத்தட்ட 15,000 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். தயாள குணம் படைத்த மனிதர்களும், நிறுவனங்களும் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகள் மூலம் மட்டுமே இந்தப் புனித சேவை நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நற்பணிக்கு நன்கொடை தருபவர்களுக்கு, அந்தத் தொகைக்கு வருமான வரியிலிருந்து, வருமான வரிச் சட்டம் – பிரிவு 35 AC கீழ் 100 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்தச் சேவையை இந்த வருடக் கடைசிக்குள் (2011) 2000 கிராமங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர் (Sri Vivekananda Rural Development Society) ஸ்ரீ விவேகானந்தா ஊரக வளர்ச்சி சங்கத்தினர். மேலும், ஓராசிரியர் பள்ளிகள் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு மலரை வெளியிடுகின்றனர். அதற்கு விளம்பரங்கள் அளித்தும் வருமான வரிச் சலுகை பெறலாம்.

ஏழை மாணவர்களுக்குக் கல்விக்கண் வழங்கும் இந்தப் புனிதத் திட்டத்திற்கு நன்கொடை வழங்குவதன் மூலம் மக்கள் ஒரு சிறந்த சேவை செய்த மன நிறைவைப் பெறலாம் என்பதில் ஐயமில்லை.

பணமாகவோ, காசோலையாகவோ, வரையோலையாகவோ நன்கொடை அளிக்க விரும்புவோர், கீழ்கண்ட விவரங்களின்படி அனுப்பலாம்.

காசோலை / வரையோலை ஆகியவற்றை Single Teacher Schools என்ற பெயரிலோ அல்லது Swami Vivekananda Rural Development Society என்ற பெயரிலோ எடுத்து

 

SINGLE TEACHER SCHOOLS,
Unit of Swami Vivekananda Rural Development Society)
12.Ramanujam Street, T.Nagar, Chennai – 600017.
Tel: 91-44-24337640 / 24345665 / 24342095
E-Mail:brh.sts@gmail.com

 

என்ற முகவரிக்கு அனுப்பினால், அலுவலக ரசீதுடன், 100 சதவிகித வருமான வரிவிலக்குக்கான சான்றிதழும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

ஏழைக் குழந்தைகளுக்குக் கல்விச் செல்வம் அளித்து உதவுங்கள் !

புண்ணியச் சேவையில் பங்கு கொள்ளுங்கள் !!

வருமான வரிவிலக்கு பெற்று சேமிப்புப் பயன் பெறுங்கள் !!!

9 Replies to “ஓராசிரியர் பள்ளி எனும் ஓர் உன்னத சேவை”

 1. ஓராசிரியர் பள்ளித் திட்டம் மிகச்சிறப்பாக இருக்கிறது. இத்திட்டத்தைச் சிறந்த முறையில் செயற்படுத்தினால் பெரும்பயன் உண்டாகும் என்பது உறுதி. இத்திட்டத்திற்கு நிச்சயமாக நாமெல்லோரும் நமது பங்களிப்பை ஆற்ற வேண்டியவர்களாக இருக்கிறோம்.

  சின்னஞ்சிறு ஊர்களில் கூட பென்னம்பெரிய ஆலயங்கள் இருக்கிறது. அவற்றில் வைத்துக் கல்விப்பணி செய்வது மிகவும் வரவேற்கப்பட வேண்டும். இந்துச் சமூகம் வெறும் வழிபாடுகளுக்காக மட்டும் கோயிலைக் கட்டவில்லை. கோயில்களில் கட்டாயம் கல்விப் பணி நடக்க வேண்டும்.

  ஆக, இப்பணியை ஆற்றும் பெரியவர்களை வணங்கி.. இப்பணிகளை .. இத்திட்டத்தை நயந்து வியந்து பாராட்டி மகிழ்கிறோம்..

 2. so the local festivals and the culture were never respected even by hindu organisations.. the vanvashi parishad is making the tribals take on to vegetarianism, and stop animal sacrifice which were part of their culture.. and now this group also seems to have started this..

 3. dear sir,
  i am happy to associate with your scheme and also recommend ourfriends inthisregard.
  Please email me your Bank a/c 12 digits and name and branch where u keep the account,toforward my crossed cheque.regards,tsv

 4. வித்யாராமன் கேட்ட விவரங்களோடு பாங்கின் IFSC CODE என்ன என்பதையும் எழுதினால் ஏலேக்ட்ரோனிக் ட்ரான்ஸ்பர் பண்ணலாம்.

 5. Dear Friends
  Thanks for the responses.

  The website (www.singleteacherschools.org) is functioning well Mr.Raja.

  The society has received approval of the Government of India under Section 35 AC of the Income Tax Act, which will give 100% tax benefits for the donor.

  Foreign contributions are also allowed under FCRA by the Government of India.

  Here are the details of the Bank Account.

  Name of the Bank: – Indian Overseas Bank

  Branch Name: – T.Nagar, Chennai

  Address: – 116. Thiagaraya Road, T.Nagar, Chennai – 600017.

  City: – Chennai

  State: – Tamil Nadu

  E-Mail: – abbatm@iobnet.co.in

  Micr Code: – 600020011

  IFSC Code: – IOBA0000091

  Website: – https://www.iob.in

  The Account Number: – 009101000026597

  In the name of: – Swami Vivekananda Rural Development Society

  For Local Contributions the SB Account Number is 009101000075574 in IOB, T.Nagar Branch.

  Thanks .

 6. அய்யா வணக்கம் :
  தற்போது ஓராசிரியர் பள்ளியினை பற்றி தெரியவந்துள்ளது. எங்கள் ஊில் இதனை பபயனன்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *