ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் – பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5| பகுதி 6
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் பக்தி வழிபாடு பற்றிக் கூறும் போது, ஒருவன் இறைவனை முதலில் புறத்தே வழிபட வேண்டும், பின்பே அகத்தே வழிபட வேண்டும் என்பார். அதாவது இறைவனை அகத்தே வழிபடுவதற்கு முன் ஒருவன் அதற்கேற்ப தன்னை பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அதன் பொருள். அதனால் ஒருவன் இறைவனை எப்படி வழிபட்டாலும் அதனை நாம் சரியாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
பக்தியில் திளைத்து அதில் முதிர்ந்தவர்களுக்கே தன்னில் ஆழ்ந்து தன்னைத் தேடும் நிலை கிட்டலாம். சிலருக்கு அவர்கள் பார்வை புறவுலகால் கவரப்படுமானால் அதில் குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களின் அத்தகைய பார்வை மற்ற அனைவரையும் தன்னுடன் சரிசமமாக பார்ப்பதாக அமையாவிட்டாலும், குறைந்த பட்சம் மற்றவர்களை இறைவனின் அம்சமாகவாவது பார்க்கும் சரியான பார்வையாக ஆக்குவதற்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். ஒருவர் தான்-பிறர் என்று ஓர்ந்து எது தனக்கு நன்மை பயக்குமோ அது மற்றவர்க்குத் தீமை பயந்தாலும் அதனைச் செய்யும் மனோபாவத்தை வளர்த்தால்; அதனைத் தடுத்து, அவர்களின் பார்வையைச் சரி செய்வதும் மனிதனாகப் பிறந்துள்ள அனைவரது கடமையும் ஆகும்.
भक्त्या त्वनन्यया शक्य: अहमेवं विधोsर्जुन |
ज्ञातुं द्रष्टुं च तत्वेन प्रवेष्टुं च परंतप ||
அன்னியம் எண்ணாத அன்பினால் என்னை எவர்
உன்னிடுவார் அன்னவர்க்கே உத்தமனே – என்னை இவ்
வாறாக மெய்யாய் அறியத் தரிசிக்கப்
பேறாக்கத் தக்கோன் யான் பின்
பொருள்: உத்தமனே! என்னை அன்னியமாக எண்ணாத அனன்னிய பக்தியினால் யார் தியானிக்கிறார்களோ அவர்களுக்கே நான் என்னை இத்தகைய பரசொரூபமாக சாஸ்திர ஞானத்தினால் உள்ளபடி அறியவும், பின்னர் ஆத்ம சாட்சாத்காரத்தை அடையக்கூடிய தகுதியையும் அடையச் செய்வேன்.
சாஸ்திர ஞானத்தினால் பரம்பொருளை அறிவது பரோக்ஷ ஞானம் எனப்படும். அந்த பரோக்ஷ ஞானத்தினால் தன்னை ஆன்ம சொரூபமாக அறிவது அபரோக்ஷ ஞானம் எனப்படும். தனக்கு அன்னியமாக எதையுமே எண்ணாமல், அனன்னிய பக்தி செய்பவர்களே என்னை உள்ளபடி அறியும் தன்மை பெறுபவர்கள் என்று கிருஷ்ணர் இங்கு சொல்கிறார்.
எப்படி மற்றவர்களைத் தன்னவர்களாகக் காண்பது என்னும் ஐயம் எவருக்குமே வரும். ஏனெனில் என்னதான் மற்றவர்களை நாம் அப்படிப் பார்த்தாலும் அல்லது பார்க்க முயற்சித்தாலும், ஏதோ ஒரு சமயத்திலோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காகவோ மற்றவர்கள் நம்மை அப்படிப் பார்ப்பதில்லையே என்று எவருக்குமே கேட்கத் தோன்றும். அப்படிப்பட்ட சமயத்திலோ, சந்தர்ப்பத்திலோ நாம் விடாப்பிடியாக மற்றவர்களை வேறு மனிதர்கள் என்று பார்த்தாலும், அவர்கள் மட்டும் அல்லாது தானும் இறைவனின் துணையின்றி இல்லை என்னும் மனப் பக்குவத்தை வளர்த்துக்கொண்டால் நமது ஆன்மீக அனுபவம் சிறந்து விளங்கும். அதற்கு அத்தியாவசியத் தேவையாக இருப்பது இறைவனை நம்மில் இருந்து வேறாகப் பார்க்காது இருப்பதே.
“அன்னியம் எண்ணாது” என்று மேலே கூறப்பட்டுள்ளதை “இறைவன் நமக்கு அன்னியம் இல்லாத” என்றும் கொள்ளலாம்; பகவான் கிருஷ்ணர் சொல்வதால் “கிருஷ்ணனுக்கு அன்னியமாக எதையும் இறைவன் என்று கருதாத” என்றும் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டாலும் “எல்லாம் ஆன்மாவே” என்பதால் ஆன்மாவுக்கு அன்னியமாக எதையும் கருதாத மனப்பான்மை காலாகாலத்தில் படிப்படியாக வளரும்.
ஆனால் அதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னதுபோல், நாம் இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்தால்தான் இறைவன் நம்மை நோக்கி ஓர் அடி என்ன பத்தடியே எடுப்பார். அப்படிச் சென்று, அவரை நம்முள்ளே காண்பது என்பதும் அவரை மற்றெல்லோரிடமும் காண்பது என்பதும் எல்லாம் ஒன்றே. மற்றவர்களை முதலில் இறையம்சத்தோடு பார்க்கும் போது தானும் அவர்களுடன் வேறுபாடு இன்றி கலப்பது போல அமைவதால், அதுவும் இறைவனுடன் உள்ள பக்தி போல அமைந்து அனைத்துமே பரசொரூபமாகக் காணப்படும். எங்கு எந்த விதமான பேதங்களும் இல்லையோ அங்கு ஆன்மாவைத் தவிர வேறெதுவும் தெரியாது. அங்கு அறிபவனே அறிவாகிறான், உணர்பவனே உணர்வாகிறான். அதற்கு மேல் அறிவதற்கோ, உணர்வதற்கோ ஏதும் இல்லையாதலால் ஆன்மாகவாகவே என்றும் நிலைத்து நிற்கிறான்.
सत्वानुरूपा सर्वस्य श्रद्धा भवथि भारत |
श्रध्दामयोऽयं पुरुषो यो यच्छ्रध्द: स एव स: ||
அவரவர் தன்மைக்கு அடுத்த படியே
எவர்க்கும் சிரத்தை எழும் காண் – புவியில்
சிரத்தை உரு புருடன் சேர் சிரத்தைக்கு ஒத்தே
புருடனும் ஆதல் பொது
பொருள்: அவரவர்களின் குணத்தின் தன்மைக்கு ஏற்ப எவருக்கும் சிரத்தையானது தோன்றி செயல்படும் என்பதை அறிவாய். இவ்வுலகில் ஒரு ஜீவன் சிரத்தையின் உருவமாகவே உள்ளான். அவன் தனது முற்பிறவிகளின் வாசனைகளால் சேரும் குணங்களின் சிரத்தையை அனுசரித்தே செயல்படும் ஜீவனாய் உள்ளான். ஒருவனது இயல்பு (இப்படி அமைகிறது) என்பது எல்லோருக்கும் பொதுவானதே.
ஒருவன் ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டு செய்ய முயல்கிறான் அல்லது செய்கிறான், அல்லது செய்து முடிக்கிறான் என்றால் அதற்குக் காரணம் அவனுக்கு அந்தச் செயலைப் பற்றிய ஓர் ஆர்வமும், செய்வதற்குண்டான எண்ணமும், செய்முறை தெரிந்திருப்பது இவை எல்லாமே ஆகும். சிரத்தை என்பது ஆர்வத்தில் இருந்து தொடங்கி செய்கை வரை எல்லா நிலைகளிலும் இருப்பதாகும். அது தவிர நாம் விரும்பும் செயல் செய்து முடிக்கப்படும் என்ற நம்பிக்கையும் நமக்கு இருப்பதும் சிரத்தையின் ஒரு பகுதியே. அது இல்லை என்றால் செயலும் தொடங்காது, செய்தாலும் அதை முடிக்க முடியாதும் போகலாம். “வினைப் பயன் விளிவுற்று வித்தாய் வினைக் கடல் வீழ்த்திடும்” என்று ரமணர் சொல்வது போல் செயல்கள் பரிணமித்து மேலும் செய்கைகளைத் தூண்டி சிரத்தையை மேலும் வலுவாக்கிக் கூட்டலாம். அனைத்துக்கும் காரணம் அச்செயலைப் பற்றிய எண்ணமும், அதனால் அதில் நாம் காட்டும் ஆர்வமும், நம்பிக்கையுமே ஆகும். அப்படிப்பட்ட சிரத்தை வருவதன் காரணமே ரமணர் சொல்வது போல நாம் முன்பு செய்த வினைகளின் பயன்கள் என்று கொண்டால், நாம் நல்ல எண்ணங்களையும் வளர்த்து, செயல்களையும் செய்து வருவோம் அல்லவா? நம்மில் எவர்தான் தனக்கு தீங்குகள் வர வேண்டும் என்று ஆசைப்படுவோம்?
நன்மையோ, தீமையோ நமது எண்ணங்கள் என்பது இப்பிறவி மட்டுமல்ல, நமது முற்பிறவிகளின் தொடர்ச்சியாகவும் இருக்கக் கூடும். இப்படி எண்ணங்களும், வினைகளும், அவைகளின் பயன்களும், அவைகளின் மேல்விளைவான மற்ற எண்ணங்களும் என்ற சுழலில் சென்று கொண்டிருக்கும் ஒருவன் அவைகளைப் பற்றி துல்லியமாக அறிந்து கொண்டால், அவனுக்கு இவைகள் அனைத்தும் ஏன் இப்படி தொடர்கின்றன, அவை அப்படித் தொடராமல் இருக்க ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்பான். அந்த அறிவைப் பெறும் வரை, அவன் தனக்கு நேரும் அனுபவங்களில் மேலும் திளைத்து அவைகளின் வழியே மென்மேலும் சென்று கொண்டிருப்பானே தவிர, அவைகளின் தன்மையையோ, அவைகளில் இருந்து விடுபடும் மார்க்கங்களைப் பற்றியோ சிந்திக்க மாட்டான். அப்போது அவன் தனது சிரத்தைக்கு ஏற்றபடி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றுதான் பொருள். என்ன சொன்னாலும், செய்தாலும் அவனால் அவன் தன்மையை மாற்றிக் கொள்ள முடியாது. இது எல்லோருக்கும் பொதுவானதே.
ஒருவனது சிரத்தைக்கு ஏற்றபடி அவன் சாத்விக மார்க்கத்தில் சென்றால் தனக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் பயன் தரக் கூடிய நல்ல செயல்களைச் செய்பவனாகவும், ராஜச மார்கத்தில் சென்றால் அவன் செய்யும் செயல்களால் நல்லதோ, கெட்டதோ அவைகளால் மிகவும் பாதிப்பு அடையக்கூடியவனாகவும், தாமச மார்கத்தில் சென்றால் செய்ய வேண்டிய செயல்களை செய்யாதிருப்பவனாகவும், அப்படியே செய்தாலும் அவைகள் பெரும்பாலும் தீய செயல்களாக அமைந்து எவருக்கும் தீமைகளையே அளிப்பவனாகவும் இருப்பான். ஆனால் இந்த பாகுபாடுகளை நன்கு உணர்ந்தவனோ சாத்விக மார்க்கத்திலேயே சென்று தனது வினைப் பயன்களையும் வெகுவாகக் கரைத்துக்கொண்டு, மேலும் நல்ல செயல்களைச் செய்வதிலேயே ஈடுபாடு கொண்டவனாக வளர்வான். தொடக்கத்தில் ஒருவன் எப்படி இருந்தாலும், தனது நற்செயல்களால் நற்கதி அடைய முடியும் என்பதையே ஆன்றோர்கள் தம் அனுபவத்தில் கண்டு நமக்கு அறிவுறித்தியுள்ளனர். அதனை நமது தினப் பழக்கத்தில் கொண்டு வரவில்லை என்றால் அதற்குப் பொறுப்பு நாமே என்பதை நாம் மனதில் இருத்திக் கொள்வது நல்லது. அதற்கு வேறு யார் மேலும் பழி போடுவதும் ஒரு பாவச் செயலே.
श्रध्दावान्लभते ज्ञानं तत्पर: संयतेन्द्रिय: |
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति ||
சிரத்தையுள்ளோனே திருத்திப் பொறியைக்
கருத்தில் விடாதே கருதி – மருவுவான்
மெய்யறிவு மேவிப் பின் மேலான சாந்தியினை
எய்துவான் சின்னாளில் இங்கு
பொருள்: சிரத்தை உடையவனே மனதில் தோன்றும் விஷயங்களை எண்ணத்தில் ஊறித் திளைக்கவிடாமல், ஆன்ம சொரூபத்தையே ஊன்றி சிந்திப்பவனாயும், இந்திரியங்களை நன்கு அடக்கியவனாயும் இருந்து உண்மை ஞானத்தை அடைவான். ஞானத்தை அடைந்தபின் தாமதம் ஏதுமின்றி பரமமான சாந்திக்கடலாகிய முக்தி நிலையையும் எய்துகிறான்.
உள்ளது ஒன்றே என்று முதலில் கற்றும் கேட்டும் அறிந்துகொண்டு, பின்பு அதற்குத் தக இருக்க முயற்சிக்கும் சாதகன் ஒருவனுக்கு சிரத்தை இருக்கிறது என்றே பொருள். சிரத்தை உள்ளவன் எப்படி இருக்க வேண்டும் என்று கீழ்கண்டவாறு சாஸ்திரம் கூறுகிறது. எது என்றும் நிலைத்திருக்குமோ அதில் மட்டும் அவன் ஆர்வம் கொண்டுள்ளவனாக இருக்க வேண்டும். வாழ்வில் அனுபவித்துத் தெளிந்து நிலையாமைகள் அனைத்தையும் விலக்குபவனாக இருக்க வேண்டும். ஐம்பொறிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, மனத்தளவில் ஒரு நிதானத்துடனும், எதிலும் பொறுப்பு மிக்க உள்ளவனாகவும், உலக சுகங்களை நாடாதிருப்பவனாகவும், குருவிடமும் வேதம் சொல்லும் சொற்களிலும் மிக்க நம்பிக்கை உடையோனாகவும், வாழ்வில் நிகழும் ஏமாற்றங்களைத் தாங்கும் மன வலிமையுடையோனாகவும் இருந்து தன்னை ஆன்மீகத் தேடலுக்குத் தயார் செய்துகொள்ள வேண்டும். முடிவாக உள்ள தனது இறைநிலை உணர்வது ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட சாதகன் ஒருவனையே சிரத்தை உள்ளவானாகக் கருத முடியும்.
இப்படி ஆன்ம வித்தையில் சிரத்தை உள்ளவனுக்கு அவனது மனத் திடத்தைச் சோதிப்பதாக பல இன்னல்களும் வரலாம். அவைகளினின்றும் மீண்டு, அவனது ஒரே குறிக்கோளான ஆன்ம அனுபூதியை நோக்கி எவன் தொடர்ந்து முயற்சிக்கிறானோ அவனுக்கு, காலம் தாழ்ந்தாலும் அவனது ஆன்மீகப் பயணத்தில் முன்பு தடங்கல்கள் வந்தது போலவே, பின்னால் இறைவனின் அருள் பரிபூரணமாக வந்து அவனை எல்லாவிதமான சோதனைகளையும் கடக்க வைத்து அவனை பண்படுத்தி பரம்பொருளைப் பற்றிய உண்மை ஞானத்தையும் கொடுக்கும். அப்படி ஞானம் பெற்றவன் ரமணர் சொல்வதுபோல் “தான்-பிறர் என்று ஓராமல் தன்னிலை பேராமல் தான் என்றும் நின்றிடவே தான்”. இப்படியாக அவன் முக்தி நிலையை எய்துகிறான்.
அந்த வாய்ப்பு இப்பிறவியிலும் இருக்கலாம், இனி வரப்போகும் பிறவிகள் ஒன்றிலும் இருக்கலாம். இப்பிறவியிலேயே வாய்த்தால் அவன் ஜீவன் முக்தன் எனப்படுகிறான். அவனது ஊழ்வினைக்கு ஏற்ப அவனது உடல் மறையும் போது, அவன் விதேக முக்தன் எனப்படுகிறான். இப்பிறவியில் அந்த வாய்ப்பு தப்பிப் போனால், அவன் ஒரு சாதகனாகவே மறைகிறான். அவனது கர்ம வினைக்கேற்ப அடுத்த பிறவியில் தனது சாதனையைத் தொடர்கிறான். இடையில் வந்தது இடையில் போகும், என்றும் உள்ளதே நிலைத்து நிற்கும், அதுவே தான் என்று ஒருவன் உள்ள பூர்வமாக உணரும் வரை இதுதான் நம் அனைவரின் தொடர் கதை ஆகும். இதிலும் நம் அனைவரும் ஒன்றே, எவருக்கும் எந்த பேதங்களும் கிடையாது.
ரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.
(தொடரும் …)