அமெரிக்காவில் ஒரு அன்னதான நிகழ்வு

பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும் தமிழ் கலாச்சார அமைப்பு. அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தமிழ் அமைப்புக்கள் போல அல்லாமல் தீபாவளி, சித்திரை மாத தமிழ் புத்தாண்டு போன்ற பாரதத்தின் பாரம்பரியப் பண்டிகைகளைச் சிறப்பாக கொண்டாடி வரும் அமைப்பு இது. அமெரிக்காவில் இயங்கும் பல தமிழ் அமைப்புகள் தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. மேலும் சித்திரை மாதத்து தமிழ் வருடப் பிறப்பு, இந்திய தேசீய ஒருமைப்பாடு போன்றவற்றையும் இந்த அமைப்புகள் ஏற்றுக் கொள்வதில்லை. அவை போன்ற தனித் தமிழ் பிரிவினைவாத காழ்ப்புணர்வு போக்குகள் ஏதும் இல்லாமல் நமது பாரதப் பாரம்பரியப் பண்பாடுகளையும், கலைகளையும் போற்றி அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியை இந்த அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாகச் சிறப்பாக செய்து வருகிறது.

வழக்கமாக பொங்கல் பண்டிகையை பாரதித் தமிழ்ச் சங்கம் ஏதாவது கோவிலின் அரங்கத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறது. இந்த முறை பொங்கல் விழாவை முன்னிட்டு இப்பகுதியில் உள்ள பிற சமூகத்தினரிடம் தொடர்பும் நல்லிணக்கமும் ஏற்படுத்து விதமாகவும், ஒரு சமூக நல நோக்குடனும் வீடிழந்த எளியவர்களுக்கு ஒரு வேளை உணவு வணங்க முடிவு செய்து இப்பகுதியில் இருக்கும் இன்னும் சில இந்து இயக்கங்களுடன் இணைந்து மார்ச் 18ம் தேதி, வெள்ளிக் கிழமை அன்று சான் ஓசே நகரில் தினமும் வீடில்லாதவர்களுக்கு இரவு உணவு வழங்கும் ஒரு நிலையத்தின் வெள்ளிக் கிழமைக்கான உணவு பொறுப்பை பாரதி தமிழ்ச் சங்கம் இந்த ஆண்டு பொங்கல் நிகழ்ச்சியாக நடத்தியது. பாரதி தமிழ்ச் சங்கம் , ஹிந்து அமெரிக்கன் ஃபவுண்டேஷன், ஹிந்து ஸ்வயம் சேவக், சேவா இண்டர்நேஷனல், ஸ்டான்ஃபோர்ட் அன்னபூர்ணா நண்பர்கள் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர், வருங்காலங்களில் ஒவ்வொரு இந்துப் பண்டிகைகளை ஒட்டியும் இவை போன்ற நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் உதவுவதற்காக 20 சேவகர்கள் வெள்ளி அன்று மதியமே பல்வேறு உணவுப் பொருட்களுடன் அங்கு கூடி விட்டோம். இந்த உணவு தயாரித்து வழங்கும் வேலையில் ஈடுபட விரும்பும் சேவகர்கள் அனைவரும் அவர்களுக்கு டி பி நோய்க்கான சோதனை ஒன்றைச் செய்து டாக்டர்/மருத்துவமனையில் இருந்து டி பி இல்லை என்ற சான்றிதழ் வாங்கிக் கொண்டு வர வேண்டியது கட்டாயம். அதைச் சிரமம் பாராமல் அனைவரும் செய்து சான்றிதழுடன் வந்திருந்தனர். அந்தச் சான்றிதழையும் பிற தகவல்களையும் பெற்றுக் கொண்டு லோவ்ஸ் அண்ட் ஃபிஷஸ் என்ற அந்த சேவை நிர்வாகிகள், உணவு தயாரித்து வழங்க வேண்டிய விதிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து விட்டு அந்த ஸ்டெயின் ஸ்டீல் சமையலறையை தொண்டர்களிடம் ஒப்படைத்தனர்.

அனைவரும் கை உறைகள் கட்டாயம் அணிந்து மட்டுமே பரிமாறவும் சமைக்கவும் உணவுகளைக் கையாளவும் வேண்டும் என்றும் கையுறைகளுடன் உடலைத் தொட்டிருந்தாலோ கழிவறை சென்று வந்திருந்தாலோ உடனடியாகக் கையுறைகளை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருந்தோம். சமையலறையினுள் சாப்பிடுவதும் உணவுப் பொருட்களைக் கையால் தொடுவதும் கண்டிப்பாகத் தவிர்க்கப் பட்டிருந்தது. உணவுகளில் தரத்திலும், சுத்தத்திலும் அதிகக் கவனம் செலுத்தினார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை நான்கில் இருந்து ஆறு வரையிலும் வருகின்ற அனைவருக்கும் உணவு வழங்குகிறார்கள் இந்த அமைப்பினர். இவர்களிடம் நாம் முன்பே பதிவு செய்து வைத்துக் கொண்டால் நாம் உணவு அளிக்க வேண்டிய தேதியை நமக்குச் சொல்லுவார்கள் அந்த தேதியில் நாம் சென்று நம் தயாரித்த உணவைப் பரிமாறலாம். பொங்கல் நிகழ்ச்சி ஜனவரியிலேயே நடத்தப் பட்டிருக்க வேண்டும் என்றாலும் கூட எங்களுக்கு இந்த நிகழ்ச்சியை நடத்தும் தேதி மார்ச் மாதத்தில்தான் கிட்டியது.

அன்றைய இரவு உணவு மெனுவாக நாங்கள் ஒரு தானிய சாலட், ஒரு குலோப் ஜாமூன், ஒரு அப்பளம், ஒரு புலாவ், சன்னா உருளைக்கிழங்கு மசாலா, இரண்டு நான்கள், பன்னீர் மசலா, சீஸ் பாஸ்தா, காஃபி, ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ். ஒரு வாழைப் பழம் உள்ளடங்கிய சைவ உணவுத் தட்டை அளிப்பதாக முடிவு செய்திருந்தோம். இதில் பாஸ்தா, நான்,பனீர் மட்டர் மசாலா, புலாவ், குலோப் ஜாமூன், அப்பளம், தானிய சாலட் ஆகியவற்றை ஏற்கனவே சமைத்து பாரதி தமிழ்ச் சங்கத்து நண்பர்கள் அங்கு எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். சாக்ரமெண்டோ நகரில் இருந்து இவை போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சமையல் செய்து பழக்கமுள்ள நண்பர் பாலாஜி என்பவர் வந்திருந்தார் அவர்தான் தலைமை சமையல்காரராக இருந்தார். நான்கு சாக்கு உருளைக் கிழங்குகள், நான்கு சாக்கு வெங்காயம் ஆகியவற்றை வேகமாக நறுக்கி இரண்டு பெரிய பாத்திரங்களில் சேகரித்துக் கொண்டோம். ஒரு பாத்திரம் நிறைய கொத்தமல்லி இலையையும் அரிந்து வைத்துக் கொண்டோம். அடுப்பு ஒன்றில் உருளைக் கிழங்கை வேக வைத்து விட்டு இன்னொரு பெரிய வாணலியில் எண்ணெயில் வெங்காயத்தை வதக்க ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் வதக்கப் பட்ட வெங்காயத்துடன், தக்காளி சாஸ், சென்னா மசலா, டப்பாக்களில் அடைக்கப் பட்ட கொண்டைக் கடலை, வேக வைத்த உருளைக் கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி சன்னா மசாலாவைத் தயார் செய்து விட்டோம். ஏற்கனவே சமைக்கப் பட்டிருந்த பிற உணவு வகைகளை எல்லாம் ஓவன்களில் வைத்து சூடு பண்ணி பரிமாற வசதியாக பெரிய அலுமினியத் தட்டுக்களில் பரப்பி எடுத்து வைத்திருந்த பொழுது நான்கு மணி ஆகி விட்டிருந்தது. வழங்கப் படும் ஒவ்வொரு உணவு குறித்த தயாரிப்பு மற்றும் பதார்த்த விபரங்களையும் தயாரித்து அச்சடித்து அனைவரும் படிக்கும் விதத்தில் ஒட்டியிருந்தோம்.

அந்த அரங்கில் ஏற்கனவே மதியம் முதல் ஸ்பானிஷ் பாடல்களை ஒலி பரப்பி அதற்காக முதிய ஆண்களும், பெண்களும் கூடி நடனமாடிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் மெக்சிகர்கள், பிற தென்னமரிக்கர்கள், பிலிப்பினோக்கள் நிரம்பிய வயதானவர்களின் ஆட்டம் பாட்டம் நடந்து கொண்டிருந்தது. மூன்றரை மணி வாக்கில் அவர்கள் ஆட்டங்களை முடித்துக் கொண்டு போய் விட அவர்களில் சிலர் இரவு உணவுக்காக வாசலில் துவங்கிய நீண்ட வரிசையில் போய் நின்று கொண்டனர். பின்னர் அன்னபூர்ணா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் வட்ட வடிவில் நின்று அன்ன பூரணித் தாயாரின் உருவத்தின் முன்பாக ஒரு தட்டு உணவைப் படைத்து விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லிப் பிரார்த்தித்தோம். வறுமையற்ற பசியற்ற உலகிற்காக பிரார்த்தனையுடன் அன்னபூர்ணா நிகழ்ச்சியினைத் துவங்கினோம்.

பிரார்த்தனையை முடித்து விட்டு உணவைத் தட்டுக்களில் எடுத்து வைக்கத் துவங்கினோம். நான்கு மணிக்கு வரிசையில் நின்றவர்களை உள்ளே அனுமதித்தார்கள். அமைதியாக ஒவ்வொருவராக வரிசையில் வந்து தங்கள் பெயர் தகவல்களை எழுதிவிட்டு நாங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த ஒரு கோப்பை, கரண்டி, கத்தி, காகிதத் துண்டு ஆகியவற்றை வழங்கி ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தார்கள். ஏற்கனவே நாங்கள் வரிசையாகப் போடப் பட்டிருந்த பெரிய வட்ட மேஜைகளைச் சுற்றி அமர ஆரம்பித்தார்கள். ஒரு மேஜைக்கு பத்து பேர்கள் வீதம் கிட்டத்தட்ட 15 மேஜைகளையும் சுற்றி நாற்காலிகளையும் போட்டு வைத்திருந்தோம். நான்கரை மணி வாக்கில் அனைத்து மேஜைகளையும் சுற்றி அனைத்து நாற்காலிகளும் மேஜைகளும் நிரம்பியிருந்தன இன்னும் பலரும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள். சேவை மையத்தின் நிர்வாகிகள் அன்ன பூர்ணா என்ற எங்கள் அமைப்பின் நோக்கம் குறித்தும் நாங்கள் அளிக்கப் போகும் இந்திய சைவ உணவு குறித்தும் அறிவித்து எங்களுக்கு நன்றி சொன்னார்கள். உணவு கொள்ள வந்திருந்த அனைவரும் பெரும் கரகோஷத்துடன் நன்றி சொன்னார்கள். பின்னர் அனைவரும் வரிசையாக உணவுத் தட்டை வந்து பெற்றுக் கொண்டு உணவு அருந்துமாறு அழைத்தோம்.

food

arranging

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள், முதியவர்கள் என்று அனைத்து நிற, நாட்டு மக்களும் அங்கு கூடியிருந்தனர். பெரும்பாலனவர்களுக்குத் தங்க எவ்வித இடமும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பவர்களாகையினால் தங்களுடன் தங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் வந்திருந்தனர். பாலித்தீன் பைகளில் தங்கள் உடமைகளை அடைத்து முடிச்சுப் போட்டுக் கட்டிக் பெரிய பெரிய பைகளுடன் சுமந்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்களும் இருந்தார்கள். சுருங்கிய முக வரிகளுடன் முதுமையின் எல்லையில் இருந்த முதியவர்களும் இருந்தனர். சீனர்கள், ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், தென்னமரிக்கர்கள், இந்தியர்கள் என்று பல்வேறு நாட்டினரும் வந்திருந்தனர்.

எந்தவித தள்ளுமுள்ளு, பரபரப்புமின்றி மெதுவாக ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று தட்டுக்களில் பரிமாறப் பட்ட உணவுகளை வாங்கிக் கொண்டு மேஜைக்குத் திரும்பினார்கள். நாங்கள் ஒவ்வொரு மேஜையாகச் சென்று காஃபி, ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், தண்ணீர், பால் முதலியவற்றை பரிமாறினோம். ஆளுக்கு ஒரு பீங்கான் கோப்பை மட்டுமே இருந்தபடியால் ஒவ்வொன்றாக வாங்கிக் கேட்டுக் கேட்டுப் பருகினார்கள். பலரும் இந்திய உணவுகளை சாப்பிட்டதில்லை என்றும் இது என்ன அது என்ன என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் உணவு பரிமாறப் பட்ட வேளையில் எங்களிடம் இன்னமும் நிறைய உணவு இருந்ததினால் இன்னொரு முறை வந்து வாங்கிச் சாப்பிடுங்கள் என்று அறிவித்தவுடன் மீண்டும் ஒரு முறை அனைவரும் அமைதியாக வரிசையில் நின்று இந்த முறை தாங்கள் விரும்பிய உணவு வகைகளை விரும்பிக் கேட்டு வாங்கிக் கொண்டு போய் முடிந்த வரை வீணாக்காமல் அருந்தினார்கள். அடுத்த முறையும் முடிந்த பொழுது எடுத்துச் செல்ல விரும்புவர்கள் வரலாம் என்று அறிவித்தோம். அனைவரும் தயாராகக் கொண்டு வந்திருந்த ஸிப் லாக் பைகள், ப்ளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றில் உணவுப் பொருட்களை வாங்கி அடைத்துக் கொண்டு இன்னும் சில வாழைப் பழங்களையும் பெற்றுக் கொண்டு சென்றார்கள். அனைவரும் உணவு மிகவும் பிடித்திருந்ததாகவும் நீங்களே தினமும் வந்து தந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். உணவு வழங்குபவர்களிடம் தாங்கள் உணவு அளிக்கிறோம் என்ற உணர்வோ உணவைப் பெறுகிறவர்களிடம் எந்த விதமான தயக்கமோ குற்ற உணர்வோ இல்லாமல் அனைவருமே நண்பர்களுடன் தோழமையுடன் அருந்தும் ஒரு இரவு உணவு நேரம்ல் போல நிகழ்ந்து கொண்டிருந்தது.

அங்கு உணவு கொள்ள வந்திருந்தவர்கள் பல்வேறு காரணங்களினால் வீடு இழந்தவர்கள் தங்க இடமில்லாதவர்கள் ஆதரவற்ற முதியவர்கள் கை விடப் பட்டவர்கள், வேலை இழந்தவர்கள், புகலிடம் இல்லாமல் போனவர்கள். இவர்களில் ஒரு சிலருக்கு மீண்டும் ஒரு வேலையும், இருப்பிடமும் வாழ்க்கையும் அமையலாம் அப்பொழுது தத்தம் வீடுகளில் பாதுகாப்பான சூழலில் மீண்டும் உணவு அருந்தும் சூழலுக்குத் திரும்பலாம், பலருக்கு இது ஒன்றே நிரந்தர வழியாகவும் தொடரலாம். ஆனால் இவை போல நகரமெங்கும் வறுமையில் வாடுபவர்களுக்கான உணவு அளிக்கும் நிலையங்கள் அவர்களைப் பசிக் கொடுமையிலிருந்து காப்பாறி விடுகின்றன. அப்படி உணவு நாடி வருபவர்களின் கண்ணியத்திற்கு எந்த விதத்திலும் இழுக்கு நேர்ந்து விடக் கூடாது என்பதில் அமைப்பாளர்கள் கவனமாக இருந்தார்கள். அவர்களுக்கு நல்ல சூழலில் நல்ல சத்தான உணவு தருவதிலும், அப்படி அந்த உணவைத் தயார் செய்பவர்கள் எந்தவிதமான தொற்று நோய்களும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதிலும் அந்த அமைப்பினர் அக்கறை எடுத்துக் கொண்டனர். யாரிடமும் எந்தக் கேள்வியும் கேட்க்கப் படுவதில்லை. அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளித்து திருப்தியுடன் அனுப்புவதில் அக்கறை எடுத்துக் கொண்டார்கள். அவர்களை எந்த விதத்திலும் கண்யக் குறைவாக நடத்தி விடக் கூடாது என்று எங்களுக்கு ஆரம்பத்திலேயே விதிமுறைகளைக் கவனித்து நடந்து கொள்ளுமாறு வகுப்பு எடுத்திருந்தனர். சாப்பிட வருபவர்களை அனுமதியின்றி புகைப் படம் எடுக்கக் கூடாது என்றும் அவர்கள் எத்தனை முறை எதைக் கேட்டாலும் முகம் கோணாமல் புன்னகையுடன் மட்டுமே அணுக வேண்டும் என்றும் எங்களிடம் சொல்லியிருந்தார்கள். அதன் படி அவர்களது தன்மானத்திற்கும் கண்ணியத்திற்கும் எந்த வித பங்கமும் வராத வண்ணம் அன்புடனும், புன்சிரிப்புடனும் நாங்கள் அனைவரும் அவர்களது முழு திருப்திக்கு உள்ளானோம். அனைவரும் பல்வேறு மொழிகளில் எங்களிடம் தங்கள் திருப்தியையும் நன்றியையும் சொல்லியவாறு விடை பெற்றனர். ஒரு மேஜையில் அமர்ந்திருந்த குடும்பத்தில் ஒரு பத்துப் பன்னிரெண்டு வயதான பெண் தயக்கம் நிறைந்த முகத்துடன் இருந்தாள். எதையும் கேட்டுச் சாப்பிட மிகவும் தயங்கியவாறு இருந்தாள். என் பெண்ணின் நினைப்பு எனக்கு வந்தது. சாப்பாடு முடிந்தவுடன் அனைவரும் கலைந்து சென்று விட அந்தப் பெண் மட்டும் அனைத்து மேஜைகளையும் சுத்தம் செய்வதிலும் தரையைச் சுத்தப் படுத்துவதிலும் தன் தாயாருக்கு உதவி செய்து விட்டே வெளியேறினாள்.

கிட்டத்தட்ட 200 பேர்கள் இரண்டு முறை திருப்தியுடன் உண்டு விட்டு பின்னர் அடுத்த நாளுக்காக டப்பாக்களிலும் எடுத்தும் சென்றனர். அவர்கள் கலைந்து சென்ற பின்னர் தட்டுக்களை எல்லாம் கழுவி அடுக்கி விட்டு நாங்களும் மீதமிருந்த உணவை அருந்தினோம். அங்கிருந்த ஊழியர்களும் தங்களுக்கான உணவுகளை எடுத்துக் கொண்ட பின்னர் அந்தப் பளப் பளப்பான எவர்சில்வர் கிச்சனைக் கழுவி அவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கிளம்பினோம்.

annapoorna-picasa

அனைவரிடமும் நன்றி சொல்லி விடை பெற்று வெளியேறிய பொழுது காலை முதல் பெய்து கொண்டிருந்த மழை சற்றே தூறலாக மாறியிருந்தது. அருகேயிருந்த பசுமையான சான் ஓசே மலையின் முகடுகள் முழுவதும் வெள்ளைப் பனிப் போர்வை போர்த்தியிருந்தது. அன்றாடம் பசியின்றி விரும்பும் உணவு சாப்பிட்டு வாழும் நிலைக்காக மனம் ஆண்டவனிடன் நன்றியுடன் நெகிழ்ந்த அதே நேரத்தில் அடுத்த வேளை உணவுக்கு நிரந்தரமில்லாமல் உணவு முழுவதும் தவிக்கும் கோடானு கோடி மக்களின் நினைவு மனதைப் பாரத்துடன் நெருடியது. இந்தியாவில் அமெரிக்கா என்றால் பணக்கார நாடு இங்கு பாலும் தேனும் பெருகி ஓடுகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் வறுமை உண்டு அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லாத மக்கள் உண்டு. குடும்பங்கள் உண்டு என்ற உண்மையை அருகில் இருந்து உணர முடிந்தது. பசியுள்ளவர்களின் கவுரவம் குறையாத வண்ணம் அவர்களது பசியை ஓரளவுக்கு இவை போன்ற தன்னார்வ அமைப்புகள் போக்கி விடுகின்றன என்பது மட்டுமே ஒரு சிறு ஆறுதல். வயிற்றுக் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற மகாகவியின் லட்சியத்தை இவை போன்ற அமைப்புகள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றன. மழை வலுக்க ஆரம்பித்திருந்தது. அன்றிரவுக்காண சாப்பாடு கிடைத்து விட்ட அந்த மக்கள் அன்றிரவின் கடும் மழையையும் குளிரையும் சூறைக் காற்றையும் எதிர் கொள்ள வேண்டும். ஒரு கவலை முடிந்து அடுத்த கவலை அவர்களுக்குத் துவங்கியிருந்திருக்கும்.

11 Replies to “அமெரிக்காவில் ஒரு அன்னதான நிகழ்வு”

  1. தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்

  2. well done Oh Bharatiyas in the US!
    carry forward the torch of Universal Hinudu Dharma to the entire globe.
    You make us proud
    R.Sridharan

  3. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இந்து இயக்கங்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்யபட்ட பாரதி தமிழ் சங்கம்/ அன்னபூர்ண நிகழ்ச்சி மிக நன்றாக நடந்தது.

    நல்வாழ்த்துக்கள்.

    நன்றி
    கோவிந்தராஜன் வீ எஸ்

  4. ஃபெட்னா போன்ற அமைப்புகளும், அமெரிக்காவில் இருக்கும் சில இந்து விரோத தமிழ் சங்கங்களும் உருப்படியாக எதையும் செய்யாமல் வெறுப்பு அரசியல் மட்டும் நடத்திக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பாரதி தமிழ்ச் சங்கம் போன்ற தமிழ் அமைப்புகள் இது போன்ற உருப்படியான காரியங்களில் ஈடுபடுவது போற்றுதலுக்கு உரியது.

  5. திருமலை,
    மிகவும் மகிழ்ச்சி. ஹிந்துக்கள் அமைப்பு என்றாலே போட்டியும், பூசலும் என்பது போலவும், கொடை, சமூக நலம் என்பது மற்ற அமைப்புகளின் அடையாளம் என்பது போலவும் சித்தரிக்கப்படும் இக்காலத்தில் “வயிற்றுக்குச் சோறிடவேண்டும் , இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்” என்பதை செய்து காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  6. ஒன்று கவனித்தேன். சுகாதாரம் என்பது பெறுபவனுக்கும் முக்கியம் என்பதைக் காட்டும் வண்ணமாக எத்தனை முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?!
    கொடை எனபது “கொடுக்கிறீன் பார்” என்பதைக் காட்டாமல், ‘பெறுபவனும் ஒரு மனிதன், அவனது சுகாதாரம் என் கொடையால் பாதிக்கப் படக்கூடாது’ என்ற அக்கறை காட்டுவது ( அது அரசு விதியாக இருந்தாலும் சரி, உங்களது சுய விதிகளாக இருந்தாலும் சரி) , மிகவும் பாராட்டுக்குரியது. “மீந்து போனா பிச்சை போடக் கூட ஆளில்லே இங்கே ” என முணுமுணுப்பது கொடையல்ல என்பது புரிபட இங்கு பல நாட்களாகும் போல!

  7. வணக்கம்.
    மிக நிறைவாக இருக்கிறது இதைப் படிக்க.
    இன்றுதான், என் கண்ணிலே பட்டது இந்த கட்டுரை.
    கடந்த இருபதுக்கும் மேல்பட்ட வருஷமாக இந்த அன்னதான கைங்கர்யத்தை இங்கே ஆஸ்திரேலியாவின் பெர்த் மாநகரிலே அன்னலட்சுமி எனும் பெயரிலே பரிபூர்ண ஈடுபாட்டுடன் ஒவ்வொருநாள், மதியமும் இரவும் என்று 200 க்கும் மேல்பட்ட குடும்பங்கள் ஒருங்கிணைந்து – எந்த பெரிய ஒரு அமைப்பும் இல்லாமல் தொடர்ந்து செய்து வருகிறார்கள். நகரின் பிரதான நதிக் கரையிலே அன்னலட்சுமி என்கிற சூழலிலே, ” Where Vegetarian Dining is a Cultural Experience ” என்று சொல்லி, வரும் அனைவருக்கும் எந்தவித பாரபக்ஷமும் இல்லாமல் ” Eat as you like and Pay what your heart feel ” என்கிற அடிப்படையிலே, அதிதி தேவோ பவா என்பதை உண்மையாக செய்து வருகிறார்கள் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். பலபேர் , பலப் பல ஜீவன்கள் – பல தேசத்து ஆத்மாக்கள் வந்து அன்னலக்ஷ்மியிலே அருமையான உணவு உண்டு, கண்களில் கோர்த்த நீர்த் திவளைகளுடன் நன்றி சொல்லுவதும், பலர் பண வசதி இன்மை காரணமாக எதுவும் பணம் செலுத்தாமலும் உண்டு பிறகு நிறைவோடு செல்வதையும் , நான் கடந்த ஏழு வருஷங்களாக நேரில் கவனித்து வருகிறேன்.

    https://www.annalakshmi.com.au/

    இது பற்றி விரிவாக ஒரு பார்வையாக தொகுத்து எழுதி வைக்க ஆசை.
    இறைஅருளின் கருணையிலே, அதுவும் செய்ய முயல்வேன்.

    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *