அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்

anna_hazare_lokpal_bill_01திப்பிற்குரிய அண்ணா ஹசாரே அவர்களுக்கு,

வணக்கம்.

ஊழலுக்கு எதிரான உங்கள் போராட்டம் நாட்டு மக்களை விழிப்புணர்வடையச் செய்துள்ளது. அதிலும் ‘ஜன லோக்பால்’ சட்டத்தை நிறைவேற்ற நீங்கள் மேற்கொண்டுள்ள தீவிர முயற்சிகள் மத்திய அரசை ஆட்டிப்படைத்ததைக் கண்டபோது பெருமகிழ்வு கொண்டோம். ஆனால்…

இந்த ‘ஆனால்’ என்ற வார்த்தை வந்தாலே, வாக்கியத்தின் பொருள் மாறிவிடுகிறது. ”மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் அடிக்கடி நமது பிரதமர் மன்மோகன் சிங்கைப் பாராட்டுவது. பிரதமர் ஊழல்கறை படியாதவர் என்று காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பிரசாரம் செய்வதை ஒத்திருப்பதாகவே உங்கள் கருத்தும் இருப்பதை ஏற்கவே முடியவில்லை.

கண் முன்னால் அரசுக் கருவூலத்தில் சேர வேண்டிய பணம் கொள்ளை போகக் காரணமான அமைச்சர் ஒருவர் ”பிரதமருக்குத் தெரிந்தே தான் முடிவெடுத்தேன்” என்று சொல்லிக் கொண்டே அனைத்து அத்துமீறல்களிலும் ஈடுபட்டு, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மாபெரும் மோசடி செய்திருக்கிறார். ஆனாலும், மன்மோகன் நல்லவர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். கார்கில் வீரர்களுக்கான குடியிருப்பில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல்…, என ஊழல் விவகாரங்கள் சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் நீங்கள் பிரதமர் நல்லவர் என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று சத்தியமாகப் புரியவில்லை.

இதைவிட மோசம், திக்விஜய் சிங், கபில் சிபல், மணிஷ் திவாரி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் உங்களுக்கு எதிராக நடத்தும் அவதூறுப் பிரசாரங்களைக் கண்டிக்குமாறு கோரி, காங்கிரஸ் தலைவி சோனியா அம்மையாருக்கு நீங்கள் கடிதங்கள் எழுதுவது. திட்டமிட்ட ரீதியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் உங்களுக்கு எதிராக பிரசாரத்தை முன்னெடுத்துவரும் நிலையில், நீங்கள் எப்படி இன்னமும் சோனியாவை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை.

சோனியா கண்ணசைவின்றி இப்படிப்பட்ட உளறல்களை திக்விஜய் சிங் வெளிப்படுத்துவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடந்த ஊழல்களில் சோனியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால், ஊழலுக்கு எதிரான போரை தலைமை தாங்கி நடத்துவதற்கான தகுதியையே நீங்கள் இழந்தவர் ஆகிவிடுவீர்கள்.

ஊழல் கீழிருந்து மேல் நோக்கிச் செல்கிறதா? மேலிருந்து கீழ் நோக்கிச் செல்கிறதா? இரண்டும் சாத்தியம் என்றாலும், மேல்மட்ட ஊழல்களே நாட்டை திவாலாக்குகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்காகவே லோக்பால் சட்டத்தில் விசாரணை வளையத்தில் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று நீங்கள் கூறி வருகிறீர்கள். அப்படியானால், பிரதமரைவிட அதிக சக்தி வாய்ந்தவரான ஐ.மு.கூட்டணி தலைவரும் மத்திய அரசின் வழிகாட்டியுமான சோனியாவுக்குத் தெரியாமல் ஏதாவது ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருதுகிறீர்களா? சோனியா மீதான மிகவும் ஆபத்தான புகார்களை ஜனதா தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடிதமாக பிரதமருக்கு எழுதி பல மாதங்கள் ஆகியும், இதுவரை அதற்கான எந்த மறுப்பையும் பிரதமரோ, சோனியாவோ கூறாதது ஏன் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

subramaniaswamyநாட்டில் இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிகவும் மோசமான ஊழல் அரசு மன்மோகன் சிங் அரசு தான் என்று உண்மையான பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால் மன்மோகன் நல்லவர் என்று நீங்கள் சான்றிதழ் அளிக்கிறீர்கள். அரசில் பங்கு வகிக்கும் ஒவ்வொரு அமைச்சரும் ஊழலில் ஈடுபடுவதைக் கண்டித்துத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மன்மோகன் எப்படி நல்ல பிரதமர் ஆவார்? இதுதான் ஆட்சியை தலைமை தாங்கி நடத்தும் அழகா? உங்களுக்கு எதிரான அவதூறு பிரசாரத்தை கட்டுப்படுத்துமாறு, அதற்குக் காரணமான சோனியாவுக்கே நீங்கள் கடிதம் எழுதுகிறீர்கள். இவை முரணாகத் தெரியவில்லையா? இது ஊழலுக்கு எதிரான போரில் தலைமை தாங்கும் உங்களுக்கு அழகா?

உங்கள் அர்ப்பணமயமான வாழ்க்கை பற்றிப் படித்து அதில் உத்வேகம் கொண்டவர்கள் எண்ணற்றவர்கள். ‘ராலேகான் சித்தி‘ கிராமத்தில் நீங்கள் நிகழ்த்திய மகத்தான மாற்றத்தை நாங்கள் அறிவோம். ஆனால், உங்களுடன் சேர்ந்துள்ள ஊழல் எதிர்ப்பு வீரர்களின் முழு விபரமும் நீங்கள் அறிவீர்களா?

உங்கள் பின்னால் நிற்கும் அக்னிவேஷும், அரவிந்த் கேஜ்ரிவாலும் கொண்டுள்ள காங்கிரஸ் சார்பை அறிவீர்களா? அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து தகவல் உரிமை சட்டத்திற்காகப் போராடிய அருணா ராய் தற்போது சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருப்பதை நீங்கள் அறிவீர்களா? உங்களை வழிநடத்தும் அரசு சார்பற்ற அமைப்புக்கள் (என்.ஜி,ஓ.க்கள்) அரசிலும் ஊடகவெளியிலும் கொண்டுள்ள பிரமாண்டமான செல்வாக்கை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆங்கிலத் தொலைகாட்சி ஊடகங்கள் அரசுக்கு சாதகமாக நடத்தும் நாடகங்களில் நீங்கள் சிக்கி இரையாகிவிடக் கூடாது என்பதற்காகவே இதனைக் குறிப்பிடுகிறோம்.

உங்கள் ஊழலுக்கு எதிரான இயக்கம் லோக்பால் மசோதா நிறைவேற்றத்துடன் நின்றுவிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கும் கூட காங்கிரஸ் கட்சி அனுமதிக்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும், லோக்பாலை மட்டும் குறியாகக் கொண்டு உண்ணாவிரத அறிவிப்பு வெளியிட்டிருக்கிறீர்கள். உங்கள் தன்னலமற்ற போராட்ட அறிவிப்பு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது மக்களை ஒருங்கிணைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தப் போரில் உங்கள் தலைமையை நாடி நாடு காத்திருக்கிறது என்பதை நீங்கள் ஏன் கண்டுகொள்ளாமல் உள்ளீர்கள்?

985_jayaprakash_narayanநீங்கள் தில்லி, ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதம் (2011, ஏப்ரல் 5) இருந்தபோது நாடு முழுவதும் ஏற்பட்ட எழுச்சிக்குக் காரணம், நாட்டில் நிலவும் ஊழல் மக்களை மிகவும் கசப்புக்கு உள்ளாக்கி இருப்பதே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஊழலுக்கு எதிராக நாட்டு மக்களை ஒருங்கிணைக்கவும், சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளை திரட்டவும் நீங்கள் ஏன் முயலக் கூடாது? 1975 ல் முழுப் புரட்சி இயக்கம் நடத்திய ஜெயப்பிரகாஷ் நாராயணனை ஏன் நீங்கள் முன்மாதிரியாகக் கொள்ளக் கூடாது?

ஒரு வீடு தீப்பற்றி எரியும் பொது அதை முதலில் அணைப்பது தான் விவேகம். அதை விடுத்து தீ பற்றியதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை நீக்க சட்டம் கொண்டு வருவதில் முனைந்திருந்தால் வீடு சாம்பலாகி விடும். இப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இதுவரை நாட்டைக் கொள்ளை அடித்தது தெரிந்தும், அதனைக் கண்டிக்காமல், பூசி மெழுகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன? லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட, இப்போதைய மன்மோகன் சிங் அரசு மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் முக்கியம் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? உங்களைச் சுற்றிலும் உள்ள காங்கிரஸ் ஆதரவு கைக்கூலிகளிடமிருந்து நீங்கள் விடுபடுவது எப்போது?

வெறும் 60 கோடி போபர்ஸ் ஊழலை முன்னிறுத்தி விஸ்வநாத் பிரதாப் சிங் ராஜீவ் காந்தி அரசை வீழ்த்தியது (1989) சமீபத்திய சரித்திரம். அதைவிட லட்சம் மடங்கு அதிகமான ஊழலை செய்துள்ள தற்போதைய மத்திய அரசை ஏன் நேரடியாகக் கண்டிக்காமல் அமைதி காக்கிறீர்கள்? உங்களைப் பற்றி அவதூறு பிரசாரம் செய்யும் காங்கிரஸ்காரர்களைப் பார்த்த பின்னரும், ஏன் அதே ஊழல்வாதிகளிடம் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?

‘போராட்டங்களில் சமரசம் ஒரு உத்தி’ என்று மகாத்மா காந்தியை நீங்கள் முன்னுதாரணமாக சொல்லக் கூடும். அவர் பேச்சு நடத்தியது ஆதிக்கம் செலுத்திய அந்நியனிடம். அவர் ஆங்கிலேரிடம் பேச்சு நடத்தியதே அதைக் காட்டி, அஞ்சிக் கிடந்த நாட்டு மக்களை ஒருங்கிணைக்கத் தான். ஏனெனில் அப்போது அரசியல் ரீதியாக நாடு ஒருங்கிணைக்கப் பட்டிருக்கவில்லை. அன்றைய காலம் வேறு. சுதந்திரம் பெற்ற மக்களான நாம், நம்மை அரிக்கும் ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் அதே போன்ற கோரிக்கை மனு போராட்டங்களைத்தான் நடத்த வேண்டுமா? நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னரும், மக்களிடம் போர்க்குணம் இல்லாமல் இருப்பதை நீங்களேனும் மாற்ற வேண்டாமா?

இன்றைய மத்திய அரசில் ஊழல் கொடிகட்டிப் பறக்க என்ன காரணம் என்று சற்றேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின்றி சிதறிக் கிடப்பதே மன்மோகன் அரசின் பலம் என்பதை அவர்களும் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை. பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான கட்சிகளாகவும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவையாகவும் உள்ளன. ஆனால் அவை இரண்டும் ஜென்மப் பகை கொண்டிருப்பது தான் காங்கிரஸ் கட்சிக்கு ஆசுவாசம் அளித்து வருகிறது. பிற கட்சிகளை விலை கொடுத்து வாங்கவும் பேரம் பேசி மயக்கவும் காங்கிரஸ் கட்சியால் முடியும் நிலையில், வலதுசாரிக் கட்சியான பாஜகவும் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் இணைந்தால் ஊழல் அரசை ஒரேநாளில் வீட்டிற்கு அனுப்ப முடியும், இதனை ஏன் நீங்கள் முன்னின்று நிகழ்த்தக் கூடாது?

இதனைத் தவிர்க்கும் வகையில் ‘அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல்மயமானவை’ என்ற பொதுவான கருத்துடன் நீங்கள் எதிர்க்கட்சிகளைப் புறக்கணிப்பது சரியான முடிவாகத் தெரியவில்லை. எல்லாக் கட்சிகளும் ஊழல்மயமானவையாகவே இருக்கட்டும். அவற்றில் மிக அபாயமானது எது என்பதை நிகழ்காலத்தில் நின்று யோசிக்க வேண்டாமா? லோக்பால் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்தான் வாக்களிக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துதான் உள்ளீர்களா?

லோக்பால் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் வேடம் போடும் காங்கிரஸ் கட்சி அதே நாடகத்தைத்தான் உங்கள் குழுவுடனும் நடத்துகிறது. எதிர்க்கட்சிகளை அவமதிப்பதற்காக உங்களை ஒருசமயம் தூக்கி நிறுத்தும் காங்கிரஸ் கட்சி, பிறகு நீங்கள் ஒத்துவரவில்லை என்றதும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறது. இந்த நாடகங்கள் எத்தனை நாளுக்கு? நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டவே தாமதிக்கும் காங்கிரஸ் கட்சி, நடப்புக் கூட்டத் தொடரில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றும் என்று இன்னமும் நீங்கள் பரிபூரணமாக நம்புகிறீர்களா? பிறகு எதற்காக ஆகஸ்ட் 16 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் அளிக்கிறீர்கள்? மகளிர் இட ஒதுக்கீடு மசோதா படும் பாடு நீங்கள் அறிந்தது தானே?

கருப்புப்பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த யோகா குரு ராம்தேவ் அவர்களின் போராட்டம் (2011, ஜூன் 4) தில்லி ராம்லீலா மைதானத்தில் அதிகார மமதையாளர்களால் குலைக்கப்பட்டபோது, அதைக் கண்டித்து தில்லி, ராஜ்காட்டில் ஜூன் 8 ல் நீங்கள் உண்ணாவிரதம் இருந்தீர்கள். நீங்கள் ஏன் அதே ராம்தேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடக் கூடாது? ஒன்று தெரியுமா? நீங்கள் ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ராம்தேவ் வடிவமைத்து வந்ததும், அதை முறியடிக்கவே ஆங்கில ஊடகங்களும் அரசு சார்பு என்.ஜி.ஓ.க்களும், உங்கள் உண்ணாவிரதத்தை முன்னிறுத்தின என்பதும் நீங்கள் அறிவீர்களா?

உங்களை மிகையாகக் காட்டி நாடகம் ஆடுபவர்களை விட உங்களையே முன்மாதிரியாகக் கொண்டு போராட நாடு முழுவதும் மாபெரும் இளைஞர் பட்டாளம் தயாராக உள்ளதை நீங்கள் அறியாமல் போனால், எதிர்காலத்தில் உங்கள் போராட்டம் மிக எளிதாக முறியடிக்கப்பட்டுவிட வாய்ப்புள்ளது. திக்விஜய் சிங்கின் மிரட்டல் கோமாளித்தனமானது என்று சாதாரணமாக ஒதுக்கிவிடக் கூடியதல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். அதை விடுத்து திக்விஜய் பினாத்துவதாக சோனியாவிடம் நீங்கள் புகார் செய்து கொண்டிருந்தால் உங்களைப் பார்த்து பரிதாபப்படவே முடியும்.

anna_hazare_lokpal_hindutva_supportஉங்கள் மீதான அவதூறு பிரசாரத்தில் ஓர் அங்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் உங்களை தொடர்பு படுத்துவது. இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் காங்கிரஸ் தந்திரம் என்பதை புரிந்துகொள்ளாமல் ஏன் எதிர்வினை ஆற்றுகிறீர்கள்? இந்தக் குற்றச்சாட்டின்மூலமாக, தன்மீதான குற்றச்சாட்டுகளை திசை மாற்றும் லாவகம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கிறது. தவிர, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றிய ஏற்கனவே காங்கிரஸ் ஸ்தாபித்துள்ள எதிர்நிலை பிம்பத்தைக் கொண்டு உங்களை வீழ்த்த சதி செய்கிறது. இதற்கு நீங்கள் ராஜதந்திரமாக எதிர்வினை ஆற்ற வேண்டாமா? அதுதானே நல்ல தலைமைக்கு அழகு?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னணித் தலைவர்கள் பலர் உங்களால் உத்வேகம் பெற்றவர்களே. ராலேகான் சிந்தியில் பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை நீங்கள் அறிவீர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான கிராம விகாஸ் பரிஷத்திற்கு நீங்கள் நல்ல வழிகாட்டுதல்களை அளித்துள்ளீர்கள். அவற்றை நீங்கள் மறைக்க முயன்றாலும் முடியாது. நல்ல விஷயங்களை ஏன் மறைக்க வேண்டும்? ஆனால் நீங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்துவதை ஏதோ தீண்டத் தகாத விஷயமாக இப்போது கருதுவதுபோலத் தெரிகிறது. இதற்கு உங்கள் தற்போதைய சகவாசதோஷம் காரணமாக இருக்கக் கூடும்.

இதே குற்றச்சாட்டு ராம்தேவ் மீது கூறப்பட்டபோது, ‘‘ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க அனைவருக்குமே உரிமை உள்ளது” என்று ஒரே வரியில் பதில் கொடுத்தார் அவர். அந்தத் தெளிவு உங்களிடம் இல்லாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. உங்கள் போராட்டம் ஊழலுக்கு எதிரான தன்முனைப்பை நாட்டு மக்களிடம் தூண்டாமல் உங்கள் தன்முனைப்பாகவே தேங்கிவிடுமோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நெருக்கடி நிலையை அமல்படுத்திய இந்திரா காந்திக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் நடந்த ஜனநாயகத்தை மீட்கும் இயக்கத்திற்கு அடிநாதமாக இருந்தது ஆர்.எஸ்.எஸ். அதனை ஆரம்பத்தில் எதிர்த்த ஜே.பி பிற்பாடு மனம் திருந்தி ஆர்.எஸ்.எஸ்.சை மனமாரப் பாராட்டியது வரலாறு. ஜனதா அரசு அமைந்ததிலும் ஜனதாதள அரசு அமைந்ததிலும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ள பலருக்கு தொடர்புண்டு. ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு மீது இப்போதைய மன்மோகன் அரசு மீது கூறப்படும் அளவற்ற ஊழல் புகார்கள் போல புகார்கள் கூறப்பட்டதில்லை. அவ்வாறு குற்றச்சாட்டுகள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்பதை நாட்டுமக்கள் போலவே நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். வாஜ்பாயும் ஆர்.எஸ்.எஸ்.காரர் தான். உங்களைப் போலவே எளிய வாழ்க்கை வாழும் பல்லாயிரக் கணக்கான தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் உண்டு. இவற்றை நீங்களும் அறிவீர்கள். பிறகு ஏன் நீங்கள் இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்கும் பாவனையில் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

ஊழல் என்பது மேலிருந்து கீழே பாய்வது மட்டுமல்ல. கீழிருந்தும் மேலே உயர்வது. நாட்டு மக்களில் பெரும்பாலோர் ஊழல் ஒரு பொருட்டில்லை என்று எண்ணுகின்றபோது இரு திசைகளிலும் ஊழல் பிரவாகமாக ஓடும். அதையே இப்போது நாம் காண்கிறோம். தனிமனிதன் சரியாகாமல், நாட்டுப்பற்றுள்ள குடிமகன் உருவாகாமல், சட்ட மிரட்டல்களால் குற்றங்களை ஒழித்துவிட முடியாது. இப்போதும் ஊழலுக்கு எதிரான சட்டங்கள் இருக்கவே செய்கின்றன; அவற்றில் பிரதமரையும் கூட விசாரிக்க முடியும். ஆனால் அதனால் பலன் இருக்கிறதா என்றால் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. பிறகு லோக்பால் சட்டம் கொண்டுவந்தால் மட்டும் அது முறையாகக் கடைபிடிக்கப்பட்டு விடுமா? நீங்கள் சிந்திக்க வேண்டும்.

லோக்பால் சட்டம், ஈசன் மீது விழுந்த பிரம்படி அனைவருக்கும் விழுவது போல அமையும் என்று நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது. நமது மக்கள் சுரணையற்றுப் போய் பல ஆண்டுகளாகி விட்டதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். உண்மையில் லோக்பால் சட்டத்திற்காகப் போராட்டத்தை நீங்கள் குறுக்கிக் கொள்வது, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து, அது உருகி கொக்கின் கண்களை மறைத்தபின், கொக்கைப் பிடிக்கப் போடும் திட்டமாகவே தெரிகிறது.

இப்போதைய தேவை சட்டமல்ல; மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை ஒருங்கிணைத்து அவர்களை மேலும் நல்வழிப்படுத்துவதே. மக்களின் ஊழலுக்கு எதிரான கருத்தோட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதும் ஆட்சி மாற்றம் காண்பதும் தான் இப்போதைய தலைபோகிற காரியம். இதனை உங்களால் நிச்சயமாக சாதிக்க முடியும். நாடு உங்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறது; இதை நீங்கள் தட்டிக் கழிக்கக் கூடாது. அனைத்து அரசியல்வாதிகளையும் ஏசிவிட்டு, அரசியலை நீங்கள் சுத்தம் செய்துவிட இயலாது.

பெருமதிப்பிற்குரிய அண்ணா ஹசாரே அவர்களே,

இக்கடிதம் உங்களைப் புண்படுத்த அல்ல. நீங்கள் எங்களைப் பண்படுத்த வேண்டும் என்ற ஆதங்கமே இக்கடிதத்தின் சாரம்.

நீங்கள் தனித்துவமானவர் என்பதை உங்கள் கட்டற்ற நடவடிக்கைகள் வாயிலாக அரசுக்கு நிரூபியுங்கள்.

உங்கள் தலைமை மூலமாக நாட்டு மக்களை சுத்திகரியுங்கள்.

தன்னலமற்ற உங்கள் வாழ்வின் தொடர்ச்சியாக அரசியல் மாற்றத்திற்கு அறைகூவல் விடுங்கள்.

இவையே இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை. மதியாதார் தலைவாசலில் உண்ணாவிரதம் இருப்பதை விட, அறிவுப்பூர்வமான வழி இதுவே. இதனை நீங்கள் உணர்ந்தால் நாடு நலம் பெறும். செய்வீர்களா?

தாழ்மையுடன் வேண்டும்,

ஹசாரே தாசன்

8 Replies to “அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்”

 1. Fantastic article. I need English version on this so that I can forward it to my ignorant friends.

 2. நம் நாட்டில் அமைப்புகளுக்கா பஞ்சம்? புதிதாக ஒரு அமைப்பு வருவதால் மட்டும் என்ன மாறிவிடப்போகிறது? கே.ஜி பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்போதைய மத்திய அமைச்சர் ஆ. ராசாவால் மிரட்டப்பட்டார்.அவர் மீது மேற்படி நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் புகார் செய்தார்.அனால் கே.ஜி. பாலகிருஷ்ணன் ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போதைய தலைமை நீதிபதி மிகவும் நேர்மையானவர்.ஆகவேதான் அதே ராசா தற்போது சிறையில் உள்ளார்.காங்கிரசின் எடுபிடியான நவீன் சாவ்லா தலைமைத்தேர்தல் ஆணையராக இருந்த போது சிவகங்கையில் தோற்றுப்போன சிதம்பரத்தை வெற்றிபெற்றதாக அறிவிக்க முடிந்தது. அதே உத்தியை சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த திமுக முயன்றது. ஆனால் தற்போதைய தேர்தல் ஆணையர் குரேஷி நேர்மையாளராக இருப்பதால் அது முடியவில்லை.ஆக, தேவையான அமைப்புகள் தற்போதே உள்ளன. தலைமை பதவிகளுக்கு நல்லவர்களை நியமிக்கும் நேர்மை ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதுதான் பிரச்சினை.அப்படியே இவர்கள் விரும்பும் வண்ணம் லோக்பால் அமைந்து விட்டால் மட்டும் என்ன? அதற்கு ஒரு பி.ஜே .தாமசோ, ஒரு நவீன் சாவ்லாவோ கிடைக்க மாட்டார்களா? மேலும் அண்ணா ஹஜாரேவை பற்றிய தங்கள் விமர்சனம் மிகவும் மென்மையாக உள்ளது. அவர் தன்னை சுற்றியுள்ள கும்பலால் ஆட்டுவிக்கப்படுகிறார்.இன்று கூட அவர் பாபா ராம்தேவை தம்மோடு சேர்த்துக்கொள்ளபல நிபந்தனைகளை விதித்துள்ளார். அவற்றில் முதன்மையானது அவர் ஹிந்து இயக்கங்களோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதாகும். ஊழலை எதிர்ப்பதுதான் இவர் நோக்கமென்றால் அதில் யார் கலந்து கொண்டால் என்ன? வடையை தின்பதை விட்டுவிட்டு துளையை எண்ணுவதேன்?அண்ணா ஹஜாரேவின் அறிவின் விசாலம் அவர் குஜராத்தைப்பற்றி விமரிசித்தபோதே தெரிந்து விட்டது.அவரை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடும் மீடியாவின் யோக்கியதை நாம் அறிந்ததே. நீரா ராடியாவிடம் ஊழல் வாதிகளுக்கு மந்திரி சபையில் இடம் வாங்கித்தர தரகர் வேலை பார்த்த பர்கா தத்தும்,வீர் சிங்க்வியும் அதே மீடியாவை சேர்ந்தவர்கள்தானே? இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் ஊழலை ஒழிக்கப்போகிறார்களா?தேசிய ஆலோசனைக்குழுத்தலைவர் என்ற பதவியில் அமர்ந்து கொண்டு சூப்பர் பிரதமராக [ extra constitutional authority ] செயல்படும் சோனியா வின் ஆட்சியில் ஏற்ப்படும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மீடியாக்கள் போடும் நாடகம் இது. விளம்பரப்பிரியர்களின் கிளப்பும் மேற்ப்படி ஜோதியில் நாமும் ஐக்கியமாக வேண்டாம். விலகி நின்று வேடிக்கை பார்ப்போம். வந்தே மாதரம்.

 3. நன்று – மிக மிக அருமையான கடிதம். ஆனால் அன்னா கேட்கவா போகிறார்? குஜராத்தில் ஊழல் என்று கூறும்போதே அவர் மீது இருந்த மரியாதை பொய் விட்டது.

  அவர் இப்போது புகழ் போதையில் சிக்கி விட்டார்

 4. இந்த கமெடியுடன் உட்கார்ந்து நேரத்தை வீண்டிப்பதர்க்கு ராம் தேவ் ஜி யாரவது நாலு பேருக்கு யோகா கற்று கொடுக்கலாம்.

  முதலில் ராம் தேவ் நடத்திய போராட்டத்தை திசை திருப்ப, இவரை வைத்து காங்கிரஸ் நாடகம் ஆடியது. தனது மீடியா மூலம், ராம் தேவ் பற்றி அவதூரு பிரச்சாரம் செய்து, மக்களை திசை திருப்பி ஆயிற்று.

  இனி என்ன? அனைத்து கிறித்துவ மிசினரி கயவர்களும் இவரை நடு தெருவில் விட்டு விட்டு ஒடி விட்டனர். கடந்த வாரம், போலி சாமியார் அகினிவேஷ், அரசின் லொக்பால் சட்டம் முதலில் இருப்பதை விட இப்போழுது சரியாக உள்ளது. அதனால் இது போதுமானது என்று கூறி உள்ளதே இந்த மிசினரி NGO கூட்டம் இவரை கை விட்டது என்பதற்கு சாட்சி.

  இந்த லட்சனத்தில் ஹிந்து அமைப்புகளுடன் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது என்று ஒரு நிபந்தனை வேறு. ஏன் இதே போல், அகினி வேஷை மாவோயிச்டுகளுடனும், பிற கிறித்துவ தீவிரவாதிகளுடனும் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது என்று சொல்ல வேண்டியது தானே?

  எல்லாம் நேரம். இவர்களை சொல்லி தப்பு இல்லை. ஐந்து வருடம் ஆட்சி செய்தும் அதை தக்க் வைத்து கொள்ள தெரியாத, ஒரு சக்திமிக்க ஊடகத்தை வைத்து கொள்ளாத, பாஜாகவை சொல்ல வேண்டும். குறைந்த பட்சம், குஜராத் கலவரத்தை இரட்டிப்பு செய்த பொழுதாவது, விழித்து கொண்டு ஒரு மீடியா ஆரம்பித்து மக்களிடம் உண்மையான தகவலை சேர்த்து இருக்க வேண்டும்.

  எவ்வளவு அடித்தாலும் திருந்த மாட்டேன் என்று, எருமை மீது மழை பெய்தார் போல் இருக்கும் எதிர் கட்சி பா ஜா க வை என்ன வென்று சொல்வது.

  மற்ற கட்சியை விட சிறந்த தொண்டர்களை பெற்று இருந்தும், மற்ற கட்சிகளை விட சிறந்த ஆட்சியை வழங்கியும், வெற்றி பெற இயலாத நிலைக்கு காரணம், தனது கருத்தை மக்களுக்கு எடுத்த செல்ல ஒரு ஊடகம் இல்லாததே காரணம்.

  இதுவே எல்லா பிரச்ச்னைகளுக்கும் வினை ஊக்கியாக செயல்பட்டு பா ஜா க கட்சியையும் நாட்டையும் அரித்து கொண்டு இருக்கிறது.

  வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் 10% விகித ஓட்டுக்கள், இந்த ஊடக செய்திகளை அடிப்படையாக வைத்தே ஒட்டு அளிக்கும் பொழுது, ஊடகம் கட்சிக்கு முக்கியமான ஒரு விசயம் என்பது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை. இவர்களுக்கு ஆள் பஞ்சமா, பணம் பஞ்சமா அல்லது மக்கள் பஞ்சமா?

 5. பாபா ராம்தேவும் அன்னா ஹசாரேயும் முதலில் வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை திருப்பிகொண்டுவருவதில் மாத்திரம் பிடியாக இருந்து போராடினாலே போதும். இதுதான் இன்று நாம் எதிர் நோக்கியுள்ள மிகவும் முக்கியத்துவம் கொடுக்கபட வேண்டிய விஷயமாகும். இதை சாதித்தாலே ஊழல் அரசியல்வியாதிகள் காணாமல் போய்விடுவார்கள். இந்த லோக்பால் போன்ற மசோதாக்கள் எல்லாம் ஒரு கண்துடைப்பு வேலைதான். திரு.சாமி சொல்லியது போல் முதலில் வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும். அதற்கான உரிய சட்டத்தை ஏற்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

  அப்படி ஒரு சட்ட ஏற்படுத்தி அதை அமூல் படுத்த முதலில் அரசியலில் தொடர்பு உடையவர்களின் நீண்ட பட்டியலை ( PEP’s Politically exposed persons) சுவிட்சர்லாந்தின் ரெஸ்டி டீசன் ஆப் இல்லிகல் அஸெட் சட்டம் ( RIAA – Restitution of illicit act ) படி அங்கு அனுப்பவேண்டும்.

  இந்த சட்டத்தின் படி 20 வருடங்களாக பாராளுமன்ற மாநில அவைகளில் உறுப்பினராக இருந்த இருப்பவர் அனைவரும் அரசு உயர் பதவியில் நீதிமன்றங்களில் கார்பிரேசன்களில் இருந்தவரும் இருப்பவரும் அடங்கும். இதே அணுகு முறையை டாக்ஸ் எவன் என்று சொல்லப்படும் 70 நாடுகளில் உள்ள வங்கி கணக்கை பெருவதற்கும் கையாளலாம். இன்று அரபு நாடுகளில் புரட்சி ஏற்பட இப்படி பெறபெற்ற கருப்பு பண தகவல்களே காரணம் ஆகும். (விவேக ஜோதி)

 6. Why are you not writing about the same CAG report on Reliance refineries?

  That amount also may teach Indians about how to add zeores.

  Ohhhh.. DMK did not involve into that. Right?

 7. மிக மிக அருமையான கடிதம். ஆனால் அன்னா கேட்கவா போகிறார்? குஜராத்தில் ஊழல் என்று கூறும்போதே அவர் மீது இருந்த மரியாதை பொய் விட்டது.

  அவர் இப்போது புகழ் போதையில் சிக்கி விட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *