ஆளரவமில்லாத பரந்த வெண்மண்பரப்பு. சற்றே தொலைவில் சலனமற்று இருக்கும் அமைதியான கடல். ஒருகாலத்தில் தினசரி ரயில் ஒடி நின்ற ரயில் நிலையத்தின் அடையாளமாக சிதிலமாக நிற்கும் ரயில் நிலையத்தின் சுவடுகள். சற்று நடந்தால் மணியில்லாமல் மாட்டிய மணியை அடையாளம் காட்டும் முகப்பு சுவர் மட்டுமே நிற்கும் சர்ச். செதுக்க பட்ட பெயருடன் குட்டி கல் சுவராக நிற்கும் போஸ்டாபீஸ். எங்கும் என்றோ நிகழ்ந்த அழிவின் எச்சங்களின் மிச்சங்கள் வாசனைகளுடன். இந்து மஹாசமுத்திரமும் வங்காள விரிகுடாவும் சங்கமிக்கும் தனுஷ்கோடி கடற்கரையிலிருக்கிறோம்.
மாலை நேரம் நெருங்குவதால் கடற்காற்று சற்று வேகமாக நம்மை தொட்டுச்செல்லுகிறது. ஆனால் கடல் எந்த ஆராவாரமும் இல்லாமல்தான் இருக்கிறது. 60களின் துவக்கத்தில் பள்ளியிலிருந்த காலத்தில் பேசப்பட்ட ஆழிப்பேரலையின் சீரழிவு நினைவலைகளாக எழுந்தபோது இந்த அமைதியான கடலா அப்படி செய்தது? என எண்ண வைக்கிறது. பயணிகளுடன் ஒரு ரயிலும், மக்களுடன் ஒரு நகரமும் வினாடிகளில் காணாமல் போன தமிழ் நாட்டின் துயரம் அது. மறந்தே போன அந்த விஷயம் இங்கே வந்த பின் நினைவலைகளாக மனதைத்தாக்குகிறது. ஏன் இன்னும் செப்பனிடாமல் இருக்கிறார்கள்? என்பது இந்த தேசத்தில், விடை கிடைக்காமல் இருக்கும் பல கேள்விகளில் ஒன்று.
வருவதற்கு ரோடு என்று ஏதுமில்லாததால் வரவிரும்புவர்களை ஒரு ஜீப்பில் அழைத்து வருகிறார்கள். காலையில் நம்மை அழைத்துவந்த ஜீப் ஓட்டுனர் இது தான் கடைசி டிரிப், இரவில் இங்கு தங்ககூடாது என அழைக்கிறார். கடலின் சீற்றத்தால் முன்னமே அழிந்தவிட்ட ஆனால் அந்த கடற்கரை கிராமத்தை சூனாமி தொடாத அதிசயம் கடல் அன்னையின் கருணையோ என எண்ணியபடி ராமேஸ்வர நகரத்திற்குள் நுழைகிறோம். ராமாயணத்துடன் தொடர்புள்ள தனுஷ்கோடியை கடல் விழுங்கியதால் இந்த நகரின் கடற்கரை அதன் முக்கியத்துவத்தை பெற்று வழிபட்டுத்தலமாகிவிட்டிருக்கிறது.
கம்பீரமான கோவில் கண்ணில் படுகிறது. கிழக்கு நோக்கியிருக்கும் அதுதான் ராஜகோபுரம் என அறிகிறோம். நுழைந்தவுடன் நம்மை ஸ்தம்பிக்க வைக்கிறது அந்த பிரமாண்டமான அதிகார நந்தி. கண்ணில் தெரியும் கோபம் சிற்பியின் கைவண்ணமா அல்லது நமது பிரமையா என புரியவில்லை. அதிலிருந்து விடுபடுவதற்குள் இடதுபுறமிருக்கும் நீண்ட பிரகாரம் நம்மை அழைக்கிறது. உலகின் மிகப்பெரிய கோவில் பிரகாரம் என வர்ணிக்கப்படும் இந்த பிராம்மாண்டமான பிரகாரத்தில்1200க்கும் மேற்பட்ட தூண்கள். மிஷினில் தயாரித்து ஒர்நேர்கோட்டில் நிறுத்தபட்டதை போல நிற்கிறது. அத்துணையும் தனிமனிதர்கள் தங்கள் கைகளினால் உருவாக்கிய படைப்புகள் எனபதை நினைக்கும் போது அதன் நேர்த்தியின் பின்னே இருக்கும் நேர்மையான உழைப்பு புரிகிறது.
உயரமான பிரகாரமாகயிருப்பதால் நல்ல வெளிச்சத்தில் அந்த கல்தூண்கள் பளீரென தெரிகிறது. ஒளியும் நிழலும் ஒளிந்து விளையாடுவதை ரசித்துகொண்டு வந்ததில் மேற்கூறையிலிருக்குக்கும் அழகான வண்ணங்களில் மலர் ஓவியங்களைப் பார்க்க தவறியதை நண்பர் சொன்னபின்தான் கவனிக்கிறோம். கழுத்து வலித்தாலும் எழுதிய ஒவியனின் வலியை நினைத்த் வினாடியில் நம் வலி மறந்துபோகும் அத்துனை அழகு. பிரகாரத்தின் இறுதியில் இராமநாதபுர அரசர் முத்துராமலிஙக் சேதுபதியின் சிலை. அதன் கீழ் தூண்களில் யாளிகளும் அவற்றின் கீழ் மிருகங்கள்.பட்சிகள். தாவரங்கள்.
கூறைக்கொட்டகையாகயிருந்த, ராமர் வழிபட்ட இடத்தை பெரிய சிவ லிங்கத்துடன் கோவிலாக்கி வழிபட 1153ம் ஆண்டு தலைமன்னாரிலிருந்து மன்னர் பரகிராமபாகு எனற இலங்கை அரசன், படகில் கற்தூண்களை கொண்டுவந்து ஒரு சிறிய கோவிலை ராமநாத அரசர் சேதுபதி அனுமதியுடனும், உதவியுடனும் நிறுவியதாகவும் பின்னாளில் சேதுபதி அரசபரம்பரையினரின் வாரிசுகள் தொடர்ந்து கோவிலை பிரம்மாண்டமாக நிர்மாணித்ததாகவும் வரலாறு சொல்லுகிறது. ஆனால் ராஜராஜசோழனையும், திருமலை நாயக்கரை அறிமுகப்படுத்தும் வரலாற்று பாடங்கள் பள்ளி மாணவர்களுக்கு இன்றும் இந்த பிரமாண்ட படைப்பினைப் பற்றிச் சொல்லாததின் மர்மம் புரியவில்லை.
52 பாடல்பெற்ற ஸ்தலங்களில் 7வது இடத்தில் மதிக்கப்படும் இந்த கோவிலின் பெருமைகளை திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் போற்றியிருக்கிறார்கள். இந்தியாவின் பல பாகங்களில் பரவியிருக்கும் 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றான இந்தத் தலம் பற்றி அதிகம் அறிந்திருப்பவர்கள் நம்மைவிட வட இந்தியர்கள் என்பது இங்கு வரும் கூட்டத்தைப் பார்க்கும்போதும் அவர்கள் பேசுபவற்றை கேட்கும்போதும் புரிகிறது.
பெரிய பிரகாரங்களில் பல இடங்களில் தீர்த்தங்கள் என அழைக்கபடும் சிறு சிறு 22 கிணறுகள். இவற்றை தவிர கடலிலும் கிணற்றின் வடிவில் சில தீர்த்தங்கள். மொத்தம் 36. தீர்த்தங்கள். அனைத்திலும் மிக சிரத்தையுடன் குளித்தபின் சன்னதிக்கு பிராத்தனைக்கு வருகிறார்கள் பலர். நேபாளமன்னர்களின் குடும்ப கோவிலாகவும் அந்த குடும்பத்தின் எந்த வைபவமும் இந்த கோவிலின் ஆசி, பிரசாதங்களுடன் தான் நடைபெறுகிறது என்ற செய்தி அறிந்து ஆச்சரியப்படுகிறோம்.
கோவிலின் வெளியே அருகிலிருக்கும் கடல் நாம் ஒரு தீவில் இருப்பதை நினைவுபடுத்துகிறது. அதிக ஆழமில்லாத அந்த கடல் பகுதியில் இந்த தேசத்தின் பல பகுதிகளில் வாழும் இந்துக்கள் தங்கள் பெற்றோர், முதாதையர்களுக்கு இறங்கி நின்று தர்ப்பணம் என்று அழைக்கபடும் அஞ்சலியை செலுத்துகிறார்கள். எண்ணற்ற இந்திய மொழிகளின் தொனியில் சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதை கேட்கமுடிகிறது. இங்கு செய்யும் இந்த புனித காரியத்தால் அவர்களது ஆத்மாக்கள் சாந்தியுடன் சொர்க்கம் அடையும் என்ற ஆழந்த நம்பிக்கை. வருபவர்களில் பலர் தங்கள் சிறுவயது குழந்தைகளுடன் வந்திருக்கும காட்சியை கண்டபோது அந்த பிஞ்சுமனங்களில் இப்படிவிதைக்கபடும் நம்பிக்கை விதைகள் தான் இந்து மதம் என்ற அழியாத விருட்சம் பல ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து வளர்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது.
ராமேஸ்வரத்தில் இந்தியாவின் அத்தனை வகை உணவு வகைகளும் கிடைக்க்கிறது. கைடுகள் சரளமாக பல மொழிகளில் அசத்துகிறார்கள். மொழிகளை கற்றுக்கொண்ட திறமையில் பாதியையாவ்து நேர்மையை கற்று கொள்ளச் செலவிட்டிருக்கலாம். தமிழ்நாட்டைப் பற்றிய தவறான எண்ணங்களை எளிதில் ஏற்படுத்தும் விஷயங்களை எந்த கவலையும் இல்லாமல் இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு 60 ஆயிரத்திற்கு மேல் சுற்றுலாப் பயணிகள் வருவதாக கணக்குச் சொல்லும் துறை இதற்கும் நகரின் தூய்மைக்கும் எதாவது செய்யக்கூடாதா என்ற ஆதங்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
ராமேஸ்வரம் நகரைவிட்டு வெளியே வரும் நம்மை நின்று கவனிக்க சொல்லுகிறது பாம்பன் பாலம். கப்பல்கள் வந்தால் திறந்துகொள்ளும், ரயில்வரும்போது மூடிக்கொள்ளும் தண்டவாளங்களுடன் இரண்டு கிலோ மீட்டருக்கு நீண்டு நிற்கும் இந்த பாலம் ஒரு இஞ்சினியரிங் சாதனை. உலகிலேயே இப்படிப்பட்ட பாலம் இது ஒன்றுதான். தனது 100வது பிறந்த நாளை ஆர்பாட்டம் இல்லாத இந்த கடலைப்போல அமைதியாக சமீபத்தில் கொண்டாடியது.
தொடர்ந்து மண்டபம் சாலையில் பயணிக்கும் நம்மை கவர்வது நீலக் கடலின் பின்ணணியில் காவிவண்ண முகப்புடன் கம்பீரமாக நிற்கும் அந்த மண்டபம். சிக்காகோவில் உலக பாராளுமன்ற கூட்டத்தில் உரை நிகழ்த்தியபின் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்து இலங்கை வழியே தாய் நாடு திரும்பிய விவேகானந்தர் முதலில் காலடி எடுத்தவைத்த இடம் இந்த ராமேஸ்வரம் கடற்கரை பகுதிதான். விவேகானந்தர் இந்தியா திரும்பும்போது முதன் முதலில் வரவிரும்பிய இடம் ராமநாதபுர சமஸ்தானம். காரணம் சிக்காகோ கூட்டத்திற்கு தனக்கு வந்த அழைப்பை தன்னைவிட தகுதி வாய்ந்தவர் என விவேகானந்தருக்கு அளித்து பயணத்திற்கு பணம் மற்றும் பல உதவிகளைச் செய்தவர் ராமநாத சமஸ்தானத்தின் மன்னர் பாஸ்கர சேதுபதி.
1897 ஜனவரி 26ல் இலங்கையிலிருந்து ஒரு நீராவிப்படகில் பயணித்து பின் ஒரு சிறு படகில் கரையை அடைந்த விவேகானந்தரை வரவேற்க மக்களுடன் காத்திருந்த மனனர் படகின் அருகே ஒருகாலை மடக்கி மண்டியிட்டு தன் கைகளில் விவேகானந்தரின் பாதத்தை பதித்து இறங்க வேண்டுகிறார். மிக லாவகமாகக் குதித்து அதை விவேகானந்தர் தவிர்த்து இறங்குகிறார். மக்கள் சார்பில் நடைபெறும் பெரிய விழாவில் வரவேற்பு பத்திரம் வாசித்து அளிக்கப்படுகிறது. மன்னரே மண்டியிட்ட அந்த இடம் இன்று குந்தகால் என்று அழைக்கப்படும் ஒரு மீனவர்களின் குடியிருப்பு. அங்கு ராமகிருஷ்ண மிஷனும் தமிழகச் சுற்றுலாத்துறையினரும் இணைந்து 1 கோடி யில் ஒரு நினைவு மண்டபத்தை எழுப்பியிருக்கிறார்கள். கவருகிறது.
அமைதியான அழகான கடற்கரையில் மண்டபத்தின் உள்ளே கம்பீரமாக நிற்கும் விவேகானந்தர், பக்க சுவர்களில் படங்களுடன் அவரது செய்திகள் ஒரு சின்ன அருங்காட்சியகம், பிரார்த்தனைக் கூடம் இவற்றுடன் மன்னர் பாஸ்கர சேதுபதியின் சிலையும். அந்த இடத்தில் வாசித்தளிக்கபட்ட வரவேற்புரையையும், அதற்கு விவேகானந்தர் ஆற்றிய நீண்ட ஆங்கில சொற்பொழிவையும் வைத்திருக்கிறார்கள். அதில் நம்மை கவரும் இந்த பகுதி:
“மதிப்பிற்குரிய மன்னருக்கும் அன்பான ராமநாதபுர மக்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி. உங்களது உணமையான அன்பை புரிந்து கொள்ள அன்பு மனக்களை உணர எனக்கு மொழி அவசியமில்லை. ராமநாத மன்னரே, இந்த எளியவனால் மேலை நாடுகளில் நமது மதத்திற்கு எதாவது செய்ய முடிந்திருந்தால், நம்மக்களிடம் இதுவரை அறியப்படாத பொக்கிஷமான நம் மதங்கள் பற்றிய உணர்வை தூண்ட முடிந்திருந்தால், நமது மதங்களின் பெருமையை மக்கள் உணர எதாவது செய்ய முடிந்திருந்தால் அந்த பெருமை அனைத்தும் உங்களையே சேரும். அமெரிக்கா போகும் எண்ணத்தையும், அதற்கு அத்தனை உதவிகளையும் செய்து தொடர்ந்து பயணம் செய்ய வற்புறுத்தியவர்கள் நீஙகள். நிகழப்போவதை அறிந்து என்னை கைபிடித்து அழைத்து சென்று தொடர்ந்து உதவியிருக்கிறீர்கள். அதனால் என் பயண வெற்றியின் சந்தோஷத்தை தாய்நாட்டில் முதலில் உங்கள் மண்ணில் காலடிவைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ”
காசியில் துவங்கும் புனித யாத்திரை ராமேஸ்வரத்தில் முடிய வேண்டும் அல்லது காசி சென்ற பலன் கிடைப்பதில்லை என்பது இந்துக்களின் நம்பிக்கை. ராமர் கால்பட்ட, விவேகானந்தரை வரவேற்க மன்னன் மண்டியிட்ட, அந்தமேதை கால்பட்ட இந்த பூமியில் நம் தடங்களையும் பதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி சந்தோஷப்படுகிறோம்.
நன்றி
அருமையான கட்டுரை.
ஆழமான தகவல்கள் .
மிகுந்த நன்றி.
அன்புடன்,
ஸ்ரீனிவாசன்.
உலகின் அனைத்து மதங்களையும் வென்ற ஹிந்துத் துறவியை தாயகத்துக்கு வரவேற்க மண்டியிட்ட சேதுபதி மன்னர் பரம்பரை இன்று சாமானியர்கள்.
ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காட்டிக் கொடுத்து ராஜா பட்டமும் சர் பட்டமும் பெற பிரிட்டிஷ் ராணி முன் மண்டியிட்ட அண்ணாமலைச் செட்டியாரின் பேரன் சிதம்பரம் இன்று சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர்.
காலத்தின் கோலம்.
//1. உலகின் அனைத்து மதங்களையும் வென்ற ஹிந்துத் துறவியை தாயகத்துக்கு வரவேற்க மண்டியிட்ட சேதுபதி மன்னர் பரம்பரை இன்று சாமானியர்கள்.
ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காட்டிக் கொடுத்து ராஜா பட்டமும் சர் பட்டமும் பெற பிரிட்டிஷ் ராணி முன் மண்டியிட்ட அண்ணாமலைச் செட்டியாரின் பேரன் சிதம்பரம் இன்று சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர்.
காலத்தின் கோலம்.
//
இல்லை அஞ்ஜன் குமார்
சேதுபதி மன்னர் ம்ண்டியிட்டதை படித்து அவரை நினைத்து சிலரது கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டொடி இருக்கும்
சிதம்பரத்தின் மீது எச்சில் தூப்பாத இந்தியர்கள் கிடையாது என்கிற நிலைமையில் தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிரார்.
காலம் நன்றாக தான் வேலை செய்கிறது போலிரிக்கிறது
சார், என்ன சார் விவரம் இல்லாம சொல்ற மாதிரி இருக்கு. இந்த விசயங்களை எல்லாம் குழந்தைகளுக்கு கொண்டு போனால் எல்லாரும் உஷார் ஆகிடுவார்களே அப்புறம் எப்படி இந்துக்களை கேலி கிண்டல் பண்றது.
நன்றி. தமிழக அரசுகள் திருக்கோவில்களையும் அவைகள் உள்ள ஊர்களையும் சரியாக பராமரித்தாலே நிறைய வருமானம் கோவில்களுக்கும் அரசுக்கும் ஏற்படும்.
ஆனால் துரத்ருஷ்டவசமாக கோவில்களின் சொத்துக்களை சரியாக பராமரிக்காமலும், கோவில்களின் ஊழியர்களுக்கு சரியான வருமானம் கொடுக்காமலும், கோவில்களுக்கு என அலுவலகம் அமைத்து அதில் உள்ளவர்களுக்கு வருமானமும், வருடாவருடம் ஊதிய உயர்வும் கொடுத்தால் அவர்கள் எவ்வாறு கவனிப்பார்கள்?.
தமிழகத்தின் பெருமை கோவில்களில் தான் உள்ளது. கோவில்கள் நம் கலாச்சாரத்தை கட்டிக் காக்கும் பணியை செவ்வனே செய்து வருகின்றன.
நன்றி>
இந்தியாவில் அரசுகள் மாற்று மதத்தினருக்கு சலுகைகளையும் அவர்கள் வெளிநாட்டிற்கு பயணங்கள் ( யாத்திரை என்ற பெயரில் பயணங்களையும் செய்கிறார்கள் ) செல்ல பண உதவிகளும் செய்கின்றன. ஆனால் இங்கு உள்ள திருத் தலங்களை அழிக்க மாற்று மதத்தினருக்கு உதவிகளும் செய்யப் படுகின்றன.
ஹிந்துக்கள் இனியும் உறங்கினால் தாங்காது.
ஒன்று படுவோம். உயர்வடைவோம்.
ராமநாத புற மன்னரும் மண்டியிட்டு தான் தனது ராஜ்யத்தை காப்பற்றிகொண்டார்.
ஆனால் அவர் இந்து மத தொண்டாற்றினார். அண்ணாமலை செட்டியாரும் இந்து விரோதியில்லை (பார்பன துவேஷம் கொண்டவர் என்று கூறுவார்கள்) சென்னையில் ஐயப்பன் கோவில் கட்டியதும் அவர் குடும்பம் தான்.
சிதம்பரம் அவர்களது குடும்பத்தின் கோடாலி காம்பு.
வேதம் தமிழில் இருந்தால் எனக்கு கொடுங்கள் படிக்க ஆவலாக உள்ளேன். நன்றி!
அன்புள்ள ராதாகிருஷ்ணன் ,
நான்கு வேதங்களும் சென்னை அலைகள் வெளியீட்டகத்தால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. முகவரி வருமாறு:-
அலைகள் வெளியீட்டகம்,
௨௫, தெற்கு சிவன் கோயில் தெரு,
கோடம்பாக்கம்,
சென்னை 600024
தொலைபேசி 044-24815474
நான்கு வேதங்களும் சேர்ந்து சுமார் 4000 ரூபாய்க்கு உள்தான் வரும். நான் யசுர் வேதம் மட்டும் வாங்கிப்படித்தேன். அதன் விலை 425 ரூபாய்
இந்திய ரிசர்வு வங்கியின் .முன்னாள் துணை கவர்னர் ஆகப்பணி புரிந்த திரு எம் ஆர் ஜம்புநாதன் அவர்களின் அறிய முயற்சியாலும், தருமபுரம் ஆதீன முன்னாள் மகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பொருளாதரவுடனும், 11.08.1938 லே வெளிடப்பட்டதாகும். அவற்றை தற்போது அலைகள் வெளியீட்டகம் மறுபதிப்பு செய்துள்ளது.
திரு எம் ஆர் ஜம்புநாதனின் முன்னுரை நூலின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்துவும் அவசியம் படிக்கவேண்டிய முன்னுரை அது.
வாங்கிப்படித்து மகிழுங்கள். உங்கள் வாழ்வு உயரும்.
அன்புள்ள
சேவற்கொடியோன்
எனது முந்தைய கடிதத்தில் கதவு எண் தமிழில் டைப் ஆகி விட்டது. பல அன்பர்களுக்கும் தமிழ் எண்கள் புரியாது என்பதால் முகவரியை மீண்டும் ஆங்கில என்னுடன் கீழே கொடுத்துள்ளேன்
அலைகள் வெளியீட்டகம்,
25, தெற்கு சிவன் கோயில் தெரு,
கோடம்பாக்கம்,
சென்னை 600024
தொலைபேசி 044-24815474
/////////Radhakrishnan on December 15, 2011 at 10:40 pm
வேதம் தமிழில் இருந்தால் எனக்கு கொடுங்கள் படிக்க ஆவலாக உள்ளேன். நன்றி.///////////
சகோதரர் ராதாகிருஷ்ணன் அவர்களே. கீழுள்ள லிங்கில் நீங்கள் ருத்ரம் சமகம் மற்றும் அகமர்சன சுக்தம் தமிழில் விளக்கத்துடன் பெறலாம். கிரி டிரேடிங் கடைகளில். பதினெண் புராணங்கள் தமிழில் கிடைக்கிறது. உபனிஷத்துகளும் தமிழில் கிடைக்கிறது.
https://www.pradosham.com/pdf/aghamarshanasuktamtamil.pdf
https://www.pradosham.com/chamakamtamil.php
நன்றி அன்புள்ள சகோதரர்களே நன்றி!,( ராமராஜ் ராதாகிருஷ்ணன் .திண்டுக்கல்)
உணர்வுப்பூர்வமான நல்ல கட்டுரை.
தனுஷ்கோடி சென்று வந்ததை மீண்டும் நினைவு படுத்துகிறது.
ரமணனுக்கு நன்றி
-சேக்கிழான்
அஞ்சன் குமரன் அவர்களின் ஆதங்கம் நம் அனைவருக்கும் உண்டு அதில் சந்தேகமென்ன?