அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்

ன்னிரெண்டு ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் ஒன்றான பீமாஷங்கர் சிவாலயம், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் அருகே உள்ளது. ஒலி மாசு, வளி மாசு படிந்த நகர வாசனை துளியுமின்றி 1034 மீட்டர் உயரத்தில் பசுமை சூழ, பனியும் சூழ பீமாஷங்கர் வனப்பகுதியில் வீற்றிருக்கும் ஒரு எளிய மகா ஆலயம். ஆலயத்திற்கு அருகே சுமார் நூறு குடியிருப்புகள், ஐம்பது வணிக நிலையங்கள் தவிர மற்றவைகளெல்லாம் எண்ணிலடங்காப்  பெரிய மரங்கள், செங்குத்துப் பாறைகள், பல விலங்குள் வாழும் ஒரு தலமாகக் காட்சியளிக்கிறது. மகாராஷ்டிரத்தின் சுற்றுலாத் தலமாகயிருந்தாலும் நவீன வசதியுடன் தங்கும் விடுதிகளைச் சுமார் 40 கி.மீ. தொலைவில் தான் காணமுடியும். இப்பகுதி இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதாலும், உயரமான இடத்தில் இருப்பதாலும் இயற்கை எழில் கொஞ்சி விளையாடுவதைக் காணாமல் திரும்ப முடியாது. சொந்த வாகனத்தில் செல்பவர்கள் கோயில் அருகே 40 கி.மீ. வரை எந்த பெட்ரோல் நிலையமும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு பயணிக்கலாம்.  இந்த மலை புனேவின் வடமேற்குத் திசையில் மேற்குத் தொடர்ச்சியில்{ஸஹ்யாத்ரி} சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ளது. வனஆர்வலர்கள், மலையேற்றம் செய்பவர்கள், இயற்கைப் பிரியர்களாகயிருந்தால் உங்கள் குறிப்பேட்டில் குறித்துக் கொள்ள வேண்டிய தலம்.

தினமும் புனேவிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுமார் இரண்டு மணி நேரத்தில் இந்த திவ்யஸ்தலத்தை வந்தடையலாம். தனியார் போக்குவரத்திலும், இருசக்கர வாகனத்திலும், எண்ணற்றோர் வந்து செல்கிறார்கள். மலைப்பாதை, ஹேர்பின் வளைவுகளாலும் கற்கள் நிறைந்த சாலையாகவும் நம்மை வரவேற்கும். வழியெங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று நமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தப்படுகிறது; மனிதச் சேட்டைகளால் விலங்குகளுக்கு வைக்கப்படும் ஒரு எச்சரிக்கையாகக் கூடயிருக்கலாம். சிவராத்திரி நாட்களில் பயணம் நெரிசலுடன் இருக்கும், மற்ற நாட்களில் எளிதாக பயணிக்கலாம். பனிக் காலங்களில் அதிகாலையில் பனி சூழ்ந்து கொள்வதால் வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் செல்லமுடியாது. சூரிய ஒளி நன்கு படர்ந்த பின்னரே பயணம் சிறப்பாகயிருக்கும். கோயில் அருகே செல்போனை அணைக்க வேண்டியதில்லை, ஏனெனில் டவர்கள் இல்லாத இடத்தில்தான் நாம் நிற்கின்றோம்.

தோ வந்துவிட்டோம், ஆலயத்தின் முகப்புப்  பலகை நம்மை வரவேற்கிறது. கம்பீரமான ஒரு மணி கண்ணைப் பறிக்க, அகலமான கற்களாலான படிக்கட்டுகள் நம்மைக் கோயிலை நோக்கி அழைத்துச் செல்கின்றன. வடஇந்திய கட்டிடக் கலையில் கட்டப்பட்ட கோபுரத்தைப் பார்த்தவுடன் ஒரு பரவசம் நம்மில் குடிகொள்வதை உணரலாம். சதுரமான கூம்பு வடிவக் கோபுரம் சிலைகள் அதிகமின்றி எளிமையாகக் காட்சி தருகிறது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டாலும், காலை எட்டு மணிக்குப் பிறகு தான் வெளியாட்கள் வரத் தொடங்குவார்கள். கூட்டமின்றி எளிதில் கருவறையில் சுயம்பு லிங்கமான பீமாஷங்கரை தரிசிக்கமுடியும். கருவறைக்குள்ளேயே தீர்த்த நீர் எடுத்து அபிஷேகம் செய்யும் விதத்தில் நீர் பரிவர்த்தனை அமைக்கப்பட்டுள்ளது. லிங்கத்தின் மீது கவசமிட்டே எல்லாப்  பூசைகளும் தரிசனங்களும் நடக்கின்றன. பகல் பன்னிரெண்டு மணி வாக்கில் மகாபூசைக்காக சில நிமிடங்கள் மட்டும் கவசம் இல்லாமல் பீமாஷங்கரை தரிசிக்க முடியும். கருவறையின் உட்புறம் ஒரு கோள வடிவாகவும், வெளிப்புறத் தளத்தை விட கொஞ்சம் பள்ளமாகவும் இருக்கும். லிங்கத்தின் மீது அபிஷேக பாத்திரத்தின் மூலம் நீர் சொட்டிக்கொண்டே இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. நம்மூர் கோயில்கள் போலன்றி ‘காட்சிக்கு எளியவனாய்’ கருவறையில் சுவாமியைத் தொட்டுத்  தரிசித்து வேண்டி வரலாம். பல விதமான கட்டண பூசைகளும் அங்குள்ள பூசாரிகள் செய்கிறார்கள்.

ருவறையின் வெளியே கால பைரவரையும், நேர் எதிரே சனி பகவானையும் தரிசிக்கலாம். இத்தலத்தில் கடல் ஆமை பிரசித்தி பெற்றதாகும். வாயிலின் எதிரே நந்தியும் அதன் பிறகு கடலாமையும் மூலவரைப் பார்த்தவாறு காட்சித் தருகின்றன. கருவறையின் முன் பெரிய முற்றமும், மக்கள் கூட்டம் அதிகமானால் கட்டுப்படுத்த கம்பி வேலிகளும் எதிரே பெரிய மணியும் உள்ளன. தற்போதைய வடிவம் நானா பட்னாவிஸ் என்ற மன்னரால் எழுப்பப்பட்டதாகும்; மேலும் சிவாஜி மகாராஜாவும் பல புனரமைப்புகள் செய்துள்ளார். கோயில் அருகே ஒரு கிணறும் தண்ணீர்க் குழாய்களும் உள்ளன. அந்தக் கிணறு அபிஷேக நீர் பிடிக்கும் இடத்தைப் போல மக்கள் பயன்படுத்துமாறு இல்லை. அருகிலுள்ள சீதாராமபாபா ஆஷ்ரமத்தில் ஷீரடி சாய்பாபா, ராமர், லெக்ஷ்மனர், கிருஷ்ணர், துர்கை, விநாயகரைத் தரிசிக்கலாம். அதன் அருகே தான்தோன்றி நாகபாணீ தீர்த்தக் குளமும் உள்ளது.  அருகில் பூஜை பொருட்கள் விற்கும் சில கடைகளும், ஒரு தானியக்க பணவழங்கியும் , இளைப்பாறத் திண்ணைகளும் உள்ளன. கோயிலுக்கு வரும் பாதையில் ஒரு அனுமான் கோவிலும் உள்ளது.

ந்தப்  பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பீமா ஆற்றின் தோற்றவாய்ப்  பகுதியில் குப்த் பீமாஷங்கர் லிங்கத்தைக் காணலாம். பொதுவாக பக்தர்கள் இங்கு வருவது கடினம்; காரணம், கரடுமுரடான ஒற்றையடிப் பாதை, உச்சி வெயில் நேரத்தில் உஷ்ணமான கற்கள் மற்றும் ஊர்வனகள். இங்கே சில வழிகாட்டிகள் உள்ளனர், அவர்களைப் பிடித்தால் புதியவர்கள் சென்று வரலாம். இதற்குமுன் சென்ற, நம்மவர்கள் போட்ட பிளாஸ்டிக் குப்பைகள் ஆங்காங்கே காணக்கிடைப்பது நமது துரதிருஷ்டமே. அதைத்தவிர மற்ற எந்தவித மனிதத் தடங்கல்கள் துளியும் இல்லாத ஒரு பாதை – இயற்கை போட்ட பாதை. மழைக்காலத்தில் நீர் கொண்டு சென்ற பாதைதான் அது. பல இடங்களில் சொரசொரப்பான கற்கள்தான் காணமுடியும். சில இடங்களில் மரவேர்கள் சடையென சங்கமித்திருப்பதையும் காணலாம். இருபுறமும் ஆஜானுபானுவாக பெரிய மரங்கள், சிதிலமடைந்த மரக்கட்டைகள் பாதையில் விழுந்தும் கிடக்கும். ஆம், குரங்குகள் பார்க்கலாம், மரங்கொத்திகள், செந்நிற அணில்கள் கட்டாயம் பார்க்கலாம். இவ்வனத்தில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் சிறுத்தையும் உள்ளது ஒரு சிறப்புச் செய்தி. இந்தக் காட்டுவழியில் சாக்ஷி விநாயகர் கோயிலும் உள்ளது. பீமா நதியின் மூலத்தை அடைந்தவுடன் சற்று செங்குத்துப் பாறையின் கீழ் இறங்கிக் கொண்டால், குப்த் பீமாஷங்கரை நெருங்கலாம். அருவியின் கீழ் அழகாக வீற்றிருக்கும் லிங்கத்தைக் கண்டவுடன் காட்டுவழிப் பயணக் களைப்பு தீர்ந்துபோகும்.

லகத்தின் தகவல் தொடர்புகள் ஏதுமில்லாத, மனிதச் சிதைப்புகள் ஏதுமில்லாத, முற்றிலும் பிறந்த மேனியுடன் இருக்கும் இந்தப் பகுதியில், நாமும் மனச் சஞ்சலங்கள் ஏதுமின்றி பரமானந்தத்துடன் பயணிப்பது ஒரு தெய்வீக அனுபவத்தைத் தரும்.    முன்பணம் கூட வாங்காமல் பொருட்களைத் தந்த பூக்கடைக்கார அம்மா, மற்றவருக்காக அடிகுழாயில் தண்ணீர் அடித்த அந்த வாலிபர், இழிவு பார்க்காமல் கோயில் முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருந்த அந்த அந்தணர், காட்டுவழியே குப்த் லிங்கத்திடம் அழைத்துச் செல்லும் பொக்கைவாய் தாத்தா, சிநேகமுடன் வழி சொல்லும் காட்டுவழியே சுள்ளி கொண்டு வரும் சகோதரிகள் என மனதில் நிற்கும் மனிதர்கள் என்று எங்கள் பயணம் நிறைவு பெற்றது.

~~~~0~~~~

5 Replies to “அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்”

 1. “பரமயோகி மாயோகி பரியரா ஜடா சூடி பகரொணாத மாஞானி பசுவேறி” யாகிய சங்கரனைக் கற்கோயிகளிற் காட்டிலும் பீமாசங்கர் போன்ற இயற்கையான திருக்கோயில்களில் தரிசித்து வழிபடல், திருக்கயிலையில் அவரிருந்த கோலத்தைக் கண்டதைப் போன்ற மகிழ்வளிக்கும். வடநாட்டுச் சிவாலயங்களில் வழிபடும் பேறு எனக்குக் கிட்டவில்லை. அக்குறையைத் தமிழ் இந்துவில் வரும் இதுபோன்ற புனிதப் பயணக் கட்டுரைகள் நிறைவு செய்கின்றன. நன்றி

 2. ஸ்ரீ பீமா சங்கர் ஜோதிர் லிங்க ஆலய யாத்திரை கட்டுரை வாசித்து மிகவும் மகிழ்ந்தேன். கட்டுரையாளர் இறைவனை அனைவரும் தொட்டு வணங்கி வழிபடும் வாய்ப்பு அங்கு இருந்ததாக கூறுகிறார். அங்கு மட்டுமல்ல வட நாடு முழுதும் அப்படித்தான் உள்ளது.நம் தென்னகத்திலும் திருநாவுக்கரசர் அடிகள் காலத்தில் அப்படித்தான் இருந்தது. திருவையாற்றுப்பதிகத்தில் அப்பரடிகள் போதொடு நீர் சுமந்தேத்தி புகுவார் அவர்பின் புகுவேன் என்று பாடுவது இதனைத்தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. இது எப்படி மாறியது ஏன் மாறியது. அது சரிதானா என்பதே ஆய்வுக்கும் சிந்தனைக்கும் உரியது.
  சிவஸ்ரீ. விபூதிபூஷன்

 3. பின்னுட்டங்களை படிக்க முடியாதபடி மறைத்து இருக்கின்றன அதில் வரும் மற்ற விளம்பரங்கள் . படிக்கும்படி ஏற்பாடு செய்யவும்

 4. அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே யுரியன… பெரிய புராணம்

  தெரிந்துணரின் முப்போதும்
  செல்காலம் நிகழ்காலம்
  வருங்கால மானவற்றின்
  வழிவழியே திருத்தொண்டின்
  விரும்பிஅர்ச் சனைகள்சிவ
  வேதியர்க்கே யுரியனஅப்
  பெருந்தகையார் குலப்பெருமை
  யாம்புகழும் பெற்றியதோ.

 5. திரு ராமேஷ் அவர்கள் அர்ச்சனைகள் சிவாச்சார்யார்களுக்கே உரியன என்று தெய்வ சேக்கிழார் கூறுவதை சுட்டுகிறார். சிவாகமங்கள் சிவபெருமானை அந்தணர்களாகிய அர்ச்சகர்கள் மட்டும் தொடவேண்டும் என்று சொல்கின்றனவா. அர்ச்சனை செய்வதால் அவர்கள் அர்ச்சகர் எனப்படுகின்றனர். அர்ச்சகர்கள் இருக்கவே இல்லை என்று யாரும் சொல்லவில்லை. திருவையாற்றில் இறைவனை அடியவர்கள் நேரடியாகத்தொட்டு நீராட்டி மலரிட்டு வழிபட்டதை அப்பர் அடிகள் கூறுகிறாரே. திருஞானசம்பந்தர் பெருமானும் திருவிடை மருதூர் ஆலயத்தில் அடியார்கள் குடம் குடமாக பெரிய பெருமானாகிய மகாலிங்க சுவாமிக்கு நீராட்டினர் என்கிறார். அந்த நேரடி வழிபாட்டுமுறை ஏன் இன்று தென்னகத்தில் இல்லை என்பதே அடியேனின் கேள்வி. சேக்கிழாருக்கு முந்தையவர்கள் அப்பரடிகளும் சம்பந்தர் சுவாமிகளும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
  சிவஸ்ரீ. விபூதிபூஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *