அழிந்து வரும் அபூர்வ வடுமாங்காய்

வடுமாங்காய் வரத்தொடங்கிவிட்டது. உடுமலைப்பேட்டை , பொள்ளாச்சி ,பழனி ஆகிய நகரங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து வரத்து அதிகமாகிவிட்டது. வடுமாங்காய் சென்னைக்கும் படையெடுத்துவிட்டது .

உடுமலை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலையில் திருமூர்த்திமலை மற்றும் அமராவதி வனப்பகுதிகளில் வடுமாங்காய் மரங்கள் அதிகளவில் உள்ளன.

இந்த மரங்கள் மலையில் இருந்து கீழ்நோக்கி பாயும் ஓடைகள், சிற்றாறுகளின் ஓரத்தில் மட்டுமே வளர்கின்றன. எனவே, இதை தண்ணீர் மாங்காய் என்றும் அழைக்கின்றனர்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் தான் இதன் அறுவடைக் காலமாகும்.முன்கூட்டியே வருவதும் உண்டு.

திருமூர்த்திமலை, கோடந்தூர், தளிஞ்சி, குருமலை, பெரியகுளம், பூச்சி கொட்டாம்பாறை, மாவடப்பு, குழிப்பட்டி பகுதிகளில் அதிகமான மரங்கள் உள்ளன.

உடுமலை பகுதி மட்டும் அன்று;, ஊறுகாய்க்குப் பயன்படுத்தப்படும் வடுமாங்காய் பெரியகுளம் பகுதியில் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைப்பகுதிகள், சுருளி, கம்பம்மெட்டு மற்றும் போடிமெட்டு மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் கிடைக்கிறது.

சிறிய அளவு கொண்ட இந்த மாங்காய் ஊறுகாய்க்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் தூக்கலான வாசனை மாங்காய் பிரியர்களைக் கவர்ந்திழுக்கிறது.

வடு மாங்காய், நம் நாட்டில் அழிந்து வரும் ஒரு பயிர் இனம் . வடுமாங்காய் சாகுபடி செய்யப்படுவது கிடையாது. வனப்பகுதிகளில் மானாவாரியாக விளையக் கூடியது. இவ்வகை மாங்காய்களைப் பழமாக மாற்றி சாப்பிட முடியாது. ஊறுகாய்க்கென பிரத்தியேகமானது.

பெங்களூருவில் உள்ள தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் வடுமாங்காய் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் மலையடிவாரங்களில் கிடைக்கும் வடுமாங்காய் இலை, குச்சி போன்றவற்றைப் பெங்களூருவில் இருந்து வந்திருந்த தேசிய தோட்டக்கலை விஞ்ஞானி சங்கரன் சேகரித்து சென்றுள்ளார்.

வடுமாங்காய் மிகவும் அபூர்வமானது. இவ்வகை மாங்காய்கள் வனப்பகுதிகளிலும், மலையடிவாரங்களிலும் மானாவாரியாக விளையும். சாகுபடி செய்வது கடினம். இதனுடைய பூர்வீகம் என்ன என்பது பற்றிய மரபணு ஆராய்ச்சி ஒன்றை தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மேற்கொள்ள உள்ளது.

வடுமாங்காய் இனம் அழிந்து வரும் இனமாக இருப்பதால், இவ்வகை மா சாகுபடியைக் காப்பாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது,

“மா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்” என்பது பழமொழி. மாவடு எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. காயும் சரி, அதன் நீரும் சரி மணமும் சுவையும் அபாரமானது. கட்டித் தயிரும் ,மாவடுவும் சரியான அற்புதப் பொருத்தம்.


சரி, மாவடு குறித்த காளமேகப்புலவரின் பாடலுக்கு வருவோம்.

திங்க ணுதலார் திருமனம்போ லேகீறிப்
பொங்குகட லுப்பைப் புகட்டியே – எங்களிட
ஆச்சாளுக் கூறுகா யாகா மலாருக்காக்
காய்ச்சாய் வடுகமாங் காய்.

பதம் பிரிப்பு:

திங்கள் நுதலார் திரு மனம் போலே கீறிப்
பொங்கும் கடல் உப்பைப் புகட்டியே – எங்களிடம்
ஆச்சாளுக்கு ஊறுகாய் ஆகாமல் ஆருக்காக்
காய்ச்சாய் வடுக மாங்காய்?

நேரடியான பொருள்:

வடுமாங்காயே, பிறை நிலா போன்ற நெற்றியைக் கொண்ட பெண்களுடைய அழகிய மனம் போலே உன்னைப் பிளவுபடுத்தி (கீறி), அதில் கடல் உப்பைப் போட்டு ஊறுகாயாக மாற்றவேண்டும். அதை நானும் என் தாயும் ருசித்துச் சாப்பிடவேண்டும், அப்படியில்லாமல் வேறு யாருக்காக நீ இந்த மண்ணில் பிறந்தாய்?

இப்பாடலுக்கு இரண்டாவதாக, கீழ்க்கண்டவாறு ஆன்மீகமான பொருளும் கூறுவர்.

பிறைநிலா போன்ற நெற்றி கொண்டவர் மகளிர். அவர்களின் மனம் புரண்டு புரண்டு பொங்கும் கடலலை போல விழும். உப்பை ஊட்டும். இதயமே! நீயும் அப்படித்தான் செய்கிறாய். எங்கள் இட-ஆச்சாள் (ஆத்தாள்) உமை. சிவபெருமானின் இடப்பக்கம் இருப்பவள். அவளுக்கு எங்கள் இதய மாங்காய் ஊறுகாயாக மலரவேண்டும். அப்படி அவளுக்காக ஊறும் காயாக மாறாமல் வெறும் காயாக இருக்கவா, இதய மாங்காயே! நீ காய்த்தாய் ?

(அக்காலப் புலவர்களில் கணிசமானவர்கள், பெண்களின் மனம் சஞ்சலமானது, பிளவுபட்டது என்பது போன்ற சில பொதுக் கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இப்பாடலில் காளமேகப் புலவரின் மாவடு உவமையும் அத்தகைய எண்ணப் போக்கிலிருந்தே வருகிறது என்ற புரிதலுடன் அதன் இலக்கியத் தன்மையைக் காணவேண்டும் – தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு).


மாவடு உண்ட மகாதேவர்:

நில வளமும், நீர் வளமும் செழித்தோங்கும் சோழ நன்னாட்டில் அமைந்துள்ள அற்புதத் திருத்தலங்களுள் ஒன்றாய் விளங்குவது தண்டலை நீணெறி. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் குருந்தை மரங்கள் காடு போல் காணப்பட்டதால் “குருந்தாரண்யம்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர் சோலைகள் நிறைந்ததால் “தண்டலை’ என்று பெயர் பெற்றது. தற்போது “தண்டலைச்சேரி’ என்று அழைக்கப்படுகின்றது. 63 நாயன்மார்களுள் ஒருவரான அரிவாட்டாயர்க்கு (தாயனார்) சிவகதி அளித்த பரமேஸ்வரன் குடிகொண்டருளும் அரும்பதி இதுவே.

தண்டலைச்சேரிக்கு கிழக்கே சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கணமங்கலம் என்னும் கிராமம். தற்போது இந்த ஊர் “கண்ணந்தங்குடி’ என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் “தாயனார்’ என்னும் சிவநேசர் வாழ்ந்து வந்தார். வேளாண்குலத் தலைவனாக விளங்கிய இவர் பெரும் செல்வந்தராய்த் திகழ்ந்தார்.

நாள்தோறும் செந்நெல் அரிசிச் சோறு, செங்கீரை மற்றும் மாவடு ஆகிய மூன்றினையும் சிவவேதியர் மூலமாக தண்டலை நீணெறியப்பருக்கு திருவமுது செய்வது இவரது வழக்கமாகும். பன்னெடுங்காலமாய் இத்தொண்டினை ஆற்றி வந்தார் தாயனார். “வறுமை வந்த போதும் நாயனார், தொண்டைத் தொடர்வார்’ என்பதனை உலகிற்கு உணர்த்த திருவிளையாடல் நடத்தினார் சிவனார்.

சிவ லீலையால் நாயனாரின் செல்வ வளம் தேய்ந்தது. இதனால் அவர் கூலிக்கு நெல்லறுக்கலானார். கூலியாகக் கிடைத்த செந்நெல்லை ஆண்டவனுக்கு அமுதாக்கினார். கார்நெல் அறுத்து அதற்குக் கூலியாகக் கிடைக்கும் கார்நெல்லை சோறு சமைத்து இவரும், இவரது துணைவியாரும் உண்டு வந்தனர்!

சிவபெருமானின் திருவிளையாடல் மேலும் தொடர்ந்தது. கார்நெல் கழனிகளையெல்லாம் செந்நெல் பயிராக்கினார் பரமனார். இதைப் பாக்கியமாகக் கருதி, தொடர்ந்து ஈசர்க்கு செந்நெல்லினை அமுது படைத்துவிட்டு பட்டினி கிடந்தார் “தாயனார்’ எனுமந்த நாயனார். அவருடைய மனைவி, கொல்லையில் விளையும் இலைக்கறிகளை சமைத்து கணவருக்கு உணவளித்தார். நாளடைவில் அதுவும் அற்றுப்போக, இருவரும் நீரை மட்டும் பருகி, வாழ்ந்து வந்தனர். இந்தச் சூழ்நிலையிலும் செங்கீரை, மாவடுவுடனான செந்நெல் சோற்றினை நீணெறிநாதருக்கு அமுதாக்கி வந்தார் தாயனார்.

ஓர் நாள் வழக்கம்போல் திருவமுதினை தயார் செய்து எடுத்துக் கொண்டு வயல் வழியே தாயனார் முன்னே செல்ல, அவரது துணைவியார் பின்னே வந்தார். பட்டினியாலும், சோர்வாலும் நடை தளர்ந்து, வயல் பரப்பினில் விழுந்தார் தாயனார். அவர் கொண்டு வந்த அமுதும் நிலத்தில் சிதறி விழுந்தது. இதைக் கண்டு மனம் பதைத்து, கண் கலங்கி வருந்தித் தவித்தார் தாயனார். எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்தனர் இருவரும்! பட்டினியால் உண்டான சோர்வை விட, இறைப் பணி தடைபட்டதே என்ற துன்பம் வாட்டி வதைத்தது தாயனாரை. “”இனி என் செய்வேன்? எப்படிச் செல்வேன் ஆலயத்திற்கு?” என்றெண்ணிய தாயனார், அடுத்த கணம் தனது அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்விட முற்பட்டார். அதற்கு முன் ஈசன் அவர் கரத்தைப் பற்றித் தடுத்தார். மறுகணம் மண் பிளவில் விழுந்த மாவடுவை இறைவன் கடித்திடும் ஓசை கேட்டது. உடன் அம்மையுடன் அப்பன் ரிஷபத்தின் மீது எழுந்து அருட்காட்சி நல்கினார். தாயனாருக்கும், அவரது மனைவிக்கும் முக்தியளித்து மறைந்தார்.

அரிவாளால் கழுத்தை அரிய முற்பட்டதால் அரிவாட்டாயனார் (அரிவாள் + தாயனார்) என அவரை உலகோர் இன்றளவும் போற்றுகின்றனர்.

(கட்டுரையாசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவு).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *