[இன்று வைகுண்ட ஏகாதசி. அனைவருக்கும் இனிய வைகுண்ட ஏகாதசித் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்]
திருவுடன் இணைந்த திருமாலாகிய இறைவனுக்குச் செய்யும் சேவையே வைணவத்தின் அடிப்படை. இறைவனுக்கு அடிமையாக இருப்பதையே வழியாகவும், குறிக்கோளாகவும் கொண்ட அற்புதமான சமயம் வைணவம். பரமனாகிய திருமால், ஞாலம் ஏழும் உண்டு உமிழ்ந்து காத்து ரட்சிக்கும் பரவாசுதேவன். அவன் இட்டவழக்காக கிடப்பதும், அவனுக்கு ஊழியம் செய்து களிப்புறுவதும், அவன் அடியார்க்கு அடியார்க்கு அடியாராகி சேவை செய்வதுமே வைணவர்களுக்குரிய இலக்கணம். அத்தகைய இலக்கணத்தின் தலைசிறந்த உதாரணமாக கோதை என்று பெயர் பெற்ற ஆண்டாள் விளங்குகிறாள்.
ஆண்டாள் இயல்பாகவே பெண்ணாக இருப்பதால், இறைவனைத் தன் காதலனாக எண்ணி அவனை காதலனாக நினைத்து கசிந்து உருகி பக்தி செய்ய முடிந்தது. இதைக் கண்ட மற்ற ஆழ்வார்களெல்லாம், எவ்வளவு எளிதாக பக்தி செய்து இச்சிறுபெண் கண்ணனை அடைந்து விட்டாள்! பெண்ணாக இருந்தால் இறைவனை எளிதாக அடைந்து விடக் கூடுமோ என்று எண்ணி ஆண்டாளை உதாரணமாகக் கொண்டு அவர்களும் பெண் பாவனையில் கண்ணனைக் காதலித்தல், ஊடல் கொள்ளுதல், பிரிந்து வருந்துதல், தூது விடுதல், மடலூர்தல் என்று விதவிதமாக நாயகி பாவத்தில் கண்ணனை பக்தி செய்து அனுபவித்தனர் போலும் என்று வேதாந்த தேசிகன் கோதா ஸ்துதியில் கவித்துவமாக விவரித்துள்ளார்.
பாவை நோன்பு இருந்து, பார்வதி அம்மையை வழிபடும் தொல்மரபைக் கடைபிடிக்கும் திருவாய்ப்பாடிப் பெண்களுடன் சேர்ந்து ஆண்டாளும், அவ்விரதத்திற்கு தேவையான “பறை” என்னும் வாத்தியத்தை கண்ணனிடம் பெற்று வருவோம் என்று மார்கழித் திங்கள் என்று துவங்கும் திருப்பாவையில் கூறுகிறாள். அதுவும் “நாராயணனே நமக்கே பறைதருவான்” என்று நமக்கே என்று ஏகாரம் போடுவதில் அவளது அசைக்க முடியாத நம்பிக்கை வெளிப்படுகிறது. அது ஏன் மார்கழி மாதத்தை முக்கியமாகக் கருதி மார்கழித் திங்கள் என்று ஆரம்பிக்க வேண்டும்? இறைவனிடம் பக்தி செய்ய எல்லா நாளும் உகந்த நாள் தானே எனில் மார்கழி என்பதால் ஏதோ சிறப்பு என்று எண்ணி ஆண்டாள் பாடவில்லை ஆண்டாள் பாடியதாலேயே மார்கழிக்கு சிறப்பு என்று உரையாசிரியர்கள் கூறுவர். கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று மார் தட்டிச் சொன்ன மாதம் என்பதாலும் ஆண்டாள் மார்கழித் திங்கள் என்று துவங்கி இருக்கலாம்! வாசுதேவனுக்காக தன் எல்லாவற்றையும் தந்து விட்டு, எந்த சுய நினைவும் இன்றி, எளியவர்களாக அவன் பின்னாலேயே வந்து விடுகிறோம் என்பதை
“பையத் துயின்ற பரமனடி பாடி,
நெய்யுண்ணோம், பாலுண்ணோம்… நாட்காலே நீராடி
மையிட்டேழுதோம், மலரிட்டு நாமுடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்…
என்று பக்தர்கள் எதை செய்யவேண்டும் எதை செய்யக் கூடாது என்று விளக்குகிறாள். இதைத் தீர்மானம் செய்து கொண்ட பின்பே ஓங்கி உலகளந்த உத்தமனைப் பாடப் புகுகிறாள். கருணையே வடிவான கரிய செம்மலான நாரணன் எடுத்த திருவிக்கிரமாவதாரத்தில், நல்லவன், கேட்டவன், சிறியவன், பெரியவன், ஆத்திகன், நாத்திகன் என்ற பாரபட்சம் ஏதுமின்றி எல்லார் தலையிலும் தன் பதத்தை வைத்து தீண்டினான். கருணை மிகுந்த அவதாரம் அது. அந்த பரமனை பற்றிய ஞானம் எங்கும் செழித்து வளர, கயல்கள் துள்ளி விளையாடுவது போல குருமார்களை அண்டிய சீடர்கள் ஞானம் தந்த இன்பத்தினால் களித்திருக்க, பக்தர்களின் இதயத்தில் குவளை மலரில் உறங்கும் வண்டைப்போல பரமன் உறங்குவதாகவும், கன்று உண்ணாமல் போனால் தவித்துப் போகும் பசுவைப் போல பக்தர்களுக்காக பரமனே ஏங்குவதாகவும் (வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்) அற்புதமான கற்பனையை “ஓங்கி உலகளந்த…” எனும் பாவைப் பாடலில் ஆண்டாள் நமக்குக் காட்டுகிறாள்.
ஆக்க சக்தியின் உருவகம் மழை. மழையில்லாமல் போனால் உயிர்கள் மடிந்து போகும். ஆண்டாள் மழைக் கடவுளான வருணனை நோக்கி, ஆழி மழைக்கு அண்ணா! ஆழியுள் புகுந்து முகர்ந்து கொண்டு ஆர்த்து எழுந்து ஊழிக்கும் முதல்வனான நாரணன் போல உருவம் கறுத்து, அந்த பத்மநாபனின் கையிலுள்ள சக்கரம் போல மின்னி, சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்பட்ட சரமழை போல பெய்திடாய் என்கிறாள்! மழையை மின்னலை மேகத்தை எதைப் பார்த்தாலும் கண்ணனே நினைவாக ஆழி மழைப் பாசுரத்தில் அனுபவிக்கிறாள். இறைவனின் கருணை மழையில் நனைந்த அனுபவத்தை இந்த பாசுரம் நமக்கு அளிக்கிறது என்றால் மிகையில்லை. ஆயர்பாடிப் பெண்கள், நாமெல்லாம் விதிப்படி வாழ்க்கை நடத்தி உழலுபவர்கள். நமக்கு வேதம் சாத்திரம் என்று கடவுளை அறியும் வித்தை எதுவும் தெரியாது. மேலும் பாவங்கள் செய்து விடக் கூடியவர்கள், நாம் எப்படி பக்தி செய்து பரமனை அடைய முடியும் என்றும், அதே நேரத்தில் கண்ணனை, மணிவண்ணனை, மாயனை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்கிற ஆறாக்காதல் ஒருபுறம் என்று தவிக்கும் போது, “போய பிழையும் புகுதருவான், நம் பாவங்கள் பிழைகள் எல்லாம் தீயினில் தூசைப் போல் மாசற்றுப் போகும்” என்று “மாயனை மன்னுவட மதுரை மைந்தனை..” என்னும் அடுத்த பாசுரத்தில் ஆறுதல் அளிக்கிறாள் ஆண்டாள்.
இதற்கு பிறகு வரும் பத்து திருப்பாவைப் பாடல்களில் பத்து வீடுகளுக்குச் சென்று தோழிகளை எழுப்புவதாக ஆண்டாள் பாடியிருக்கிறாள். பறவைகள் பொழுது புலர்ந்து விட்டது என ஒலி எழுப்புகின்றன. அரவில் துயில் கொண்ட அரவிந்தனை நினைத்து துயில் நீங்கிய யோகிகளும் முனிகளும் ஹரி ஹரி என்று பேரரவம் எழுப்புகிறார்கள். புள் அரையனாகிய கருடனின் தலைவனான பெருமானின் கோவிலில் மணிச்சத்தம் எழுகிறது. மணிமாலைகள் அணிந்த ஆய்ச்சியரின் ஆபரணங்களில் இருந்து தயிர் கடைவதால் ஒன்றோடு ஒன்று உரசி ஒலி எழும்புகிறது. அதோடு அவர்கள் தயிர் கடையும் ஓசையும் இணைந்து எழுகிறது. கிருஷ்ண கிருஷ்ண என்று பரத்வாஜப் பட்சி எனப்படும் ஆனைச்சாத்தன் கூவுகிறது. கீழ்வானம் வெளுத்து விட்டது. எருமைகள் மேயக் கிளம்புகின்றன. இவ்வாறு காலை நேரத்தில் பொழுது புலர்வதைக் குறித்த அழகான வர்ணனை அடுத்தடுத்த பாசுரங்களில் இடம்பெறுகிறது.
பிள்ளாய், எழுந்திராய்! நீ நாயகப் பெண்பிள்ளை ஆயிற்றே! கேசவனைப் பாடப் பாட நீ கேட்டே கிடத்தியோ! தேசமுடையாய்! கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்! மாமன் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்! மாமீர் அவளை எழுப்பீரோ! வாசல் திறவாமல் இருக்கிறவளே! நீ நோற்று சுவர்க்கம் புகப் போகிறாயோ! இன்னமும் தூங்குகிறாயே பண்டொருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணன் கூட உன்னிடம் தோற்றுப் போய் தன் தூக்கத்தையும் உன்னிடம் கொடுத்து விட்டானோ! ஆற்றல் ஆனந்தலுடையாய்! தேற்றமாய் வந்து கதவு திறந்து எங்களுடன் சேர்ந்து கொள் என்று பலவாறும் வீடுவீடாகச் சென்று பாகவதப் பெண்பிள்ளைகளை அழைக்கிறாள் ஆண்டாள்.
அடுத்ததொரு வீட்டில் இருப்பவர் கண்ணனுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தவர். கண்ணனின் எதிரிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று செருச்செய்யும் வீரர். அத்தகைய குற்றம் ஒன்றில்லாத கோவலரின் மகளே! என்று அழைத்து அவளையும் தங்களுடன் இணைத்துக் கொள்கிறாள். அதற்கு அடுத்த வீட்டுத் தலைவனான நற்செல்வன் கண்ணனுக்காக போரிடப் போய்விட்டான். அதனால் பாலைக் கரைக்கவும், கன்றை ஊட்ட விடவும் ஆளில்லாது போக, பசுக்கள் தமது தாய்மையால் பாலைச் சொரிய அந்த வீட்டு வாசல் முழுவதும் பால் சேறாகி விட்டது. அங்கே அந்த நற்செல்வனின் தங்கையை அழைக்க வரும் இவர்கள் மேலே பனி பெய்ய, கீழே பால் சேறு வழுக்க “வீட்டின் நிலைப்படி, தூண் முதலியவற்றைப் பற்றிக் கொண்டு நிற்கிறோம். உனக்கு கண்ணனுடன் ஊடல், அதனால் வரமறுக்கிறாயோ! அப்படியானால் தென்னிலங்கைக் கோமானை ராவணனைக் கொண்ட மனத்துக்கினியவனாகிய ராமனைப் பாடுவோம் வா!” என்று அழைக்கிறார்கள்.
அடுத்த பாசுரத்தில் “மான்விழி கொண்டவளே! வானில் சுக்கிரன் உதயமாகி வியாழன் மறைந்து விட்டது பார்! ஏற்கனவே பெண்கள் எல்லோரும் பாவை நோன்பிருக்க போய்விட்டார்கள்” என்று ஆண்டாள் அழைக்கிறாள்.
“புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்…”
என்கிற வரிகளில் புள்ளின் வாய் என்பதில் கொக்கு உருவத்தில் வந்த பகாசுரனை வதம் செய்த கண்ணனைக் குறித்தும், பொல்லா அரக்கனாகிய ராவணனைக் கொன்ற ராமனைக் குறித்தும் ஒரே பாசுரத்தில் பாடப் பெற்றுள்ளதாகக் கூறுவர். புள் என்கிற பட்சியாகிய ஜடாயுவைக் கொன்ற அரக்கன் ராவணன், அவனை அழித்த ராமன் என்று முழுவதுமே ராமனைப் பற்றித் தான் ஆண்டாள் பாடுகிறாள் என்றும் இரு விதமாக அனுபவித்து பெரியோர் உரைகளில் எழுதி உள்ளனர். “உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்…” என்று துவங்கும் பாசுரத்தில் வீட்டின் உள்ளே தூங்கும் பெண்ணிற்கும் வெளியே ஆண்டாள் குழாத்திற்கும் வாக்கு வாதம் நடக்கிறது. செங்கழுநீர் என்னும் மலர்கள் எல்லாம் மலர, இரவு நேரத்தில் மலரும் ஆம்பல் மலர்கள் பொழுது விடிந்ததினால் கூம்பிட நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம், நீ இன்னும் தூங்குகிறாயே என்று ஆண்டாள் உள்ளிட்டோர் அழைக்கிறார்கள். “நாமெல்லாம் பூக்களை பிரித்து மலர்த்தியும் மூடியும் விளையாடுவது உண்டு. இதெல்லாம் விடிந்ததற்கு அடையாளம் அல்ல” என்கிறாள் அவள். எல்லா இடத்திலும் மட்டும் அல்ல உங்கள் வீட்டுப் புழக்கடையில் கூட பூக்கள் மலர்ந்து விட்டன. தாம்பூலம் அணிவதை தவிர்த்து விட்ட, வெண்ணிற பற்களை உடைய துறவிகள் தங்கள் கோவிலை திறக்க போகிறார்கள். வாய் பேசும் நங்காய்! எங்களை முதலில் வந்து எழுப்புகிறேன் என்று நேற்று சொன்னாயே! நாணாதாய்! கண்ணன் பொய் சொல்பவன். அவனோடு சேர்ந்து நீயும் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டாயோ! பங்கயக் கண்ணனை பாடுவோம் வாராய் என்று எழுப்பி அழைத்துக் கொள்கிறார்கள்.
அடுத்த பாசுரமும் வேறொரு வீட்டில் இவர்களுக்கும், படுக்கையை விட்டு எழாத பெண்பிள்ளைக்கும் நடக்கும் வாக்குவாதம் வெளிப்படுகிறது. வயதில் சிறியவளான இந்த பெண்ணை “இளங்கிளியே..!” என்கிறாள் ஆண்டாள். அந்தப் பெண் பங்கயக் கண்ணனின் நாமத்தை உச்சரித்து அதில் மயங்கிக் கிடக்கையில் இவர்கள் எழுப்ப வர, “சில்லென்று அழைக்காதீர் நங்கையர்களே! நான் போதருகிறேன் (வருகை தருவது போல போ-தருதல்), பொறுங்கள் என்கிறாள். இவள் சொல்வதை நம்பாமல் ஆண்டாள் குழாத்தினர் “நீ கட்டி உரைப்பதில் வல்லவள். உன் வாக்கு வன்மை அறிவோம்.” என்கிறார்கள். “வல்லீர்கள் நீங்களே! தவறு செய்தது நானேதான் ஆயிடுக!” என்று அவள் சொல்ல, “ஒல்லை நீ போதாய்! – சரி சரி சீக்கிரம் கிளம்பி வா!” என்று இவர்கள் அழைக்கிறார்கள். “எல்லாரும் வந்து விட்டனரோ” என்று அவள் கேட்க, “எல்லாரும் போந்தார், போந்து எண்ணிக் கொள்!” என்று எல்லாரும் வந்து விட்டனர், நீயே வந்து எண்ணிக்கொள்! வல்லானைக் கொன்றானை, மாற்றானை மாற்று அழிக்க வல்லானை, மாயக் கண்ணனைப் பாட எங்களோடு வந்து சென்றது கொள் என்று இவர்கள் அழைக்கிறார்கள். இப்பாசுரத்தை “இதுவே திருப்பாவை!” என்று உரையாசிரியர்கள் வியந்து கூறுகிறார்கள்.
(தொடரும்)
ஆண்டாளின் திருப்பாவை கலப்படமில்லாத அன்பைக் கண்ணனின் மீது கொண்டது என்பது மிகையல்ல. நேயமுடன் திருப்பாவை பாட்டறைந்தும் என்பார் சுவாமி வேதாந்த தேசிகர். நேயம் என்பது பாகுபாடற்றது. தானும் உய்ந்து மற்றையோரும் உய்யவே அவதரித்தவள் என்பது வைணவ ஆச்சார்யர்களின் திருவுள்ளம். இது போன்ற எளிய கட்டுரைகளை தமிழ் ஹிந்து தொடர்ந்து வெளியிட வேண்டும்.
” நானேதான் ஆயிடுக” என்ற இடத்தில் வியாக்யானம் : “இல்லாத குற்றத்தை சிலர் உண்டு என்று சொன்னால் அல்லை என்னாதே அதற்கு இசைகயிறே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம்”. இதனாலேயே “திருப்பாவையாகிறது இப்பாட்டு ” .
தங்கள் பணி சிறக்க ஈசனை வேண்டுகிறேன்.
“நாராயணன் நமக்கே பறைதருவான்” பறை என்ற சொல் பறையென்ற கருவியைக் குறிக்கும் என்றும் அந்த வாத்தியம் விரதத்துக்குத் தேவையானது என்றும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். பறை என்ற சொல்லுக்குச் ‘சன்மானம்’ என்று பெரியோர்கள் உரை கூறியுள்ளதாக எனக்கு ஞாபகம். மேலும் பாவை விரதத்திற்குப் பறை எந்த விதத்தில் தேவை எனத் தெரியவில்லை. “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” எனக் கூறிய ஆண்டாள் பறையைப் பற்றிக் கூறியுள்ளாரா? எனக்குத் தெரியவில்லை. தெரிந்த் அன்பர்கள் தெளிவிக்க வேண்டுகின்றேன்.
You’re a great man,for doing this.
ஆன்டாளின் வரலாறு அறிந்து கொன்டதற்க்கு நன்றி