தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியை பல முறை புகைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன். மையமாக ஒரு கரும்பளிங்கு மேடை. அதன் மீது எரியும் அணையாத ஜோதி. மேடையின் முகப்பிலுள்ள “ஹே ராம்” என்ற வாசகம். எளிமை, ஒளி, ராம நாமம் – காந்தி என்ற மாமனிதரின் ஸ்தூலமான நினைவிடத்தின் அடையாளங்கள் இவை தான்.
குண்டடி பட்டு சாகும் தறுவாயில் காந்தியின் வாயிலிருந்து கடைசியாக உதிர்ந்த சொல் ஹே ராம். அப்படித் தான் நாம் பாடப் புத்தகங்களிலும் காந்திஜி வாழ்க்கை வரலாற்று நூல்களிலும் படித்து வந்திருக்கிறோம். காந்தியின் மரணம் குறித்த செய்திகளை அளித்த பத்திரிகை நிருபர்களும் அவ்வாறு தான் பதிவு செய்திருக்கிறார்கள் [1]. ஆனால் அந்தத் தருணத்தில் காந்திக்கு மிக அருகில் இருந்தவர்கள் மூன்றாவது குண்டு பாய்ந்தவுடனேயே காந்தியின் உயிர் பிரிந்து விட்டது. அவர் வாயிலிருந்து சொற்கள் எவையும் வெளிவரவில்லை என்று கூறியிருக்கிறார்கள். காந்தியின் தனிப்பட்ட காரியதரிசியாக இருந்த கல்யாணம் சில வருடங்களுக்கு மூன் அளித்த ஒரு பேட்டியில் கூட இதைக் குறிப்பிட்டிருந்தார் [2].
வரலாறு எப்படியும் இருக்கட்டும். ஆனால் ராம நாமம் தோய்ந்த காந்தியின் மரணத் தருணம் ஒரு தொன்மம் போல, ஐதிகம் போல இந்திய பிரக்ஞையில் பதிந்து விட்ட ஒன்று. பல நேரங்களில் தொன்மங்கள் வரலாற்றை விட இந்திய மனதுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன. காந்தியை ஒரு புனிதராக, அருளாளராக, அவதாரமாக இந்திய கிராமிய மனம் ஏற்கனவே உள்வாங்கிக் கொண்டிருந்தது. இந்த சம்பவம் மூலம் அது முழுதாக உறுதிப் படுத்தப் பட்டது.
ஜனம் ஜனம் முனி ஜதன் கராஹி
அந்த் ராம கஹிங் ஆவத நாஹி
ஜன்ம ஜன்மங்களாக முனிவர் யத்தனம் செய்கின்றனர். ஆயினும் அந்திம காலத்தில் ராமன் அவர்களிடம் வருவதில்லை
என்ற துளசிதாசரின் பாடல் வரிகளுடன் இணைத்துப் பார்க்கையில், காந்திக்கு கிடைத்தது எப்பேர்ப்பட்ட பேறு என்று எண்ணி மெய்சிலிர்க்கவும் அது இடமளித்தது.
ஆனால் இந்த சம்பவம் குறித்த நம்பிக்கை ஆதாரமற்றதல்ல. நான் மரணத்தைத் தழுவும் நேரம் என் உதடுகள் ராம நாமத்தைத் தான் உச்சரித்துக் கொண்டிருக்கும் என்று காந்தியே பலமுறை சொல்லியிருக்கிறார். எப்போதும் ராம நாம தியானத்தில் தோய்ந்திருந்த அவர் இதயத்தில் குண்டு பாய்ந்த அந்தத் தருணத்திலும் ராம நாமமே கோலோய்ச்சியிருக்கும் என்று நாம் கருத இடமிருக்கிறது.
பதின்ம வயதிலேயே ராம நாமம் என்ற புனித விதை தம் மனதில் ஆழ ஊன்றப் பட்டுவிட்டதாக காந்தி தன் சுயசரிதையில் எழுதுகிறார். அவரது குடும்பத்தில் பணிப்பெண்ணாக இருந்த ரம்பா என்பவர் தான் பேய் பிசாசுகளை எண்ணிப் பயந்து கொண்டிருந்த பள்ளி மாணவர் காந்திக்கு அந்த பயத்தைத் தெளிவிப்பதற்காக ராம நாமத்தை உபதேசம் செய்த ஞானகுரு. பிறகு அவரது தந்தை நோய்வாய்ப் பட்டிருந்த போது அவரது வீட்டுக்கு ராமாயணம் படிக்க வரும் ஒரு முதியவரின் தழுதழுத்த குரலும் அவர் கூறிய விளக்கங்களும் ராமநாமம் மீதான காந்தியின் ஈர்ப்பை ஆழப் படுத்தின. ‘துளசிதாசரின் ராமாயணத்தையே நான் உலகின் தலைசிறந்த பக்தி நூலாகக் கருதுகிறேன்’ என்ற அவரது கருத்தில் இறுதி வரை மாற்றம் ஏற்படவில்லை.
ராம நாமம் உதடுகளில் இருந்து மட்டுமல்ல இதயத்திலிருந்தும் ஜபிக்கப் படவேண்டும். அப்போது தான் அதன் உண்மையான ஆன்மிக சக்தி வெளிப்படும் என்று காந்தி நம்பினார். ராம நாமத்தை நோட்டுப் புத்தகங்களில் பக்கம் பக்கமாக எழுதுவதும், தாயத்துகளில் பொறித்து அணிவதும் போன்ற பழக்கங்கள் சிறுபிள்ளைத் தனமானதும், மூட நம்பிக்கையும் ஆகும் என்று ஒரு கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
உங்கள் பிரார்த்தனையில் சீதா ராம், ராஜா ராம் போன்ற சொற்கள் வருகின்றன. நீங்கள் அன்றாடம் பெயர் சொல்லி தியானிக்கும் ராமன் தசரதனின் புதல்வன். சீதையின் கணவன். ஒரு சரித்திர ரீதியான மகாபுருஷன். அவனது நாமத்தை பிரார்த்தனையில் ஏன் எல்லாரும் சொல்லவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறீர்கள்? அதை விட இன்னும் பொதுவான ஆன்மீக மந்திரங்கள் பல இருக்கின்றன. அவற்றை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது? என்று ஒரு ஆரிய சமாஜி கேள்வி எழுப்பினார். இந்துக்கள் அல்லாதவர்களும் ஏன் பிரார்த்தனையின் போது ‘ராம துன்’ பாட வேண்டும் என்று வேறொருவர் கேட்டார்.
“இந்தக் கேள்வியை ராம பக்த சிரோமணியான துளசி தாசரே எழுப்பி அதற்கு “ஸியா ராம மய ஸப் ஜக் ஜானி” (உலகம் முழுவதையும் சீதா ராம மயமாகவே அறிகிறேன்) என்று விளக்கம் அளிக்கிறார்… தொடக்கத்தில் தசரதன் புதல்வனாக, சீதை மணாளனாகவே ராமனைத் தொழுதேன். ஆனால் அவனைக் குறித்த எனது ஞானமும் அனுபூதியும் அதிகரிக்க அதிகரிக்க, ராமன் அழிவற்ற சத்தியமாகவும், எங்கும் நிறைந்தவனாகவும் பரிணமித்தான். இதன் பொருள் அவன் சீதை மணாளனாக இல்லாமலாகி விட்டான் என்பதல்ல. மாறாக ராம தரிசனத்தால் சீதை மணாளன் என்பதன் பொருள் விரிந்தது, விகசித்தது. ராமனை சரித்திர புருஷனாக மட்டுமே கருதுபவனுக்கு, அந்தர்யாமியான ராமனின் தரிசனம் ஒரு போதும் கிட்டாது” [3]. இவ்வாறு, அனைத்து உயிர்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் பரம்பொருளையே தனது ராமன் குறிப்பதாக காந்தி விடையிறுத்தார். தனக்கு ராம நாமம் போல ஒவ்வொரு ஆன்மிக சாதகருக்கும் அவரது இஷ்ட தெய்வத்தின் நாமம் அரணாக நின்று காக்கும் என்றும் தெளிவு படுத்தியிருக்கிறார்.
ராம நாமம் குறித்த காந்தியின் கருத்துக்களைப் படிக்கும் பல “ஆஸ்திகர்களுக்கு” அவை அசட்டுத் தனமாகவே தோன்றும். முழுமையான லௌகீக மறுப்பு மனநிலைக்குச் சென்றால் ஒழிய அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள முடியாது. ராம நாமத்தின் மீதான காந்தியின் நம்பிக்கை அந்த அளவு மிகத் திடமானதாக இருந்தது. பல கிராமங்களில் தனது முகாமுக்கு வந்த நோயாளிகளுக்கு ராம நாமத்தையும், சில இயற்கை வைத்திய முறைகளையுமே மருந்தாக மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார் [4]. டாக்டர்களும் ஆயுர்வேத வைத்தியர்களும் ஹகீம்களும் சகல நோய்களையும் தீர்க்கும் மாமருந்தான ராம நாமத்திற்கு தங்கள் சிகிச்சைகளில் ஏன் உரிய இடமளிப்பதில்லை? ராம நாமம் ஒருவன் இதயத்தில் குடிகொண்டால் அவனது வாழ்க்கை தூய்மையாகிறது. அவனது தீய பழக்கங்கள் அகல்கின்றன. அதுவே அவனைப் பீடித்த நோய்கள் அகல உதவுகிறது என்று ஒரு கட்டுரையில் வாதிடுகிறார் [5]. மரணத்திற்கு ஒரு நாள் முன்பு கிஷோரிலாலுக்கு எழுதிய கடைசி கடிதம் இப்படி முடிகிறது – “.. என் உடம்பு திருப்திகரமாக தேறி வருகிறது. இந்த முறை இரண்டு கிட்னிகளும், ஈரலும் இதில் சம்பந்தப் பட்டிருக்கின்றன. ராம நாமத்தின் மீது நான் கொண்ட சிரத்தை பலவீனப் பட்டு வருவதையே இது காட்டுகிறது என்று எண்ணுகிறேன்.” [6]
தனது வாழ்க்கை லட்சியங்களான சத்தியமும், அகிம்சையுமே ராம நாமத்தில் உருக் கொண்டிருப்பதாக காந்தி கருதினார். தனது ஆசிரமத்தில் பாட வேண்டிய பஜனைப் பாடல்களை “ஆஸ்ரம் பஜனாவளி” என்ற பெயரில் காந்தியே தொகுத்திருக்கிறார். அதில் துளசிதாசரின் ராமாயணத்திலிருந்து பல பாடல்கள் உள்ளன. “ராம ரதம்” என்ற பாடல் முக்கியமானதும் அவருக்கு மிகவும் பிடித்ததும் ஆகும்.
ராம ராவண யுத்தம். ராவணன் மிகப் பெரிய தேரில் படாடோபமாக வந்து நிற்கிறான். உன்னிடம் தேர் இல்லையே என்ன செய்வாய்? என்று விபீஷணன் கேட்க, ராமன் கூறுகிறான் –
கேளாய், நண்பனே
எப்பேர்ப் பட்ட இடர்களிலும் வெற்றி தரும் தேர் என்னுடையது.
வீரமும், துணிவும் அதன் சக்கரங்கள்
சத்தியமும், சீலமுமே அதன் திடமான வெற்றிக் கொடி.
வலிமை, விவேகம், புலனடக்கம், தன்னலமின்மை என்று நான்கு குதிரைகள்.
பொறுமை, கருணை, சமநிலை என்பவை அவற்றைப் பிணைக்கும் கயிறுகள்.
தெய்வ அருள் அதன் சாரதி…
என்று அந்தப் பாடல் போகிறது. எதேச்சாதிகார பிரிட்டிஷ் அரசையும், இயந்திர மயமாக்கலையும், நவீன நுகர்வுக் கலாசாரத்தையும் மாபெரும் வல்லமை கொண்ட ராவணனாகவும், அவற்றுக்கு எதிராக சத்தியத்தையும், அகிம்சையையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு போரிடும் சாமானியர்களை ராமனின் உருவாகவும் காந்தி கண்டார். இந்தப் பின்னணியில் பார்த்தால் தான் ‘ராம்’ என்ற அந்த இரண்டெழுத்து மந்திரத்தில் தனது இலட்சியங்கள் அனைத்தையும் காந்தி தரிசித்தார் என்பது விளங்கும்.
******
கீதையின் உபதேசங்கள் அனைத்திலும் மையமானதாக பற்றின்மை என்பதையே காந்தி எடுத்துக் கொண்டார். கீதையை அனாசக்தி யோகம் என்றே தான் காந்தி அழைத்தார். ஆனால் இதற்கான ஆதர்சங்கள் அவருக்கு கீதையை உள்ளடக்கிய மகாபாரதத்தில் அல்லாமல், ராமாயணத்திலேயே கிடைத்தன.
மகாபாரதத்தின் மாபெரும் தர்மக் குழப்பங்களையும், சிடுக்குகளையும், நீதிநெறிகளின் விளிம்பில் நின்று பேசும் தர்க்கங்களையும் அரசியல் விவாதங்களையும் விட, ராமாயணத்தின் சத்தியம் தவறாமை, தியாகம், அன்பு, தொண்டு ஆகிய எளிய விழுமியங்களே அவருக்கு நெருக்கமாக இருந்தன. நவீனத்துவத்தின் சிடுக்குகளுக்கு மாற்றாக இயற்கையோடு இணைந்த கிராம வாழ்க்கையை வலியுறுத்திய அவரது கண்ணோட்டமும் அடிப்படையில் இதிலிருந்தே பெறப்பட்டது.
ஹிந்த் ஸ்வராஜ் என்ற புத்தகத்தில் எதிர்கால இந்தியாவைக் குறித்த தனது கனவுகளையும் செய்ல்திட்டங்களையும் அவர் பதிவு செய்தபோது, கிராம சுயராஜ்யத்திற்கே முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்தார். கிராம ராஜியத்தையே அவரது ராமராஜ்யம் என்ற கருதுகோள் குறித்தது. 1928லேயே இது குறித்து காந்திக்கும் நேருவுக்கும் பெரும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. “.. உங்கள் கருத்துடன் நான் முற்றிலுமாக மாறுபடுகிறேன். நீங்கள் குறிப்பிடும் ராமராஜ்யம் கடந்த காலத்தில் உன்னதமான ஒன்றாக இருந்து என்பது எனக்கு ஏற்புடைய கருத்தல்ல. அதனைத் திரும்பக் கொண்டு வரவும் நான் விரும்பவில்லை. ஒரு சில சிறிய மாறுதல்களுடன், மேற்கத்திய, பெருந்தொழில் சார்ந்த பண்பாடு தான் இந்தியாவை வெற்றி கொள்ளப் போகிறது.” என்று நேரு காந்திக்கு எழுதினார் [7]. காந்தி தனது யங் இந்தியா பத்திரிகையில் இது குறித்து பொதுவில் விவாதிக்குமாறு நேருவை அழைத்தார். ஆனால் நேரு அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல் கிடப்பில் போட்டார். பிறகு ஒத்துழையாமை இயக்கமும், வெள்ளையனே வெளியேறு இயக்கமும் சூடுபிடித்து தேச விடுதலையே குறியாக காங்கிரஸ் இயங்க ஆரம்பித்தது.
1945ல் சுதந்திரத்திற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியவுடனேயே காந்தி மீண்டும் கிராம சுயராஜ்யத்தை வலியுறுத்தத் தொடங்கினார் –
“இந்தியாவும், இந்தியாவின் ஊடாக உலகமும், உண்மையான சுதந்திரத்தை அடைய முடியுமென்றால், நாமெல்லாரும் கிராமங்களில் சென்று வசிப்பதன் மூலமே அது சாத்தியமாகும் என்று நான் நம்புகிறேன். நாம் வசிக்க வேண்டியது குடிசைகளில், மாளிகைகளில் அல்ல. பல லட்சக் கணக்கிலான மக்கள் ஒரு போதும் பெரு நகரங்களிலும் மாளிகைகளிலும் சுகமாகவும், அமைதியாகவும் வசிக்கவே முடியாது. ஒருவரை ஒருவர் கொலை செய்தோ, பொய்மையையும் வன்முறையையும் கைக் கொண்டோ அந்த சுகத்தையும் அமைதியையும் பெற முடியாது. சத்தியம், அகிம்சை என்ற இரு பெரும் கொள்கைகளும் இல்லையென்றால் மனிதகுலம் அழிந்து பட்டுப் போகும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை. அந்த சத்தியத்தின், அகிம்சையின் தரிசனத்தை நாம் கிராமங்களின் எளிமையில் மட்டுமே காண முடியும்”.
இதற்கு நேரு எழுதிய பதில் –
“நம் முன்னே உள்ள கேள்வி பொய்மையா சத்தியமா அல்லது வன்முறையா அகிம்சையா என்பதல்ல. ஒரு கிராமம் எப்படி தன்னியல்பில் சத்தியத்தையும் அகிம்சையையும் கொண்டிருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. பொதுவாக எந்த ஒரு கிராமமும் அறிவு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பிற்போக்கானது. அந்தப் பிற்போக்கான சூழலில் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்பட முடியாது. குறுகிய மனம் கொண்ட அந்த மக்கள் பொய்யர்களாகவும் வன்முறையாளர்களாகவும் இருக்கும் வாய்ப்புகளே அதிகம்”. [8]
இந்தக் கடிதங்களில் இருவருக்குமிடையே உள்ள அணுகுமுறை வேறுபாடுகள் மிகத் துல்லியமாகத் தெரிய ஆரம்பிக்கின்றன. சமீபத்தில் ஜெயமோகன் அண்ணா ஹசாரேயின் தோல்வி பற்றிக் குறிப்பிடுகையில் “இந்தியாவில் நகரங்களின் வல்லாதிக்கம் நிகழ்கிறது. கிராமங்கள் நொறுக்கி உண்ணப்படுகின்றன. கிராமங்களை உறிஞ்சி நகரங்களை வலுப்படுத்தும் ஓர் அரசியல் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது… கிராமியமனநிலை என்பதே பிற்போக்குத்தனம் என்ற நம்பிக்கை நம்மில் பெரும்பாலானவர்களிடம் உள்ளது” என்கிறார். நேருவின் மேற்கண்ட கடிதங்களே இந்த அரசியல் நிலைப்பாட்டின் ஊற்றுமுகம்.
குறுகிய காலத்தில் ஊழலுக்கு எதிராக மாபெரும் காந்திய மக்களியக்கத்தைக் கட்டியெழுப்பிய ஒரு கிராமியப் போராளி, காந்தியின் 64வது நினைவு தினத்தின் போது தோல்வியடைந்து நிற்கிறார். இந்தியாவின் நவீன பொருளாதார வளர்ச்சி என்ற பூதத்தின் பெரும்பசிக்கு கிராமங்கள் தொடர்ந்து பலியிடப் பட்டுக் கொண்டே வருவதன் நீண்ட கான்வாஸ் சித்திரம் உண்மையில் நமக்குத் தெரிவதே இல்லை. நாம் படிக்கும் தினசரிகளும், வார இதழ்களும் ஊடக ஜாலங்களும் அந்த சித்திரத்தை புகை மூட்டமாகக் கூட நமக்குத் தருவதில்லை.
நேரு தன் கடைசி காலத்தில் இது குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தான் மீண்டும் மீண்டும் மகாத்மா காந்தியின் அணுகுமுறைகளை எண்ணிப் பார்ப்பதாக 1963ல் பாராளுமன்ற விவாதங்களில் பேசினார். “இந்தியாவின் 550,000 கிராமங்களையும் அங்கு வாழும் மக்களையும் குறித்த பிரசினையை அளவிட என் மனம் முயன்று கொண்டிருக்கிறது.. பங்களிப்பு ரீதியாக, இந்தியாவின் மிகப் பெரிய முக்கியமான தொழிற்சாலைகள் எல்லாவற்றையும் சேர்த்தால் கூட, அவை உண்மையில் விவசாயத்துடன் ஒப்பிட்டால் முக்கியமற்றவையாகவே தோன்றுகின்றன. காந்திஜி செய்தது அடிப்படையில் சரி. அவர் எப்போதும் இந்தியாவின் கிராமங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வகையிலும் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டிருந்தார்.. அவர் இயந்திரங்களுக்கு எதிரானவர் என்று தான் பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள். அவர் எதிரானவராக இல்லை என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. நமது பெருந்திரளான மக்களின் நல்வாழ்வு என்பதைத் தவிர்த்த மற்ற சூழல்களில் அவர் இயந்திரங்களை விரும்பவில்லை” என்று ஒரு உரையில் நேரு குறிப்பிட்டார் [9].
நமது தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் செயல்பட ஆரம்பித்து இருபதாண்டுகள் ஆகி விட்ட தருணத்தில் காந்தியின் ராம ராஜ்யம், கிராமிய பொருளாதாரம் குறித்த கொள்கைகள் நாம் தடம்புரண்டு விடாமல் நமக்கு நல்வழி காட்டக் கூடும். உதாரணமாக, அப்துல் கலாம் கூறும் PURA திட்டம் நகரங்களுக்குரிய தரத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் இன்னபிற வசதிகளை கிராமங்களுக்கு அளிப்பதன் மூலம் கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து பேசுகிறது. இயற்கை விவசாயம், குடிநீர் மேலாண்மை, கால்ந்டைப் பாதுகாப்பு ஆகிய பல விஷயங்களில் நவீன தொழில் நுட்பத்தை நாம் திறமையாக பயன்படுத்துவதன் மூலம் கிராமங்களின் உள்ளார்ந்த தன்மையை அழிக்காமல் அதே சமயம் சீரான பொருளாதார வளர்ச்சியையும் நாம் அடைய முயற்சிக்கலாம்.
நமது பொருளாதார சீர்திருத்தங்கள் ஒருவகையில் நேருவிய சோஷலிசத்தின் தவறுகளை சரி செய்வதற்காக ஏற்பட்டவை. ஆனால் இவையும் மானுட முயற்சிகளே. இவையும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. அதை உணர்ந்து செயல்படவேண்டிய தருணம் இது.
காந்தி அதை எப்போதும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பார் –
The freedom to err and the power to correct errors is one definition of Swaraj.
தவறு செய்வதற்கான சுதந்திரமும், தவறுகளை சரி செய்வதற்கான வல்லமையும் இணைந்து தான் உண்மையான சுயராஜ்யம்.
சான்றுகள்:
[1] ஹரிஜன்: 15-2-1946
[2] https://www.mkgandhi.org/last%20days/glastday.htm
[3] ஹரிஜன்: 22-9-1946
[4] ஹரிஜன்: 7-1-1946, 26-5-1946, 2-6-1946
[5] ஹரிஜன்: 19-5-1946
[6] ஹரிஜன்: 8-2-1948
[7] நேருவின் கடிதம், 11-1-1928
[8] காந்தி நேரு கடிதங்க்ள் – அக்டோபர் 1945.
[9] Speech by Jawaharlal Nehru to a seminar on ‘Social Welfare in a Developing Economy’, September 22, 1963.
ஜடாயு அவர்களின் தெளிந்த சிந்தனையிலிருந்து மற்றுமொரு சிறந்த கட்டுரை வெளிவந்துள்ளது. நம் காலத்தில் வாழ்ந்த அற்புத மனிதர், வாராது வந்த மாமணி காந்தியடிகள். குண்டடிபட்டு உயிர் விட்டபொழுது அவருடைய வாய் இராம நாமத்தை உச்சரித்தது என்றும் உச்சரிக்கவில்லை என்றும் பேசுவது அரசியலாகி விடும். இராம நாமத்தை உச்சரித்தே அவர் உயிர் விட்டார் என்றே நாம் நம்புவோம். அவ்வாறே கூறுவோம். நான் இதனை நம்புகின்றேன். அவர் நினைவெல்லாம் இராமனாகவே இருந்தமையால் இறுதிக் காலத்திலும் அவ்வாறே இருந்திருக்க வேண்டும்.
காந்தியடிகளின் ஆன்மீக அரசியல் ஆதிக்க உணர்வற்றது. இன்றைய் ஆன்மிகம் வற்றிய அரசியல் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்கும் அடிப்படையாக இருக்கின்றது. நேரு தன் பிற்காலத்தில் காந்தியடிகளின் அணுகுமுறையை எண்ணிப் பார்த்தார் என்பதொரு அரிய செய்தி.
வேறு எந்த நாட்டையும்விடக் கூடுதாலாக வேளாண்மையிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களிலும் பல்லாயிரம் ஆண்டு அனுபவம் உள்ள நாடு நம்முடையது. இறைச் சக்தி மிகுந்த கருணையுடன் நமக்கு வெகு தாராளமாக நில வளமும் நீர் வளமும் கொடுத்துள்ளது. ஆனால் நமது ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால் வேளாண்மையில் அனுபவம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. மீண்டும் அப்படியொரு அனுபவ சாலிகளை இனி உருவாக்குவது சாத்தியமா? பசுமைப் புரட்சி உண்மையில் அருமையான பூமியின் சாரத்தைக் கெடுத்தது. ரசாயன உரமும் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்தும் நிலத்தை விஷமாக்கியதோடு நன்மை செய்யும் உயிர்களைக் கொன்று தாவரங்கள் வழியாக நமக்குள்ளும் விஷத்தைச் செலுத்திவிட்டது. தாய்ப்பாலில் கூட உடல் நலத்திற்குக் கேடான அம்சங்கள் சேர்ந்துவிட்டன. கிராமம் தன்னிறைவுடன் அதன் பொருளாதாரம் அதன் உள்ளேயே இருந்த நிலைக்குப் பதிலாக அவை சுய மரியாதை இழந்து நகரங்களின் முன் கை ஏந்தும் நிலை வந்துவிட்டது. விவசாயத்திற்கான மானியம் என்பது கேலிக் கூத்தாக உண்மையில் ரசாயன உர, ரசயனப் பூச்சி கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்குப் பயன் அளிப்பதாகத்தான் உள்ளது. நமது நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை, உணவு தானியப் பற்றாக்குறை என்பன எல்லாமே செயற்கை யானவைதாம் என்பது யோசிக்கும் வேளையில் புலனாகும். இப்போதும் காரியம் கெட்டுவிடவில்லை. நமது நாடு அடிப்படையில் விவசாய நாடு என உணர்ந்து அதற்கு முன்னுரிமை அளித்து விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களும் மட்டுமே போதும், செயற்கைக் கோள், தகவல் தொழில் நுட்பம் போன்ற நவீன முயற்சிகளும் விவசாயம்- விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு உதவுவனவாய் மேற்கொண்டால் போதுமானது என்று உணர்ந்தால் நிலைமை சரியாகிவிடும். நாலைந்து கிராமங்களுக்கு ஒரு குளிர் சாதன வசதியுள்ள கிடங்கு, காய் கறி, பழங்கள் பதப்படுத்தும் தொழில்கள், விவசாயி அதிக தொலைவு செல்ல வேண்டிய அவசியமோ இடைத்தரகர் தயவோ இன்றி அருகிலேயே தான் விதிக்கும் நியாயமான விலைக்கு தொழிற்சாலைகளுக்குத் தனது உற்பத்தியை விற்பனை செய்யும் நிலைமை ஆகியன உருவாக்கப்பட வேண்டும். ஒரு கிராமம் தனது உழைப்பின் மூலம் பெறும் பணம் அந்த கிராமத்தைவிட்டு வெளியே போக வேண்டிய நிலைமை இருக்கலாகாது. நுகர் பொருள்களை அனுபவிக்கலாம். ஆனால் உயிர் வாழ்ந்து அவற்றை அனுபவிக்க உணவுப் பொருள்களைத்தான் உண்ண வேண்டும். ஆகையால் உணவுப் பொருள்களுக்கு எப்போதுமே கிராக்கி இருந்து கொண்டிருக்கும். நுகர் பொருள்கள் மேலும் மேலும் புதுமையாகிவரும். பழைமை மதிப்பிழந்து போகும். உணவுப் பொருள்களின் நிலை அவ்வாறு அல்ல. நுகர் பொருள்கள் மீது சலிப்பு ஏற்படும். ஆகவே அவை நிரந்தர மதிப்புள்ளவை அல்ல. ஆனால் உணவுப் பொருள்கள் அப்படிப் பட்டவை அல்ல. இவற்றுக்குத் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஆகவே நீர் வளமும் நில வளமும் மிக்க நம் நாடு வெறும் விவசாயநாடாகப் பல உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் பகுதியாக இருந்தாலே சுபிட்சமாக இருக்க முடியும். ஆனால் இந்த அடிப்படை உண்மை நேருவுக்குப் புரிந்ததில்லை. இந்த தேசத்தின் மண் வாசத்தை அவர் உணர்ந்ததில்லை. அவரைத் தமது அரசியல் வாரிசு என காந்தி அடையாளம் காட்டியதன் பலனை இன்று அனுபவித்து வருகிறோம். அரசியல் வாரிசு என்கிற தகுதிக்கு உரியவர் மூத்தவரின் அரசியல்-பொருளாதாரக் கோட்பாட்டை முற்றிலும் ஏற்பவரக இருக்க வேண்டும். ஆனால் காந்தியின் கோட்பாட்டை ஏற்கவில்லை என்று பகிரங்கமாகவே சொன்னவர் நேரு. அதன் பிறகும் அவரைத் தனது அரசியல் வாரிசு என காந்தி சொன்னது அவர் பாஷையில் இமாலயத் தவறு.
-மலர்மன்னன்
1990 தொடக்கத்தில் தாராளமயம், உலகமயம் நம் நாட்டில் காலடி எடுத்து வைத்தபோது அதனை வரவேற்றும் இவை எவ்வாறு நமக்குப் பலன் அளிக்கும் எனவும் தினமணியில் விரிவான கட்டுரை எழுதினேன். சுதந்திரப் பொருளாதாரத்தில் நுகர்வோனே எஜமானன் எனவே அது வரவேறகப் பட வேண்டும் உற்பத்தியாளர்களிடையிலான வர்த்தகப் போட்டி விலைக் குறைப்பில் முடிந்து பயனாளிக்குத் தேர்வு செய்யும் வாய்ப்பையும் அளிக்கும் என எழுதினேன். ஆனால் தாராள மயம், உலக மயம் இரண்டையும் நமது நாட்டிற்கு ஆதாயம் தரும் வகையில் பயன்படுத்திக் கொள்ளாமல் அயல் நாட்டவருக்குப் பயன் அளிக்கும் வகையில் நடைமுறைப் படுத்தினோம். நல்ல சித்தாந்தங்களும் எப்படி நடைமுறைப் படுத்த வேண்டும் என்று தெரியா விட்டால் தீங்கே விளையும். உலக மயமாக்கலால் இன்று பல சுதேசித் தொழில்கள் அழிந்தே போயின. பன்னாட்டு நிறுவனங்களையும் வெளிநாட்டு முதலீடுகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு வருந்தி அழைத்து சலுகைகள் கொடுத்து ஊக்குவிப்பது பொருளதார அடிமைத்தனத்தில் கொண்டுபோய் விடும்.
-மலர்மன்னன்
தவறு செய்வதற்கான சுதந்திரமும், தவறுகளை சரி செய்வதற்கான வல்லமையும் இணைந்ததுதான் உண்மையான சுயராஜ்யம். – காந்தியின் பல அபத்தமான கருத்துகளுள் இதுவும் ஒன்று. இதை அடிப்படையாகக் கொண்டு தான் தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டு போவதோடு அதை நியாயப் படுத்துவதும் திருத்திக் கொள்ளும் வல்லமையை மிகவும் காலதாமதமாகப் பயன்படுத்துவதால் அதற்குள் திருத்திக்கொள்ளவே முடியாதபடி தலைக்குமேல் வெள்ளம் போய் விடுவதுமாயிருக்கிறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! நமக்கு எதில் வல்லமை உள்ளது எனத் தேர்ந்து, எது நமக்கு உகந்தது என உணர்ந்து, எது நமக்கு நன்மை எனக் கண்டு எதையும் எல்லாக் கோணங் களிலும் ஆராய்ந்து சாதக பாதகங்களின் சதவீத அடிப்படை கண்டு நடைமுறைப் படுத்தும் உரிமை இருப்பதும், அப்படியும் சறுக்கல் ஏற்படக் கூடுமாதலால் எதையும் ஒரு குறுகிய காலத்திற்குப் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தி மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் உரிமையும் இருப்பதும், அந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவதுமே சுயராஜ்ஜியம் ஆகும்.
-மலர்மன்னன்.
ராமரின் பெயரை வைத்து ஜடாயு எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் கண்களைக் கசிய வைத்து விடுகிறது. கம்ப ராமாயணம் உள்ளேயே ஊறி இருப்பதால்தானோ என்னவோ, ராமரை வைத்து அவர் எழுதும் கட்டுரைகள் பல்லாண்டுகள் ஊற வைத்த ஷாம்பெய்ன் போல மதிப்பு மிகுதியாகின்றன.
எழுதுபவர் உணர்ந்ததைப் படிப்பவர் உணர்ந்தால் அது இலக்கியமாகிறது. இது ஒரு சான்று.
ஜடாயுவின் இததகைய கட்டுரைகள் தனிப் புத்தகமாக வர வேண்டும்.
.
மதிப்பிற்குரிய மலர்மன்னன் ஜி,
மிகவும் சரியாகச் சொன்னீர்கள். காந்தி தன் அரசியல் வாரிசாக நேருவை அடையாளப் படுத்தியது இமாலயத் தவறு. மட்டுமல்ல. சத்திய மீறல். பொய்மை.
விளைவு ?
கோட்ஸே காந்தியைக் கொன்றான். நேரு காந்தியத்தைக் கொன்றார்.
.
//ஆனால் தாராள மயம், உலக மயம் இரண்டையும் நமது நாட்டிற்கு ஆதாயம் தரும் வகையில் பயன்படுத்திக் கொள்ளாமல் அயல் நாட்டவருக்குப் பயன் அளிக்கும் வகையில் நடைமுறைப் படுத்தினோம்.//
முக்கியமான அவதானம்.
சுதேசித் தொழில்கள் தாராள மயமாக்கப்பட வேண்டும். உலக மயமாக்கப்பட வேண்டும்.
சுதேசித் தொழில்களில் லைஸன்ஸ் ராஜ் தொடர்வதும், விதேசி ஆக்கிரமிப்பின் குண்டா ராஜ் ஊக்குவிக்கப்படுவதும் முடிவுக்கு வரவேண்டும்.
.
I know I am going to cop flak from everyone here. Being a worshiper of Lord Rama, I got to say my piece. This is not to offend anyone. Apology upfront.
Gandhi and his weird policies and his bosom chum Nehru are the cause of MOST of the ills facing India. He started the rot of Muslim appeasement and now it had grown into a monster, thriving on his ill fated visionary policies. He sowed the seed, and now, we the silent poor Hindus are coping the consequences. See, we are not even able to call our motherland by it’s correct name ” Hindustan”, thanks to Gandhi’s appeasing pseudo secular rubbish. I feel he should be exposed to what he was as person in real life. The MYTH of uttering Lord Rama’s name while he was dying should be given wider publicity along with his Bramachari experiments with his follower’s wives and his young niece. Then the halo of Mahatma will disappear very soon.
India should stop hero worshiping ordinary individuals. Also, we should stop reading history written by this corrupt Congress walahs.
முனைவர் ஐயா, களிமிகு கணபதி, தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
// தவறு செய்வதற்கான சுதந்திரமும், தவறுகளை சரி செய்வதற்கான வல்லமையும் இணைந்ததுதான் உண்மையான சுயராஜ்யம். – காந்தியின் பல அபத்தமான கருத்துகளுள் இதுவும் ஒன்று. இதை அடிப்படையாகக் கொண்டு தான் தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டு போவதோடு அதை நியாயப் படுத்துவதும் திருத்திக் கொள்ளும் வல்லமையை மிகவும் காலதாமதமாகப் பயன்படுத்துவதால் அதற்குள் திருத்திக்கொள்ளவே முடியாதபடி தலைக்குமேல் வெள்ளம் போய் விடுவதுமாயிருக்கிறது //
அன்புள்ள மலர்மன்னன்,
நீங்கள் காந்தியின் அந்தக் கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு அதைத் திரிக்கவும் செய்கிறீர்கள். “The freedom to err” என்பதற்கு ஒரு விஷயத்தைத் தவறு என்று நன்றாகத் தெரிந்தும் செய்வது என்று அர்த்தமல்ல. ஆழம் தெரியாமல் காலை விடுவது என்பதும் அல்ல.
// நமக்கு எதில் வல்லமை உள்ளது எனத் தேர்ந்து, எது நமக்கு உகந்தது என உணர்ந்து, எது நமக்கு நன்மை எனக் கண்டு எதையும் எல்லாக் கோணங் களிலும் ஆராய்ந்து சாதக பாதகங்களின் சதவீத அடிப்படை கண்டு நடைமுறைப் படுத்தும் உரிமை இருப்பதும் //
இதையெல்லாம் செய்த பிறகும் ஒரு விஷயத்தில் தவ்றே ஏற்படாது என்று சொல்லமுடியுமா என்ன? முடியாது. இயற்கையின் நியதிகளும், வரலாற்றின் திருப்பல்களும் மாபெரும் ஞானிகளின் கண்களைக் கூட மறைத்து விட்டிருக்கின்றன என்பதே நிதர்சனம்.
ஒரு உண்மையான சுயராஜ்ய, ஜனநாயக அமைப்பில், கொள்கைகளும் திட்டங்களும் முடிவுகளும் எப்போதுமே ஒற்றைப்படையாக எடுக்கப் படுவதில்லை. அவை பல குரல்களின் இணைவையும், ஒத்திசைவையும், முரண்களையும் சமரசப் படுத்தியே அமைகின்றன. இதில் “தவறுகள்” ஏற்படுவது என்பது இயல்பாகவே நடக்கக் கூடியது – it is built into the system, so it should also have a method to come out of it. அப்படி தவறுகள் ஏற்படாமலிருந்தால் தான் ஆச்சரியம். எனவே இத்தகைய எந்த ஒரு அமைப்பும் தனது தவறுகளை நேர்மையுடன் சீர்தூக்கிப் பார்த்து மதிப்பிட வேண்டும. தவறை உணர்ந்த பிறகு அதே ஜனநாயக முறையில் உறுதியுடன் நின்று அதைக்களையும் வல்லமை வேண்டும். அதைத் தான் காந்தி இங்கு சொல்கிறார்.
“தவறுகளே இல்லாத, அப்பழுக்கற்ற” சித்தாந்தத்தால் சமைக்கப் பட்ட சோஷலிச பொன்னுலகம் காண விழைந்த லெனினும், ஸ்டானினும், மாவோவும் தங்கள் மக்களுக்கு அளித்தது என்ன என்பதை உலகம் பார்த்து விட்டது.
உண்மையில் காந்தியத்தின் அந்த அணுகுமுறை தான் இந்துப் பண்பாட்டின் அணுகுமுறையும் ஆகும்.
ஸ்ரீ ஜடாயு,
முதலில் காந்தி ஒரு ஜனநாயகவாதி அல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டும். பலர் கூடிப் பேசி முடிவு எடுப்பதில் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அவரது அரசியல் வாழ்க்கையில் மட்டுமின்றிக் குடும்ப வாழ்க்கையிலும் தனது எண்ணங்களை மற்றவர்கள் மீது திணிப்பவராகவே அவர் இருந்திருக்கிறார். மனைவி மரணப் படுக்கையில் இருந்தபோதுகூட அவருக்கு எத்தகைய மருத்துவம் தேவை என்பதை மருத்துவ ஆலோசனையையும் மீறித் தானே எடுத்திருக்கிறார்! பாவம் ஹீராலால், தனக்கென்று ஒரு விருப்பம் இருந்தும் காந்திக்கு மகனாய்ப் பிறந்ததால் அதை நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் தந்தையைப் பழி தீர்த்துக் கொளவதாக நினைத்துத் தன்னை சீரழித்துக் கொண்டார். காந்தி மறைந்த ஆறு மாதங்களுக்குள் அனாதைபோல் பொதுமருத்துவ மனையில் மரித்தார்! காந்தி சம்பந்தமாக நாம் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கையில் ஜனநாயகம் சம்பந்தமாக நீங்கள் பேசுவது வியப்பாயிருக்கிறது!
இரண்டாவதாக, சறுக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நான் எழுதியுள்ளதை நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள். ‘To err is human’ என்பது அனைவரும் அறிந்ததுதான். செய்த தவறுக்கு சமாதானம் சொல்வது மனித பலவீனமும் ஆகும். காந்திக்கு இந்த பலவீனம் கொஞ்சம் அதிகம்!
-மலர்மன்னன்
“மஹாத்மா காந்தி: ஏவ ச” என பல முறை சங்க ப்ராதஸ்மரணம் ஓதிய என்னைப்போன்றோர் காந்தியடிகளை மஹாத்மா என போற்ற ஹேதுவான பல தகவல்களை அடக்கிய (ராம பக்தி, க்ராம ஸ்வராஜ்யம்) வ்யாசம் அளித்த அறிஞர் ஸ்ரீமான் ஜடாயுவிற்கு நன்றி.
காந்தி கடைசீத் தருணத்தில் “ராம்” என்று சொன்னாரா என்பதில் பக்ஷபாதமின்றி கருத்து தெரிவித்ததற்கு மீண்டும் நன்றி. பின்னும் தாங்கள் அளித்த தகவலில் இருந்து சற்று மாறுபடுகிறேன். பூஜ்ய மொராரி பாபுவின் ராம கதையை நான் பலமுறை கேட்டுள்ளதால் அவர் அபிப்ராயப்படி ஸ்ரீ காந்தி அவர்கள் கடைசீத்தருவாயில் ராம நாமம் சொன்னார் என்பது என்போன்றோருக்கு பக்ஷபாதமாய் அக்கருத்தை ஏற்க வைக்கிறது போலும்.
\\\\\ஆனால் அந்தத் தருணத்தில் காந்திக்கு மிக அருகில் இருந்தவர்கள் மூன்றாவது குண்டு பாய்ந்தவுடனேயே காந்தியின் உயிர் பிரிந்து விட்டது. அவர் வாயிலிருந்து சொற்கள் எவையும் வெளிவரவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.\\\\
இதுவும் விவாதாஸ்பதமான விஷயமே. பார்க்க விக்கிபீடியா விவாதம்
https://en.wikipedia.org/wiki/Talk%3AMahatma_Gandhi/Dying_words_controversy
\\\\\there’s only three witness accounts: manu and abha(two young girls at the time, constant companions of bapu) says yes; he said so; kalyanam, (at the time 25) says, definitely not; others present at the time, no comment. 2-1-0. two syllables of barely audible sound, some 60 years ago, no way to know, no need to care in my opinion. (and those two syllables happen to be instantly recognized anywhere in india as being last words of gandhiji)\\\\
\\\\உண்மையில் காந்தியத்தின் அந்த அணுகுமுறை தான் இந்துப் பண்பாட்டின் அணுகுமுறையும் ஆகும்.\\\
தாங்கள் இக்கருத்தை பொதுவாக அன்றி குறிப்பிட்ட context ல் சொல்லியுள்ளீர்கள். ஆனால் பொதுவில் எனக்கு இது உடன்பாடானா கருத்து அல்ல. காந்தியம் ஹிந்துப்பண்பாட்டுடன் ஸர்வஸமன் ஆகாது. பின்னும் நான் மதிக்கும் பல அறிவுஜீவிகளால் தமிழ் ஹிந்து தளத்தில் மஹாத்மா காந்தியைப்பற்றி உரக்கச் சொல்லப்படும் கருத்து. ஹிந்து இயக்கங்களில் பங்குபெறும் ஹிந்துத்வக்கொள்கைகளில் நம்பிக்கை வைத்துள்ள நானும் என்னையடுத்து கணிசமான பல அறிவுஜீவி ஹிந்துத்வர்களும் மாறுபடும் கருத்து என்று மட்டும் என் உத்தரத்தை அழுந்தப் பதிவு செய்கிறேன்.
அன்புள்ள மலர்மன்னன்,
காந்தி ஜனநாயகவாதி அல்ல என்ற அவதூறை நான் ஏற்கவில்லை. நான் படித்து விவாதித்து அறிந்த வரை, அவர் ஜனநாயக உணர்வுகளுக்கு முழு மதிப்பு தருபவராக, அவற்றைத் தன் வாழ்வில் பெரும்பாலும் கடைப்பிடித்தவராகத் தான் இருந்திருக்கிறார். சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதும், அவர் பதவி விலகியதும், அதில் காந்தியின் பங்கும் ஒரு விதிவிலக்கு. அது பற்றீ சமீபத்தில் ஜெயமோகன் உட்பட பலர் விரிவாக ஏற்கனவே ஏராளம் எழுதியிருக்கிறார்கள்.
ஹூராலால் சம்பவம் காந்தியின் வாழ்க்கையில் ஒரு துன்பியல் நிகழ்வு. ஹீராலால் காந்தி இடையே இருந்த முரண்களும், அதனால் ஹூராலால் வாழ்க்கை சீரழிந்ததும், அதன் முழுமையான தளத்தில் பேசப்பட்டுள்ளது. ஒரு திரைப்படமே வந்துள்ளது. இந்த ஒரு மேற்கோளை உங்கள் இஷ்டம் போல வளைத்து மேலும் சில உதிரி தகவல்களைத் தூவி, காந்தி ஜனநாயக விரோதி என்பது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்க முயல்கிறீர்கள்.
அந்த மேற்கோளை நான் பயன்படுத்தி இருப்பது, காந்தி அதை எந்த சூழலில் கூறினார் என்பதையும் கணக்கில் கொண்டே. அதற்கு முன்னும் பின்னும் உள்ளதைப் படித்தால் தான் அந்த சூழல் தெரிய வரும்.
1917ம் ஆண்டு குஜராத்தில் கோத்ராவில் நடைபெற்ற மானாட்டில் காந்தி வாசித்த உரையில்,இந்தியர்களுக்கு பாராளுமன்றத்தை உருவாக்கி நடத்தும் திறன் இல்லை என்று கூறப்பட்ட வாதங்களுக்கு எதிர்வினையாகப் பேசும் இடத்தில் தான் அந்த மேற்கோள் வருகிறது.
… What then would our Parliament do if we had one? When we have it, we would have a right to commit blunders and to correct them. In the early stages we are bound to make blunders. But, we, being children of the soil, won’t lose time in setting ourselves right. We shall, therefore, soon find out remedies against poverty. Then our existence won’t be dependent on Lancashire goods. Then we shall not be found spending untold riches on building Imperial Delhi. It will, then, be in keeping with the cottages of India. There will be some proportion observed between that cottage and our Parliament House. The nation today is in a helpless condition; it does not possess even the right to err. He who has no right to err can never go forward. The history of the Commons is a history of blunders. Man, says an Arabian proverb, is error personified. *The freedom to err and the power to correct errors is one definition of swaraj*. Having a parliament means such swaraj.
We ought to have Parliament this very day. We are quite fit for it. We shall, therefore, get it on demand. It rests with us to define “this very day”.
Swaraj is not to be attained through an appeal to the British democracy, the British people. They cannot appreciate such an appeal Its reply will be: “We never sought outside help to obtain swaraj. We achieved it with our own strength. You have not received it because you do not deserve it. When you do, nobody can withhold it from you.”…
முழு உரையையும் இங்கே பார்க்கலாம் – https://ltrc.iiit.ac.in/gwiki/index.php/Collected_Works/Volume_16/Speech_At_Gujarati_Political_Conference_I_%283rd_November_1917%29
ஸ்ரீ ஜடாயு,
காந்தியின் மீது உங்களுக்குள்ள பாசம் எனது கருத்துகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் அளவு சென்று விட்டது வியப்பளிக்கிறது. காந்தி என் தந்தை என்கிற திரைப்படங் குறித்து காலச் சுவடு இதழில் விரிவாக ஒரு கட்டுரை முன்பே எழுதியுள்ளேன். விரும்பினால் தேடிப் பார்த்தால் கிடைக்கும். காந்தியின் மீதான எனது விமர்சனம் பொதுப்படையானது. எனக்கும் அவருக்கும் ஏதோ சொந்த மனஸ்தாபங்கள் இருப்பதுபோல் உங்களுக்குத் தோன்றினால் நான் என்ன செய்ய முடியும்? காந்தியை காந்தியிடமிருந்தே நான் ஆதாரமாகக் கொள்கிறேன். இதற்கு உங்களுக்கு ஜயமோஹன் தேவைப்பட்டால் அதையே நானும் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்? காந்தி ஒரு ஜனநாயகவாதி அல்ல என்று ஒவ்வொரு சம்பவமாக நான் எடுத்துக் காட்டக் காட்ட, நீங்களும் ஒவ்வொன்றுக்கும் ஒரு சமாதானம் சொல்லலாம். ஆனால் எனக்கு அவகாசம் இல்லை. எனினும் தனது அரசியல் வாரிசு என ஒருவரை அறிவிப்பதே ஒரு ஜனநாயகவாதியின் செயல் அல்ல என்பதையாவது ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். காந்தி ஹிந்துஸ்தானத்தின் அரசியல் களத்தில் காலடி எடுத்து வைத்தது முதல் ஜனநாயகத்துக்கு முரணாக எத்தனை நடைமுறைகளை மேற்கொண்டார் என்பதை காங்கிரஸ் மகாசபையின் சரித்திரத்தைப் முழுவதுமாகப் படித்தால் தெரியவரும்.
-மலர்மன்னன்
////ராமரை வைத்து அவர் எழுதும் கட்டுரைகள் பல்லாண்டுகள் ஊற வைத்த ஷாம்பெய்ன் போல மதிப்பு மிகுதியாகின்றன.////
ராம நாம சுவையை அதன் மதிப்பை ஷாம்பெயின் உடன்தான் ஒப்பிடவேண்டுமா? அதுவும் ஆசிரியர் கணபதி அப்படி செய்யலாமா? ராமா ,,, ராமா ,,,,,,
உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை
” படித்தால் தெரிய வரும் ” என்று மலர்மன்னன் சுட்டிக் காண்பித்திருப்பது சிந்தனையைத் தூண்டுகிறது.
படித்த விஷயங்களில் புரிய வந்த சங்கதிகள் படிக்காத விஷயாதிகளை பார்த்துத் தெரிந்து கொண்ட பிறகு, மாற்று அபிப்ராயத்தை தருமா ?
அல்லது, வேற திக்கிலே நமது சிந்தனையை இட்டுச் செல்லுமா ?
இந்த தடுமாற்றம் எனக்கு விளங்கவில்லை.
படிக்காத விஷயங்களால் தெரியாது போன உண்மை நிலவரங்கள் + புரியாதுபோன யதார்த்த சூழல் எப்போதுமே ஒரு ஆபத்தான அபிப்ராயம் – புரிதல் – நிலைப்படுக்குத்தான் நம்மை தள்ளி நிறுத்தி வைக்கிறது.
இந்த இடைவெளியை எப்படி சரி செய்வது என்று தெரியவில்ல.
ஜனநாயகம் என்பதை ஐரோப்பியப் பார்வையில் புரிந்துகொண்டால், வெறும் ஓட்டுக்களின் எண்ணிக்கையில் முடிவுகளை ஆதரிப்பது என்றுதான் வாதிடத் தோன்றும். நம் நாட்டைச் சீர்குலைக்கும் காங்கிரஸ் தலைவர்கள் போலப் பேசச் செய்யும்.
ஹிட்லர் கூட ஓட்டுப போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில்தான் ஆட்சிக்கு வந்தான்.
ஆனால், இந்துத் தொல் மரபின்படி ஜனநாயகம் என்பது ஒரு பிரச்சினை பற்றிய புரிதல் உள்ளவர்கள் ஒன்று கூடி விவாதித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பது. காந்தி முழுக்க முழுக்க ஒரு இந்து மரபியல்வாதி.
இந்த இந்துதத்துவப் புரிதல் இருந்தால் காந்தியை ஜனநாயக விரோதி என்று ஒரேயடியாக முத்திரை குத்திவிட முடியாது.
இப்படி முத்திரை குத்தும் போக்கு இந்துத்துவம் இல்லை. இது ஆபிரகாமியப் போக்கு.
ஹிட்லருக்கு எந்த விதத்திலும் கொடூரத்தில் குறையாத வின்ஸ்டன் சர்ச்சில் கூட ஐரோப்பிய ஜனநாயக வா(ந்)திதான். (இன்றும் ஆதரிக்கப்படும் கொடூரக் கிறுத்துவத்தின் தலைவர்களில் ஒருவன். காந்தியை முற்றிலும் வெறுத்தவன்.)
அத்தகையோரின் யூரோப்பிய அரசியல் அமைப்பை ஆதரிக்கும் காலனிய தாக்கத்தின் எச்சங்களில் காந்திய வெறுப்பு இந்துக்களிடம் இன்றும் தொடர்கிறது. அந்த வெறுப்பின் மூலம் ஐரோப்பிய அரசியல் அமைப்பு அங்கீகரிக்கப்படுகிறது.
ஆனால், இந்துத்துவம் தனது அரசியல் அமைப்பை வேதங்களில் இருந்தே பெற வேண்டும். விவேகானந்தரும் அதையே சொல்கிறார்.
காந்தி மேல் வெறுப்பைத் தூண்டுவதற்காக கிறுத்துவ மிஷனரிகள் பல பில்லியன் டாலர்களைச் செலவழிக்கிறார்கள். அவர்களது தீய பிரச்சாரத்துக்கு நாம் இரையாகிவிடக் கூடாது.
காந்தி பல தவறுகளைச் செய்தார் என்பது வேறு. காந்தியே தவறு என்பது வேறு.
“காந்தி என் தந்தை” என்ற படம் பார்த்திருக்கிறேன். அந்தப் படம் காந்தியின் மீது எந்தக் குற்றமும் சாட்டவில்லை.
இஸ்லாமியர் ஒருவர் எடுத்திருந்தாலும் ஒரு இந்தியராகவே அவர் அந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அவரைப் போன்ற இஸ்லாமியர்களை இந்துத்துவம் எப்போதும் மதிக்கிறது ஆதரிக்கிறது. ஆனால், காந்தியின் மீதுள்ள வெறுப்பால், முகமதியர்கள் மேல் கொண்ட வெறுப்பு கூட இரண்டாம் இடத்திற்குப் போவது கவனிக்கத்தக்கது.
அந்தப் படத்தில் மிகத் தெளிவாகவே ஹீராலால் குற்றம் சுமத்தப் படுகிறார். காந்தி அல்ல.
காழ்ப்புணர்வோடு படம் பார்த்தால் காலனிய மயக்கத்தில் இல்லாத விஷயங்களை நம் மனம் காட்டும். பெரியவர்களுக்கும் அடி சறுக்கும்.
ஜடாயு போன்ற இளைய தலைமுறையினர் மிகச் சரியான புரிதலை முன் வைக்கிறார்கள். அதுவும் இலக்கிய நயத்தோடு. அவர்களால் மட்டுமே ஆக்கபூர்வமான நன்மைகள் செய்ய முடியும்.
.
காந்தியின் காலத்தில், காங்கிரசில் இந்து மரபின் ஆதரவாளராக இருந்தவர் ஒருவர் மட்டுமே – அவர் காந்தி மட்டுமே.
இது புரியாமல் காலனியக் காலத்தின் பாதிப்புகளை வைத்து அவரது முறையைப் புரிந்துகொள்ளாமல் போவது தவறு.
காந்தியின் இந்து உணர்வைக் குறை சொல்பவர்கள் ஆபிரகாமிய அரசியல் முறையின் ஆதரவாளர்களாக இருப்பதை அவர்கள் அறிய வேண்டும்.
இந்தியாவின் எதிரியான இந்து மரபின் பன்முகத்தன்மைக்கு எதிரான நேருவை இந்தக் காந்திய வெறுப்பாளர்கள் இந்த அளவு வெறுப்பதில்லை. ஏன் என்றால், நேருவும் ஐரோப்பிய அரசியல் அமைப்பை ஆதரிப்பவர்.
.
மலர்மன்னனும் ராம் அவர்களும் காந்தியடிகளிடம் அவர்கள் கண்ட குறைகள் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் காந்தியடிகள் இந்து விரோதியாக்கி விடாது. காந்தியடிகள் இறந்தபோது நான் ஐந்தாம் வகுப்புப் பயின்று கொண்டிருந்த சிறுவன். காந்தியடிகளின் இசுலாமிய பரிவுகளை கண்டு அவரைக் கடுமையாக ம்க்கள் திட்டியதையும் அறிவேன். இசுலாமியருக்கு இத்தனை ஆதரவாக உள்ள இந்த ஆளை யாராகிலும் சுட்டு வீழ்த்தமாட்டார்களா என்ற கடுஞ்சொற்களை என் காதிலே கேட்டுள்ளேன். அரசியல் புரியாத வயதென்றாலும் ஓரளவு அன்றைய சூழ்நிலை என் மனதில் ஆழ்ப்பதிந்துதான் உளது. இராமனைக் காட்டிற்கு அனுப்பிய தசரதனை மக்கள் ஏசியதைப் போன்றது அது. மக்கள் அவரைத் திட்டியதெல்லாம் ஆதங்கத்தின் விளைவு. அவர் கொல்லப்பட்டார் என்று அறிந்ததும் திட்டியோரும் அழுதனர். அன்று நாட்டில் இருந்த சோகம் காவியங்களிலே மட்டும் காணத்தக்க ஒன்றாகும்.
அவரிடம் காணப்பட்ட முரண்களைப் போன்ற குறைகள் அவருடைய வழிபடு கடவுளான இராமனிடமும் காணப்படும். கண்டு இராமபிரானையும் பழிப்போர் உண்டு. இருவரிடமும் கண்டு பேசப்பட்டு ஏசப்பட்ட பண்புகளே அவ்விருவரையும் அற்புதர்களாக்கின. Legendகள் ஆக்கின.
அந்த அடிப்படை உண்மைகளின் ஒரு பகுதியினை திரு ஜடாயு அவர்கள் இந்தக் கட்டுரையில் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
\\\\\\காந்தியின் இந்து உணர்வைக் குறை சொல்பவர்கள் ஆபிரகாமிய அரசியல் முறையின் ஆதரவாளர்களாக இருப்பதை அவர்கள் அறிய வேண்டும்.\\\\\
ஸ்ரீமான் களிமிகு கணபதி, க்ஷமிக்கவும். இதனை தங்களது முந்தைய உத்தரத்தில் குறிப்பிட்ட வாசகமான
“”இப்படி முத்திரை குத்தும் போக்கு இந்துத்துவம் இல்லை. இது ஆபிரகாமியப் போக்கு.””
அடைக்குறியிட இயலும். ஆனால் அது தவறான போக்கு என்பதால் நான் அதை தவிர்க்கிறேன்.
காந்தியின் ஹிந்துக்களுக்கு ஆதரவில்லாத போக்கு மற்றும் கணக்கு வழக்கின்றி முஸல்மான்களுக்கு ஸலாம் போட்டு அவர்களுக்கு கொம்பு சீவிய போக்கு இதைக்குறை சொல்லும் படியான ஹிந்துத்வ வாதிகள் யாரும் ஆப்ரஹாமிய அரசியல் முறையின் ஆதரவாளர்கள் இல்லை. அப்படி இருக்க அவசியமும் இல்லை.
சங்கத்தின் கோஷ் பாடல்களில் எண்பதுகளில் விதேசி துன்கள் (பாடல்கள்) இருந்தன. அவைகள் கூட சிறிது சிறிதாக ஹிந்துஸ்தானியாக முழுதும் மாற்றப்பட்டன. இன்று முழுதும் ஹிந்துஸ்தானி பாடல்களே. ஹிந்துத்வம் என்பது சங்கத்துடன் தொடர்புடைய ஹிந்துக்களில் ஆழப் பதிக்கப்பெற்ற விஷயம் என்பதை நினைவிலிருத்தவும்.சங்கத்துடன் தொடர்புடைய வ்யக்திகளில் காந்தி என்ற விஷயத்தில் கண்டிப்பாக இரு வேறு கருத்துக்கள் உண்டு. அதே சமயம் ஆப்ரஹாமியம் என்ற அவலத்திற்கும் சங்கத்தொடர்புடையவர்களுக்கும் ஸ்நான ப்ராப்தி கூடஅறவே கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்வது நல்லது. காந்தியை ஏற்பது மறுப்பது கொஞ்சம் ஏற்பது கொஞ்சம் மறுப்பது அவரவர் புரிதல் படி.
சங்கத்திலும் ஹிந்துத்வ இயக்கங்களிலும் பாடுபடுபவர் ஹிந்து முன்னேற்றம் ஹிந்துஐக்யதை இவற்றிற்காகவும் ஆப்ரஹாமியர் இந்த தேசத்தைக் கூறுபோடுவதை எதிர் கொள்ளவும் அவர்களின் மதமாற்ற சதிகளிலிருந்து ஹிந்துக்களை பாதுகாக்கவுமே பாடுபடுகின்றனர். அழுத்தம் திருத்தமான விஷயம் இதுவே. இது மட்டும் தான். விஷயம் இப்படி இருக்க காந்தி என்ற விஷயத்தை ஒரு அளவு கோலாக வைத்து ஹிந்துத்வர்களை வகை தொகைப் படுத்தி ஆப்ரஹாமியத்துடன் இம்மியளவும் தொடர்பு படுத்தல் ஒரு ஆங்க்ல பழமொழியை நினைவுறுத்துகிறது. Name the dog and hang it.
\\\\\\இந்தியாவின் எதிரியான இந்து மரபின் பன்முகத்தன்மைக்கு எதிரான நேருவை இந்தக் காந்திய வெறுப்பாளர்கள் இந்த அளவு வெறுப்பதில்லை. ஏன் என்றால், நேருவும் ஐரோப்பிய அரசியல் அமைப்பை ஆதரிப்பவர்.\\\\\
காந்தியின் ஹிந்துக்களுக்கு ஆதரவில்லாத அகண்ட ஹிந்துஸ்தானத்திற்கு எதிரான மற்றும் முஸல்மான்களுக்கு ஆதரவான போக்கை எதிர்க்கும் ஹிந்துத்வர்கள் காந்தியை ஒருசில விஷயங்களுக்காகவாவது ஏற்கலாம் ஆனால் நேரு என்ற வ்யக்தியை கொஞ்சமேனும் எவரும் ஏற்றுள்ளதாக தெரியவில்லை.
இன்று ஹிந்துஸ்தானத்தில் பின் பற்றப்படுவது ஐரோப்பிய பாராளுமன்ற முறையை ஒத்த ஒரு முறை. அரசியல் சாசனம் என்று நாம் அனைவரும் ஏற்றுள்ள படிக்கு அதற்கு மரியாதை. அவ்வளவே. பலமுறை மாற்றப்பட்ட அரசியல் சாசனம் ஹிந்துப் பண்பாட்டுக்கூறுகளுக்கேற்ப் மாற்றப்படுவதில் எந்த ஹிந்துத்வருக்கும் அபிப்ராய பேதம் இருக்கவியலாது.
\\\\ஜடாயு போன்ற இளைய தலைமுறையினர் மிகச் சரியான புரிதலை முன் வைக்கிறார்கள்.\\\\
ஸ்ரீமான் களிமிகு கணபதி, அது தங்களது அபிப்ராயம் என்ற படிக்கு எமக்கு ஏதும் ஆக்ஷேபம் இல்லை. நுட்பமான கருத்துக்களை ஸ்ரீமான் ஜடாயு பதிவு செய்கிறார் என்பதிலும் எமக்கு உடன்பாடே. ஆனால் இந்த வாசகத்தில் தொக்கி நிற்கும் முதியவர்களின் புரிதல் சரியில்லை என்பதில் எமக்கு ஆக்ஷேபம் உண்டு.
\\\\அதுவும் இலக்கிய நயத்தோடு.\\\
நானும் மிகவும் ரசித்து வாசிப்பதால் ப்ரதிபதத்தையும் ஒப்புக்கொள்கிறேன்.
\\\\அவர்களால் மட்டுமே ஆக்கபூர்வமான நன்மைகள் செய்ய முடியும்.\\\\
கடுமையான ஆக்ஷேபத்திற்கு உரிய கருத்துக்கள். ஹிந்து இயக்கங்களில் தங்கள் சமயத்தை அர்ப்பணித்து பாடுபடுபவர்கள் அனைவரும் ஆக்கபூர்வமான நன்மைகள் செய்பவர்கள் என்பது எனது கருத்து. ஊர் கூடி இழுப்பது ரதம். மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட ஹிந்துத்வர்கள் ஹிந்துக்களுக்கும் ஹிந்து இயக்கங்களுக்கும் செய்த, செய்யும் சேவைகளை அவமரியாதை செய்வது போல் இருக்கிறது இக்கருத்து. நான் பெயர்களை தவிர்க்க விரும்புகிறேன். முன் ஒருமுறை நான் மிக மதிக்கும் கருத்து வேறுபாடு கொண்ட ஒருவரின் அபிப்ராயங்களைப் பகிர்கையில் பொய்ப்பெயரில் ஒளிந்து கொண்டு அவரை வசை மாறி ஒருவர் பதிவு செய்த கருத்து இங்கு முழுதாக பதிவு செய்யப்பட்டதும் மூத்த எழுத்தாளர் ஒருவரின் கருத்துக்கள் திருத்தப்பட்டு குறைவாகப் பதிவேறியதும் பசுமையாக நினைவில் உள்ளது.
சங்க சிக்ஷாவர்கவில் ப்ரதிக்ஞை எடுத்தது நினைவுக்கு வருகிறது. ஆங்கே தேசத்திற்கு சேவை செய்யவே ப்ரதிக்ஞை எடுத்துள்ளோம். மோஹன்தாஸ் கரம்சந்தி காந்திக்கு அல்ல. ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்று ஹிந்துக்களை பாட வைப்பதற்கு ப்ரதிக்ஞை எடுக்கவில்லை.
.
மகாத்மா தோன்றியிருக்காவிட்டால் தீண்டாமையால் மதமாற்றம் தலை விரித்தாடி இந்தியா அந்நியர்கள் கைக்கு நிரந்தரமாக மாறியிருக்கும். அவரது உடலைக் கொன்றது தான் கோட்சே. அவர் ஆண்மாவை நிர்தாட்சண்யமாக பலமுறை கொன்றவர்கள் நேருவும் காங்கிரஸாரும். அவர் சுதந்திரத்தை விட பசு பாதுகாப்பு எனக்கு முக்கியம் என்றார். நேரு பசு பாதுகாப்பைக் கொன்றார்.
நான் சுதந்திர இந்தியாவில் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்தவனாக இருந்தால் நான் போடும் முதல் சட்டம் மதமாற்ற தடை சட்டமாக இருக்கும் என்றார் மகாத்மா. மதமாற்ற தடையை தகர்த்து எறிந்தார் நேரு. நாடு வாழ காங்கிரஸை கலைத்துவிடுங்கள் என தன் கைப்பட தான் சுட்டுகொல்லப்படுவதற்கு 4 மணி நேரம் முன்பு தன் பத்திரிகைக்கு எழுதினார் அண்ணல். கோட்சே காந்தியை கொன்றார். நேரு காந்தியின் இறுதி விருப்பத்தைக் கொன்றார். நேருவைவிட காங்கிரஸ் அளித்த சித்திரவதைகளில் இருந்து காந்திஜியை தப்ப வைத்த கோட்சே நல்லவன்.
குடியை ஒழிப்பதே தன் வாழ்நாள் லட்சியமாக போராடினார் மகாத்மா. அனைத்து காங்கிரஸ் அரசுகளும் குடிசாராய வியாபார சாம்ராஜ்யங்களை உருவாக்கின. காந்திஜி ஆதரித்த ஒருதலைபட்சமான போலி மதசார்பின்மை காந்திஜியின் கண்களுக்கு எதிரிலேயே கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி கண்டு கொண்டு இருந்தபோது கோட்சே முட்டாள்தனமாக அவசரப்பட்டு அவரைக் கொன்றான். காந்திஜிp nகொல்லப்படாமல் இருந்திருந்தால் அவர் வாழ்நாளிலேயே போலி மதசார்பின்மை செத்து இந்துக்களின் உண்மையான மதசார்பின்மை வென்றிருக்கும் ! (அகடவிகட அக்கப்போர் – துர்வாசர்-15.2.12)y
இந்த இதழின் அட்டைபட செய்தி (பொங்கலுக்கு 200 கோடி சரக்கு விற்பனை – நான் சொன்னது குடியரசுடா பாவிகளா ! குடிகார அரசு இல்லடா !!
தேவலோகத்திலிருந்து அன்ன பக்ஷி ஒன்று பூமிக்கு வந்ததாம். அதை சந்தித்த காகம் ஒன்று தேவலோகத்தின் பெருமைகளை கேட்டறிந்தது. எல்லாவற்றையும் கேட்ட பின்பு, தேவலோகத்தில் தின்பதற்கு நத்தையும், புழுக்களும் கிடைக்குமா என்று கேட்டதாம். காகத்தின் சிந்தனை அவ்வளவே.
“இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் ராமன் என்னும் செம்மை சேர் நாமம்” என்கிறார் கம்ப நாட்டாழ்வார். ராம ரசத்தை பருகுவோம் என்றார் சதாசிவ ப்ரம்மேந்த்ரர்.
இங்கே ஒரு “குடி” கேடி ராம நாமத்தின், கம்ப ராமாயணத்தின் மகத்துவத்தை பற்றி கருத்து பதிவு செய்கையில், “ஊற வைத்த ஷாம்பெயின்” உதாரணம் கூறியிருக்கிறது. “குடி” போதையில் கூறப்பட்ட அந்த பிதற்றலை தமிழ் ஹிந்து தளமும் இங்கே பதிப்பித்திருக்கிறது. இந்த பிதற்றலுக்கு கட்டுரை ஆசிரியர் ஜடாயு என்பவரும் நன்றி தெரிவித்திருக்கிறார்.யாரோ பாராட்டினால் போதும் என்று நினைக்கிறார் போலும்.
இதை சரியாக சுட்டி காட்டிய “திராவிடன்” என்பவரின் ஹிந்து உணர்வு போற்றத்தக்கது. இவருடைய கண்டனத்துக்கு “களிமிகு கணபதி” என்ற பதிவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மக்கட் பதடிகளின் மதி கெட்ட உளறல்களை இதிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்த தளத்தின் ஆசிரியர் குழுவுக்கு கோரிக்கை விடுக்கிறேன். போற்றுதலுக்குரிய கம்ப ராமாயணத்தை பற்றிய இந்த கீழ்த்தரமான உவமையை படிக்கும் பொழுது மிகுந்த மன வேதனை ஏற்படுகிறது. சில சமயங்களில் தமிழ் ஹிந்து தளம் உண்மையிலேயே ஹிந்து தளம் தானா என்ற சந்தேகம் எழுகிறது.
புலித்தேவன்,
திராவிடர் கழக ஆட்சியில் தமிழ் படித்தாலும் புரிந்துகொள்ள முடியாமல் போவது புரிந்துகொள்ளக் கூடியதுதான். தொடர்ந்து பயிற்சி செய்தால் தமிழ் புரிய வரும். தமிழ் புரிய ஆரம்பித்தால் பின்னர் தமிழ் மரபு பிடிபட்டு வசைகள் எழுதத் தயங்கும் பக்குவம் வரக் கூடும்.
.
புலித்தேவன்,
சக்தியென்ற மதுவை உண்போமடா
தாளம் கொட்டித் திசைகள் அதிரவே..
என்றும்
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு விண்ணெலாம்
மதுரமிக்க ஹரி நமக்கு மதுவெனக் கதித்தலால்..
என்றும் மீசைக்காரர் பாடியிருக்கிறார்.
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
என்கிறார் அபிராமி பட்டர்.
கணபதியில் ஆரம்பித்து தமிழ் ஹிந்து வரை ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தாயிற்று. அடுத்து பட்டரையும் பாரதியையும் வசைபாடத் தயாராகப் போகிறீர்களோ?
மேற்சொன்னவற்றின் நவீன வடிவம் தான் களிமிகு கண்பதி சொன்னது. அந்த உவமையில் கசடு ஏதும் இல்லை. உவமைக்கு அதற்குரிய இடத்தை அளித்து விட்டு உணமையைப் புரிந்துக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள்.
மித்ரபேத வசை பொழியும் புலித்தோல் போர்த்திய மிஷநரிகளை ஹிந்துக்கள் அடையாளம் காண இயலும். தமிழுக்கு நல்லது எது ஹிந்துக்களுக்கு நல்லது எது என்பதை தமிழ் ஹிந்து தளம் நன்றே அறியும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பர். என்ன என்று புரிகிறது.
கணபதி மற்றும் ஜடாயு,
ஆயிரம் உவமேயங்கள் கூறினாலும் ராம நாமத்தை ஷாம்பைனுடன் ஒப்பிட்டது குற்றம் குற்றமே,
பாமரர்களான எங்களுக்கு நேரடியான பொருள் மட்டுமே பிடிபடும், நீங்கள் இருவரும் இத்தளத்தில் பல கட்டுரைகள் எழுதி உள்ளீர்கள். உங்கள் இருவர் மேலும் என்னை போன்ற இத்தல வாசகர்கள் பலருக்கு நல்ல மதிப்பு உண்டு இன்னும் உங்களை சிறந்த ஆசிரியர்களாக நான் மிகவும் மதிக்கிறேன்
உங்களுக்கு இலக்கியம் இன்ன பிற சூட்சுமங்கள் தெரியலாம். எம்மை போன்ற பாமரரும் பரவலாக கொண்டதுதான் இந்துமதம். அவர்களுக்கு உங்களின் உட்பொருள் விளங்காது, எம் ராம நாமம் அசிங்கபடுவதை பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியாது. அது ஜடாயுவே ஆனாலும்.
நீங்கள் இன்னும் உங்கள் லெவெலில் இருந்து சமாளிப்பு பதில் தருவது ஏற்க முடியவில்லை. (please consider)
இந்துமதத்தில் பல விஷயங்கள் இப்படி தான் நாளடைவில் கொச்சை படுத்தப்பட்டு பின்னர் பிற மதத்தினரால் கேலிக்கு ஆளாகி நாம் ஏதும் செய்ய இயலாது கை பிசைந்து நிற்க வைத்துள்ளன.
ஜடாயு உங்கள் தளத்தில் பல உயர்வான படைப்புகளில் நான் பயனடைந்திருக்கிறேன், கணபதி கூறிய ஒப்பிட்டை நீங்கள் ஏற்பது சரியல்ல நாகரிகமாக நீங்களே சுட்டி காட்டியிருக்கவேண்டும், (NO justification please)
மேலும் மது என்பதற்கு நேரடியாக தேன் என்றும் ஓர் அர்த்தம் உண்டு. உள்ளத்தே.விளைந்த கள்ளே” என்பது தான் பட்டர் வாக்கு, ஊற வாய்த்த ஷாம்பைனுக்கும் “உள்ளத்தே விளைந்த கள்ளுக்கும்” வித்தியாசம் நிறைய உண்டு.
மேலும் பட்டர் ஒருவர்தான் நிலவை வரவழைக்க முடியும்.அவர் எல்லாம் கடந்த எல்லாவற்றையும் சமமாக பாவிக்கும் நிலை எய்தியவர்.உங்கள் ஒப்பிடு தவறு
இதற்கு மேல் இதை பற்றி விவாதிப்பது பிறர்க்கு இடைஞ்சல் ஆகலாம் ஆகவே இத்துடன் முடித்து கொண்டு ஷாம்பெயின் ஒப்பீடு தவறு என்று மீண்டும் உரக்க பதிவு செய்து கொண்டு நிறைவு செய்கிறேன்.
என்னை நீங்கள் என்ன திட்டினாலும் கவலை இல்லை,ராம நாமத்தை இந்துக்களாகிய நம்மாவது இழிபடுத்தாது இருப்போம் என்று நினைத்து செயல்படுங்கள்.
///அவரிடம் காணப்பட்ட முரண்களைப் போன்ற குறைகள் அவருடைய வழிபடு கடவுளான இராமனிடமும் காணப்படும். கண்டு இராமபிரானையும் பழிப்போர் உண்டு. இருவரிடமும் கண்டு பேசப்பட்டு ஏசப்பட்ட பண்புகளே அவ்விருவரையும் அற்புதர்களாக்கின. Legendகள் ஆக்கின////
ஐயா, வணக்கங்கள், நலமா?
ராமனை டக்கென்று அற்புதர் என்று சொல்லிவிட்டீர்கள்.இது பற்றி விவாதிக்க விரும்பவில்லை இருப்பினும் இனி தாங்கள் இதுபோல் எழுத வேண்டாம் என வேண்டிகொள்கிறேன். ராமன் அவதாரம் அவன் கடவுள். நான் இதற்குமேல் எழுத விரும்பவில்லை.ராமனிடம் தாங்கள் கண்ட முரண்கள்தான் என்ன?
ஜடாயு,
“அரைகுறை அறிவு ஆபத்தானது ” என்பார்கள். அது உம்மை பொறுத்த வரை மிகச் சரியாக இருக்கிறது.
அபிராமி பட்டரும், பாரதியாரும் கூறியதை உம்முடைய அடிவருடியின் பிதற்றலுக்கு வக்காலத்து வாங்க உபயோகப்படுத்திக் கொண்டு விட்டீர்கள்.
புலன்களுக்கு எட்டாத இறை நிலையை அடைந்த பட்டர், “உள்ளத்தே விளைந்த கள்ளே” என்று மொழிந்தார். “கண்டவர் விண்டிலர்” என்பார்கள். விவரிக்க இயலாத பேரானந்தத்தின் உணர்வை பாமரர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர் போன்ற ஞான தபோதனர்கள் சில உயரிய உலகியல் பொருட்களை உவமையாகக் கூறுவதுண்டு. இறைவியின் பேரழகை பல இடங்களில் பட்டர் வர்ணிக்கிறார். அந்த வர்ணனை ரத்த, மாமிச உடலை பற்றியதல்ல! பிரணவ ஸ்வரூபினியின் பாதாரவிந்தங்களில் லயித்த பட்டரும், பாரதியும் உம்முடைய அடிவருடி கூறியதையும் ஒப்பிட்ட போதே உம்முடைய தரம் எங்களுக்கு புரிகிறது. முதுகு சொறிய ஆள் தேடி அலைகிறீர்கள் என்பதும் தெரிகிறது.
மதுவுண்ட நிலையை இறை நிலைக்கு உவமையாகக் கூறியதால் கள்ளுண்டவர்கள் அனைவரும் இறை நிலை அடைந்து விட்டார்கள் என்று பொருள் கொள்வீர்களா என்ன? விஷமத்தனமான உம்முடைய எடுத்துக்காட்டு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உம்முடைய அடிவருடி கணபதி மது என்ற வார்த்தையையோ கள் என்ற வார்த்தையை கூட பயன் படுத்தவில்லை. ஷாம்பெயின் என்கிறது அது. ஆங்கிலேயத் தொடர்பில் உருவானவரோ என்பதை இங்கு யாரும் அறிந்திருக்க நியாமில்லை. அது நவீன வடிவம் என்று நீர் பரிந்து பேசுகிறீர். விமர்சித்தால் வைகிறேன் என்கிறீர். அடிவருடியின் கேவலமான உவமை உமக்கு இனிக்கிறது. விமர்சனம் வலிக்கிறது. நீர் காந்தியை பற்றி, ராம நாமத்தை பற்றி எழுதப் புகுந்து விட்டீர். மதியீனர்களை மாட்சிமை பொருந்தியவர்கள் என்றா கூற முடியும். உள்ளதை உள்ளபடி கூறினால் வீணர்கள் வீறு கொண்டு எழுகிறார்கள். மீசைக்காரர் இருந்திருந்தால் உம்முடைய முகத்தில் காறி உமிழ்ந்திருப்பார்.
தமிழ் ஆர்வலர்கள் சார்பாகவும், உன்னத தமிழ் இலக்கியமான கம்ப ராமாயணத்தை உயிரினும் மேலாக நேசிப்பவன் என்ற முறையிலும், கம்ப ராமாயணத்தை காதலிப்பவர்களின் கடமையாகவும் கருதி உம்மை எச்சரிக்கிறேன். நீரும் உம்முடைய அடிவருடியும் உங்களுடைய கீழ்த்தரமான உவமைகளையும், நச்சுப் பதிவுகளையும் இதோடு வெளியிடாமல் நிறுத்திக் கொள்ளுங்கள்.
தமிழை கேவலப்படுத்துபவர்களுக்கு நன்றாக உறைக்க வேண்டும். திராவிடனுக்கும், புலிதேவனுக்கும் வாழ்த்துக்கள்.
மிஸ்டர் புலித்தேவன்,
// கம்ப ராமாயணத்தை உயிரினும் மேலாக நேசிப்பவன் என்ற முறையிலும், கம்ப ராமாயணத்தை காதலிப்பவர்களின் கடமையாகவும் கருதி உம்மை எச்சரிக்கிறேன் //
ஜடாயு கம்பராமாயணம் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். இணையத்தில் பலருக்கும் அது தெரியும்.
கம்பராமாயணத்தை இவ்வளவு தூரம் “நேசிக்கும்”, “காதலிக்கும்” நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? எச்சரிக்கை விடுக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?