முந்தைய பகுதிகள் :
முன் கட்டுரையில் மஹாராஷ்டிர மாநிலத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் பரிணாம வளர்ச்சி என்பது பல்வேறு தாக்குதல்கள் மூலம் காணப்பட்டது. 12.3.1993-ல் நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் மோசமான தாக்குதலாகும். பாரத தேசத்தில் இது வரை நடந்த தாக்குதல்கள் அனைத்திலும் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பு சிமி என்பது எல்லோரின் ஒருமித்த கருத்தாகும். ஆனால் சிமி அமைப்பினர் நேரடியாக ஈடுபடாமல், மற்ற இயக்கங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், பாதுகாப்பினையும் கொடுத்து வந்துள்ளார்கள்.
விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் மஹாராஷ்டிர மாநிலத்தில் நடக்கும் முக்கிய பண்டிகைக் காலங்களில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு அவுரங்காபாத் நகரைச் சார்ந்த முகமது அஸ்லம் என்கிற சலீம் தேர்வு செய்யப்பட்டான். இவன் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் பயிற்சி பெறுவதற்காகவே அனுப்பப்பட்டவன். இவ்வாறு பயிற்சி பெற்று இந்தியா திரும்பும்போது நான்டெட் ரயில் நிலையத்தில் Sachkand Express ரயிலுக்குக் காத்திருக்கும்போது டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். இவன் குஜராத் மாநிலத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்திலும் இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவன். பல்வேறு பெயர்களில் அடையாள அட்டை வைத்திருந்தான். சலீம் முஹமது எனும் பெயரில் காஷ்மீர் மாநில அடையாள அட்டையும், யூசுப் எனும் பெயரில் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டும் வைத்திருந்தான்.
மும்பைப் பங்குச் சந்தையின் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஷமீர் ஷேக் என்கின்ற பெயரில் ஒரு ஓட்டுநர் உரிமம் பெற்று, பின்னர் அதையே பயன்படுத்திக் கம்ப்யூட்டர் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து கணினிப் பயிற்சி பெறுவதற்குச் சேர்ந்தான். இந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு அருகில் உள்ளது. ஆகவே பங்குச் சந்தையின் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே பங்குச் சந்தையின் அமைப்பு, சூழ்நிலை போன்றவற்றை ஆய்வு செய்வதற்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜக்கு உர் ரகுமான் என்ற வேறு பெயரில் அந்த இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தான். இவனைப் போல் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பலர் வேறு பெயர்களில் மும்பையில் இருப்பதாக உளவுத் துறையினர் தெரிவித்தார்கள்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் மட்டும் நடந்த 18 ஆண்டுகளில் 14 முறை வெடி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. நடந்த அனைத்துக் குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் பல்வேறு இயக்கங்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டாலும், இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. குண்டு வைக்கப்பட்ட நேரம், வைக்கப்பட்ட முறை ஆகியவை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பிலிருந்து ( சிமி ) உருவான இந்தியன் முஜாஹிதீன் குழுவைக் கை நீட்டிக் காட்டுகிறது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் சிமியின் மறு அவதாரமாகக் கருதப்பட்டாலும், இவர்களுக்குப் பின்பலமாக இருந்து செயல்பட வைத்தவர்கள் சிமி அமைப்பினரே. தாக்குதல் நடத்துவதற்குரிய நேரத்தை நிர்ணயிப்பது, இடத்தைத் தேர்வு செய்வது, வெடி பொருட்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வது, இவை, சிமி இயக்கத்தின் மிக முக்கியப் பொறுப்புக்களாகும்.
2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி நடந்த தாக்குதல் 1993-ம் ஆண்டு நடந்த தாக்குதலை விடக் கொடூரமானது. 15 நிமிடங்களில் மும்பை நகரை அதிர வைத்த தாக்குதல். இத்தாக்குதல் துல்லியமாகத் திட்டமிட்டுத் தந்திரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் மூலம் பயங்கரவாதத்தையும், பயத்தையும் பரப்ப நினைத்தவர்கள் திட்டமிட்டதை சாதித்தார்கள் என்றால் அது மிகையாகாது. இந்தக் குண்டு வெடிப்பு ஜிகாதிக் குழுக்களின் கூட்டமைப்பு இதைச் செய்திருக்கலாம் என்றும் காவல் துறையினர் தெரிவித்தார்கள்.
இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் எனக் காவல்துறையினர் பட்டியலில் உள்ள முதல் நபர் ஜலீஸ் அன்சாரி. இவன் மும்பை வி.என்.தேசாய் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிபவன். டைம் பாம்கள் செய்வதில் கில்லாடி. 1993-ம் வருடம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி நீண்ட தூர ரயில்களில் பாம் வைத்தது இவனது கோஷ்டியாகும். இரண்டாவதாகச் சந்தேகப்படும் நபர், சி.எ.எம்.பஷீர் என்பவந். இவன் கேரளத்தில் உள்ள ஆலுவாவைச் சார்ந்தவன்; ஏரோநாட்டிகல் எஞ்சினியர். சிமி இயக்கத்தின் கேரளத் தலைவராக இருந்தவன். 1980ல-ல் பயங்கரவாதப் பயிற்சி பெறுவதற்குப் பாகிஸ்தான் சென்றவன். மும்பை காட்கோபர் தாக்குதல் திட்டத்தைத் தீட்டியவன். மூன்றாவதாக உளவுத்துறையினர் சந்தேகப்படும் நபர் சாக்யுப் நச்சன். இவன் 2003-ம் வருடம் மார்ச்சில் முலுந்த் வெடிகுண்டுச் சம்பவத்தின் சூத்ரதாரி. தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவது சம்பந்தமான பயிற்சி பெறுவதற்கு அடிக்கடி பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்றவன். தனது சொந்த ஊரான பட்காவில் முஸ்லீம் இளைஞர்களைப் பயங்கரவாதப் பயிற்சி பெற ஊஉக்குவித்தது மட்டுமில்லாமல் அவர்களை அனுப்பி பயிற்சி பெற அனைத்து உதவிகளையும் செய்தவன். இவர்களுக்கு உதவி செய்தவர்கள் சிமி இயக்கத்தைச் சார்ந்தவர்கள்.
2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நாக்பூரில் உள்ள கட்டிடத்ததைத் தகர்க்கத் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்த முற்பட்டபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று லஷ்கர்-இ-தொய்பாவைச் சார்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த குண்டு வெடிப்பிற்கு ஏப்ரல் மாதமே இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் நன்கு திட்டமிட்டார்கள். ஆகவே இந்தத் தாக்குதலுக்குத் தேவையான வெடி பொருட்கள் ஏப்ரல் மாதமே மும்பையின் பாதுகாக்கப்பட்டன. எந்தத் திட்டத்தையும் ஒருவரைக் கொண்டு செயல்படுத்த லஷ்கர்-இ-தொய்பாவினர் முடிவு எடுப்பதில்லை. எவ்வாறு 1993-ல் நடந்த குண்டு வெடிப்பிற்குத் தாவூத் இப்ராஹிம் சூத்திரதாரியோ, அதே போல் 2008-ல் நடந்த குண்டு வெடிப்பிற்கு ரகீல் அப்துல் ரகுமான் ஷேக்(Raheel Abdul Rehman Sheikh) என்பவனை லஷ்கர் அமைப்பின் தலைவர் நியமித்தார். ஆகவே இத்திட்டத்தைச் செயல்படுத்த ரகுமான் ஷேக் தனக்குத் துணையாக அவுரங்காபாத் நகரைச் சார்ந்த ஷபியுதீன் அன்சாரி(Zabiuddin Ansari) என்பவனும் அவனுடன் சுல்ஃபிகர் ஃபயாஸ் காஸி(Zulfiqar Fayyaz Qaji) என்பவனுடன் சேர்ந்து திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால் துவக்க கால கட்டத்தில் அப்துல் ரகுமான் ஷேக் சிமி இயக்கத்தினருடன் அதிகத் தொடர்பு கொண்டவன். ஆகவே இவ்வாறு திட்டமிட்டுக் காரியத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி 11 நிமிடங்களில் புற நகர் ரயில் நிலையங்களில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 209 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 700-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள். இந்தப் பயங்கரவாதச் சதித் திட்டத்தை நிறைவேற்றியவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவினரும், சிமி இயக்கத்தினரும் எனக் காவல்துறை தெரிவித்தது. ப்ரெஷர் குக்கரில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. 2.5 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ்சும் உடன் அமோனியம் நைட்ரேட்டும் அடைக்கப்பட்டதாக ஆய்வு செய்தவர்கள் தெரிவித்தார்கள். இவ்வாறு குண்டு வெடிக்கப்போவதாக உளவுத் துறையினர் தகவல்களை முன்கூட்டியே தெரிவித்திருந்தார்கள். ஆனால் இது சம்பந்தமாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறும்போது “தகவல்கள் கிடைத்தன, ஆனால் எப்போது எந்த நேரத்தில் என்பது தெரியாத காரணத்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய இயலவில்லை ” எனக் கூறியது வெட்கக்கேடான செயலாகும்.
1999-ல் அவுரங்காபாத்தில் நடந்த சிமி இயக்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டவன். அந்தக் கூட்டத்தில் பேசிய அசிம் கௌரியின் பேச்சைக் கேட்டு லஷ்கர்-இ-தொய்பாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவனாகக் காட்டிக் கொண்டதால் இவனது ஆர்வத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இவனது ஆர்வத்தின் காரணமாக 2003-ல் ஶ்ரீநகரில் நடந்த Ahl-e-Hdis பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பல பிரதிநிதிகளின் நட்பும் கிடைத்தது. இதில் கலந்து கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் பொறுப்பாளர்களைச் சந்தித்துத் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினான். தனது நோக்கத்திற்கு ஏதுவாகப் பலர் இருந்ததால் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைத்துக் கொண்டான்.
2006-ல் நடத்திய குண்டு வெடிப்பு சம்பந்தமாக மகாராஷ்டிரக் காவல்துறையினர் பிகாரில் இருவரையும், நவீ மும்பையில் ஒருவரையும் இது தொடர்பாகக் கைது செய்தார்கள். பீகார் மாநிலத்தில் இந்தியா நேபாள எல்லையில் அமைந்துள்ள மாவட்டமான மதுபானியில் உள்ள Basupatigaon எனும் பகுதியிலிருந்து காலித் அசீஸ் ரௌனக் அசீஸ் ஷேக்(Khaled Aziz Raunak Aziz Sheik) என்பவனும் கமல் அஹ்மத் மொஹம்மத் வகில் அன்சாரி(Kamal Ahmad Mohammad Vakil Ansari) என்கிற சிமி இயக்கத்தை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களைப் போலவே மத்திய மும்பையில் யூனானி மருத்துவராக பணிபுரியும் தன்வீர் அன்சாரி (Tanvir Ansari) என்பவனையும் கைது செய்தார்கள். இவர்களைப் போலவே 2006ம் ஆண்டு குண்டு வெடிப்பில் முக்கியப் பங்காற்றிய சிமி இயக்கத்தைச் சார்ந்த மூன்று பேர்கள் ஷகீல் வாசி, ஷகிர் அஹ்மத் நாசி, முகம்மது ரேஹான் கான் ஆகியவர்கள் நாக்பூரில் கைது செய்யப்பட்டார்கள்.
மகாராஷ்ட்ர மாநிலத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தங்களது திட்டங்களை எவ்விதச் சிக்கலும் இல்லாமல் வகுப்பதற்கு மாநிலத்தில் சில இடங்களைத் தேர்வு செய்து உள்ளார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் அவுரங்காபாத் ஒன்றாகும். 9.5.2005-ம் தேதி மகாராஷ்ட்ர மாநில காவல்துறையினர் அவுரங்காபாத் நகரில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவரைத் தேடும்போது நடந்த சோதனையில் 30 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துப் பொருள்களும், ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகளும், பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் லஷ்கர்-இ-தொய்பாவின் அவுரங்காபாத் பொறுப்பாளர் இருந்ததாக பின்னர் தகவல் வெளியானது. இந்தச் சோதனையைப் போலவே மாலோகான் நகரில் 14.5.2006ஆம் தேதி நடந்த சோதனையிலும் ஏராளமான வெடிமருந்துப் பொருள்கள், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்தியப் புலனாய்வுப் பிரிவினர் மகாராஷ்ட்ர மாநிலத்திற்கு அனுப்பிய இரகசியக் குறிப்பில் நன்கு பயிற்சிபெற்ற 600க்கும் அதிகமான லஷ்கர்-இ-தொய்பாவினர் கடற்கரை வழியாக மும்பைக்கு ஊடுருவி இருப்பதாகவும், எல்லைப் பகுதியில் நன்கு கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்கள். இவ்வாறு ஊடுருவியவர்கள் பூனாவில் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பதாகவும், சூடான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச பயங்கரவாதியின் கட்டளைப்படி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்தக் குறிப்பில் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
2006ஆம் ஆண்டு கேரளத்தில் பிறந்து ஓமனில் கணினித் தொழிலில் ஈடுபட்டிருந்த Sarfaraz Nawaz-ம் இவருடன் மஸ்கட்டில் தொழில் புரியும் அலி அப்துல் அஸிஸ் அல் ஹொட்டி (Ali Abdul Aziz al-Hooti) யும் இணைந்து, இயற்கைக்கு மாறாக ஜிகாதிக்கு ஆட்கள் நியமித்தார்கள். இவ்வாறு ஜிகாதிக்கு ஆட்கள் தேர்வு செய்வது லஷ்கர் அமைப்பை வலுப்படுத்தவும், உலக நாடுகளில் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும் இந்த காரியத்தில் இருவரும் ஈடுபட்டார்கள். இவர்களில் ஹொட்டி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐக்கிய அரபு நாடுகள், மற்றும் மாலத்தீவுகளில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு தேவையான நிதியை ஏற்பாடு செய்து கொடுப்பது முக்கிய பங்காகும். 2005இல் இந்தியாவில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்களிலும், 2008 நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தாக்குதலிலும் Sarfaraz Nawaz-ம் இவருடன் மஸ்கட்டில் தொழில்புரியும் அலி அப்துல் அஸிஸ் அல் ஹொட்டி (Ali Abdul Aziz al-Hooti)-க்கும் முக்கிய பங்கு இருப்பதாக உளவுத் துறையினர் தெரிவித்தார்கள் இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன் என்கிற அமைப்பு ஏற்படுத்துவதற்கு இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். 2008 மும்பை தாக்குதலுக்குப் பின் இந்தியா இவர்கள் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ஏற்படுத்திய பின் இந்தியாவில் நடந்த அனைத்து இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இந்த அமைப்பே ஈடுபட்டது. தூக்குதல் நடத்துவதற்கு முன் உள்ளுரில் உள்ள அனைத்து மீடியாவிற்கும் ஈ-மெயில் மூலம் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்து விடுவார்கள். அனுப்பப்படும் ஈமெயில் அனைத்து மகாராஷ்ட்ர மொழியில் இருக்கும். ஆகவே மும்பை பூனா, அகமாதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் தாக்குதல் தொடுப்பதற்கு 10 நிமிடங்கள் முன் ஈமெயில் அனுப்பப்படுகிறது. இந்தப் புதிய தந்திரம் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரின் புதிய நடவடிக்கையாகும். ஆகமாதாபாத் குண்டுவெடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட கார் நவீன மும்பையிலிருந்து வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உத்திர பிரதேசத்தில் உள்ள ஆஸம்காட் பகுதியில் இந்தியன் முஜாஹிதீன் துவக்கப்பட்டதாக இருந்தாலும், இவர்களின் செயல்பாட்டின் முக்கியக் கேந்தரமே மும்பையாகும்.
பாகிஸ்தானைச் சேர்ந்த குழுக்கள் வெறுமனே ஆட்களைக் கொல்வதைவிட இந்தியப் பொருளாதாரத்தை நெரிக்கிற- உலகத்திற்கே தெரியும்படியான தாக்குதல்களில் ஈடுபடத்தான் அதிக வாய்ப்புள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்தது. பயங்கரவாதிகளின் ஒரே நோக்கம் பெரிய எண்ணிக்கையில் கொலை செய்வது அல்ல. நாட்டைப் பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவதுதான் என்றார் பாகிஸ்தானைச் சார்ந்த மூத்த பத்திரிகையாளர். இந்தக் கோணத்தின் அடிப்படையில் நடந்ததுதான் மும்பை தாக்குதல். அதில் நன்கு பயிற்சிபெற்ற தற்கொலைப் படை கமாண்டோக்கள் கடல் வழியே அனுப்பபட்டார்கள். லஷ்கர்-இ-தொய்பாவின் தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லி இந்தியப் புலனாய்வு அதிகாரிகளுக்குத் தந்த வாக்குமூலங்களில் தனது பாகிஸ்தானிய பொறுப்பாளர்களில் ஒருவர் மும்பை தாக்குதலுக்குத் திட்டமிடும் போது “வித்தியாசமான முறையில் தாக்குதல் நடத்தும்படி சிந்திக்கவும்!” எனக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தான்.
மகாராஷ்ட்ராவில் நடந்த பயங்கரவாத தாகுதல்களுக்கு வெடிமருந்துப் பொருள் கொண்டுவர குஜராத் கடற்கரையையும் பயங்கரவாதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் லஷ்கர்-இ-தொய்பாவும் கராச்சியிலிருந்து வெடிமருந்துகளை மும்பைக்குக் கொண்டுவருவதற்கு பாதுகாப்பான வழி என குஜராத்தின் கடற்கரையைத் தேர்வுசெய்தார்கள். லஷ்கர்-இ-தொய்பாவின் மகாராஷ்ட்ரப் பொறுப்பாளரான ஷேக்(Sheikh) என்பவனுக்கு அகமதாபாத் நகரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காகத் தேவையான 9 கிலோ ஆர்.டி.எக்ஸ். குஜராத்தின் கடற்கரை வழியாக அனுப்பப்பட்டது. இந்தத் தாக்குதல்களுக்காக 2002ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை காஷ்மீரில் பயங்கரவாதச் செயலுக்கு உடந்தையாக இருந்த முகமது இக்பால் தனது மாஃப்பியா கும்பலின் உதவியுடன் வெடிமருந்துப் பொருட்கள் ஷேக்குக்கு ஒப்படைக்கும் பணியைச் செய்துமுடித்தான். இந்தச் செயலுக்காக புதிதாக ஒருவனை லஷ்கர் அமைப்பினர் நியமித்தார்கள், அந்தப் பொறுப்பாளரின் பெயர் பெரோஸ் அப்துல் காஸ்வாலா(Feroze Abdul Ghaswala) என்பவன். இவன் ஆட்டோமோபைல் மெக்கானிக், இவன் தனக்கு உதவியாக இருக்க கம்யூட்டர் என்ஜினியரான முகமது அலி ஷிப்பா (Mohammad Ali Chippa) என்பவனையும் உடன் சேர்த்துக் கொண்டான்.
1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு முக்கியப் பொறுப்பாளராக இருந்த தாவூத் இப்ராஹிம் எட்டாவது குற்றவாளியாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்தியாவில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியோடியவர்கள் குறித்து பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டு தற்போது அந்த பட்டியலில் தவறுகள் இருப்பதாகக் கூறி உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றுக் கொண்டது. இந்த பட்டியலில் லஷ்கர்-இ-தொய்பாவின் தவைலர் ஹஃபீஸ் முகமது சயீத், ஐ.எஸ்.ஐயின் மேஜர் சமீர் அலி முதலியவர்கள் முதல் முக்கியமான குற்றவாளியாக இந்திய அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் இந்தக் குற்றவாளிகளை கைது செய்ய இதுவரை மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு கைதிகள் பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம் எதுவும் கிடையாது. ஆனால் தங்கள் நாட்டில் தாவூத் இப்ராஹிம் இல்லை என் பாகிஸ்தான் திரும்ப திரும்ப பொய்கூறி வருகிறது. தாவூத்தை நாடு கடத்தும் அளவுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா போதுமான அளவிற்கு நெருக்கடி கொடுக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் பாரதீய ஜனதா கட்சி இருந்தபோது தாவூத் விவகாரத்தை அத்வானி அமெரிக்காவிடம் எடுத்துச் சென்றபோது 2003-2004இல் தாவூத் நாடு கடத்தும் அளவிற்கு அதற்கான வாய்ப்புகள் தெரிந்தது. இதன் காரணமாக அமெரிக்கா தாவூத்தை உலகளாவிய பயங்கரவாதி என அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள தாவூத்தின் நிதி முடக்கப்பட்டது. தாவூத்துடன் உள்ள அமெரிக்கர்களுக்கு உள்ள தொடர்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பாகிஸ்தான் தாவூத் தங்கள் நாட்டில் இருப்பதாக ஒப்புக்கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் 2004இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ஏற்பட்டதால், தாவூத் இந்தியா கொண்டுவரும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், கராச்சியிலிருந்தபடி இந்தியாவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துகிறான். அந்த நெட்வொர்க்கை ஒடுக்குவதில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தயக்கம் காட்டுகிறது.
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி மும்பை தாக்குதல் தொடர்பாக அவிழ்க்கப்படாத முடிச்சு தொக்கி நிற்கிறது. அதாவது லஷ்கர்-இ-தொய்பாவின் தற்கொலைப் படை பயங்கரவாதக் குழுவைச் சார்ந்த 10 பேர்கள் மட்டுமே இந்தத் தாக்குதல்களை நடத்தினார்கள் என உளவுத் துறையினர் தெரிவித்தார்கள். ஆனால் தாக்குதல் நடத்திய 10 பேர்களில் ஒருவர் கூட மும்பைக்கு ஒருமுறைகூட வராமல், எல்லா இடங்களுக்கும்- குறிப்பாக தாக்குதல் நடத்தும் மையங்களுக்கு அவ்வளவு எளிமையாகச் சென்றடைந்தனர் என்றால் மிகப் பெரிய திட்டமிடல் நடந்துள்ளது என்பது புலனாகிறது. இந்த தாக்குதலுக்கு ஏப்ரல் மாதமே வெடி குண்டுகள் பதுக்கி வைத்த போது, மே மாதம் மாகாரஷ்ட்ர காவல் துறையினரின் தொடர் கண்காணிப்பின் காரணமாக சில இடங்களில் நடத்திய சோதனையில் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து கண்டுபிடிக்ப்பட்டது. இந்த சோதனையின் போது இந்தியன் முஜாஹிதீன் பொறுப்பாளர் சைப்புதீன் அன்சாரி தப்பி ஓடிவிட்டான்.
புனே குண்டு வெடிப்பு
12.2.2010ஆம் தேதி புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்து 17 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 54க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள், கொல்லப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள். ஜேர்மன் பேக்கரியில் ஏன் குண்டு வைக்க வேண்டும் என்கின்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. இதற்கான விடை தெரிய வேண்டுமானால் சிக்காகோவில் உள்ள லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கரவாதி ஹெட்லி மற்றும் அவனது கூட்டாளியான ஹுசைன் ராணா என்பவனையும் முழுமையாக விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும். ஹேட்லியின் குறிக்கோள் புனோவில் உள்ள இஸ்ரேலியர்கள் மீது என்றாலும், அல்லது மேற்கத்திய நாட்டைச் சார்ந்தவர்கள் என்றாலும், ஜெர்மன் பேக்கரியைத் தாக்க வேண்டியதில்லை. அதிக அளவில் இஸ்ரேலியர்கள் வந்து போகும் சத்பாத் ஹவுஸும், மேற்கத்தியர்கள் வந்து போகும் ரஜ்னீஸ் ஆஸ்ரமும் ஜெர்மன் பேக்கரிக்கு அருகில் இருந்தும் அவை தாக்கப்படவில்லை என்பதால் இந்த கேள்வி எழுந்தது.
இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தை நடக்கும்போது குண்டு வைக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்குமுன் உத்திரப் பிரதேசம், ஜெய்பூர், டெல்லி, அகமதாபாத், மும்பையில் கூட தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டன. ஆனால் புனேவில் ஜெர்மன் பேக்கரியில் ஒரே ஒரு குண்டு மட்டும் வைக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்குக் கூட விடை கிடைக்கவில்லை. ஏன் என்றால் 2002 முதல் 2008 வரை இந்தியன் முஜாஹிதீன்கள் நடத்திய தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் போல் நடக்கவில்லை என்பதால் இந்தக் கேள்வி எழுகிறது.
ஹெட்லி
சிகாகோவில் உள்ள லஷ்கர்-ஈ-தொய்பா செல்லின் பொறுப்பாளர். லஷ்கர்-ஈ-தொய்பாவின் ஐந்து பயிற்சிகளில் பாகிஸ்தானில் பங்கேற்றுள்ளான். ஜிகாதி போரை நடத்துவது தொடர்பான சித்தாந்த ரீதியான மூன்று வாரப் பயிற்சியை 2002 பிப்ரவரியில் முடித்திருக்கிறான். 2002 ஆகஸ்ட் மாதம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பயன்படுத்துவது எப்படி என்ற மூன்று வாரப் பயிற்சியிலும பங்கேற்றுள்ளான். 2003இல் அருகில் நின்று போராடும் தந்திரம், ஆயுதங்கள், வெடி குண்டுகள் கையாளுவது, தாக்குதல் நடக்கும் போது தாக்குப்பிடித்து நிற்பது உள்ளடக்கிய மூன்று மாதப் பயிற்சியை முடித்து இருக்கிறான். நான்காவதாக ஆகஸ்ட் 2003லேயே எதிரிகளை வேவு பார்ப்பது தொடர்பான பயிற்சியும், 2003 டிசம்பரில் போர்முறைப் பயிற்சியும், களத் தந்திரங்கள் பயிற்சியையும் பெற்றவன். ஆகவே லஷ்கர்-ஈ-தொய்பாவின் அனைத்துப் பயிற்சிகளையும் பெற்று முழு லஷ்கர் ஜிகாதியாக மாறியவன்.
ஹெட்லி 2006 செப்டம்பரில்தான் முதன்முதலில் இந்தியா வந்துள்ளான் என உளவுத் துறை தகவல் தெரிவித்தது. இந்தப் பயனத்தின் போது ஹெட்லி இந்தியாவில் உள்ள முக்கியக் கட்டிடங்கள் குறிப்பாக தாஜ் ஹோட்டல் உட்பட மும்பையில் உள்ள முக்கிய இடங்களை வீடியோ எடுத்துள்ளான். தான் எடுத்த படங்களை லஷ்கர்-ஈ-தொய்பா உட்பட சில முக்கிய சதிகாரர்களிடம் கொடுத்துள்ளான். இதைத் தொடாந்து மேலும் சில படங்களை எடுக்க மீண்டும் மும்பைக்குத் திருப்பி அனுப்பப்பட்டான். ஆகவே இந்தத் தகவலின் படி மும்பையில் நவம்பர் மாதம் 26ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு செப்டம்பர் 2006இல் திட்டம் தீட்டப்பட்டது தெரிய வருகிறது. ஹெட்லி மும்பையில் எடுத்த படங்களை லஷ்கர்-ஈ-தொய்பாவின் இயக்க நிர்வாகிகளிடம் காட்டியதாகவும் அவர்களுடன் இன்னும் சிலர் இருந்ததாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. லஷ்கர்-ஈ-தொய்பாவுடன் இருந்த இன்னும் சிலர் என்பது பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மற்றும் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளாக இருக்கக்கூடும் என்கின்ற தகவல்களும் உள்ளன.
2007 வாக்கில் இரண்டாவது முறையாக ஹெட்லி இந்தியா வந்துள்ளான். மீன்டும் மும்பை வந்த ஹெட்லி முக்கியத் தளங்களை வீடியோ எடுத்துள்ளான். அதே நேரத்தில் தாஸ் ஹோட்டலின் இரண்டாவது மாடியை முழு அளவில் வீடியோ எடுத்துள்ளான் என்றும் அமெரிக்காவின் எப்.பி.ஐ தெரிவிக்கிறது. இதனிடையே 2007 செப்டம்பர் மாத வாக்கில் மூன்றாம் முறையாக ஹெட்லி மும்பைக்கு வந்துள்ளான். அங்கிருந்து திரும்பி வந்து தன் கூட்டுச் சதியாளர்களுடன் வீடியோ படங்களை பகிர்ந்து கொண்டான். இதைத் தொடர்ந்து 2008 மார்ச் வாக்கில் கூட்டுச் சதியாளர்களுடன் சேர்ந்து மும்பையைத் தாக்கும் தீவிரவாதிகள் மும்பையில் எங்கு வந்து சேர வேண்டும் என்பது பற்றி விவாதித்தான். இதனால் அந்த லேண்டிங் சைட் எது என்பதைத் தேர்வு செய்ய ஹெட்லி மீன்டும் மும்பை வந்தான் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே மும்பை தாக்குதலில் ஹெட்லியின் பங்கு முக்கியமானதாகத் தெரிகிறது.
(தொடரும்)