குழவி மருங்கினும் கிழவதாகும் -2

குழவி மருங்கினும் கிழவதாகும்முதல் பகுதி

 

செங்கீரைப் பருவம்

பிள்ளைத் தமிழில் காப்புப் பருவத்தை அடுத்து வருவது செங்கீரைப் பருவம். இது குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில் நிகழ்வது. தவழ்ந்த குழந்தை எழுந்து இருகைகளையும் ஊன்றிக்கொண்டு உட்காரத் தொடங்கும். தவழும்போதும் இருமுழங்கால்களையும் இருகரங்களையும் ஊன்றித் தலையை இருமருங்கும் ஆட்டும். வாயில் எச்சில் ஒழுக இனிய ஒலியெழுப்பத் தொடங்கும். தன்னுடைய தாய் எப்படியெல்லாம் தலையசைத்துப் பேசுகின்றாளோ அதைப்போல அதுவும் தலையை அசைத்து ஏதோ ஒலியை எழுப்ப முயற்சியைச் செய்யும். போலச் செய்தல் குழந்தையின் இயல்பு.

குழந்தைக்குப் பேச்சுத்திறன் விரைவில் வரத் தாயர் குழந்தையுடன் பேசி இதுபோல் விளையாட்டுக் காட்டுவர். தங்கள் ஆசைகளை, விருப்பங்களை அல்லது எண்ணங்களைக் கூறிக் குழந்தை அவற்றைப் புரிந்து கொண்டது போலவும் அவற்றை ஆமோதிப்பது போலவும் மறுப்பது போலவும் குழந்தையின் தலையசைவுக்கும் குதலை மொழிக்கும் அர்த்தம் கற்பித்துக் கொண்டு தாயார் மகிழ்வர். குழந்தை இந்தப் பருவத்தில் போலச் செய்யும் ஆர்வம் உடையதாக இருக்கும். அதன் முன்னின்று ஏதேனும் பேசி அதன் கவனத்தைத் தன்பால் இருக்கச் செய்து தலையாட்டிக் கொண்டு ஏதேனும் பேசினால், அக்குழந்தையும் தலையை அசைத்துக் கொண்டு குதலை மொழி பேசும்..

குழந்தை தலையை அசைத்தாட்டினால், தான் கூறியதை ஆமோதித்ததுபோல் தாய் மகிழ்வாள். ‘அப்படி அல்ல என்கிறாயா?’ எனக்கேட்டு தலையைப் பக்கவாட்டில் அசைத்தால் குழந்தையும் பக்கவாட்டில் முகத்தை அசைக்கும். இது தாய்க்கும் மகிழ்ச்சி; தாயோடு விளையாடும் குழந்தைக்கும் மகிழ்ச்சி. இவ்வாறு குழந்தையுடன் விளையாடுவதுதான் செங்கீரைப் பருவம். பொதுமக்கள் குழந்தையுடன் விளையாடும் இந்த விளையாட்டைப் ‘பூம்பூம் பூம் மாட்டுக்காரன் விளையாட்டு ‘ என்பார்.

பூம்பூம் மாட்டுக்காரன் உருமி மேளத்தை வாசித்துக் கொண்டு ஒரு காளை மாட்டுடன் யாசகம் கேட்டு வருவான். உருமி மேளத்தை வாசித்துக் கொண்டே, “இந்த வீட்டு மகராசி இல்லையென்று சொல்லாமல் கொடுப்பாங்களா? துணி கொடுப்பாங்களா/ காசு கொடுப்பாங்களா? கொடுக்கற மகராசிக்கு நல்லகாலம் பொறக்குதா?…” என்ற வினாக்களைத் தொடர்ந்து கேட்பான். காளை மாட்டைத் தலையசைக்கப் பயிற்றுவித்திருப்பான். காளைமாடு ‘ஆமாம்’ என்பது போலத் தலையசைத்தலைக் கண்டு மகிழ்ந்து அவனுக்குப் பிச்சையிடுவர். குழந்தை பூம்பூம் மாடுபோலத் தலையசைத்து மகிழ்விப்பதனால் இந்த விளையாட்டுக்கு இப்பெயர் வந்தது.

பிள்ளைத்தமிழ்க் கவிஞர் ஒருவர் இந்த இரண்டு விதமாகவும் திருநிலைநாயகி என்னும் தெய்வப் பெண்குழந்தையுடன் உரையாடி மகிழ்கின்றார்.

கவிஞராகிய தாய்,

‘சீகாழி மேவு திருநிலைய சுந்தரவல்லி! நீ, இன்னும் உன்னுடைய அடியராகிய எம்மை அன்னையின் வயிறு என்னும் அளறில் (பிறப்பாகிய சேறு) இருப்பீராக என்று பிறப்பில் புக விடுவையோ? எண்ணுதற்கு அரிய துயரை அடைவிக்கும் பிறப்பென்ற தண்டனையில் இடுவையோ? எம் உடலில் பொருந்தியிருந்து மாறி மாறி அறிவினை மயக்கும் ஐம்பொறிகளின் வழியிலே யாங்கள் செல்லுமாறு உழல்விப்பையோ? மண்பொன்பெண் என்னும் மூவேடணைகள் நீங்காது வந்து எம்மைத் துயர் செய விடுவையோ? உன்னுடைய மலர்த்தாள்களைப் பரவும் அன்பிலார் குழுவில் யாங்கள் நின்று உன்னை மறக்கும்படியாகச் செய்வையோ?…’

எனத் தொடர்ந்து வினாக்களைக் கேட்கிறார்..

இவ்வாறு கேட்டபின், ‘இவ்வினாக்களுக்கெல்லாம் நீ தயை புரிந்து எதிர்மறை விடை தருதல்போல் சென்னியை இருபுறம் அசைத்து, என் அன்னையே! ஒரு செங்கீரை ஆடியருள்க!’ என வேண்டுகின்றார்

சிவசக்தியாகிய அருட்சத்திதான் உயிர்களின் சீவத்துவத்தை நீக்கிச் சிவத்தை அளிப்பதற்காக மாயையிலிருந்து உடல் கருவி உலகு போகங்கள் ஆகியவற்றை அளித்துப் பிறப்பிறப்பில் செலுத்துகின்றது எனச் சைவசித்தாந்தம் கூறுகின்றது. உயிரறிவை விளக்கும்பொருட்டுக் கூட்டப்பட்ட மாயை, உயிரின் ஆணவமல சம்பந்தத்தால் அறிவை மயக்கம் செய்கின்றது. அந்த மயக்கம் தீர, திருவருளாகிய சிவசத்தியின் துணை வேண்டும். அடியான் தன் அச்சத்தைக் கூறி இத்தகைய துன்பத்தில் யான் புக என்னை விடுவையோ என வினா நிகழ்த்தி, குழந்தையாகிய சிவசத்தியிடம், ‘நான் அப்படிச் செய்யமாட்டேன்’ என்ற எதிர்மறை விடையைத் தலையை இருபுறம் அசைப்பதிலிருந்து பெற விழைகின்றான்.

சிவபக்தி நிறைந்த ஒருவர், தம்முடைய மானுடக் குழந்தையிடம் இவ்வினாக்களைக் கேட்டு, அக்குழந்தை எதிர்மறை விடையாகத் தலையசைக்க சிவசத்தியே தம்மைத் தெளிவிப்பதாகக் கருதி இன்பம் அடைவார்..

ஆசையாசையாகப் பெற்ற குழந்தைதான் தாய்க்கு எல்லாச் செல்வமும். அந்தக் குழந்தை தனக்கு எத்தைகைய பேறு எனத் தாய், தன் சேயிடம் கேட்டு, அதன் தலையசைவை உடன்பாட்டு விடையாகக் கொண்டு மகிழ்வாள். ‘நீதான் எங்கள் குல தெய்வமோ, நீதான் நான் பெற்ற செல்வமோ? நீதான் என் கண்ணோ? பொன்னோ? என்னைப் பெற்ற தாய் நீதானோ?’ எனக் கேட்டு, அதற்குக் குழந்தையின் தலையசைவினைக் கண்டு தாயடையும் இன்பத்துக்கு எல்லை இல்லை. இந்த உத்தியைக் கவிஞனாகிய தாய் சிவசத்தியின் ஏற்றத்தை உணர்த்தக் கைக்கொள்ளுகின்றார்.

“முன்னம் ஒரு காலத்தில் யார் பெரியவர் என்று தம்முள் கலகமிட்டுக் கொண்டிருந்த தேவர்க் குழுவினிடைச் சென்று ஒரு துரும்பு நட்டு அவர் அகந்தையினை அழித்த ஆற்றல் மிக்க ஆண்டகை உன்னுடைய திருமேனியின் ஒரு பாகத்தனோ?

அவனுடைய ஓப்பற்ற அருள் என்ற பெருங்குணமும் நீர்தானோ?

என்றும் பிறப்பு இறப்பு மலம் என்பன இல்லாமை உம்முடைய இயல்போ?

எண்ணில்லாத சேதன(அறிவுடைய) அசேதன(அறிவற்ற), நிலைத்திணை இயங்குதிணைகளை ஈன்று, உயிர்களுக்குஇனிய கதி தருவீரோ?

மன்றினில் நின்று பரவெளிகண்டு தொழுவார்கட்கு அருள் வழங்குவதும் உண்டுகொலோ?

எம்மைப் பெற்ற தாயாகிய நீர் எம்மை வாழ்விப்பிரோ?

இவ்வாறு நாங்கள் எம் விருப்பெலாம் தோன்ற வினவினோம். இவற்றிற்குத் திருமுகமசைத்தே விதிவிடை (உடன்படுவிடை) வழங்க, தென்றலில் இளம்பசியகொடி அசைவதென்ன, திருநிலைய சுந்தரியே, செங்கீரை யாடியருளே”

இவ்வாறு, குழந்தையின் தலையசைவுகளுக்குக் கருத்தினைத் தன் மன நிலைக்கு ஏற்பக் கொள்ளும் தாயின் இயல்பு பிள்ளைத் தமிழ் செங்கீரைப் பருவத்தில் கவிஞருக்குப் பாட்டுடைத் தலைவரின் பெருமையைப் பாடும் உத்தியாக அமைகின்றது.

தாயின் மனநிலையிலிருந்து கவிஞர் புலவரின் மனநிலைக்கு மாறும்போதும் இந்தவுத்தி பயன்படுகின்றது.

குழந்தையாகிய திருநிலைநாயகியைப் பார்த்துப் புலவர் கேட்கின்றார்:

“அல்லலை மிகுக்கின்ற சாருவாகன் (உலகாயதன்), பவுத்தன், அருகன் முதலான இழிசமயத்தவர்கள், சடமாகிய வினையே அரியவினைப் பயனை உயிர்களுக்கு அளிக்கும். (வினைப் பயனை வினையைச் செய்தவருக்கெ அறிந்து ஊட்டுவது இறை என்பது சைவர் கொள்கை) என்கின்ற மீமாம்சகர்கள், தாமே பிரமம் என்று சாற்றுகின்ற புல்லறிவர்கள், சின்னாளில் அழிந்தொழிகின்ற சிறுதெய்வங்களை வழிபடுவோர், இன்னும் மறைமுடிவான சுத்தாத்துவித சைவசித்தாந்தச் செந்நெறியினை அறியும் நல்லறிவு படையாதவர்கள் புகல்கின்ற சமயக்கொள்கைகள் தோற்றொழிய, அவர்களுக்குச் சிவாகமத்தால் முத்தி அளிக்கும் நல்லறிவு காட்டி வென்று, இந்நகர் (சீகாழி) முதுபுலவர் ( திருஞானசம்பந்தர்) நாட்டும் புலமைத் துவசமும், தில்லை அம்பலவாணரது அருள் மேவும் உமாபதிசிவம் முன்னொருமுறை திருவாதிரை நாளில் பிறமத சங்கற்பநிராகரணம் செய்து உயர்த்திய வெற்றிக் கொடியும் நிகர்க்க செங்கீரை யாடியருள்க!”

என வேண்டுகின்றார்.

ஆயர்கள் போரேறே! ஆடுக செங்கீரை’ என்னும் பெரியாழ்வார் பாசுரத் தொடருக்குப் பொருளுரைத்த வைணவப் பெரியார்கள், “முழந்தாள்களையும் கைகளையும் கீழ் ஊன்றி முகத்தை நிமிர்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் ஏறு போலிருப்ப தாகையாலே ஏறே என்றது” எனக் கூறியது இன்பமளிக்கின்றது. இது ஒரு ‘நிருத்த விசேடம்’ என்பர் வைணவப் பெரியோர்.. இது குழந்தையின் மற்றொருவகைச் செங்கீரையாடல். இது குழந்தை தானாக எழுந்து உட்காருவதற்கு முன் நிகழ்வது..

மற்றொருவகை, குழந்தை தானாக எழுந்து அமரும் நிலையில் நிகழ்வது. அந்நிலையில் குழந்தை ஒருகாலை மடக்கி, ஒருபாதம் நிலத்தில் படிய ஊன்றி, முழங்காலை நிமிர்த்தி, இருகைகளையும் ஆதரவாக நிலத்தில் ஊன்றித் தலையை மேல்நோக்கிப் பார்த்துத் தவழ்ந்து ஆடும். இக்காட்சியைக் கவிஞர்கள் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுவர்.

“மலரின் இதழ்கள் போன்று விரல்கள் விரிந்து நிலத்தில் பதிந்துள்ளன. அவற்றில் மலரிதழ்களில் வண்டுகள் மொய்ப்பதுபோல் மணியாழிகள்(மோதிரங்கள்) உள்ளன. அத்தகைய அழகுள்ள சிறுகரங்களை நிலத்தில் ஊன்றி, நிலமீதில் ஒருகால் மடக்கிக் கிடத்தி, ஒரு மலரடியை நிறுத்தி வைத்துப், பலமணிகள் பதித்த சுட்டி நெற்றியில் ஆட, கருணை பொழியும் விழிகள் ஆட, பவளம்போன்ற இதழில் புன்முறுவல் ஆட, செவியில் குழைகளாட, நிலவு விரி முகமதியமாடச் செங்கீரை ஆடியருளே”

(எட்டிக்குடி முருகன் பிள்ளத்தமிழ்) என இப்பாடலில் குழந்தை இருந்து ஆடுதலை ஓவியமாகத் தீட்டிக் காட்டினர்.

குழந்தை உட்கார்ந்து செங்கீரையாடுதல், பெண்பாற் பிள்ளைத் தமிழாகிய அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில்,

“இருகைமல ரும்புவி பதித்தொரு முழந்தாள்
இருத்தியொரு தாண்மேனிமிர்த்
திந்ரதிரு விற்கிடை டொடுத்தவெண் டரளநிரை
யேய்ப்பநுதல் வேர்பொடிப்பத்
திருமுக நிமிர்ந்தொரு குளந்தையமு தாம்பிகை
செங்கீரை யாடியருளே” 

எனப் பாடப்பட்டுள்ளது.

‘கீர்’ என்றால் சொல் என்பது பொருள். திருந்தாத பொருள் பொருந்திய சொல் மழலை. சிறு குழவியின் வாயிலிருந்து வெளிவரும் திருந்தாத பொருளற்ற ஒலி குதலை. இரண்டுமே பெற்றோருக்குக் குழலொலி யாழொலி போல இன்பம் தருவன. திருத்தமில்லாத மொழியை மங்கல வழக்காக செங்கீர் செங்கீரை எனப்பட்டது என்றும் கூறுவர். ஆடுதல் என்றால் பேசுதல். செங்கீரையாடுதல் – திருத்தமான சொல்லைக்கூறுதல் என்று பொருள்.

ஆகவே, இப்பருவப் பாடல்களில் ‘ஆடுக செங்கீரை’ என்ற மகுடம் இறுதியில் அமையும்.

எட்டிகுடி முருகனிடம் ஒரு தாய் வேண்டுகிறாள்:

“எட்டிகுடி வேலனே! மண்ணுலகத்திலே ஊழ்வினையின்வழி பிறக்கின்ற சிறுமகார்கள் வாய் குழறி ஓதுகின்ற குதலைமொழியை மங்கல வழக்கினால் செங்கீரை என்று தமிழ்வாணர்கள் வழங்குவர். பழமறைகளும் இன்னம் இவன் இத்தகையன் என்று உணரலாகாத பரமனாகிய சிவனின் இரு செவிகளும் குளிர உபதேசம் வைத்த நின் பவளவாய் மழலை மொழிதான் உண்மையில் இயல்பு வழக்கென்று உணர்ந்து உன்பால் இரந்தோம். எங்கள்பால் உள்ள ஆணவம் மாயை கன்மம் ஆகிய மும்மலமும் விட்டோடவும் அநுபூதி யாம் பெற்றிடவும் செங்கீரை ஆடியருளே”

சொல்லாடுதல் என்றாற்போல செங்கீரை யாடுதல் என்பதும் பேசுதல் என்று பொருள்படும். எப்பொருட்கு எச்சொல் அமைந்ததோ அப்பொருளை அச்சொல்லால் கூறுதல் இயல்பு வழக்கு. மங்கலமில்லாததை மங்கலச்சொல்லால் கூறுதல் மங்கல வழக்கு. காராட்டை வெள்ளாடு என்றும் கெட்ட பாம்பை நல்லபாம்பு என்றும் ஒருதொடையும் இல்லாத செய்யுளைச் செந்தொடை என்றும் கூறுவது மங்கல வழக்கு

எனவே, உயிரைப் பந்தித்துள்ள மலத்தை நீக்குவதும், சிவனும் விரும்புவதுமாகிய முருகனின் மழலை மொழிகளே இயல்பு வழக்காகச் செங்கீரை எனத்தகும் என்பது அத்தாயின் கருத்து.

மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம், அதேபோன்று சொற் கேட்டல் செவிக் கின்பந்தரும் என்றார், தெய்வப்புலவர். மக்கட் குழந்தையின் மழலையே குழலைக் காட்டிலும் யாழைக் காட்டிலும் இன்பம் தரும் என்றால் தெய்வக் குழந்தையின் அறிவுடைய சொல் எத்தகைய பேரின்பத்தைத் தரும்? அத்தகைய பேரின்பத்தைத் தருஞ்சொல்லைத் தெய்வக்குழந்தையின் வாயிலிருந்து பெறக் கவிஞனும் அடியனுமாகிய தாய் விரும்புகின்றாள்.

சுவாமிமலையில் எழுந்தருளியிருக்கும் தகப்பன்சாமியாகிய குருபரனிடம் ஒரு தாய் வேண்டுகின்றாள்.

 “குருமலையில் எழுந்தருளிய தமிழ் முருகனே!! நீ மண்முதலாம் ஐவகைப் பூதங்களையும் படைத்து அவைகளிடத்து நிலைத்திணை இயங்குதிணை என வேறுபட்டிருக்கும் அவைகளையும் படைத்து, உயிர்கள் கற்று உய்ய வேதம் முதலிய அருள் நூல்களையும் வகைவகையாக உதவினை. அவற்றை ஐயம் தீரக் கற்று உய்யக் கலையாற்றல் எமக்கு இல்லை. எப்படியோ கற்றாலும் அந்த அறிவு அனுபவத்துக்கு வாராது, அனுபவம் இல்லாத நூலறிவு, கடல் நீரை ஆர்வத்துடன் பருகித் தாகம் தணியாதவர் கணக்காகி நின்றதல்லவா? உய்யும் வகையை எமக்கு உதவ, ஒருமொழி உபதேசம் செய்குவையேல், உயர்நூல்களை ஓதி உணராதபோதிலும் ஓதியுணராத ஞானத்தை (சிவஞானம்) யாம் பெற்று ஒருநொடியில் உயர்கதி பெறுவோம். அதனால் தெய்வமறை முடிபான அநுபூதி யாம் பெற இனிமையொடு ஓர் செங்கீரை யாடியருளே”

என வேண்டுகின்றார்.

‘சும்மாவிரு சொல்லற’ என்ற ஒரு வார்த்தையைக் (செங்கீரை) கேட்டவுடனேயே அருணகிரிநாதருடைய மனம் அடங்கிற்று.; பேரின்ப அநுபூதிநிலை கைவந்து,. முருகனை யன்றி வேறு உலகியலான ‘எப்பொருளையும் அறியாத’ நிலை எய்தப் பெற்றார். தானும் அவ்வாறே மெய்ஞ்ஞானம் பெறச் செங்கீரை யாடியருள வேண்டுமெனத் அத்தாயாகிய கவிஞர் விரும்புகின்றாள்.

முருகன் அருணையாருக்கு அருளிய அந்தச் ‘செங்கீரை’யாகிய ஒருமொழியைத் திருச்செந்தூர் அகவலில், சிற்றம்பல நாடிகளும்,

“சும்மா இருக்கச் சொன்னதோர் வார்த்தை
அம்மா அதிசயம் யாருடன் புகல்வேன்”

எனப் புகழ்ந்தார்.

கவிஞராகிய தாய் மலர்தலைய உலகினில் அலைந்து உழலும் மனம் குவிந்து மவுனநிலை இனிது பெற சாமிநாதக் குழந்தையின் செங்கீரையை வேண்டுகின்றார்.

“மடமகளிர் நெடியமனை சுடுபொன்மணி சுவையடிசில்
மலரமளி முதலவாவி
மலர்தலைய உலகிலலை மனதுருவி வுறவுரையில்
மவுனநிலை யினிதுபெறவே
திடமுனிவர் மறையின்மொழி கொடுபரவு குமரவொரு
செங்கீரை யாடியருளே”

இவ்வாறு தாம் பெற்ற குழந்தைகளுடன் உரையாடி மகிழ்தலையே தெய்வானுபவமாக மடைமாற்றம் செய்துகொள்ளும் வித்தகத்தினைப் பிள்ளைத்தமிழ் நூல்கள் கற்பிக்கின்றன.

4 Replies to “குழவி மருங்கினும் கிழவதாகும் -2”

 1. பிள்ளைத் தமிழ் என்பது தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பாடல் தலைவன் அல்லது தலைவியை முதலாக வைத்துப் பத்து பருவங்களை உருவாக்கி நூறு ஆசிரிய விருத்தங்களால் பாடப்படுவது பிள்ளைத் தமிழ். இதில் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகையில் பாடுவார்கள்.

  பெண்பால் பிள்ளைத் தமிழில் காப்பு, செங்கீரை, தாலம், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் என பத்து பருவங்களை வைத்துப் பாடுவார்கள். ஒவ்வொரு பருவமும் பத்து பாக்களைக் கொண்டதாக இருக்கும். இது குறித்த ஒரு இலக்கணப் பாடல்:

  “கடுங் கொலை நீக்கிக் கடவுள் காப்புச்
  செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்
  வாரானை, முதல் வகுத்திடும் அம்புலி
  சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்னப்
  பெறுமுறை ஆண்பாற் பிள்ளைப் பாட்டே.

  அவற்றுடன்
  பின்னைய மூன்றும் பேதயர்க் காகா;
  ஆடும் கழங்கு அம்மானை, ஊசல்
  பாடும் கவியால் பகுத்து வகுப்புடன்
  அகவல் விருத்தத் தான்கிளை அளவாம்.”

  இது ஆண்பால், பெண்பால் பிள்ளைத் தமிழின் இலக்கணம்.

  1) காப்புப் பருவம்: இஃது இரண்டு மாதக் குழந்தையைக் காக்குமாறு இறைவனிடம் வேண்டுவது.
  2) செங்கீரை: ஐந்தாம் மாதம் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி இரு கரங்களால் நிலத்தில் ஊன்றி தலை நிமிருந்து முகம் அசைய ஆடுதல்.
  3) தாலப் பருவம்: எட்டாம் மாதம் ‘தாலேலோ’ என்று நாவசைத்துப் பாடுதல்.
  4) சப்பாணி: ஒன்பதாம் மாதம் இரு கரங்களையும் சேர்த்து கைதட்டும் பருவத்தைப் பாடுதல்.
  5) முத்தப் பருவம்: பதினொன்றாம் மாதம், குழந்தையை முத்தம் தர வேண்டிப் பாடுதல்.
  6) வருகைப் பருவம்: ஓராண்டு ஆகும்போது குழந்தை தளிர்நடை பயிலும்போது பாடுதல்.
  7) அம்புலிப் பருவம்: ஒன்றேகால் ஆண்டு ஆகும்போது குழந்தைக்கு நிலவைக் காட்டிப் பாடுதல்.
  8) அம்மானை: குழந்தையை அம்மானை ஆடும்படியாகப் பாடுதல்
  9) நீராடற் பருவம்: ஆற்று ஓடையில் நீராடும்படி பாடுதல் 10) ஊசல் பருவம்: ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டிப் பாடுதல்

  கடைசி மூன்றும், அம்மானை, நீராடல், ஊசல் ஆகியவை ஐந்து முதல் பத்து வயது வரை நடக்கும் செயல்களாகப் பாடுதல்.

 2. முனைவர் அவர்களின் கட்டுரை மிகவும் நன்றாக இருக்கிறது.நான் 10ம் வகுப்பில்
  படித்த பிள்ளைத்தமிழ் இலக்கணத்தை மீண்டும் நினைவுறுத்தி நன்றாக விளக்கி
  எழுதப்பட்ட கட்டுரை தமிழை ஆழ்ந்து படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை
  ஏற்படுத்துகிறது.. நன்றி. ஏன் காப்பு, சென்கீரைப்பருவங்களுடன் நிருத்திக்கொண்டுவிட்டார் ? தொடர்ந்து மற்றப்பருவங்கள் பற்றியும் இதுபோல் உதாரனப்பாடல்களுடன் எழுதினால் கட்டுரை முழுமை பெற்று மாணவர்களுக்கும்(பள்ளியிலும், கல்லூரிகளிலும் யார் இவ்வளவு azhagagap
  azhagagap புரியும்படியாக, ஆர்வமூட்டும்படியாக இலக்கணம் சொல்லித்தருகிறார்கள்?)

 3. (தொடர்ச்சி)..
  தமிழார்வலர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும், மீண்டும் நன்றி தெரிவித்து,
  வை.ஸ்ரீனிவாசன்

 4. செங்கீரைப் பருவத்தில் பூம் பூம் மாட்டுக்காரன் விளையாட்டு மூலம் இறைவனே தம்மோடு இருக்கும் உயர் உணர்வைப் பெற்ற பழந்தமிழரின் திறம் அவர்தம் நிறையறிவை வெளிப்படுத்தியதாக அமைந்திருப்பது அழகு. சீர்காழிப் பதியில் விளங்கும் திருநிலைய நாயகியிடம் மூவேதனைகள் மறைய வேண்டிய பிள்ளைத் தமிழ்க் கவிஞரின் பாங்கும் பெரியாழ்வார் கூறும் ஆயர்தம் போரேறும் எட்டுக்குடி முருகனின் இயல்பு வழக்கு மறை மொழியும் ஸ்வாமி மலை முருகனின் மறை முடிபான செங்கீரையும் இன்னும் சிற்றம்பல நாடியார், அருணையார் … என்று தமிழுலகும் தெய்வ உலகும் நம்மைப் பேரின்பத்தில் ஆழ்த்திட வல்லவை. கடவுளும் அவர் தந்துள்ள மொழியழகும் வாழ்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *