முதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திட வேண்டும். இது ஸாகீர் நாயக் தனமான கட்டுரை அல்ல. ஏற்கனவே எங்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது என சொல்லவில்லை. இங்கு சொல்லப்படுவது கொஞ்சம் ஆழமான விஷயம் என்று நினைக்கிறேன்.
ஒற்றைக்கு ஒற்றை mapping இங்கு சரிப்பட்டு வராது. பேசப்படுவது ஒரு பரந்த சட்டகத்தைக் குறித்து. நம் பாரம்பரிய இலக்கியக் கருவிகளை வேறு சில அறிவியல் புலங்களுக்கு நீட்டுவிப்பது குறித்து. எனவே கொஞ்சம் உங்களிடம் அதிக கவனத்தை இந்த கட்டுரை யாசிக்கிறது.
பிள்ளைத்தமிழ் என்பது பிரபந்த நூல் வகைகளில் ஒன்று. ஒருவருக்கு பிடித்த தெய்வத்தை குழந்தையாக்கி அந்த குழந்தையின் வளர்ச்சி பருவங்கள் ஒவ்வொன்றையும் ஆனந்தத்துடன் பாடும் இலக்கிய வகை. ஜீன் பியாஜெட் புகழ் பெற்ற உளவியலாளர். அவர் குழந்தைகளின் அகவளர்ச்சியை குறிப்பிட்ட நிலைகளாக்கி தந்திருக்கிறார். பிள்ளைத்தமிழ் சொல்லும் பருவங்களுக்கும் ஜீன் பியாஜெட் சொல்லும் நிலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நிச்சயமாக one to one mapping செய்ய முடியாது. காலகட்டங்களின் அளவில் கூட அது அமையவில்லை. ஜீன் பியாஜெட் சொன்னது ஏற்கனவே எங்கள் முன்னோருக்கு தெரிந்திருந்தது என சொல்லமுடியாது. பிள்ளைத் தமிழ் என்பது ஒரு இலக்கிய உக்தியும் கூட என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் மீறி பிள்ளைத்தமிழ் சொல்லும் பருவங்களில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. அது குழந்தை உளவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு சுவாரசியமாக அமையலாம். பியாஜெட்டின் பாகுபாடு குழந்தை அதன் அக வளர்ச்சி அதன் புறச்சூழல் ஆகியவற்றை மட்டும்தான் தீவிரமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
ஆனால் பிள்ளைத்தமிழின் கவனம் குழந்தையின் செய்கை அதனால் பெற்றோருக்கு ஏற்படும் உளவியல் மாற்றம் அதனால் ஏற்படும் எதிர்வினைகள் ஆகியவற்றை கணக்கில் எடுக்கிறது. இந்த இலக்கிய உக்திக்குள் நல்ல உளவியல் ஆராய்ச்சிக்கான சட்டகங்கள் உள்ளுறங்குகின்றன. உதாரணமாக சப்பாணி என்கிற பருவம்: குழந்தை உட்கார்ந்த பிறகு மகிழ்ச்சியால் கைகொட்ட ஆரம்பிக்கிற காலகட்டம்.. ஒன்பதாவது மாதம் என்பது வழக்கம். சப்பாணி என்பது சக(உடன்) + பாணி (கை) என்பதிலிருந்து வந்தது. தமிழ்நாடு முழுக்க பிராந்தியத்துக்கு பிராந்தியம் இந்த நிலைக்கு பாடல்கள் இருக்கின்றன. ’தமிழோடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த கொடி சப்பாணி கொட்டி அருளே’ என்கிற குமரகுருபரர் மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் முதல் ‘சப்பாணி கொட்டும் பிள்ளை தயிரும் சோறும் தின்னும் பிள்ளை’ என்கிற நாட்டுப்புற பாடல் வரையாக .. குழந்தையின் ஒவ்வொரு பருவமாற்றத்துக்கும் அதனுடனான பெற்றோர்-உற்றோரின் குரல் வழியிலான உறவை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு உளவியல் உக்தியும் இதில் இருப்பதை ஊகிக்க முடிகிறது.
கைகளின் ஒருங்கிணைப்புத்தன்மையுடன் ஒத்திசைவு கொண்ட இசை ஒலிக்குறிப்புகளின் reinforcement நிச்சயமாக குழந்தையின் கைகால் அசைவுகளை விரைவாக இசைவுப்படுத்தக் கூடும். ஆனால் இது குறித்து ஏதேனும் உளவியல் ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றனவா என்றால் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தையின் அறிவு அக வளர்ச்சியுடன் அக்குழந்தையின் குடும்ப சமூக உறவுகளுடனான வளர்ச்சியையும் அவதானிக்க வேண்டும். அது முக்கியமானது. இதை இன்று வரை மேற்கத்திய அறிதல் முறைகள் அலட்சியம் செய்திருக்கின்றன. இதற்காக அவர்கள் கொடுக்கும் விலை மிக மோசமானது. நாம் அவர்களையே பிரதியெடுக்கிறோம் என்பதுதான் கொஞ்சம் சங்கடமான விஷயம்.
எல்லா ஆண் குழந்தைகளும் வளரும் போது கையில் கிடைப்பதையெல்லாம் தூக்கிப் போட்டு உடைக்கும் ஒரு காலகட்டம் வருகிறது. ‘பையன் முரடனாக இருக்கிறான்.’ என்று அலுத்துக் கொள்கிற பெற்றோர்கள் ஏராளம். இதை சமாளிப்பது எப்படி? சிற்றில் சிதைத்தல் என்று ஒரு பருவத்தை பிள்ளைத் தமிழ் சொல்கிறது. தனக்கு விரும்பும் விஷயங்கள் எல்லாம் கிடைக்காது என ஒரு கட்டத்தில் குழந்தை உணர ஆரம்பிக்கிறது. அப்போது அதற்கு கோபம் வருகிறது. அது பொருட்களை உடைக்கும் தன்மையாக மாறுகிறது. இதுவரை பெற்றோர் பாடும் பிள்ளைத்தமிழின் பாடல்கள் இப்போது சிறுமிகளால் பாடுவதாக அமைக்கப்படுகிறது. வளரும் ஆண் குழந்தையின் மூர்க்க நடத்தையை -aggressive behaviour-ஐ மாற்றுவதற்கு ஆரோக்கியமான வழி அதனை அதன் வயதொத்த இதர பாலினத்தாருடன் பழக விடுவதாக இருக்கலாமா? தெரியாது. நம் குழந்தை உளவியலாளர்கள் பிள்ளைத்தமிழின் இந்த உளவியல் பரிமாணங்களை ஆராய்ந்து பார்க்கலாம். பிள்ளைத்தமிழ் உளவியல் நூல் அல்ல. ஆனால் அது இன்றைய உளவியலாளர்களுக்கு சில நல்ல திறப்புகளை தரலாம். நம் பண்பாடு சார்ந்த திறப்புகளைத் தரலாம். அழ.வள்ளியப்பா இதை முயன்றிருக்கிறார் என தோன்றுகிறது. அவரது ’மலரும் உள்ளம்’ குழந்தைகள் பாடல்கள் தொகுப்பை குழந்தை வளர்ச்சிக்கேற்ப வரிசைப்படுத்தியிருக்கிறார்.
பிள்ளைத்தமிழ் குறித்து பேசும் போது கூடவே நினைவுக்கு வரும் விஷயம் குழந்தைகள் இலக்கியம்.
அண்மையில் சில பிரிட்டிஷ் நாட்டுப்புறவியலாளர்கள் புகழ்பெற்ற ‘London Bridge’ என்கிற ‘சிறுவர்’ பாடல் குறித்து சர்ச்சைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். புகழ்பெற்ற லண்டன் பாலம் கட்டப்பட்ட போது அங்கு நரபலிகள் கொடுக்கப்பட்டதன் நினைவாகத்தான் இந்த பாடல் எழுதப்பட்டது என்றும் மிக அண்மையில் கூட அங்கே நரபலிகள் கொடுக்கப்பட்டதாகவும் ஒருவர் எழுத மற்றொருவர் அதை மறுக்க… ஆனால் பாட்டின் சாராம்சம் ஒரு உண்மையான அல்லது போலியான நரபலி நினைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது.
நாம் நம் குழந்தைகளுக்கு இந்த புத்திசாலித்தனமான விஷயங்களைத்தான் நாகரிகம் என்கிற பெயரில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே குமரி மாவட்ட சுதேசி சிந்தனையாளர் ஜஸ்டின் திவாகர் இதை குறித்து எழுதியிருக்கிறார்.
இளம் எழுத்தாளர் உமாநாத் செல்வன் சிறுவர் இலக்கியங்கள் படைப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறார். அண்மையில் அவர் பகிர்ந்த ஒரு பாடல் ’அந்தோனிசாமியின் தோட்டத்திலே’ .
அந்தோனிசாமியை தெரியாதவர்களுக்கு, அந்தோனி சாமி புளியங்குடி கிராமத்தில் உள்ள இயற்கை விவசாயி. அவரது வயலிலும் தோட்டத்திலும் எந்தவிதமான செயற்கை இடுபொருளையும் பயன்படுத்தாதவர். சாண எரிவாயு கழிவை பயன்படுத்த் இயற்கை விவசாயம் செய்வது என்பதை விவேகானந்த கேந்திரம் முயற்சித்த போது அதை வரவேற்ற முக்கியமான விவசாயிகளில் அவர் ஒருவர். இன்றும் அவர் வீட்டில் விவேகானந்த கேந்திரம் அமைத்த சாண எரிவாயு இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஊரில் மற்றொரு அருமையான இயற்கை விவசாயி கோமதி நாயகம் ஐயா அவர்கள். அந்தோனி சாமி அவர்களை குழந்தை பாடல் மூலம் அறிமுகப்படுத்தி வைப்பது அருமையான விஷயம் என்பதில் ஐயமில்லை. நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய புத்தாக்க முயற்சி அது. ஆனால் அந்த பாடல் Old Macdonald had a farm என்கிற பாடலை பிரதி எடுக்கிறது என்பதுதான் கொஞ்சம் உதைக்கிறது. பூர்விக அமெரிக்கக் குடிகளிடமிருந்து பிடுங்கி போடப்பட்ட பண்ணைகளுக்கும் நம்மூர் அந்தோனி சாமி வியர்வை சிந்த தானே உருவாக்கிய இயற்கை வயல்வெளிக்கும் வேறுபாடு உண்டு.
எதற்காக எதை பிரதி எடுப்பது? இது உமாநாத்தின் முயற்சி குறித்த விமர்சனம் அல்ல. அவரது முயற்சி முக்கியமானது பல அருமையான சாதனைகளை நிகழ்த்தியிருப்பது. குழந்தை இலக்கியத்தில் ஒரு இயற்கை விவசாயியை அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற சிந்தனையே மதிக்கத்தக்கது. ஆனால் வடிவத்தை ஆங்கில ரைம்களில் தேட வேண்டாம் என்பது மட்டுமே இக்கட்டுரையின் மிகச்சிறிய வேண்டுகோள். சிறிது நமது கிராமிய இசைபாடல்களை நம் குழந்தை இலக்கியங்கள் -குறிப்பாக பாடல்கள் எழுதுகிறவர்கள்- கவனிக்க வேண்டும். விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் தொகுத்து பிரபலப்படுத்திய கிராமிய இசைகள் அனைத்துமே சிறந்த குழந்தை இலக்கியங்களாகத் தக்கவை. ஊர் பெயர்கள், உறவுப்பெயர்கள், தாவரப்பெயர்கள், சாமிகள் பெயர்கள் என குழந்தைக்கு அதற்கு பரிச்சயமான வார்த்தைகளின் மூலம் உலகத்தையும் இசை நயத்தையும் கொண்டு வந்து கொடுப்பவை அவை.
குழந்தைகளுக்கான ஆங்கில பாடல்களை எடுத்துக் கொண்டால் கூட சில அருமையான pagan பாடல்கள் இப்போது கிடைக்கின்றன. பூமியைத் தாயாக பார்க்கும், உலகத்தின் மீள்-சுழற்சித்தன்மையை கூறும் பாடல்கள். Black sheepகளையும் Hot cross bun களை விடவும் நிச்சயம் அருமையானவை தேவையானவை. ஸ்மிருதி ஈரானிக்கு யாராவது இவற்றை பரிந்துரைக்க வேண்டும் – பாடத்திட்டங்களில் சேர்க்க.
எதுவானாலும் உலகளாவிய அன்பு-அறம் எனத்தொடங்கி அறிவியல்-சூழலியல்-இயற்கை வேளாண்மை வரையாக அனைத்தையும் நம் குழந்தைகளுக்கு தாய்மொழியில் அறிமுகப்படுத்த சிறப்பான இசைவடிவம் நம் கிராமிய இசைவடிவங்கள். ஒவ்வொரு வட்டாரத்துக்குமாக நம் தாய்தெய்வங்கள் போல பல்வேறு உருகொண்டு அவை காத்திருக்கின்றன. மதம்மாறிய சமூகம் விட்டுச்சென்ற அம்மன் கோவில் போல புதர் மண்டி மறைந்து அவை கிடந்தாலும் அவற்றை என்றாவது ஒருநாள் மீண்டும் இந்த சமுதாயம் மீள்-கண்டு திரும்பிவரும் என காத்திருக்கின்றன அவை. அவற்றின் உளவியல், இலக்கிய பரிமாணங்களை நாம் என்றாவது மீண்டு வந்து பயில்வோம் – ஒரு ஆரோக்கியமான நாளைய பாரதத்துக்காக – நம் குழந்தைகளுக்காக.
சிறு குழந்தைகளுக்கு ஆழ்வார்கள் நாயன்மார்கள் பக்தி பாடல்களை தற்கால தாய்மார்கள் புகுத்தவேண்டும் பெரியாழ்வார் பிள்ளை தமிழ் பாடல்களில் ஆறாம் திருமொழியில் கைகொட்டி விளையாடுதல் சப்பாணிபருவ பாடல்கள் குழந்தை கண்ணனை பற்றியது இது போன்று நூற்றுகணக்கான பாடல்கள் நம் சமய பாடல்களில் உள்ளன இவைகளை பிரகாச படுத்தவும் மம்மி டாடி பாடங்களை தவிர்க்கவும்
அன்புள்ள அநீ,
அருமையான சிந்தனையைத் தூண்டும் கட்டுரை. ஆனால் தங்கள் கட்டுரை தொடரின் தலைப்புக்கும், வலை தளத்தின் பெயருக்கும், அன்றாடம் நியாயம் செய்தேதான் தீர வேண்டுமா? //இது ஸாகீர் நாயக் தனமான கட்டுரை அல்ல//,//மதம்மாறிய சமூகம் விட்டுச்சென்ற அம்மன் கோவில் போல// ஆகிய வாக்கியங்கள் இக்கட்டுரைக்கு என்ன விதமான நியாயம் செய்கின்றன.
ஜேன் பியாகேவின் உளவளர்ச்சிப்பருவங்களை நம்முடைய பிள்ளைத்தமிழ் பருவங்களோடு அழகாக ஒப்பீடு செய்திருக்கிறார் ஸ்ரீ அ நீ. குழந்தைகளுக்கானப்பாடல்களில் இயற்கைவாழ்வியலைப்போற்றக்கற்றுத்தருதல் நிச்சயம் பாராட்டத்தக்கது. மெய்யாகிலும் அந்தோணிசாமி ஐயாவும் கோமதி நாயகமும் ஏன் நம்மாழ்வாரும் பாளேக்கரும் கூட நம் குழந்தைகள் தெரிந்துகொண்டு போற்றவேண்டிய பெரியார்களே. அவர்களைப்போற்றிப்பாராட்ட நம் நாட்டு மெட்டுக்கள் போதும் அன்னிய மெட்டுக்கள் வேண்டாமே என்ற் அரவிந்தன் அவர்களின் சிந்தனை ஏற்புடையது.
சிறப்பான கட்டுரை. நன்றி அ.நீ
இதைப்போல இன்னும் சில கேவலமான பாடல்கள் உள்ளன. என் குழந்தைகள் இணையத்தில் இந்த பாடல்களை இமைக்காமல் மறுபடி மறுபடி பார்க்கும்போது என்ன விதமான விளைவுகள் உருவாகும் இந்த பிஞ்சு மனசுகளுக்குள் என்று தோன்றும்.
1. Rock a Bye baby (காற்றடித்தால் கிளை முறிந்து குழந்தை தொட்டிலோடு விழுமாம்)
2. பிரார்த்தனை சொல்லாத காரணத்தால் தாத்தா ஒருவரது காலை வாரிவிட்டு மாடிப்படியில் உருண்டு விழவைக்கும் வாத்து (Goosy Goosy)
என்ன கருமம் இது ?
இதே போல நமது பண்பாட்டுக்கு மிக அன்னியமான குழந்தைப்பாடல்களும் வெள்ளை இன உயர்வை மறைமுகமாக திணிக்கும் டோர-டியாகோ கார்ட்டூன் தொடர்களும் நமக்கெதற்கு ? குழந்தைகள் தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகள் தயாரிக்க நம்மாலேயே முடியாதா ? இன்னும் எத்தனை நாள்தான் தொடர்ந்து காப்பியடித்துக்கொண்டே நமது தாழ்வுமனப்பான்மையை வெட்கமின்றி வெளிச்சமிட்டுக்கொண்டிருப்பது ?