என்னை ஏன் மணந்துகொண்டாய்

ஒரு மனைவியைச் சமாளிப்பதற்கே போதும் போதுமென்றாகி விடுகிறது. யாருக்கு பதினாறாயிரத்து நூத்தி எட்டு பேர்கள் இருக்கிறார்களோ அவர்கள் நிலைமை என்னவாகும்?

ஆனால் நாம் நினைக்கிற மாதிரி இல்லை. பிரபுவின் அரண்மனையில் அவர்கள் எல்லோரும் ஒருவேளை பிரபுவிடம் வேண்டுமானால் பிணக்கு கொண்டார்களேத் தவிர அவர்களுக்குள்ளேயே பூசல் என்று எதுவுமே என்றைக்குமே இருந்ததில்லை. எல்லோருமே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு பாராட்டினார்கள்; அதுவும் மிகுதியான அன்பு. அதிலும் எல்லா மனைவிமார்களில் மூத்தவர்களான ஸ்ரீருக்மணி மஹாராணி இருந்தார்களே, அவர்கள் பகவானிடத்தில் கூட பிணங்கியதில்லை. அவ்வளவு தூரம் போவானேன், அரண்மனையிலிருந்த சேவகர்களும் சரி மந்திரிகளும் சரி எல்லோருமே பகவானிடத்தில் ஒரே ஒரு பிரார்த்தனைதான் செய்துகொண்டிருந்தார்கள், “பிரபு அடுத்த பிறவிகளில் நான் எங்கே பிறந்தாலும், எஜமானி என்று ஒருவர் வாய்த்தால் அவர் ருக்மணியம்மா போலவே வாய்க்க வேண்டும். இந்த மாதிரி எஜமானியம்மாவை நான் பார்த்ததேயில்லை. எவ்வளவுதான் தவறுகள் நேர்ந்து விட்டாலும், அவர்கள் ஒரு நாளும் கடிந்துகொள்வதேயில்லை. எஜமானி என்றால் ருக்மணியம்மா அல்லவோ எஜமானி. நளினத்திற்கு மறுபெயர் ருக்மணியம்மா.”

பிரபுவின் புருவங்கள் உயர்ந்தன. ‘இவள் கோபமே வராததுபோல் ஒன்றும் நாடகமாடவில்லையே’ என்று பிரபு வியந்தார்.

கிருஷ்ணர் லீலைகள் செய்பவராயிற்றே! ஒரு நாள் ருக்மணிம்மாவை சோதித்துப் பார்க்கத் திருஉள்ளம் கொண்டார்.

அதற்கான முஸ்தீப்புகள் தொடங்கின. அவர் கோபத்தில் இருப்பது போல் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

ருக்மணியம்மா குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்திருந்தார்கள். “பிரபு ஏதாவது தவறு நேர்ந்து விட்டதா?”

“இல்லையில்லை, வைத்து விடு. தண்ணீர் எனக்குக் குடிக்கத் தேவையில்லை”.

ருக்மணியம்மா என்னவாயிற்று என்றுவியந்தார்கள். விசிறியைக் கொண்டு வந்தார்கள் விசிறினார்கள்.

“பகவானே என்னால் ஏதாவது குற்றங்குறைகள் நேர்ந்து விட்டதா?”.

“நான் என்ன சொல்வது? ஓரிரு தப்புக்கள் இருந்தாலல்லவா சொல்ல முடியும்? தப்புக்கு மேல் தப்புக்களாகச் செய்திருக்கிறாய். ஒன்றோஇரண்டோ இல்லை, அடுக்கடுக்காகத் தப்புகள்”.

ருக்மணியம்மாவுக்கு ஆச்சிரியம். “அப்படி என்னத் தப்பு செய்து விட்டேன், மகாராஜா? என் பணிவிடையில் என்னக் குற்றம்நேர்ந்து விட்டது?”

“உன்னுடைய முதல் தப்பு இதுதான். என்னை ஏன் விவாகம் செய்துக் கொண்டாய், ஊம்? என்ன லபித்தது உனக்கு, என்னை மணந்துக்கொண்டு? நீங்கள் ரொம்பவும் அழகு அதனால் தான் விவாகம்செய்தேன் என்று நீ சொல்லலாம். நான் எங்கே இவ்வளவு அழகாய் இருக்கிறேன், ஊம்? நானோ அட்டைக் கருப்பு! போதாக்குறைக்கு காளியங்கனுடன் சண்டையிட்டு இன்னும் அதிகம் கருப்பாகி விட்டேன். அழகுமில்லை, உனக்கு நான் பாந்தமாகவும் இல்லை” என்று பிரபு பொய்யாகக் கோபித்துக் கொண்டுவிட்டு ஏதாவது வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறதா என்று திரும்பி ருக்மணியம்மாவின் முகத்தை ஏறிட்டு நோக்கினார்.

ருக்மணியம்மா புரிந்து கொண்ட மாதிரித் தென்படவில்லை. மருந்து வேலை செய்யவில்லை போலிருந்தது. மாறாக, ருக்மணியம்மாவிற்குச் சிரிப்புதான் வந்தது. “என்ன இப்படிப் பேசுகிறீர்கள் பிரபு?”

கிருஷ்ணர் இன்னும் பலமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் சொன்னார், “என்னை ஏன் மணந்துக்கொண்டாய்? நீங்கள் ஒரு வீரர். உங்கள் பிரதாபத்திற்காகத்தான் உங்களை மணந்துகொண்டேன் என்று நீ சொல்லலாம். பயத்தால் நடுங்கி சமுத்திரத்தின் நடுவே ஒளிந்துகொண்டிருக்கிறேன், ஊம்? நான் எந்த விதத்தில் வீரனாவேன்? உங்களுடைய குலம் மிகவும் உயர்ந்த குலம். அதனால் தான் உங்களை மணம்புரிந்தேன் என்று ஒருவேளை நீ சொல்லலாம். என்னுடைய குலத்தில் அப்படி என்ன சிறப்பாக இருக்கிறது? எனக்கு என்னுடைய தாயின் பெயரும் தெரியாது, தந்தையின் பெயரும் தெரியாது. சிலர் என்னை யசோதாநந்தன் என்கிறார்கள், சிலர் நந்தநந்தன் என்கிறார்கள், சிலர் தேவகிநந்தன் என்கிறார்கள். இன்னும் எனக்கு என்னுடைய அப்பா அம்மாவே யார் என்று தெரியவில்லை.

எதற்கு என்னை கல்யாணம் செய்துக் கொண்டாய்? உனக்கு எவ்வளவு நல்லநல்ல வரன்கள் வந்திருந்தன? யார், அந்த சிசுபாலன்? அவனுக்கென்ன குறை இருந்தது? படிப்பிருந்தது, இளமை இருந்தது, ராஜாவின் குமாரனாக இருந்தான். எல்லோரையும் புறக்கணித்துவிட்டு என்னைத் தேர்ந்தேடுத்தாயே, அதுதான் ஏன் என்கிறேன்? மகாராஜாவே நான் உங்களுடைய குணாதிசயங்களைக் கேள்விப்பட்டிருந்தேன். அவைகளைப் பற்றிய விவாதங்களைக் கேட்டிருந்தேன். அதனால்தான் கல்யாணம் செய்துகொண்டேன் என்றும் நீ சொல்லலாம். என்னைப் பற்றிய விவாதங்களை செய்பவர் யார்? போயும் போயும் அந்த சாது சந்நியாசிகள்! சோற்றுக்கு வழிஇல்லாத அன்னக்காவடிகள்! அந்தப் பஞ்சப் பனாதைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கண்மூடித்தனமாக என்னை மணம்புரிந்துகொள்கிற அளவுக்குத் துணிந்து விட்டாயா? இப்போதும் ஒன்றும் குடி முழுகி விடவில்லை. நீ ஊம் என்று ஒரு வார்த்தை சொல். நாளைக்கே சிசுபாலனை வரவழைக்கிறேன். அவனுடன் உனக்கு விவாஹம் செய்து வைத்து விடுகிறேன், சொல்லு!”

இப்படி பகவான் எப்போது சொல்கிறார் தெரியுமா? கல்யாணமாகி நாற்பது வருடங்களுக்குப் பிறகு! இந்த நாளைய மனைவியாக இருந்திருந்தால் காதைப் பிடித்து இழுத்துக்கொண்டுப் போய் வீட்டுக்கு வெளியே தள்ளி நடையைக் கட்டு என்று சொல்லி இருப்பார்கள். “கிழமே, இப்படி புத்தி சுவாதீனம் இல்லாமல் வேடிக்கை செய்வதற்கும், விவஸ்த்தை இல்லாமால் பேசுவதற்கும் வெட்கம் வரவில்லை உனக்கு?” என்று சொல்லி இருப்பார்கள்.

ஆனால் பகவானுடைய பேச்சைக் கேட்ட மாத்திரத்திலே ருக்மணியம்மாவுக்குத் தட்டாமாலை சுற்றியது. மூர்ச்சித்து விட்டார்கள்.

அவர்கள் அப்படி மூர்ச்சித்து விழப் போகும் தருணத்தில் பகவான் நான்கு கரங்களுடன் பிரகடனமாகி இரண்டு கரங்களால், ருக்மணியம்மாவைத் தாங்கிக் கொண்டு விட்டார்கள்.

“தேவி, நான் சொன்னதை நிஜமென்று நம்பி விட்டாயா? நான் விளயாட்டுக்கல்லவா சொன்னேன்! நீ அதை விபரீதமாக எடுத்துக் கொண்டு விட்டாய்”. பிரபு இரண்டு கைகளால் ருக்மணியம்மாவைத் தாங்கிக் கொண்டு, ஒரு கையால் விசிறினார்கள்; மற்றொரு கையால் தலையைக் கோதி விட்டார்கள். “மனதை உழப்பிக் கொள்ளாதே!”.

ருக்மணியம்மாவின் கண்களில் தளும்பி நின்ற கண்ணீர் உடைந்து பெருகியது. பிழியப் பிழிய அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் சொன்னார்கள்…

“இல்லை பிரபு, நீங்கள் சொன்னது வேடிக்கை இல்லை. அத்தனையும் வாஸ்தவம். எங்கே நீங்கள்! எங்கே நான்! நான் உங்களுக்கு ஒரு விதத்திலும் லாயக்கு அற்றவள். நீங்கள் என்னை இல்லாளாகத் தேர்ந்தெடுத்து என் மீது கருணைகாட்டினீர்கள்; கிருபை செய்தீர்கள். இல்லை என்றால், எங்கே நீங்கள்! எங்கே நான்! உங்களுக்கு நான் எப்படி யோக்யதை உள்ளவளாவேன்?

நீங்களோ இந்த பிரமாண்டத்திற்கேச் சொந்தக்காரர். நானோ ஒரு சின்ன ராஜாவின் பெண். நான் எப்படி உங்களுக்கு உகந்தவளாவேன்? என்னென்ன நீங்கள் சொன்னீர்களோ, அவை எல்லாவற்றிலும் தவறென்ன இருக்கிறது? உண்மையைத் தான் சொன்னீர்கள்.

எனக்கு தாய் தந்தை யாரேன்றுத் தெரியாது. அவர்களுடைய இருப்பிடம் என்னவென்றுத் தெரியாது என்றுச் சொன்னீர்கள். அதிலும் தவறென்ன இருக்கிறது? மகாராஜா, உண்மையைச் சொல்லட்டுமா? நீங்கள் தாய் தந்தையாக யாரையும் வரித்துக் கொள்கிறீர்கள் என்பதாக இருந்தாலும் வாஸ்தவத்தில் உங்களுக்கு தாய் தந்தையாகக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? ஏனெறால் இந்த ஜகத்திற்கு ஸ்வயம் நீங்களே தாய் தந்தை. அப்படி இருக்கும் போது உங்களுக்குப் பெற்றோராக யாரால் ஆக முடியும்?

உலகத்தார் என்னவோ சொல்லி விடுகிறார்கள் கிருஷ்ணர் பிறந்தார் என்று. கிடையாது. கிருஷ்ணர் பிறக்கவில்லை; கிருஷ்ணர் பிரகடனமாகி இருக்கிறார். அம்மாவுமில்லை, அப்பாவுமில்லை; அண்ணனுமில்லை, தங்கையுமில்லை. தாங்களோ அனாதியானவர். உங்களுடைய அம்மா அப்பாவாக யாரால் ஆக முடியும்?

இன்னும் அசுரர்களுக்கு பயந்துகொண்டு சமுத்திரத்தின் நடுவே ஒளிந்துகொண்டிருந்ததாக நீங்கள் சொன்னீர்களே, அதுவும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள், மகாராஜா. ஏனென்றால் எங்கு காமம் குரோதம் இத்தியாதி பயங்கரமான ராட்சசர்கள் இருக்கிறார்களோ, அந்த மாதிரியான இருதயத்தில் நீங்கள் வாசம் செய்வதில்லை. தாங்களோ உயிர்களின் ஆத்ம ரூப சமுத்திரத்தில் வாசம் செய்கிறீர்கள், மகாராஜா. அங்கு இந்த ராட்சசர்களின் பயம் துளிக் கூட கிடையாது. ஆபத்தும் கிடையாது.

அப்புறம் மூன்றாவதாக நான் அழகில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா? நீங்கள் கருப்பாக இருக்கும்போதே, எல்லோரையும் இப்படி வாட்டி வதைக்கிறீர்கள். ஒரு வேளை சிவந்த மேனியோடு இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? கருப்பாக இருந்தும்கூட இப்படி அலைக்கழிக்கிறீர்கள்! மகாராஜா, உங்களை ஒரு தடவை பார்த்துவிடுபவர்கள் யாரோ அவர் அதன் பிறகு வேறு எந்தச் காரியம் செய்வதற்கும் லாயக்கில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள் (தன்னையே உங்களிடம் பறி கொடுத்து விடுகிறார்கள்”.

“நந்தலாலா நீ மட்டும் பெண்ணாகப் பிறந்திருந்தால் ….? நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. நல்ல காலம் நீ ஆண்பிள்ளையாகப் பிறந்து விட்டாய்! நீ மட்டும் பெண்ணாகப் பிறந்திருந்தால் கோடிக் கணக்கான பேர்களின் தலைகள் உருண்டிருக்கும்!”

— என்று பிரிஜ் மண்டலத்தில் பாட்டு சொல்வதுண்டு.

ருக்மணியம்மா சொன்னார்கள்,

“பிரபு, நீங்கள் ஆண்பிள்ளைக்குப் பதிலாக பெண்பிள்ளையாக மட்டும் பிறந்திருந்தால் கோடிக் கணக்கான பேர்கள் உங்கள் மீது உயிரைவிட்டிருப்பார்கள். எவ்வளவு வசீகரம் நீங்கள்!”

கிருஷ்ணர் அலங்காரம் பண்ணிக் கொண்டபிறகுதான் அவரைப் பாருங்களேன்! மோகன உருவம்! கழுத்தில் முத்துக்களைத் தொடுத்துச் செய்யப்பட்ட மாலை. தலையில் மயிலிறகு செருகப்பட்ட மகுடம். காதில் மஞ்சள்நிற புஷ்பம். இன்னும் கழுத்தில் வைஜயந்தி மாலை. அதற்கு கீழே பீதாம்பரம். இவ்வளவு அலங்காரங்களையும் செய்தது போதாதென்று, கண்ணில் மை மட்டும் தீட்டிக் கொண்டுவிட்டாலோ, பார்ப்பவர்கள் கதி அவ்வளவுதான். தொலைந்தார்கள். மை இட்டுக் கொண்ட கண்களில் பிரபு எத்தனை அழகு! அந்த மை தீட்டிய தாமரைக்கண்கள் வாடிக் கிடக்கும் உயிர்களைத் தளிர்க்கவும் செய்யும், வாளைப் போல வெட்டி மாய்க்கவும் செய்யும். பிரபு அழகென்றால் அழகு, கொள்ளை அழகு! கோடிக்கணக்கான காம தேவன்களை வெட்கித் தலைகுனியவைக்கும் அழகு!

ருக்மணியம்மா சொன்னார்கள்,

“பிரபு நீங்கள் இன்னொன்றும் சொன்னீர்கள்.. உலகத்தில் செல்வத்தைப் பெறாத ஏழை எளியவர்களான சாதுசந்நியாசிகள்தான் உங்களுக்குப் புகழாரத்தைச் சூட்டுகிறார்கள் என்று. உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா? எதை மரணம் கூட பறித்துக் கொள்ள முடியாதோ, அப்படிப்பட்ட சொத்து மகாத்மாக்களிடம் இருக்கிறது. அப்படி என்ன சொத்து? ராமநாமம்! யாரிடத்தில் ராமநாமம் இருக்கிறதோ அவரொருவரே தனவான். அது இல்லாத இந்த உலகத்தார் அனைவருமே தனமற்றவர்கள். உலகத்தில் யாரிடத்தில் செல்வமிருந்தாலும், மரணம் ஒரு நாள் அந்தச் செல்வத்தைக் களவாடி விடுகிறது. ஆனால் ராமநாமத்தின் மகிமையோ வெனில், அதை மரணம் கூடப் பறித்துக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட தனம் மகாத்மாக்களிடத்தில் மிக அதிகமாகவே இருக்கிறது. அந்த மாதிரி தனவான்களான மகாத்மாக்களின் வாயால் உங்களுடைய பெருமைகளைக் கேட்டு நான் உங்களையே கணவராக அடைந்து விட்டேன். இதை நீங்கள் தப்பு என்று சொன்னால், கோவிந்தனைக் கணவராக வரிக்கும் வாய்ப்பைத் தரவல்ல இந்தத் தப்பை நீயும் செய் என்று உலகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடமும் சொல்லுவேன்”.

***

[ருக்மணியம்மா சாதுக்கள் மூலமாகத்தான் பிரபுவின் குணாதிசயங்களைக் கேட்டு அவர்கள் ஆசிர்வாதத்தால் பிரபுவை அடைந்திருந்தார்கள். இவ்வாறு பகவான் நேசக் கலகம் செய்து அவர்களுடைய தாம்பத்தியப் பிணைப்பு இன்னும் இறுகும்படி செய்துவிட்டார்.]

3 Replies to “என்னை ஏன் மணந்துகொண்டாய்”

  1. மிகவும் ரம்யமாக இருக்கிறது.
    மிருதுவாக இத்தகைய விஷயங்களை அழகாகத் தொகுத்து கட்டுரை ஆக்கியிருக்கும் கைவண்ணம் பாராட்டத்தக்கது. கருத்துக்களை தாங்கி வரும் வார்த்தைப் பிரயோகங்களிலே தோய்ந்து நிற்கும் மனோபாவங்கள் மிகவும் அருமை. இதுபோன்ற நல்ல சங்கதிகளை – இந்து மத தொன்மங்களின் குறியீடுகளின் பின் உள்ள ஆழமான மூல அபிப்ராயங்களைக் கோர்த்துத் தொடுத்து, அடிக்கடி எல்லோரும் மீண்டும் தெரிந்து கொள்ள உதவியாக வெளியடவும்.
    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  2. அதரம் மதுரம்… என்கிற பாடல் தான் நினைவுக்கு வருகிறது. கண்ணைப் பாடினாலும் சுகம். படித்தாலும் சுகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *