அரவான் என்றொரு மாபெரும் தமிழ் சினிமா வந்திருப்பதாகவும் அது ஒரு தமிழ் நாவலில் இருந்து உருவாக்கப் பட்டதாகவும் இணையத்தில் ஒரே பரபரப்பாக பேசப்பட்ட படியால் அந்த நாவலில் இருந்து சினிமாவுக்காக எடுக்கப்பட்ட பகுதிகளைப் படித்து வைப்போமே என்று ஒரு நண்பரிடமிருந்து இரவல் வாங்கிய புத்தகத்தில் இருந்து இந்த நாவலில் உள்ள நாயக்கர் வரலாற்றைத் தவிர்த்து விட்டு சினிமாவுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் கதைகள் வரும் பகுதிகளை மட்டும் படித்து வைத்துக் கொண்டு எதிர்பார்ப்புகளுடன் சினிமாவுக்குச் சென்றேன். மொத்த நாவலையும் படிக்க ஒரு மாதம் லீவு போட வேண்டும் போலிருக்கிறது. பொதுவாகவே தமிழ் நாவல்களை அது வாசகர்களின் மனதுக்குள் தோற்றுவித்த அதே விளைவைப் பிரதிபலிக்கும் விதத்தில் தமிழ் சினிமாக்கள் உருவாக்கப் படுவதில்லை. ஒரு ஹாரி பாட்டர் படிக்கும் பொழுதோ ஒரு காட் ஃபாதர் படிக்கும் பொழுதோ நம் கற்பனையில் விரியும் தோற்றங்களையும் பாத்திரங்களையும் கதை நடக்கும் இடங்களையும் அதே விதமாக நம் மனதை மாயக் கண்ணாடி வைத்துப் படித்தாற்போல தத்ரூபமாக உருவாக்கி விடுகிறார்கள். கிட்டத்தட்ட ஹாலிவுட்டிலும் ஐரோப்பாவிலும் நாவலில் இருந்து உருவாக்கப்படும் படங்கள் வாசகனின் கற்பனையை இமேஜ் ஸ்கேன் செய்து எடுத்தாற் போல அமைந்து விடுகின்றன. நம் மனதில், நம் கற்பனையில் நாவலை வாசிக்கும் பொழுது ஏற்படும் தோற்றங்களையும் உருவகங்களையும் சூழல்களையும் அதே பிருமாண்டத்துடன் சினிமாவில் விரிவதை பார்க்கும் பொழுது எப்படி இந்த ஹாலிவுட் சினிமாக்காரர்கள் நம் மனதைப் படித்தார்கள் என்ற பிரமிப்புடன் வியந்திருக்கிறேன்.
ஆனால் தமிழ் நாவல்களில் இருந்து இது வரை உருவாக்கப் பட்ட தமிழ் சினிமாக்களில் பார்த்திபன் கனவு மற்றும் ஓரளவுக்குத் தில்லானா மோகனாம்பாள் ஆகிய இரு சினிமாக்களைத் தவிர வேறு எந்த சினிமாவுமே நாவலுக்கு உண்மையாக இருந்ததே கிடையாது. நாவல்களில் அடையப்படும் உச்ச உணர்ச்சிகளையும் பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களையும் நாம் சினிமாக்களில் அப்படியே உணர்ந்து அனுபவிக்கவே முடியாது. அதற்கான திறமை இன்று வரை தமிழ் சினிமாப் படைப்பாளர்களிடம் உருவாகமலேயே போய் விட்டது. இலக்கியம் அளிக்கும் அனுபவத்தின் உச்சத்தினை அதில் இருந்து உருவாக்கப்படும் சினிமாக்கள் அளித்து விட முடியாது என்றாலும் ஓரளவுக்கு அதைப் பிரதிபலிக்கும் பட்சத்தில் நாவலை உருப்படியாகச் சித்தரித்த ஒரு சினிமா என்று ஒத்துக் கொள்ளலாம். தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ் நாவல்கள் எப்பொழுதும் பயங்கரமாக படுகொலைகள் செய்யப்பட்டே வந்திருகின்றன. எழுத்தாளரின் மனதையும் வாசகன் தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் கற்பனை உலகையும் நம் தமிழ் சினிமாக்காரர்கள் என்றுமே புரிந்து கொள்ள முயன்றதே கிடையாது. அவர்கள் விருப்பத்திற்கு, அவர்களுக்குத் தெரிந்த சினிமாவை, அவர்களுக்கு லாபம் அளிக்கும் சினிமாவை மட்டுமே எப்பொழுதும் அளிக்கிறார்கள். அதன் காரணமாகவே நாவலைப் படித்துவிட்டுச் செல்லும் ஒரு வாசகனுக்கு அந்த சினிமா கடும் ஏமாற்றத்தையும் எரிச்சலையும் அளிப்பதுண்டு. சுஜாதா எழுதிய ப்ரியா நாவலைப் படித்து விட்டுச் சினிமா பார்க்கச் சென்ற வாசகனின் கைகளில் மட்டும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மாட்டியிருந்தால், அவரை ஒரு வழி செய்திருப்பான். அந்த அளவுக்கு நாவலைக் கேவலப்படுத்தியிருப்பார்கள். மோகமுள் என்னும் தமிழின் முக்கியமான நாவல் தரும் வாசிப்பு அனுபவத்தில் கோடியில் ஒரு பங்கினைக் கூட அந்தத் திரைப்படம் அளிக்கவில்லை. தமிழில் வரும் நாவல்களை எடுத்து படுகொலை செய்வதை தமிழ் இயக்குநர்கள் ஒரு குரூரமான சேடிஸ்டான பொழுதுபோக்காவே கொண்டிருக்கிறார்கள். இந்த அரவானும் அதற்கு விலக்கில்லை.
காவல் கோட்டம் என்னும் நாவலில் வரும் பிறமலைக் கள்ளர்களின் வாழ்க்கையும், அவர்கள் களவுக்குச் செல்லும் சம்பவங்களும் மிக விரிவாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன. வெறும் சம்பவங்களை மட்டுமே விவரிக்கும் அகப் பார்வை ஏதுமற்ற ஒரு நாவல் அது என்றாலும் கூட கள்வர்களின் வாழ்க்கையும் களவுச் சம்பவங்களின் விவரிப்பும் நாவலின் அந்த பகுதிகளை மட்டும் ஒரு சுவாரசியமான வாசிப்பு அனுபவமாக மாற்றுகின்றன. அந்த வாசிப்பு அனுபவம் தந்த சுவாரசியத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட அந்த நாவலின் சில பகுதிகளில் இருந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக உருவி எடுக்கப்பட்டு சினிமாவாகக் கோக்கப்பட்டுள்ள இந்த அரவான் தருவதில்லை. ஏற்கனவே நாவலில் வரும் களவுப் பகுதிகள், பாத்திரங்களையும் காட்சிகளையும் சூழல்களையும் விரிவாக வர்ணித்து விடுகிறது. தி ஜானகிராமன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் கதைக் களனின் சூழலை ஒரு ஆர்ட் டைரக்டரின் நுட்பத்துடன் அற்புதமாகக் காட்சிப் படுத்தும் திறன் வாய்ந்தவர்கள். ஒரு வீட்டின் அறையை அவர்கள் முழுமையாக வர்ணித்து விட்ட பிறகு சினிமாவின் கலை இயக்குநர்களுக்கு அந்த அறையை உருவாக்குவது மிக எளிதாகவே இருக்கும். இயக்குநரின் கற்பனைக்கு இடம் வைக்காமல் தெளிவாகச் சொல்லி விடுவார்கள். அது போலவே இந்த நாவலிலும் கள்வர்கள் வாழும் நிலப் பகுதி, அவர்கள் களவுக்குச் செல்லும் ஊர்கள், களவிடும் வீடுகள், களவுக்குப் போகும் ஆட்கள், போகும் வழி, வழியில் வரும் குளம் குட்டைகள், பள்ளம் மேடுகள், இரவின் அடர்த்தி போன்ற அனைத்து விபரங்களையும் மிகத் துல்லியத்துடன் மிகத் தெளிவாக எழுத்தாளர் எழுதி வைத்திருக்கிறார். நாவல் முழுவதுமே இவை போன்ற சம்பவங்களின் விவரணைகளின் தொகுப்பு மட்டுமே இடம் பெறுகின்றன அல்லது விவரணைகளும் சம்பவங்களும் மட்டுமே நாவலில் உள்ளன. இவ்வளவு தூரம் வர்ணணை செய்யப்பட்ட சம்பவத் தொகுப்புக்களைக் காட்சிப் படுத்துவதும் பாத்திரங்களை உருவாக்குவதும் அவர்களது பேச்சு, நடை, உடை, பாவனைகளை உருவாக்குவதும் எந்தவொரு கத்துக்குட்டி இயக்குனருக்கும் கூட எளிதான, சவால்களே இல்லாத ஒரு எளிய இயக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு விருதுப் படங்களை உருவாக்கிய பிரபலமான இயக்குனரால் பாத்திரங்களின் உணர்வுகளையும், நடிப்பையும், முழு விவரணைகளையும் காட்சிப் படுத்தல்களையும் மிகத் தெளிவாகக் கூறப் பட்டுள்ள ஒரு நாவலின் சில சம்பவங்களைக் கூட முழுமையாக உள்வாங்கி பயன் படுத்திக் கொள்ள முடியாமல் சொதப்பியுள்ளார். இயக்குனருக்கு வேலை வைக்காமல் முழு விவரிப்பையும் எழுத்தாளர் எழுதி வைத்து விட்டுப் போன பிறகும் கூட வசந்த பாலனால் அவற்றை சினிமா என்னும் ஊடகத்தில் காட்சிப் படுத்த முடியாமல் போனது பரிதாபமே. வசந்த பாலனின் குறியெல்லாம் இந்தக் களவுச் சம்பவங்களை எப்படியெல்லாம் அகலத் திரையில் பிரமாண்டமாகக் காண்பிக்கலாம் என்பதிலேயே போய் விடுகிறது.
காவல் கோட்டம் நாவலில் வரும் காலக்கிரமமான சில சம்பவங்களை காலம், இடம், பேச்சு வழக்கு, வாழ்க்கை முறைகள், கள்ளர்களின் கலாசாரங்கள், உணர்ச்சி கொப்பளிக்கும் சித்திரங்கள் போன்ற எந்த பிரக்ஞையுமின்றி, சிறிது கூடக் கவலைப்படாமல் படு செயற்கையான சொதப்பலான ஒரு சினிமாவாக மாற்றியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இது வரை அவர் எடுத்த படங்களிலேயே மோசமானதாக ம்ட்டும் இல்லாமல் தமிழில் இது வரை எடுக்கப் பட்ட மிக மோசமான திரைப்படங்களில் ஒன்றாக இந்த சினிமா இடம் பெற்று விடுகிறது.
அரவான் என்ற பெயரே இந்தக் கதைக்குப் பொருத்தமில்லாத ஒரு பெயர். அரவான் மகாபாரதத்தில் போர் துவங்கும் முன்பாக நரபலியாகக் கொடுக்கப் பட்டவனின் பெயர். இங்கு பலி கொடுக்கப் படுவதோ இரு கிராமங்களுக்கு நடுவே ஏற்படும் பகையைத் தீர்ப்பதற்காக வழங்கப்படும் ஒரு நரபலி. இந்தப் படத்தில் பலியாள் என்பதற்கும் பண்டைப்போர்களின் வெற்றிக்கு பலிதானம் இடப்படுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம். சினிமாவில் வரும் பலியாள் என்பது போரை/பூசலைத் தடுக்கத் தரப்படும் பலி. பண்டைப்போர்களில் தரப்படும் பலி போரில் வெற்றி வேண்டி தரப்பட்ட ஒன்று. இதனை மஹாபாரதம் மட்டுமல்லாமல் பழைய கிரேக்கக் காப்பியங்களிலும் காணலாம். இரண்டு காரணங்களும் தொடர்பில்லாதவை. இருந்தாலும் நரபலி என்ற கருத்தை வைத்து இதற்குப் பெயர் இட்டிருப்பார்கள் போலிருக்கிறது. மேலும் அரவு என்றால் பாம்பு என்பதனால் பாம்புகளும் படத்தின் ஆரம்பத்தில் நெளிகின்றன. இப்படிப் பெயரில் ஆரம்பித்து கதையின் கரு, உணர்வுகள், சூழல்கள் என்று எதையுமே இயக்குநர் புரிந்து கொள்ளவே முயற்சி செய்யவில்லை என்பதை அரவான் சினிமா தெளிவாக வெளிப்படுத்துகிறது.
நாவலில் முன்னொரு காலத்தில் வேறொரு ஊரில் நடக்கும் ஜல்லிக் கட்டில் தாதனூரைச் சேர்ந்த ஒரு வயதானவரும் இளைஞனும் கலந்து கொண்டு தங்கள் ஊரின் மானம் காப்பதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் காளையை அடக்குகிறார்கள். அவர்கள் இருவரின் வாரிசுகளையும் அவர்கள் இருவரது பெயரின் குலக் கொடியின் மூலம் அடையாளப் படுத்துகிறார்கள். ஆனால் இந்த சினிமாவின் அந்த ஜல்லிக்கட்டு என்ற சம்பவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பிற்காலத்துக் கதையில் இயக்குநர் சொருகிக் கொள்கிறார். அது போலவே நாவலின் சம்பவங்களின் கோவையை இயக்குனர் பல இடங்களில் அவரது வசதிக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார். தவறில்லை, அது அவரது படைப்புச் சுதந்திரம். ஆனால் அந்தச் சுதந்திரம் பல இடங்களில் ஒட்டு மொத்த சினிமாவின் ஒழுங்கையே சிதைத்துள்ளதை அவர் உணரவேயில்லை.
நாவல் நடக்கும் களமும் காலமும் வரலாற்றுப் பின்னணிகளும் மிகத் தெளிவாக நாவலில் வரையறுக்கப்பட்டு விட்டிருக்கின்றன. நாவல் நடக்கும் களமாக மதுரையில் இருந்து ஒரு 8 கி.மீ தூரத்தில் இருக்கும் கீழக்குயில்குடி என்ற சிறு கிராமமும் அங்கு இருக்கும் ஒரு சிறிய குன்றும் அடையாளம் காணப்படுகிறது. அங்கு வாழும் பிற மலைக் கள்ளர்கள் என்ற ஜாதியினர் மதுரை நகரில் காவல் வேலையையும் மதுரையைச் சுற்றி களவுத் தொழிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களை பின்னர் பிரிட்டிஷ்காரர்கள் எப்படி அடக்கி ஒடுக்குகிறார்கள் என்பதே நாவலில் சொல்லப் பட்டிருக்கும் கதை. அதுவும் எழுத்தாளரின் புனைவு கூட அல்ல; அங்குள்ள மக்களால் அவர்கள் முன்னோர்கள் குறித்து வாய்மொழியாகச் சொல்லப் பட்டக் கதைகளை சு.வெங்கடேசன் தொகுத்து அளித்திருக்கிறார் என்று தோழரின் தோழர்களே சொல்லியுள்ளார்கள். ஆனால் சினிமாவில் அதே இடத்தையும் ஜாதியையும் சொல்வது மிகச் சிக்கலான ஒரு விஷயம் என்று இயக்குநர் நினைத்து விட்டார் போலும். அதனால் சுதாரிப்பாக கதை நடக்கும் இடத்தின் பெயரை அடையாளம் காண முடியாத இடமாக மாற்றி விடுகிறார். அவர்களது ஜாதிப் பெயரையும் மிக ஜாக்கிரதையாகச் சொல்வதில்லை. பிராமணர்களைத் தவிர பிற ஜாதிகளை நம் இயக்குனர்களை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில்லை. ஏதோ இந்தோனேஷியாக் காடுகளில் வாழும் கொரில்லாக் குரங்குகளைப் போல நடிகர்களை உருவாக்கியுள்ளார். குரங்குகள் கேஸ் போடாது, திட்டாது பாருங்கள்.இதற்கு மேலும் இந்தக் கதையில் வரும் கள்வர்கள் எங்கள் ஜாதியைக் குறிக்கின்றது என்று யாராவது கண்டுபிடித்து கேஸ் கீஸ் போட்டு விடுவார்களோ, தன்னைத் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் மிகுந்த முன்ஜாக்கிரதையுடன் பாத்திரங்கள் பேசும் மொழியைக் கூட மாற்றி விடுகிறார். ஆம், படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு சினிமா மொழி வழக்கில் பேசுகிறார்கள். ஆக நாவலில் வரும் சம்பவங்கள் நடைபெறும் இடம், பாத்திரங்கள், அவர்கள் பேசும் மொழி என்று அனைத்தையும் மாற்றி விட்ட பிறகு நாவலில் நடைபெற்ற சம்பவங்கள் மட்டுமே சினிமாவில் மிச்சம் இருக்கின்றன. அதனால் சினிமா நாவலின் எந்தவொரு யதார்த்தையும் பிரதிபலிக்காத செயற்கையான சினிமாத்தனம் மிகுந்த ஒரு மலிந்த படைப்பாக மட்டுமே எஞ்சுகிறது.
மதுரையைச் சுற்றி வாழும்- குறிப்பாக மதுரையின் மேற்கே நாகமலை, புதுக்கோட்டை துவங்கி செக்கானூரனி, உசிலம்பட்டி வரை பரந்து விரியும் மேற்குப் பகுதிகளில் வாழும் பிறமலைக் கள்ளர்களின் வாழ்க்கைகளைக் களமாக வைத்தே தமிழில் சமீப காலங்களில் எடுக்கப் பட்ட பெரும்பாலான மதுரைப் படங்கள் வெற்றி பெற்றன. அதன் காரணம் அந்தப் படங்களில் இயல்பாக வெளிப்படுட்த்தப்பட்ட வன்முறையும், பழிவாங்குதல்களும், துரோகங்களும் காதலும் அவை அளிக்கும் மிக விரிவான வன்முறைக்கான தளமுமே ஆகும். காதல், சுப்ரமணியபுரம், கூடல்நகர், பருத்தி வீரன், ஆடுகளம், ஒச்சாயி என்று எண்ணற்ற படங்கள் இந்த பிறமலைக் கள்ளர்களின் பின்னணியில் வைத்து எடுக்கப்பட்டு பெரும் வெற்றி அடைந்தன. அந்தப் படங்களில் அவர்களது வாழ்க்கைகளும் அவர்கள் பேசும் மொழியும் வட்டார வழக்கும் மிக யதார்த்தமாகச் சித்தரிக்கப் பட்டிருந்தன; நடிகர்களும் வெகு இயல்பான நடிப்பை அளித்திருந்தனர். அந்த யதார்த்தமே அந்தப் படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. ஆக அவர்களது வட்டார மொழி பழக்க வழக்கங்கள் அனைத்துமே தமிழ் சினிமாக்காரர்களுக்குக் கைவந்த கலையாகிப் போயின. அவர்கள் பேசும் மொழியே மதுரைக்காரர்கள் பேசும் மொழியாகவும் அவர்கள் அனைவருமே சட்டைக் காலருக்குப் பின்னால் அருவாளைச் சொருகிக் கொண்டு அலைபவர்கள் என்றும் கொலை அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல என்றும் தொடர்ந்து அவர்களை வன்முறையாளர்களாகவும் கொடூரமானவர்களாகவும் காட்டப்பட்ட படங்களே மதுரையின் பின்னணியில் எடுக்கப்படும் படங்களின் கதைகளாக அமைந்து வந்தன. மதுரை நகரம் என்றாலே வன்முறை மிகுந்த நகரம் என்ற ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப் பட்டுள்ள இந்தப் படத்தில் நாவலில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ள பூகோளமும், வட்டார வழக்கும் மாற்றப் பட்டு செயற்கையான ஒரு தமிழ் சினிமாவாக சுத்திகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவு யதார்த்தமில்லாத ஒரு வறண்ட செயற்கையான தமிழ் படமாக உருவெடுத்து விட்டது.
பரத் என்ற கேரளத்தைச் சேர்ந்த நடிகரால் கூட காதல் திரைப்படத்தில் மிக எளிதாகப் பேசப்பட்ட வட்டார வழக்கு மொழியை- இங்கே பயன்படுத்துவதை வசந்த பாலன் முற்றிலுமாகத் தவிர்திருக்கிறார். பதிலாக வழக்கமான தமிழ் பின்னணிக் குரலாளர்களின் தேய்ந்து போன சினிமா வட்டார மொழி நடை மட்டுமே படம் முழுக்கப் புழங்குகிறது. அதிலும் கூட ஒரு கோவையில்லை. ஒருவர் சினிமாவில் வரும் நெல்லைத் தமிழில் பேசுகிறார்; மற்றொருவர் கோவைத் தமிழில் பேசுகிறார்; இன்னொருவர் எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான வழக்கில் பேசுகிறார். பெண்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் வழக்கமாகக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன பின்னணிக் குரல் மொழியில் சினிமாவுக்கே உரித்தான தமிழ்நடையில் பேசுகிறார்கள். ஆக படம் முழுவதுமே தமிழ்நாட்டில் உலவும் அத்தனை சினிமா மொழி நடைகளிலும் பேசிக் கொல்கிறார்கள். இயல்பாக நாவலில் சித்தரிக்கப்பட்ட நடையில் ஒரு பாத்திரம் கூடப் பேசாதது மிகக் கொடுமை. பாளைய நாயக்கரின் தெலுங்கு டப்பிங் பாணிப் பேச்சைக் கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். அதிலும் படத்தின் நாயகிகளும் அம்மாக்களும் பேசும் பேச்சு நவீன திரைப்படங்களில் புழங்கும் மொழிகளை ஒத்து உள்ளன. மேலும் பாத்திரங்கள் அனைவரும் அந்தக் கால மேடை நாடக நடிகர்கள் போல- கூத்து நடிகர்கள் போல- உரத்த குரலில் செயற்கையாக வசனங்களைப் பேசிக்கொள்வது கடும் எரிச்சலைத் தருகிறது. பாத்திரங்களையும் அவ்வாறே ஏதோ பப்புவா நியூகினியாவில் வாழும் காட்டுவாசிகள் போல சித்திரித்திருக்கிறார். பாத்திரங்களின் பற்கள் பழுப்பு அடைந்து இருப்பது இயற்கை. ஆனால் இவர்கள் பலரது பற்களுக்கும் சிவப்புப் பெயிண்ட் அடித்து விட்டிருக்கிறார்கள். அது அப்பொழுதுதான் மான் ரத்தத்தைக் குடித்த புலியின் பற்கள் போலச் செக்கச்செவேல் என்று இளிக்கின்றன.
அடுத்து, படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பூகோளம் இன்னொரு இயல்பைக் கெடுக்கும் விஷயம். நாவலில் வரும் சம்பவங்கள் மதுரையைச் சுற்றி ஒரு பத்து, பதினைந்து கிலோ மீட்டர்களுக்குள்ளேயே நிகழ்கின்றன. முன்ஜாக்கிரதையாக படம் ஆரம்பத்திலேயே கதை நிகழும் பூகோளமாகத் தென்தமிழ் நாட்டில் என்று போட்டு விடுகிறார்கள். தென் தமிழ்நாடு என்றால் மதுரை தொடங்கிக் கன்யாக்குமரி வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் பாருங்கள். கதை உண்மையில் நிகழ்ந்த- எழுத்தாளரால் எடுத்துக் கொண்டு விவரிக்கப் பட்ட பகுதி- மதுரையை ஒட்டிய கீழக்குயில்குடி என்ற கிராமம். கதையில் அதன் பெயரை மட்டுமே தாதனூர் என்று மாற்றியிருப்பார். அந்த ஊரில் சமணர் சிற்பங்கள் உள்ள ஒரு சிறிய நூறடி உயர பாறை மட்டுமே உள்ளது. அந்தக் கிராமத்து மக்களைத் தாதனூர் கள்ளர் என்று அழைத்திருக்கிறார். அது மதுரையை ஒட்டிய சமதள நிலப் பகுதி. மதுரையில் இருந்து குறைந்தது 1 மணி நேரம் பயணித்தால் மட்டுமே அருகே இருக்கும் பெரிய மலையான சிறுமலை என்னும் கானகம் உள்ள பசுமை உள்ள ஒரு மலையை அடைய முடியும். மற்றபடி மதுரையும் கதை நடக்கும் அதன் சுற்றுவட்டாரங்களும் கடல் மட்டத்தில் உள்ள மேடில்லாத சமதளப் பகுதி மட்டுமே. ஆனால் சினிமாவிலோ அழகும் பிருமாண்டமும் இருக்க வேண்டும் என்பதற்காக கதையை எங்கோ மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு மாற்றி விடுகிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் வாழும் கள்ளர்கள் எந்த ஊருக்குப் போய் கொள்ளயடிக்க முடியும்? வேட்டையாடுவதற்கு மட்டுமே ஏற்ற இடம் ஐயாயிரம் அடி உயர மலைகளும் காடுகளும். தங்கள் ஊரில் இருந்து கிளம்பி அடர்ந்த காடுகளையும் நதிகளையும் நடு இரவில் தாண்டும் கள்ளர்கள் பெரிய பெரிய செட்டி நாட்டுப் பாணி வீடுகளில் புகுந்து கொள்ளையடித்துவிட்டு விடிவதற்கு முன்பாகவே ஐயாயிரம் அடி மலை உச்சிக்குப் போய் விடுகிறர்கள். மூணாறு, பீர்மேடு போன்ற பகுதிகளில் இருந்து நடு இரவு கிளம்பி கால் நடையாகவே 200 கி.மீ தூரம் கடந்து காரைக்குடி, கானாடு காத்தான், தேவக்கோட்டைகளில் கொள்ளையடித்து விட்டு மீண்டும் சூரியன் உதிக்கும் முன்னால் தங்கள் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறார்கள். காற்றில் பறக்கத் தெரிந்த தேவர்களாக இருப்பார்கள் போலும் இந்தக் கள்வர்கள் 🙂 பொதுவாக நம் தமிழ் படங்களில் வரலாறு, பூகோளம், சமூக அறிவுகள், பொது அறிவு எல்லாம் இருக்காது. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.
அடர்ந்த கானகம் வழியாக வந்தாலும்கூட அவர்கள் வாழும் கிராமம் ஏனோ வறண்டு போன சகாராப் பாலைவனத்தில் உள்ள ஒரு கிராமம் போல ஒரு மரம் கூட இல்லாத வறண்ட பாறை நிலத்தில் வசிக்கிறார்கள். ஒதுங்குவதற்குக் கூட நிழல் இல்லாத பாலைவன மலையாக அது காட்சியளிக்கிறது. அமெரிக்காவின் வொயில்ட் வெஸ்ட், மெக்கனாஸ் கோல்டு போன்ற படங்களில் வரும் வறண்ட பாலை நிலங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் போலக் காட்சியளிக்கும் இடங்களைக் கள்ளர்கள் வாழும் ஊராகக் காட்ட வேண்டும் என்று இயக்குநருக்கு ஏனோ தோன்றி விட்டது. இந்தப் படம் எடுக்க ஆரம்பிக்கும் முதல் நாள் ஒரு வேளை மெக்கனாஸ் கோல்ட் பார்த்திருக்கக் கூடும். நாவலில் விவரிக்கப்படும் நிலத்திற்கு முற்றிலும் அந்நியமான ஒரு வறண்ட இடம் காண்பிக்கப்படுகிறது. அந்தக் கிராமங்களும் ஒரே மாதிரியாகக் காண்பிக்கப்படுவதில்லை. காட்சிக்குக் காட்சி ஒரே ஊர் பல்வேறு இடங்களில் வருகின்றது. ஒரு காட்சியில் வறண்டு இருக்கும் பூமியில் மறு காட்சியில் சீமக் கருவேல மரங்கள் வருகின்றன. 1800இல் தமிழ்நாட்டில் எப்படி காமராஜர் காலத்துக்குப் பின்னால் வளர்க்கப் பட்ட சீமக் கருவேல முள் மரங்கள் இடம் பெறலாம் என்ற பூகோள, கால அறிவு எதுவும் இன்றி எவ்விதத் தொடர்ச்சியுமில்லாத நிலப் பகுதிகள் வந்து படத்தின் ஒருமையையே குலைத்து விடுகின்றன. ஒரே காட்சியில் விழும் வெயில் கூட தொடர்ச்சியில்லாமல் எடுக்கப் பட்டுள்ளன. எதிரே எதிரே பேசும் இரு பாத்திரங்களில் ஒன்று கடும் வெயிலிலும் மற்றொன்று மேகம் சூழ்ந்த நிழலிலும் வருகின்றனர். அதிலும் பல நிலப் பகுதிகளும் வீடுகளும் கிராஃபிக்ஸ் காட்சிகளாக எடுக்கப்பட்டு 1800 வருடச் சூழலுக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் அந்நியமாகத் தெரிகின்றன.
அகலத் திரையின் பிருமாண்டம் கருதி கதைக்குத் தேவையில்லாத காடுகள், அருவிகள், மலைகள் எல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் வருகின்றன. ரகசியப் போலீஸ் 115 என்ற “எம்ஜிஆர் படத்தில்” எதிரிகளால் துரத்தப்படும் எம்ஜியார், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் வேலியைத் தாவிக் குதித்துத் தாண்டியவுடன் எல்லைக்கு அந்தப் பக்கம் சென்னை என்று தமிழில் எழுதப் பட்டப் பெயர்ப் பலகை வந்து விடும். அதே பூகோள அறிவை இந்த சினிமாவிலும் பாரம்பரியம் தவறாமல் வெளிப்படுத்தியுள்ளார்கள். அதையும் நம் விமர்சகர்கள் பிருமாண்டமான காட்சிகள் என்று மாய்ந்து வியந்து தள்ளுகிறார்கள். அதன் தேவை என்ன, எதற்காக அந்த நிலம் காண்பிக்கப்படுகிறது என்று எந்த வித உணர்வும் இல்லாமல் பாராட்டித் தள்ளுகிறார்கள் இணையத்து விமர்சனப் புலிகள்.
பாத்திரங்களின் சித்திரங்கள் நாவலில் தெளிவாகச் சொல்லப்பட்டு விட்ட நிலையில் நாவலில் வரும் பாத்திரங்களான மாயாண்டிக் கொத்தனையும், சின்னானையும் கூட முழுமையாகச் சித்தரிக்கத் தெரியாமல் அபத்தமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். நாவலில் காண்பிக்கப்படும் பாத்திரங்களை ஒத்த- தற்காலத்தில் வாழும் அதே இன மக்களை ஒரு முறை இயக்குநர் செக்கானூரணி பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்திருந்தால் கூட வெகு இயல்பான பாத்திரங்களையும் நடிப்பினையும் உருவாக்கியிருக்க முடியும். அகலத் திரைக்கான காட்சிகளை உருவாக்குவது மட்டுமே ஒரு இயக்குநரின் பணி என்று நினைத்துக் கொண்டு பாத்திரங்களின் வார்ப்புக்களிலும் அவர்களது நடிப்பிலும் கொடுமையான செயற்கைத் தனத்தை அளித்திருக்கிறார். ஒரு பாத்திரத்தின் நடிப்பு கூட நினைவில் தங்குவதில்லை. நாவலில் வரும் மாயாண்டிக் கொத்தன் மதிநுட்பம் உள்ள, தந்திரமும் கூர்மையான அறிவும் நிதானமும் கொண்ட ஒரு திருடன். ஆனால் சினிமாவில் அந்தப் பாத்திரம் பசுபதியின் இயல்பை முற்றிலுமாக இழந்து விட்டிருக்கிறார்; ஏதோ ஆதிவாசி போலச் சித்திரிக்கப் பட்டிருக்கிறார். சின்னான் ஒளிந்து வாழும் சோகத்தில் மூழ்கியிருக்கும் மற்றொரு திறமையான திருடனாக இருக்க வேண்டும், ஆனால் சினிமாவில் வரும் ஆதி என்ற நடிகரிடம் அவரது சிக்ஸ் பேக்கைக் காண்பிப்பதில் எடுத்த முயற்சியைக் கூட நாவலில் வரும் சின்னானின் குணாதிசயத்தைக் கொண்டு வர முயலவில்லை இயக்குனர். சிம்பன்சி கூட்டத்தில் இருந்து தப்பித்த குரங்கு போல நடிக்க வைத்திருக்கிறார். எந்தவொரு பாத்திரத்தையும் நாவலுக்கு உண்மையாக, இயக்குனர் கொண்டு வர முயலவேயில்லை. சினிமாவுக்காக மாற்றினாலும் கூட அவை அனைத்தும் செயற்கையாக அமைந்துள்ளன. இது போக அடித்துத் துவைக்கப்பட்ட பொண்டாட்டி மச்சினி காமெடிக் கொடுமைகள் வேறு.
முகத்துக்கு முன்னால் சாவின் நிழல்- குழந்தை வேண்டியே கூட வேண்டிய நிலை- இது எத்தனை கனத்தோடும் மன அழுத்தத்தை வெளிக்காட்டும் விதத்திலும் உக்கிரமாகக் காட்சிப்படுத்த வேண்டிய இடம் இது- நல்லா காத்திருந்து சொருகினாங்களே அய்யா இங்க ஒரு கவர்ச்சி நடனத்தை. நாவலின் மிகுஉணர்ச்சி உச்சக் கட்டங்களில் ஒன்று நல்லையாவாகிய சின்னானை அவன் ஊர்க்காரர்களில் ஒருவரது சிறிய மகனே தலையைக் கொய்வது. அந்தக் காட்சி அதீத உணர்ச்சிகளுடன் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த உணர்ச்சியின் ஒரு துளியைக் கூட சினிமாவில் வரும் அந்தக் காட்சி அளிப்பதில்லை. ஏதோ இயேசுநாதரை கல்வாரி மலைமேல் ஏற்றி சிலுவையில் அறையும் காட்சி போலக் காட்சிப் படுத்தியிருக்கிறார். நாவலில் வரும் சின்னான் காவல் செய்பவனல்ல, களவு செய்பவனே. திரையில் ஹீரோவை காவலாளி என்று காண்பித்து விட்டு திடீரென்று அவனைக் களவு செய்ய அனுப்பி விட்டு சாகும் பொழுது காவல் செய்ய வேண்டும் என்று அட்வைஸ் கொடுக்க வேறு வைக்கிறார்.
நாவலில் இல்லாத பல காட்சிகளும் சேர்க்கப் பட்டுள்ளன. அதில் ஒன்று வில்லனாக வரும் பாளய நாயக்க ராஜாவின் கதை. படத்தின் வசனங்கள் அடுத்த கொடுமை. நாவல் எழுதியவரே படத்துக்கான வசனங்களையும் எழுதியுள்ளார். நாவலில் சில இடங்களில் வரும் காலப் பிரஞ்ஜையில்லாத வசனங்கள் படத்திலும் காணப்படுகின்றன. ஒரு நாயகி திருடன் வரிப்புலியிடத்தில் நாயே, பேயே, சனியனே என்று தற்கால நாயகிகள் பேசும் பாவனையில் பேசுகிறார். இது போல தற்காலத்தில் பயன்படுத்தப்படும் எடுபட்ட பயலே போன்ற பல கொச்சையான வசவுகளும், செயற்கையான வசனங்களுமே படம் முழுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் 1876இல் வரும் தாது வருடப் பஞ்சத்தில் நரபலி கொடுப்பதாக 1800இல் நடக்கும் காட்சியில் பேசிக் கொள்கிறார்கள். ஒரு வசனம் கூட நினைவில் தங்குவதில்லை. இயக்குநரின் முந்தைய படமான அங்காடித் தெருவில் எழுத்தாளர் ஜெயமோகனின் அற்புதமான பல வசனங்கள் நினைவில் நின்ற அழுத்தமான வசனங்களாக அமைந்திருந்தன. இந்தப் படத்தில் வரும் பல வசனங்கள் பார்வையாளர்களின் கேலிக்கும் நகைப்பிற்கும் உள்ளாகின்றன. பல வசனங்கள் கதை நடக்கும் காலக் கட்டத்திற்கும், காட்சிக்கும் சற்றும் பொருந்தாமலும் தற்காலச் சினிமா பாவனைகளிலும் அமைந்துள்ளன.
நாவலில் வரும் ஒரு திருட்டுச் சம்பவத்தில், திருடப் போகும் கள்வர்களின் களவு குலைந்துவிட, ஊர்க்காரர்கள் துரத்துவார்கள். ஊரை விட்டு ஓடும் பொழுது கள்ளர்களில் ஒருவன் ஒரு திறந்த கிணற்றின் உள்ளே விழுந்து விடுவான். அவனை மீட்க, தப்பித்த கள்வர்கள் அடுத்த ஊரில் இருந்து ஒரு வீட்டில் ஒரு மாட்டைத் திருடிக் கொண்டு மாட்டு வியாபரிகள் போல மீண்டும் களவு செய்த ஊருக்கே திரும்பி வந்து கிணற்றுக்குள் மாட்டிய திருடனை களவு செய்த மாட்டின் மேல் வைத்துத் தப்பித்துச் சென்று விடுகிறார்கள். அதே சம்பவத்தைச் சினிமாவாக்கும் பொழுது அந்தக் காட்சிகள் எல்லாம் பிருமாண்டமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் முடிவு செய்து விடுகிறார். ஆகவே திருடப் போகும் ஊரான மதுரைக்கு அருகே சம வெளியில் இருக்கும் ஒரு கிராமத்தை ஒரு பெரிய கோட்டை சூழ்ந்த ஒரு ஊராகக் மாற்றி விடுகிறார். விரிவான திரையில் அகலமான கோட்டையைக் காட்டினால் எடுப்பாகத் தோன்றும் அல்லவா? கோட்டை மதில் ஏறி கோட்டைக்குள் புகுந்து திருடர்கள் திருடுவதாக வைத்தால் இன்னும் பிரமிப்பான காட்சியாக அமையும் அல்லவா? அப்புறம் ஒரு மாட்டின் மேல் வைத்துக் கொண்டு தப்பித்தால் தமிழ் சினிமாவின் பிருமாண்டப் பெருமை என்னாவது? ஆகவே ஒரு ஆயிரம் மாட்டை ஓட்டிக் கொண்டு திருடர்கள் வருவதாகக் காட்சி அமைத்தால் இன்னும் பிருமாண்டமாக இருக்கும் அல்லவா? அந்த ஆயிரம் மாடுகளையும் கிராஃபிக்ஸில் உருவாக்கினால் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சண்டைக் காட்சி அமையும் அல்லவா? மேலும் நாவலில் திருடர்கள் சண்டை போடாமல் அமைதியாக நழுவதைப் போல சினிமாவில் அமைதியாக நழுவ வைக்க முடியாது பாருங்கள். ஆகவே சாதாரண மதுரைப் பக்கத்துக் கிராமம் மலை மீது உள்ள கோட்டைக்குள் இருக்கும் அரண்மனையாக மாறி விடுகிறது. திருடர்கள் தப்பிக்கும் பொழுது நூறு காவலர்களுடன் சண்டை போட்டு ஆயிரம் மாடுகளின் மீது ஆரோகணித்து வந்து கிணற்றில் இருக்கும் திருடனை மீட்க்கிறார்களாம். ஆனால் பரிதாபமாக கிராஃபிக்ஸில் காண்பிக்கப் படும் கோட்டையும் சரி ஆயிரக்கணக்கான மாடுகளும் சரி ஒரு அமெச்சூர்த்தனமான கார்ட்டூன் படக் காட்சிகள் போல கேவலமாக அமைந்து போய்விட்டன. பிருமாண்டமான காட்சிகளை உருவாக்குவதாக நினைத்துக் கொண்டு சம்பந்தமில்லாமல் சொதப்பலான ஒரு காட்சியை அளித்திருக்கிறார்கள். ஒழுங்காக நாவலில் காட்டப்பட்ட சம்பவத்தையே காண்பித்து விட்டுப் போயிருந்தால் நம்பகத்தன்மையாவது மிச்சம் இருந்திருக்கும். நாவலின் சம்பவத்துக்குச் சற்றும் பொருந்தாமல் பிரமிக்க வைக்கும் காட்சியை எடுக்க நினைத்து பிரமிப்பும் கை கூடாமல், லாஜிக்கும் இல்லாமல், நம்பகத்தன்மையும் கூடாத ஒரு அமெச்சூர் காட்சியாக எடுத்து முடித்திருக்கிறார்கள்.
படம் முழுவதுமே லாஜிக் மற்றும் நம்பகம் அற்ற காட்சிகளினால் நிரப்பப்பட்டுள்ளன. தீடிரென்று மலையாளக் கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் வந்து ஐட்டம் டான்ஸ் ஆடுகிறார். அதுவரை சேப்பியா டோனில் இருந்த வண்ணம் திடீரென்று தெளிவான வண்ணத்துக்கு மாறி விடுகிறது. பாளையக்கார ராஜாவின் வீட்சைச் சுற்றியுள்ள ஏராளமான காவலர்களுக்குத் தெரியாமல் திருடன் அவரது படுக்கறைக்குள் சூப்பர்மேன் போல மாயமாகத் தோன்றி அங்கிருக்கும் பௌலிங் லேன் போன்ற தரையில் பௌலிங் இரும்புக் குண்டை உருட்டுவது போல உருட்டி விடுகிறார். ராஜா எழுந்திருந்து, தான் எப்படிக் கொன்றேன் என்பதை விவரிக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்து திருடனைக் காணும் ராஜா காவலர்களையல்லவா அழைத்திருக்க வேண்டும்? பதிலாக சாவகாசமாக திருடனிடம் தான் எப்படி ஒருவனைக் கொன்றேன் என்று விஸ்தாரமாக விவரிக்கிறார். எந்தக் கொலையாளி- அதுவும் ஒரு ராஜா- நடு வீட்டில் நடு இரவில் வந்திருக்கும் திருடனிடம் போய் தன் குற்றத்தை ஒப்புக்கொள்வான்? கிறுக்கு ராஜாவா அவன்? தும்மல் கேட்டாலே சுதாரிப்பாகும் அடியாட்கள் இருக்கும் ஊரின் ராஜாவின் வீட்டிலோ, சாமான்களை உருட்டி அடிதடி சண்டையெல்லாம் நடக்கும்போதும், ராஜாவின் காப்பாளர்கள் ஒரு பயலுக்கும் காதுகேட்கவில்லை. இப்படிப்பட்ட அடியாட்களை நம்பி என்ன பயன் என்றுதான் தன் மனைவியின் கள்ளக் காதலனைக் கொல்ல தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு ராஜாவே ராத்திரி நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வருகிறார் போலிருக்கிறது. படம் முழுவதும் இவை போன்ற லாஜிக் இல்லாத சொத்தைக் காட்சிகளினால் நிரப்பப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் ஒட்டு மொத்தப் படம் முழுவதும் இவை போன்ற எண்ணற்ற பொருத்தமில்லாத, இயல்பில்லாத, செயற்கையான, அபத்தமான, செறிவற்ற, சொதப்பலான, ஆழமற்ற காட்சிகளாலும் வசனங்களினாலும் நடிப்பினாலும் நிரம்பி வழிகின்றன. இவை ஒட்டு மொத்த சினிமாவையுமே ஒரு மாபெரும் அபத்தக் களஞ்சியமாக மாற்றி விடுகிறது.
இந்தப் படத்தின் மூலக் கதையான நாவலை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆயிரம் பக்க அபத்தம் என்று வர்ணித்துள்ளார். அதில் இருந்து உருவப் பட்டுள்ள சினிமாவை மூன்று மணி நேர அபத்தம் என்று வர்ணிக்கலாம். தனித் தமிழ் தீவீரவாதிகளிடமும் புலி ஆதரவாளர்களிடமும் நல்ல பெயர் எடுக்க, சம்பந்தமில்லாமல் படத்தில் வரும் நரபலியை மரண தண்டனை என்று வர்ணித்து ராஜீவ் கொலையாளிகளின் மரண தண்டனையோடு ஒப்பிட்டு மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று இந்தப் படம் பிரசாரம் வேறு செய்கிறது. இந்தப் பிரசாரத்தின் காரணமாகவே மாவோயிஸ்டுகளின், புலிகளின் ஊது குழலாக இருக்கும் விகடன் போன்ற பத்திரிகைகள் இந்தப் படத்துக்கு உலகத்தின் ஆகச் சிறந்த சினிமா என்று இலவச விளம்பரம் அளிக்கக் கூடும். இணையத்தின் தனித் தமிழ்க் குஞ்சுகளும் இந்தப் படத்தை ஆகா ஓகோவெனப் புகழ்ந்து, அவசியம் பார்க்க வேண்டும் தமிழ் திரை வரலாற்றின் தலை சிறந்த சினிமா என்று உச்சி மோந்து அப்பாவி வாசகர்களின் தலையில் மிளகாய் அரைத்து விடக் கூடும். வசனகர்த்தா, தோழர் சு.வெங்கடேசன் பூர்ஷுவாக்களை ஒழிக்கும், பணக்காரர்களிடமிருந்து திருடி ஏழைகளுக்குச் செல்வத்தைப் பகிர்ந்து கொடுக்கும் ஒரு சமத்துவச் சமுதாயப் புரட்சிப் படத்துக்கு வசனம் எழுதியிருப்பதாகவும் இந்தப் படத்தின் மூலம் மாவோவின் புரட்சி, தமிழ்நாட்டில் வெடித்தே தீரும் என்றும் தம் தோழர்களிடம் பீற்றிக் கொண்டு அந்தத் தகுதியைக் காட்டி ஒரு எம்.பி சீட்டுக்கு முயலக் கூடும். தமிழின் பிருமாண்டமான ஒரு சினிமாவை எடுத்து அதன் மூலமாக மனிதாபிமானத்தை வலியுறுத்தும், மரண தண்டனையை நீக்கக் கோரும் செய்தியைச் சொல்லும் படத்தை எடுத்திருப்பதாக இயக்குநர் மார்தட்டிக்கொள்ளக் கூடும். ஏற்கனவே சாகித்ய அகடமியில் உள்ள காம்ரேடுகளின் தயவினால் இந்த நாவலுக்கு சாகித்ய அகடமி கொடுக்கப்பட்டது போல தேசியத் திரைப்பட விருதுக் குழுவில் உள்ள காம்ரேடுகள் இந்தப் படத்திற்குத் தேசிய விருதும் கூட வழங்கக் கூடும். ஆஸ்காருக்கும் பேஷ்காருக்கும் படத்தை எடுத்துச் செல்ல புலிகளின் உலகளாவிய லாபிக்கள் முயலக் கூடும். ஆனால் படம் பார்த்து ஏமாறப் போகும் ஏமாளிக்கு எவர் வந்து ஆறுதல் சொல்லக் கூடும்?
நன்றி.
ஆகா , ஓகோ, என்று தான் வெகுஜன பத்திரிக்கைகள் எழுதும் .அந்த ஆகா, ஓகோ, நெருடலைத்தான் தருகிறது. அதுவும் அதை நம்பி படம் பார்பவர்களுக்கு அடச்சே என்று தோன்றும். நல்லாயில்லை என்று சொன்னால் அறிவு ஜீவி இல்லை என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் நன்றாக இருப்பதாக ஈனக்குரலில் சிலர் சொல்வார்கள்.
அங்காடி தெரு , அரவான் ஏதோ “அ” செண்டிமெண்ட் போலும். ட்ரைலர் பார்த்தால் “அழகியல் ” ” வித்யாசம்” இப்படி முன்வைத்து எதோ கருத்தை சொல்ல வந்தது தெரிந்தது.
அது மரண தண்டனைக்கு எதிர்-அதாவது அறிவு ஜீவிகள் ரக சினிமா என்று தெரிகிறது. ஏழாம் அறிவு போல. மறு பிறவி என்றல் மூட நம்பிக்கை. ஜீன் மெமரி என்றால் அறிவு ஜீவித்தனம் .
கொலைகாரர்களின் கொலைவெறியில் இறந்தவர்களின் உறவினர்களைப்பற்றி யாருக்குககவலை ? நிச்சயமாக இப்படிப்பட்ட இயக்குனர்களுக்கோ அவர்களை பின்னின்று இயக்குபவர்களுக்கோ அல்ல.
மரண தண்டனையா? ஜனநாயக நாட்டிலா? தேர்தல் சீட்டல்லவா தர வேண்டும்?
தமிழ் சினிமா ஒரு ஆலையிலாத ஊர். இங்கே பாலச்சந்தர், மணிரத்தினம், கௌதம் மேனன் எல்லாம் ” வித்யாசமான ‘ இயக்குனர்கள்.
பழைய கள்ளை புதியது போல் தோன்றும் கோப்பையில் தமிழர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல்கள்.
அங்காடி தெரு படத்திலும் குறிப்பிட்ட சமூகத்தினரை மோசமாக காண்பித்த காரணம் ஒரு சமரசம் தான். பழைய ஆட்சியில் அப்படி ஏதாவது காட்சி வைத்தால் தான் படமே வெளியிட முடியும். எந்திரன் மட்டுமென்ன? மாரியம்மன் காட்சி இப்படிப்பட்ட முக்கியமான காட்சி தான். இவையெல்லாம் தற்செயல் அல்ல. ரூம் போட்டு யோசித்து செய்யப்படுபவை.
ஆக மொத்தம் தமிழ் சினிமா அரசியல் பாற்பட்டது. தனி மனிதர்களின் கையில் அது இல்லை.
தமிழ் சினிமா பலம் பொருந்தியவர்களின் கையில் ஒரு ஆயுதம் தான். சாம கானம் பாடும், போதை தரும் ஆயுதம்.தமிழர்களோ பண்டிகை நாளில் கூட அத போதையின்றி வாழ முடியாதவர்கள்.
சரவணன்
இயக்குனர் அப்போகலிப்டோ வை மனதில் வைத்துக்கொண்டு எடுதார் போல் தெரிகிறது.
Sir,
Watching Tamil movies is waste of time. In Last five years, only a few films can be deemed as worthy of watching. You should not have watched this type of movies.
நன்றி விஸ்வாமித்ரா
நல்ல திறனாய்வு.
திருட்டு பிழைப்பு என்றாலும் அது சாதிய சாயத்துடன் வந்தால் பாரம்பரியம் ஆகிவிடும் போலுள்ளது. நான் நாவலையோ இத்திரைபடத்தையோ படிக்க பார்க்க ஆவல் கொள்ளவில்லை. வன்முறை மையப்புள்ளியான இது போன்ற சாதிய மிகையாக்கங்களுக்கு உண்மையில் கண்டனத்தையே பதிவே செய்ய வேண்டும். இதில் சம கால அரசியல் வேறு. தாங்கள் சற்று மென்மையாகவே எழுதியுள்ளீர்கள். பாலை என்றொரு படம் வந்தது. அது பற்றியும் எழுத வேண்டுகிறேன்.
நான் படம் பார்த்து என்ன நினைத்தேனோ,
அதையே இங்கு எழுத்தாய் பார்க்கிறேன்.
தெளிவான விமர்சனம்…..
காலிவுட்டு இயக்குனர்கள்தான் உசந்தவர்கள் என்ற போர்வையில் ஆபிரகாமிய சிந்தனைக்காரர்களை உயர்த்தியும், பாரதிய இயக்குனர்களின் திறமையை மட்டப்படுத்தி கேவலமாக எழுதி இருப்பதற்கு என் கண்டனங்கள். கட்டுரையாளருக்கே தெரியாமல் அவரது மனதில் யாரோ ஆபிரகாமிய விதைகளைத் தூவியிருக்க வாய்ப்பிருக்கிறது. கட்டுரையாளரை நல்ல சாமியாரிடம் காட்ட வேண்டும்.
// மாவோயிஸ்டுகளின், புலிகளின் ஊது குழலாக இருக்கும் விகடன் போன்ற பத்திரிக்கைகள் //
லட்சத்தில் ஒரு வார்த்தை…..”கோ” படத்தில் நக்சலைட்டுகளின் உண்மையான முகத்தை தோலுரித்துக்காட்டி விட்டார் என்ற கோபத்தில் அந்த குழுமத்தின் அனைத்து பத்திரிகைகள் வாயிலாகவும் அந்த அப்படத்தின் இயக்குனர் திரு. கே .வி ஆனந்த் அவர்களை கரித்துக்கொட்டினர்….
விகடன் தேச விரோதிகளின் கையில் சேர்ந்து பல காலம் ஆகிறது…..மேற்படி குழுமத்தின் பத்திரிக்கைகளை காசு கொடுத்து வாங்கிப்படிப்பதை தேசபகதர்கள் தவிர்க்க வேண்டும்……
படமே பெரிய டார்ச்சர் என்றால், விஸ்வாமித்ரா அதற்கு மேல் டார்ச்சரோ டார்ச்சர்! சின்னதாவே எழுதத் தெரியாதா? படிக்கப் படிக்க நீள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளம். வசந்தபாலனுக்குப் படம் எடுக்கத் தெரியலைன்னு சொல்றதுக்கு எவ்வளவு நேரம் வேஸ்டு? எவ்வளவு எனர்ஜி வேஸ்டு? உருப்படியா வேற வேலையப் பாருங்க!!
வானகரம்
“” தமிழ் சினிமாக்களில் பார்த்திபன் கனவு மற்றும் ஓரளவுக்குத் தில்லானா மோகனாம்பாள் ஆகிய இரு சினிமாக்களைத் தவிர வேறு எந்த சினிமாவுமே நாவலுக்கு உண்மையாக இருந்ததே கிடையாது”
பார்த்திபன் கனவு கல்கியில் வெளிவந்த காலத்தில் சிவனடியார் என்பது இறுதி வரை
சஸ்பென்ஸ்தான். ஆனால் படத்தில் அது அடிபட்டு போனது. தில்லானா மோகனாம்பாள் தான் சிறந்த திரைக்கதைக்கான எடுத்துக்காட்டு. தொடராக வெளிவந்தபோது இலங்கை சிங்கப்பூர், மலேயா போன்ற இடங்களுக்கு சண்முகசுந்தரம்/மோகனாம்பாள் கோஷ்டியினர் சென்று வந்தனர். திரு எ பி நாகராஜன் அதையெல்லாம் நீக்கி மறக்க முடியாத படைப்பாக அதை திரைப்படமாக கொணர்ந்தார்.
களவு செய்யும் சமூகம் பற்றிய அற்புதமான படைப்பு காவல் கோட்டம். அதை திரைக்கதையாக மாற்றும் போது கதைக்கருவில் சில திருத்தங்களை இயக்குனர் செய்திருப்பது இன்றைய காலக்கட்டத்தின் சூழல்.இதையே பெரிய குற்றமாக எண்ணி, வன்மத்தினை தீர்க்க வேண்டிய நிர்பந்தம் கட்டுரையாளருக்கு ஏன் ஏற்பட்டது எனதெரியவில்லை.நாவலிருந்து கதை முற்றிலுமாக எடுத்தாளப்படவில்லை என்று இயக்குனர் கூறியதை கட்டுரையாளர் கவணிக்காமல், ராஜிவ் கொலையில் ஈடுபட்டவர்களை கொல்ல துடிப்பது தேசப் பற்று என்று நினைப்பது தெரிகிறது.
உண்மையான தேசப் பற்று தேசத்தின் வளர்ச்சி நிலைக்கு கவலை கொள்வதாகவும், வழிகாட்டுதலாகவும் அமைய வேண்டுமே தவிற. இப்படி கடுமையாக படைப்பினை விமர்சனம் செய்வதில் தேசப் பற்றினை காட்டுவது முறையல்ல. தன்னுடைய மனைவியை தூக்கி சென்றதற்காகவே ராவணனை ராமன் கொன்றான் என்கிறது இராமாயனம். அப்படியிருக்கும் போது புலிகள் பழிவாங்கினால் மட்டுமே ஏன் கோபம் வருகிறது. அடிப்படையில் இந்த விபரத்தினை படத்தில் போட்டு விட்டார்களே என்ற மன கோபத்தில் இறுதி பகுதிமுழுக்க புலிகளுக்கு எதிராகவும், காங்கிரசிக்கு ஆதாரவான போக்குமே காணப்படுகிறது.
இப்படி ராஜிவ் என்ற தனிமனிதருக்காக தமி்ழ் இனத்தினையே அழித்த காங்கிரசுடன் இணைந்து கட்டுரையாளர் செயல்படுகிறாரோ.
“அகலத் திரையின் பிருமாண்டம்…”
அதே போல ‘புதிய பறவை’ என்னும் திரைப்படத்திலே கதை என்னவோ மலேசியாவில் நடப்பது போல சித்தரிக்கபட்டாலும் , S R என்று எழுத்துக்களுடன் காண்பிக்கப்படும் நம்மூர் புகைவண்டித்தொடரை நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம் என சொல்லமுடியாது! மேலும் சகஜமான நடையில் வசனம பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அட்சர சுத்தமாக இலக்கணத்தமிழில் வசனம் பொழிவதும் [ ‘பஞ்ச் டைலாக்’ காம் !] நாம் கண்டுகொள்வதில்லை.